கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: September 18, 2020
பார்வையிட்டோர்: 24,409 
 

சென்னை திருவள்ளுவர் பஸ் நிலையத்தை இந்தக் கோலத்தில் அடிக்கடி பார்க்க முடியாது. வழக்கமான நெரிசல், டிக்கெட்டுகளுக்கு அலையும் கூட்டமில்லை. பெரும்பாலும் காலியாக இருந்தது.

மாலை ஆறு மணியுடன் முடிந்த ’பந்த்’ துக்குப் பிறகு மக்கள் நடமாட்டம் மெதுவாக ஆரம்பித்திருந்தாலும், வெளியூர் பயணம் அதிகம் பேர் இல்லை.

நாளை காலை கோயம்புத்தூரில் இருந்தாக வேண்டிய கட்டாயம். ஒரு டெண்டர் ஓபனிங். ”பார்த்து போப்பா. வெட்டுறாங்க, குத்துறாங்களாம். இந்த ஒருநாள் போகாட்டாத்தான் என்ன? நெத்தியில குங்குமத்தை வேற பெருசா வச்சுக்கிட்டு..”

அம்மாவிடம் சமாதானம் சொல்லிவிட்டு வந்தாகிவிட்டது. சீட் நம்பர் 25. ஏற்கனவே ’புக்’ பண்ணி இருந்த டிக்கெட், இரவு நேர பஸ் என்பதால் கேன்சல் ஆகவில்லை.

பத்து மணிக்குத்தான் பஸ் கிளம்பும் என்றாலும் முன் ஜாக்கிரதையாக ஒன்பதே காலுக்கு வந்தாகிவிட்டது. வரும் வழியெல்லாம் இருமல். தொண்டை புண்ணாக இருந்தது. டாக்டரிடம் காட்ட முடியவில்லை.

பாபர் மசூதி இடிக்கபட்டு, அதன் காரணமாக எழுந்த வன்முறைகளின் பாதிப்பு எங்கள் வீட்டருகேயும் உணரப்பட்டது. நமச்சிவாயம் என்று ஒரு பேப்பர் போடும் பையன். பெயருக்கு ஏற்றார் போல நெற்றியில் எப்போதும் திருநீறு. பந்த்தின் போது கூட நடமாடியதால் இன்று காலையில் வெட்டப்பட்டுவிட்டான். பலி.

எங்கள் வீட்டுக்கும் அவன்தான் பேப்பர் போடுவது. மூன்று ஆண்டு பழக்கம். மசூதி இடிக்கப்பட்டதற்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம். ஹும். இவன் ஒரு மதத்தைச் சேர்ந்தவன். அவ்வளவுதான். அது போதுமானதாக இருந்திருக்கிறது.

தந்தை இல்லாத குடும்பம். காலேஜில் படித்துக் கொண்டே பல வேலைகள் செய்து, சம்பாதித்து, குடும்பத்தைக் காப்பாற்றி வந்தான். நேற்றுவரை இருந்தவன் இன்று இல்லை.

நான் ஏறவேண்டிய கோயம்புத்தூர் பேருந்து, வந்து நின்றது. வண்டி கிளம்ப இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது. ஒரு கப் பால் சாப்பிட்டு விட்டு வரலாம் என்று எழுந்து கடையை தேடினன்.

மாலை செய்தித்தாள்களின் தலைப்புகள், பல்வேறு மாநிலங்களின் சாவு எண்ணிக்கையையும் கலவரங்களையும் சொல்லிக்கொண்டிருந்தன. நமச்சிவாயம் மீண்டும் நினைவுக்கு வந்தான்.

சைக்கிளில் இருந்தபடியே பேப்பரை உள்ளே விட்டு எறியாமல், வாசல் வரைக்கும் நடந்து வந்து வைத்து விட்டுப் போவான். பேப்பர் சரஸ்வதியாம்.

”அய்யோ, அய்யோ என் செல்லமே, ராசா. இப்படிக் கிடக்கிறியே! கண்ணை தொறந்து பாருடா. நாங்க எல்லாம் என்னடா தப்பு பண்ணினோம்?” என்று தலையை மடார் மடார் அவன் கால் முட்டி மோதிக்கொண்டு அவன் அம்மா அழுதது மனதில் தோன்றி மறைந்தது.

திரும்பி வந்தபோது பஸ் கிளம்ப தயாராக இருந்தது. ஏறி உட்கார்ந்து கொண்டேன். ஜன்னலோர சீட். பக்கத்தில் யார்? காலி தானோ?

இல்லை. 26ம் நம்பர் சீட்டு தேடிக்கொண்டு மூன்று இளைஞர்கள் வந்தார்கள். ஒல்லியாய் கையில் ஒரு பெட்டியுடன் இருந்த பையன் அந்த சீட்டில் உட்கார்ந்தான்.

“பார்த்துப் போ சையத். போய் போன் பண்ணு”

சுற்று முற்றும் பார்வையை ஓட விட்டபடி, க்கும் என்று கனைத்தான் இன்னொருவன். அவர்களின் சங்கடத்தை புரிந்து கொண்டு நானும் பார்வையை ஜன்னலுக்கு வெளியே ஓட விட்டேன். தொண்டையை இருமல் பிடுங்கியது. செருமிக் கொண்டேன்.

ஏற்றிவிட வந்தவர்களும் அதே இனத்தைச் சேர்ந்தவர்கள்தான். விடைபெற்றுக் கொண்டார்கள் . பஸ் கிளம்பியது.கண்டக்டர் டிக்கெட்டுகளை சரி பார்த்துக் கொண்டிருக்க, சென்னை போக்குவரத்தில் திருவள்ளுவர் திணறியபடி நகர்ந்தார்.

இரண்டு பக்கமும் இளைஞர்கள்தான் தீவிரம். இதுவரை சாவு எண்ணிக்கை அறுநூறாம். முந்நூறு முன்னுறா? சீ! இதென்ன கணக்கு! இரண்டு பக்கமும் சரிபாதியாகவா இருக்கும்? இது என்ன வெறும் நம்பரா? நபர்கள் அல்லவா? மகன்கள், அண்ணன்கள், அப்பாக்கள். எல்லாம் உயிர்கள்.

”எங்க சார்? கோயம்புத்தூரா? ஈரோடா?”

அவன்தான். மெதுவாய் திரும்பி பார்த்தேன். மீசை இன்னும் வரவில்லை. கண்ணாடி போட்டுக்கொண்டு, சிவப்பாய், ஒல்லியாய், அடுத்த வீட்டு ஐயங்கார் மகன் சீனிவாசன் மாதிரியே இருந்தான்.

“ஆமாம். கோயம்பத்தூர்தான். நீ?”

நீ என்று கேட்க நினைக்காமலே, வார்த்தை வந்து விட்டது. “நானும் கோயம்புத்தூர் தான் சார்”

சடன் பிரேக் போட்டு ஒரு சைக்கிள்காரனுக்கு திட்டம் வாழ்வும் கொடுத்ததார் பேருந்து ஓட்டுனர்.

”எங்க சார்,பேங்க்ல வொர்க் பண்றீங்களா?”

என்னது விடாமல் பேசுகிறானே! “இல்லை மெட்ராஸில் சின்ன ஃபேக்டரி நடத்துகிறேன். நீ என்ன பண்ணுகிறாய் என்று கேட்கவில்லை. கண்டக்டர் வந்து டிக்கெட் வாங்கி பஞ்ச் பண்ணி கொடுத்து விட்டுப்போனார்.

டிசம்பர் குளிர் சில்லென வீசும் போது வாய்க்குள் காற்று போய் சிரமமாய் இருந்ததால் கிச்சென்று கண்ணாடியை இழுத்து மூடினேன்.

“நாளைக்கு ஒரு வேலைக்கு இண்டர்வியூ சார். கம்ப்யூட்டர் புரோகிராமர் வேலைக்கு. போயே ஆகணும்”

நான் கேட்கவே இல்லை. இவனாக சொல்கிறான்! வேண்டுமென்றே தலையை குனிந்து கொண்டு கவனிக்காத மாதிரி கீழே எதையோ தேடினேன். இவனுடன் என்ன பேச்சு வேண்டி இருக்கு!

கண்டக்டர் முன்னால் போய் விட்டார். பெரிய விளக்குகள் அணைக்கப்பட்டு, நீல கலர் டிம் லைட் மட்டும் எரிந்து கொண்டிருந்தது. போகும் லாரிகள் எதையும் விடாமல் ஓவர்டேக் செய்தபடி தன் வேலையில் கவனமாய் இருந்தார் டிரைவர். எனக்கு தொடர் இருமல். மற்றவர் தூக்கமும் இன்று என்னால் என்னால் கெடுமோ!

”பழம் எடுத்துக்குங்க சார்”

கண்ணை விழித்துப் பார்த்தேன். முகத்தருகே ஒரு பிளாஸ்டிக் பையில் பச்சை முத்துக்களாய் சில்லென்ற சீட்லெஸ் திராட்சைகள்.

நமச்சிவாயத்தின் உடம்பை மாலைதான் பரிசோதனைக்குப் பின் அறுத்து பொட்டலமாக கொடுத்தார்கள். அதைப் பார்த்த கஷ்டத்தில் பால் மட்டும் ஒரு டம்ளர் குடித்து விட்டு வந்தது. இவன் என்னடா என்றால், ஐஸில் வைத்த திராட்சை..

”இல்லை. தொண்டை கட்டின மாதிரி இருக்கு “ என்று முகத்தில் அடித்தாற் போல சொல்லிவிட்டு கண்களை இறுக மூடிக்கொண்டேன். சிரமப்பட்டு நாளைய டெண்டரை பற்றி நினைக்க முயன்றேன்.

திடீரென்று விழித்தபோது எல்லா லைட்டுகளும் எரிந்து கொண்டிருந்தன. பேருந்து, பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தது. சேலமா, ஈரோடா என்று தெரியவில்லை. பக்கத்தில் சையதையும் காணோம். ஓரிருவர் மட்டும் உலகத்தை மறந்த தூக்கத்தில். மணி பார்த்தேன், இரவு இரண்டு.

எனக்கு தொண்டை கமறல் அதிகமாகியிருந்தது. வலிக்கவும் செய்தது. மீண்டும் சூடாக பால் சாப்பிட்டால் என்ன என்று நினைத்தபடி கீழே இறங்கினேன். வாடைக்காற்று வதைத்தது. பால் நீச்ச நாற்றம் அடித்தது. அதன் சூட்டின் இதத்திற்காக குடித்து வைத்தேன். மெதுவாக இடம் தேடி சிறுநீர் கழித்து விட்டு வந்த போது டிரைவர் உட்பட அனைவரும் ஏறி கிளம்பத் தயாராக இருந்தார்கள்.

விருவிருவென்று ஏறிப்போய் என் சீட்டில் உட்கார்ந்தேன். மீண்டும் இருமல். ”எல்லோரும் வந்தாச்சா?” கண்டக்டர் ஒரு கையால் மேல் கம்பியைப் பிடித்தபடி எட்டி, உள்பக்கம் ஒரு நோட்டம் விட்டார்.

என்ன இவனை காணோம்! கோயம்புத்தூர் அல்லவா போவதாக சொன்னான்!! பெட்டியும் கீழ்தான் இருக்கு.

“போலாம். ரைட் ரைட்”

டிரைவர் ஸ்டார்ட் பண்ணினார். “ ஹலோ இங்கே ஒருத்தர் வரணும்”

நான்தான். அடங்கிய குரலில்.

“என்னது! வண்டி அரை மணி நேரமா நிக்குது!! இன்னும் வரணுமா?”

கோபமாக கேட்டபடி கண்டக்டர் என் அருகில் வந்தார் . “யாருங்க வரணும்?”

”ஒரு பையன்”

கண்டக்டர் பேசிக்கொண்டிருந்தாலும், சாப்பிட்ட தெம்பில் வெற்றிலை பாக்கை மென்படி வண்டியை ஒடித்துத் திருப்பினார் டிரைவர். வண்டி, பஸ் ஸ்டாண்ட் வாசலுக்கு வந்துவிட்டது.

“வந்தா, அடுத்த வண்டியில கோயம்புத்தூர் வருவாரப்பா அவரு மெதுவா” டிரைவர் பேச்சில் கிண்டல். வாய் பேசாமல் தூங்கிக்கொண்டும் மென்று கொண்டும் சக பயணிகள். விஷயம் அவ்வளவு தான் என்பது போல கண்டக்டர் முன்னோக்கி நடக்க, “லக்கேஜ் எல்லாம் பஸ்ல தான் இருக்கு. வந்திடுவார்” நான்.

“எல்லாம் டிரான்ஸ்போர்ட் ஆபீஸ்ல கொடுத்துடுவோம். பத்திரமா. நாளைக்கு” சிரிப்புச் சத்தம்.

இன்டர்வியூ சர்டிபிகேட் எல்லாம் இந்தப் பெட்டியில் தானே வைத்திருப்பான். பஸ் ஹைவேயில் இறங்கியது. ”நிறுத்துங்க. ஹோல்டான். என்னைய்யா அநியாயமா இருக்கு! எல்லோரும் பார்த்துக்கிட்டு சும்மா இருக்கீங்க?” நான் போட்ட சத்தத்தால் கேட்ட கேள்விகளில் மற்றவர்களும் சேர்ந்து கொள்ள, எரிச்சலாய் பஸ் நிறுத்தப்பட்டது. நான் ஒரு தொந்தரவாக தெரிந்தேன்.

நான் தர்ம சங்கடத்தில். இவன் எங்கே போய்விட்டான்? வருவானா மாட்டானா? இவர்கள் எவ்வளவு நேரம் காத்திருப்பார்கள்?

நான் பஸ்சை விட்டு கீழே இறங்கி நின்றேன். இருப்புக் கொள்ளவில்லை. உடன் கண்டக்டர். நச்சரித்தபடி. பெட்டியோடு என்னையும் இறக்கி விட வேண்டும் என்று ஒருவர் சொல்வது எனக்குக் கேட்டது. நல்ல மனிதர்கள்.

அதோ, அதோ, அவனேதான். ஓடி வந்தான். முன் ஓடிச்சென்று கையை ஆட்டி, அடையாளம் காட்டினேன். மூச்சிரைக்க ஓடிவந்தவனை உள்ளே அழைத்து போனேன்.

”எங்கப்பா போன? நாங்களெல்லாம் காலத்தில் ஊர் போய்ச்சேர வேண்டாமா?” “இப்படி வர்றவங்க, தனியாத்தான் வரணும்”. பேச்சுக்கள் காதில் ஏறவில்லை.. நிம்மதிப் பெருமூச்சுடன் எங்கள் சீட்டுகளில் உட்கார்ந்தோம்.

விளக்குகள் அணைக்கப்பட்டன. வண்டி வேகம் பிடித்தது. ’நான் மட்டும் இல்லேன்னா…’ என்று அலையத் தொடங்கிய மனதை அடக்கினேன். ‘ பாவம் நாளை இன்டர்வியூ என்றானே! நல்லவேளை.’

”எங்கப்பா போய்ட்டா இவ்வளவு நேரம்?” கமரிய தொண்டையை அடக்கிக்கொண்டு கேட்டேன்.

“இந்தாங்க. இதை முதல்ல வாயில போடுங்க சொல்றேன். ஒரு விக்ஸ் மாத்திரையையும் கூடவே ஒரு பட்டை ஸ்டிரெப்சில்ஸ் மாத்திரைகளையும் கொடுத்தான்.

“ஏதுப்பா இந்த ராத்திரியில?”

“இதைத் தேடித் தேடித்தான் இவ்வளவு நேரம் ஆயிடுச்சு. விடாம இருமிக்கொண்டே இருந்தீரகளா, மருந்து கடையை தேடி போனேன் ”

எனக்கு தொண்டையை அடைத்தது. சையதின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டேன். அவனும் மலங்க மலங்க விழித்தபடி என் கைகளைப் பற்றிக்கொண்டான். பஸ் அமைதியாக சீரான வேகத்தில் போய்க் கொண்டிருந்தது.

– கல்கி 3.1.1993 (இலக்கிய சிந்தனை தேர்வு செய்த ஜனவரி 1993 சிறந்த மாத சிறுகதை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *