கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்  
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 12,614 
 

காலையில் எழுந்திருக்கும் போதே ராணா கூப்பிட்டு அவளை அலர்ட் பண்ணியது. ராணா.? அவளுடைய பிரத்தியேக செயலர். எலக்ட்ரானிக்ஸ் இயந்திரன். எக்ஸ்பர்ட் சிஸ்டம். ஆர்ட்டிஃபிக்ஷியல் இன்டெலிஜென்ஸ் துறையின் லேட்டஸ்ட் டிவைஸ். சம்பள உயர்வு, போனஸ் கேட்காத, மெஷின் ஆள்.

“தலைமைச் செயலகத்தில் இன்று உனக்கு நேர்காணல் நேரம் ஓதுக்கப்பட்டிருக்கு” – என்றது ராணா.

“எஸ்! ஞாபகம் இருக்கு”

“என்ன பேசவேண்டும் என்று சரியாக திட்டமிட்டுக்கொள். சரியாக நாற்பது வார்த்தைகள் மட்டுமே அனுமதி. நாற்பத்தி ஒன்றுக்கு, நகரும் பாதை இயங்கி உன்னை வெளியே துப்பிவிடும்.”

அவள் வார்த்தைகளைச் சிக்கனமாகக் கோர்த்து சொல்லிப் பார்த்துக் கொண்டாள். இவளுடைய நேர்காணல் நேரம் மதியம் இரண்டு மணி. மதிய உணவு – புரோட்டீன் என்ரிச்டு ஜெல் ஒரு கப் சாப்பிட்டுவிட்டு, ஹைட்ரோ காரை கிளப்பினாள். எரிபொருள் – ஹைட்ரஜன் ஃப்யூயல் மானிட்டர் டேங்க்கில் லிக்யுட் ஹைட்ரஜன் இருப்பைக் காட்டியது. இன்னும் இரு நூறு கிலோ மீட்டர்கள் தாராளமாகப் போகலாம்.

தலைமைச் செயலகம்..

உள்ளே நிறைய கூட்டம். எல்லோரும் நேர்காணலுக்காக காத்திருப்பவர்கள். இயந்திர செக்யூரிட்டிகள் லேசர் துப்பாக்கியுடன் பாதுகாப்பு தர, நிர்வாகப் பிரிவினில் நிறைய மனிதர்கள் கம்ப்யூட்டர்களுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். எலெக்ட்ரானிக்ஸ் அடிமைகள். இவளுடைய அடையாள எண் பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கும்போது அங்கே ஒரு கும்பல் கூக்குரலிட்ட்து.

”எங்களை முதலில் அனுமதியுங்கள், ஒருவாரமாய் எங்களுக்கு சாப்பாடு தரப்படவில்லை”——– அவர்கள் ஆவேசமாய் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். ஒரு சிலர் வன்முறையாய் உள்ளே நுழைய முயல, ரோபோக்கள் தங்களுக்கிடப்பட்ட ப்ரோக்ராம்படி, மனிதர்களை அடித்து நொறுக்கி தூக்கி வீசி அப்புறப்படுத்தின. மீறி உள்ளே நுழைந்த இளைஞர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். தற்போது மலிவானது மனித உயிர்கள் தான்.

”அவள் உள்ளே ஓடினாள். நேரம் பகல் 1:50 வெயில் சுட்டெரிக்கிறது. அவள் வேகமாக ஓடி, தடுப்புகளைத் தாண்டி செக்-இன் ஆகி, கடைசி கட்ட பாதுகாப்பு வளையத்தைக் கடந்து போய் நிற்க, தொப்பை போட்டிருக்கும் ஓரு நடுத்தர வயசு ஆதிகாரி வெல்கம் சொல்லி சரி பார்த்து, ஊள்ளே அனுமதித்தார். உள்ளே யாருமில்லை. பெரிய ஹால், சுற்றிலும் கேமராக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றன. அமானுஷ்ய அமைதி. மேடை மீது ஏறி நின்றாள். பச்சை விளக்கு எரிந்தது. ஆரம்பிக்க வேண்டுமென்று சிக்னல். உதடுகளை நாவினால் ஈரப்படுத்திக் கொண்டாள்.”

தலைவர் வாழ்க! தலைமைச் செயலகம் வளர்க! அடியேன் பணிந்து சமர்ப்பிக்கும் விண்ணப்பம். இந்த ஏழையி.. ஊஹீம் வார்த்தை விரயம் கூடாது. நேராய் விஷயம் பேசவேண்டும்.

”ஐயா! நான் எனக்கென்று பிரத்தியேகமாய் ஒரு ஆண் குழந்தையை பெற்றுக் கொள்ள விரும்புகின்றேன். அனுமதிக்க வேண்டுகிறேன்.”

”உன் ஜாதி?” – என்றது அசரீரி.

“ஏ கிரேட்!”

“சுலபம், இதற்கு நீ முதலில் முறைப்படி தலைமை இலாகாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். காத்திருக்க வேண்டும். உனக்கு உத்திரவு வரும். அடுத்து நீ செய்ய வேண்டியது, கைனகாலஜி லேப்பிற்கு போ, உன் அடையாள அட்டையை காட்டு, ஒத்துழைப்பு கொடு, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். உன்னிடமிருந்து உன் கரு முட்டையை எடுத்து, அனுமதிக்கப்பட்ட ஆண் உயிரியை இன்ஜெக்ட் பண்ணி, இருநூற்று எண்பதாவது நாள் கூப்பிட்டு உன் இன்விட்ரோ குழந்தையை (டெஸ்ட் ட்யூப் பேபி) துணியில் சுற்றி கொடுத்து விடுவார்கள். எந்த பாலினம் வேண்டுமென்பதை முதலிலேயே சொல்லிவிடு. ஆனால் இப்போதைக்கு எதையும் நீ செய்ய முடியாது. தடை இரு..”
அவள் அவசரமாகக் குறுக்கிட்டாள்.

”நான் இயற்கையாக மனதுக்கிசைந்த ஆணுடன் கூடி, கருவைச் சுமந்து, வாந்தியெடுத்து, வெளுத்து, மூச்சிரைத்து, வேர்த்து, பிரசவத்தின் போது துடிதுடித்து, வலியில் செத்து, மறுபிறவியெடுத்து, இறுதியில் குவா… குவா… அந்த வலியும் சந்தோஷமும் எனக்கு வேண்டும் ஐயா!”

சற்று நேரம் அசரீரி மவுனம் சாதித்தது.

“புரிகிறது, நீ வலது பக்க மூளையின் ஆதிக்கமுள்ள பெண், கலா ரசிகை, அவசரக்காரி, உணர்ச்சிவசப்படுபவள். இங்கே ஏழு ஆண்டுகளுக்கு நாட்டில் குழந்தை பிறப்பு தடை செய்யப்பட்டிருக்கிறது. போதும் இதுவறை பெற்றுத்தள்ளியதில் நாடு பிதுங்கிக் கிடக்கிறது. ஏ-கிரேடு அதிகாரிகள் மட்டும் ஒன்று பெற்றுக்கொள்ள அனுமதி உண்டு. அதுகூட மூன்றாண்டுகளுக்குப் பிறகு. அப்பவும் கூட ஜீன் மேட்சிங் பார்த்து சேர்க்கப்படும். ஆண் உயிரியுடன் மட்டும் இன்விட்ரோ குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.”

“இல்லை நான் இயற்கையான் முறையில் ஆணுட…”

“சாரி! நீ சொல்லும் முறையில் ஐக்யூ குறைந்த குழந்தை உருவாகிவிடும் சாத்தியங்கள் உண்டு, அதை அனுமதிக்க முடியாது”

“திருமணம் செய்து கொள்ளலாமா?”

”அதற்குத் தடையில்லை”

அடுத்த நொடி கன்வேயர் பெல்ட் நகர்ந்து அவளை வெளியே தள்ளியது. உலக வரலாற்றில் இது ஒரு சோதனையான காலகட்டம். நம் மூதாதையர்களினால் வந்த தீயகொடை. அலட்சியம், பொறுப்பற்றத்தனம், தான்தோன்றித்தனம், விளைவு..? நம் மனிதகுலம் இன்றைக்கு அவஸ்த்தை பட்டுக்கொண்டிருக்கிறது. காற்று மண்டலத்தைக் கெடுத்தாயிறு. வளி மண்டலத்தில் கார்பன் – டை – ஆக்ஸைடு அளவு கூடிப்போக, பூமி தகிக்கிறது. மனிதர்கள் வறுக்கப்படுகிறார்கள். ஆர்க்டிக், அண்டார்டிக்காவின் பனிமலைகள் பெரும்பகுதி அழிந்து நீர்மட்டம் உயர்ந்ததில் மொரீஷியஸும் இலங்கையின் ஒரு பகுதியும், லட்சத்தீவுகளும், கன்னியாகுமரியின் பெரும்பகுதியும், தென் அமெரிக்காவில் ஆயிரம் சதுரகிலோமீட்டர் பரப்பும் கடலில் மூழ்கிவிட்டன. உயர்ந்து நிற்கும் அடுக்குமாடிகளெல்லாம் மனிதர்கள் நிரம்பி வழிந்து, சாலையோரங்கள் முழுக்கவும் கூட்டம் கூட்டமாய் மனிதர்கள், எங்கும் மனிதக் கழிவுகளும் அதன் நாற்றங்களும், விளைவு..? ஏழு ஆண்டுகளுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள தடை. பாதுகாப்பான உடலுறவு முறைகளை எல்லா மருத்துவமனைகளிலும் சொல்லித் தருகிறார்கள், குடிநீருக்கே கடும் பஞ்சம், அரசே அளவுடன் விநியோகிக்கிறது. உப்பு நீரில் விளையும் சில வகை நெல் கோதுமை ரகங்களை கண்டுபிடித்தது இந்த நூற்றாண்டின் பெரிய சாதனை. ஒருவகை கடல்பாசியில் உணவு தயாரிக்கவும் கற்றுக் கொண்டார்கள். சர்வைவலுக்கான போராட்டம்.
அவள் வெளியே வந்தாள், அங்கங்கே படி (க்ளோனிங்) மனிதர்கள், தலைவர்கள், அறிவுஜீவிகள், விஞ்ஞானிகள், இசை வல்லுனர்கள், இப்படி நாட்டின் சிறந்த மேதைகளின் படிமக்குழந்தைகள் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தனர். காரைக் கிளப்பி கொஞ்சதூரம் பயணித்து பிரதான் சாலையில் தொற்றினாள். நகரும் சாலைகள். சராசரி முப்பது கிலோமீட்டர் வேகத்தில் நகர்கின்றன. டூவிலர்கள் வந்த வேகத்திலேயே அதில் தொற்றி பயணிக்கும்போது கூடுதல் வேகம் கிடைக்கிறது. விரைவான் டிஸ்போஸல், போக்குவரத்து ஸ்தம்பிப்பதில்லை. பாதசாரிகள் அதில் தொற்றி முப்பது கிலோமீட்டர் வேகம் பயணித்து, இறங்கிக் கொள்கிறார்கள்.

அவள் சோர்வுடன் வீட்டையடைந்து பாஸ்வேர்டைச் சொல்ல, கதவு வழிவிட்டது. வாய்ஸ் ரெகக்னிஷன் சிப்பின் உபயம்.

“அனுமதி கிடைக்கவில்லை தானே?” – ராணா கேட்டது.

”எஸ்!”

சடக்கென்று விளக்குகள் அணைந்து லேசான மாலை இருள் கவ்வியது. எழுந்து ஜன்னல் பக்கம் சென்றாள். மின்சப்ளை இல்லை. ஊரே அரையிருளில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது ஒரு தொல்லை. அட்டாமிக் ப்ளாண்டில் என்ன பிரச்சனையோ? நாட்டின் மின்சாரத் தேவைகளை அணுமின் நிலையங்களும், சூரிய சக்தி மின்சாரமும் ஒருவாறு சமாளிக்கின்றன. வீட்டின் கூரைகள் சூரிய மின் பலகைகளால் போர்த்தப்பட்டிருக்கின்றன். தார் பாலைவனம் முழுக்க மின் பலகைக்ளைப் போர்த்தி மின்சாரம் தயாரிக்கிறார்கள்.

இப்போது அவள் வீட்டிற்குள் சூரிய மின்சாரம் வந்து விட்டது.
”ஜீன் மேட்ச்சிங், ப்ளட் க்ரூப் மேட்ச்சிங், உயரம், வயது, அறிவு அத்தனையையும் என் சிஸ்டத்தில் கொடுத்து அலசி உனக்காக ஒரு யுவனை ரகசியமாகத் தேர்வு செய்திருக்கிறேன்.”

ராணா இப்படிச் சொன்னதும் ஆத்திரப்பட்டாள்.

”ஏய் ஃபூல்! இது தேசத்துரோகம் என்று தெரியாது உனக்கு? அரசின் விதிமுறைகளுக்கு எதிராய் செயல்படும்படி உன் ப்ரோக்ராம்களை மாற்றியது யார்? கமான் சொல்லு. யாரு?”

”… … … … ”———-அப்போது உள் அறையிலிருந்து அவன் வெளியில் வந்து நின்றுச் சிரித்தான். கரணை கரணையாய் கைகால்களுடன் கிண்ணென்று வித்தியாசமாய் இருந்தான். இந்த உடல்வாகு உள்ள ஆண்களை இப்போதெல்லாம் பார்ப்பது அரிது. உடல் உழைப்பு குறைந்ததால் பொத பொதவென்று உடல் பெருத்த மனிதர்கள்தான் எங்கும்.

“ஏய் ராணா! என் அனுமதியில்லாமல் என் வீட்டில் யாரிவன்? எப்படி அனுமதித்தாய்? இனி நீ பயன்படமாட்டாய். உன்னை அப்புறப்படுத்தியாக வேண்டும். ஏய் மிஸ்டர்! கெட் அவுட். செக்யூரிட்டியை கூப்பிட வேண்டிவரும்”. போனை எடுத்தாள்.

“வெய்ட்… வெய்ட்…! என் தேர்வு சரியா என்று பார். அப்புறம் என்னைத் திட்டு அல்லது என் பவர் இணைப்பை பிடுங்கி விட்டு என்னை செயலிழக்கம் செய்து விடு. உண்மையில் உனக்கு நன்மையைத்தான் செய்திருக்கின்றேன்.”

திரும்பி அந்த யுவனை ஒருமுறை அளந்தாள். அம்சமான் உடல்வாகு, முறுக்கேறிய புஜம், லேசான குறுந்தாடி, கருகருவென்று நீண்ட தலைமுடி. பளீரென்று கவர்ச்சியாய் சிரித்தான். பாவி உள்ளே இளகுவதை மோப்பம் பிடித்து விட்டானா? நேராகக்கிட்டே வந்து அவளை தொட்டான். சிலிர்த்தாள். முதன்முறையாய் வியர்வை வாசனையுடன் நிஜமான ஒரு ஆணின் ஸ்பரிசம். அவள் தன்னுணர்வுகள் மறந்துப்போய் நிற்க, பலவீனமான அந்தத் தருணம் பார்த்து மென்மையாய் அணைத்துக் கொண்டான். நசை வேகம் என்பார்களே, அது இதுதானா? அவனைப் பற்றி எதுவுமே தெரியாமல் இவ்வளவு சீக்கிரத்தில் எப்படி இளகினாள்?

“ராணாவுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்” என்றான் அவன். இவள் பேசவில்லை.

“பார்! எனக்கும் உனக்கும் ஒரே எண்ண அலைகள். இந்த இயந்திர வாழ்க்கை, அடக்குமுறை, சர்வாதிகாரம், மலிவாய் போய்விட்ட மனித உயிர்கள், மனிதர்களின் அந்தரங்களைக்கூட ஊடுருவிப் பார்க்கும் இன்றைய சட்டங்கள், எல்லாவற்றையும் உன்னைப்போல நானும் வெறுக்கிறேன். திருமணம் செய்துகொள்ள அனுமதித்துவிட்டு, ஏழு வருஷங்களுக்கு பிள்ளை பெறக்கூடாதென்றால் என்ன அர்த்தம்? என்ன கொடுமை இது? கேட்டால் பாதுகாப்பான உடலுறுவு முறைகளை கடைபிடிக்கணுமாம்.”

“அதுமட்டுமா? இயந்திரமனிதர்களை உடலுறவு காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளணுமாம். கேவலம். அசிங்கம். அருவருப்பு” – என்று கொதித்தாள் அவள்.

“அப்படித்தானே நடக்கிறது. அரசே ரோபோக்களை மானிய விலையில் தருகிறது. சிந்தெடிக் தோல் போர்த்திய ரோபோக்கள் கவர்ச்சிகரமான அளவுகளில் விலைமகள்களாகவும், விலைமகன்களாகவும் பணிபுரிகின்றன. இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த இப்படியெல்லாமா?”

”ஆமாம். மனிதர்கள் அவைகளுடன் பழக தூண்டப்படுகிறார்கள்.”

அவர்கள் மாறி மாறி அன்றைய வாழ்க்கை முறைகளை திட்டித்தீர்த்தார்கள்.

“அன்பரே! உன் பெயர் என்ன? எப்படியென்று கூப்பிடுவதாம்?”

“எக்ஸ்! என்று” – சிரித்தான்.. அவளுந்தான்.

”நம் திருமணத்தைப்பற்றி தலைமைக்கு தகவல் அனுப்பிடலாம்”

“கொஞ்ச நாள்கள் போகட்டும்”

“இல்லை தவறு. எசகுபிசகாய் கருதரித்துவிட்டால் ஆபத்து”

“மீறிப் பிறந்தால் என்ன செய்துவிடுவார்களாம்?”

“குழந்தையைக் கொன்றுவிடுவார்கள். அதுதான் சட்டம்.”

ஏதோ ஒரு அசட்டைத்தனத்தில் அவர்கள் விண்ணப்பிக்கவேயில்லை. திருமணம் ரகசியகமாக நடந்தேறியது.

இப்போதெல்லாம் காகித உபயோகம் அற்றுப் போய்விட்டது. எழுதுவது என்பது வழக்கொழிந்து விட்டது. அந்த வேலையை எலக்ட்ரானிக் சமிக்ஞைகளாக கம்ப்யூட்டர்கள் உள்வாங்கிக் கொள்கின்றன. கரன்ஸிகள் கூட இப்போது புழக்கத்தில் இல்லை. அதன் இடத்தில் ப்ளாஸ்டிக் கார்டுகள். ஒரு நல்ல விஷயம் காடுகள் பிழைத்துக் கொண்டன, காகித தயாரிப்புக்காக வெட்டப்படுவதில்லை. ஒரு மாலை வேளையில் அவன் அவளிடம் ஆரம்பித்தான்.

“அன்பே! ரம்யா! உன்னைப் பற்றிய ஆரோக்கியத் தகவல்களைச் சொல்லேன். நானும் சொல்வேன். பரஸ்பரம் நாம் உண்மையாக இருக்கப் பார்ப்போம்!”
அவள் அவன் கைகளை நெகிழ்ச்சியுடன் பற்றினாள்.

”வரவேற்கிறேன் டார்லிங். உன்னுடைய இந்த வெளிப்படையான போக்கு மகிழ்ச்சியளிக்கிறது. சொல்கிறேன். என்னுடைய ஜீனோம் ஜாதகப்படி 51-ஆம் வயதில் பெருங்குடல் கேன்ஸரும், 42-ஆம் வயதில் சர்க்கரை வியாதியும் வரும் சாத்தியம் இருக்கிறது.”

“அப்படியா?”

“இந்த இரண்டிற்காகவும் அருத்த வருடம் ஜனவரியில் இரண்டாவது குரோமோஸோமில் FAS ஜீனையும், F16 புரதத்தையும் திருத்தப் போகிறார்கள். அதற்கான ஜெனட்டிக் டிபார்ட்மெண்டின் உத்திரவு என் சிஸ்ட்த்தில் ராணா சேவ் பண்ணி வைத்திருக்கிறது.”

“என்னிடம் ஒரேயொரு பிரச்சனை ரம்யா. ஐம்பதாம் வயதில் கால்ஷியம் உட்கிரகிப்பு குறைந்து மூட்டுகளின் தேய்மானம் அதிகரிக்குமாம். எட்டாவது குரோமோஸோமில் அதை உண்டாக்கும் மரபணுவை திருத்தப் போகிறார்கள். நாள் – இந்த வருடம் ஆகஸ்ட் 8, இடம் – டிபார்ட்மெண்ட் ஆஃப் ஜெனட்டிக் என்ஜினியரிங்.”

மீண்டுமொரு முறை அவர்கள் முத்தமிட்டுக் கொண்டார்கள். மனிதனின் அறிவு பெருக்கத்தில் வந்த உபத்திரவங்கள் இவை. ஜீன்கள் திருத்தப்பட்டு அல்லது முடக்கப்பட்டு ஒரு மாதிரி சாகாவரம் பெற்ற மார்கண்டேயர்களை உற்பத்தி செய்துவிட்டு இன்று குப்பை குப்பையாய் மனிதர்கள். தீதும் நன்றும் பிறர் தர வாரா.

அரசின் தடைச் சட்டத்திற்கெதிராய் ஒரு நல்ல நாளில் அவள் கர்ப்பமானாள்.

“ஐயோ எக்ஸ்! என்ன பண்ணப்போறோம்? சட்ட விரோதமான குழந்தை இது. அரசு கண்டுபிடித்துவிடும். மாதாந்திர சோதனையில் மாட்டிக்கொள்ளும். அழித்துவிடுவார்கள். நமக்கும் சிறைவாசம்தான். தேசத்துரோகம் இது.” – அவள் கலங்கினாள். எக்ஸ் அவளை சமாதானப் படுத்தினான்.

“கவலைப்படாதே! எதுவும் நடக்காது. முழுசாய் என்னுடைய அம்சங்களுடனும், உன்னுடைய அழகுடனும் கூடிய ஒரு ஆண் குழ்ந்தையைப் பெற்றெடுக்கத்தான் போகிறாய்.”

“அது எப்படி நடக்கும் எக்ஸ்? சும்மா புளுகாதேடா!”

“இந்த உலகத்தில் எல்லாமே நடக்கக்கூடியதுதான் ரம்யா. ஜாக்கிரதையாய் திட்டமிடணும். இங்கே கணினிகளின் சொல்படித்தான் எல்லாமே நடக்கின்றன. அவைகளை ஏமாற்றுவது எனக்குச் சுலபம்.”

அவனை அவநம்பிக்கையாய் பார்த்தாள். ஆனால் அடுத்தடுத்த காலங்களில் அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டுதானிருந்தன. ஏழாம் மாத கர்ப்பத்தில் கூட அவளிடம் எடுக்கப்பட்ட ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட்களில் கூட கர்ப்பமில்லையென்று கம்ப்யூட்டர்கள் பொய் சொல்லின. இன்னொரு ஆச்சர்யம், பிரசவமாகும் வரை இவளுக்கு இவள் அலுவலகம் விடுப்பு வழங்கி ஆணையிட்டிருந்தது.எதன் பொருட்டு இந்த லீவ் என்ற விளக்கமின்றி.
அவளுக்கு எதுவும் புரியவில்லை. என்ன நடக்கிறது? எப்படி இந்த அதிசயம் நிகழ்கிறது? யாரிவன்? என்ன மந்திரம் போட்டான்?

“நான் லீவு கேட்டு விண்ணப்பிக்கவேயில்லை. எப்படி இது நடந்தது? சொல்லு எக்ஸ்! யார் நீ? எனக்கு பயமாயிருக்குப்பா.”

எக்ஸ் சிரித்தான்.

“ஒரு மனிதன். கூடுதலான அறிவு கொண்ட மனிதன். ரம்யா! புரிந்துகொள். இங்கே மனிதர்களின் அதிக பட்ச ஐக்யூ 140. என்னுடையது 170 புரிந்ததா?”
”உனக்கு மட்டும் ஐக்யூ 170 எப்படி சாத்தியம்? உன் டோனர்கள் யார் யார்?”
“மனிதர்கள் அல்லாமல் வேறு யார்? இதெல்லாம் விதிவிலக்குகள்.”

ரம்யாவிற்கு முதன் முறையாக் அவனைப் பற்றி பயம் வந்தது. அடிக்கடி நாள்கணக்கில் காணாமல் மறைந்து போகிறான். கேட்டால் பதில் இல்லை. இவனிடம் தப்பு இருக்கிறது. எதார்த்த மீறல் தெரிகிறது. சுலபமாய் நெட்வொர்க்கை ஆட்டி வைக்கிறான். அவன் சொந்த இருப்பிடம் எங்கே என்று கூட இதுவரை சொன்னதில்லை. அப்படி எங்கேதான் தொலைகிறான் என்று தெரியவில்லை. அவள் தன் எதிர்காலம் பற்றி கவலைப்பட ஆரம்பித்தாள்.
ஆயிற்று. அவள் தான் ஆசைப்பட்ட கர்பிணியின் எல்லா அனுபவங்களையும் பெற்று கடைசியில் எக்ஸ் மாயமாய் தொலைந்து போயிருந்த சூன்யமான ஒரு வாரத்தில், ஒரு இரவில், அவளுடைய கர்ப்ப காலம் முடிந்த நிலையில் அவளுக்கு பிரசவ வலி கண்டது. துணையென்று யாருமில்லை. ராணாவைத் தவிர. டாக்டரைக் கூப்பிட்டால் மாட்டிக் கொள்வாள்.

இதுவரையிலும் சாமர்த்தியமாய் மனிதர்களிடம் மறைத்தாயிற்று இந்த நிமிஷம் வரை மாதாமாதம் செக்அப் செய்த்து டாக்டர்கள் அல்ல, கைனெக்கில் உள்ள எக்ஸ்பர்ட் சிஸ்டம். இனி அது முடியாது.

இப்போது வலி கடுமையாகிவிட, அவள் கூச்சல் போட ஆரம்பித்தாள்.
ஐயோ! அம்மா! டேய்!.. பாவி! எக்ஸ்! எங்கடா தொலைஞ்சே? பாவி எக்ஸ்! ஐயய்யோ! கத்திக்கொண்டே துடித்தாள்.

”ரம்யா! ரம்யா!” – எதிரே எக்ஸ். திடீரென்று வந்து நிற்கிறான். அவள் தேம்பி தேம்பி அழுகிறாள்.

“அழாதே!… அழாதே! உனக்கு நான் பிரசவம் பார்க்கப் போகிறேன்.”

“என்ன.. என்ன?”

“எஸ்! என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரியும். ரிலாக்ஸ்! தளர்ச்சியாய் படு. கண்களை மூடிக்கொள். இனிமேல் உனக்கு வலி வராது. குறைந்துவிடும். பனிக்குடம் உடைந்துவிட்டது பார்! உம்.. முயற்சி செய். ப்ரஷர் கொடு”

அவளுடைய அடி வயிற்றை தடவிக்கொடுத்துக் கொண்டே இருந்தான்.
இப்போது நிஜமாகவே அவளுக்கு வலி குறைந்திருப்பதாகப் பட்டது. லேசாக் சிரிக்கக்கூட முடிந்தது. பாவி! நிஜமாக யார்றா நீ? இதையெல்லாம் உனக்கு யார் சொல்லிக் கொடுத்தது? என்ன விந்தை இது?

இப்போது அங்கே குப்பென்று கவிச்சை வாடை வீச, குமட்டியது. ஆயிற்று, அருமையான ஒரு அமிர்த்த யோகத்தில் வலி தராமல், அந்த குட்டி எக்ஸ் அவளிடமிருந்து ஜன்னமாகி, அவன் கைக்கு வந்தது – வந்தான். எஸ்! வந்தான். பூஞ்சையாய், வெல்வெட் சுருணையாய், கீறிப்பிளந்து வைத்த கண்களுடனும், ரோஜாவின் சிகப்புடனும்.

மறுநாள் அந்த விபரீதம் நிகழ்ந்துவிட்டது. எந்த விஷயத்திற்காக அவள் பயந்து கொண்டிருந்தாளோ, அது நடந்தது. யார் சொல்லியிருப்பார்கள்? திமுதிமுவென்று ரோபோக்கள் ஓடி வந்தன. வந்து கதறக்கதற குழந்தையையும் அவளையும் இழுத்துச் சென்றன.

“ஐயய்யோ! எக்ஸ்.. எக்ஸ்! ஓடி வாங்க எக்ஸ்! எங்க ஒழிஞ்சீங்க? ஐயோ! எக்ஸ்! பாவி! டேய்!”

அவள் போட்ட கூச்சல்கள் வியர்த்தமாகிப் போயின. அவன் உள்ளே தானெ இருந்தான்? எஸ்! இருந்தான். இப்போது இல்லை. எங்கே! எங்கே! ரோபோக்களும் போலீஸார்களும் உள்ளே ஓடி ஓடி தேடினார்கள். இல்லை மாயமாகிவிட்டிருந்தான். கில்லாடி.

அங்கீகரிக்கப்படாத ஜோடி, சட்டவிரோதமாய் பிற்ந்திருக்கும் குழந்தை. இது தேசத்துரோகம். ரம்யா கோர்ட்டிச் நிறுத்தப்பட்டாள். வாதப்பிரதிவாதங்கள் எல்லாம் நடந்து முடிந்து இறுதியாக நீதிபதி, “ஆகவே தேசத்துரோகம் புரிந்த ரம்யா என்கிற இந்தப் பெண்ணுக்கு ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டணை வழங்கி தீர்ப்பளிக்கிறேன். இந்த குழந்தைக்குக் காரணமான் தேசத்துரோகியை உடனடியாக கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு காவல் துறைக்கு உத்திரவு இடப்படுகிறது. சட்ட விரோதமாகப் பிற்ந்துள்ள இந்த குழந்தையை உடனடியாக் அப்புறப் படுத்துமாறு ஆணையிடப்படுகிறது.”

அப்புறப்படுத்துதல் – நாசுக்கான குரூரம் மிகுந்த வார்த்தை. ரம்யா ஓவென்று கதறினாள். எதற்கும் பயனில்லாத எக்ஸ்ஸை திட்டித்தீர்த்தாள்.

அப்போதுதான் அந்தத்திருப்பம் நிகழ்ந்தது. திடீரென்று நீதிபதியின் அருகிருந்த கம்ப்யூட்டரிலும், தலைமைச் செயலகத்தின் எல்லா கம்ப்யூட்டர்களிலும் ஒரே நேரத்தில் எக்ஸ் தோன்றி வணக்கம் சொன்னான்.

“தோழர்களே! நல்லெண்ணப் பயணமாக இங்கே வந்திருக்கும் நான் வேற்றுகிரகவாசி. ஆண்ட்ரமிடா கேலக்ஸியைச் சேர்ந்த மனிதன்.”

”ஆ… ஆ… ஆ…!” எழுந்த நீதிபதி திரும்பவும் உட்கார்ந்தார். தலைமைச் செயலகம் அல்லோலகல்லோலப்பட்டது. ரம்யாவுக்கு வாயடைத்துப் போயிற்று. பிரமை தட்டி நின்றாள். எங்கும் நிசப்தம். எக்ஸ் பேச ஆரம்பித்தான்.

“அங்கே எங்கள் பூமியின் பெயர் கரகீ-5. இங்கிருந்து 2.9 ஒளியாண்டுகள் தூரம். எங்கள் கிரகத்தின் சுழற்சி, புவியீர்ப்பு, விடுபடு வேகம், வளி மண்டலத்தன்மை, பருவ காலங்கள் அனைத்தும் ஏறக்குறைய உங்கள் பூமியைப்போன்றதே. ஒரு நாள் என்பது மட்டும் அங்கே 22 மணி நேரங்கொண்டது. உங்களைவிட மூவாயிரம் வருஷங்கள் முற்பட்டது எங்கள் மனிதகுலம். எங்களின் சராசரி ஐக்யூ 170. ஒரு காலத்தில் தேவ தூதனாய் இங்கே கால் வைத்தது கூட எங்கள் முன்னோர்கள்தாம். நீங்கள் இப்போது உங்கள் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்திலிருக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். என்னுடைய அம்சங்களுடன் பிற்ந்திருக்கும் ரம்யாவின் குழந்தைதான் உங்கள் மனிதகுலத்தின் அடுத்த பரிணாமம். உங்களின் சூப்பர்மேன். அவனுடை ஐக்யூ 190. உங்களுக்கு எச்சரிக்கை, இந்த சூப்பர் மேனுக்கு ஏதாவது தீங்கு செய்தால் நீங்கள் அழிவீர்கள். ரம்யா! என்னை மன்னித்துவிடு. எக்ஸோஸ்பியரில் என் ஊர்த்தி காத்திருக்கிறது. என் நேரம் முடிந்துவிட்டது. கிளம்புகிறேன்..”

சொல்லிவிட்டு ராக்கெட் போன்ற எவ்வித வானூர்தியுமில்லாமல் நின்றவாக்கிலேயே கையசைத்தபடி மேலே மேலே போய்க்கொண்டேயிருந்தான். அழிக்கமுடியாத புவி ஈர்ப்பு விசை என்னவாயிற்று அவன் விஷயத்தில்?

எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, மனிதகுலத்தை ஆளப்போகும் அந்த சூப்பர்மேன் கொட்ட கொட்ட பார்த்துக்கொண்டிருந்தது.. ரம்யாவின் கரங்களில்.

எக்ஸ் மேலே போனதைப்பார்த்த மக்கள் உணர்ச்சி வசப்பட்டு ஆன்ந்தக்கூத்தாட, கோஷங்கள் விண்ணை முட்டின.

“ஆபத்பாந்தவா! அநாதரட்சகா! எம்பெருமானே! கரகீ-5 வாசா! – கைகளை உயர்த்தி கும்பிட்டார்கள்.”

ஒரு கூட்டம் வரிசையில் வந்து ரம்யாவின் கரங்களிலிருந்த தேவமைந்தனை பயபக்தியுடன் தொட்டு வணங்கி விட்டு நகர்ந்தது கொண்டிருந்தது.
எஸ்! கரகீ-5 வாசன் என்ற பெயரில் அப்போதே புதிய கடவுளும் புதிய மதமும் தோற்றுவிக்கப்பட்டுவிட்டன. இந்த மதத்தை பின்பற்றவும், ஸ்லோகங்கள் பாடவும், பற்று வைக்கவும், இதையொட்டி வெறி கொள்ளவும், போரிடவும், அழிக்கவும், அழியவும் இவர்கள் இப்போதே தயார்.

– உலகளவில் நடத்தப்பட்ட அறிவியல் சிறுகதைப்போட்டி – சுஜாதா நினைவுப் புனைவு – 2009 இல் இரண்டாம் பரிசு பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *