கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 1, 2012
பார்வையிட்டோர்: 12,717 
 

அமெரிக்காவில் அவன் தங்கிய முதல் வீட்டுக்கு முன் ஒரு மயானம் இருந்தது. வாடகைக்கு எடுத்தது. மறு நாள் காலை யன்னலைத் திறந்து பார்த்தபோதுதான் அவனுக்கு மயானம் இருப்பது தெரிந்தது. உடனேயே அனோஜாவை நினைத்துக்கொண்டான். மயானத்தைத் தாண்டும்போது அவள் கை விரல்களை ஒவ்வொன்றாகச் சூப்புவாள். அவனையும் கை விரல்களைச் சூப்பச் சொல்வாள். அவனுக்குச் சிரிப்பு வந்தது. அமெரிக்காவின் பனிக் காலத்தில் என்ன செய்வாள்? ஒவ்வொரு முறை மயானத்தைக் கடக்கும்போதும் கையுறையைக் கழற்றி ஒவ்வொரு விரலாகச் சூப்பிவிட்டு மறுபடியும் கையுறை அணிவாளா? செய்தாலும் செய்வாள். ஆச்சர்யப்படுத்துவதில் அவளை யாரும் வெல்ல முடியாது.

அவனுக்கு வயது 22. பல்கலைக்கழகம் முதுகலைப் படிப்புக்கு உதவித்தொகை வழங்கியிருந்தது. புறப்படும்போது, அவன் ஒரு பெயருடன் புறப்பட்டான். அமெரிக்கா வில் ஒரு பெயர் போதாது, இரண்டு பெயர் கள் வேண்டும் என்றார்கள். கொடுத்தான். எல்லாமே புதுசாக இருந்தது. போகப் போக பழகிவிட்டது. மயானம்… மயானம் போலவே இல்லாமல் ஓய்வு நேரத்தைக் கழிக்கக்கூடிய ஒரு பூங்கா போலக் காட்சி அளித்தது. கல்லறை வாசகங்களை வாசித்தபடி நடப்பது அவனுக்குப் பிடிக்கும். ஒரு முறை, 12 வயதுச் சிறுமி பள்ளிக்கூடச் சீருடையில் ஒரு கல்லறை முன் உட்கார்ந்து அழுதாள். கல்லறை மேடையை வெறும் கையால் துடைத்துவிட்டு, அவள் கொண்டுவந்த பூவை வைத்து வணங்கினாள். முழங் காலிட்டு சிறுமி உட்கார்ந்திருந்த காட்சி மனதை உருக்கியது. அந்தச் சின்ன வயதில் என்ன துயரமோ அவளுக்கு. பிறகு, கண் களைத் துடைத்தபடி புத்தகப் பையைத் தூக்கிக்கொண்டு அவனைக் கடந்து போனாள். அந்த வாசகத்தைக் குனிந்து படித்தான். ‘ஓ… இந்தப் பாரம்… என்னால் தாங்க முடியவில்லை!’ இறந்தவர் என்ன பாரத்தைச் சொல்கிறார் என்று அவனுக்குப் புரியவில்லை.

விமலன் வாடகைக்கு எடுத்தது வீடு அல்ல; அதில் உள்ள ஓர் அறையைத்தான். அந்தக் குடியிருப்பில் எல்லா வீடுகளும் ஒரே மாதிரி இருந்தன. வித்தியாசப்படுவது யன்னல்களில் தொங்கும் திரைச் சீலைகளின் நிறம்தான். பச்சை திரைச் சீலைகள் தொங்கும் மூன்றாவது வீட்டில் ஒரு பெண்ணும் அவள் குழந்தையும் இருந்தார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்டு இருக்கிறான். ஆங்கிலத் தில் பேசுவார்கள். பின்னர், அதையே தெலுங்கிலும் பேசுவார்கள். ஒரு நாள் தோள்கள் முன்னும் பின்னும் அசைய நடந்து வந்து அவள் வணக்கம் சொன்னாள். ஒரு கணம் அவள் அனோஜாவோ எனத் திகைத்து விட்டான். அத்தனை உருவ ஒற்றுமை. பின்னர், இவன் வணக்கம் சொன்னபோது தலையைப் பின்னால் எறிந்து புன்னகைத்தாள். கத்தைத் தலைமயிரை ஒரு விரலால்தொட்டு இழுத்துக்கொண்டே போனாள். அனோஜா வும் அப்படித்தான்.

அன்று இரவு முழுக்க அவனால் தூங்க முடியவில்லை. அனோஜாவின் நினைவு சுழன்று சுழன்று வந்தது. ஒரு சமயம் அவள் தனது இடது கையைத் தூக்கி, கொண்டையிலே குத்தியிருந்த ஒரேயரு ஊசியை இழுத்தாள். அது ஒன்றுதான் அவள் செய்தது. தலைமுடி அருவி கொட்டுவதுபோல அவிழ்ந்து தோளில் விழுந்து, வழிந்து கீழே இறங்கியது. அவன் மனதிலே அது பெரும் கிளர்ச்சியை உண்டுபண்ணியது. ஒரு விரலால் முடியை இழுத்தபடி, மெல்லிய சிரிப்புடன் அவள் அசையாமல் நின்றாள். அடுத்த நகர்வை அவன்தான் செய்யவேண்டும் என எதிர்பார்த்தாள். எங்கே ஆரம்பிப்பது என்றுதான் அவனுக்குத் தெரியவில்லை. குமிழ்போலத் தள்ளிக்கொண்டு நின்ற வெள்ளைத் தோள்களைத் தொட்டான். முதல் பக்கம் கிழிக்கப்பட்ட நாவலைத் தொடங்குவதுபோல. அதன் பின்னர்தான் உருகும் சொக்லட் போன்ற இதழ்களைக் கண்டான். அன்றைய மாலை முடிவுக்கு வந்தபோது, ஒரே ஒரு முத்தம் மிஞ்சியது. அதனை இருவரும் சமமாகப் பங்கு போட்டுக்கொண்டார்கள்.

நடந்து வந்து வணக்கம் சொன்ன பெண்ணின் பெயர் விகாசினி என அறிந்தான். அவனுடைய வயதுதான் அவளுக்கு இருக்கும். ஒன்றிரண்டு வயது கூடவும் இருக்கலாம். அவளுடைய கணவன் ஒரு நாள் கடிதம் எழுதிவைத்துவிட்டு, அவனுடன் வேலை செய்த ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு அடுத்த மாநிலத்துக்கு ஓடிப்போய்விட்டான். அவனுக்குச் சொந்தமான பொருட்களை எல்லாம் பல நாட்களாகத் திட்டம் போட்டு ரகசியமாகக் கடத்தியிருக்கிறான். விகாசினிக்கு அது தெரியாது. ஓர் இரவுக்குள் அவளுடைய வாழ்க்கை மாறியது. அவளுடைய வருமானத்தில் வீட்டு வாடகை கட்ட வேண்டும். ஏனைய செலவுகளைச் சமாளிக்க வேண்டும். குழந்தையைப் பராமரிக்க வேண்டும். அவள் இடிந்துபோனாள். இந்த விவரங்கள் எல்லாம் பின்னாளில் அவள் சொல்லித்தான் விமல னுக்குத் தெரியும்.

ஒரு நாள் அவன் மயானத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, விகாசினி அவனை எதிர்பார்த்து வாசலில் நின்றாள். ஒரு கையிலே அவளுடைய மகனைப் பிடித்திருந்தாள். உற்சாகமாகச் சிரித்து, ”எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். அவள் பற்கள் பளீரென்று வெள்ளையாக ஒளி வீசின. தலைமயிர் வாரி இழுக்கப்பட்டு ஈரமாகப் பளபளத்தது. அவள் முகத்தில் இருந்து அவனால் கண் களை எடுக்க முடியவில்லை. ”எனக்கு ஓர் உதவி தேவையாக இருக்கிறது” என்றாள். விமலன் திகைத்துவிட்டான்.

”உதவியா… என்னிடமா?” என்றான்.

வழக்கமாக அவள் கணவன்தான் காலையில் குழந்தைகள் காப்பகத்தில் மித்ரனை விட்டுவிட்டுப் போவான். அவள் வேலை செய்யும் மருந்தகம் எதிர்த் திசையில் இருந்ததால், அவனைக் காப்பகத்தில் விட்டுப் போகும்போது தினமும் ஒரு மணி நேரம் லேட்டாகிவிடுகிறது. ”நீங்கள் பல்கலைக்கழகத்துக்கு அதே வழியில் தினமும் போகிறீர்கள். நான் வேறு ஏற்பாடு செய்யும் வரைக்கும் உங்களால் மித்ரனைக் காப்பகத்தில் விட முடியுமா? மாலையில் நான் திரும்பும்போது, அவனை அழைத்து வந்துவிடுவேன்!”

விமலன் இதை எதிர்பார்க்கவில்லை. தயங்காமல் ”நிச்சயம்” என்றான். அவளுக்கு ஓர் உதவி செய்ய முடிகிறது என்பதே அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மித்ரன் அபூர்வமான குழந்தை. இரண்டு வயதுதான் ஆகிறது. சொல்வதை அமைதியாகக் கேட்பான். ஆனால், பேசவே மாட்டான். அவனுடைய சேமிப்பில் இருப்பது இரண்டு மூன்று வார்த்தைகள். அவனுடைய பதில் அநேகமாக ‘ம்ம்ம்ம்’ என்றிருக்கும்.

சரியாக காலை 7.10-க்கு மித்ரனை வெளிக்கிடுத்தி விமலனின் அறையில் விட்டுவிட்டு, விகாசினி வேலைக்குப் போய்விடுவாள். மித்ரன் அறையில் உட்கார்ந்து டி.வி. பார்க்கும்போது, விமலன் உடை மாற்றி வெளிக்கிடுவான். 7.25-க்கு அவர்கள் புறப்பட்டால், காப்பகத்துக்கு 7.55-க்கு வந்துவிடுவார்கள்.

அமெரிக்கர்களுக்குப் பிடிக்காத நாள் வியாழக்கிழமை என்று ஆராய்ச்சி சொன்னது. விமலனுக்கும் அந்த நாள் பிடிக்காது. பேராசிரியரிடம் புராஜெக்ட் சமர்ப்பிக்க வேண்டிய நாள். ஓரிரு தடவை பிந்திப்போய் பேராசிரியர் அவனை எச்சரித்து இருந்தார். முதல் நாள் இரவு அவன் ஆராய்ச்சிக் குறிப்புகளை எழுதி முடித்துப் படுத்தபோது, இரவு 2 மணி. காலை விகாசினி வந்து கதவைத் தட்டிய போதுதான் அவன் எழுந்தான். மித்ரனை விட்டுவிட்டு அவள் போய்விட்டாள். விமலன் அவசர அவசரமாக உடை மாற்றி வெளிக்கிட்ட நேரம், வெளியே மெல்லிய பனித் தூறல் போட ஆரம்பித்தது. ஆராய்ச்சி சம்பந்தமான தகவல்கள், வரைபடங்கள், புத்தகங்கள், மடிக்கணினி போன்றவற்றை மறக்காமல் எடுத்துவைத்தான். மித்ரனுடைய மேலங்கி, கையுறை, ஸ்கார்ஃப் எல்லாம் சரியாக இருக்கின்றனவா எனப் பார்த்தான். மித்ரன் சப்பாத்துகளைக் கழற்றிவிட்டான். அவற்றை மறுபடியும் கட்டினான். அவனுடைய உணவு, தண்ணீர்க் குடுவை, புத்தகப் பை ஒவ்வொன்றையும் ஞாபகமாக ஏற்றவேண்டி இருந்தது.

கராஜ் பட்டனை அமத்தி கதவைத் திறந்து காரை வெளியே எடுத்தான். அவன் புறப்படும் நேரம் பார்த்து பனிப் பொழிவு கூடியது. அவனுடைய பல்கலைக்கழகத்தைத் தொட்டு ஓடும் சாள்ஸ் நதி உறைந்துவிட்டது. அவனுடன் படிக்கும் நண்பன் ஒருவன், தான் கோடையில் 22 மைல் தூரம் அதில் படகு விடுவதாகவும், அதே தூரத்தை அதே உறைந்துபோன ஆற்றில் குளிர் காலத்தில் சைக்கிள் ஓட்டிக் கடப்பதாகவும் சொல்லி இருந்தான். இந்தச் செய்தியை அனோஜா வுக்கு எழுதினால்… அவள் என்னசெய்வாள்? முதலில் நம்ப முடியாது என்று கண்களை உருட்டுவாள். மயானத்தைக் கடக்கும்போது கை விரல்கள் சூப்பாவிட்டால் பேய் பிடிக்கும் என்பதை நம்புகிறவள், இதை ஏன் நம்பக் கூடாது? அவள் அவனுக்குத் துரோகம் செய்யவில்லை. காதலை அவன் தான் முறித்தான், அவளுடைய நன்மைக்காக. வீட்டிலே அவளுக்குப் பெரிய உத்தியோகத் தில் இருக்கும் மாப்பிள்ளையை மணம் பேசினார்கள். அப்படி ஒரு வசதியான வாழ்க்கையை அவனால் ஒருபோதும் கொடுக்க முடியாது.

அவனுக்கு முன்னால் போன கார்கள் எல்லாம் ஊர்ந்துகொண்டு போயின. எப்படியோ காப்பகத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது, மனம் நிம்மதியானது. அந்தக் காப்பகத்தில் ஒரு வழக்கம் இருந்தது. கார்களை ஓட்டிக்கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக வந்து தங்கள் முறை வரும் மட்டும் காத்திருக்க வேண்டும். ஆசிரியைகள் வந்து கதவைத் திறந்து, சீட் பெல்ட்டைக் கழற்றி அவர்களாகவே குழந்தைகளைத் தூக்கி உள்ளே கொண்டுசெல்வார்கள். விமலன் தன் முறை வந்ததும் காரின் கதவைத் திறக்கும் பட்டனை அமுக்கினான். பனிக் குளிருக்கு மஞ்சள் மேலங்கி அணிந்த ஆசிரியை அவனுக்குக் கை காட்டி வணக்கம் தெரிவித்த பின்னர் கார் கதவைத் திறந்தார். திறந்தவர் அப்படியே திகைத்து நிற்பதைக் கண்ட விமலன் என்னவென்று எட்டித் திரும்பி காருக்குள் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். அங்கே மித்ரன் இல்லை. பதறியடித்து இறங்கிப் பின்னுக்குப் போய்த் தேடினான். காருக்குக் கீழே பார்த்தான். பூட்ஸைத் திறந்து மூடினான். அவனுக்குப் பேச்சு வர வில்லை. ஆசிரியை அவனை வியப்புடன் பார்க்க, ஒன்றுமே பேசாமல் காருக்குள் ஏறி வேகமாக காரை எடுத்து வெளியே வந்து வீட்டை நோக்கித் திருப்பினான்.

விமலனின் கை கால் எல்லாம் பதறியது. காருக்குள்ளே மித்ரனுடைய புத்தகப் பை, பானக் குடுவை எல்லாம் இருந்தன. அவன் எடுத்துப் போக வேண்டிய மடிக்கணினி, வரைபடங்கள், குறிப்பேடுகள், சகலமும் இருந்தன. ஆனால், மித்ரனைக் காணவில்லை. என்ன நடந்தது? எப்படித் தவறினான் என்பது அவன் மூளைக்கு எட்டவில்லை. புறப்படும் அவசரத்தில் குழந்தையை காருக்குள் ஏற்ற மறந்துவிட்டானா? அவனால் நம்ப முடியவில்லை. கார் கராஜ் கதவைத் திரும்பவும் பூட்டினானா என்பதும் ஞாபகத் தில் இல்லை. ஒருவேளை குழந்தை நடந்து வழி தவறி பனியில் உறைந்துபோய்விடுவானோ? அல்லது பனிப் பொழிவில் ரோட்டில் போகும் கார் ஏதாவது அவனை அடித்துப் போட்டுவிட்டால்… என்றெல்லாம் அவன் மனம் போட்டு வதைத்தது.

திரும்பும் வழியில் பனிப் பொழிவு இரண்டு அங்குலத்தைத் தாண்டிவிட்டதால், காரை ஓட்டுவது சிரமமாகிக்கொண்டு வந்தது. கார் கண்ணாடித் துடைப்பான் வேலை செய்யவில்லை. தலையை வெளியே நீட்டி ஒரு கையால் அடிக்கடி கண்ணாடியைத் துடைக்க வேண்டியிருந்தது. பொலீஸ் கார் ஒன்று சைரன் ஒலிக்க அவனை நோக்கி வந்து தாண்டிப் போனது. வீடு அருகில் வந்ததும் காரின் வேகத்தைக் குறைத்து, ரோட்டின் இரு பக்கங்களையும் உற்றுக் கவனித்துக்கொண்டே ஓட்டினான். மித்ரன் வீதியிலே வழி தவறி அலையக்கூடும் என நினைத்தான். அவன் நெஞ்சுப் படபடப்பு அதிகமாகிக்கொண்டே வந்தது. வீட்டுக்குச் சற்று தள்ளி ஒரு குளம் வேறு உறைந்துபோய்க்கிடந்தது.

அந்த நேரம் பார்த்து செல்போன் அடித்தது. அது விகாசினிதான்! அவன் எடுக்கவில்லை. எடுத்து என்ன சொல்வது? வழக்கமாக அவன் மித்ரனைக் காப்பகத்தில் விட்ட பின்னர், விகாசினியை அழைத்து அந்தத் தகவலைச் சொல்வது வழக்கம். ஆனால், அன்று விகாசினியைக் கூப்பிடவில்லை. அதுதான் அவள் அழைக்கிறாள் போலும் என்று நினைத்தான். இன்னொரு யோசனை வந்தது. ஒருவேளை குழந்தைகள் காப்பகம் அவளை அழைத்திருக்குமோ? மித்ரன் காரில் இல்லாததை யாராவது அவளிடம் சொல்லி இருப்பார்களோ? அதை நினைத்ததும் மேலும் அவனுக்கு நடுக்கம் கூடியது. இருதயம் வெடித்து வெளியே வந்துவிடும்போல நெஞ்சு அடித்தது.

வீட்டை அடைந்ததும் கராஜ் கதவுப் பட்டனை அழுத்திக் கதவைத் திறந்தான். அழுது கத்திக்கொண்டு மித்ரன் வெளியே ஓடி வருவான் என்று எதிர்பார்த்தான். ஒரு சத்தமும் இல்லை. நெஞ்சு பதைபதைக்க இங்கும் அங்கும் தேடினான். ஒரு மூலையில் அழுக்குக் கூடை துணிகளைச் சுற்றிக்கொண்டு சுருண்டுபோய் மயங்கிய நிலையில் மித்ரன் கிடந்தான். கையுறை, மேலங்கி, ஸ்கார்ஃப் எல்லாம் அப்படியே இருந்தன. ஆனாலும், குளிரில் விறைத்துப்போயிருந்தான். மெல்லிய மூச்சு வந்துகொண்டு இருந்தது. அவனை அள்ளித் தூக்கி வாரி அணைத்தான். மித்ரனின் தலை அவனுடைய நெஞ்சில் வழுக்கிக் கீழே சரிந்தது. அறையின் வெப்பத்தைக் கூட்டிவிட்டு, கம்பளியினால் அவனைச் சுற்றிப் படுக்கையில் கிடத்தினான். ஒரு சில நிமிடங்களிலேயே மித்ரன் கண் விழித்தான். நன்றாகச் சூடாக்கிய பாலை ஒரு கிளாஸில் கொடுத்தபோது அவனுக்குக் குடிக்கத் தெரியவில்லை. மூக்கையும் முகத் தில் பாதியையும் உள்ளே நுழைத்து பாலை முடிந்த மட்டும் குடித்தான். மித்ரன் அவனைப் பார்த்து ஓர் அழகான சிரிப்பு சிரித்தான். அவன் மனதை அந்தச் சிரிப்பு போட்டு உலுக்கியது. அத்தனை நாட்களிலும் அவனைப் பார்த்து மித்ரன் சிரித்தது கிடையாது. இதுதான் முதல் தடவை!

அடுத்த நாள் காலை விமலன் சீக்கிரமே எழும்பி உடை அணிந்து தயாராக நின்றான். விகாசினி என்ன கேள்விகள் கேட்பாள்? அதற்கு என்ன என்ன பதில்கள் சொல்வது என யோசித்துவைத்தான். அந்தக் குழந்தை விறைத்துப்போய் இறந்து இருந்தால், அவன் என்ன செய்திருப்பான்? அவன் கொலைகாரன் ஆகியிருப்பான். அவன் மனம் அதிர்ந்தது. எல்லா சாமான்களையும் ஏற்றினான். ஆனால், குழந்தையை காருக்குள் ஏற்ற மறந்துவிட்டான். எப்படித்தான் அவளுக்கு முகம் கொடுப்பான்? எத்தனை சாக்குச் சொல்லிச் சமாதானம் செய்தாலும் அவன் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்.

கதவைத் தட்டிவிட்டு விகாசினி கலகலவெனச் சிரித்துக்கொண்டே கயிற்றுப் பாலத்தில் நடப்பதுபோல ஆடி அசைந்து உள்ளே வந்தாள். என்றும் இல்லாத விதமாக அவள் மெல்லிய சாரி உடுத்தி, அதற்கு மேலே குளிர் அங்கி அணிந்து, பொத்தான்களைப் பூட்டாமல் திறந்துவிட்டிருந்தாள். மித்ரன் ஓடி வந்து விமலனின் கால்களைக் கட்டிக்கொண்டான். விகாசினி கையில் வெள்ளிக் கிண்ணத்தில் ஏதோ வைத்திருந்தாள். அன்று அவள் ஒட்டிய கன்னத்துடனும், நீண்ட இடுப்புடனும் மிக அழகாக இருந்தாள். வெளியே இருந்து அழகு வெளிப்படாமல் உள்ளே இருந்து அது வெளியே வந்துகொண்டு இருந்தது. வெள்ளிக் கிண்ணத்தை அவனிடம் நீட்டியபோது கிளிங் கிளிங் என வளையல்கள் சரிந்து முன் கையில் விழுந்தன. அவளுடைய முகத்தை நேரே பார்க்க முடியாமல், கட்டிலில் உட்கார்ந்து விமலன் சப்பாத்துகளை அணிந்துகொண்டு இருந்தான். பின்னர், அவை ஒரே அளவா என்பதைச் சோதிப்பதுபோலக் கண்களை எடுக்காமல் உற்றுப்பார்த்தான்.

அவள் கைகளால் அவன் நாடியை நிமிர்த்தி ”என்ன?” என்றாள். அவளை நிமிர்ந்து பார்த்தபோது, அவனுக்கு நெஞ்சு சுரீர் என்றது. எப்படியும் அவளிடம் தன் முட்டாள்தனத்தைச் சொல்லிவிட வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தான். அவ்வளவு பக்கத்தில் கிடைத்த உடம்பு வாசனை அவனை நிலைகுலையச் செய்தது. ”என்னு டைய பிறந்த நாள் இன்றைக்கு. இந்த காரட் அல்வாவை எனக்கு நானே கிண்டினேன். இந்தப் பெரிய அமெரிக்காவில் என்னுடன் சேர்ந்து இதைச் சாப்பிட ஒருவருமே இல்லை” என்றாள். பளிச்சென்று இருந்த அவள் முகம் ஒரு கணம் கறுத்தது. விமலன் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னான். விகாசினி அவனையே துளைப்பதுபோலப் பார்த்துக்கொண்டு நின்றாள். கரண்டியை எடுத்து அல்வாவை அள்ளி ஒரு வாய் சாப்பிட்டு ”இவ்வளவு அருமையாகச் செய்திருக்கிறீர்களே” என்று ரசித்தான். அந்தச் சொல் அவளை இன்னும் பிரகாசமாக்கியது. அவன் சொல்ல நினைத்ததை அவனால் சொல்ல முடியவில்லை.

விகாசினி போன பின் மித்ரனைத் தூக்கி காரின் குழந்தை இருக்கையில் உட்காரவைத்து சீட் பெல்ட்டினால் கட்டினான். ”ஏண்டா, நீ என்னைக் காட்டிக் கொடுக்கவில்லை?” என்று கேட்டபடியே காரை ஓட்டினான். அவனிடம் இருந்து ஒரு சத்தமும் எழவில்லை. விமலனுடைய சீட்டுக்கு சரி பின்னால் அவன் ஆசனம் இருந்ததால் அவனைப் பார்க்க முடியவில்லை. காப்பகத்தில் இருந்து ஒருவர்கூட நடந்த சம்பவத்தை விகாசினியிடம் சொல்லவில்லை. ஆனால், விமலன் எப்படிச் சொல்லாமல் இருக்கலாம்? குற்றவுணர்வினால் அவன் நசித்துவிடுவான் போலவே இருந்தது. ”என்னடா மித்ரா, நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான். அவன் ‘ம்ம்ம்ம்’ என்று பதில் சொன்னான்.

இதுவெல்லாம் நடந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் ஓடிவிட்டன. இத்தனை வருடங்களில் அவன் ஒரு கணமேனும் விகாசினியை மறந்தது கிடையாது. பல தடவை அவளிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டும் என நினைத்திருக்கிறான். ஆனால், அவளுடைய சிரித்த முகத்தைக் காணும்போது அவன் தைரியம் எல்லாம் ஓடிவிடும். அன்று மித்ரனின் பிறந்த நாள். மயானத்தில் கல்லறைகளைப் பார்வையிட்டபடி விமலன் நடந்தான். மித்ரனின் பிறந்த நாளை அவன் என்றைக்குமே தவறவிட்டது இல்லை. விகாசினியும் மித்ரனும் இன்னமும் அதே வீட்டில்தான் குடியிருந்தார்கள். விமலன் பெரிய வீடு ஒன்று சொந்தமாக வாங்கிப் போய்விட்டான். பொஸ்டனில் இயங்கும் தகவல் தொழில்நுட்ப கம்பெனி ஒன்றில் கிடுகிடுவென வளர்ந்து, உயர் பதவியில் இருந்தான். பல வருடங்களுக்கு முன்னர் அவன் படித்த கல்லறை வாசகம் ஞாபகத்துக்கு வந்தது. ‘ஓ… இந்தப் பாரம். என்னால் தாங்க முடியவில்லை.’ இப்போது அந்த வாசகம் புரிந்ததுபோல இருந்தது.

விகாசினியின் வீட்டினுள் விமலன் நுழைந்தபோது, வீடு எட்டு வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்ததோ அப்படியே இருந்தது. ஒரு பொருளும் இடம் மாறவில்லை. அதே பழைய தொலைக்காட்சிப் பெட்டி. தரை விரிப்புகள் கிழிந்து ஆகக் கடைசி நிலையில் இருந்தன. பச்சை நிறத் திரைச்சீலை தன் நிறத்தை முழுவதுமாக இழந்துவிட்டது. வறுமைக்கோட்டுக்குக் கீழே இறங்கிவிடாமல் இருப்பதற்கு விகாசினி கடுமையாகப் பாடுபடுவது தெரிந்து அவன் மனம் சங்கடப்பட்டது.

விகாசினியின் காலடி ஓசை சமையலறையில் கேட்டது. மனம் துடித்தது. அலை அலையாக விழுந்த கூந்தலைக் கையில் ஏந்தியபடி அவள் வெளிப்பட்டாள். நீளமான இடுப்பு. அவள் சிரித்தபோது முக்கோணமான கன்ன எலும்புகள் பளிச்சிட்டன. கண்களை எடுக்க முடியாமல் அவளையே பார்த்தான். திடீரென்று ஒரு சுவாசப்பையை நிரப்புவதற்குத் தேவையான காற்றுகூட அறையில் இல்லாமல் போனது. மித்ரன் ஓடி வந்து விமலனைக் கட்டிப்பிடித்தான். மித்ரனுடைய பத்து வயது தோள் மூட்டுகளை இரண்டு கைகளாலும் பிடித்து, அவனைத் திறந்துவிட வேண்டும் என்பதுபோல, எதிரெதிர் திசையில் திருகினான். தூக்கி அணைத்து வாழ்த்துச் சொல்லிவிட்டு, தான் கொண்டுவந்த பரிசைக் கொடுத்தான். திறந்து பார்த்துவிட்டு ”ஐ-பாட்” என்று உரக்கக் கத்தினான். பின்னர் ”எனக்கா?” என்று கேட்டுவிட்டுத் தாள முடியாத பரவசத்தில் ஒரு நடனம் ஆடினான். அவசரமாகத் தன் தாயிடம் பரிசைக் காட்டிவிட்டு, நண்பர்களிடம் சொல்ல வெளியே ஓடினான்.

விகாசினி கோப்பி கொண்டுவந்து கொடுத்தாள். அவன் விரல்கள் கோப்பையைப் பற்றியதை உறுதி செய்த பிறகு, தன் விரல்களைச் சுட்டதுபோல விடுவித்தாள். கோப்பியைப் பாதி குடித்தவன், கோப்பையின் வெளிப்புறத்தைப் பார்த்துத் திடுக்கிட்டான். அதிலே ஒரு படம் அச்சிடப்பட்டு இருந்தது. விகாசினி, அவள் கணவன், அவர்களுடன் அப்போதுதான் பிறந்த அவர்கள் குழந்தை மித்ரன். கோப்பையைப் பட்டென்று மேசையில் வைத்தான். அந்தக் கணவனைப் பார்க்க அருவருப்பாக வந்தது. பேச வேண்டிய தருணம் அணுகுவதற்குக் காத்திருந்தபோது திடுதிப்பென்று விகாசினி, ”நீங்கள் பரிசு கொடுப்பது இதுவே கடைசியாக இருக்கட்டும். மித்ரனுடைய எதிர்பார்ப்பை வளர்க்கக் கூடாது!” என்றாள். ”இதிலே என்ன பிரச்னை? நான் வருடத் துக்கு ஒரு முறைதானே அவனைப் பார்க்கி றேன். இதற்குக்கூட எனக்கு உரிமை இல்லையா?” என்றான். ”நான் இக்கட்டான சமயத்தில் இருந்தபோது நீங்கள் உதவினீர் கள். அந்த உதவியை நான் என்றென் றைக்கும் மறக்க முடியாது. உங்களுக்கு எப்படி அதைத் திருப்பிக் கொடுப்பேன். இவ்வளவு செய்ததே போதும்” என்றாள்.

அவளுடைய குரலில் இருந்த அந்நியம் புதுசாக இருந்தது. இப்படி வார்த்தைகள் அவள் வாயில் இருந்து வரும் என அவன் எதிர்பார்க்கவில்லை. எத்தனை இரவுகள் அவன் பாதி தூக்கத்தில் ‘மித்ரன்… மித்ரன்’ என அலறியபடி பதறிப்போய் எழுந்திருக்கிறான். ”என்ன பேசுகிறீர்கள்? இந்த ஒரு நாளுக்காகத்தான் நான் வருடத்தில் 364 நாட்களும் காத்திருக்கிறேன். நான் ஒருவருக்கும் ஒன்றையுமே திருப்பிச் செய்தது இல்லை. ஒரு வழிப் பாதையில் எதிர்ப் பக்கமாக ஓடிக்கொண்டு இருக்கிறேன். துரோகம் இழைத்தபடி என் வாழ்நாளை ஓட்டுகிறேன். என்ன பரிகாரம் செய்தாலும் என்னால் என் மனப் பாரத்தை இறக்கிவைக்க ஏலாது. அத்தனைப் பாரம் சேர்ந்துவிட்டது. இது ஒன்றுதான் என் மனதை ஆற்றும் வழி!” அவன் உணர்ச்சிவசப்பட்டுக் கத்தியதை அவள் முன்னொருபோதும் கண்டது இல்லை. அவன் கண்கள் கலங்கின. குரல் தழுதழுத்தது. கூகுளில் அவன் பெயரைப் பதிந்தால் விநாடிகளில் அவனுடைய சாதனைகள் பக்கம் பக்கமாக வரும். பல நாடுகளில் பல அதிகாரிகளை வழி நடத்து பவன், குனிந்த தலையுடன் அவன் முன்னால் நிற்பதை ஆச்சர்யம் மேலிட்ட வளாகப் பார்த்துக்கொண்டு இருந்தாள். ”நீங்கள் எத்தனை பெரிய பதவியில் இருக் கிறீர்கள். இது என்ன?” என்றாள். ”இத்தனை காலமாக உங்கள் மதிப்பு எனக்குத் தெரிய வில்லை. அமெரிக்க பென்னியின் மதிப்பு ஒரு சதம். அதை உருக்கினால் இரண்டரை சதம். நீங்கள் உருக்கிய அமெரிக்க பென்னி!” ஒன்றுமே புரியாமல், ”என்ன சொல்கிறீர்கள்?” என்றாள். ”மித்ரனைப் பராமரிக்கும் பொறுப்பு இனிமேல் எனக்கு. இன்று நேற்று யோசித்து இந்த முடிவுக்கு நான் வரவில்லை. பல மாதங்களாக இதைப் பற்றியே சிந்தித்தேன். உங்களை என் மீதி வாழ்நாளில் என்னால் மறக்க முடியாது. மணமுடிக்க ஆசைப்படு கிறேன். சம்மதிப்பீர்களா?” என்றான்.

முதலில் அவள் அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் நின்றாள். பின்னர், அவளுடைய வாய் அசைந்தபோது, அவள் ஏதோ பேசுகிறாள் என்பதை அவன் உணர்ந்தான். அவளுடைய பதில் கீழ்க்கண்டவற்றில் ஒன்றாக இருக்கலாம் என நினைத்தான்.

1) ஆம்
2) இல்லை.
3) உங்களுக்குப் பைத்தியமா?
4) அவகாசம் வேண்டும்.
5) மித்ரனுக்குச் சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம்.

ஆனால், அவளுடைய பதில் மேல் சொன்னவற்றில் ஒன்று அல்ல!

– டிசம்பர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *