கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 13,651 
 

சபூரா பீவிக்கு உடம்பு முழுக்க ரணமாக வலித்தது. உடல் நெருப்பாய்க் கொதித்தது. அவளால் உட்கார்ந்து பீடி சுற்ற முடியவில்லை. எட்டாவது படிக்கும் மகள் வஸீலாவை அழைத்துக்கொண்டு மெடிக்கல் ஷாப்பிற்குச் சென்று விபரத்தைச் சொல்லி மாத்திரைகள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தாள்.

இப்போதெல்லாம் அடிக்கடி இதுபோல் சுகவீனம் ஏற்பட்டு விடுகிறது. இரண்டு கால்களும் கடுமையாக வலித்தன. தலைவலி வேறு பிராணனை வாங்கியது. பீடித்தட்டை மடியில் வைத்து பீடி சுற்ற ஆரம்பித்தாள். ஆனால் உடல் வலியைச் சமாளிக்க முடியவில்லை. நன்றாகக் கால்களை நீட்டிப்படித்து உறங்க வேண்டும் போல் இருந்தது.

சனிக்கிழமையை நினைத்தால்தான் கவலையாக இருந்தது. வாரக்கடைசி நாள். இரண்டாயிரம் பீடிகளைச் சுற்றி மதியம் மூன்று மணிக்குள் பீடிக்கம்பெனியில் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும். அதை நினைத்தால் கலக்கமாக இருந்தது.

அவள் கணவன் சலீம் உள்ளூரில் வேலை பார்த்தவரை அவளுக்கு உதவி ஒத்தாசையாக இருந்தது. இதுபோன்ற தருணங்களில் கூடமாட உதவி செய்வான். இலை நறுக்கிக் கொடுப்பான். சுற்றிய பீடிகளை அடுக்கிக் கட்டுகளாக கட்டிக் கொடுப்பான். அவன் யூனியன் ஈடுபாடுகளில் தீவிரம் காட்டிய காரணத்தால் கம்பெனி நிர்வாகம் அவனைக் களக்காட்டுக்கு மாற்றல் செய்துவிட்டது.

வாரம் ஒருமுறைதான் சனிக்கிழமை இரவு வீட்டுக்கு வருவான். ஞாயிறன்று விடுமுறையில் வீட்டிலிருந்து விட்டு திங்கட்கிழமை காலை களக்காட்டுக்குப் போய்விடுவான். இப்போதெல்லாம் மகள் வஸீலாதான் சபூரா பீவிக்கு உதவி ஒத்தாசை எல்லாம். பள்ளிக்கூடம் போய்விட்டு வந்து அம்மாவுடன் சேர்ந்து பீடி சுற்றுவாள். படிப்பிலும் கெட்டிக்காரி. வேலையிலும் திறமைசாலி. தாயும் மகளுமாகச் சேர்ந்து தினமும் இரண்டாயிரம் பீடி சுற்றி விடுவார்கள்.

நறுக்கிப்போட்ட பீடி இலை குவியலாகக் கிடந்தது. எப்போதும் நறுக்கிய இலை முழுவதையும் இருவரும் உட்கார்ந்து பீடியாகச் சுற்றிப் போட்டு விட்டுத்தான் உறங்கப் போவார்கள். ஆனால் இன்று சபூரா பீவியால் உட்கார்ந்து பீடி சுற்ற முடியவில்லை. உடம்பு முழுக்க அடித்துப் போட்ட மாதிரி வலி எடுத்தது. இருமல் வேறு அவளை வாட்டி வதைத்தது. அம்மா படும் அவஸ்தையைக் காணப் பொறுக்காமல், “அம்மா நீ மாத்திரையைச் சாப்பிட்டுவிட்டுப் போயிப் படுத்துத் தூங்கு. நான் இருந்து பீடி சுத்துறேன்” என்று வஸீலா கூறி அம்மாவை ஓய்வெடுக்கச் சொன்னாள்.

சபூரா, ‘லொக் லொக்’ என இருமிக்கொண்டே, ‘”வஸீலா எலை நனைச்சு வைக்கணுமே” என்றாள்.

“சரிம்மா, அதெல்லாம் நான் பாத்துக்கர்றேன். நீ போய்ப் படு” அம்மாவைப் படுக்கச் சொல்லிவிட்டு வஸீலா பீடித்தட்டை மடியில் வைத்து குவிக்கப்பட்டுக் கிடந்த நறுக்கிய பீடி இலைகளை எடுத்து பீடி சுற்றத் தொடங்கினாள்.

சபூரா பீவி முணங்கிக் கொண்டே ஒடுங்கிப் படுத்துக் கொண்டாள். வஸீலா இரவில் வெகுநேரம் வரை உட்கார்ந்து பீடி சுற்றினாள்.

பள்ளிக்கூடத்தில் கொடுத்த வீட்டுப் பாடங்கள் அவளைப் பயமுறுத்தியது. சபூரா பீவி நன்றாக உறங்கிப் போனாள். வஸீலாவுக்கு கொட்டாவி வந்தது. கண்கள் செருகின. படுத்து உறங்கினால் தேவலாம்போல் இருந்தது.

மணி 11ஐத் தாண்டிவிட்டது. நறுக்கி வைத்த இலை முழுவதையும் சுற்றிவிட வேண்டும் என்று முயன்று பார்த்தாள். முடியவில்லை. பீடித்தட்டை மடியில் இருந்து இறக்கி தரையில் வைத்தாள். மீதமாகிப் போயிருந்த நறுக்கிய பீடி இலைகளை வீட்டில் பரப்பிப் போட்டாள். அப்படியே ஈரத்துடன் வைத்தால் ஈரம் பட்ட இலை பூசணம் பிடித்துப் புளுத்துப் போகும். பீடி சுற்ற உதவாது. காற்றில் ஈரம் உலர வசதியாக இலைகளைப் பிரித்துப் போட்டாள். இலை நனைக்க அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. மறுநாள் பீடி சுற்றத் தேவையான முழு இலைகளை எடுத்து பக்கெட்டில் தண்ணீர் வைத்து நனைத்து வைத்தாள். இரவிலே இலையை நனைத்து வைத்தால்தான் காலையில் நன்றாகப் பொதுமிப் போயிருக்கும். எளிதாக நறுக்கி பீடியாகச் திரட்ட முடியும். எல்லாவற்றையும் ஒதுங்க வைத்துவிட்டு அவள் அம்மா அருகில் படுத்துக் கொண்டபோதுதான் வீட்டுப் பாடங்கள் படிக்க வேண்டிய ஞாபகம் தலை நீட்டியது. காலையில் எழுந்து பார்த்துக்கொள்ளலாம் என உறங்கிப் போனாள்.

***

சபூரா பீவி விழித்துப் பார்த்தாள். நன்றாக விடிந்து விட்டிருந்தது. கடிகாரத்தைப் பார்த்தாள். மணி 6.30. திடுதிப்பென்று படுக்கையில் இருந்து எழுந்து கொண்டாள். சனிக்கிழமை மீண்டும் நினைவுக்கு வர கவலை தொற்றிக் கொண்டது. சனிக்கிழமை வாரக் கூலி நாள். மதியம் 3 மணிக்குள் இரண்டாயிரம் பீடிகளைச் சுற்றி முடித்து கம்பெனியில் கொண்டு போய் ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் சூப்பர்வைசர் திட்டுவான். மறுநாளைக்கு பீடி சுற்ற இலைத்தூள் தரமாட்டான். கூலியும் கொடுக்க மாட்டான். அந்த வாரம் அடுப்பு பற்ற வைக்க படு கஷ்டமாகி விடும். இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது அவள் உடல்வலியெல்லாம் எங்கோ தொலைந்து போனதாகச் தோன்றியது.

மகள் வஸீலா அசதியில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். மகளை உசுப்பி விட்டாள். இரவில் மீதமாகிப் போயிருந்த நறுக்கிய பீடி இலை வீடு முழுக்கப் பரவிக் கிடந்தது. அவைகளைப் பொறுக்கி எடுத்து ஒரு பெட்டியில் போட்டாள். வஸீலா எழுந்து வந்தாள்.

“வஸீலா நீ இன்னைக்கு பள்ளிக்கூடம் போக வேண்டாம். லீவு போட்டுவிட்டு பீடி சுத்து. நீ கூட இருந்து சுத்துனாதான் முழுசா ரெண்டாயிரம் பீடியையும் சுத்தி முடிக்க முடியும்” அம்மா சொன்னதைக் கேட்டதும் வஸீலாவுக்கு தூக்கி வாரிப் போட்டது.

அவள் படிப்பில் கெட்டிக்காரி. ஏழாவது படிக்கும்போது வஸீலா வயதுக்கு வந்து விட்டாள். சுந்தரி டீச்சர் அக்கறையோடு வீட்டுக்கு வந்து, “வஸீலா படுசுட்டிப் பொண்ணு. கிளாஸில் முதலாவதாக வருகிறாள். உக்காந்து விட்டாள் என்று சொல்லி அவள் படிப்புக்கு முழுக்குப் போட்டுவிடாதீர்கள். விசேஷமெல்லாம் முடிச்சிட்டு கண்டிப்பாய் ஸ்கூலுக்கு அனுப்புங்கள்” என்று சபூராபீவியிடம் அன்புக் கட்டளையிட்டுச் சென்றதை இன்னும் வஸீலாவால் மறக்க முடியவில்லை. நன்றாகப் படித்து சுந்தரி டீச்சரைப் போல் வரவேண்டும் என்ற குறிக்கோள் வஸீலாவின் மனதில் வேரூன்றி நின்றது. அவள் வாப்பா சலீமும் வஸீலாவை டீச்சருக்கு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தான்.

பீடி சுற்றுவதற்காக பள்ளிக்கூடத்துக்கு லீவு போடுவதை நினைத்தபோது வஸீலாவுக்கு எரிச்சலாக இருந்தது. கோபம் கோபமாக வந்தது. சுதாரித்துக்கொண்டு, “அம்மா லீவு போட்டா டீச்சர் திட்டுவாங்க” தயங்கியபடி சொன்னாள்.

“ரெண்டாயிரம் பீடி சுத்தி மூணு மணிக்குள்ளாரக் குடுக்கலைன்னா சூபர்வைசர் திட்டுவான். தூள் தரமாட்டான். துட்டும் தரமாட்டான். பேசாம லீவு போட்டுட்டு தட்ட வச்சு பீடிய சுத்து. திங்கட்கிழமை ஸ்கூலுக்கு போயிக்கலாம்” சபூரா பீவி மகளைச் சாந்தப்படுத்த சர்வசாதாரணமாகச் சொல்லிவிட்டுச் சென்றாள். அது கேட்ட வஸீலாவுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. ஆதங்கத்தை வெளிப்படுத்த முடியாமல் அடக்கிக்கொண்டு கருவினாள்.

சபூரா பீவி நனைத்து வைத்த இலைகளை எடுத்து வந்தாள். கையில் ஒர் ஆஸ் வைத்து இலைகளை ஆஸ் அளவுக்கு தகுந்தாற்போல் கத்தரிக்கோலால் கத்தரித்துப் போட்டாள். வஸீலா இரவில் மீதமாகிப் போயிருந்த நறுக்கிய இலைகளை எடுத்து இலேசாகத் தண்ணீரில் நனைத்து நன்றாகத் தெளித்துவிட்டுப் பீடித்தட்டில் வைத்துப் பீடி சுற்ற ஆரம்பித்தாள். காலையில் வெறும் வயிற்றில் இதுபோல் பீடித்தட்டை மடியில் வைத்தாலே புகையிலை நெடி அவள் நாசியில் சுர்ரென்று ஏறிக் குமட்டல் வந்து விடுகிறது. வாந்தி வருவது போல உணர்வு ஏற்படும். ஆனால் வாந்தி வராது. புகையிலை நெடியைக் கண்டாலே ஒரு அலர்ஜி ஏற்பட்டு விடுகிறது. கொஞ்சநேரம் கழிந்த பின் நெடி சிறிது சிறிதாகக் குறைந்து அவளால் சகஜ நிலைக்கு வர முடிகிறது. நெடி நாசியில் ஏறியவுடன் குமட்டல் ஏற்பட்டு தும்மலும் ஒருவகை அலர்ஜியும் ஏற்படுவதை ஒருமுறை வஸீலா அவள் அம்மாவிடம் சொன்னாள். அதற்கு சபூரா பீவி, “அதெல்லாம் ஒண்ணும் பண்ணாது. நெடியாவது மடியாவது. போகப் போக பழகிவிடும். நாம பழகிக்கணும். இல்லேண்ணா நம்ம பொழப்பு நாறிடும்” என்று நறுக்கென்று பதில் சொன்னாள். அதனால் அம்மாவிடம் இப்போதெல்லாம் இதுபற்றிப் பேசுவதே கிடையாது. அம்மா சொன்னதுபோலவே புகையிலை நெடி இப்போது பழகிப் போய்விடது. காலையில் வெறும் வயிற்றில் பீடி சுற்றும்போது மட்டும் முதலில் அந்த நெடி நாசியைத் துளைக்கும். கொஞ்சநேரம் ஆகிப்போனால் நெடியும் பழகிப் போய்விடும். குமட்டல் வருவதும் குறைந்து பின் மறைந்தே போகும்.

அம்மாவும் மகளும் உட்கார்ந்து பீடி சுற்றி முடிப்பதிலேயே குறியாய் இருந்தார்கள். சபூரா பீவியைக் கொஞ்ச நேரத்துக்கொருமுறை இருமல் உலுக்கியெடுத்துக் கொண்டேயிருந்தது.

கடிகாரம் மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. சபூரா பீவி சுற்றிய பீடிகளை ஒழுங்குமுறையில் அடுக்கி 25 பீடிகளாக எடுத்துக் கட்டு போட்டாள். கட்டுகளை எண்ணி பெட்டியில் அடுக்கி வைத்துக்கொண்டாள். அவசர அவசரமாகத் துணி மாற்றிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக பீடிப்பெட்டியுடன் கம்பெனி நோக்கி விரைந்தாள். மூச்சு இரைத்தது. ஒருவழியாகச் சரியான நேரத்துக்குக் கம்பெனியில் பீடியை ஒப்படைத்த பின்னர்தான் அவளுக்கு உயிரே வந்தது போலிருந்தது.

சூபர்வைசர் பீடிகளைக் கையில் எடுத்து ஒரு கட்டைப் பிரித்துப் பார்த்தான். “பீடி வாய் ஒண்ணுபோல இல்லயே..” என்று குறை சொல்லிக்கொண்டே அந்த பீடிக்கட்டை ஒடித்துப் போட்டான். சபூரா பீவிக்கு நெஞ்சமே வெடித்து விடும் போலிருந்தது. வஸீலா புதிதாகப் பீடி சுற்றப் பழகியிருப்பவள். சித்திரமும் கைப்பழக்கம்தானே. சூபர்வைசர் மீண்டும் பீடிகளைக் கிளறிப் பார்த்துவிட்டு இரண்டு கட்டு பீடிகளை ‘சுற்று சரியில்லை’ என்று என்று கூறி கழித்துப் போட்டான். சபூராபீவி சூபர்வைசரை மனதிற்குள் திட்டித் தீர்த்தாள். கூலியை வாங்கிக்கொண்டு மறுநாள் வேலைக்கு வேண்டிய இலைத் தூள்களைப் பெற்றுக்கொண்டு கம்பெனியை விட்டு வெளியே வந்தாள்.

அவளுக்கு உடல் முழுவதும் புண்ணாக வலித்தது. தலை விண் விண் எனத் தெறித்தது. மீண்டும் உடம் முழுக்க அனலாய்த் தகித்தது. பீடி சுற்றிக் கொடுக்க வேண்டும் என்ற கட்டத்தில் இருந்ததால் என்னவோ இந்த அவஸ்தைகள் அவளுக்கு தெரியாமல் இருந்தன. மிகவும் சிரமப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். பாயை விரித்துச் சுருண்டு படுத்துக் கொண்டாள். உடல் நடுங்கியது. இருமல் தொடர்ந்து தொல்லை தந்தது. வஸீலா பயந்து போய்விட்டாள். பக்கத்து வீட்டில் சென்று பல்கீஸ் மாமியை அழைத்து வந்தாள். சபூரா பீவி போர்வையால் இழுத்து நன்றாகப் போர்த்திக்கொண்டு முனகியபடிக் கிடந்தாள்.

***

பல்கீஸ் மாமி சபூரா பீவியின் கையைத் தொட்டுப் பார்த்தாள். முகத்தில் கை வைத்துப் பார்த்தாள். நெருப்பாய்ச் சுட்டது. வஸீலா வீட்டில் செய்த கஞ்சியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வந்து அம்மாவுக்குக் கொடுத்தாள். மிகவும் பிரயத்தனப்பட்டு எழுந்து உட்கார்ந்த சபூரா பீவிக்கு கஞ்சியை வாயில் வைத்தவுடன் குமட்டல் வந்தது. குடிக்க முடியவில்லை. அப்படியே வைத்துவிட்டுப் படுத்துக்கொண்டாள். வஸீலா கண்கள் சிவந்து கவலைப் பட்டாள். தனிமையில் அமர்ந்து அழுதாள். பல்கீஸ் மாமி தேற்றினாள்.

சலீம் இரவில் வீட்டுக்கு வந்தபோது சபூரா பீவி முடங்கிக் கிடப்பதையும் வஸீலா கண்ணை கசக்கிக்கொண்டு நிற்பதையும் பார்த்தாள்.

“வாப்பா, அம்மாவுக்கு உடம்புக்கு ரொம்ப முடியல்லே. மாத்திரை போட்டும் கேக்கல்லே” வஸீலா அழுதுகொண்டே சொன்னாள். சலீம், சபூராவின் கையைத் தொட்டுப் பார்த்தான். அவளுக்கு மூச்சு வாங்கியது. மூச்சு விடும்போது கீர் மூர் எனச் சத்தம் வந்தது. நெஞ்சில் நிறைய சளி உறைந்து நிற்க வேண்டும். டாக்டரிடம் கூட்டிச் சென்றான்.

டாக்டர் சபூரா பீவியைப் பரிசோதனை செய்தார். எக்ஸ்ரே எடுத்து வரச்சொன்னார். ஸ்கேன் பார்க்கச் சொன்னார். ரத்தம், சளி, நீர் என்று எல்லாவற்றையும் டெஸ்ட் எடுக்கச் சொல்லி பேப்பரில் எழுதிக் கொடுத்தார். டாக்டர் சீட்டுகளுக்கு இந்த வாரம் வாங்கி வந்த கூலி இரையாகிக் கொண்டிருந்தது.

டாக்டர் டெஸ்ட் ரிப்போர்டைப் படித்துப் பார்த்தார். எக்ஸ்ரேயை மேலும் கீழும் திருப்பித் திருப்பிப் பார்த்தார். டாக்டர் சொல்லப் போவதைக் கேட்க சலீம் நாற்காலியின் நுனிக்கு வந்து விட்டான். டாக்டர் கண்ணாடியைக் கழற்றிவிட்டுப் பேசத் துவங்கினார்.

“நீங்க என்ன வேலை பாக்குறீங்க?’ சலீமிடம் கேட்டார்.

“பீடிக் கம்பெனியில் வேலை பாக்குறோம் சார்.”

டாக்டர் சங்கடப்பட்டு நெளிந்து கொண்டார்.

“ஒங்க மனைவிக்கு டி.பி. அட்டாக் ஆகியிருக்கு. ஆரம்ப ஸ்டேஜ்தான். பயப்படும்படி இல்லே. மாத்திரை மருந்துல குணமாயிடும். ஆனா கொஞ்ச காலத்துக்கு பீடி சுற்றக் கூடாது. நல்லா ரெஸ்ட் எடுக்கணும்” டாக்டர் சொன்னதைக் கேட்ட சலீமுக்கு அதிர்ச்சியாக இருந்தது. உலகமே இருண்டு போனதாக உணர்ந்தான். கனத்த இதயத்தோடு டாக்டரிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியில் வந்தான். எதிர்காலம் வெறும் சூன்யமாகத் தெரிந்தது. அவன் வாங்கும் சம்பளம் வெளியூர் வேலை என்பதால் பஸ்ஸ¤க்கும் மெஸ்ஸ¤க்குமே சரியாகப் போகிறது. சபூரா பீவி தொழில் செய்யாமல் அவன் சம்பளத்தை மீதப்படுத்தி குடும்பச் செலவுகளைத் தாங்க முடியுமா? வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாதே. வினாக்கள் அவனை விசனப்படுத்தியது. சுரத்தில்லாமல் வீட்டிற்குள் நுழைந்தவன் முகத்தில் சோகம் சொந்தங் கொண்டாடியிருந்தது.

“டாக்டர் என்ன சொன்னார்?”

பல்கீஸ் மாமி ஆவலாய்க் கேட்டாள்.

“சபூரா பீவிக்கு டி.பி. வந்திருக்குன்னு டாக்டர் சொன்னாரு.”

சலீம் சுருக்கமாகச் சொன்னான். கண்களில் இருந்து நீர் பொலபொலவென வழிந்தது.

“அட மாயமே… இந்த எழவு நோய் இவளுக்கு எங்கிருந்து வந்தது?”

பல்கீஸ் மாமி தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டாள்.

மூலையில் முடங்கிக் கிடந்த பீடி இலையும், புகையிலை நெடியும் அவளுக்காகக் காத்திருப்பதை அறியாமல் டீச்சர் கனவில் வஸீலா நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

**

நன்றி : பாளையம் சையத், இஸ்லாமிய இலக்கியக் கழகம், களந்தை பீர்முஹம்மது, ஆபிதீன் பக்கங்கள்

**

ஆசிரியர் பற்றிய குறிப்பு (2007) :

நெல்லை மாவட்டம் மேலைப்பாளையத்தைச் சேர்ந்த பாளையம் சையத், சமீப காலங்களில்தான் இலக்கிய உலகின் கவனத்தைப் பெற்றுள்ளார். மாநில அரசின் பணியிலுள்ள சையத், தற்போது சென்னைவாசி. சிற்றிதழ்களில் வெளிவந்த கதைகளில் மிகச்சிறந்த கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கலை இலக்கிய இதழின் சிறப்புப் பரிசைப் பெற்றது ‘நெடி’.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *