தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,606 
 

இரவு தூங்குவதற்கு முன், அந்த கவிதையை ஏன் தான் வாசித்தோமோ என்று நினைத்துக் கொண்டான் வசந்த்.
“என்னுடைய பாட்டில் கடல் உப்புண்டு, பூமியின் கண்ணீர் உப்புதான் அதுவென்று நானறிவேன்.
தாய்த்திரு மொழியும், தாய்ப்பால் சுவையும், கஞ்சியில் உப்பாய் கரையாமல், அந்நியரைப் போல் வந்து முன்னே நிற்கையில் உருகும் நெஞ்சில் எரியும் வேதனை…’ என்று போய்க் கொண்டே இருந்த அந்த கவிதையை எழுதியது, தன்னைப் போன்ற ஒரு பாவப்பட்ட மனிதனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை அவனுக்கு.
இன்னும் சொல்லப் போனால், அந்த கவிஞனை விட, தனக்குத்தான் பல மடங்கு வேதனை என்பதிலும் அவனுக்கு சந்தேகமேயில்லை.
பத்து நிமிட பயணம்!எம்.காம்., – அதிலும் முதல் வகுப்பு. முழுதாக மூன்று வருடங்கள் போய் விட்டன. வேலை வெட்டி என்று உருப்படியாக எதுவுமே கிடைக்கவில்லை. பகல் பொழுதெல்லாம் வீட்டிலேயே கிடந்து, அம்மாவுடனும், பாட்டியுடனும் சீரியல் பார்த்தபடி, நெட்டில், “நாக்ரி டாட் காம்’ல் மேய்ந்தபடி, மிச்ச சொச்ச பொழுதுக்கு, அணில், ஆடு என்று தெருவை பராக்கு பார்த்து… அய்யோ, அந்த கொடுமையெல்லாம் அனுபவித்தவர் களுக்குத்தான் தெரியுமே தவிர, வேலையில்லா பட்டதாரியின் மன வேதனை என்ன என்று, கவிதை எழுதுபவனுக்குத் தெரியவே தெரியாது.
சரி… ஏதோ அவன் எழுதி விட்டான். அதை ஏன் வசந்த் படிக்க வேண்டும்? அதுவும், புதிய கம்பெனியின் இன்டர்வியூவிற்குப் போகும் நாளுக்கு முந்தைய இரவில்?
வசந்த்தை, “பரேட்!’ என்று கூப்பிடுவது போல அழைத்தபடி வந்தார் அப்பா.
“”சொல்லுங்கப்பா!” என்று எழுந்து நின்றான்.
“”இன்னைக்கு தானே?” என்றார், சுவரைப் பார்த்தபடி.
“”ஆமாம்பா!”
“”தூங்கல போல ராத்திரி?” என்றார், கைதியை விசாரிப்பதைப் போல.
“”ஆமாம்பா!”
“”ஆதர்ஷ் இன்போ தானே கம்பெனி பேரு?”
“”ஆமாம்பா!”
“”ஹா ஹா!” என்று சிரித்தார்.
குழப்பத்துடன் பார்த்தான் அவன்.
“”ஆதர்ஷ்னாலே இப்ப நாடு பூரா பரபரப்புதான்… தெரியுமில்ல?”
“”தெரியும்பா… கார்கில் வார்ல…” என்று அவன் முடிக்கும் முன்பே, குறுக்கிட்டார் அப்பா…
“”சரி… சரி… அதெல்லாம் எதுக்கு நமக்கு… ஒழுங்கா இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணி, ஒரு வேலையில உட்கார்ற வழியைப் பாரு… அதுக்கே நாலு வருஷமா நாக்கு தள்ளுது. கிளம்பறேன் காமாட்சி.”
“”சரிங்க…” என்று அவரை அனுப்பிவிட்டு, வேகமாக மகனிடம் வந்தாள் அம்மா.
“”அந்தாளுக்கு ஒழுங்காவே பேசத் தெரியாதாம்மா? எப்படிம்மா முப்பது வருஷமா அந்த ஆளோட குடித்தனம் பண்ணுற,” என்று அவன் புஷ்டித்தபோது, அம்மா மெல்ல அவன் கையைப் பற்றிக் கொண்டாள்.
“”விடுப்பா வசந்த்… இது உன்னுடைய நாள். சந்தோஷமா, தைரியமா போய் இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணிட்டு வா. சாயங்காலமா மத்ததை பேசிக்கலாம்… கிளம்பு,” என்று கரகரப்புடன் அவள் சொன்னபோது, அவனால் ஒரு வார்த்தையும் பேச முடியவில்லை.
“”சரிம்மா… வர்றேன்,” என்று கிளம்பிய போது, வானத்தில் ஒரே ஒரு கிளி, தனியாக பறந்து கொண்டிருந்தது.
ஏழெட்டு உதைகளுக்குப் பிறகே கிளம்பியது யமஹா. இரண்டு நிமிடங்களில், மெயின் ரோட்டுக்கு வந்து விட்டான்.
எதிர்பார்த்ததற்கும் மேலாக டிராபிக் ரகளையாக இருந்தது. சில இடங்களில் நகரவே இல்லை; சில இடங்களில் அங்குலம், பல இடங்களில் ஊர்வலம் என்று, ஒவ்வொரு வாகன ஓட்டியின் சகிப்புத்தன்மையையும் பதம் பார்த்தபடி இருந்த மாநகரப் போக்குவரத்தை சபித்தபடி, வண்டியை நகர்த்திக் கொண்டிருந்த போது தான், “”சார்… சார்…”
என்று பதற்றத்துடன் ஒரு குரல், காதுகளில் விழுந்தது.
பஸ் நிறுத்தத்தில் இந்த நூற்றுக் கணக்கான மக்களின் மத்தியில் இருந்து வந்த அந்த மென்மையான குரல், அவன் முகத்தை இயல்பாகத் திருப்பியது.
ஐம்பதுக்கும், ஐம்பத்தைந்துக்கும் இடைப்பட்ட வயதில் ஒரு உருவம். நல்ல உயரம், பளீர் நிறம், புன்னகைப்பது போன்ற மெல்லிய உதடுகள் என்று, அந்த மனிதர், “சிப்பிக்குள் முத்து’ படத்தின் கே.விஸ்வநாத் போல தெரிந்தார்.
“”யெஸ்…” என்றான்.
“”ஆட்டோ ஸ்டிரைக் போல… பஸ் ரொம்ப நேரமா வரல… கேப்ஸ்காரனைக் கூப்பிட்டு சொல்ல நேரமில்ல… லஸ் கிட்ட இறக்கிவிட முடியுமா, ப்ளீஸ்…” என்றார், மிக சங்கடத்துடன்.
“”சரி ஏறிக்குங்க…” என்று, சற்று முன்னே தள்ளி உட்கார்ந்து கொண்டான்.
“”தேங்க் யு சார்…” என்று மலர்ச்சியுடன் சொல்லி, சீட்டுக்கு வலிக்காமல் உட்கார்ந்தார்.
நல்ல வேளையாக, டிராபிக் சமனப்பட்டிருந்தது.
அந்த விஸ்வநாத், ஏதோ இறகைப் போல இருப்பதாக தோன்றியது.
“”நெனச்சா ஸ்டிரைக்தான் இவங்களுக்கு… மொதல்ல இந்த ஸ்ட்ரைக்குகளுக்கு நாட்டுல தடை போடணும் சார்… ஏற்கனவே அடிக்கிறது கொள்ளை… இதுல இன்னும் பேராசை… இவங்கன்னு இல்ல, யாருமே ஸ்ட்ரைக் பண்ணக் கூடாதுன்னு சட்டம் வரணும் சார்… என்ன சொல்றீங்க?” என்றான் வசந்த்.
“”ஆமாம்… அட்லீஸ்ட் முன் அறிவிப்பாவது வேணும்,” என்றார்.
“”ஷேர் ஆட்டோ வந்தும் கூட்டம் குறையல பாருங்க… அது ஒரு தனி கொடுமை சார்… அடிமைக் கூட்டம் மாதிரி அடைச்சுகிட்டு போறான்… ரெண்டு ஸ்டாப்பிங் ஏறி, இறங்கினாலே, பத்து ரூபாயாம்… பகல் கொள்ளை சார்… நம்ம நாடு உருப்படும்ன்னு நினைக்கிறீங்க?” என்று வசந்த் சொன்ன போது, எதிரில் வந்த கார்காரர், அவனை முறைத்து விட்டு சென்றார்.
“”லஸ் வந்தாச்சு சார்… லெட் மீ கெட் டவுன்,” என்று அவர் சொல்ல, வண்டியை நிறுத்திவிட்டு, அவன் சிரித்தான்.
“”தேங்க்ஸ் சார்…” என்று, அதே சாரல் புன்னகையுடன் சொன்னார்.
“”இவ்ளோ சாப்ட்டா இருக்கீங்களே சார்… ஏய்ச்சுடுவான்களே… பார்த்து,” என்று சொல்லிவிட்டு, டாப் கியரில் வண்டியைக் கிளப்பியபடி, அவன் பறந்தான்.
நடைமுறை வாழ்க்கையில் அப்படியொரு அதிசயம் நிகழும் என்று சத்தியமாய் அவன் நினைத்ததே இல்லை. தெருவோரத்து ஜேப்படி வித்தைக்காரன், “மந்திரத்தில் மாங்காய்ச் செடி வர வழைக்கிறேன்…’ என்று ஆரவாரம் செய்யும் போது, கூடப் படிக்கும் பையன்கள், நாலு கால் பாய்ச்சலில் ஓடுவர். இவன் நிதானமாக, சினிமா போஸ்டர் களைப் பார்த்தபடி நடந்து, வீடு போய்ச் சேர்வான். அந்த அளவுக்கு ஒரு தீர்மானம், நோகாமல் நோன்பு கும்பிட முடியா தென்று!
ஆனால், அதிசயம் நிகழ்ந்து விட்டது.
அந்த கே.விஸ்வநாத் தான், இன்டர்வியூ போர்டில் இருந்தார். இவனைக் கண்டதும், தோழமையுடன் புன்னகைத்தார். சம்பிரதாயமான நேர்காணல் முடிந்ததும், “ஆல் தி பெஸ்ட் மை பாய்!’ என்று மென்மையாகச் சொன்னார்.
வீட்டுக்கு விரைந்து வந்து அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னதும், மகிழ்ந்து போய் சிரித்தாள். “”எல்லாம் உன் நல்ல காலம்தான்பா வசந்த்… இல்லன்னா, லட்சம் வண்டி ஓடுறபோது, உன் டூ வீலர்ல வந்து அவர் ஏன் ஏறணும்? எல்லாம் கூடி வந்திருக்குப்பா,” என்றாள்.
அவனுக்கும், அதுதான் நிஜம் எனத் தோன்றியது. எல்லா நிகழ்வுகளுக்கும், ஒரு அரூபமான காரணம் இருக்கும் என்று ஏன் நம்பக் கூடாது எனக் கேட்டுக் கொண்டான். இஞ்சி தட்டிப் போட்ட எலுமிச்சை ரசத்தை, ரசித்து சாப்பிட்டான். இமைகளைத் தழுவிக் கொண்டு வந்த தூக்கத்தை ஏற்று, ஒரு மணி நேரம் ஆனந்தமாக தூங்கினான். பிறகு, எஸ்.எஸ்., மியூசிக் கேட்ட பின், முகம் கழுவி, ஜீன்ஸ் மாற்றிக் கொண்டபோது, அம்மா பரபரப்பாக வந்தாள்.
“”டேய் வசந்த்… விஸ்வநாத் வந்திருக்காருடா… வாடா சீக்கிரம்… சோபாவுல உட்கார்ந்திருக்கார்!”
“”என்னது?” என்றான் திகைப்புடன்.
“”அவரா? அவர்தாம்மா சேர்மன் அந்த கம்பெனிக்கு… மை காட்!”
“”அப்படியா? சரி வா…” ஓடினாள் அம்மா.
இதென்ன அதிசய திருநாளா? இப்படி மடியில் வந்து விழுகின்றனவே மாம்பழங்கள்?
“”வாங்க சார்… வாங்க,” என்றான் மலர்ச்சியாக.
“”எங்க வீட்டுக்கு வருவீங்கன்னு சத்தியமா எதிர்பார்க்கல சார்… என்ன சார் சாப்பிடறீங்க?”
“”காபி கொண்டு வரவா, இல்ல கிரீன் டீயா?” என்று கேட்ட அம்மாவைப் பார்த்து முறைத்தான். “”சார், வீட்டைத் தேடிக்கிட்டு வந்திருக்காருன்னா என்னம்மா அர்த்தம்? விருந்து தயார் பண்ணும்மா!” என்ற போது, அவர் மெல்ல வாய் திறந்தார்.
“”இல்ல வசந்த்… உங்க மொபைல்போன் கவரை அங்கேயே விட்டுட்டு வந்துட்டீங்க. லெதர் பவுச்… கொடுத்துட்டு போகலாம்ன்னு வந்தேன்… மற்றபடி சாரி… வேலை உங்களுக்கில்லை!”
“”சார்!” என்றான், தொண்டை அடைத்தது.
“”கேட்கறேன்னு தப்பா நினைக்காதீங்க… என் படிப்பு கம்மியா, இல்ல பதில்கள் தப்பா? ஏன் சார் இப்படி?”
“”இது என் கம்பெனி… நான் தேடுறது பொறுப்பான செக்கரட்டரிய…” என்றவர், “”உங்க வண்டியில எனக்கு லிப்ட் கொடுத்தீங்க… பத்து நிமிட பயணத்துல, உங்க கேரக்டர் தெரிஞ்சுது… பிரேக் சரியா பராமரிக்கப்படல, தெருவில் இருக்கும் பள்ளம் – மேடு பத்தின அக்கறை, உங்க டிரைவிங்ல இல்ல.
“”எதிர்ல, சைடுல வரும் வண்டியோட்டிகள் மேல அலட்சியம்… அவங்களை கெட்ட வார்த்தை சொல்லி திட்டினதுல, உங்க பதட்டமான மனசு தெரிஞ்சுது. ஸ்பீட் பிரேக்கர் வரும்போதெல்லாம், பின்னால வயசானவன் இருக்கானே என்ற அனுசரணை தெரியவே இல்ல; அவ்வளவு கடினமா கையாண்டீங்க. டிராபிக்ல சிகப்பு விளக்கைப் பார்த்தாலே டென்ஷன் ஆனீங்க.. புது ஆள் கிட்ட பேசறோமேன்னு இல்லாம, ஸ்ட்ரைக், ஆட்டோ பத்தியெல்லாம், சகட்டு மேனிக்கு அபிப்ராயம் சொன்னீங்க. இவ்ளோ பதற்றத்தோட இருக்கும் நீங்க, எப்படி ஒரு நல்ல கம்பெனிக்கு, பொறுப்பான செக்கரட்டரியா இருக்க முடியும்?”
அவன் தலை குனிந்தது. அம்மாவின் விழிகள் நனைந்தன.
“”ஆனாலும், இப்ப ஏன் வந்திருக்கேன் தெரியுமா?” என்றார் புன்னகைத்து.
அமைதியாக நின்றான் அவன்.
“”ஒரு வார்த்தை கேட்டதும் என்னை வண்டியில ஏத்திக்கிட்ட அந்த நல்ல மனசுக்காக!”
காற்று இதமாக வந்து விட்டுப் போனது.
“”அடுத்த வேகன்சி எட்டு மாசத்துல வருது… அப்ளை பண்ணுங்க வசந்த்; பார்க்கிறேன். இப்ப வரட்டுமா?” என்று எழுந்து கொண்டார், புன்னகையுடன்.
“”இந்த எட்டு மாசம் எனக்கு கர்ப்ப காலம் மாதிரி சார்… பொறுப்புணர்வையும், தகுதியையும் வளர்த்துக்கிட்டு காத்திருக்கேன்,” என்றான் தெளிவாக.

– பிப்ரவரி 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *