புன்னகைத்தார் பிள்ளையார்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 13,809 
 

பிள்ளையாருக்கும் பர்வதத்திற்கும் இடையே உள்ள உறவு வித்தியாசமானது. முதியோர் இல்லத்தில் சேர்ந்து முடிந்த இந்த ஏழு வருட காலத்தில் கோயிலுக்கு அடிக்கடி வந்து மனதாரப் பிள்ளையாரைத் திட்டி விட்டுப் போவது அவள் வழக்கம். ‘இனி இந்த கோயில் வாசப்படியை மிதிக்க மாட்டேன்’ என்று சவால் விட்டுப் போவாள். ஆனால் மறுபடி வருவாள்.

திருமணமாகிப் பல வருடங்கள் கழிந்து அவளுக்குப் பிறந்த ஒரே மகன் சரவணன். சுறுசுறுப்பாக, புத்திசாலியாக , ஆஜானுபாகுவாக இருந்து அவளைப் பெருமிதப்படுத்திய மகன். ஒரு நாளைக்கு நூறு முறை ‘அம்மா, அம்மா’ என்றழைத்து அவளையே சுற்றி சுற்றி வந்த மகன்.

“சாயங்காலம் வந்தவுடன் பேல்பூரி சாப்பிட வெளியே போகலாம். ரெடியா இரு” என்று சொல்லிவிட்டுக் காலையில் கல்லூரிக்குப் போனவன், வீடு திரும்பியது பிணமாகத்தான். கல்லூரித் தேர்தலில் மாணவர்களுக்குள் நடந்த கைகலப்பில் கத்தியால் அவன் குத்திக் கொல்லப்பட்டுப் பதினாறு வருடங்களாகி விட்டன. இப்போது நினைத்தாலும் அவள் இதயத்தில் ரத்தம் கசிகிறது.

அன்றைய நாட்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட செய்தி அது. ‘கல்லூரிகளில் வன்முறை’ என்று தலையங்கம் எழுதாத பத்திரிக்கையே இல்லை. மகன் போன அதிர்ச்சியில் அவள் கணவனும் சீக்கிரமே போய்ச் சேர்ந்து விட்டார். ஆனால் மரணம் அவளிடம் மட்டும் இன்னும் கருணை காட்டவில்லை. கணவரின் அரசாங்க உத்தியோகம் அவளுக்குப் பென்ஷன் வாங்கித் தந்து முதியோர் இல்லத்தில் காப்பாற்றி வருகிறது.

“என் பிள்ளையைக் கொன்னவன் பணக்கார வீட்டுப் பிள்ளையாம். பணத்தைக் கொடுத்து ஏழு வருஷ தண்டனையோட தப்பிச்சுட்டான். இப்படி எல்லாத்தையும் நடத்தறது பணம் தான்னா அப்பறம் நீ என்னத்துக்கு? உனக்கு ஒரு கோயில் என்னத்துக்கு? தெய்வம் நின்னு கொல்லும்னு சொல்வாங்க. நீ எதுவுமே செஞ்ச மாதிரி தெரியலையே. உங்கிட்ட பேசிப் பிரயோசனம் இல்லை. இதுவே கடைசி. இனிமே உன்னை எட்டிக் கூடப் பார்க்க மாட்டேன்”.

பிள்ளையாரைக் கோபமாக முறைத்து விட்டு பர்வதம் கிளம்பினாள். நடையில் தளர்ச்சியும், மனதில் கனமும் கூடி இருந்தது. முதியோர் இல்லத்தை அடைந்த போது வாட்ச்மேன் சொன்னான். “பர்வதம்மா உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க”

பர்வதம் வராந்தாவுக்குள் நுழைந்தாள். அவளைப் பார்த்தவுடன் ஒரு இளைஞன் தயக்கத்துடன் நின்றான்.

“வணக்கம்மா! என் பெயர் அருண். சரவணனோட க்ளாஸ்மேட்” அவன் தயங்கித் தயங்கி சொன்னான். மகன் பெயரைக் கேட்டதும் பர்வதம் கண்களைச் சுருக்கிக் கொண்டு அவனை உன்னிப்பாகப் பார்த்தாள். கடைசியில் அடையாளம் தெரிந்தது. பத்திரிக்கைகளில் பல முறை பார்த்து அவள் மனதில் பதிந்து போன முகம். அவள் மகனைக் கொன்றவன். உணர்ச்சி வேகத்தில் உடல் நடுங்க, கைத்தாங்கலாக அருகிலிருந்த ஒரு நாற்காலியைப் பிடித்துக் கொண்டாள்.

சுதாரித்துக் கொண்டு அவனை உற்றுப் பார்த்தாள். சினிமாவில் பார்க்கிற கொலைகாரர்கள் போல முகத்தில் குரூரம் இல்லை.

“என்னை அடையாளம் தெரியுதாம்மா….?” அவன் தயங்கியபடி கேட்டான்.

“தெரியுது. உட்கார்”

உட்கார்ந்தான். எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் அவன் குழம்பியது போலத் தெரிந்தது. பல முறை பேச வாயைத் திறந்து, வார்த்தைகள் வராமல் சங்கடப்பட்டு, நிலத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான்.

அந்த கனத்த மௌனம் அவளுக்கும் என்னவோ போல் இருந்தது. மகன் பற்றி பேசவும் மனம் வராமல், ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காகக் கேட்டாள்.

“கல்யாணம் ஆயிடுச்சா?”

“ஆயிடுச்சு”

“குழந்தைகள்?”

“ஒரு பையன் இருந்தான்…போன வருஷம் ஒரு விபத்துல இறந்துட்டான்….” – தலையைக் குனிந்தபடியே சொன்னான்.

அவளையும் அறியாமல் அவள் மனம் இளகியது. குழந்தைகள் பற்றிக் கேட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றியது.

அவன் நிமிர்ந்த போது அவன் கண்கள் நிரம்பியிருந்தன.

“நான் அன்னிக்கு அப்படி ஏன் செஞ்சேன்னு இன்னும் எனக்கு விளங்கலை. பல பேர் தூபம் போட்டாங்க. சின்னச்சின்னதா நிறைய வெறுப்பை வளர்த்துக்கிட்டோம். எல்லாமாகச் சேர்ந்து என் அறிவை மறைச்சுடுச்சுன்னு தோணுது”

அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இதயத்தின் ஆழத்திலிருந்து வந்ததை அவள் உணர்ந்தாள். ஒன்றுமே பேசாமல் அவனையே கூர்ந்து பார்த்தபடி நின்றாள்.

“விபத்துல என் மகன் பலியானதுக்கப்புறம் தான் என் கொடுமையான செயலோட விபரீதம் எனக்குப் புரிய ஆரம்பிச்சுது. மூணு வருஷம் வளர்த்த என் குழந்தையோட சாவையே என்னால தாங்க முடியலையே…. இருபது வருஷம் வளர்த்து ஆளாக்கிய சரவணனின் இழப்பை நீங்கள் எப்படி தாங்கியிருக்க முடியும்னு நினைச்சப்ப எனக்கு என்னையே மன்னிக்க முடியலை…..”

“உங்களைப் பத்தி விசாரிச்சு இங்கே நீங்க இருப்பதைக் கண்டுபிடிச்சு ஒரு மாசமாச்சு. பல தடவை இந்த கேட் வரை வந்து திரும்பிப் போயிருக்கேன். உள்ளே வந்து உங்களைப் பார்க்க எனக்கு தைரியம் வரலை. நான் சரியா சாப்பிட்டு, தூங்கி ரொம்ப நாளாச்சு. என் மனசாட்சி என்னைக் கொஞ்சம் கொஞ்சமா கொல்லுது. எனக்கு மன்னிப்பு கேட்கிற அருகதை கூட இல்லை. மன்னிக்கக் கூடிய தப்பையா நான் செய்திருக்கேன்? எனக்கு ஏதாவது தண்டனை கொடுங்க. நான் சந்தோஷமா ஏத்துக்கறேன்.”

அவன் முகத்திலும் வார்த்தைகளிலும் அளவில்லாத வேதனை தெரிய, ஒரு குழந்தையைப் போல அவன் கெஞ்சிக் கேட்ட விதம் பர்வதத்தை என்னவோ செய்தது. சில மணி நேரம் முன்பு வரை அவள் சேர்த்து வைத்திருந்த வெறுப்பை எல்லாம் அவன் பேச்சு கரைத்தது.

கனிவுடன் அவனைப் பார்த்துக் குரல் கரகரக்கச் சொன்னாள். “வேகம் மட்டுமே நிறைஞ்ச, பக்குவமில்லாத வயசில் உன்னையும் அறியாமல் நீ செஞ்ச தப்புக்குச் சட்டப்படியும், மத்தபடியும் நீ அதிகமாகவே தண்டனை அனுபவிச்சுட்டே….”

இந்த வார்த்தைகளைச் சிறிதும் எதிர்பார்த்திராத அருண் திகைத்து “அம்மா…” என்றான். மறுகணம் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு, ஒரு குழந்தையைப் போல அழ ஆரம்பித்தான். ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாத அவன் உணர்வுகளை அவன் அழுகை சொன்னது. நிறைய நேரம் அழுது ஓய்ந்த பின், கண்களைத் துடைத்துக் கொண்டு அவளருகே வந்து நின்று கேட்டான்.

“உங்களாலே எப்படி அம்மா என்னை மன்னிக்க முடியுது? என்னால தானே நீங்க ஆதரவில்லாமல் தனியா இங்கே இருக்கீங்க…?”

அவன் மனதில் இது விஷயமாக இனி எந்தக் குற்றவுணர்வும் இருக்கக்கூடாது என்று அவளது தாயுள்ளத்துக்குப் பட்டது. “குழந்தைகள் செத்தாத்தான் அவங்களை இழக்கணும்னு இல்லை. அவங்களுக்குக் கல்யாணம் செய்து கொடுத்தாக்கூட இழக்க வாய்ப்பு இருக்குன்னு நான் இங்கே வந்த பிறகு புரிஞ்சுகிட்டேன். அப்படி இங்கே நிறைய பேர் இருக்காங்க. அதனால் என் மகன் சாகாமல் இருந்திருந்தாக்கூட நான் இங்கே வந்திருக்கலாம் இல்லியா?”

“என்னைச் சமாதானப்படுத்த இப்படிச் சொல்றீங்களாம்மா?”

“இல்லை இப்போதைய யதார்த்ததைச் சொல்றேன்”

நன்றி மிகுதியோடு அவளது வயோதிகக் கரங்களைப் பிடித்துக் கொண்டு அவன் கேட்டான். “அம்மா நீங்க என் கூட வந்துடறீங்களா…? நான் கடைசி வரைக்கும் உங்களை என் தாயார் மாதிரி பார்த்துக்கறேன்”

பர்வதத்தின் கண்களும் மனதும் நிறைந்தன. “நீ கேட்டதே எனக்கு சந்தோஷமா இருக்குப்பா. ஆனா நான் இங்கே சௌகரியமா இருக்கேன். என் வயசுக்காரங்க இங்கே நிறைய பேர் இருக்காங்க. அந்தக் காலத்து நினைவுகளை ஒருத்தொருக்கொருத்தர் பல தடவை சொல்லிப் பகிர்ந்துப்போம். அதில் ஒரு மனநிறைவு இருக்குப்பா. சண்டை போட பக்கத்துக் கோயிலில் ஒரு பிள்ளையார் இருக்கார். நான் திட்டறதை எல்லாம் மௌனமா கேட்டுப்பார். எதிர்த்துப் பேச மாட்டார்.”

அவன் ஏமாற்றத்துடன் கேட்டான். “நான் உங்களுக்கு ஏதாவது செய்யணும்னு தோணுதும்மா. என்ன செய்யட்டும்?”

“ஒண்ணு செய்யேன்!”

“என்னம்மா?”- ஆர்வத்துடன் கேட்டான்.

“நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னை நீ வந்து பார்த்துக் கொண்டிரு. அடுத்த முறை உன் மனைவியைக் கூட்டிட்டு வா. சீக்கிரமாகவே உனக்கு இன்னொரு மகன் பிறப்பான். அவனையும் கூட்டிட்டு வா. இந்தக் கிழவி போய்ச் சேர்கிற வரை ஞாபகம் வச்சு வந்து பாரு…”

கண்கள் குளமாக அவளையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டு சிலையாக நின்றான் அவன். குனிந்து அவள் கால்களைத் தொட்டு அவன் வணங்கிய போது அவள் கால்களை அவன் கண்ணீர் கழுவியது.

“வர்ற ஞாயிற்றுக் கிழமை அவளையும் கூட்டிட்டு வர்றேம்மா…” என்று சொல்லி அவன் விடைபெற்றான்.

அவன் கிளம்பிய பிறகு அவசர அவசரமாகப் பிள்ளையார் கோயிலுக்கு விரைந்தாள் பர்வதம்.

“ஏன் பிள்ளையாரப்பா…..இவனை விடப் பெரிய பெரிய கொடுமை எல்லாம் செய்து, ஊரையே ஏமாத்தி உலையில போடறவனெல்லாம் பிள்ளைகுட்டியோட நல்லாத்தான் இருக்கான். ஆனா, அறியாம செஞ்ச தவறுக்கு சட்டப்படி தண்டனை அனுபவிச்சு, மனசார வருத்தப்பட்ட பிறகும் அருணின் குழந்தையைப் பறிச்சிருக்கியே, நியாயமா? என் மகனுக்கு விதி முடிஞ்சுது. போயிட்டான். இவனையாவது நிம்மதியா இருக்க விடு. எனக்கு இப்ப உன்னைத் தவிர, வேறு யார் மேலயும் வருத்தமில்லை. அருணுக்கு இன்னொரு மகனைக் கொடு. அந்தக் குழந்தைக்குத் தீர்க்காயுளைக் கொடு. அருண் சந்தோஷமாயிருக்கட்டும். நான் வரேன்!”

சொல்லிவிட்டுப் பிள்ளையாரைப் பார்க்கையில் பிள்ளையார் முகத்தில் சற்று புன்னகை கூடினது போல் பர்வதத்திற்குப் பட்டது. “சிரிப்பென்ன வேண்டிக்கிடக்கு. இப்ப எனக்கு நேரமாச்சு. நாளைக்கு வந்து பேசிக்கறேன்” என்று பொய்க் கோபத்தோடு கோயிலை விட்டு வெளியேறினாள்.

முதியோர் இல்லம் நோக்கி நடக்கையில், தன் வாழ்நாளில் இதுவரை அனுபவித்திராத ஒரு மனநிறைவு அவளுக்கிருந்தது.

(இச்சிறுகதை ஆனந்த விகடனில் வெளியாகி இலக்கிய சிந்தனையால் 2002 ஜூன் மாத சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *