கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 19, 2018
பார்வையிட்டோர்: 10,648 
 

பாலாவிற்கு முழுவாண்டு தேர்வு முடிந்ததும் என்னுடைய கைபேசியை அன்பளிப்பாக தருவதாக சொல்லியிருந்தேன். ஆனால் என்னுடைய வாக்குறுதியை என்னால் நிறைவேற்ற முடியாமல் போகும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. உண்மையில் அவள் என்னிடம் மொபைல் ஃபோன் கேட்கவில்லை. நானேதான் தருவதாக கூறினேன். இன்று என்னால் அந்த சிறுமி ஏமாற்றம் அடைந்த்திருப்பாள் என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.

தாம்பரம் பீச் ரயிலில்தான் நான் பாலாவை முதன்முதலில் சந்தித்தேன். நான் எழும்பூரில் ஏறுவேன். அவள் சேத்துப்பட்டில் ஏறுவாள். அங்கே ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய பள்ளியில் அவள் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். நான் அண்ணாசாலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அலுவலகம் 5.45 மணிக்கு முடியும். 5.40 மணியிலிருந்தே பயோமெட்ரிக் சிஸ்டம் முன்பு அவுட்பஞ்ச் அடிப்பதற்காக ஒரு கூட்டம் காத்திருக்கும். சரியாக 5.45 மணிக்கு பஞ்ச் அடித்துவிட்டு வெளியே வந்து சாலையை கடந்து, 27 D பிடித்து எழும்பூர் வருவதற்குள் மணி மாலை ஆறரை ஆகிவிடும். அவளும் டியூஷன் முடித்துவிட்டு அதே நேரத்தில் வருவாள். நான் வழக்கமாக கடைசி பெட்டியில் ஏறுவேன். ஜன்னல் அருகே அமர்ந்து குரோம்பேட்டை வரும் வரை மொபைலில் படம்பார்த்துக் கொண்டே வருவேன்.

“அடுத்த ட்ரைன்ல வரக்கூடதா?” வாசலில் நின்றவரின் குரல் கேட்டு நிமிர்ந்தேன். ஒரு சிறுமி மூச்சு இறைக்க நின்றுக் கொண்டிருந்தாள். ‘ஓடி வந்து ஏறியிருக்கிறாள்’. நான் மீண்டும் மொபைலை பார்க்கத் தொடங்கினேன்.

என் அருகில் வந்து அமர்ந்து என் மொபைலை எட்டிப் பார்த்தாள். நான் அவளை நிமிர்ந்து பார்த்தேன்.

“ஐ பொம்ம படம்!” அவள் சப்தமாகவே ஆச்சர்யப் பட நான் புன்னகைப் புரிந்தேன்.

“வயசுதான் ஆச்சு. இன்னும் பொம்ம படம் பாக்குறான்” என்று என் வீட்டில் எல்லோரும் திட்டும் அளவிற்கு நான் பொம்மை படங்கள் பார்ப்பவன்.

“என்ன படம்னே?” அவள் கேட்டாள்

“இன்சைட் அவுட்” என்றேன். அவள் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் படத்தையே பார்த்தாள்.

“ஐ யான!” என்றாள் மீண்டும் சப்தமாக.

அவள் ஆர்வமாக அந்தப் படத்தை பார்க்க, நான் படத்தை முதலிலிருந்து வைத்தேன். என் வலது காதில் சொறுகியிருந்த இயர் போனை அவளிடம் கொடுத்தேன். அவள் அதை வாங்கி தன் இடது காதில் சொறுகிக் கொண்டு, படத்தை ரசித்தாள். அந்த இயர் போன் அவள் காதில் பொருந்தவில்லை. கீழே விழுந்துக் கொண்டே இருந்தது. இரண்டு மூன்று முறை அதை எடுத்து காதில் வைத்துக் கொண்டவள், ஒரு கட்டத்தில், அது கீழே விழுந்ததை பொருட்படுத்தாமல் படத்தை ஆர்வமாக பார்த்தாள். நான் படம் பார்ப்பதை நிறுத்திவிட்டு அவள் குழந்தைத்தனத்தை ரசிக்கத் தொடங்கிவிட்டேன். சிறிது நேரத்தில் என்னை அறியாமல் என் மொபைல் ஃபோனை அவளிடம் கொடுத்துவிட்டேன். பல்லாவரம் வரும் வரை அவள் படத்தை பார்த்துக் கொண்டே வந்தாள். என்னிடம் அதிகம் பேசாமல், படத்தைப் பற்றி தனக்கு தானே பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் வந்தாள்.

“எப்பவும் லேடிஸ்ல தான் வருவேன். இன்னைக்கு லேட் ஆச்சுனு இதுல ஏறிட்டேன்” என்றாள். ரயில் பல்லாவரத்தில் நின்றது. அவள் இறங்குவதற்கு முன்பு, “அண்ணே நாளைக்கு மிச்சப் படத்த பாக்குறேன். நாளைக்கும் வருவீங்களா?” என்று ஏக்கத்துடன் கேட்டாள். நான் ‘ம்’ என்றேன். இப்படிதான் நானும் பாலாவும் நண்பர்களானோம்.

பாலா பம்மலில் இருந்து வருவதாக சொன்னாள். தன் ஆயாவுடன் வசிப்பதாக சொன்னாள். மற்றப்படி நான் பாலாவைப் பற்றி அதிகம் விசாரித்ததில்லை.

“சனி ஞாயிறு எப்ப போகும்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்னே” வழக்கமாக எல்லா திங்கக்கிழமைகளிலும் இதையே சொல்வாள். நானும் பாலாவை சந்திப்பதற்காக காத்துக் கொண்டுதான் இருப்பேன். அதை அவளிடம் சொல்லாமல், வெறும் புன்னகை மட்டும் செய்வேன். உண்மையில் ஒவ்வொரு நாளும் மாலை எப்போது வரும் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருப்பேன்.

வளரவளர பெரியவர்கள் போல் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லியே என்னையெல்லாம் வீட்டில் வளர்த்தார்கள். அப்படி வளரும் போது என்னிடம் ஏதோ ஒன்று மடிந்துகொண்டே வந்தது. அந்த ஏதோவொன்று பாலாவிடம் உயிரோடிருந்தது.

அடுத்தவர்களிடம் அதுவும் வழிப்போக்கர்களிடம் உரையாடுவதை எல்லாம் தவிர்க்க வேண்டும், குறைவாக பேசுவதே மெச்சூரிட்டி என்று நான் பாலாவின் வயதில் இருக்கும்போது என்னிடம் பலரும் சொல்லியிருக்கிறார்கள்.

“loose talk பண்ணாத…” பள்ளி முதல் கல்லூரி வரை ஆசிரியர்கள் இதே வசனத்தை சொல்வார்கள். அதனால்தான் என்னவோ யதார்த்தமாக கூட நான் ட்ரெயினில் யாரிடமும் உரையாடியதில்லை. ரயிலில் சந்திப்பவர்களுடன் தேவையில்லாமல் உரையாடுவது ஏதோ கவுரவ குறைவான செயலாக என் ஈகோ கருதியது. அமைதியாக புத்தகம் படித்துக் கொண்டோ, மொபைலில் படம் பார்த்துக் கொண்டோ வருவேனே ஒழிய, பக்கத்தில் இருப்பவரை பார்த்து ஒரு புன்னகைக் கூட செய்ததில்லை. ஆனால் பாலா தூய்மையான கடல்காற்றை போல் இருந்தாள். அவளிடம் கட்டுப்பாடு இல்லை. பேசிக்கொண்டே இருந்தாள். அவள் அந்த பொம்மைப் படங்களைப் பற்றிதான் பேசுவாள். மீண்டும் படத்தில் மூழ்கிவிடுவாள்.

பாலாவிற்காகவே என் மொபைலில் நிறைய பொம்மைப் படங்களை ஏற்றி வைக்கத் தொடங்கினேன். ஆறுமாதங்கள் வேகமாக ஓடியது. சில நாள் நான் வர தாமதமானாலும், அவள் சேத்துப்பெட்டில் காத்திருப்பாள்.

ஒருமுறை அலுவலகத்தை விட்டு கிளம்ப தாமதமாகிவிட்டது. நான் ஏழரை மணிக்குதான் எக்மோர் வந்தேன். சேத்துப்பட்டில் பாலா ஏறினாள். நான் அவள் போயிருப்பாள் என்று எண்ணினேன். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதை புரிந்து கொண்டவள்,

“ஒரு பொட்டி தானனே. நீ இருக்கியா இல்லையானு தேட முடியாதா?” என்றாள்.

“மொபைல் பித்து எடுத்து அலையுற நீ” நான் செல்லமாக கோபித்தேன். அவள் சப்தமாக சிரித்தாள்.

“லேடிஸ் பொட்டிலயே அந்த அக்காங்ககிட்ட மொபைல் பாத்துருக்கேன். எல்லாரும் மறச்சு மறச்சு ஏதோ மெசேஜ் அனுப்புவாங்க. நீ தான் அண்ணே சூப்பர்” சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தாள்.

“அண்ணன் முக்கியமா இல்ல பொம்மை படம் முக்கியமா?”

அவள் எந்த பதிலும் சொல்லவில்லை. என்னிடமிருந்து மொபைலை பிடிங்கிக்கொண்டு பொம்மை படத்தை பார்க்கத் தொடங்கிவிட்டாள். நான் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

ஒருநாள் அவள் முகம் வாடியிருந்தது.

“ஆயா ஊருக்கே போய்டலாம்னு சொல்லுது, முழு ஆண்டு எக்ஸாம்க்கு அப்பறம்.” என்றாள்.

“எந்த ஊர்?”

“புளிச்சலா… இங்க யாரும் இல்லையாம். அங்க போனா மாமங்க கூட இருந்திறாலாம்னு சொல்லுது”

“ஏன் ஊருக்கு போக புடிக்கலைய?

“ஊருக்கு போய்ட்டா உன்ன பாக்க முடியாதே, பொம்மைப் படமும் பாக்க முடியாது’ என்றாள்

“இந்த ஃபோன எடுத்துக்கோ ஊருக்கு போகும்போது” நான் சொன்னேன்.

“நிஜமாவா?” கண்கள் விரிய கேட்டாள். நான் “ம்” என்றேன்.

“ஆனா இப்ப இல்ல எக்ஸாம்ஸ் முடிஞ்சதும் நானே தரேன்” என்றேன். அவளுக்கு சந்தோசம்.

நாட்கள் உருண்டோடின. சில நாட்கள் ட்ரெயினில் அமர இருக்கை கிடைக்காது. சில நேரம் செங்கல்பட்டு ட்ரெயினில் ஏறிவிடுவோம். நிற்பதற்கே இடம் இருக்காது. ஆனாலும் பொம்மைப் படம் பார்ப்போம். பாலாவிற்கு முழு ஆண்டு தேர்வு தொடங்கியது. ஒழுங்காக படிக்க வேண்டும் என்று அறிவுரை சொன்னேன். அத்தகைய அறிவுரையை சொல்வதில் எனக்கு விருப்பமில்லைதான். உண்மையில், “இப்டியே சந்தோசமா இரு பாலா, மனசுல எதையும் வச்சுக்காமா…” என்று சொல்லவே தோன்றியது. ஆனால் அப்படி சொன்னால் அவளுக்கு புரியுமா என்று தெரியவில்லை.

அவள் சரி என்று தலையாட்டிவிட்டு என் மொபைலிலேயே குறியாக இருந்தாள். மறுநாள் சேத்துப்பட்டில் ஓடிவந்து ஏறினாள். களைப்பாக இருந்தாள்.

“எக்ஸாம் மதியானமே முடிஞ்சிது, உனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” என்றாள்.

“வீட்டுக்கு போய் படிக்கலாம்லா?”

“இவ்ளோ நேரம் படிச்சிக்கிட்டு தான் இருந்தேனே. ஒன்னோட்டு ஒரு நாள் தான் எக்ஸாம். மீதிய லீவ்ல படிச்சுக்கிறேன். நீ மொபைல குடு” என்றாள் நான் கொடுத்தேன்.

பல்லாவரம் வரும் போது கண்டிப்பாக சொன்னேன். “எனக்காக வெயிட் பண்ணதா. எக்ஸாம் முடியட்டும். நான் சொன்ன மாதிரி இந்த ஃபோன குடுத்துருவேன். அதுவரைக்கும் ஃபோன் கிடையாது” அவள் முகம் வாடியது. நான் ஏன் அப்படி சொன்னேன் என்று தெரியவில்லை. அமைதியாக எழுந்தாள்.

“எப்ப எக்ஸாம் முடியும்?”

“அடுத்த வெள்ளிக்கிழமை”

“அப்போ அன்னைக்கு சாயங்காலம் வெயிட் பண்ணு”

முகம் மலர்ந்தது. சரி என்று தலையசைத்தாள். வெள்ளிக்கிழமை நான் சற்று சீக்கிரமாகவே கிளம்பினேன். மேலாளரிடம் உடம்பு சரியில்லை என்று சொல்லிவிட்டேன். வழக்கமாக நான் கூட்டமான பேருந்துகளில் ஏறுவதை தவிர்ப்பேன். கூட்டம் குறைந்த பேருந்து வரும் வரை காத்திருந்தே ஏறுவேன். அன்று பாலா காத்திருப்பாள் என்பதால், அந்த 27D யின் மூச்சை இறுக்கும் கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் ஏறினேன். உள்ளே அடியெடுத்துவைக்க முடியவில்லை. ஒருவாறு உடலை நகர்த்திக் கொண்டு கம்பியில் போய் சாய்ந்தவாறு நின்றேன். எக்மோர் ரயில் நிலையம் வந்தது. கூட்டம் குறையவில்லை. கூட்டத்திலிருந்து உடலை பிதுக்கிக் கொண்டு வெளியேவந்தேன். அப்போது அந்த தடியான மனிதனின் பார்வை என் பார்வையை சந்தித்தது.

அவன் ஏன் அப்படி வித்தியாசமாக பார்க்கிறான் என்று எண்ணியவாறே இறங்கினேன். ஒரு கணம் ஒரு எண்ணம் தோன்ற பேண்ட் பாக்கெட்டில் கை வைத்து பார்த்தேன். மொபைல் அங்கு இல்லை. அந்த தடியனின் முகம் நினைவிற்கு வந்தது. பஸ் பின்னால் ஓடலாமா வேண்டாமா என்ற முடிவை எடுப்பதற்குள் பஸ் கிளம்பியிருந்தது. ‘வில்லிவாக்கம்’ என்ற பெயர்பலகை மங்கலாக தெரிந்தது.

எல்லோரும் தங்கள் மொபைலை கையில் வைத்துக் கொண்டு ரயில் நிலையம் நோக்கி நடந்தனர். என் நம்பருக்கு கால் செய்து பார்க்க வேண்டும். யாரை கேட்கலாம் என்று ஒவ்வொருவரையும் பார்த்தேன்.

நாகரிகமாக உடை அணிந்திருந்த அந்த இளைஞனிடம் ஆங்கிலத்தில் கேட்டேன்,

“சார் ஒரு போன் பண்ணிக்கலாமா? மொபைல் மிஸ் ஆகிடுச்சு” அவன் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் போய்விட்டான்.

என்ன செய்வதென்று தெரியாமல் நடந்தேன். எக்மோர் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த ஒரு போர்ட்டரிடம் விஷயத்தை சொன்னேன்.

“தொலஞ்சிருக்காதுபா எவனாவது அடிச்சிருப்பான். இங்க ஒரு கூட்டமே அலையுது” என்றார். தன் போனை கொடுத்தார். என் நம்பருக்கு கால் செய்து பார்த்தேன். switch off என்று வந்தது. அவர் போனை அவரிடம் கொடுத்து, ‘தாங்க்ஸ்’ என்றேன்.

“இருக்கட்டும்பா.. வீட்டுக்கு பேசுனுனாலும் பேசிக்கோ…” என்றார்

“பரவால்லனே. இங்க போலிஸ் ஸ்டேஷன் எங்க இருக்கு?”

“என்ன கம்ப்ளைன்ட் கொடுக்க போறியா…? அவங்க கண்டு புடிச்சு கொடுக்குறது டவுட்டு தான். போனா, ஏண்டா வந்தோம்னு நினைக்குற அளவுக்கு எதையவது பேசி அசிங்கப் படுத்துவாங்க…”

நான் என்ன சொல்வது என்று தெரியாமல், தலை அசைத்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தேன். அவர், “தம்பி” என்று அழைத்தார்.

“எதுக்கும் கம்ப்ளைன்ட் கொடுத்துவை. நாளைக்கு உன் போனால எதாவது பிரச்சனை வந்தா ஏன் கம்ப்ளைன்ட் பண்லன்னு கேப்பான்…” என்று காவல் நிலையத்திற்கு வழி சொன்னார்.

நான் எக்மோர் காவல் நிலையம் நோக்கி நடந்தேன். இவ்வளவு பிரச்சனையில் பாலா எனக்காக காத்திருப்பாள் என்பது மறந்து போனது.

“அப்ப நீங்க மவுன்ட் ரோட்ல தான் கம்ப்ளைன்ட் கொடுக்கணும் …” அந்த வயதான கான்ஸ்டபில் சொன்னார்.

“இல்ல சார், நடுவுல மொபைல் இருந்துச்சு. இறங்கும் போது இல்ல… பஸ்ல தான் எங்கேயோ தொலஞ்சிருக்கனும்”

அவர் பதில் பேசவில்லை. ஒரு வெள்ளை தாளை கொடுத்தார். கைபேசி களவாடப்பட்டுவிட்டது என்று ஒரு புகார் கடிதம் எழுதிக் கொடுத்தேன். புகார் கடிதத்தை வாங்கி படித்துவிட்டு,

“உன் பக்கத்துல லேடிஸ் நின்னாங்களா?”

நான் யோசித்தேன். “தெர்ல சார். ஸ்கூல் பசங்கலாம் இருந்தாங்க…”

“கல்யாணம் ஆச்சா?” அவர் வினவினார்.

“இல்ல சார்”

“அதான் பிரச்சனையே. லேடிஸ பாத்துட்டு ஃபோன விட்டுற வேண்டியது. இதே வேலையா போச்சு உங்களுக்கு….” அவர் மேற்கொண்டு பேசிய எதுவும் என் மனதில் பதியியவில்லை. அந்த போர்ட்டர் சொன்னது சரிதான். அங்கு ஏன் சென்றோம் என்று எண்ணம் தோன்றியது.

“இன்பார்ம் பண்றோம், போங்க” என்றார். எப்போது பேச்சை முடிப்பார் என்று காத்திருந்த நான் வேகமாக வெளியே வந்தேன். ஆட்டோ ஒன்றை பிடித்து ரயில் நிலையம் வந்து இறங்கினேன். மணி ஏழேமுக்கால். சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பாலா நின்றுக் கொண்டிருந்தாள். என்னை பார்த்ததும் சந்தோசமாக பெட்டியில் ஓடி வந்து ஏறினாள்.

“என்னனே இவ்ளோ நேரம்?”

நான் எதுவும் சொல்லவில்லை. அவள் என்னிடம் எதையோ பார்வையால் தேடினாள். பின் பொறுமையிழந்து அவளாகவே கேட்டாள்.

“மொபைல் எங்கனே?”

“மிஸ் ஆகிருச்சுடா… பஸ்ல யாரோ எடுத்துட்டாங்க…”

“நிஜமாவா?”. நான் ‘ஆம்’ என்று தலை அசைத்தேன். நான் பொய் சொல்லிருப்பதாக அவள் நினைத்திருக்கக் கூடும். பல்லாவரம் வரும் வரை அவள் என்னிடம் எதுவும் பேசவில்லை. பல்லாவரம் வந்ததும் என்னை திரும்பிப் பார்த்தாள். எதையோ சொல்ல வந்தவள் எதுவும் சொல்லாமல் இறங்கிச் சென்றுவிட்டாள். அதன் பின் அவளை நான் பார்க்கவில்லை. இன்றுவரை, சேத்துப்பெட்டு ரயில் நிலையத்தை கடந்து செல்லும் போதெல்லாம் வெளியே ஒரு கணம் பார்க்கமால் இருக்க முடியவில்லை.

– கிழக்கு பதிப்பகம் ‘சென்னை தின’ சிறுகதைப் போட்டி 2017-யில் பரிசு பெற்றக் கதை (பெப்ரவரி ௨௦௧௮)

Print Friendly, PDF & Email

1 thought on “பாலாவிற்காக…

  1. அருமையான கதை. உண்மையில் அந்த பையன் தான் பாவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *