கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: November 27, 2021
பார்வையிட்டோர்: 11,152 
 

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த நீண்ட பாலத்தின் மீது தனியே நடக்கும் போதெல்லாம் என்னை அறியாமல் ஓர் அச்சம் ஏற்படும்; பைத்தியக்கார எண்ணங்கள் பல தோன்றி மறையும்: ‘திடீரென்று யாராவது திருடர் இடைமறித்து, ஒன்றும் கிடைக்காத கோபத்தில் முதுகைப் பதம்பார்த்து விடுவார்களோ? அல்லது சமீபமாகப் பம்பாயில் நிரந்தரமாகிவிட்டிருந்த கலவரத்தின் எதிரொலி இங்கும் தோன்றி என்னைப் பலி கொண்டு விடுமோ?’

சில வழிப்பறிகளும், இரண்டொரு கத்திக் குத்துகளும் இடையே அங்கு நிகழ்ந்திருந்த போதிலுங்கூட, இன்றுவரையில் ஆபத்து எதுவும் இன்றி அதை நான் கடந்துகொண்டுதான் வந்தேன். ‘ஒவ்வொரு தடவையும் பாலத்தைத் தாண்டியதும், என் தைரிய மற்ற தன்மையை எண்ணி வெட்கப்படுவேன். ஒரு முறையாவது இத்தகைய பயங்கர எண்ணங்கள் மனசில் எழாமல் அதைக் கடந்துவிட வேண்டுமென்று முயன்றிருக்கிறேன்; ஆனால், அதில் நிரந்தர வெற்றியை என்னால் காணவே முடியவில்லை.

பம்பாய்க்கு வந்து போகும் தென்னிந்தியர் எவருக்கும், மாதுங்கா வில் இருக்கும், ஜி. ஐ. பி. ரெயில்வேத் தொழிற்சாலையின் மீது போடப் பட்டிருக்கும் அந்த நீண்ட பாலத்தைப்பற்றித் தெரியாதிருக்க முடியாது. ‘ஜி.ஐ.பி.மாதுங்கா ‘, ‘பி. பி. அண்டு ஸி.ஐ.மாதுங்கா (சுருக்க மாக ‘பி. பி. மாதுங்கா’) என்று தபால் இலாகாவாலும் ரெயில்வேக் கம்பெனியாராலும் பிரிக்கப்பட்டிருக்கும் மாதுங்காவின் இரு பகுதி களையும் இணைக்கும் கால் மைல் நீளமுள்ள பாலம் அது. வண்டிகள் ஒடும் பாலம் அல்ல; இரு மாதுங்காக்களுக்கும் இடையே ஜி.ஐ.பி. ரெயில்வேக் கம்பெனியாரின் பிரம்மாண்டமான தொழிற்சாலை வழி அடைத்து அமைக்கப்பட்டிருக்கிறது. ‘வண்டிகளைப்போல ஜனங்களும் அத் தொழிற்சாலையைச் சுற்றிக்கொண்டு ஒரு மாதுங்காவிலிருந்து மற்றொரு மாதுங்காவுக்குப் போக வேண்டாம்; குறுக்கேயே போகட்டும்’ என்ற ரெயில்வேக் கம்பெனியாரின் காருண்ய நினைவின் சின்னமாக அது எழுப்பப்பட்டிருந்தது.

பாலம் மிகவும் குறுகலானது. சுமார் எட்டடி அகலங்கூட இராது. அதிலும் இரு புறத்திலும் ஆள் உயரத்திற்கு வேலி பிடிக்கப்பட்டு அடைக்கப்பட்டிருந்ததால், புதிதாக அதன் வழியே நடப்பவர்களுக்கு, இரு மலைகளினூடே செல்லும் ஒரு குறுகிய கணவாயைக் கடப்பது போன்ற உணர்ச்சி தோன்றும். இரு மாதுங்காக்களின் தனித்தனி ரெயில் நிலையங்களை ஒட்டி அந்தப் பாலம் போடப்பட்டிருந்ததால், ஜன நடமாட்டத்திற்குக் குறைவே இல்லை. அதிகாலையிலிருந்து இரவு முன்னேரம் வரையில் அதன் வழியே நடந்து செல்வது கூடச் சற்றுக் கஷ்டமாகவே இருக்கும். ஆயினும், இரவு பத்து மணிக்கு மேலாகிவிட்டால், அதில் செல்பவர்களுக்குச் சிறிது பயம் தோன்றவே தோன்றும். பகலில் ஜீவகளை ததும்பி நின்ற பாலம் இரவில் உயிரிழந்து, தனக்குத் துணை தானாக நின்று கொண்டிருக்கும்.

யுத்தம் ஆரம்பிக்கு முன், பம்பாயில் தென்னிந்தியரின் ஜனத் தொகை ஒரு வரையறைக்குள் இருந்தது. அதனால் அன்று அவர்கள் ஜி. ஐ. பி. மாதுங்காவையே தங்கள் ஏகபோகமாகிக்கொண் டிருந்தார் கள். ஆனால், சண்டையின் போதும், அதன் பின்னும் தென்னிந்தி யரின் வருகை படிப்படியாக அதிகரிக்கவே , மாதுங்காவின் வயிறு பிதுங் கும் வரையில் அதை அடைத்த பிறகு, நம்மவர்கள், ‘ஜி. ஐ. பி. பி. பி.’ ரெயில் பாதைகளை ஒட்டிய பம்பாயின் சுற்றுப்படுகைகளில் இடம் பிடிக்கலாயினர், அதிருஷ்டமோ, துரதிருஷ்டமோ, ‘பி. பி.” ரெயில் பாதையை ஒட்டிய படுகைக் கிராமவாசியாக நான் இருந்தேன்.

படுகைவாசிகள் சிதறி வசித்தார்கள். அவர்களின் தொகையும் குறைவு. ஆகவே கூட்டுறவை விரும்பியோ, நண்பர் சுற்றத்தாரைக் காணவோ , தமிழ் மணத்தை நுகரவோ, ஏதாவது ஒரு காரணங்கொண்டு அவர்கள் ஜி. ஐ. பி. மாதுங்காவுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாக இருந்தது. தினந்தோறும் இல்லா விட்டாலும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறைத் தினத்திலாவது, அவர்களுக்கு மாதுங்காப் பிரயாணம் நிச்சயமாக இருந்தே தீரும்.

அதிலும் என்னைப் போன்ற இலக்கியப் பித்துக் கொண்டவனை மாதுங்கா ஆகர்ஷித்தது வியப்பே அல்லது நண்பர்களைச் சந்திப்பதோடு இலக்கியக் கழகங்களில் பங்கெடுத்துக் கொள்ளவும். ஒவ்வொரு நாளி லும் மாலைப்பொழுதில் என்னை மாதுங்காவில் காணலாம். ஆகவே ஜி. ஐ. பி. ரெயில்வேத் தொழிற்சாலைப் பாலத்தோடு எனக்கு மற்றவர்களை விட அதிகத் தொடர்பு இருந்தது என்று கூறினால் தவறாகாது.

இரண்டு மாசத்திற்கு முன் இப்படித்தான் ஒரு நாள் மாதுங்கா விற்குப் போயிருந்தேன். நான் அதிகமாகப் பழகும் சங்கத்தில் ஒரு விழா. பிரபல ஆசிரியர் ஒருவர் தென்னாட்டிலிருந்து விழாவிற்குத் தலைமை வகிக்க வந்திருந்தார். அவர் பிரசங்கத்திலும் விழாவின் கோலாகலத்திலும் என்னை மறந்து இருந்துவிட்டு, இரவு பன்னிரண்டு மணிக்குப் பிறகு படுகையிலுள்ள என் வீட்டிற்குக் கிளம்பினேன்.

வழக்கமாகப் பாலம் வரையில் வந்து என்னை வழியனுப்புவதைக் கடமையாகச் செய்து வந்த நண்பர் அன்றும் என்னுடன் வந்திருந்தார். “என்ன, இந்த நடுராத்திரியில் வீட்டிற்குப் போக வேண்டும் என்கிறீர் களே! இங்கே படுத்திருந்து விட்டுக் காலையில் போனால் போதாதா?” என்றார் அவர்.

நாங்கள் பாலத்தருகே வந்து கொண் டிருந்தோம். என் கண்கள் ஒரு முறை பாலத்தை ஊடுருவி நோக்கின. அதன் நீண்ட வெறிச் சென்ற தோற்றம் வழக்கமான் பயங்கர நினைவுகளை உடனே என்னுள் கிளப்பிவிட்டது. இருந்தாலும் தைரியசாலியைப் போன்று, “எனக்கென்ன ஸார் பயம், ஆண்பிள்ளைக்கு?” என்று அந்த நண்பரிடம் சொன்னேன்.

“ஆமாம்; நடுவழியில் எவனாவது இடைமறித்து நாலு போடு போட்டானென்றால், உங்கள் தைரியமெல்லாம் தெரியும். போன வாரம் ஒருவரிடம் இருந்ததையெல்லாம் பிடுங்கிக்கொண்டு கைகால்கள் ஓடிய அடித்து விரட்டி விட்ட செய்தியாவது உங்களுக்குத் தெரியுமா, இல்லையா?”

அந்த நண்பர் வேண்டுமென்றே என்னைப் பயமுறுத்த எண்ணி னாரோ. அல்லது அவர் கூறிய செய்தி உண்மையே தானோ. எனக்குத் தெரியாது. ஆனால் அப் பேச்சால் அவர் என் மனத்தின் உள்பாகத்தில் பெரிய திகிலையும், வெளியே வீறாப்பையும் கிளப்பி விட்டுவிட்டார் என்பது மட்டும் உண்மை. இருந்தாலும், விட்டுக்கொடுக்காமல் அவருக் குப் பதில் அளித்தேன். “ஆமாம், கையாலாகாத மனிதர் அகப்பட் டால், சும்மா தெருவோடு போய்க்கொண் டிருப்பவன் கூட நாலு கொடுத் தனுப்பத்தான் நினைப்பான்’ என்றேன்.

“அதற்காகச் சொல்லவில்லை ராமு; கால நிலை சரியாக இல்லாத போது எதற்காக இந்த நடு ராத்திரியில் இப்படித் தனியே போக வேண் டும்? நான் சொல்கிறேன் : இனிமேல், ஒன்று : மாதுங்கா வேலைகளை இரவு முன்னேரத்தில் முடித்துக்கொண்டு ஜன நடமாட்டம் இருக்கும்போதே வீடு திரும்பிவிடுங்கள்; இல்லாவிட்டால், இரவு இங்கேயே தங்க ஏற்பாடு செய்து கொண்டு வாருங்கள்.”

“இனிமேலுள்ள காரியங்களைப்பற்றிப் பிறகு. ஆலோசித்துக் கொள்ளுவோம்: இப்பொழுது நான் போய் வருகிறேன்’ என்று கூறிப் புறப்பட்டேன்.

“கட்டாயம் வீட்டிற்குப் போய்த்தான் ஆகவேண்டுமென்றால் வாருங்கள்; பாலத்துக்கு அப்புறம் வரையில் உங்களைக் கொண்டு விட்டு வருகிறேன்” என்றார் அவர்.

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். இந்தப் பாலத்தை இப்படி அவ வேளையில் கடப்பது எனக்கு ஒன்றும் புதிதல்ல. நீங்கள் கவலைப்படாமல் வீட்டுக்குப் போங்கள்” என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.

நண்பர் சற்று வருத்தத்துடனே வீடு திரும்பினார். நான் பெரிய தைரியசாலியைப் போன்று பாலத்தில் ஏறினேன். ஆனால், அந்தத் தைரிய நிலை ஒரு நிமிஷத்திற்குக்கூட என்னிடம் நிற்கவில்லை. முன்னால் கண் ணுக்கு எட்டிய தூரம் வரையில் நீண்டிருந்த வெறிச்சென்ற பாதையை மறுபடியும் நோக்கியபோது என் உடம்பு வழக்கத்திற்கும் அதிகமாக ‘வெடவெட’ வென்று நடுங்கிற்று.

கால்கள் என்னவோ உணர்ச்சியின்றி நடந்து கொண்டு தான் இருந் தன. ஆனால் மனம் விபரீத உணர்ச்சி அலைகள் மோதத் துடித்துக் கொண்டிருந்தது. ‘அவர் அவ்வளவு வருந்தி அழைத்தபோது பேசாமல் திரும்பாமல் இருந்தேனே!’ என்ற வரையில் என் ஆலோசனைகள் வந்து விட்டன.

எப்படியோ, பலத்தில் பாதி தூரம் வந்து விட்டேன். ஊசி விழுந்தால் கூட ஓசை கேட்குமாறு நிச்சப்தம். பெரிய பம்பாய் நகரமே உறங்கிவிட்டது. ஏன்? உலகமே உறங்கிவிட்டது. நான் மாத்திரம் கொழுப்பேறி நடந்துகொண்டிருந்தேன்.

அந்த நண்பர் கூறியது போல, பம்பாயில் அமளி அச்சமயம் சற்றுப் பரவித் தான் இருந்தது. நான் நடந்து கொண்டிருந்த அப் பாலத்தில், இரண்டொரு மாசங்களுக்கு முன்பு ஒரு கத்திக்குத்து நடந்திருந்தது. இப்பொழுது பார்த்து அச்சம்பவம் என் நினைவுக்கு வந்தது. அது சற்று முன்பே நினைவுக்கு வந்திருந்தால் நண்பருடன் திரும்பியிருந்தாலும் இருப் பேன். இனி என்ன செய்வது? வருவது வரட்டுமென்று நடக்க வேண்டியது தான். இது வரையில் நினைத்திராத தெய்வங்களையெல்லாம் நினைத்துப் பிரார்த்தித்துக்கொண்டே நடந்தேன்.

அப்பாடா! ஒரு மட்டும் பாலத்தின் கோடி வந்தது. படிகளிலும் இறங்க ஆரம்பித்துவிட்டேன். இன்னும் சில கஜங்கள் சென்றுவிட்டேனானால் ‘பி.பி.’ மாதுங்கா ஸ்டேஷன். இனிப் பயம் இல்லை. இங் கிருந்து கத்தினால் கூட ஸ்டேஷனுக்குக் கேட்காமல் இராது. அங்கே யாராவது இல்லாமலா போய்விடப் போகிறார்கள்?

சிறிது சாதகமான சமாதானம் கிடைத்துவிட்டால், மனசு அசாதாரணத் தைரியம் கொண்டு விடுகிறது. இல்லாவிட்டால், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பாலத்தைத் தாண்டி வந்த நான், இறங்கிக் .. கொண் டிருந்த படிக்கட்டின் அடியில் குசுகுசுவென்ற பேச்சுக் குரல் . கேட்ட போது, அவ்வளவு தைரியத்துடன் நின்று, “யார் அங்கே?” என்று கேட்டிருக்க மாட்டேன்.

“நான் தானுங்க; வழிப்போக்கனுங்க” என்ற பதில் தமிழில் வந்ததும் என் தைரிய நிலை உச்சியை எட்டிற்று.

“யாரது? இப்படி வெளியே வா, வெளிச்சத்திற்கு” என்று ஒரு வீரனைப்போல அதட்டினேன்.

கறுத்துத் தடித்த, ஆனால் வலுக் குன்றிய ஓர் ஆண் மகன் பாலத் தடியிலிருந்து வெளியே வந்தான். திடகாத்திரமான சரீரம்; இருந் தாலும் சோர்வுற்றுக் காணப்பட்டான். இடையில் ஓர் அழுக்குத் துணியையன்றி உடம்பை எதுவும் மூடியிருக்கவில்லை. கிராப்புத் தலை எண்ணெய் வாசனை அறியாது மறந்து கொண்டிருந்தது. மீசையும் தாடியும் முகத்தை மறைத்திருந்தாலும், வாலிபப் பருவத்தில் இருப் பவன் என்பதை அறிவுறுத்தின.

“சாமி” என்று கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டு நான் நின்ற ராந்தல் கம்பத்தடிக்கு வந்தான்.

“யாரப்பா நீ? பாலத்தடியில் என்ன செய்கிறாய்?” என்று கேட்டேன்.

“சும்மா இங்கே படுத்து ராப் பொளுதெத் தள்ளிப் போடலாமின்னு வந்தேனுங்க” என்றான் அவன்.

“பேச்சுக் குரல் கேட்டதே? கூட யாரங்கே? அவனையும் வெளியே கூப்பிடு; பார்க்கலாம்.”

“அவன் இல்லேங்க; அவளு..அவளு…” அவன் தயங்கினான்.

“ஏன் தயங்குகிறாய்? இங்கே கூப்பிடு; அந்த அவள் யாரென்று பார்க்கலாம்!”

என் மனசில் லேசாக ஒரு சந்தேக ரேகை எழுந்தது. முன்பு அந்தப் பாலத்தின் எதிரே இருந்த குப்பைமேட்டில், பிச்சை எடுப்பதையே தொழிலாகக் கொண்ட பாமரத் தமிழரின் கூட்டம் ஒன்று நிரந்தரமாக மனைவி குழந்தைகளுடன் குடிசை போட்டுக்கொண்டு தங்கியிருந்தது. சமீப காலத்தில் அந்த வட்டாரத்தில் நடந்த சில திருட்டுக்களுக்கு இந்த மக்களே காரணமாக இருக்கலாமென்று சந்தேகித்த . போலீசார் அவர்களை அங்கிருந்து விரட்டிவிட்டார்கள். இப்பொழுது பாலத்தடியில் அந்தக் கோஷ்டியைச் சேர்ந்தவன்போலத் தோன்றிய ஒருவனைக் கண்டதும், ‘இவனும் அத்தகைய செய்கையில் எதிலாவது ஈடுபட இங்கே வந்து பதுங்கியிருப்பானோ? கூட இருப்பது பெண் என்றால், அவன் மனைவியாக இருப்பாள் என்று நினைத்துக் கொண்டு நான் பேசாமல் போய் விடுவேன் என்று சொல்லியிருப்பானோ?’ எனச் சந்தேகித்தேன்.

ஆனால், அவன் பாலத்தடிக்குச் சென்று, “ஏ முத்தம்மா; இந்தா. இப்படிச் செத்தே வந்திட்டுப் போ; யாரோ நம்ம தமிழ் ஐயா வந்திருக்கிறாரு, பாரு” என்று கூப்பிட்டதும், உண்மையாகவே ஒரு வாலிபப்பெண் வெளியே வந்தாள். “கும்பிடறேனுங்க” என்று அவள் என் எதிரில் வந்து நாணிக் கோணி நின்றாள்.

கன்னங்கறேலென்ற இளமையோடிய தேகத்தை முழுவதும் மூட ஆடையின்றி, ஏதோ கிடைத்த கந்தலை அங்கொன்றும் இங்கொன்று மாகச் சுற்றிக்கொண்டிருந்தாள். யௌவனத்தின் சோபை முகத்தில் காணப்பட்டாலும், நீண்ட அயர்வின் சாயலும் அதில் தென்படாமல் இல்லை .

என் மனசில் இருந்த சந்தேகம் இப்பொழுது விலகிப் போயிற்று. அவர்கள் கோலம் என் மனசைக் கனிய வைத்தது. ‘இங்கே ஏனப்பா வந்து தங்கியிருக்கிறீர்கள்?’ என்று இரக்கம் தோன்றக் கேட்டேன்.

“நாங்க இந்த ஊருக்குப் புதுசுங்க; பொளுது சாயுறப்போதான் இங்கே வந்தோமுங்க” என்றான் அவன்.

“நீங்க எந்த ஊரு?”

“எங்க ஊரு திருநெல்வேலியுங்க; ஆனா அதை வுட்டு வந்து ரொம்ப நாளாச்சுங்க.”

“எந்த ஊரில் இவ்வளவு நாளாக இருந்தீர்கள்?”

“கராச்சியிலேங்க.”

‘கராச்சி’ – அந்த ஒரு வார்த்தை என் மன நிலையை எவ்வளவு தூரம் மாற்றிவிட்டது? சமீபமாக அங்கிருந்து வந்திருந்த நம் அகதிகளில் சில ரைச் சந்தித்துப் பேசிக்கொண் டிருந்தேன். அங்கு அநுபவித்த கஷ்டங் களை அவர்கள் விஸ்தரித்தபோது என் கண்களில் நீர் சுரந்தது. நான் நினைத்தேன்: ‘அவர்கள் படித்தவர்கள்; வாக்கு வன்மை உடையவர்கள். அவர்களே அத்தகைய கஷ்டங்களை அனுபவித்திருந்தால், என் முன் நிற்பவனைப்போன்ற பேச்சுரிமையற்ற ஜீவன்கள் எவ்வளவு துன்பத்திற்குள்ளாகியிருக்க வேண்டும்?’

“உன் பெயர் என்னப்பா?” என்று அவனைக் கேட்டேன். “சம்முகமுங்க” என்றான் அவன். “அது சரி; ஏதாவது சாப்பிட்டீர்களா இன்று?”

“சாப்பாடேது ஒண்ணேது சாமி? மூணு நாளாக் கொலைப் பட்டினி. எப்படியாவது உயிர் பொளைச்சாப் போதுமின்னு ரெயிலேறிப்புட்டோம். உசிரைக் காப்பாத்திக் கொண்டாந்துட்டோம். இனிமேத்தான் சாமி, சாப்பாட்டைப் பத்தி நினைக்கணும்.”

நான் சட்டைப் பைகளைத் தடவினேன். நல்ல வேளையாக அதில் சிறிது பணம் இருந்தது. நடு இரவாகிவிட்டபோதிலும், ஸ்டேஷன் பிளாட்பாரத்திலிருந்த ஹோட்டல் திறந்தே இருக்கும். ‘பாவம்; மூன்று நாட்களாய்ப் பட்டினி!’ நினைப்பதற்கே பயமாக இருந்தது. அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு ஸ்டேஷனுக்கு நடந்தேன்.

பசி ஆறியதும், அவர்கள் மறுபடியும் நன்றி தோன்ற என்னைக் கையெடுத்துக் கும்பிட்டார்கள். ஷண்முகம் அந்த ஸ்திரீயிடம் திரும்பி,

“இந்தா முத்தம்மா; செத்தெ முந்தி என்னமோ சொன்னியே? இப்போ பாத்தியா? அதுதான் நான் சொல்லலே: ‘நம்ம மனுசங்க எவுங்களாவது கண்ணிலே பட்டா, நம்ம பசி ஆறிப்போவு’ மின்னு ; சரியாப் போச்சா?” என்றான்.

“என் மவராசா, சாமி! புள்ளே குட்டியோடு நூறு வருசம் மவா ராசா மாதிரியே வாளணும்!” என்று என்னை வாழ்த்தினாள் முத்தம்மாள்.

நான் கடிகாரத்தைப் பார்த்தேன். கடைசி ரெயில் வருவதற்கு இன்னும் கால் மணி நேரம் இருந்தது. ஆகவே பேச்சைத் தொடர்ந்தேன்: “என்னப்பா ஷண்முகம், உங்களுக்குக் குழந்தை எதுவும் இல்லையா?”

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர். “என்ன புள்ளே, சொல்லிப் போடட்டுமா?” என்று முத்தம்மாளிடம் கேட்டான் ஷண்முகம்.

“அடி ஆத்தே, என்னைப் பயங்காட்டுறியாங் காட்டியும்? சொல்லிப் போடேன்.

“ஆமாம்; நம்ம வவுத்துக்குச் சோறு போட்ட மவராசா முன்னாலே சொல்லிப் போடுறேன். அப்புறம் ‘ஞஞ்ஞமுஞ்ஞா’ இன்னியானா?”

அவர்கள் பேச்சின் உள்ளர்த்தத்தைத் தெரிந்து கொள்ள முடியாமல் நான் திகைத்த போது ஷண்முகம் சிறிது வெட்கம் கலந்த தொனியில் சொன்னான்: “இல்லீங்க; நாங்க இனிமேத்தான் கலியாணம் கட்டிக் கிடணம்.”

“இவளுக்கு அப்பன் அம்மா யாரும் இல்லையா?”

“இருந்தாங்க சாமி; எல்லாரையும் பாவி துலுக்கங்க பத்து நாளைக்கு முன்னே கொன்னுப்போட்டாங்க.”

“அட பாவமே! அப்படியானால் இவளை உனக்கு முன்பே தெரியுமா?”

“ம்ஹும்; தெரியாதுங்க; அன்னிக்குக் கலகத்திலே, இவ ஐயா ஆத்தாவைக் கொன்னுப்போட்டு, இவளைக் குண்டுக்கட்டாக் கட்டித் தூக்கிக்கிட்டுப் போனாங்க. ‘குய்யோ முறையோ’ன்னு கத்திக்கிட் டிருந்தா இவ. கலகத்துக்குப் பயந்து நான் ஓடியாந்துக்கிட்டிருந்தேன்; நம்ம பாசை காதிலே விளுந்ததும் பார்த்தேன். இவளை ரோட்டிலே போட்டுட்டுக் கலகக்காரங்க ஒரு கடைக்குள்ளே கொள்ளையடிக்க ஓடிக் கிட்டிருந்தாங்க. அப்பிடியே ஒரு எட்டிலெ அந்தக் கட்டோடே தூக்கிக் கிட்டு ஓடியாந்துட்டேன்.”

”ஆமாங்க; என் உசிரு , என் மானம் எல்லாத்தையும் காப்பாத்தி, இங்கே கூட்டியாந்திட்டு, இப்போ, ஒன்னெ ரயிலேத்தி விட்டுடுறேன், ஊருக்குப் போயுடு இங்கிறாரு. இது நாயங்களா?” என்று முத்தம்மாள் தொடர்ந்தாள்.

“ஏன் புள்ளே? நானா ஒன்னே ரயிலேத்தி விட்டுடுறேனின்னேன்? இந்தாங்க சாமி; இது பேச்சை நம்பாதேங்க. அதுவே என்னை ரயிலேத்தி விட்டுடூன்னிட்டு, இப்பொ எம் மேலே பளியெப் போடுது பாத்திங்களா?”

“பின்னே என்ன சாமி? பசி கொடலெத் திங்குது. ஒரு நேரம் சோத்துக்கு வளியெக் காணோம்; அப்ப வந்து, நீ என்னைக் கலியாணம் கட்டிக்கிடுன்னு கேட்டாரின்னா, என்ன சாமி சொல்லுது!”

“பாத்திங்களா சாமி, பளையபடியும் இது பொய் சொல்லுதே? என்னைக் கலியாணம் கட்டிக்கிடூன்னா இவளைக் கேட்டேன்? ‘ஆயுடுச்சு, உசிரெக் காப்பாத்திக்கிட்டோம்; இனிமே பொளைப்புக்கு ஒரு வளி பாக்கணு’மின்னேன். அதுக்கு இவ சொன்னா: ‘ என்னாலெ நீங்க கயிட்டப் படவேண்டாம். என்னை ஊருக்கு ரயில் ஏத்தி விட்டுடுங்களி’ ன்னா. ஊரிலே இவளுக்கு யாருமில்லேன்னு இவதான் ரெயிலிலே வந்துக்கிட்டிருக்கையிலே சொன்னா. ‘ஊரிலே யாரு நீ வரலியேன்னு காத்திருக் காங்களாம்? நீ பேசாம என்னோடே இரு. நான் எப்படியாச்சும் ஒரு வேலை தேடிக்கிட்டு ஒன்னைக் காப்பாத்திக்கிடுறேன்.’ இதுதானுங்க நான் சொன்னேன். இதெத்தான், கலியாணம் கட்டிக்கிடக் கேட்டேனிங்கறா.”

அவர்கள் ஊடல் பேச்சை நான் மிகவும் ரசித்தேன். கதை எழுதும் போது சில சமயங்களில், மிகவும் கஷ்டமான நிலைக்கு வருவதுண்டு; காதலனையும் காதலியையும் சந்திக்கச் செய்துவிடுவேன். பிறகு இரு வரும் தங்கள் காதலைச் சொல்லாமல் சொல்லி வெளிப்படுத்த வேண்டும். இந்த இடத்தில் சம்பாஷணையை எப்படிக் கொண்டுபோவது என்று நான் மண்டையை உடைத்துக்கொள்ளுவேன். அதுபோன்ற ஒரு கட்டம் இப்பொழுது என் முன் எளிதாக விடுபட்ட விதத்தை நான் வியந்து கொண்டிருந்தேன்.

ஷண்முகம் தொடர்ந்து கேட்டான்: “சாமி, எங்கேயாச்சும் ஒரு வேலை பார்த்துக் கொடுக்க மாட்டீங்களா?”

“ஆமாம் சாமி, ஒங்க சோத்தைத் திண்ணு ஒங்க முன்னாலேயே இன்னிக்கு ஒன்னாயிட்டோம். இனிமேலும், என்னென்னிக்கும் ஒங்க உப்பையே தின்னு ஒன்னாயிருக்கிற மாதிரி இவருக்கு ஒரு வேலை போட்டுக் குடுத்திடுங்க” என்று குழைவோடு கெஞ்சினாள் முத்தம்மாள்.

“கராச்சியிலே நீ என்ன வேலை செய்து கொண்டிருந்தாயப்பா?” என்று ஷண் முகத்தைக் கேட்டேன்.

“மில்லிலே இருந்தேனுங்க. இங்கேயும் எதினாச்சும் அதுபோல ஒரு வேலை கெடச்சிச்சின்னா…”

ரெயில் பிளாட்பாரத்துக்குள் வந்து கொண்டிருந்தது. மேலே பேசிக் கொண்டிருக்க எனக்கு நேரம் இல்லை. பையில் மிகுந்திருந்த பத்து அணாவையும் அவனிடம் கொடுத்து, “இதை வைத்துக்கொண்டு நாளைக்குப் பகல் பொழுதைத் தள்ளுங்கள். சாயங்காலம் நான் இங்கே வரு வேன். அப்பொழுது உனக்குத் தகுந்த வேலை ஏதாவது கிடைக்குமா என்று விசாரித்துக்கொண்டு வருகிறேன்” என்று கூறி அவர்களை அனுப்பி விட்டு ரெயிலேறினேன்.

மறுநாள் மாலையில் என்னை எதிர்நோக்கிப் பாலத்தடியில் காத்து நின்றான் ஷண்முகம். என்னைக் கண்டதும், “எதினாச்சும் அகப்பட்டுதுங்களா?” என்று ஆவலுடன் கேட்டான்.

“வேலை நாம் நினைத்ததும் கிடைத்துவிடாதப்பா; சிநேகிதர்களிடம் சொல்லியிருக்கிறேன். எங்கேயாவது வந்தால் தெரிவிப்பார்கள். நான் உனக்கு வந்து சொல்லுகிறேன்” என்றேன்.

“எதினாச்சும் பாருங்க சாமி. இத்தனை பெரிய ஊரிலே இருந்துக்கிட்டு, பிச்சையெடுத்தா பொளைக்கிறதுங்க?”

அவன் ஆண்மகன். சோம்பேறியல்ல. தன் தேகத்தை ஓடாய்த் தேய்க்கவும் தயாராக இருந்தான். ஆனால் சும்மா எவரிடமும் கை நீட்ட விரும்பவில்லை. இருந்தாலும் வெளி உலகமோ, நான் அவனுக்கு வேலை கொடுக்கும்படி கூறிய நண்பர்களோ அதை உணர்ந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு அரை வயிற்றுக்கேனும் நிரந்த்ரமாகக் கஞ்சி வார்க்கும் சக்தி எனக்கு இருந்திருந்தால், நானே அவர்களை என்னுடன் அழைத்துப் போயிருப்பேன். அந்த நிலை எனக்கு இல்லையே! கடவுள் ஏழைகளின் வாழ்க்கையை நிலை நிறுத்தும் பணியை ஈவிரக்கமற்ற பணக்காரர்கள் கையில் அல்லவா ஒப்படைத்திருக்கிறார்? அதனால் தானோ என்னவோ நான் இரண்டு மாசங்களாக எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த எளியோனுக்கு ஒரு வேலை தேடிக்கொடுக்க முடியவில்லை.

அந்த இரண்டு மாசங்களிலும் ஒரு வேளை கூட அவன் பிச்சை யெடுத்து வயிற்றை நிரப்பவில்லை. இரண்டொரு தடவை நான் மனம் உவந்து கொடுத்த சிறு பணத்தைக்கூட வாங்க மறுத்துவிட்டான். “சாமி, நிலையான வேலை கெடைக்கலையின்னாலும் எங்க வவுத்துக்கு ஏதோ கெடைச்சிக்கிட்டுத்தான் இருக்குதுங்க. ரெயிலடியிலே போய் நிக்கறேன். நாலு பேரு நாலு சாமானெக் கொடுத்து, சுமக்கச் சொல்லுறாங்க. ஏதோ கொஞ்சம் கெடைக்குது. எங்க பாடும் ஒரு வளியாக் களிஞ்சு போயிடுது. ஆனாலும் சாமி, ஒங்க முன்னாலே அன்னிக்கு எங்க சேர்க்கைக்கு ஒரு பாலம் போட்டுக்கிட்டோம். அந்தப் பாலத்தை, இதோ இந்தப் பாலத்தைப்போலே நெலையா நிறுத்த ஒரு வேலை பார்த்துக் கொடுத்தேங்கன்னா, எங்க தலைக்கொளந்தைக்கு ஒங்க பேரு போட்டிடுவோமுங்க” என்பான் அவன்.

அவன் வேண்டுகோள் என் உள்ளத்தைத் தொடும். ‘இந்தச் சாதுவின் பிழைப்புக்கு ஒரு நிரந்தர வழி காட்ட முடியவில்லையே!’ என்று நொந்துகொண்டே போவேன்.

ஒரே ஒரு வேளைதான் அவன் பசியை ஆற்றினேன். அந்த நன்றியறிதலை அவன் வெறும் வார்த்தைகளால் மட்டிலுந்தானா காட்டினான்? இல்லை; செய்கையும் அதைத் தொடர்ந்தது. ஒவ்வொரு நாளும் வயிற்றுப் பிழைப்புக்கான தொழிலையும் பொருட்படுத்தாது என் வருகையை எதிர்நோக்கிப் பாலத்தடியில் நிற்பான். என்னைத் தொடர்ந்து பாலத்தின் எதிர்க் கோடி வரையிலும் வருவான். இரவு எவ்வளவு நேரமானாலும் சரி; நான் திரும்ப வரும் வரையில் அதே இடத்தில் காத்திருந்து, என்னைப் பத்திரமாகப் பாலத்தைக் கடக்கச் செய்து, ஸ்டேஷனில் கொண்டு ரெயிலேற்றிவிட்டுத்தான் திரும்புவான்.

“நீ எதற்காக அப்பா, நாலு கூலி வருகிற மாலை நேரத்தை எனக்காகக் காத்திருந்து வீணடிக்கிறாய்?” என்று கேட்டால், சொல்லுவான்: “இந்தப் பாலத்தைப்பத்தி ரொம்பக் கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டேனுங்க. நீங்க ராவுலே தனியே வருகிறீங்க; ஒங்களுக்கு எதினாச்சும் வந்துதுன்னா அது எனக்கு வந்ததுபோல இல்லீங்களா?”

“எனக்காகவே, அவன் வேறு வேலைக்கு யத்தனிக்காது இப்படி அந்தப் பாலத்தடியிலே குடி புகுந்துவிட்டானோ?” என்றுகூட எனக்குத் தோன்ற ஆரம்பித்தது. இந்த எண்ணம் தோன்றியதிலிருந்து மனச்சாட்சி என்னை வருத்திக் கொண்டிருந்தது. ‘உன்னால் எவ்விதப் பலனையும் அடையாத ஓர் ஏழையின் பிழைப்பை நீ வேண்டுமென்றே கெடுத்து விடுகிறய்’ என்றது இது.’இந்த நினைவு நாளுக்கு நாள் வலு அடைந்தது காரணமாகச் சென்ற மூன்று நாட்களாக மாலையில் மாதுங்கா செல்லும்’வழக்கத்தைச் சட்டென்று நிறுத்திவிட்டேன்.

ஆனால் மாதுங்கா நண்பர்கள் இதைக் கண்டார்களா? அவர்கள் ஏதேதோ விபரீதக் கற்பனை செய்து கொண்டு எனக்கு டெலிபோன் செய்தவண்ணமாக இருந்தார்கள். “வீட்டில் மனைவி குழந்தைக ளெல்லாம் சௌக்கியந்தானே? பின் ஏன் உங்களை இரண்டு மூன்று நாட்களாகக் காணவில்லை?” என்று வியப்புடன் கேட்டார் ஒரு நண்பர்.

இன்னொருவர் அதிலும் ஒரு படி முன்னேறி எனக்கே உடல் கோளாற்றைக் கற்பித்துக் கொண்டார். இவர்கள் எல்லோரையும் விடப் பெரிய போடாகப் போட்டார், என்னை வழக்கமாக வழியனுப்ப வரும் நண்பர். டெலிபோனைக் கையில் எடுத்ததும், “என்ன ஸார்? ராமுவா பேசுகிறது? இருக்கிறீர்களா?” என்று கேட்டார் அவர்.

“இல்லாமல் என்ன?” என்றேன்.

“இல்லை ; திங்கட்கிழமை இரவு விடை பெற்றுக்கொண்டவரை வழக்கத்திற்கு மாறாக மறுபடி காணவும் இல்லை; தகவலும் இல்லை என்ற போது. நாள்தோறும் தனக்கு நித்திராபங்கத்தை ஏற்படுத்தி வந்த மனிதரைக் கடைசியில் பாலம் தண்டித்து விட்டதோ என்று நினைத்தேன்” என்று கூறிச் சிரித்தார்.

விஷயத்தைக் கூறியபோது அவர் இன்னும் கேலியாகச் சிரித்து விட்டு, பைத்தியமாயிருக்கிறதே உங்கள் முடிவு? யாரோ ஒரு வழிப் போக்கனுக்காக நண்பர்களோடு அளவளாவுவதையே தியாகம் செய்யத் துணிந்து விட்டீர்களே! மிக அழகுதான், போங்கள். அதிருக்கட்டும்; இன்று இரவு கட்டாயம் மாதுங்காவுக்கு வாருங்கள். முருகதாசர்’ என்றொரு பக்தர் பஜனை ஸமாஜத்திற்கு வந்திருக்கிறார். தெரியுமோ, இல்லையோ? மிகவும் அற்புதமாகப் பாடுகிறார். பக்தி ரசம் பொழிகிறது அவர் பாடல்களிலே. உங்களுக்குப் பக்தி கிக்தியிலெல்லாம் அவ்வளவு சுவாரஸ்யம் கிடையாதென்பது தெரியும். இருந்தாலும் சங்கீதமாவது. நண்பர்களைப் போலப் புறக்கணிக்கத் தக்கதாயிருக்காது என்று நினைக் கிறேன்” என்று தாக்கினார்.

ஷண்முகத்திற்கு வேலை தேடிக் கொடுத்து அவனைப் பாலத்தடியி லிருந்து கிளப்பும் வரையில் மாதுங்காவிற்குப் போவதில்லை என்று தான் சங்கற்பித்துக்கொண் டிருந்தேன். ஆனால் இந்த நண்பரின் தாக்குதல் என் சங்கற்பத்தையும் ஒருவாறு தாக்கிவிட்டது. அதோடு இலக்கியப்பித் தைப் போலச் சங்கீதப்பித்தும் எனக்கு நிறைய உண்டு. ஆகவே அன்று மாலை காரியாலயத்திலிருந்து போகும் வழியிலே, மாதுங்காவில் இறங்கி விட நிச்சயித்தேன்.

ரெயில் வரும் போது மற்றொரு நண்பரைப் பார்த்தேன். “என்ன ‘ஸார். உங்கள் பாலத்தடி ஆசாமி பெரிய பைத்தியமாயிருப்பான் போலிருக்கிறதே?” என்றார் அவர் என்னைக் கண்டதும்.

“ஏன்? என்ன ?”

“‘நீங்கள் முன்பே சொல்லியிருந்தீர்கள் அல்லவா, அவனைப்பற்றி? எங்கள் மில்லில் ஒரு வேலை காலி வந்தது. உங்களுக்கு டெலிபோன் செய்யலாமென்று இருந்தேன். அதற்குள் அவனையே யதேச்சையாக ஸ்டேஷனில் சந்தித்துவிட்டேன். விஷயத்தைச் சொல்லி முந்தா நாள் மில்லுக்கு வரச் சொன்னேன்; வந்து வேலையை ஒப்புக்கொண்டான். அது சரிதான்; ஆனால் எங்கள் மில்லின் வேலைக்காரர்களுக்கெல்லாம், மில் காம்பவுண்டுக்குள்ளே வாடகையின்றி வீடு கொடுக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமே; அதைச் சொல்லி அவனுக்காக ஒதுக்கி வைத்திருந்த வீட்டின் சாவியைக் கொடுத்தேன். அவன் வீடு வேண்டாமென்று சொல்லிச் சாவியைத் திருப்பித் தந்துவிட்டான். பாலத்தடியில் வசிப்பது தான் அவனுக்குச் செளகரியமாயிருக்கிறதாம். எப்படி இருக்கிறது இந்தப் பைத்தியம்? உங்களிடம் கேட்டுக்கொண்டு பிறகு சாவியை ஆபீஸில் திருப்பிக் கொடுத்து விடலாமென்று என்னிடமே வைத்துக் கொண்டிருந்தேன்” என்று அந்த நண்பர் அதை என்னிடம் கொடுத்தார்.

நான் மாதுங்கா ஸ்டேஷனில் இறங்கினேன். ஷண்முகம் வழக்கம் போல் நின்று கொண்டிருந்தான். “ஏனுங்க, மூணு நாளா இந்தப் பக்கம் காணுமே?” என்று கேட்டான்.

அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல், “உனக்கு வேலை கிடைத்து விட்டதாமே?” என்றேன்.

“எல்லாம் நீங்க காட்டிய கருணையுங்க.”

“அது சரி; ஆனால் நீ ஏன் மில்லுக்காரர்கள் கொடுத்த ஜாகையை வேண்டாமென்று சொல்லிவிட்டாயாம்?”

“அது என்னாத்துக்கு எனக்கு? நான் இங்கேயிருந்து பரேலுக்குப் போயுட்டேனின்னா உங்களை எப்படியுங்க தினமும் பார்க்கிறது?”

“என்னைப் பார்க்க வேண்டுமானால் வீட்டு விலாசம் தருகிறேன். விடுமுறை நாட்களில் அங்கே வா; அதற்காகச் சும்மா கிடைக்கிற ஜாகையை வேண்டாமென்கிறாயே, பைத்தியக்காரா!”

“அதுக்கில்லீங்க; நான் என் பாட்டைப் பார்த்துக்கிட்டுப் போயிட்டேனின்னா, நடுச் சாமத்திலே இந்தப் பாதையிலே வருகிற உங்களுக்கு யாருங்க துணை வருவாங்க?”

என் சந்தேகம் சரியாகவே இருந்தது. உலகத்தில் நன்றியறிதல் சிறிதேனும் இருந்தது என்றால் அது அவனைப்போன்ற ஏழைகளிடமே இருந்தது. நேற்று அந்தப் பாலத்தடியிலிருந்து அவர்களைக் கிளப்பி மில் வீட்டுக்கு அனுப்புவதற்குள் எனக்குப் போதும் போதும் என்று ஆகி விட்டது.

தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் பரேலுக்கு ரெயிலேறும்போது ஷண்முகத்தின் கண்களில் நீர் ததும்பிற்று. “சாமி, இனிமேலாவது ராவு முன்னேரத்திலே வீட்டுக்குத் திரும்பிடுறேனின்னு சொல்லுங்க” என்ற போது உணர்ச்சிப் பெருக்கால் அவன் தொண்டை கம்மிற்று.

“ஆகட்டும்” என்று அவனை அனுப்பிவிட்டேன். ஆனாலும் இரவு வீடு திரும்புகையில் பழையபடி நடுராத்திரியில் தன்னந்தனியே தான் அந்தப் பாலத்தைக் கடந்து கொண்டிருந்தேன்.

– ஜனவரி, 1948

– கலைமகள் கதம்பம் (1932-1957), வெள்ளி விழா வெளியீடு, முதற் பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *