கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: January 28, 2017
பார்வையிட்டோர்: 8,516 
 

எழுதியவர்: சுநீல் கங்கோபாத்தியாய்

சிப்தாவிலிருந்து டால்டன்கஞ்ச் செல்லும் வழியில் வண்டி நின்றுபோய் விட்டது. புத்தம் புதிய, பளபளப்பான ஸ்டேஷன்வாகன், அது திடீரென்று பழுதாகிவிடும் என்று யாரும் நினைக்க வில்லை. அது பாலத்தைக் கடந்து மேட்டின்மேல் ஏறும்போதும்,பலவீனமாக இரண்டு மூன்றுமுறை முனகிவிட்டு நின்றபோதும் ஒருவரும் அதைப் பெரிதாக நினைக்கவில்லை. ‘ஏதோ நின்னிருக்கு,இதோ கிளம்பிவிடும்’ என்ற நினைப்பில் பிரயாணிகள் வண்டியின ஜன்னல் வழியே இயற்கையை ரசிக்கத் தொடங்கினார்கள்.மிஸ்டர் கேம்கா தன் சிகரெட் பெட்டியைத் திறந்து எல்லாரிடமும் நீட்டி அவரவருக்கு ஏற்றவாறு ஆங்கிலம், இந்தி, வங்காளியில்பேசி அவர்களை சிகரெட் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். பெட்டியில் எட்டு சிகரெட்டுகள் இருந்தன. ஒரேசுற்றில் பெட்டி காலி.

பத்து நிமிடங்களாகியும் வண்டி நகரவில்லை. பின்னால் வந்த லாரி ஒன்று வழிகேட்டு ஒலிப்பானை ஒலிக்கத் தொடங்கியது.இப்போது கேம்கா தாமே கீழே இறங்கி வந்தார்.

குறுகிய பாலத்தைக் கடந்ததும் சாலை ஆற்றங் கரையிலிருந்தே செங்குத்தாக மேலே போகிறது. ஆறு இல்லை,ஆற்றின் எலும்புக்கூடுதான், இரத்தம் தசை எதுவுமில்லை. அருணும் இறங்கி வந்தார். வண்டிக்குள் ஒரே வெக்கை. அவர்கைகளைப் பின்பக்கம் நீட்டி நெஞ்சை விரித்துச் சோம்பல் முறித்துக் கொண்டார். உடம்பு அசத்துகிறது; குளித்தால்தான்ஒரு நிலைக்கு வரும். ஆற்றில் தண்ணீர் இருந்தால் உடனே இறங்கிக் குளித்திருக்கலாம். இப்போது மணி பதினொன்றரைதான். ஆனால் இதற்குள் எரிச்சலூட்டும் வெயில்-அசட்டுப் பரிகாசம் போல. இந்த இடத்தில் வண்டிகள் அடிக்கடி பழுதாகும்போலும்; அல்லது இந்தப் பக்கம் வருபவர்கள் வேண்டுமென்றே இங்கு வண்டிகளை நிறுத்துவார்கள் என்று தோன்றகிறது.ஏனென்றால் சாலை ஓரத்தில் பாறையின்மேல் கரியாலும் சாக்குக் கட்டியாலும் நன்றாகப் படித்தவர்களின் கையெழுத்தில்எழுதப்பட்ட வாசகங்கள் காணப்பட்டன. இவர்களுக்குச் சாக்குக் கட்டி எப்படிக் கிடைத்தது? இவர்கள் வீட்டைவிட்டுக் கிளம்பும்போது சாக்குக் கட்டியையும் எடுத்துக்கொண்டு புறப்படுவார்களா …?

எழுதப்பட்டிருந்த வாசகங்களில் மிகவும் அழுத்தமாகத் தெரிந்த வாசகம் ‘மந்திரா + லால் கலம் = சுவர்க்கம்!’

அருண் முணுமுணுத்தார் “அடக் கடவுளே !”

ஓட்டுநர் வண்டியின் முன்பக்க மூடியைத் திற‌ந்தார். கேம்கா அங்கு வந்து எட்டிப் பார்த்தார். வண்டிக்குள் இருந்த ‘ஹெரால்டுட்ரிப்யூன்’ பத்திரிக்கையின் நிருபர் லாகிரி எரிச்சலடைந்து “கேம்கா என்ன ஆச்சு ?” என்று கத்தினார்.

கேம்கா எந்த நிலையிலும் கலங்காதவர். அவர் சொன்னார், “வண்டி தகராறு செய்யுது… அப்ப ஒண்ணு பண்ணலாம்.பக்கத்திலேதான் ரூபா டுங்ரி விடுதி. நாம அங்க போய்ப் பகல் சாப்பாட்டை முடிச்சுக்கலாம்…”

இதற்குள் மூன்று நான்கு பேர் வண்டியிலிருந்து இறங்கி விட்டார்கள்.

எப்போதும் காலை வேளையில் நல்ல மூடில் இருக்க‌ மாட்டார் லாகிரி. அவர் காலை வேலைகளில் ‘ஹெல்’ என்ற‌வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவதைக் கவனித்திருக்கிறார் அருண். லாகிரி முகத்தைச் சுளித்துச் கொண்டு கைக்கடிகாரத்தைப்பார்த்துக் கொண்டார் நேரத்தைத் தெரிந்துகொள்ள அல்ல, தேதி தெரிந்துகொள்ள. பிறகு சொன்னார், “ஐயோ ! இன்னிக்குஎட்டாந்தேதி, இன்னிக்கே எனக்குப் பாட்னா போய்ச் சேரணும். ஒங்க டாடா கம்பெனி இந்த ஒட்டை வண்டியைக் கொடுத்திருக்கு…”

ஹாஹாவென்று சிரித்தார் கேம்கா. “இது புத்தம் புது வண்டியாக்கும், அதனால்தான் கொஞ்சம் தொல்லை கொடுக்குது..வாங்க, வாங்க..! இது ரொம்ப நல்ல, சின்ன பங்களா. ஒங்க‌ளுக்குப் பிடிக்கும்.. மிஸ்டர் ரங்காச்சாரி, நீங்க என்ன சொல்றீங்க?”ர‌ங்காச்சாரிக்கு ஆட்சேப‌மில்லை. ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் இந்த‌ யோச‌னையை எதிர்க்க‌வில்லை.

ஆனால் ம‌ற்ற‌ ப‌த்திரிக்கைக‌ளை விட‌ப் பெரிய‌ ஆங்கில‌ப் ப‌த்திரிக்கையின் நிருப‌ர் என்ற‌ முறையில் லாகிரிதான் அதிக‌ ஆர்ப்பாட்ட‌ம் செய்தார். அவ‌ர் முணுமுணுக்க‌ ஆர‌ம்பித்தார், “இன்னிக்கு மூணு ம‌ணிக்கு நான் டால்ட‌ன் க‌ஞ்ச் ஜில்லாமாஜிஸ்டிரேட்டைச் ச‌ந்திக்க‌ணும்… ந‌ல்ல‌ ச‌ங்க‌ட‌ம்..! ப‌ங்க‌ளா எவ்வ‌ள‌வு தூர‌ம்? இந்த‌ வெயில்லே எங்க‌ளை ந‌ட‌க்க‌வைக்க‌ப்போறீங்க‌ளா ?”

“கொஞ்ச தூரந்தான் .. இதோ இங்கேயிருந்தே தெரியுதே!”

“அங்கே ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா? இந்தப் பகுதியிலே சாப்பாட்டு விடுதி எதையும் காணோமே!”

“அதையெல்லாம் நான் கவனிச்சுக்கறேன். என்கிட்டேயும் உணவுச்சாமான்கள் இருக்கு. ஒரு அசௌகரியமும் இருக்காது.”

எதற்கும் கலங்குபவரல்ல கேம்கா. இப்போதுதான் லாகிரியோடு மலர்ந்த முகத்துடன் பேசிக்கொண்டிருந்த அவர்திடீரென்று முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு ஓட்டுநரை ஏதோ திட்டினார். மறு நிமிடமே மறுபடியும் மலர்ந்த முகத்துடன்லாகிரியிடம் சொன்னார், “எதிர்பாராம இந்த மாதிரி ஏதாவது நேர்ந்துட்டா எனக்கு ரொம்ப குஷியா இருக்கும்.. வாங்க,போகலாம்.”

வண்டியின் பணியாள் சாமான்களைத் தூக்கிக்கொண்டு அவர்களுக்குப் பின்னால் நடந்தான். இன்னும் ஒரு பெட்டி பீர்,மூன்று போத்தல் ஸ்காட்ச் பானம், கொஞ்சம் இறைச்சி இவை மிச்சமிருப்பதை ஓரக்கண்ணால் கவனித்த லாகிரியின் முகத்திலிருந்த கடுப்பு சற்றுக் குறைந்தது.

பயணிகள் விடுதியில் இரண்டு அறைகள், சுத்தமான பாத்ரூம், மூன்று பணியாட்கள். மத்திய அரசின் மந்திரியொருவர்அங்கு தங்கிவிட்டு அப்போதுதான் அங்கிருந்து புறப்பட்டுப் போயிருந்தார். ஆகையால் பணியாட்கள் இன்னும் சீருடையைக்கழற்றவில்லை. கேம்கா ஒரு தேர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் போல் அனாயாசமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்.”கோழி மட்டும் மூணுக்கு மேல கிடைக்கல்ல!” என்று வருத்தப் பட்டுக் கொண்டே அவர் பீர்போத்தலைத் திறக்கத் தொடங்கினார். லாகிரியின் புருவச் சுருக்கங்கள் சற்றுக் குறைந்திருந்தன. அவர் மேஜையின் மேல் கால்களைப் போட்டுக்கொண்டுகேட்டார், “கேம்கா, இங்கே பக்கத்திலே ஒங்க டாட்டா கம்பெனி யோட உணவு முகாம் ஏதாவது இருக்கா?”

“இந்தப் பக்கம் இல்லே. நாங்க நாலு இடத்தில் உணவு விடுதி திறந்திருக்கோம். ஒண்ணுதான் நேத்திக்கு நீங்க பார்த்தது..”

“நல்லவேளை பிழைச்சேன்! இந்த மூணு நாளா நீங்க எங்களை இழுத்தடிச்சே..!”

“இழுத்தடிச்சேனா..? மிஸ்டர் லாகிரி, நீங்க வாழ்க்கைய எதிர் கொள்ளணும், நீங்க பத்திரிகைக்காரங்க..”

“காலை வேளையிலே என் வாயிலிருந்து திட்டை வர வழைக்காதே! வாழ்க்கையாம்! (எழுத முடியாத வசவு). சரி,ஊத்து”

“நாட்டு நிலைமை என்னன்னு நீங்க நேரடியாப் பார்க்க வேணாமா? வெளிநாட்டு நிருபர்கள்கூட..”

“நாட்டு நிலைமையைக் காண்பிக்க ஒங்களுக்கு ஏன் இவ்வளவ அக்கறை..? சும்மா வளவளன்னு பேசிக்கிட்டிருக்காதே!நாசூக்குத் தெரியாதவன்! அருண், ஒங்கிட்டே சார்மினார் இருந்தால் ஒண்ணு கொடு!”

கேம்கா இதற்குள் தன் சிகரெட் பெட்டியை நிரப்பிக் கொண்டு வந்து அதை லாகிரிக்கு முன்னால் நீட்டினார். லாகிரிசொன்னார், “ஒன்னோட அந்த கோல்டு ஃப்ளேக் குடிச்சுக் குடிச்சு வாய் சப்புனு போயிடுச்சு! சீ! அருண், ஒரு சார்மினார்கொடு!”

அருண் தூரத்திலிருந்தே தன் சிகரெட் பெட்டியை லாகிரியிடம் எறிந்துவிட்டு, “லாகிரி அண்ணா, இன்னிக்குஇங்கேயே தங்கிடலாமே! இந்த இடம் ரொம்ப அமைதியா இருக்கு” என்றார்.

“ஒனக்கென்ன! நினைச்சா ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்கலாம். எனக்கு நாளன்னிக்குக் கல்கத்தாவிலே பிளேனைப் பிடிக்கணும்.ஒருநாள் வேஸ்டா.. என் மூடு அவுட்டாயிடுச்சு, ஒண்ணும் பிடிக்கலே..”

“வாஸ்தவம், பொறுத்துக்க முடியாதுதான்! எவ்வளவு பரிதாபமான காட்சிகள்..”

” என்ன பரிதாபம்? என்ன?”

லாகிரி கால்களைத் தொங்கவிட்டுக்கொண்டு நேராக உட்கார்ந்து கொண்டார். அவருக்குப் பெரிய உடம்பு, அகலமானமுகம். சோடாபுட்டி மூக்குக் கண்ணாடி. இருந்தாலும் முகத்தில் ஒருவகைக் குழந்தைத்தனம் இருந்தது. கோபம், வியப்பு, எரிச்சல்,சோர்வு ஆகிய உணர்ச்சிகள் அதில் தெளிவாகப் பிரதிபலித்தன. அவர் கலப்படமில்லாத ஆச்சரியத்தோடு “எது பரிதாபம்?”என்று கேட்டார்.’பம்பாய் ட்ரிப்யூன்’ பத்திரிகை நிருபர் தேஷ்பாண்டே சொன்னார், “மிஸ்டர் லாகிரி, நீங்க பார்த்தீங்களா? நான் அதைபோட்டோ எடுத்து வச்சிருக்கேன்.. பேத்லா உதவி முகாமிலே உணவுக்காக வரிசையா உக்காந்திருந்தவங்களிலே ஒரு கிழவன்ஒரு கிழவியோட மடியிலே தலையை வச்சக்கிட்டு அப்படியே செத்துப்போயிட்டான்..! இதையெல்லாம் மனுசன் கண்ணாலபார்க்க முடியுமா? ஜெயப்பிரகாஷ் இதைப் பார்த்துட்டு வேர்வையைத் தொடைச்சுக்கறார். நான் கவனிச்சேன். நானும்கண்ணை மூடிக்கிட்டேன்.”

ரங்காச்சாரி சிரித்துக்கொண்டே சொன்னார், “ஆனா கண்ணை மூடிக்கறதுக்கு முன்னாலே போட்டோ எடுத்துட்டியோல்லியோ? இப்ப அந்தப் படத்தை டைம்ஸ் பத்திரிகைக்கோ, கார்டியன் பத்திரிகைக்கோ வித்து..”

“மாட்டேன், மாட்டவே மாட்டேன்! நம் நாடு பத்தின இந்த வெட்ககரமான விஷயத்தை வெளிநாட்டுக்காரங்களுக்குவிற்க மாட்டேன்!” அழுத்தமாகக் கூறினார் தேஷ்பாண்டே.

அவர்களுடைய உரையாடலைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த லாகிரி சொன்னார், “இதுதான் பரிதாபக்காட்சியா? நம்ம நிலைமை அதைவிடப் பரிதாபமில்லையா? இந்த ராஸ்கல் கேம்கா..”

கேம்கா உதட்டில் சிரிப்புடன் மிகவும் பயந்தவன்போல் நடித்தவாறு “ஐயா, நான் என்ன குத்தம் பண்ணினேன்?” என்றுகத்தினான்.

“நீதான் எல்லா அனர்த்தத்துக்கும் காரணம்!”

“ஏன்? நாட்டிலே என்ன நடக்குதுன்னு நீங்க..”

“நாட்டிலே என்ன நடக்குதுன்னு நாங்களாகவே பார்த்துக்குவோம், அல்லது எங்க பத்திரிகைகள் எங்களைப் பார்க்கஅனுப்பும். நீ ஏன் எங்களை அழைச்சக்கிட்டு வந்து இதை யெல்லாம் காமிக்கறே? நீங்க எவ்வளவு தான தருமம் பண்றீங்கன்னு தம்பட்டம் அடிச்சுக்கணும்! மனுசங்க செத்துப்போயிக்கிட்டு இருக்கறதைப் பார்க்க யாராவது ஜனங்களை அழைச்சக்கிட்டு வருவாங்களா? ராவும் பகலும் எங்களுக்கு ஸ்காட்ச் குடிக்கக் கொடுக்கிறே. எங்களை வசதியா வச்சுக்கறே, நடுநடுவிலேகூட்டிக்கிட்டுப்போய் மனுசங்க சாகறதைக் காமிக்றே.. அசிங்கம், பயங்கரம்..! ராஸ்கல், நீங்க கொடுக்கறதையெல்லாம் சாப்பிடறேங்கறதுக்காக நான் ஒங்களை நேசிக்கறேன்னு நினைச்சுக்காதே..! நான் குடியன், நல்ல சர்க்கைப் பார்த்தாக் குடிக்காமே இருக்கமுடியாது.. ஆனா அதுக்காக இந்த மாதிரியா..?”

கேம்காவின் பாவனை இப்போது முற்றிலும் மாறிவிட்டது. அவர் மெல்லக் கைகளைத் தட்டிக்கொண்டு சொன்னார், ” நீங்கசொல்றது ரொம்பச் சரி! ஒங்க கருத்தை அப்படியே ஒப்புத்துக்கறேன் நான் ஆனா, இது என்னோட வேலை..”

லாகிரி நாற்காலியிலிருந்து எழுந்துபோய் வராந்தாவுக்கு வெளியே எச்சில் துப்பினார். பையிலிருந்து கைக்குட்டையைஎடுத்து மூக்கைத் துடைத்துக் கொண்டார். அவர் மூக்குக் கண்ணாடியை எடுத்ததும் அவருடைய முகம் ஒரு குழந்தையின்முகம்போல் ஆகிவிட்டது. பரிதாபகரமாகச் சொன்னார், “நிசமாவே ஒண்ணும் பிடிக்கலே எனக்கு.. சரி, சமையல்ஆயிருச்சான்னு பார்த்துட்டுவா. எனக்குப் பசிக்குது. இன்னுங் குடிச்சா அப்புறம் சாப்பாடே இறங்காது.”

பயணிகள் விடுதியின் வாசலில் ஒரு பெரிய கிணறு. ஜனங்கள் கூட்டம் கூட்டமாக அங்கு தண்ணீரெடுக்க வந்தார்கள். விடுதியின் பணியாளன் ஒருவன் அங்கே காவலிருந்து கொண்டு அவர்களில் யாரும் ஒரு குடத்துக்கு மேல் தண்ணீர் எடுக்காதபடி பார்த்துக் கொண்டான். அருண் அந்தப்பக்கம் பார்த்துக் கொண்டிருந்தார்.

லாகிரி அருணுக்கு அருகில் வந்து சொன்னார். “என்ன பார்க்கறே? பொம்பிளைகளையா? ஏழு வருஷம் முன்னாலே இதே பாலாமாவுக்கு வந்திருந்தேன்.. அப்போ எனக்கு ஒன் வயசு இருக்கும். அப்போ கவனிச்சேன், இந்த ஓராவ் சாதிப் பெண்களுக்கெல்லாம் என்ன கட்டுமஸ்தான உடம்பு ஆகா! இப்போப் பாரு, ஒருத்திக்கும் புட்டமே இல்லே, மாரே இல்லே!”

அருண் பதில் சொல்லாமல் லாகிரியைப் பார்த்துச் சிரித்தார்.

லாகிரி தொடர்ந்து பேசினார், “எப்படி இந்தக் காட்சியை வர்ணிக்கறதுன்னு நிச்சயம் பண்ணிட்டியா? ஒங்க வங்காளிப் பத்திரிக்கையிலே எல்லாம் கவிதை மாதிரி ஆர்ப்பாட்டமா எழுதணுமே! சரி, நான் சொல்றேன், எழுதிக்க, ‘எண்ணற்ற மக்களின் முகங்களில் சோகத்தின் சித்திரம்…?’ இல்லே, ‘சித்திரம்’ என்ற வார்த்தை ரொம்பப் பழசாயிடுச்சு, ‘வியர்வை’ ஆமா, அதுதான் சரியான வார்த்தை ‘வேதனையின் வியர்வை…’ ‘வெய்யில்’, ‘செவிட்டு வெய்யில்…’ ஆகா, ஒனக்குச் செய்தியோடதலைப்புகூடச் சொல்லிக் குடுத்துடறேன் – ‘ வானத்தில் செவிட்டு வெய்யில், கீழே வேதனையின் வியர்வை!’ ஆகா கவிதைதான் போ!”

அருண் பதில் சொல்லாமல் மறுபடி சிரித்தார். ஆனால் இந்தச் சிரிப்பு சற்று வேறுவிதமாயிருந்தது. லாகிரி இதைக் கவனித்துவிட்டுச் சொன்னார், “நான் கொஞ்சம் அதிகமாப் பேசறேன், இல்லியா? ஒளர்றேன்.. நினைச்சுப் பாரு, ஆயிரக் கணக்கான ஜனங்க சோத்துக்கில்லாம துடிக்கறாங்க, நாம என்ன செய்யறோம்? அவங்க நிலைய எந்த மொழியிலே வர்ணிக்கறதுன்னு யோசிச்சு கிட்டிருக்கோம்! சே, ஒண்ணும் பிடிக்கலே எனக்கு!”

“லாகிரி அண்ணா, இந்த பக்கத்துக்கு எங்கிருந்தோ ஒரு சன்னியாசி வந்திருக்காராம். மக்களுக்குச் சேவை செய்யறாராம்.

“அது யாரு சன்னியாசி?”

“பம்பாய் பக்கத்திலேருந்து வந்திருக்காராம். தினம் ஆயிரம் பேருக்குச் சாப்பாடு போடறாராம். அவரோட பக்தர்கள் அவருக்குப் பணமும் அரிசியும் அனுப்பறாங்களாம்… ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு இல்லே? வாங்களேன், எப்ப இங்க தங்கறோமோ, அப்ப அவரையும் போய்ப் பார்த்துட்டு வந்திடலாமே!”

“சன்னியாசி சாப்பாடு போடறார்னா அதிலே ஒனக்கென்ன வந்தது?”

“அது ஒரு பெரிய நிகழ்ச்சி இல்லயா? ஒங்க ஆங்கிலப் பத்திரிகைக்குச் சுவையான செய்தியாயிருக்குமே!”

“அட, சும்மாயிருப்பா..! இந்த பீர் ஒரே கசப்பு..! வயித்தப் போக்குக் கஷாயம் குடிக்கற மாதிரி இருக்கு.. கலப்படம்பண்ணியிருக்காங்க போலேயிருக்கு..”

“பீர் கொஞ்சம் கசக்கத்தான் செய்யும்..”

“சும்மா ஔறாதே! நீ பால் குடிக்கற குழந்தை..! பீர் கசக்கும்ன எனக்குச் சொல்லித் தர்றயாக்கும்!”

முகத்தைச் சுளித்துக் கொண்டார் லாகிரி — மூக்குக் கண்ணாடி இல்லாமல் பரிதாபமாகத் தோற்றமளிக்கும் முகம்..

லாகிரி முதலில் ஒருவரிடமும், பிறக இன்னொருவரிடமும் போய் வளவளவென்று ஏதோ உளறிக் கொண்டேயிருக்கிறார்.மற்றவர்கள் கத்துகிறார்கள். அவர் திடீரென்று கேம்காவைப் பார்த்துக் கத்தினார், “கேம்கா ராஸ்கல்! இரு, இரு.. நான்ருஸ்தம்ஜீகிட்டே ஒன்னைப் பத்திப் புகார் பண்றேன்! ஒன்னை ராஞ்சிக்கு மாத்தச் சொல்றேன், பாரு!”

கேம்கா வராந்தாவின் ஓரத்தில் உட்கார்ந்திருந்தார். வெயில் அவர் முகத்தில் விழுந்து கொண்டிருந்ததால் முகம் பளபளத்தத.அவர் இனிய குரலில் சொன்னார். “அப்படி நீங்க செஞ்சீங்கன்னா என்னோட நல்லதுக்குத்தான் செய்வீங்க. நீங்க எப்போதும் என்நண்பர்தான்!”

“நண்பர்! வெங்காயம்?”

“எப்போதும் என் நண்பர்தான் ..! அது சரி, இப்போ நான் என்ன குத்தம் பண்ணினேன்?”

லாகிரி இடுப்பில் கையை வைத்துக் கொண்டு நின்றார். கேம்காவின் குற்றம் என்னவென்று யோசித்தார். இங்குமங்கும்பார்த்தார். தன் கையிலிருந்த காலி டம்ளர் அவரது பார்வையில் பட்டது. “இவ்வளவு நேரமா உள்ளூர் பீரையே குடுச்சுக் கிட்டிருக்கியே.. ஸ்காட்சை ஒன் வப்பாட்டிக்குக் குடுக்கப் போறியா?”

கேம்கா உடனே எழுந்து மேஜைக்கடியிலிருந்து ஸ்காட்சை எடுத்துக்கொண்டே சொன்னார், “ஒங்களுக்கு மனசு சரியில்லாதபோதெல்லாம் விஸ்கி சாப்பிடறதுக்குப் பதிலா பீர்தானே சாப்பிடுவீங்கன்னு..”

“எனக்கு மனசு சரியில்லேன்னு ஒனக்கு யாரு சொன்னாங்க, முட்டாள்! எனக்குப் பசிக்குது.. சாப்பாட்டுக்கு செய்யுன்னு நான் அப்பவே பிடிச்சுச் சொல்லிக்கிட்டிருக்கேன்..”

சாப்பாடு தயார். வெள்ளை வெளேரென்று சிறுமணி அரிசிச் சாதம், டப்பா வெண்ணெய், உருளைக்கிழங்கு பொரியல்,கோழிக் குழம்பு.

ரங்காச்சாரி அருணிடம் கிசுகிசுத்தார்,”இவ்வளவு நாளிலே இன்னிக்குத்தான் அரிசி ரொம்ப நல்லாயிருக்கு .. கடுமையானபஞ்சப் பகுதியிலேதான் நமக்கு ரொம்ப நல்ல அரிசி கிடைச்சிருக்கு.. இல்லியா?

“குழம்பும் பிரமாதம்! ரொம்ப நல்லா சமைச்சிருக்கான்.”

“ஆனா, காரம் கொஞ்சம் சாஸ்தி.”

அப்போது பிற்பகல் மணி ஒன்றுதான். ஆனால் இதற்குள் நல்ல போதை லாகிரிக்கு. அவர் விரல்களால் சோற்றைஅளைந்தாரேயொழியச் சாப்பிடுவதாகக் காணோம். அவருடைய கண்கள் குழம்பிக் கிடந்தன. இன்று முழுவதும் இப்படித்தானிருக்கும். ஆனால் இதே ஆள் தன் ரிப்போர்ட்டை டைப் செய்ய உட்காரும்போது முற்றிலும் மாறிப்போய் விடுவதைஅருண் கவனித்திருக்கிறார். அபார ஞாபக சக்தி அவருக்கு; ஆங்கிலம் எழுதுவதில் திறமையும் அவ்வாறே. அப்போதுகாரியத்தில் கண்ணாயிருப்பார் லாகிரி.

“லாகிரி அண்ணா, நீங்க ஒண்ணும் சாப்பிடலியே!” அருண் கேட்டார்.

“தூ! என்ன சாப்பாடு இது! ஒண்ணுமே பிடிக்கலே! கோழி இறைச்சி கெட்டுப்போயிடுச்சு!”

கேம்கா முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக்கொண்டு, “என்ன சொல்றீங்க நீங்க! கோழி உசிரோடே இருக்கு,அதைப் போய் இறைச்சி கெட்டுப் போச்சுங்கறீங்களே!”

இதைக் கேட்டு எல்லாரும் ஹோவென்று சிரித்தார்கள்.

“இதிலே சிரிக்கறதுக்கு என்ன இருக்கு?” லாகிரி கோபமாகக் கேட்டார். “நிச்சயம் இது கெட்டுப்போன இறைச்சிதான், தூ!”

லாகிரி சோற்றையும் இறைச்சியையும் மேஜையின் மேல் இறைக்கத் தொடங்கியதைக் கண்டு தேஷ்பாண்டே சொன்னார்,”அண்ணா, நீங்க சாப்பிடலேன்னா விடுங்க. சாப்பாட்டை வீணாக்காதீங்க!”

“நான் வீணாக்குவேன்! ஒனக்கென்ன?”

“இது அக்கிரமம்! ஜனங்க சோறில்லாம செத்துக் கிட்டிருக்காங்க. இப்போ நாம வயிறு நிறையச் சாப்பிடறதே அநியாயம்.அதுக்கும் மேலே அநியாயம் சோத்தை வீணாக்கறது…”

“வாயை மூடு! நான் வீணாக்கத்தான் செய்வேன்!”

“இதுக்கு அர்த்தமேயில்லே.. இந்த விடுதியோட வேலைக்காரங்க சாப்பிடலாம். இல்லாட்டிப் பிச்சைக்காரங்களுக்குக்கொடுக்கலாம்…”

“பேசாதே! நான் ஒண்ணும் கேக்கத் தயாரில்லே. பிச்சைக்காரங்களுக்குச் சோறு கிடைக்கலியாம்! ஒண்ணும் பிடிக்க்லேஎனக்கு… பொறுத்துக்க முடியலே என்னாலே! இது என்ன‌ புதுசா? சோறில்லாமே சாகறாங்க… அவங்களைக் காட்டறதுக்குஆளுங்களைக் கூட்டிக்கிட்டு வர்றது… எனக்குப் புரியலே இது…! கேம்கா, இப்பவே உனக்கு எச்சரிக்கை குடுக்கிறேன்! இன்னிக்குப்பூரா ஒருத்தரும் சோத்துக்கில்லாமே சாகறதைப் பத்திப் பேசக் கூடாது. ஆமா! அது போதும்! இன்னிக்கு நாள்பூரா விடுமுறை,புரிஞ்சதா? இன்னிக்குப் பஞ்சத்திலேருந்து விடுதலை, புரிஞ்சுக் கிட்டீங்களா எல்லாரும்? இன்னிக்குப்பூரா நாம குடிக்க‌வேண்டியது, பொம்பளைகளைப் பத்திப் பேச வேண்டியது…! இந்தப் பஞ்சப்பாட்டை யாராவது ஆரம்பிச்சீங்களோ, தெரியும்சேதி…”

“அதுக்குத் தேவை இருக்காது, மிஸ்டர் லாகிரி! வண்டி சரியாயிடுச்சு. சாப்பாடு முடிஞ்ச‌தும் நாம புறப்படலாம்.”

“வேற வினை வேண்டாம்! சாப்பிட்டு எழுந்திருந்ததும் அந்த ஓட்டை வண்டியிலே ஏறணுமாக்கும்! அதெல்லாம்முடியாது! நாம இன்னிக்கு இங்கேதான் இருக்கப்போறோம்!”

“ஒங்களுக்கு நாள‌ன்னிக்குக் க‌ல்க‌த்தாவிலே பிளேனைப் பிடிக்க‌ணும்னு சொன்னீங்க‌ளே?”

“என‌க்குப் பிளேனைப் பிடிக்க‌ணும்னா அதைப்ப‌த்தி ஒன‌க்கென்ன‌ க‌வ‌லை? நான்தான் சொல்றேனே, இன்னிக்குவிடுமுறைன்னு!”

டில்லி நிருப‌ர்க‌ளிருவ‌ரும் அப்போதே புற‌ப்ப‌ட‌ விரும்பினார்க‌ள், தேஷ்பாண்டேக்கும் த‌ங்க இஷ்ட‌மில்லை. அவ‌ர்எடுத்த‌ போட்டோக்க‌ளை உட‌னே விற்காவிட்டால் அவ‌ற்றுக்குக் கிராக்கி போய்விடும்.

கடைசியில் நான்கு பேர் போய்விட்டார்கள். பாக்கி நான்கு பேர் தங்கினார்கள். அவர்களைக் கூட்டிச்செல்ல வண்டி மறுபடிவரும்.

அவர்கள் வராந்தாவில் சாய்வு நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள். லாகிரி மறுபடியும் தன் டம்ளரில் விஸ்கி ஊற்றிக்கொண்டு மற்றவர்களின் டம்ளர்களிலும் ஊற்றினார். ஆல்கஹால் இப்போது அவருடைய இரத்தத்தில் கலந்துவிட்டது. அது இரத்தக்குழாய்களில் இரத்தத்தோடு கூடவே ஓடுகிறது. லாகிரி படபடக்கிறார். நாற்காலியிலிருந்து எழுந்திருக்கிறார். சிறிது நேரம்உலவுகிறார், பிறகு மறுபடி உட்காருகிறார். பதைபதைக்கும் வெயில். இந்த வெயில் காற்று வீசும்போது ஒரு விசித்திரமானஒலி உண்டாகிறது. அத்தகைய காற்று காட்டுப் பக்கத்திலிருந்து வீசுகிறது.

கிணற்றிலிருந்து தண்ணீரெடுத்துப்போக இன்னும் நிறையப் பேர் – ஆண்களும் பெண்களும் – வந்து கொண்டிருக்கிறார்கள்.ராட்டினத்தின் ‘கடகட’ ஒலி, கூடவே புரியாத மொழியில் அவர்களுடைய மொழியில் சண்டை…

லாகிரி தன் தோழர்களிடம் சொன்னார், “ஏன் பேசாம உக்காந்திருக்கீங்க? ஏதாவது பேசுங்களேன்! ஏ ரங்காச்சாரி!ரஷியாவுக்குப் போயிட்டு வந்தியே, அங்கே பொம்பளைங்க கிடைப்பாங்களா? எப்படி இருப்பாங்க?”

“எனக்குத் தேடிக் கண்டுபிடிக்க நேரம் கிடைக்கலே. ரொம்ப டைட் புரோகிராம்” என்று ரங்காச்சாரி சோம்பல் முறித்துக்கொண்டு சொன்னார்.

“நீ பொம்பளை தேடலைன்னு சொன்னா நான் நம்பிடுவேனா? நீ ஜெர்மனிக்குப் போயிருந்தபோது என்னநடந்தது? அந்தக் கதையைத்தான் சொல்லேன்!”

“நீங்களே சொல்லுங்க?”

“நான் என்ன சொல்றது..? கிருதாவெல்லாம் நரைச்சுப்போச்சு, இனிமேல்.. ஏ அருண்! நீதான் இளவட்டம். கலியாணமும்பண்ணிக்கல்லே. ஒன் காதல் கதை ஒண்ணு ரெண்டு சொல்லேன்!”

“லாகிரி அண்ணா, ஒங்க ஸ்பெயின் காதல் கதையைச் சொல்லுங்களேன்!”

ராம் யஷ்சிங் மிகவும் சீரியஸ் தன்மையுள்ளவர். யாரையாவது பேட்டி காணும்போது தவிர வேறு சமயங்களில் வாயைத் திறக்கமாட்டார். மது அருந்தும்போது கூடப் பேச மாட்டார். ரங்காச்சாரி அவரிடம் கிசுகிசுத்தார், “பீகார் ஜனத்தொகையிலேஎவ்வளவு சதவிகிதம் பஞ்சத்துக்கு உள்ளாயிருக்காங்க?”

“இதுவரையில் அம்பத்தி நாலு சதவிகிதம்” என்று சுருக்கமாகப் பதிலளித்தார் சிங்.

“பட்டினிச் சாவு எவ்வளவு?”

“அதிகார பூர்வமா செய்தியெதுவுமில்லே. அதிகாரப்பூர்வமில்லாத செய்திகள் படி..”

லாகிரி அதட்டினார், “மறுபடியும் அந்தப் பேச்சா! நீங்க என்னைப் பைத்தியமாக்கிடுவீங்க போலேருக்கே! இன்னிக்குவிடுமுறைன்னு நான் சொல்லலே..? ஒருநாள் கூட வேலைய மறந்துட்டு இருக்க முடியாதா ஒங்களாலே?”

“மிஸ்டர் லாகிரி! இது வேலை சம்பந்தப்பட்ட விஷயம்..”

“வாயை மூடு! ஒரு விளக்கமும் கேக்கத் தயாரில்லே நான்!”

“போதையிலே இருக்கறவறோடு வாதம் பண்ணிப் பிரயோசனமில்லே..”

“நான் ஒண்ணும் போதையிலே இல்லை..! பொறத்தியான் காசிலே கோழியை அடிச்சுத் தின்னுட்டு இப்போ மனிதன்மேலே அக்கறையாம்! ஹம்பக்! இப்போ பொம்பளைகளைப் பத்திப் பேசலாம். மது, இறைச்சிக்கப்பறம் பொம்பளைகளைப்பத்திப் பேசறதுதான் பொருத்தம்.”

“நீங்க சொல்லுங்களேன்! நாங்கள் கேக்கத் தயார்.”

“போன வருஷம் ஜனவரி மாசம். நான் அப்போ மாட்ரிட்லே இருந்தேன். ஓட்டல்லே ராத்திரி திரும்பிக் கதவைத் தட்டினேன்.உள்ளே ஒரு பொம்பளை தொட்டியிலே குளிச்சுக்கிட்டிருந்திருக்கா. நான் கதவைத் தட்டினதும் உடம்பிலே ஒரு டவலைச் சுத்திக்கிட்டு.. அப்போ எனக்கு நல்ல போதை.. பாரு, ரங்காச்சாரி தூங்கிக் கிட்டிருக்கான்..! ஏ ரங்காச்சாரி..!”

ரங்காச்சாரி குறட்டை விடும் ஒலி கேட்டது. லாகிரி உரக்கக் கூப்பிட்டு அவரை எழுப்பப் பார்த்தார். ரங்காச்சாரிஅசையவில்லை. லாகிரி எழுந்து தள்ளாடிக்கொண்டு ரங்காச்சாரியின் தலைமுடியைப் பிடித்து, “ஏ ரங்காச்சாரி!” என்றுசொல்லி எழுப்பினார்.

ரங்காச்சாரி திடுக்கிட்டு எழுந்து கொண்டு, “தூக்கம் வந்திடுச்சு.. பாருங்க, கேம்காவும் தூங்கறார்!” என்றார்.

“இந்த ராஸ்கல் கேம்காவைப்பத்தி ருஸ்தம்ஜீகிட்டே புகார் பண்ணப்போறேன்! (எழுதமுடியாத வசவு) கேம்கா!”

கேம்கா கண்களைத் திறந்து சொன்னார், “நான் தூங்கலே. கண்ணை மூடிக்கிட்டு கேட்டிட்டு இருக்கேன். நீங்க சொல்லுங்க..அப்பறம் அந்தப் பொம்பளை உடம்பிலே டவலைச் சுத்திகிட்டு..”

“நான் ஒரே இழுப்பிலே அந்த டவலைப் பிடிச்சு இழுத்துட்டேன், ஆகா, என்ன அழகு, சாட்சாத் தேவதைதான்போங்க..! நான் பந்தயம் வைக்கத் தயார்.. அந்த மாதிரி அழகி கோடிப் பேரிலே ஒருத்தி இருக்க மாட்டா! கத்தி மாதிரிபளபளக்குது உடம்பெல்லாம். மார்பு ரெண்டும் காரோட ஹெட்லைட் மாதிரி! அவ தொடை ஆகா..! முதல்ல அவஎன்ன சொன்னா தெரியுமா?”

யார் பதில் சொல்வது? மூவர் தூங்கிவிட்டார்கள் அவர்களிடமிருந்தது புஸ்புஸ் என்று மூச்சு வந்து கொண்டிருந்தது.அவர்களுடைய தலைகள் சாய்ந்திருந்தன.

விழித்திருந்தது அருண் மட்டுந்தான். அவர் மெல்லச்சிரித்தார்.

லாகிரியின் முகத்தில் வேதனை தெளிவாகத் தெரிந்தது. அவர் கண்களை அகல விரித்துக்கொண்டு சொன்னார், “தூங்கிப்போயிட்டாங்களா? சீ, இவங்களெல்லாம் ஆம்பளைங்களா? பொம்பளைக் கதை கேட்டுக்கிட்டே தூங்கிட்டாங்களே! மனிதன்மேலே அக்கறையாம், அக்கறை..! ராஸ்கல்கள்..!”

“என்கிட்டே சொல்லுங்க, லாகிரி அண்ணா! அந்தப் பொம்பளை என்ன சொன்னா?”

“நீ கேக்கறியா..? என் கையிலே டவல். அவ கடகடன்ன சிரிச்சுட்டுச் சொன்னா, ‘என் முதுகு ஈரமாயிருக்கு. தொடைச்சுவிடு..!’ அப்போ நான் .. தூ.. எனக்கு ஒண்ணும் பிடிக்கலே மூணு பேர் குறட்டை விட்டுக்கிட்டிருக்காங்க. இருக்கு நடுவிலே இந்தமாதிரிக் கதையெல்லாம் சொல்ல முடியாது! வா எழுந்திரு! கொஞ்சம் வெளியே சுத்திட்டு வரலாம்..”

“இந்த வெயில்லே எங்கே போறது? உக்காருங்க சும்மா! லாகிரி அண்ணா, நீங்க பொறந்தது எங்கே?”

“அலகாபாத்திலே, என்னோட அப்பா அங்கே பேராசிரியராய் இருந்தார்.. ஏன், ஒனக்கெதுக்குத் தெரியணும்?”

“சும்மாதான் கேட்டேன்..”

“அந்த விஸ்கி பாட்டிலை இங்கே கொண்டு வா! வேண்டாம். இப்போ குடிக்கப் பிடிக்கல்லே. இப்போ என்ன செய்யலாம்சொல்லு!”

“நீங்களும் ஒரு தூக்கம் போடுங்களேன்!”

“நடுப்பகல்லே தூங்கிகககிட்டு இருக்கறதா? தூ..! அதைவிடப் புறப்பட்டுப் போயிருக்கலாம். ஹூம், இந்தக் குறட்டைவிடறஎருமை மாடுகளோட இருக்கறதைவிட.. நீ இப்போ என்ன செய்யப்போறே?”

“ஒண்ணுமில்லே சும்மா உக்காந்திருக்கப் போறேன்.. இங்கே வந்ததிலே எனக்கு ரொம்ப விஷயம் ஞாபகம் வருது..”

“என்ன விஷயம் காதலா?”

“அதெல்லாமில்லே. நான் பிறந்தது கிழக்கு வங்காளத்திலே, 1943-லே அதாவது வங்காளப் பஞ்ச சமயத்திலே அங்கேதான்இருந்தேன். அந்தக் காலத்த ஞாபகமெல்லாம் வருது..”

“அப்போ நீ சின்னப்பையனா இருந்திருப்பே இல்ல!”

“ஆமா.. அப்போ எனக்கு எப்போதும் பசிக்கும். நாள் பூராப் பசிபசின்னு அழுதுக்கிட்டிருப்பேன். வீட்டிலே உள்ளவங்களுக்கு ரொம்பத் தொந்தரவு கொடுத்திருக்கேன்..”

“நாசமாப் போச்சு! இங்கே வந்து அதெல்லாம் ஏன் ஞாபகம் வருது ஒனக்கு?”

“நாங்க கிழக்கு வங்காளத்திலே இருந்தோம். அப்பா கல்கத்தாவிலே வாத்தியார் வேலை பார்த்துக்கிட்டிருந்தார். அந்தக்காலத்துச் சமாசாரந்தான் ஒங்களுக்குத் தெரியுமே! அப்பா மாசம் இருவது ரூவா அனுப்புவார். அப்போ எங்கள் ஊரிலேஒரு மணு அரிசி அம்பத்தாறு ரூவா! வீட்டிலே அஞ்சு பேர் கஞ்சியும் சோறுமாக் கலந்து ஒரு நிளைக்கு ஒரு வேளைதான்சாப்பாடு. தொட்டுக்க வேகவச்ச உருளைக்கிழங்கு, நான் பள்ளிக் கூடம் போகும்போது சட்டைப்பையிலே வேகவச்ச உருளைக்கிழங்கை எடுத்துக்கிட்டுப் போவேன். அங்கே போய் அதைச் சாப்பிடுவேன். அப்போ நான் நாலாங்கிளாசிலே படிச்சுக்கிட்டிருந்தேன். பசங்களும் வேகவச்ச உருளைக் கிழங்கு கொண்டு வருவாங்க. நாங்க பெஞ்சிமேல் உப்பை வச்சிக்கிட்டு அதிலேஉருளைக் கிழங்கைத் தொட்டுக்கிட்டுச் சாப்பிடுவோம். இது என் வயித்துக்கு ஒத்துக்காது, கஞ்சியும் சோறும் வயித்துக்கு ஒத்துக்காது,இருந்தாலும் பசி.. அம்மாவைத் தொந்தரவு பண்ணுவேன் அம்மா சாப்பிட உக்காந்தா அவளோட சோத்தையும் பிடுங்கித்தின்னுடுவேன்..”

லாகிரி காரணமில்லாமலேயே தலையை ஆட்டிக்கொண்டு, “புரியுது, புரியுது” என்று சொன்னார். பிறகு எழுந்து வராந்தாவின்மறுமூலைக்குப்போய் வேறுபக்கம் பார்த்தவாறே சொன்னார், “புரியுது.. ஒன்னோட அம்மா இறந்து போயிட்டாங்க, இல்லையா?”

“அம்மா அந்த வருஷமே டி.பி.யிலே இறந்து போயிட்டாங்க.. ராட்சசப் பசி எனக்கு. திங்கற சோறு வயித்துக்கு ஒத்துக்காட்டியும்அம்மா சோத்தையும் பிடுங்கிச் சாப்பிட்டுடுவேன். அம்மா யார் கிட்டேயும் ஒண்ணும் சொல்லாமே பட்டினி கிடப்பாங்க.அதிலருந்து அவங்களுக்கு டி.பி. வந்துடுச்சு. அப்போ எனக்கு ஒண்ணும் தெரியல்லே. இப்போ எல்லாம் ஞாபகத்துக்கு வருது.நேத்திக்கு அந்த உதவி முகாமிலே ஜனங்க சோத்துக்காக வரிசையா நிக்கறதைப் பார்த்து மனசுக்கு என்னவோ மாதிரிஆயிட்டது. ஒரு விதத்திலே வேடிக்கையாக்கூட இருந்தது எனக்கு. இந்த மாதிரியான ஒரு நிலைமையிலேருந்து நான் எப்படியோதப்பிப் பொழைச்சிட்டேன்னு ஆச்சரியப்பட்டேன்.. ”

“வேடிக்கையா? என்ன வேடிக்கை? இதென்ன வேடிக்கையான விஷயமா?” லாகிரி அதட்டினார்.

அதே மர்மப் புன்சிரிப்போடு அருண் சொன்னார், ” ஆமா, வேடிக்கைதான்! அந்தப் பஞ்சத்திலே நானும் செத்துப் போயிருக்கலாமே! ஆனால் நான் சாகலே. என் அம்மாவைச் சாகடிச்சுட்டு நான் பொழைச்சுக்கிட்டேன்.. உசிரோட இருக்கிறதே ஒருவேடிக்கையான விஷயமில்லையா?”

லாகிரி சிகரெட்டின் கடைசித் துண்டைத் தன் விரலில் வைத்து ஒரு சொடுக்கில் அதை விட்டெறிந்தார். பிறகு பையில்கையைவிட்டு அதிலிருந்த சில்லறைகளைக் குலுக்கினார். ஒரு கையைத் தன் தலைமுடியில் வைத்தார். பிறகு திடீரென்றுவராந்தாவிலிருந்து கீழே குதித்து ஒரு பூவைப் பறித்தார். உரத்த குரலில் சொன்னார், “அருண், நீ உள்ளே போய்க் கதவையெல்லாம்சாத்திக்கிட்டு இருட்டிலே கொஞ்சநேரம் படுத்துக்க. மனசுக்கு இதமாயிருக்கும்..”

அருண் லாகிரியின் செயல்களைப் பார்த்துக்கொண்டு, “இல்லையில்ல, இங்கேயே நல்லாத்தான் இருக்கு எனக்கு..”என்று சொன்னார்.

லாகிரி கிணற்றுப் பக்கம் போய், அங்கே குடத்தை நிரப்பிவிட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம்,”கொஞ்சம் தண்ணி கொடும்மா, மூஞ்சி கழுவிககறேன்” என்றார்.

அந்தப் பெண் லாகிரியின் போதையேறிய சிவந்த கண்களைப் பார்த்துச் சற்றுத் தயங்கி நின்றாள். பிறகு தன் இடுப்பிலிருந்துகுடத்தைச் சாய்த்துக் கொஞ்சம் தண்ணீர் ஊற்றினாள். லாகிரி தன் கைகளில் தண்ணீரை ஏந்தி முகத்தில் இறைத்து முகத்தைக்கழுவிக் கொண்டார். பிறகு இன்னுங் கொஞ்சம் தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்தார். பிறகு அந்தப் பெண்ணிடம், ” இரு,நான் குடத்தை ரொப்பிக் கொடுக்கறேன்” என்று சொன்னார்.

பிறகு அவர் விடுதியின் பணியாளிடம் சொன்னார், “நீ போ. நானே இவங்க எல்லாருக்கும் தண்ணி இறைச்சக் கொடுக்கறேன்.”

கிணற்றுக்குள்ளே எட்டிப் பார்த்தார் லாகிரி. தண்ணீர் மிகவும் கீழேதானிருந்தது. அதனால் பரவாயில்லை. எவ்வளவுஇறைத்தாலும் தண்ணீர் தீர்ந்துபோய்விடாது..

(தேர்ந்தெடுக்கபபட்ட கதைகள், 1972)

வங்கச் சிறுகதைகள்
தொகுப்பு : அருண்குமார் மகோபாத்யாய்
வங்கத்திலிருந்து தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா

நன்றி: http://www.projectmadurai.org/

சுநீல் கங்கோபாத்தியாய் (1934 -)
பிறப்பு ஃப்ரீத்பூரில். கவி கதாசிரியர், தேஷ் பத்திரிகையில் வெளியான ஏக்டி கவிதா என்ற கவிதை மூலம் அறிமுகமானவர். ஜனங்களால் அதிகம் நேசிக்கப்படுபவர். கவி சுநீலா, கதாசிரியர் சுநீலா என்று சொல்வது கடினம். பலவகைப் பணிகளுக்குப்பின் தற்போது கல்கத்தாப் பத்திரிகையொன்றில் பணி புரிகிறார். 1960-ம் ஆண்டு அமெரிக்கப் பயணம் செய்தார். நிறைய எழுதிகிறார். சிலகதைகள் திரைப்படமாக்கப் பட்டுள்ளன். பரிச்சயமான நடுத்தர மக்களின் வாழ்க்கையின் பலதிறப்பட்ட உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் திறமையாகவும் மனதைக் கவரும் முறையில் சித்திரிக்கிறார். மொழியில் நளினம், சொல்லும் முறையில் அழகு, கதையின் ஈர்ப்புத்திறன் – இவையெல்லாம் இவரை மக்களின் அபிமான எழுத்தாளராச் செய்துள்ளன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *