கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 22, 2019
பார்வையிட்டோர்: 15,381 
 

60 வயசு ஆச்சு, உங்களுக்கும், இன்னும் ஒழுங்கா சாப்பிடக் கூட தெரியலை, கீழே சிந்தாம சாப்பிடக் கூடாதா? என்னமோ? உங்க வளர்ப்பே சரியில்லை என முகம் இழுத்தாள், சீதா.

நீயும் புலம்பின்டே இரு, சிந்தினா என்ன? சுத்தம் பண்ணினாப் போச்சு, எனக்கும் கை நடுங்கிறது, வயசாயிடுத்துல்ல,

க்கும்.. இந்த வாய்க்கு மட்டும் வயசு ஆகலை,

ராமன், சீதா தம்பதி திருமணம் ஆகி 32 வருடம் ஆச்சு, இருவரின் அன்பின் பயனாய் ஒரு மகன், மகள். நல்ல வசதியான இடத்தில் இருவரையும் திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.

தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து, சம்பாதித்து பிள்ளைகளை படிக்க வைத்தது மட்டுமே ராமனின் உச்ச பட்ச சாதனை, நில புலம், சொந்த வீடு ஏதும் இல்லை, சேர்த்து வைத்த பணம் பெண்ணின் திருமணத்தில் கரைந்துப் போனது.

முன்பெல்லாம் திருமணம் ஆனதும் பெற்றோர்தான் வீடு பார்த்து பிள்ளைகளை தனியாக ஜாகை போகச் சொல்வார்கள்,

தற்போது, அவர்களே மணம் முடிந்தவுடன் தனியாக பெற்றோரை விட்டுப் போவதுதான் தனி ஜாகை என வழக்கமாகிவிட்டது.

மாதா மாதம் பணம் அனுப்பி வைத்து, செலவுகளைப் பார்த்துச் செய்யுங்கள், என அட்வைஸ் வேறு. உடம்பு ஒத்துழைக்காவிட்டாலும் வீட்டு வாடக்கைக்காவது ஆகட்டுமே என வேலைக்குப் போகிறான் ராமன்.

மணமான போது வயது 27, நல்ல அழகும்,அறிவும்,ஆளுமையும் , இருந்ததால் மும்பையில் நல்ல வேளையில் இருந்தான். பிரசவத்திற்குப் பின் ஊரோட வந்து விட்டான், மார்க்கெட்டிங் வேலை பிடித்துப் போய் ஊர் ஊராய் சுற்றிச் சுழண்டு சம்பாதித்து ,மனைவியையும், பிள்ளைகளையும், அதிகம் மிஸ் பண்ணினான், ஆனாலும் அவர்கள் நலனுக்காகத்தானே எனக் கடுமையாக உழைத்தான், பலன் முதுகு வலியோடு, கை நடுக்கமும் சேர்ந்து இவனை வீட்டில் முடக்கியது. ஒரு வருடமாக ஓய்வுப் பெற்று வீட்டில் இருப்பது அவனுக்கே அவமானமாக இருக்கிறது, மனைவி மதிக்காதது போலவும், மகனின் சிக்கன அட்வைஸ்களும், இவனை வேலைக்குப் போகத் தூண்டியது.

மகளின் கனிவானப் பேச்சு மட்டுமே இவனுக்கு அரு மருந்தாயிற்று.

அப்பா, உடம்ப பார்த்துக்கோ, வெளியிலே அலையாதே, வீட்டிலேயே அம்மா கூட நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணு என்பாள்.

அவளுக்கு என்ன தெரியும், அம்மா கூட அரை மணி நேரத்திற்கு மேல் பேசினால் வருவது சந்தோஷமாக இருக்காது, சண்டையாகத்தான் முடியும்,, என்று,

ஆனால் இவன் சீதாவைப் பற்றி நன்கு அறிவான், அவளுக்கு வேலை டான்,டான் என நடக்கணும், வீடு சுத்தமாக இருக்கணும், வைத்தது, வைத்த இடத்தில் இருக்கனும், இதுதான் அவள் கானும் வீட்டு நிர்வாகம், மற்ற வரவு செலவுகள், வங்கி விபரங்கள் ஏதும் அவளுக்கு தெரியாது, அவளுக்கு அதில் ஆர்வமுமில்லை,
மகன் , மகள், ராமன் ,மற்றும் தமது வீட்டிற்கு வரும் பால்காரர், காய்கறி விற்கும் பாட்டி, இவர்களின் குடும்ப நலன் இவைகள் மட்டுமே அறிந்த, சூது வாது தெரியாத அன்பை வெளிகாட்டிக் கொள்ள தெரியாத மனைவி.

இவர்களுக்கு இப்பொழுது மகன்,மகள், இருவரிடத்திலிருந்தும் அழைப்பு வந்துள்ளது, தேவை முடிந்தவுடன் கழட்டி விடபட்டு பின் தேவைக்கு அழைக்கும் ரயில் பெட்டிகள், இந்த கால அம்மா மற்றும் அப்பாக்கள்,

மகள், நீண்ட நாளுக்கு பிறகு கருவுற்று தற்போது நிறை மாதம். பிரசவம் வரை கூட இருக்க, அழைக்கிறாள். பாவம் அவளுக்கோ மாமியார், மாமனார் இருவரும் இந்தியாவில் இல்லை, துணைக்கு மாப்பிள்ளை மட்டுமே, மாப்பிள்ளை தங்கமானவர், தனியாக அம்மாவை கூப்பிடாதே, அப்பாவையும் சேர்ந்து வந்து தங்கச் சொல் எனவும் வயதான காலத்தில் இருவரையும் பிரிக்கக்கூடாது என நினைப்பவர். மகனுக்கோ, இரண்டு பேரும் வேலைக்குச் செல்ல ஏதுவாக பிள்ளையை பார்த்துக் கொள்ள இவர்களை அழைக்கின்றான்.

எங்கு போவது என இருவருக்கும் என்ன பதில் சொல்வது எனக் குழப்பம்.

சீதா, உன் பொண்ணு தான் அம்மாவாக, உன்னை அம்மாவா அங்கே கூப்பிடுகிறாள். உன் மகனோ, உன்னை வேலைக்காரியாக இருக்க அங்கே கூப்பிடுகிறான்.

வயதான பின்புதான் பல அம்மாக்களுக்கு எத்தனை பதவிகள் தானே தேடி வருகிறது.

நீ உன் மகளுக்கு அம்மாவா அவ வீட்டுக்குப் போறீயா? வேலைக்காரியா உன் மகன் வீட்டுக்குப் போகப்போறியா? எனக் கேட்டான்.

நான் ஏன் போகணும்?

நம்ம பையன் கருவாகி, மும்பையில் இருக்கும்போது நீங்க நல்ல வங்கி வேலைலதானே இருந்தீங்க, எனக்கு உடம்புக்கு முடியலைனு கேள்விபட்டதும் வேலையை விட்டுவிட்டு என்னை பார்த்துகிட்டு இங்கேயே தங்கிட்டீங்க!

அதுக்கு அப்புறமும், பையன், மகள், என்று அவர்கள் ஆரோக்கியத்துக்காகவும், அவர்களின் நல்ல படிப்புக்காகவும் எவ்வளவு கஷ்டங்கள், எத்தனை வாய்ப்புகள் வந்தும், அதை குடும்பத்தின் நலம் கருதிதான் முடிவு எடுத்தீங்க, அதனால உங்க இளமை காலமே அசுர அலைச்சல் ஆகிப்போனது.

பாவங்க நீங்க, இப்போ வயதான காலத்திலே உங்களை விட்டுவிட்டு நான் போகனுமா? அப்போ, நம்ம வாழ்க்கை எப்போ வாழறது?

மீதமுள்ள காலம் ,நான் உங்களுக்கு மனைவியாகவே இருந்து வாழப் போகிறேன். என்றாள். தீர்க்கமாக..

அலைபேசியில் மகன் அழைக்க, சீதா மகனிடம் அங்கு வர மறுத்துவிட்டாள். மகளிடம் நாளை வந்து பார்ப்பதாக கூறினாள். இரவு வேலைகள் முடிந்து உறங்கப் போனார்கள்.

ராமனுக்கோ உறக்கம் வரவில்லை, முதுகு வலி காரணமாக கட்டிலில் புரண்டு புரண்டுப் படுத்தான், கீழே தரையில் சீதா படுத்திருந்தாள்.

அவனின் குடும்பத்திற்கான உழைப்பை யாரும் மதிக்கவில்லையோ, என ஆதங்கம் எப்போதும் அவனுக்குள் இருக்கும் அது இன்று சீதா கூறியதில் தவிடு பொடியானது, மனது லேசானது, படுத்துக் கொண்டே பறப்பது போல உணர்ந்தான், கண்ணீர் பெருகி விழி ஓரத்தில் வழிந்து தலையனையை நனைத்தது.

நம்மை சரியாக புரிந்துகொண்ட மனைவி அமைவதும், அவள் கூட வாழ்வதும் எவ்வளவு சந்தோஷம் என்பது அவனுக்கு அன்று புரிந்தது,

அந்த சிறிய சந்தோஷமே அவனுக்கு பதட்டமாகி கை நடுங்க ஆரம்பித்தது, சீதா அதை கவனித்தாள், அவன் கரம் பற்றினாள், இறுக்கிக் தனது கரம் கோர்த்தாள். அவளின் கரம் காய்ச்சிக் கிடப்பதை நீண்ட நாள் ஸ்பரிசத்தால் இன்று உணர்ந்தான், நமக்காக எவ்வளவு உழைத்திருக்கிறாள், எவ்வளவு விட்டுக் கொடுத்து இருக்கிறாள், நீயும் எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கே, நான் வேலை விஷயமாக வெளியே சென்றதால், தனியாக இருந்து பிள்ளைகளை பண்போடு வளர்த்து ,நன்கு படிக்க வைத்து, சமுதாயத்தில் நல்ல நிலைமைக்கு உயர்த்திருப்பது உன்னால்தானே, என்று கூற, அவளும் கண்ணீரால் தலையணை நினைத்தாள். இருவரும் இப்படி மனம் விட்டு பேசிக்கொண்டே தூங்கும் முயற்சியில் தோற்றனர்.

கை நடுக்கம் சிறிது நேரத்தில் அடங்கியது, எப்போது எனத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் கரங்கள் கோர்த்தபடி இருக்க, அந்த வீட்டில் எல்லாம் இயங்க, அவர்களின் இதயம் இரண்டு மட்டும் ஓய்ந்துப் போய் இருந்தது.

அலைபேசியும் அடித்து ஓய்ந்தது. மகளுக்கு ஆண், பெண் என இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது எனவும், இரண்டும் கைகளைக் கோர்த்தப்படி இருக்கிறது என வாட்ஸ்ஆப்பில் படம் அனுப்பி இருந்தார் அவர்களின் மாப்பிள்ளை.

Print Friendly, PDF & Email

1 thought on “பிரியா வரம்

  1. முடிந்த தலைமுறை …ஏக்கத்தின் பெரு மூச்சு …வழிந்த கண்ணீர் தடங்கள் மாறாத வடுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *