கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 21, 2019
பார்வையிட்டோர்: 16,838 
 

படைப்பின் நேர்த்தி வெகு விசித்திரமானது. அதில் மனிதனின் ஆரம்பக்கட்டமான குழந்தைப் பிராயம்தான் எத்தனை அழகு படைத்த ஒன்று! பட்டை தீட்டாமலேயே ஜொலிக்கும் கட்டி வைரமாக எழில் சிந்தும் அந்தப் பருவம். மீட்டாமலேயே குரலிடும் மோகன வாத்தியமாக இசையிடும் நாதநயம் அதன் மழலை. லோகாயத லாப நஷ்டங்களை, சூதுவாதுகளைக் கற்ற பெரியவர்கள்கூட சின்னக் குழந்தையின் சிரிப்பில் சொக்கி நிற்கிறனர். பெருங்காற்றே தென்றலுக்குத் தலை சாய்ந்து நிற்பது போல்! எங்கள் வீட்டில் என் அண்ணாவின் முதல் குழந்தையாகக் கிருஷ்ணா பிறந்த போது நாங்கள் கடவுளின் கருணையை ஏற்று மகிழ்ந்தோம். எங்களிடையே கிருஷ்ணா வளர ஆரம்பித்தாள். இல்லை கிருஷ்ணாவை நாங்கள் வளர்க்க ஆரம்பித்தோம்!

”கிருஷ்ணா!” என்று குரல் கொடுத்தவாறே குழந்தையைத் தேடினாள் மன்னி.

பிஞ்சு விரல்களால் ஜன்னலைப் பிடித்தவாறே நின்று தெருவைப் பார்த்துக்கொண்டிருந்த குழந்தை கிருஷ்ணா தன் முகத்தைத் திருப்பிப் பார்த்தாள். ஈரம் பிதுங்கும் வெள்ளரிப் பிஞ்சாக முகம். சிறகுகளாகப் படபடக்கும் இமைகள். கண்ணாடி மணிகளாக உருளும் விழிகள். பூ நயம் போல் உதடுகள். ஒளியரும்புகளான பற்கள். நுங்கு நீரின் குளிர்ச்சியாகக் குரல். தெய்வ வடிவைச் சின்ன உடலில் சிறைப்பிடித்த களை. முகத்தில் எந்த நேரமும் உலகைப் புரிந்துகொள்ள முயலும் மனவளர்ச்சிக்கான ஒரு சிந்தனைச் சாயல்.

”என்னடி கண்ணு! தெருவிலே என்ன பார்க்கிறே?” என்று அவளை வாரி அணைத்துக் கொண்டாள் மன்னி.

”அம்மா! அதோ பாரம்மா, நாய்க்குட்டி!” அவள் பிஞ்சு விரல் சுட்டிய இடத்தில் குப்பைத் தொட்டியோரம் ஒரு சொறி நாய் படுத்திருந்தது.

”சீ! அது அசிங்கம்! நம்ம நாய்க்குட்டி ‘டாமி’யைப் பார். அழகாக சுத்தமாக…”

”அம்மா! அந்த நாய்க்கும் சோப்பு போட்டுக் குளிப்பாட்டினா என்னம்மா?”

”அது தெரு நாய். அதைத் தொடப்படாது.”

”ஏன், தொடப்படாது? நம்ம நாயை மட்டும் தொடலாமா?”

”அப்பா திட்டுவாங்க” என்று முத்தாய்ப்பு வைக்க முயன்றாள் மன்னி.

குழந்தையா விடுவாள்? ”அப்பா, திட்டாட்டா தொடலாமா அம்மா?” என்று தன் கேள்வியைத் தொடர்ந்ததும் நான் அடக்க முடியாமல் சிரித்துவிட்டேன்.

மன்னி என்னிடம் குறைப்பட்டுக் கொண்டாள். ”பாரேன் ராமு! இவள் கேள்விக்குப் பதில் சொல்லவே ஒரு தனி ஆள் போட வேண்டியதுதான்! உம்! நீ படி… இவள் இப்படிப் பேசினால் நீ படிக்கிறதெங்கே?.. வாம்மா, கிருஷ்ணா! உள்ளே போகலாம். சித்தப்பா படிக்கட்டும்.”

எனக்குப் படிக்க ஓடவில்லை. குழந்தைக்குத் தெரு நாயும் வீட்டு நாயும் வேறில்லை என்ற சமரச நோக்கா? அல்லது இத்தகு சந்தேகங்களின் மூலம் உலகை அறிய முயலும் ஆவலா?

சதா ‘சலசல’வென்ற பேச்சு. சிலபோது அவசரத்துக்கு நினைத்தபடி பேச்சு வராமல் ஜாடைகள் காட்டும் அழகு கூடக் கூட எந்த வேலைக்கும் வந்துவிடும் சுறுசுறுப்பு. மன்னிக்குத் தெரியாமல் அரிவாள்மனையில் உட்கார்ந்து விரலைக் காயப்படுத்திக் கொண்டு அதை அம்மா பார்த்துவிட்டாளோ என்று ஓரக் கண்ணால் நோட்டமிட்டு அச்சத்தோடு தூர வந்துவிடும் குறும்பு. மூன்றே வயதை எட்டிய குழந்தை கிருஷ்ணா கேள்விகளின் சொரூபம்தான்! காலையில் அப்பாவிடம் பாடம் சொல்லிக் கொள்ளும்போது ஆரம்பிக்கும் கேள்வியை, இரவு அம்மாவிடம் படுக்கும் போதுதான் முடிப்பாள். இடையே அவள் சிரிப்பதைவிடச் சிந்திப்பதுதான் அதிகம் போல் தோன்றும்.

காலையில் கீரை கொண்டு வரும் பெண், ”குழந்தை!” என்றுதான் குரல் கொடுப்பாள். குழந்தை எங்கிருந்தாலும் ஓடிப்போகும்! கன்னத்தை வழித்து முத்தமிட்டு விட்டு அவள் தரும் கீரைக் கட்டை வாங்கி வருவதில் குழந்தைக்குத் தனி ஆசை. கீரைக்காரப் பெண் கல்யாணம் செய்து கொண்டு போய் விடவும், அவள் அம்மா கீரை சுமந்து வர ஆரம்பித்தாள். வயதானவள் அவள். நோய்க்காரி என்றும் தெரிந்தது. அவளைக் கண்டதும் கிருஷ்ணா உற்சாகத்துடன் ஓடினாள்.

”கிருஷ்ணா! கிழவியைப் போய்த் தொடாதே. உடம்பு சரியில்லாதவள்” என்று மன்னி கூவினாள்.

அவள் குரலிலிருந்த கண்டிப்பால் திகைப்படைந்த குழந்தை என்னைப் பார்த்தாள். ”அப்பாவுக்கு உடம்பு சரியில்லாதப்போ நீ தொடலியா சித்தப்பா?”

நான் கிருஷ்ணாவைத் தூக்கிக் கொண்டேன். ”சமர்த்தா அம்மா சொன்னபடி கேட்டா, சாயந்திரம் காந்தி மண்டபம் அழைச்சுக்கிட்டுப் போவேன்.”

”நிஜம்மாவா சித்தப்பா?”

”ஆமாம்!”

காந்தி மண்டபத்துக்குக் குழந்தையை அழைத்துப் போய்விட்டால், அவளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு எவ்வளவு விடைகள்! புல் தரையில் ஓடுவதிலிருந்து, செயற்கைத் தாமரைக் குளத்தில் தன் நிழலுருவத்தைக் கண்டு கை கொட்டுவது வரை எதிலும் ஆச்சரியதந்தான்! நேரு பூங்காவின் மிருகங்களிடம்தான் எத்தனை ஆசை! பயபக்தியான நேசமான பார்வை! எப்பொழுதும் பார்த்திருக்கும் பஞ்சவர்ணக் கிளியிலிருந்து, புதிதாக வந்த புலிக்குட்டி வரை எதைக் கண்டாலும், நேற்றுப் பார்த்த நேசப்பார்வையில் இம்மி மதிப்பும் குறைந்திருக்காது. குட்டி ரயிலில் குதூகல உருவமாய், மகிழ்வின் பனித்துளியாய்க் கையசைத்தவாறே செல்லும்போது ஒரு தனி சிலிர்ப்பு அவளுக்கு. ஊஞ்சலில் ஆடும்போதும் சறுக்கி விளையாடும் போதும் ஓர் ஆவேசக் குதூகலம் அவள் முகத்தில் ஏற்படும். வீட்டுக்குத் திரும்பும்போது தெருவில் எப்போதோ தென்படும் குதிரை வண்டி, ஓரத்தில் மேயும் ஆட்டுக்குட்டி ஆகியவற்றைக் கண்கொட்டாமல் பாப்பாள். ”குதிரையும் ஆட்டுக்குட்டியும் ஏன் நேரு பூங்காவில் இல்லை சித்தப்பா?” என்ற கேள்வி வேறு!

***

அன்று மாலை சொன்னபடியே கிருஷ்ணாவை காந்தி மண்டபத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தேன். கை வண்டியை நிறைந்த பாரத்துடன் நெரம்பி இழுத்தவாறே சென்றுகொண்டிருந்தான் கூலியாள் ஒருவன்.

”சித்தப்பா! பாவம் அவன்! காலிலே செருப்பே போடலை சித்தப்பா! கல்குத்துமே, வெய்யில் சுடுமே! என்னோட செருப்பு அவனுக்குச் சின்னது! உன் செருப்பைக் குடுத்துடு சித்தப்பா! நீதான் பூட்ஸ் வச்சிருக்கியே..!”

குழந்தையின் குரலிலிருந்த உருக்கத்தையும் துன்பம் கண்டு பொறாத மனத்தையும் கண்டு நான் நெகிழ்ந்தேன். அவளை அப்படியே வாரி அணைத்துக்கொண்டேன். குழந்தையா பேசுகிறாள்?

‘‘செருப்பைக் குடுத்துடு சித்தப்பா.”

”அவன் தூரப் போயிட்டான். இன்னொரு நாள் குடுத்துக்கலாம்” என்று அவளைச் சமாதானப்படுத்தி விட்டுப் பேச்சை மாற்றினேன். ”இன்னிக்கு நம் வீட்டில் அடைதானே? உனக்கு ரொம்பப் பிடிக்குமில்லே?”

”அடை மொறு மொறுன்னு இருக்கும். ரொம்பப் பிடிக்குமே!”

குழந்தை மறதி! அதை உபயோகித்துதானே அவர்களைத் தன் நினைவிலிருந்து மாற்றி நம் உணர்வுக்கு அடிமையாக்கி விடுகிறோம்?

அன்று கிருஷ்ணாவுக்குப் பிறந்த நாள்! விசேஷமாகச் சர்க்கரைப் பொங்கலும் வடையும் செய்திருந்தாள் மன்னி. புதிய உடைகளைப் போட்டுக்கொண்டு குதித்தாள் குழந்தை. சாப்பிடத் தோன்றாத அளவு சந்தோஷம் அதில். அவள் பெயரில் தயாரான விருந்தை நாங்கள் எல்லாம் வயிறு புடைக்க உண்டோம்!

இரண்டு மூன்று தினங்களாக வராமல் இருந்த கீரைக்காரக் கிழவி அன்று வந்தாள்.

”சமையல் எல்லாம் காலையிலேயே ஆச்சு. இன்னிக்குக் கீரை வேண்டாம்” என்றாள் மன்னி.

”அம்மா!” வேண்டுகோளாக ஒலித்தது கிருஷ்ணாவின் குரல். ”அந்தக் கிழவிக்குச் சர்க்கரைப் பொங்கல் குடேன்.”

”அடி என் சமர்த்து! எனக்குக்கூட மறந்து போச்சே… டீ கிழவி! கொஞ்சமிரு, வரேன்…”

இலை நறுக்கில் உணவு வகைகளை வைத்துக் கிழவியின் கையில் இட்டாள் மன்னி. கிழவியின் நடுங்கும் கரங்கள் ஆவலோடு உணவை ஏந்தின.

”அம்மா! கிழவி கை ஏன் நடுங்கறது?”

”வயசானவள். பலமில்லை.”

”எனக்குப் பலம் வரணும்னுதானே டானிக் தரேம்மா. அந்த டானிக்கைக் கிழவிக்கும் குடும்மா!”

”இதோ பார், கண்ணு! எனக்கு எல்லாம் தெரியும். நீ பேசாமல் இருக்கணும்.”

கிழவி போகன்வில்லா கொடியருகே போய் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். அவளையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த குழந்தை தன் தாயருகே தயக்கத்தோடு போனாள்.

”அம்மா! பூச்செடிகிட்டே சொத சொதன்னு சேறாக கிடக்கும்மா!”

”அப்படித்தான் இருக்கும்.”

”கிழவி பாவம்மா! சேத்திலே உக்கார்ந்து சாப்பிடறாளே..!”

”அவளுக்கு அப்படித்தான் கண்ணு பழக்கம்.”

”அம்மா! கிழவிக்கும் மேஜையின் மேலே சாப்பாடு போடும்மா!”

”போடக்கூடாது. அப்பா வைவார்.”

”நம்ப மட்டும் ஏன் மேஜையின் மேலே சாப்பிடறோம்?”

”அப்படித்தான் சாப்பிடணும்.”

”போம்மா! கிழவி பாவம்!”

”உன்னைச் சீக்கிரமே கிண்டர் கார்டனிலே போட்டுடறேன், இரு, ஸ்கூலுக்கு போனாத்தான் நீ கேள்வி கேட்க மாட்டே!’’

‘‘ஓ! எனக்கு ஸ்கூலுக்குப் போகப் பிடிக்குமே… ‘யூனிபார்ம்’ போட்டுட்டுப் பெட்டி எடுத்திட்டு, பெரியம்மா வீட்டு அக்கா போற மாதிரி, நானும் பஸ்லே போவேனே!”

அவள் ஞாபகத்தை திசை திருப்பிவிட்ட திருப்தி மன்னியின் முகத்தில் விரிந்தது. தனக்கென்று ஏற்படும் தனித்த உணர்ச்சிகளை ஓர் உருவமாக்கிச் சேமிக்க முடியாத குழந்தை மனம், லேசான பஞ்சு போல் நாம் ஊதும் திசைக்கெல்லாம் பறந்தோடுகிறது. நாளைக்கே அவள் பெரியவளானால் தன் உணர்ச்சிகளைக் கடைப்படிக்க மாட்டாளா என்ன?

***

”திருமுலைப்பால் உற்சவத்துக்கு வரும்படி அக்கா எழுதியிருக்கிறாள்” என்று மன்னி ஆரம்பித்தாள்.

”இப்போது இருக்கிற வேலையில் சீர்காழி போகிறதாவது” என்று அண்ணா எடுத்ததுமே மறுத்து விட்டார்.

”நான் மட்டுமாவது போயிட்டு வரேனே. போகல்லேன்னா எனக்கு ஒரு குறையாவே இருக்கும்.”

”அடுத்த வருஷம் பார்த்தால் போச்சு”.

”அடுத்த வருஷம் அக்கா மாற்றலாகிப் போயிடுவாள்.”

”நமக்கே அந்த ஊருக்கு மாற்றலானால் பார்த்துக்கறது. இங்கிருந்தே மனசாலே சேவிச்சுடு இப்போது!”

மன்னி பதில் பேசவில்லை. அவளுக்கு இந்த விஷயத்தில் மனத்தாங்கல்தான் என்று காட்டிக்கொள்ளும் விதமாக, அழாமலிருக்கும் போதே, தூளியில் கிடந்த கைக்குழந்தை ரவியை ஆட்டிவிட்டாள்!

***

கோடை மழை கொட்டிக்கொண்டிருந்தது. தெருவெல்லாம் ஈர நசநசப்பு. மரங்களும், செடிகளும், மண்ணும் குளிர்ந்து கிடந்தன. இரவின் அமைதியை மழையும், சில்வண்டுகளின் ரீங்காரமும், தவளைகளின் சத்தமும் அவ்வப்போது கலைத்த வண்ணம் இருந்தன.

தெருவை ஒட்டிய வராந்தாவில் மழையின் குளிர் நடுக்கத்தைக் குரலில் பிரதிபலித்தவாறு இரண்டு சிறு ஆட்டுக்குட்டிகள் நின்றிருந்தன. ”ம்மே, ம்மே!” என்ற அவைகளின் குரல்களைச் சங்கீதமாக அனுபவித்து ரசித்தாள் கிருஷ்ணா. அவைகளின் பட்டுப்போன்ற உடல்களைத் தடவிப் பார்த்தாள். கொஞ்ச நேரம் பயந்த ஆட்டுக் குட்டிகள் அச்சம் தெளிந்து அவளுடன் விளையாட ஆரம்பித்தன. தூக்கம் கண்ணைச் சொக்கும் போதுதான் அவள் உள்ளே வந்தாள்.

இரவெல்லாம் மழை கொட்டோ கொட்டென்று பெய்கிறது. தெரு வராந்தாவில் ஒதுங்கியிருந்த ஆட்டுக் குட்டிகள் அங்கேயேதான் இருக்கின்றன என்பதற்கு அடையாளமாக அவற்றின் ஈனசுரமான குரல்கள் நடுங்கும் குளிரூடே மந்தமாகக் காதில் விழுந்துகொண்டேயிருக்கின்றன.

விடிந்த பொழுதூடே கைக்குழந்தையின் பசிக்குரல் ஓலமிடுவதும், மன்னி ஃபிளாஸ்க் வெந்நீரை எடுத்துப் பாலைக் கரைத்துப் புட்டியில் நிரப்புவதும் தெரிகிறது. குழந்தை ரவி புட்டிப்பாலை மெல்ல உறிஞ்சுகிறான். அப்போது தெருவில் பால்காரன் குரல் கொடுக்கிறான். மன்னி பால் புட்டியை ரவியின் வாயிலிருந்து எடுத்துக் கீழே வைத்துவிட்டுப் பால் வாங்கப் போகிறாள். சிறிது வயிறு நிறைந்த மகிழ்ச்சியில் கைகால்களை உதைத்துக் கொண்டான் அவன்.

பாலை வாங்கி வந்த மன்னியிடம் அப்போதுதான் விழித்துக் கண்களைக் கசக்கிக் கொண்டிருந்த கிருஷ்ணா அதீத ஆவலோடு கேட்டாள். ”அம்மா! ஆட்டுக் குட்டி இருக்காம்மா?”

”இருக்கே. தெருவிலே போய்ப் பாரேன். ராத்திரியெல்லாம் மழையில் நனைஞ்சிருக்கும் போலிருக்கு பாவம்!”

கிருஷ்ணா ‘விருட்’டென்று எழுந்தோடினாள். தெருவில் அவள் மழலையுடன் ஆட்டுக் குட்டிகளின் நேச பாவமான குரல்களும் கலந்து ஒலித்தன.

சிறிது நேரத்தில் மன்னியின் குரல் பல் விளக்கிக் கொண்டிருந்த என்னை உசுப்பியது. ”எங்கே, கைக்குழந்தைகிட்டே இருந்த பால் புட்டியைக் காணோம்?”

”எங்கே போயிடும்?” என்ற அண்ணா தினசரியை விரித்தார்.

”எங்கேதான் போயிடும் பின்னே? பால் வாங்கணும்னு போனேன். இரண்டு வாய்ப் பால்தான் குழந்தை குடிச்சிருப்பான். புட்டியைக் கீழே வச்சிட்டுப் போயிருந்தேன். இங்கே காணோமே?”

எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. வாய் கொப்புளித்து விட்டு, தெருக் கதவருகே ஓசையிடாது எட்டிப் பார்த்தேன். என் ஊகம் பொய்யாகவில்லை. என்ன விந்தை! உணர்ச்சியைக் கூறு போட்டுக்கொள்ள அண்ணாவையும், மன்னியையும் ஓசையிடாது வரவழைத்து வீட்டுக் கேமராவையும் எடுத்து வந்தேன்.

மழைச் சாரலில் ஒன்றி நின்றதால் உரோமங்கள் நனைந்து கரும் பட்டாகப் படிந்திருக்க, இளம் குழவிகளாக நின்ற அந்த இரு ஆட்டுக் குட்டிகளில் ஒன்றின் வாயில் பால் புட்டியின் குமிழை வைத்துக் குழந்தை கிருஷ்ணா அதற்குப் பாலை ஊட்டிக் கொண்டிருந்தாள். அதன் ஈனக்கூச்சல் அடங்கி சந்தோஷ முனகல்கள், ஆனந்த உறுமல்கள் சூழ்ந்திருக்கின்றன. முன்னங்கால்களை ஊன்றி ஆட்டுக்குட்டி பாலைப் பருகும் விதம் கண்ணைக் கவர்கிறது. மற்றொரு ஆட்டுக் குட்டி நேசபாவத்துடன் கிருஷ்ணாவின் காதை நக்குகிறது. கூச்சத்தோடும் ஆமோதிப்போடும் முகம் சுளித்துக்கொண்டு சிரிக்கிறாள் குழந்தை. அவன் கண்களில் அருள் வெள்ளம். முகத்தில் அன்பு நிழல். மனத்திலோ பொங்கிப் பெருகும் கருணைப்பரிவு. அந்த இரு சின்ன உயிர்களுக்கும் அவள் ஒரு தாயாகி விட்டாளா? அந்த உணர்ச்சிக்கு வேறு என்ன பெயர் சூட்டலாம்? வியப்புடன் நிற்கிறோம் நாங்கள். தெய்வ சந்நிதானத்தில் அருள் சுடர் தெறிப்பில் கட்டுண்டாற்போல்!

என் ‘ஃபிளாஷ்’ அந்தக் காட்சிக்கு நிரந்தர உருவம் தருகிறது. அப்போதும் குழந்தையின் ஈடுபாடு சிதறவில்லை.

”பார்த்தியா, சாவித்திரி? திருமுலைப்பால் உத்ஸவம் இன்னிக்குத்தானே? உனக்குக் குறையாகாம வைக்கத்தான் அதே உத்ஸவம் இங்கே நடக்கிறது! இது தெய்வ சந்நிதிடி! அம்பிகை அருள் சுரந்து ஞானசம்பந்தருக்குப் பாலூட்டியது போலத்தான் இங்கேயும் ஞானப்பால் ஊட்டறாள் நம்ப பெண்! நீ கும்பிடற தெய்வம்தான் உன் எதிர்த்தாப்பலேயே உனக்கு இதை நடத்திக் காட்டறது!”

அண்ணாவின் குரலில் கூடியிருந்த பெருமையும் பாசமும் மன்னியையும் பற்றிக்கொண்டன.

”பாவம்மா, ஆட்டுக்குட்டி! அதுக்கு யாரம்மா பால் தருவா? ராத்திரி பூரா சாப்பிடாமே இந்த ஆட்டுக்குட்டிக்கு ரொம்பப் பசிம்மா!”

”நீதான் இருக்கியேடி!” என்று கிருஷ்ணாவை ஆரத் தழுவிக் கொண்ட மன்னி அவள் கன்னங்களில் மாறி மாறி முத்த மழை பொழிந்தாள்.

குழந்தை கிருஷ்ணா தனக்கென்று பெற்றிருந்த இரக்க சுபாவம், கருணை மனம் இவற்றைக் கண்டு மன்னி ரொம்பவும் வருத்தப்பட ஆரம்பித்தாள். ஒரு நிமிட நேர நிகழ்ச்சியில் ஆட்பட்டு ஆட்டுக் குட்டிக்குப் பால் தந்ததைக் கண்டு மகிழ்ந்தாள். ‘‘இப்படியிருக்கிறாளே, தம்பிக்கு வைத்திருந்த பாலை வீணாக்குகிறோமே என்று தெரியவில்லையே, பாச உணர்வு வரவில்லையே… பிறத்தியார்கிட்டே மட்டும் கனிவா இருந்தால் போதுமா? எப்படி இந்த உலகத்திலே பேர் சொல்லப் போகிறாள்? ஓரொரு குழந்தை எத்தனை சமர்த்தாக இருக்கிறதுகள்!” என்று பேச ஆரம்பித்து விட்டாள்.

”ராமு! நீ ரொம்பச் செல்லம் தரே! தப்புன்னு படறதைக் கண்டிக்கணும். ‘பட்’னு ஒண்ணு குடுத்துடணும். போற போக்குக்கே விட்டு, அடிச்சு வளர்க்காத பிள்ளை உருப்படாது. அவளைப் புகழ்ந்து பேசிப் பேசி ரொம்பவும் ஏறி விட்டது. இனிமேல் அவளை மட்டம் தட்ட வேண்டியதுதான். ‘ஜீனியஸ்’ஸா வருவானள்னு கணக்கு வழக்கில்லாத புஸ்தகங்களையும் பொம்மைகளையும் வாங்கிப் போடறார் உன் அண்ணா. அவளும் அதைக் கொண்டா, இதைக் கொண்டா, அவனுக்குக் குடு, இவனுக்குக் குடுங்கிறாள். கொஞ்சம் கொஞ்சமா குழந்தை மனசை, பெரியவங்க கஷ்டத்தை உணரும்படி மாத்தணும். இல்லேன்னா பின்னாலே கஷ்டம். ரொம்ப வெகுளித்தனமா இல்லாமே, நம்ம வீடு, நம்ம அப்பா அம்மான்னு உணர வைக்கணும்… தன்னுடையது, தனக்கு வேணும்னு புரிய வைக்கணும்…”

”குழந்தைதானே அவள்! வளர்ந்தால் சரியாகிவிடும்” என்றேன் நான். மனத்துக்குள் மட்டும் அவளைப் பற்றிய பெருமிதம் ஓங்கியிருந்தது.

மனிதனின் ஆரம்பப் படைப்புருவம்தான் எத்தனை விநோதமானது! உள்ளதை உள்ளபடி உணர்வதுதானே குழந்தை மனம்! தன்னைப் போன்றே பிறரையும் எண்ணும் குழந்தை தனக்குத் தோன்றுவதையெல்லாம் செய்யும்படி கேட்கிறாள். என்னுடையது, என்னுடையதல்ல என்ற தனி மனிதப் பிரச்னையை அது உணர்வதில்லை. அந்தக் கல்மிஷத்தை நாம்தான் கொஞ்சம் கொஞ்சமாய் விஷம் ஏற்றுவதைப்போல் அந்த மனத்தில் நாளாவட்டத்தில் கலந்து விடுகிறோம்.

அண்ணாவும் சிறிது சிறிதாய் மன்னிக்குத் தலை அசைக்க ஆரம்பித்தார். ” நீ சொல்றதும் சரிதான் சாவித்திரி! குழந்தையை இப்படியே விடப்படாது. சாமர்த்தியக்காரர்கள் நிறைந்த சந்தை மாதிரி இந்த உலகம் ரொம்பப் பொல்லாதது. அதிலே ஏமாளியா இருக்கிறவனை, இரக்க மனம் படைச்சவனை, அயோக்கியன் ஜெயிச்சுடறான். இப்போதைய வாழ்க்கை முறையிலே கிருஷ்ணாவைப் போன்ற வெள்ளை மனம் படைச்சிருந்தால் வாழறது ரொம்ப சிரமம். அவளை மெள்ள மெள்ள மாற்ற வேண்டியதுதான்!”

நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன். எந்தப் பெற்றோரும் தன் பிள்ளை நல்லவனாக இருப்பதால் ஏமாந்துவிடுமோ என்று கவலைப்பட்டு, சாமர்த்தியசாலியாக வாழ்வதையே பெரிதும் விரும்புகின்றனர். அதற்கு என் அண்ணாவும் மன்னியும் மட்டும் விதிவிலக்கா என்ன?

***

காலப் பூங்காவில் ஐந்து வசந்தங்கள் வண்ண ஜாலம் செய்து மறைந்தன. அண்ணா ஊரூராக மாறிக்கொண்டிருந்தார். நான் சென்னையிலேயே தங்கி என் படிப்பை முடித்தேன். அதன்பின் வாழ்க்கைக்கு நிலைத்த ஒரு வருமானம் தரும் உத்தியோகத்தையும் ஏற்றேன். என் முதல் சம்பளத்தைப் பெற்றுக் கொண்ட நான், அதை என் அண்ணாவின் கையில் தந்து ஆசீர்வாதம் பெறத் திருச்சிக்குப் புறப்பட்டேன்.

முதலில் என் நினைவுக்கு வந்தவள் குழந்தை கிருஷ்ணா. கல்லூரி விடுமுறையில் கூடத் தட்டெழுத்தும், சுருக்கெழுத்தும் கற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டதால் இடையிடையே எப்போதோ வெளியூரில் தங்கியிருக்கும் அண்ணாவைப் பார்க்கப் போனேன். கிருஷ்ணாவோடு பழகும் நேரமும் மிகக் குறைச்சலாக இருக்கும். இப்போது எட்டு வயதிருக்குமே… பள்ளியில் படிப்பாள். எப்படிப் பேசுவாள்! எப்படி நடப்பாள்? என்னுள் இனிய கற்பனையாக அவள் நடையுடை பாவனைகள் பொங்கிப் பிரவகித்தன. என் டயரியில் பத்திரப்படுத்தியிருந்த அவள் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தேன். என்ன அழகான காட்சி! குழந்தை கிருஷ்ணா ஆட்டுக் குட்டிக்குப் பாலூட்டும் காட்சி நேற்றே நடந்தாற்போல் தோன்றுகிறது.

கிருஷ்ணா என்னிடம் உடனே ஓடி வராமல் வெட்கத்துடன் நின்றிருந்தாள். என்னுடைய அழைப்பின் தூண்டுதலும், நான் வாங்கிப் போயிருந்த தின்பண்டங்களும் அவளை மெல்ல மெல்ல என் அருகே இழுத்து வந்தன. அவளுக்குச் சிறியவன் ரவியும் என்னருகே வந்தான். சிறிது நேரத்திலேயே பிரிந்திருந்ததால் ஏற்பட்ட வெட்கம் நீங்கப் பெற்றவளாய் சகஜ பாவத்துடன் என்னுடன் பழகினாள் கிருஷ்ணா.

அன்று மாலை கிருஷ்ணாவை அழைத்துக் கொண்டு கடைத் தெருப்பக்கம் போனேன். தன் பள்ளியைப் பற்றி, கூடப் படிக்கும் மாணவிகளைப் பற்றி, அப்பாவும் அம்மாவும் வாங்கித் தந்த உடைகளைப் பற்றி என்று அவள் கலகலப்பாகப் பேசிக் கொண்டே வந்தாள். அப்போது ஒரு கிழப் பிச்சைக்காரியை, ஒரு சிறுமி பற்றியவாறே என்னருகே வந்து, ”சாமி! இந்தக் கிழவி வயசானவ சாமி! ரெண்டு நாளப் பட்டினி! ஏதாவது தர்மம் குடு சாமி?” என்று நலிந்த குரலில் கேட்டாள். பிறகு கிருஷ்ணாவைப் பார்த்து அவள் கையிலிருந்த பிஸ்கெட்டைக் கேட்டாள். கிருஷ்ணா பிஸ்கட்டை மறைத்துக் கொண்டாள். நான் நடந்தவாறே சில்லறை இருக்கிறதா என்று துழாவினேன். இதற்குள் பிச்சைக்காரச் சிறுமி என்னைத் தொட்டு மறுபடியும் பிச்சை கேட்டாள்.

நான் சற்றும் எதிர்பாராத வகையில் கிருஷ்ணாவிடமிருந்து ஒரு சீறல் கிளம்பியது. ”சீ! எங்க சித்தப்பாவைத் தொடாதே, போ. உனக்குக் காசு தரமாட்டோம்! பிஸ்கெட்டும் தர மாட்டோம்!”

”கிருஷ்ணா! அவள் பாவம்! போனால் போகட்டும். பசிக்குமில்லையா? இந்த அஞ்சு பைசாவை நீயே அவள்கிட்டே போடு, பார்க்கலாம்!”

கிருஷ்ணா நாணயத்தை வாங்கி வெறுப்போடு முகம் சுளித்தவாறே சிறுமியின் மேல் தன் கை பட்டுவிடாமல் தூக்கிப் போட்டாள். பிறகு இதுவரையில் பேசி வந்த குரலிலேயே இப்போதும் பேசினாள். ”நிறையப் பிச்சைக்காரங்க இருக்காங்க சித்தப்பா! எல்லாருக்கும் போட்டா நம்ப காசெல்லாம் ஆயிடும்! அவங்க அப்படித்தான் இருக்கணும்! பிஸ்கெட் வேணுமாம் அவளுக்கு! இது என்னோட பிஸ்கட். என்னோடது எனக்குத்தான்! இதை யாருக்கும் தரமாட்டேன்!” என்ன அழுத்தம்! அவள் குரலில் இயற்கையான கனிவில்லை. என்னுடையது, என்னுடையதல்ல என்ற தனி மனிதப் பிரச்னை எப்படி இந்தக் குழந்தை மனத்தில் புகுந்தது?

கிருஷ்ணா தொடர்ந்தாள். ”ரவியைப் பாரு, சித்தப்பா! பால் சாதத்தைத் தெரு நாய்க்குப் போடறான். நம்ப ‘டாமி’க்குத்தானே போடணும்?”

நான் குழந்தையைப் பார்த்தேன். அவள் வளர்ந்து விட்டாள். உலகைப் போலவே மற்றவர்களைப் பற்றி நினைக்கக் கற்றுக் கொண்டாள். ஆனால், என்னுள் மகிழ்ச்சி எழவில்லையே, ஏன்? நான் பெருமூச்செறிகிறேன். சிரிப்பதை விடச் சிந்திப்பதில் அதிகம் ஈடுபட்டிருந்த குழந்தை எப்படித்தான் மாறிவிட்டாள்? புதிய கருத்துகள் பழைய கனிவை வெள்ளமாக அழித்து விட்டனவா? பணத்தைச் சுயநல எண்ணத்தோடு இயக்கக் கற்றுத் தந்தாகி விட்டதே, இனி அந்தக் குழந்தை தெய்வமா என்ன? ஒரு குழந்தை சுயநலத்தை உணரும் சக்தி படைத்த பின்தான் அது மானிட ஜாதியைச் சேர்ந்ததாகி விடுகிறதே!

***

தெருவில் கிருஷணாவின் அட்டகாசச் சிரிப்பொலி கேட்கிறது. என்னவென்று எட்டிப் பார்த்தேன். எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! கல்லடிபட்ட ஆட்டுக் குட்டி, ”ம்மே! ம்மே!’’ என்ற வேதனை முனகலோடு நொண்டியவாறே தத்தித் தத்தி ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்துக் கைக்கொட்டி நகைக்கிறாள் கிருஷ்ணா.

”கிருஷ்ணா! இப்படித்தான் ஆட்டுக் குட்டியைக் கல்லால் அடிக்கிறதா? நொண்டுகிறது பார்! முட்டாள்! இங்கே வா, சொல்கிறேன். சின்னக் குழந்தையில் இரக்கத்துடன் நடப்பாய். வளர வளர எல்லாம் போய் விட்டதா? உள்ளே போ!”

இயல்புக்கு மாறான சூழ்நிலையில் அகப்பட்டுக் கொண்டாற்போல் அவள் முகம் வாடியது. என்னுடன் கொண்ட சகஜ பாவத்தை முறித்துக்கொண்டு, அழுத்தமான விறைப்போடு உள்ளே போனாள். முன்பெல்லாம் அவள் ரசனையில் தெரிந்த இரக்கப் பண்பு எங்கே போயிற்று?

வாசலில் சாலை வேலை செய்யும் கூலியாள் குடிக்கத் தண்ணீர் கேட்கிறான். அவனைப் ‘போ போ’ வென்று விரட்டுகிறாள் கிருஷ்ணா. ”எப்பவும் இங்கேதான் கேட்பே, போ, நான் தரமாட்டேன்.”

நான் கண்டிக்கக் குரலெடுக்குமுன் மன்னியின் குரல் கேட்கிறது. ”நேத்திக்கு வந்தவன்தானே? தினமும் ஒரு ஆள் தண்ணீர் கொடுக்க நிற்க வேண்டியதுதான். வேறே வேலை இல்லை.”

”நான் விரட்டிட்டேன்மா!”

”அதுதான் சரி. சமர்த்து! உள்ளே வா!”

குழந்தை தெய்வீக மனம் படைத்திருந்தபோது சலித்த தாயார், சாதாரண உணர்வை ஏந்தியதும் புகழ்கிறாள். மலையருவி இமயப் போர்வையிலிருந்து விடுபட்டு, பூமித் தூசியில் கலந்து விட்டதற்கு இத்தனை மகிழ்வா?

இப்பத்தான் சமர்த்தாமே! எம்மாதிரி பழக்குகிறோமோ அம்மாதிரிதான் பண்பு வளர்கிறது. இயற்கை உணர்வையே செயற்கை உணர்வாகத் திசை திருப்பிவிடும் நம் பழக்க வழக்கங்களுக்கு நாம்தான் பொறுப்பென்றால், நம்மை திசை மாற்றி அமைத்த நம் பெற்றோர், நம் சமூகம் எல்லாம் பொறுப்பேற்க வேண்டியதுதான். குழந்தைகள் குப்பைகள் கலவாத மாணிக்கங்கள்! அவற்றின் மனமொழி மெய்யைச் சூழலுக்கு ஏற்ப நாம்தான் திருத்தியமைக்கிறோம். பச்சை மெழுகாகக் கடவுள் தரும் குழந்தையை நமக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்கிறோம். அதன் இயற்கை உணர்வுகளைக் கொன்று புதிய உள்ளத்தை பிரதிஷ்டை செய்கிறோம். அப்படி மாறாதவர்களை வெகுளி, அசடு என்கிறோம். மாறியவர்களைச் சமர்த்து என்கிறோம். இறைவன் சிருஷ்டியை நம் இஷ்டப்படி மாற்றிவிட்டு, சமர்த்து என்று சொல்லிக் கொள்வதில்தான் எத்தனை பெருமைப்படுகிறோம்?

அன்று கீரைக் கிழவிக்குத் தன் பிறந்த நாள் உணவைப் படைக்கச் சொன்ன குழந்தை இன்று ஒரு பிச்சைக்காரச் சிறுமிக்கு ஐந்து பைசா போட வெறுக்கிறாள். ஆட்டுக்குட்டிக்குப் பசிக்குமே என்று பரிதாபப்பட்டு, தம்பிக்கு வைத்திருந்த பீடிங் பாட்டிலை எடுத்து ஊட்டிய குழந்தை இன்று அதைக் கல்லால் அடித்து அது நொண்டுவதைக் கண்டு கை கொட்டிச் சிரிக்கிறாள். தெரு நாயையும் குளிப்பாட்டலாம் என்றவள், அதற்கு ஏன் பால் சோறு, நம் நாய்க்கே போடலாம் என்கிறாள். செருப்பில்லாமல் வண்டி இழுக்கும் கூலியாளைக் கண்டு மனம் வெதும்பி என் செருப்பைத் தரும்படித் தூண்டியவள், சாலையில் வேலை செய்யும் தொழிலாளியின் தாகத்துக்குத் தண்ணீர் தராமல் விரட்டுகிறாள்.

அன்பில் விஷத்தை, அறிவில் ஆத்திரத்தை, பாசத்தில் பணத்தை, பண்பில் சுயநலத்தைக் கலந்து வைத்த உலக உணர்வுகள் ஒரு தெய்வீகமான குழந்தை உணர்வில் மனித உணர்வைக் கலந்து விட்டதை உணர்ந்து கொண்டேன். என்ன செய்வது? அது ஒரு தவிர்க்க முடியாத நிகழ்ச்சிதான், காற்றில் தூசுகள் பறப்பதைப் போல்! எனக்கு அது ஒரு பெரிய குறை. வறுமை, நோய், முதுமை ஆகியவற்றைக் கண்டு கலங்கிய குழந்தையா இன்று எல்லா உணர்வுகளையும் ஜீரணித்துக் கொண்டு உலக உணர்வுகளோடு ஒன்றிவிட்டாள்?

இனி, மன்னி பயப்பட வேண்டாம்! கிருஷ்ணா தனியே பஸ்ஸில் பள்ளிக்கூடம் சென்று படித்து வருகிறாள். சின்ன டிபன் பாத்திரத்தில் ஓர் உருண்டை தயிர்சாதம் மட்டும் எடுத்துப் போய்ச் சாப்பிட்டுப் பசியை அடக்கக் கற்றுக்கொண்டு விட்டாள். இயந்திரமயமாக நாம் நிர்ணயித்த சட்ட திட்டங்களுக்குள் எவ்வித எதிர்ப்பும் இன்றி லயித்துக் கலந்து பழகிய பசுவாகிவிட்டாள்!

”நீ பார்த்ததுக்குக் கிருஷ்ணா ரொம்ப வளர்ந்துடலை? கெட்டிக்காரியாகி விட்டாள்!” அண்ணா பெருமைப்படுகிறார்.

அவளுடைய வளர்ச்சி எந்த ரூபத்தில் ஏற்பட்டுள்ளது? அருள் வடிவானவள் வெறும் லோகாயத சேற்றில் முளைத்த பூண்டாகி விட்டாளே… அதை வளர்ச்சி என்று எப்படி ஏற்பது?

நான் என் கிருஷ்ணாவை, எனக்குப் பிடித்த உணர்வுகளை ஏந்தி நின்ற குழந்தையை காண வந்தேன். அவளைக் காணமுடியாத ஏமாற்றத்தோடு திரும்பிப் போகிறேன். அப்படிப்பட்டவளை இனி காண முடியாது என்ற உண்மை, என் கண்டத்துள் ஒரு ரகசிய வேதனையாக முட்டுகிறது.

கடவுளின் பிரதிநிதியாகக் குழந்தை பூமியில் ஜனிக்கிறது! ஆனால், மனிதனின் பிரதிநிதியாக உலகை விட்டு நீங்குகிறது!

***

கோமகள்

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கோமகளின் இயற்பெயர் இராஜலட்சுமி. பாரம்பரிய கருத்துகளில் முரண்படாது தன் எழுத்தை அமைத்துக்கொண்டவர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், தொலைக்காட்சிக்காக நாடகங்களும் எழுதியிருக்கிறார். இவரின் ‘அன்னை பூமி’ நாவல் தமிழ்நாடு அரசின் விருது பெற்றது. இவரின் படைப்புகள் கல்லூரி மற்றும் பள்ளி மேல்நிலைப் பாடப் புத்தகங்களில் பாடமாக்கப்பட்டிருக்கின்றன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *