நெஞ்சை தொட்டு கொல்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்  
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 4,326 
 

அலுவலகத்தில் நுழைந்த நிமிடத்திலிருந்து மேசை மீது இருந்த இரு தொலைபேசியும் மாறி மாறி மாணிக்கத்தை வதைத்து ஓலமிட்டுக் கொண்டே இருந்தது…. எதையும் எடுத்துப் பேச பயமாக இருந்தது அவருக்கு. காரணம், தினசரி பத்திரிக்கைகளில் அவரைப் பற்றி சில நாட்களாகவே வந்து கொண்டிருந்த அவர் மேல் தொடரப்பட்ட அலுவலகம் சம்பந்தமான மோசடி வழக்கு….. பொது ஜனங்களின் சீற்றத்தை விலைக்கு வாங்கி இருந்தது.

மனம் எடுத்ததற்கெல்லாம் கன்னாபின்னாவென்று திட்ட விஞ்ஞானி ‘பெல்’ ஏன் தான் இந்த தொலைபேசியை கண்டுபிடித்து தொலைத்தாரோ என்று உறுமியது.

“முற்பகல் செய்யின் – பிற்பகல் விளையும்!” என்று யாரோ ஒரு பெண் தொலைபேசியில் அந்த ஒரு வரியை மட்டும் சொல்லிவிட்டு வைத்ததில் இருந்து மாணிக்கத்தின் மனம் பேய் ஆட்டம் கண்டது…. வந்த கோபத்தில் இரு தொலைபேசிகளின் தொடர்புகளை துண்டித்து எறிந்தார். அதே வேளை அவரின் அதிர்வு நிலையிலிருந்த கைத்தொலைபேசி கிர்ரென்று கிர்ரென்று அதிர அவர் திடுக்கிட்டு…. ஒரு வினாடி உடல் நடுங்கி விட்டது! கைத்தொலைபேசியை தூக்கி எறிந்து விடலாமா என்று யோசித்தவாறே அழைப்பவர் யார் என கண்களை உற்று நோக்கினார்.

குடும்ப டாக்டரின் விவரம் தெரிய உடல் சில்லிட்டு இலகுவானது…. ஒரு வினாடி மயக்கம் அடைவது போல் தோன்றி தட்டாமாலை சுற்ற…. “இது என்ன?….. மரணத்தின் வாயிலை எட்டிப்பார்ப்பது போல் இருக்கிறதே?!!” என்று பயத்தால் நடுங்கினார்.

சென்ற வாரம் தான் டாக்டர் சுதாகரை பார்த்து தன் உடல் ஆரோக்கியம் பற்றிய முழு உடல் பரிசோதனைக்கு சென்றிந்தார் ….”எனக்கு ஏதாவது எய்ட்ஸ் கிய்ட்ஸ் இருக்கிறது என்று சொல்லத்தான் போன் செய்கிறாரோ?” என்று பூதம் கிளப்பியது அவரின் பேதலித்த மனம்.

“எஸ்… டாக்டர்?” என்று கம்மிய குரலில் கூப்பிட்டார்.

“சாரி…. உங்க மனநிலை இப்போ எப்படி இருக்குன்னு என்று என்னால் ஊகிக்க முடிகிறது….. எல்லா சோதனையும் வேதனையும் ஏன் தான் இப்படி ஒரே நேரத்தில் ஒருத்தரை தாக்கணும்னு புரியலை மாணிக்கம்” டாக்டரின் குரலில் கவலை தெரிய இன்னொரு முறை தட்டாமாலை…. கிர்ரென்று….. 100 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்ற….. ஒரு கணம் கண்கள் இருண்டது… ‘நிஜமாகவே எய்ட்ஸ் கிய்ட்ஸ் தானா???…. இனி நான் எப்படி மற்றவர்கள் முகத்தில் முழிப்பேன்?’ மாணிக்கத்தின் முகம் தொங்கிப் போனது.

“ஐ அம் சாரி டு ஸே திஸ் மாணிக்கம்….. சென்ற வாரம் நீங்க இங்கே வந்து விட்டு போனதும், மதியம் உங்க பையன் விமல் இங்கே வந்து இருந்தான்….. பயங்கரமான வயிற்று வலியுடன்!…. ரொம்ப நாளாக அந்த வலி அப்பப்போ வந்து போகுமாம்….. சோதித்து பார்த்ததில் அவனுக்கு வயிற்றில் புற்றுநோய் இருப்பது தெரிந்தது”

“என்ன டாக்டர்?…. விமலுக்கு வயிற்று வலியா? என்கிட்டே ஒரு நாள் கூட சொல்லவில்லையே?”

“நீங்க அவன்கிட்ட அன்பா பழகுவது இல்லை, பேசுவது இல்லையாம்….. பாவம், தாயில்லா பிள்ளை…. உங்க கிட்ட பேசவே பயமாக இருக்கிறதுன்னு அழறான்”

“டாக்டர் இப்போ அவன் எங்கே?”

“இங்கே தான்…… இன்னிக்கு மறுபடியும் வலி தாங்க முடியலைன்னு கொஞ்ச நேரம் முன்ன தான் என் முன்னாடி வந்து புழுவாய் விழுந்தான்….. சொல்வதற்கு மனம் கேட்கலை.. ..ஆனா உண்மை என்னன்னா….. அவன் புற்றுநோய் முத்திப்போச்சு….. எப்படி இவ்வளவு நாள் யாருக்கும் தெரியாமல் யார்கிட்டயும் சொல்லாம இருந்திருக்கிறான் என்று எனக்கும் ஆச்சரியமாக இருக்கு….”

“நான் இப்போ அங்கே வரேன் டாக்டர்”

***

விமல் தாயின் வயிற்றில் சுருண்டு கிடக்கும் சிசுவைப் போல் ஒடுங்கி துவண்டு படுத்து இருப்பதை பார்த்ததும் மாணிக்கத்திற்கு கண்கள் கலங்கின….’ஆ!…. இது என்ன?…. என் கண்கள் இதுவரை கலங்கி துக்கம் அனுபவித்ததாக ஞாபகம் இல்லையே!’ என்று பேய் மனம் அவரை சீண்டியது!

‘கங்கை நதியில் ஸ்னானம் செய்தால் தான் பாவங்கள் கரையும் என்று யார் சொன்னது??… மனம் உருகி…. அழுது…. செய்த பாவங்கள் எல்லாம் ஒரு கணம்…. ஒரே ஒரு கணம்…. கண் முன் நிறுத்தி கண்ணீர் வடித்தால் அதுவே போதும், பாவங்கள் கரையும்’

“விமல்….” நடுங்கிய குரலில் மகனை அழைத்தார் மாணிக்கம்.

விமல் வலியால் முனகினான் “அப்பா…… வலி தாங்க முடியலை அப்பா…. செத்துட்டா பரவாயில்லை போல தோணுது!” 18 வயது விமல் அழுதான் அவன் முகம் தலையணைக்குள் அழுத்திப் பிடித்திருந்ததால் அவன் அழுகையை பார்க்க முடியவில்லை மாணிக்கத்திற்கு.

மாணிக்கம் அவன் தலையைத் தொட்டு கோதிய போது….. புத்தம் புதிதாய் தாயின் வயிற்றிலிருந்து பிறந்த விமலை கையில் ஏந்தி பார்த்த அந்த பிஞ்சு முகம் அவர் மனக்கண் முன் தோன்றி மறைந்தது…. அவனை ஈன்றெடுத்த அதே நாளில் மனைவி உயிர் துறந்த அந்த சோகக் காட்சி மேலும் வாட்டி வதைத்தது….. ‘கடைசியாக அழுதது….. இல்லை இல்லை….. வெறுமனே கண்கலங்கியது அப்போது தானே?!!…..இத்தனை வருடங்கள் கழித்து இவை அனைத்தும் ஏன் என் கண்முன் இப்பொழுது தோன்றுகின்றன?’ மாணிக்கம் தன் மனதையே மன்றாடி கேட்டார்.

‘18 வருடங்களுக்கு முன்… விமல் பிறந்த இரு மாதங்கள் கழித்து….. ஜோதிடர் ஒருவர் சொன்னது இப்போது மெய்யாக போகிறதா? விமலின் ஆயுள் இவ்வளவு சொற்பமானதா?…. சாவு என்றால் எப்படி இருக்கும்?’

மனைவியை இழந்த ஒரு வருடத்திற்குப் பின்பிருந்து இதுநாள்வரை 17 வருடங்கள் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததெல்லாம் நொடியில் மணல் கோட்டையாக இடிந்து விழுவது போல் தோன்றியது மாணிக்கத்திற்கு.

டாக்டர் தொடர்ந்தார் “இனிமேல் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை….Energy Can Neither Be Created, nor Be Destroyed. Energy Disappearing in One Form Reappears in Another Form, Without Any Loss (தமிழில்: ஆற்றல் அழிவற்றது; ஆற்றலை உருவாக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது. ஆற்றல் ஒன்று ஒருவகையில் மறையுமாயின், அதுவே பிறிதொரு வகையில் சேதமின்றி வெளி தோன்றும்)….. இந்த விஞ்ஞான விதியை பள்ளியில் படித்து இருப்பீங்க.. … இது விஞ்ஞானத்திற்கு மாத்திரமல்ல, நம்ம வாழ்க்கைக்கும் தகும். ஜென்மம் பாவ புண்ணியம் எல்லாம் இந்த விதி மூலம் விளக்கி உண்மை காணலாம்….. அடுத்த ஜென்மத்திலாவது விமலுக்கு பரிபூரண நல்வாழ்வு கிடைக்க நான் ஆண்டவனை வேண்டுகிறேன்…… என்னுடைய ஒரே ஒரு வேண்டுகோள்….. நீங்க இனி அதிக நேரம் இவனோடு இருந்து அவனை மகிழ்விக்க வேண்டும்……இவன் மிஞ்சிப்போனா…. இன்னும் இரண்டு மாதங்கள் தான் தாக்கு பிடிப்பான்….. கொஞ்சம் பெயின் கில்லர் (வலி மாத்திரை) தருகிறேன்…. இப்போ நீங்க விமலை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம்” டாக்டர் மாணிக்கத்தின் இரு கைகளை பற்றிக்கொண்டு பேசி விடைபெற்றார்.

டாக்டர் சுதாகரின் அறிவுரைகளை காதில் வாங்கிக் கொண்டிருக்கும் போதே கைத்தொலைபேசி கிர்கிர்ரென்று அதிர்ந்தது …”யுவ் ஆர் டிஸ்மிஸ்ஸ்ட்” வேலையிலிருந்து நீக்கப்பட்ட குறுந்தகவல் செய்தி வாசகம் அவர் பாதம் முதல் உச்சி தலைவரை மின்சாரப் பாய்ச்சலாக தாக்கியது….

அலுவலக மேலதிகாரியிடம் இருந்து வந்த அந்த செய்தி….. பத்திரிகைகளில் இன்னமும் வந்து கொண்டிருந்த ‘மோசடி மாணிக்கம்!’ செய்தி…… விமலின் துடிப்பு……. அடுத்தடுத்து தாக்கிய எண்ண அலைகள் அவரை மயக்கம் அடையச் செய்ய…… அப்படியே தரையில் விழுந்து சாய்ந்தார் மாணிக்கம்.

ஜில்லென்று தண்ணீர் முகத்தில் தெளிக்கப்பட்டதும் கண் விழித்தார்.

சில நிமிடங்களுக்கு முன் மருத்துவமனை கட்டிலில் துவண்டு படுத்துக் கிடந்து விமல் இப்பொழுது அவர் அருகில் அவரையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

மாணிக்கம் சட்டென்று நிமிர்ந்து அமர்ந்தார். விமல் சற்று தெளிவான முகத்துடன் இப்போது தெரிய “விமல் உனக்கு இப்போ எப்படி இருக்கு?” என்று வினவினார்.

“பரவாயில்லை அப்பா….. வாங்க வீட்டுக்குப் போகலாம்” என்ற விமல் அவரை எழச் செய்தான்.

***

வீட்டிற்குள் நுழைந்ததும் மாணிக்கத்தின் கண்களுக்கு முதலில் ஹால் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த மனைவியின் புகைப்படம் தான் தெரிந்தது…. புன்னகையுடன் அவள் அந்தப் படத்தில் வீற்றிருந்தாள்….. என்றுன் மாறாத அதே புன்னகை!!……. அதில் இப்பொழுது ஏதோ ஒரு ஏளனம் தெரிவதாக….. அவரைப் பார்த்து கேலி சிரிப்பு சிரிப்பதாக தோன்றியது மாணிக்கத்திற்கு.

தலைகுனிந்து யோசனையில் ஆழ்ந்தார் இனி என்ன செய்வது என்று குழம்பினார்…. தன்னுடன் இரண்டு வருடங்களாக சல்லாபித்துக் கொண்டிருந்த அந்த இளம் வேலைக்காரி, பத்திரிகையில் வந்த செய்தி அறிந்ததும் சில தினங்களுக்கு முன்தான் காணாமல் போய்விட்டாள்….. ‘எத்தனை மாதங்கள்…. எத்தனை ஆயிரம் ஆயிரம் பணம் அவளுக்கு கொடுத்தேன்…. வேறு என்னென்ன செலவுகள் செய்தும்…… நன்றிகெட்ட நாய் ஓடிப் போய் விட்டது!’

மாணிக்கத்திற்கு உலகம் வெறுத்தது…. உலக மக்கள் அனைவரும் அவரையே உற்று நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பது போல் பிரம்மை ஏற்பட்டது…… எங்கு திரும்பினாலும் யாரோ தன்னை கவனித்துக் கொண்டே இருப்பது போல்…… கைகொட்டிச் சிரிப்பது போல் ‘நீ….. நீ….. வாழ்ந்தால் என்ன? செத்தால் என்ன?’ என்று கேட்பது போல் பல வகை பிரம்மை தோன்றி…. உடல் லேசாக நடுக்கம் கண்டது.

‘தவறுகளை…. பாவங்களை அறிந்தே செய்த சமயம் இருந்த மனவலிமை இப்பொழுது எங்கே போய்விட்டது?…. அமெரிக்காவில் முன்னாள் அதிபர் கிளிண்டன் கதி என்னவாயிற்று?…. அவர் இன்னமும் இன்முகத்துடன் உலகில் உலவி வரவில்லையா?’ சுதாரித்து நிமிர்ந்து அமர்ந்தார் மாணிக்கம்.

இனி போராட வேண்டும் அதற்கு பணம் வேண்டும் ஆனால் வங்கியிலிருந்து பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்து விட்டார்கள்….. வெளியூர் ஓடிவிடலாம் என்றால் பாஸ்போர்ட் போலீசார் பிடுங்கி வைத்துள்ளார்கள்….

பசி எடுத்தது….. விமலும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு துவண்டு கிடக்கிறான்…. ‘அவனுக்கும் பசிக்கிறதா அல்லது வயிறு வலித்துக் கொண்டே இருப்பதால் ‘பசி எது? நோயின் வலி எது?’ என்று தெரியாமல் தவிக்கிறானா?’

மாணிக்கம் நினைத்துக் கொண்டிருக்கும்போதே அவன் தந்தையை நோக்கி தரையில் அமர்ந்தவாறே சிறு பிள்ளை போல் தவழ்ந்து தவழ்ந்து வந்தான்/ “அப்பா…. எனக்கு வலி தாங்கமுடியவில்லை அப்பா…. என்னை…..என்னை கொன்னுடுங்க அப்பா….. நான் செத்துப் போகிறேன்…” விமல் தந்தையின் கால்களைப் பற்றிக் கொண்டு கதறினான்.

‘செத்துப் போகிறேன்’ என்ற வார்த்தையைக் கேட்ட மாணிக்கத்திற்கு மின்னலாக மறந்துபோன ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது…..விமலுக்கு ஆயுள் கெட்டி இல்லை என்பதை முன்பே ஜோதிடர் மூலம் அறிந்து இருந்ததால், சுமார் 15 வருடங்களுக்கு முன் ஒரு ‘ஆயுள் காப்புறுதி’ ஏஜண்ட் தொல்லை கொடுத்ததால்….. விமல் பெயரில் ஒரு பெரிய தொகைக்கு ஆயுள் காப்புறுதி எடுத்திருந்தார்……

மாணிக்கத்தின் முகம் இப்பொழுது சற்று பிரகாசம் அடைந்தது!! ‘விமல் இறந்துவிட்டால் அந்த பெரிய தொகை என் கைக்கு தான்….. விமல் எப்படியும் இரண்டு மாதத்தில் உயிர் துறந்து விடுவான்…. இப்பொழுதே செத்தால் அவனுக்கும் இந்த வலி எல்லாம் அனுபவிக்க தேவை இல்லை தானே?!!’…. கண்கள் வலுக்கட்டாயமாக மனைவியின் புகைப்படம் பக்கம் திரும்ப அவளின் புன்னகையில் ஏளனம் ஏகமாக அதிகரித்திருந்தது….. பார்வையில் சீற்றம் புலியைப் போல்…. “பாவி!…. பாவி!… திருந்தவே மாட்டாயா நீ?… உன் முடிவு காலம் நெருங்கிவிட்டது தெரிந்தும் தெரியாததுபோல் பாவங்களை இன்னும் சேர்க்க ஆசைப்படுகிறாயா?…… நெஞ்சைத் தொட்டு சொல்… அவனை…. என் மகனை…. நம். மகனை கொலை செய்ய எத்தனித்து விட்டாயா?’

வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்ட கதையாக இருந்தது மாணிக்கத்தின் மனம். லேசாக விமலின் தலையை கோதிவிட்டார் “வலியை கொஞ்சம் தாங்கிக்கோ விமல்” என்று சொன்னபொழுது தொண்டை அடைத்தது “இது பசியால் வரும் வலியாகத்தான் இருக்கும்…. கொஞ்சம் பொறு” என்றவர் தொலைபேசி மூலம் உணவுப் பொட்டலம் ஆர்டர் செய்தார்.

மகனை கட்டிலுக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்து அவன் அருகில் அமர்ந்து தீவிரமாக யோசனை செய்யலானார்… ‘இவன் செத்தாலும் யாருக்கும் சந்தேகம் வரப்போவதில்லை…. குடும்ப டாக்டர் சுதாகர் வேண்டிய சான்றிதழ் கொடுப்பார், எந்த பிரச்சனையும் இராது…. விமலை எப்படி சாகடிக்…..க…….லாம்?’

நினைக்க நினைக்க நெஞ்சு ‘திடுக் திடுக்’ என்று வேகம் போட்டு வியர்க்கச் செய்தது…… நெஞ்சைத் தொட்டுக் கொண்டு சுதாரித்துக் கொண்டார்

‘இந்தக் கொலையைச் செய்யாதே…. இது ஒரு பெரிய பாவம் பெற்ற மகனையே கொள்வதா?’ என்று புத்தி உரைத்த…. மனதை தடுத்து நிறுத்தினார் கழிவரை சென்றார்.

‘உணவு அருந்திய பின் விமல் கொஞ்சம் தூங்கியதும் அவன் உயிரைப் பிரித்து விட வேண்டியது தான்…. இதனால் முதற்கண் அவனுக்கும் நல்லது….. அதனால் எனக்கும் நல்லது!’ என்ற யோசனையுடன் விமலின் அறைக்குள் நுழைந்தார்.

விமலைப் பார்த்தார்…. விமல் இப்போது அழுகையை நிறுத்தி இருந்தான்; அவன் கண்களும் கலங்கி இருக்க வில்லை; மாறாக தந்தையின் கொடூர எண்ணங்களை புரிந்து கொண்டவனாக அவரையே பார்த்தான்!

மாணிக்கத்திற்கு மீண்டும் நெஞ்சு ‘திடுக் திடுக்’ என்று வேகம் போட, மறுபடியும் நெஞ்சைத் தொட்டுக் கொண்டார்….. நெஞ்சு லேசாக வலிப்பது போல் தோன்ற பார்வையை திருப்பிக் கொண்டு அருகே சோபாவில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டார்.

***

தந்தையை விழி கொட்டாமல் பார்த்த விமலுக்கு ஏதேதோ எண்ணங்கள், சம்பவங்கள் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்தன,,,,

‘நீ பிறந்த கெட்ட நேரம் உன் அம்மா செத்துட்டா…. சனியனே…. சனியனே!’ எத்தனையோ முகங்கள் அவனைப் பார்த்து திட்டிய கணங்கள் கண்முன் தோன்றி மறைந்தன.

‘பெற்றெடுத்த தாயை பார்த்திராத பாவி நான்!’ என்று நினைத்துக் கொண்டவன்….. இந்த தந்தையாக நல்லவிதமாக வளர்த்து இருக்கலாமே என்று ஆதங்கப்பட்டான்.

நினைவு தெரிந்த நாளிலிருந்து தந்தை மாணிக்கம் அவனுக்கு கெட்டவராகவே காட்சி அளித்தார்….. அத்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்த காலத்தில் அத்தையின் மகளையே, அதாவது மாணிக்கத்தின் அக்கா மகளை…. அவர் பலாத்காரம் செய்ய எத்தனித்து…. நிலைமை அறிந்து அத்தை பகைத்துக் கொண்டு போய்விட்டாள்…… அந்த சம்பவத்தால் இன்னும் பல நெருங்கிய உறவினர்களின் உறவும் துண்டிக்கப்பட்டது.

அதற்குப்பின் அலுவலகத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்ட எந்தப் பெண்களையும் வயது பாரபட்சமின்றி சும்மா விட்டுவைக்கவில்லை மாணிக்கம்…..பணத்தாசை காட்டி சில பெண்களை தன் வசப்படுத்தினார்…. எதிர்ப்பு காட்டிய வேறு சிலரை மிரட்டல் பேச்சு பேசி அடக்கி அணைத்துக்கொண்டார்….. குடிபோதையில் வீடு திரும்பியவர், விமல் எதிரிலேயே வேலைக்காரியை இழுத்துக் கொண்டு படுக்கை அறைக்கு சென்று கூத்தடித்த நாட்கள் ஏராளம் ஏராளம்.

அவரின் உல்லாச ஆர்ப்பாட்ட வாழ்க்கைக்கு தாம்தூம் என்று செலவிட்டவர், விமலின் வளர்ச்சிக்கு செலவு செய்யத் தயங்கினார்…. ‘சனியனே, இப்போ எதுக்கு பணம்?’ என்று எப்பொழுது பணம் கேட்டாலும் ஏன் எதற்கு என்று வதக்கி எடுத்து…. சிலசமயம் அடித்து உதைத்து…. கடைசியில் சொற்பத் தொகை ஒன்றை ‘சனியனே1’ என்று வீசி விட்டுப் போவார்.

பற்பல புதிய இரவு கேளிக்கை விடுதிகள் நகரத்தில் தோன்ற, அவை மாணிக்கத்தின் வாழ்க்கையை வெகுவாகவே பாதித்தது.

அவரின் பழக்க வழக்கங்களை பார்த்துப் பார்த்து மகனும் சிறிது சிறிதாக பின்பற்றலானான்.

ஒருமுறை விமல் தன் பதினைந்தாம் வயதில் தன் பதின்ம வயதை ஒட்டிய சில சினேதிகளை வீட்டிற்கு அழைத்து வந்து இருந்தான்….. அவர்களில் ஒருத்தியிடம் மாணிக்கம் நன்றாக பழகுவது போல் பழகி அவளை தொட்டு சல்லாபிக்கலானார்…… அதைப் பார்த்துவிட்ட விமலுக்கு ஆத்திரத்தால் உடம்பெல்லாம் கொதிக்க. கையில் கிடைத்த ஒன்றை எடுத்து தரையில் போட்டு உடைத்து அனைவரையும் கலைத்தான்.

அவன் கோபத்தை உணர்ந்து கொண்டவர் மேலும் அவனுக்காக கொடுக்கும் பணத்தை, செய்யும் செலவை குறைத்துக் கொண்டு பழி வெறியில் நடந்து கொண்டார் மாணிக்கம்.

விமலுக்கோ நண்பர்களின் சீண்டுதல் தாங்கமுடியவில்லை….

“என்னடா உன் அப்பா மெர்சிடிஸ் கார் வெச்சிருக்காரு…. உனக்கு ஒரு நல்ல பைக் கூட இல்லையா?”

“டேய் உன் அப்பாவை நேத்து அந்த பீச் ரிசார்ட்ல பார்த்தேன்டா…. கூட படுத்து இருந்த அந்த குட்டி…. செமகட்டை போடா!!”

“விமல்…. உன் இமேஜ் முழுசா பாழாவரதுக்குள்ள, உன் அப்பாவை நீதான் திருத்தணும்….. நேத்து ராத்திரி குடிச்சிட்டு தெருவோரத்தில் வாந்தி எடுத்திட்டு இருந்தார்…. கூட நின்னுகிட்டு இருந்த அந்த பொம்பளை…. ஸ்மோக் பண்ணிக்கிட்டு….. அரைகுறை டிரஸ்ல… பார்க்க சகிக்கலை விமல்!”

இப்படிப் பல விதமாய் பேசிய நண்பர்கள் எதிரிகளாக தெரிய அவர்களின் நட்பை தவிர்க்க….. அதன்பின் சில தீய நண்பர்களின் சகவாசம் அதிகரித்தது.

பணச் செலவும் அதிகரித்தது…. ‘பணம் வேண்டும்…. பணம் வேண்டும்!’ என்று மனம் அலைந்தது ‘லட்சக்கணக்கில் சொத்து இருந்து என்ன பயன்? ஆண்டு அனுபவிக்க வழி இல்லையே?! எப்போது பணம் கேட்கப் போனாலும் பிச்சைக்காரனை விட மோசமாக அல்லவா தன் தந்தை நடத்துகிறார்??”

அதன் பின் சிறு சிறு திருட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தான் விமல். ஒரு நாள் அது தந்தைக்கு தெரிந்து போக அவர் அவனை தாறுமாறாக அடித்து உதைத்து தள்ளி….. தந்தையின் ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு அவதூறான சொல்லும் விமலுக்கு பன்மடங்கான வெறுப்பை தந்தைமேல் வளர்த்தது.

இப்படி இருக்க சென்றவாரம் பத்திரிகையில் தந்தை பற்றிய அலுவலக மோசடி வழக்கு வெளியானது. அதை படித்த விமலுக்கு ஒருபுறம் அவமானமாக இருந்தாலும் இன்னொரு புறம் குதூகலமாகவும் இருந்தது.

‘அப்பா இனி நாக்கை பிடுங்கி சாக வேண்டியது தான்!’ என்று மனதுக்குள் குதூகலமாக கத்தினான்.

ஆனால் அதற்கு மறுநாள் பத்திரிகையில் வெளியான பல செய்திகள் விமலை நிலைகுத்தச் செய்தது…….

‘மோசடி மாணிக்கத்திற்கு வங்கிகளின் கட்டுப்பாடு’

‘மோசடி மாணிக்கத்திற்கு சொத்துக்கள் சம்பந்தமான தஸ்தாவேஜுகள் பறிமுதல்’

‘மோசடி மாணிக்கத்திற்கு வெளிநாடு செல்லத்தடை’

‘அப்படியானால்….. அப்பா குற்றவாளி என்று தீர்ப்பு ஆகிவிட்டால் இனி நான் நடுத்தெருவில் நிற்க வேண்டியது தானா??’…. எண்ணிப் பார்த்த விமலுக்கு உடல் நடுங்கியது…. அடுத்த வேளை சோற்றுக்கு திண்டாடும் கதியை மற்றவர்கள் அனுபவிப்பதை பார்த்த போது, கேட்டபோது, படித்த போது ஏற்படாத பரிதாபம் இப்பொழுது விமலுக்கு உணர்ந்து கண்ணீர் வடிக்க செய்தது!

எலும்பும் தோலுமாக ஆப்பிரிக்கப் பிள்ளைகளை தொலைக்காட்சியில் கண்ட காட்சி கண்முன் தோன்றி இரத்தத்தை உறையச் செய்தது…. பல சமயம் பார்த்த பலவித பிச்சைக்காரர்களின் பிச்சை எடுத்து அலையும் குழந்தைகளின் காட்சிகள் மனதை வாட்டியது!!

யோசனைகளும் கற்பனைகளும் அதிகரிக்க அதிகரிக்க, தந்தையின் மேல் இருந்த கோபம் வெறியாக மாறியது….. ‘இப்படிப்பட்ட ஒரு தந்தை எனக்கு வாய்த்துள்ளாரே!… இவர் இருந்தால் என்ன? செத்தால் என்ன?’…. விஸ்வரூபமாக எடுத்த எண்ணம் விமலை ஆட்கொள்ள ஆரம்பித்தது.

குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்படும் முன் இவர் இறந்து விட்டால்….. வாதாடி, அழுது புலம்பி, ஆதரவற்ற அனாதை என மன்றாடி கொஞ்சம் மீதமிருக்கும் சொத்து கைக்கு கிடைக்கும்படி செய்தால்…. நடுத்தெருவுக்கு போக வேண்டிய அவசியம் இருக்காது.

***

தன்னை நோக்கி வந்த தந்தையை கண் சிமிட்டாமல் பார்த்து ‘நீ செத்து தொலைய வேண்டியது தானே பாக்கி!’ என்ற எண்ணம் தாக்கியது…. வயிற்றில் புளி கரைத்த அதேவேளையில் நெஞ்சு ‘திடுக் திடுக்’ என்று வேகமெடுக்க….. ஒரு கையால் வயிற்றையும் இன்னொரு கையால் நெஞ்சையும் தடவிக் கொண்டான்.

15 நிமிடம் கழித்து வந்த உணவை சாப்பிட்ட பின் தந்தையின் வற்புறுத்தலுக்கு இணங்க பெயின் கில்லர் மாத்திரையை உட்கொண்டு ‘இனி என்ன செய்யலாம்?’ என்கிற தீவிர யோசனையில் லேசாக கண் உறங்கினான்.

***

மாணிக்கத்தை கண்கலங்கிப் பார்த்திராத டாக்டர் சுதாகர் மிகவும் ஆச்சரியப்பட்டார்….. மகனின் நிலைமையை கண்டு கண் கலங்கினாரா?… அல்லது ‘சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!’ என்று தன் மேல் தொடுக்கப்பட்ட மோசடி வழக்கையும் நினைத்து தடுமாறி கலங்கினாரா?…..

எப்படியோ தன்னால் இரண்டு ஜீவன்கள் நன்மை பெறப் போகின்றன என்ற எண்ணத்தில் மகிழ்ச்சி கொண்டார் டாக்டர் சுதாகர் – ஒன்று விமலின் மேல் மாணிக்கம் இனி அன்பை பொழிவதால் விமலுக்கு நன்மை; மற்றொன்று, இதன் மூலம் வாழ்க்கையில் நெறியறிந்து வாழ்க்கை பாதையை மாற்றிக் கொள்ளப் போவதால் மாணிக்கத்திற்கு நன்மை.

18 வயதில் விமல் மேற்கொண்ட காரியம்… அவன் போட்ட திட்டம்… தன்னை அத்திட்டத்தில் பங்கெடுக்க செய்தது… ஒருவாரமாக நடத்திய அந்த நாடகத்தை நினைத்து நினைத்து பிரமிப்பு அடைந்தார் சுதாகர்.

கைத்தொலைப்பேசி ரீங்காரமிட சுதாகர் அதை எடுத்துப் பார்த்தார். மாணிக்கம் தான் அழைத்தார்…. மகனோடு அவர் வீட்டிற்குச் சென்று கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஆகியிருக்கும்.

‘மாணிக்கத்திற்கு விமலின் திட்டம்…. நாடகம் தெரிந்து விட்டதா?’ என்று ஒரு வினாடி பதட்டம் அடைந்தார்…. அப்படி தெரிந்து போயிருந்தால் மாணிக்கம் இருக்கும் மனநிலையில் மகனை ஆதரவுடன் நடத்தி இருப்பாரா அல்லது கோபத்தில்?……’

“என்ன மாணிக்கம்?….. விமல் எப்படி இருக்கான்?” என்ற கேள்வி தடுமாறியது.

மறுமுனையில் அமைதி….. “மாணிக்கம்…… மாணிக்கம்?…. என்ன சொல்லுங்க?”…. மீண்டும் அமைதி பதிலாக தொடர்ந்தது.

தொலைபேசி தொடர்பு சரியில்லையோ என்று அதை ஒரு முறை முறைத்து பார்த்து “ஹலோ…. ஹலோ” என்று சற்று உரக்க குரல் கொடுத்தார்.

“டாக்டர்……. டாக்டர்…… டாக்டர்…….”

“எஸ் மாணிக்கம்…… எனக்கு கேட் குது…. என்ன சொல்லுங்க”

“டாக்டர்…… விமல்….. விமல்…..” மாணிக்கத்தின் குரலில் பயம் கவ்வியிருந்தது.

“எஸ்…… விமல்…… என்னாச்சு விமலுக்கு?”

“விமல்…. செத்துட்டான் டாக்டர்!”

கிர்ரென்று ஒரு மின்சார உணர்வு தாக்கி டாக்டரை ஒரு கணம் செயலிழக்கச் செய்தது.

‘ஆக…. திட்டம் தெரிந்து போய்…. கோபத்தில்…. வெறிபிடித்த மனநிலையில் மகனை கொன்று விட்டாரா மாணிக்கம்?’

“வாட் த ஹெல் ஆர் யூ டாக்கிங்?” பதட்டம்…. கோபம்… ஆத்திரம் ஒன்றுசேர கத்தினார் டாக்டர்.

“கொஞ்ச நேரம் முன்னாடி திரும்பவும் விமல் வயிற்றுவலியால் பயங்கரமாக தரையில் புரண்டு புரண்டு அழுதான்….. ‘நான் சாகனும்…. சாகனும்…. என்னால வலி தாங்க முடியலை’ன்னு என் காலை பிடித்து கதறினான்….. அவனை தூக்கி கட்டிலில் படுக்க வைத்தேன்…. உடம்பு பூராவும் பேயாட்டம் ஆடி…. புரண்டு புரண்டு துடிச்சவன், திடீர்னு முழி பிதுங்கி…. அதுக்கப்புறம் அசைவில்லாம….. டாக்டர் என் விமல் செத்துப் போய்விட்டான் டாக்டர்”

டாக்டர் சுதாகர் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்தார் ‘எது உண்மை?…. எது பொய்?’ என்று ஒரு வாரமாக நடந்த சம்பவங்கள் அனைத்தும் மாறி மாறி அவரின் மூளையை தாக்கியது……

***

அன்று மாணிக்கம் உடல் பரிசோதனைக்காக வந்து சென்ற பின் மதியம் விமல் டாக்டர் சுதாகரை பார்க்க வந்திருந்தான்.

“என்ன விமல்…. எப்படி இருக்கே?… சௌக்கியம் தானே?” அவர் கேட்டு முடிக்கும் முன் தடாலென்று அவர் காலில் விழுந்தான் விமல்.

“விமல் என்ன ஆச்சு உனக்கு? ஏன் இப்படி பண்ற?…. எழுந்திரு முதலில்” என்று அவனை தூக்கி நிறுத்தினார்.

விமல் கண்களை கசக்கிக் கொண்டான்…. “என் அப்பாவையும் என்னையும் நீங்கதான் டாக்டர் காப்பாத்தனும்”

“நல்லாத்தானே இருக்கீங்க ரெண்டு பேரும்?….. உன் உடம்புக்கு என்ன?”

“டாக்டர்…. மனுஷங்க உடல்நலத்துக்கு மட்டும் அவ்வப்போது பரிசோதனை செய்து எந்த குறைபாடை எப்படி கண்ட்ரோல் பண்ணலாம்னு ஆர்வம் காட்டுறாங்க… நிறைய பணம் செலவு பண்றாங்க….. ஆனா ஏன் டாக்டர் மனநலத்துக்கு யாரும் எதுவும் செய்ய தயங்கறாங்க?”

விமலின் கேள்வியிலிருந்து அவன் ஏதோ ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொண்டுள்ளான் என்பதை புரிந்து கொண்ட டாக்டர் சுதாகர் “ஆனால் என்னால் என்ன உதவி, என்ன மருத்துவம் செய்ய முடியும்?” என்று கேட்டார்.

“இந்த சின்ன வயசுல….. உனக்கு இப்ப என்ன வயசு?”

“18 டாக்டர்”

“குட்…… இந்த சின்ன வயசுல உனக்கு இப்படி ஒரு கேள்வி எழ நீ நிறைய அனுபவிச்சு இருக்கணும்…. என்ன கஷ்டம் உனக்கு?…. உன் அப்பாவோட கஷ்டம் எனக்கு தெரியும்…. அவர் உண்மையிலேயே குற்றவாளியா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும்…. உன் பிரச்சினை என்னன்னு சொல்லு”

“டாக்டர் என் அப்பா இன்னிக்கு இந்த நிலைமைக்கு வரக் காரணம் என்னன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது…. அம்மா காலமானப்புறம் அவர் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு இருந்திருந்தால் நல்லபடியா வாழ்ந்திருக்கலாம்….. ஏன் தனியா இருந்திட்டார்ன்னு புரியலை….. சிலசமயம் நல்லா ஜாலியா வாழனும்னு தான் இப்படி தனிமரமாக இருக்க முடிவு செய்தார்னு சந்தேகம் வருது…..

டாக்டர் நான் பிறந்தப்போ என் அம்மா செத்து விட்டதால….. என்னை எல்லோரும் ‘சனியன் சனியன்’னு திட்டி இருக்காங்க….. இன்னும் கூட அப்பா அந்த வார்த்தையை அடிக்கடி என்னிடம் உபயோகிப்பார்……என் முகத்தில்முழிக்கறது பாவம்னு நிறைய பேர்……” விமல் தொண்டை அடைக்க விக்கினான்….. அவன் கண்களில் லேசாக கண்ணீர் துளிர்விட்டது.

“எனக்கு தொண்டையை அடைக்குது டாக்டர்…… கொஞ்சம் தண்ணீர் குடிக்கணும்”

தண்ணீர் கொடுத்த டாக்டர், அவன் தோளைத் தொட்டு ஆசுவாசப் படுத்தினார்.

“என் அப்பாவுக்கு என் மேல் கொஞ்சம் கூட பாசம் இல்லை டாக்டர்…. கடமைக்காக என்னை அவரோடு வைத்திருக்கிறார்….. எனக்காக செலவு செய்யனும்னா பலமுறை யோசிப்பார்…. என்னை தனியா ஹாஸ்டலுக்கு ஏதாவது வெளியூருக்கு அனுப்பி இருக்கலாம்….. ஆனால் அதற்கு நிறைய செலவாகும் என்று தான் அப்படி செய்யவில்லை…… டாக்டர் என் அப்பா ஒரு பயங்கர ‘வுமனைசர்’…. பெண் வெறி கொண்டவர்…. இவருக்கு எப்படி இன்னமும் எய்ட்ஸ் வராமல் இருக்கு??”

டாக்டர் சுதாகருக்கு தலையை தொங்கப் போடுவது தவிர வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை….. தலையை சொறிந்தவர், பின் பொறி தட்டியது போல் “To Every Action There is Always and Equal and Opposite Reaction (தமிழில்: ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர்விசை உண்டு)….. இதை நீ சமீபத்தில் விஞ்ஞான பாடத்தில் படித்திருப்பாய்….. சில சமயம் ரியாக்ஷன் உடனே தெரியும் சில சமயம் பொறுத்திருந்து திடீர்னு வரும்….’அரசன் அன்றே கொல்வான், ஆண்டவன் காத்திருந்து கொல்வான்’ என்று சும்மாவா சொன்னாங்க?

நீ இதைப்பற்றி எல்லாம் இப்போ கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை” என்று கைகளை அசைத்து அசைத்து அறிவுரை கூறினார் டாக்டர்.

“அதனாலதான் நான் ஒரு திட்டம் போட்டு இருக்கேன் டாக்டர்” விமல் கண்களை விரித்து சொன்னான்.

டாக்டர் வியப்புடன் “என்ன திட்டம் அது”

“டாக்டர் இப்போ அப்பாவுக்கு வந்திருக்கிற கஷ்டங்களை பார்த்தால், அவர் எப்போ வீட்ல அவர் ரூம்ல இருக்கிற துப்பாக்கியை எடுத்து மண்டையை பொசுக்கிக் கொள்வார்ன்னு பயமா இருக்கு….. என்னை சுத்தமாக மறந்து போன நிலையில பைத்தியம் பிடித்தவர் போல திண்டாடுகிறார்…

நீங்க கொஞ்சம் உதவி செய்தால் அவரை திருத்தி வாழ வைக்கலாம்….. என்னையும் ஒரு மகனாக நடத்துவார்….” அதன்பின் விமல் மாணிக்கம் தன்னை எப்படி நடத்துகிறார் என்கிற விவரத்தை…. பல சம்பவங்களை எடுத்துக்காட்டாக கூறி…. உடம்பில் ஆங்காங்கே ஏற்பட்ட காயங்கள்….. சித்திரவதை சின்னங்கள்….. மாணிக்கம் உபயோகிக்கும் விரசமான வார்த்தைகள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் கூறினான் விமல்.

அனைத்தையும் கேட்ட டாக்டருக்கு மலைப்பாக இருந்தது “இப்படி ஒரு தந்தையா?…. இப்படி ஒரு மகனா?”

“உன் திட்டம் என்ன சொல் இப்போ….. என்ன உதவி வேணும் உனக்கு?…. நான் உன் அப்பாகிட்ட பேசி பார்க்கட்டுமா?” டாக்டர் விமலுக்கு உதவி செய்ய தீர்மானித்து விட்டிருந்தார்.

“இப்போ அவர் இருக்கிற மனநிலையில் அவர் கிட்ட பேசி பலன் காண முடியாது என்று நினைக்கிறேன்”

“வேறு எப்படி?”

“எனக்கு ஒரு பெரிய வியாதி இருக்குன்னு பொய் சொல்லணும்…. அதற்கு வேண்டுமானால் தேவையான பொய் அத்தாட்சிகளை…. இரத்தப்பரிசோதனை மற்றும் ஸ்கேன் ரிப்போர்ட்….. இப்படி தேவைப்பட்டால் மட்டும் அதை என் அப்பாவுக்கு காட்டி அவரை நம்ப வைக்கலாம்…… நானும் சேர்ந்து நடிக்கிறேன்…… எனக்கு வயிற்றில் கேன்சர் என்று வைத்துக் கொள்ளலாமா?” விமல் ஆர்வத்துடன் பேசினான்.

“நீ நல்லா நடிப்பியா?”

“நடிப்பேன் டாக்டர்”……. தடாலென்று தரையில் விழுந்த விமல் “வயிற்று வலி….. வயிற்று வலி….. வலி தாங்க முடியலை….. சாகணும் போல இருக்கு….. நான் செத்துப் போகணும்……. என்னை கொன்று விடுங்க அப்பா” என்று நடிக்க உண்மையிலேயே விமல் கண்கள் சிறிது கலங்கிவிட்டது.

“இது ஒர்க் அவுட் ஆகும் டாக்டர்….. இப்படி செஞ்சா அவருக்கு என்மேல் அனுதாபம் ஏற்பட்டு……”

***

இப்படியாக திட்டத்தை அமல்படுத்தி இன்று சில மணி நேரத்திற்கு முன்தான் முதல்கட்ட நாடகத்தை தன் மருத்துவமனையில் அரங்கேற்றி மாணிக்கத்தை, எதிர்பார்த்ததைவிட அதிகமாக உணர்ச்சி வசப்படுத்தி…….

“ஆனால் விளையாட்டு வினையாகி விட்டதா?…. நம்ப மடியவில்லை….. எதையும் நம்ப முடியவில்லை…… விமலுக்கு உண்மையிலேயே ஏதாவது வியாதி இருந்து தொலைத்து இருக்குமோ?….. கடைசி காலத்தில் தந்தையின் பாசத்தை ஈர்க்க இப்படி வேண்டும் என்று என்னிடம் சேர்ந்து நாடகம் ஆடினானா?”

“மாணிக்கம்….. மாணிக்கம்….. ப்ளீஸ் கீப் காம் நவ் ….கொஞ்சம் அமைதியா இருங்க…… நீங்க இப்போ வீட்ல தானே இருக்கீங்க?” டாக்டர் தொலைபேசியில் மாணிக்கத்திடம் வினவினார்

“ஆமாம் டாக்டர்…… விமலை பார்க்க பாவமா….. பயமா இருக்கு…. அதனால அவன் ரூமை விட்டு வெளியே வந்து என் ரூம்ல இருந்து தான் இப்போ நான் பேசிகிட்டு இருக்கேன்” நடுக்கமான குரலில் பதில் வந்தது.

“உண்மையிலேயே விமல் செத்துட்டானா?” டாக்டருக்கு இருப்புக் கொள்ள முடியவில்லை.

“ஆமாம் டாக்டர்…… டாக்டர் மருத்துவம் எவ்வளவோ முன்னேற்றம் கண்டு ம் ஏன் டாக்டர் இப்படி சிலர் சாக வேண்டி இருக்கு?”

டாக்டருக்கு மாணிக்கத்தின் மேல் பரிதாபம் ஏற்பட்டாலும்….’இல்லை….. இல்லை…..நோ…. நோ…. எதையும் நம்ப முடியவில்லை’ என்று முடியை பிய்த்துக்கொண்டார் டாக்டர்.

“நீங்க அங்கேயே இருங்க மாணிக்கம்….. நான் இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடறேன்…”

பாதாள கார் நிறுத்தும் இடத்தில் இருந்து வெளியே மெதுவாக தள்ளப்பட்ட தன் காரில் ஏறி அமர்ந்து அதை கிளப்பினார் டாக்டர்…..எண்ண அலைகள் பிசாசாக அவர் மதியை தாக்க காரை பூதமாக பறக்கவிட்டார்….

20 நிமிடங்கள் கழித்து கார் மாணிக்கத்தின் வீட்டு வாசலில் நின்றது. காரைவிட்டு இறங்கி இரு பாதங்களை தரையில் பதிய வைக்கக் கூட இல்லை……..’ப்ப்டூம்….ம்ம்’ என்று ஒரு பெரிய வெடிச்சத்தம் வீட்டின் ஒரு உட்புறத்தில் இருந்து கேட்டது.

‘என்ன சத்தம் அது?’…. ஏற்கனவே குழப்பத்தின் உச்சியில் இருந்த டாக்டர் சுதாகர் இப்பொழுது பதட்ட நிலையின் உச்சிக்கு இழுக்கப்பட்டார்…..

‘துப்பாக்கி வெடிச்சத்தம் தானே அது?…….மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டாரா?….. அடப்பாவமே…… விமலுக்குத்தான் ஒன்றுமில்லையே?…..’

“வாட் இன் த ஹெல் இஸ் கோயிங் ஆன் ஹியர்?!’ என்று அலறியவாறே வீட்டு வாசல் கதவை நோக்கி ஓடினார்.

“ஆண்டவனே!…… விமலோடு நான் சேர்ந்து ஆடிய நாடகம் இப்படி இரட்டை உயிரை குடித்து விட்டதா?….. வேண்டாம் அப்பா எனக்கு இந்த பாவம்!” வாசற் கதவு மூடப்பட்டிருந்ததால் உள்ளே இருவர் இறந்து போயிருப்பார்கள் என்ற சந்தேகத்தினால்….. குழப்பத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கதவை உதைத்தார்…… வெளியில் குழுமி வரும் அண்டைவீட்டாரின் தலைகளை நோக்கி கைகளை விரித்து தோள்பட்டையை தூக்கி காண்பித்து தன் குழப்பத்தை வெளிப்படுத்தினார்.

வாசற்கதவை மேலும் பலமாக தட்டினார்….. வேலைக்காரி சென்ற வாரமே வேலையை விட்டு போய் விட்டாள் என்பது தெரியாது டாக்டருக்கு…. யார் பெயரை சொல்லி கூப்பிட்டு பார்க்கலாம் என்று தடுமாறியவர்…. வலது புறத்தில் இருந்த ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தார்……

அவர் கண்ட காட்சி அவரை….மைனஸ்….. -100 டிகிரிக்கு நொடியில் இழுத்துச் சென்றது….. பனிச் சிலையாக்கி நிலைக்குத்தச் செய்தது அவரை….. இதயத் துடிப்பும் துண்டிப்பு தயாரானது!!

***

விமல் ஹாலில் நின்று கொண்டிருந்தான்!! அவன் சட்டை முன்பகுதி முழுவதும் இரத்தக்கறை….. ஆனால் அவன் செத்து இருக்கவில்லை….. உயிருடன் சிலைபோல் நின்று இருந்தான்!!!

‘விமல் செத்துவிட்டதாக மாணிக்கம் போன் செய்தார்…… இங்கே இவன் உயிருடன் இருக்கிறான்….. அப்படியானால் அந்த துப்பாக்கிச் சத்தம்?…..அது வேறு ஏதோ ஒரு சத்தமா?….. இவன் சட்டையில் என்ன இரத்தம்?’

டாக்டர் சுதாகர் தன்னை சுதாரித்துக் கொண்டு “விமல்…. விமல்….. கதவைத் திற விமல்” என்று கத்தினார்.

விமல் ஏதோ பிரம்மை பிடித்தவன் போல் டாக்டர் பக்கம் திரும்பிப் பார்த்தான்…… அவன் உடல் ஏதோ பயத்தில் நடுங்கிக் கொண்டிருப்பது டாக்டருக்கு தெளிவாக தெரிந்தது.

“கடவுளே!…. மாணிக்கத்திற்கு ஒன்றும் ஆகி இருக்கக்கூடாது” டாக்டர் புலம்பித் தவித்தார்.

“விமல்….. விமல்….நான் டாக்டர் சுதாகர்….. கதவைத்திற விமல்”

விமல் தரையில் அமர்ந்து தன் இரு கைகளால் தலையை மடார் மடார் என்று அடித்துக் கொண்டான்.

“வேண்டாம் விமல்…. நான் இருக்கேன் இல்ல……. இங்கே வா கவலைப்படாமல் வா” மாணிக்கத்தின் துப்பாக்கிக்கு மாணிக்கமே இறை ஆகிவிட்டார் என்பது டாக்டருக்கு ஊர்ஜிதம் ஆக…… ‘மாணிக்கம் தானாக சுட்டுக் கொண்டாரா? இல்லை, விமல் சுட்டானா?…. அல்லது விபத்தில் சுடப்பட்டதா?…… முதலில் செத்துப்போன இந்த விமல் இப்பொழுது எப்படி உயிருடன் இருக்கிறான்?….. ஓ மை காட்….. வாட் இன் த ஹெல் இஸ் கோயிங் ஆன் ஹியர்?!’

விமல் தடுமாறி எழுந்து வந்து கதவை திறந்தான்.

“டாக்டர்….. அப்பா….. அப்பா….. சூசைட் பண்ணிக்கிட்டார்……..என் கண் முன்னாலேயே தற்கொலை பண்ணிகிட்டார் டாக்டர்….” விமல் மாணிக்கத்தின் அறையை நோக்கி கை காட்டி விசும்பினான்…. தலையை தொங்கப் போட்டு கண்களை கசக்கினான்.

‘இல்லை…. இல்லை…… நம்ப முடியவில்லை!…. எது உண்மை? எது பொய்?’ என்கிற குழப்ப உச்சிக்கு மீண்டும் எகிறிக் குதித்தது டாக்டரின் எண்ணங்கள்.

“உனக்கு ஒன்னும் ஆகவில்லையா?” விமலின் கண்களை ஊடுருவினார் டாக்டர்.

“எனக்கு ஒன்னும் இல்லைன்னு உங்களுக்குத் தான் தெரியுமே டாக்டர்?” விமல் டாக்டரை மடக்குவது போல் பார்த்தான்.

“அப்போ….. அப்போ……?” டாக்டர் தலை சொறிந்து கொண்டார்.

“என்ன டாக்டர்?….. என்ன குழப்பம் உங்களுக்கு?”

டாக்டருக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.

“டாக்டர்…. ஆக நான் சந்தேகப்பட்டது உண்மை ஆயிடுச்சு டாக்டர்!”

டாக்டர் அவனை நிமிர்ந்து பார்த்து புருவங்களை உயர்த்தினார், “என்ன சந்தேகம்?”

“அப்பா அவமானம் தாங்காமல் தற்கொலை பண்ணிக்க நினைப்பார்னு உங்க கிட்டயும் அன்னைக்கு என் பயத்தை சொன்னேனே?”

‘பயமா?….. இல்லை….. இல்லை…… வேறு என்ன?…. யார் யார் என்னென்ன நாடகம் ஆடுகிறார்கள் இந்த வீட்டில்?’ குழப்பம் மண்டையை பிளக்க டாக்டர் மெல்ல நடந்து மாணிக்கத்தின் அறைக்குள் எட்டிப் பார்த்தார்.

கட்டிலுக்கு முன்னால் தரையில் இடப் பக்கமாக சாய்ந்து படுத்துக் கிடந்தார் மாணிக்கம்….. மண்டையில் இருந்து இரத்தம் இன்னமும் லேசாக கசிந்து கொண்டிருந்தது….. அது அறையின் அனேக தரையை இரத்த வெள்ளமாக்கியது…. மாணிக்கத்தின் வலது கை அருகே, தரையில் அந்தத் துப்பாக்கி கிடந்தது.

டாக்டர் சுதாகர் கவனமாக நடந்து சென்று மாணிக்கத்தின் நாடியை, மூச்சை, இதயத்துடிப்பை சோதித்துப் பார்த்து எழுந்தார்,

விமல் அரை கதவுக்கு வெளியே நின்றபடி டாக்டரின் செய்கையை கவனித்துக் கண்டிருந்தான்… டாக்டர் விமலை முறைத்துப் பார்த்தார்…. விமல் தலைகுனிந்து கண்களைக் கசக்கினான்.

விமல் அருகே திரும்பிவந்த டாக்டர் “இத பாரு விமல்….. இப்போ நான் போலீசை கூப்பிடப் போகிறேன்…. அதற்கு முன் உன்னோடு பேசவேண்டும். உன் மேல் எனக்குள்ள அக்கறையினால் கேட்கிறேன்…. நடந்த உண்மையைச் சொல்” பேசிக்கொண்டே சென்று வாசற் கதவை உட்புறமாக தாழிட்டார் டாக்டர்.

வெளியே மக்கள் திரளின் குசுகுசு சத்தம் அதிகரித்துக்கொண்டிருந்தது.

விமலின் கைகளைப் பிடித்து அவனை சோபாவில் அமரச் செய்து, அவன் முன் அமர்ந்தார் டாக்டர், மறுபடியும் விமலை முறைக்க அவன் கண்களில் முதன் முறையாக பயம் தெரிந்தது.

“நீ என்கிட்ட நிறையவே பொய் பேசி நாடகமாடி இருக்க” டாக்டரின் பேச்சில் கோபம் சற்று அதிகமாகவே தொனிக்க, விமலின் கண்களில் மேலும் பயம் பரவியது.

“நான் எந்தப் பொய்யும் சொல்லவில்லை”

“அப்போ உன் அப்பா பொய் சொன்னாரா?”

“என்ன பொய்?…. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை நீங்க சொல்றது….. அப்பா தற்கொலைதான் பண்ணிக்கிட்டார்….. கொஞ்ச நேரம் முன்னாடி நான் தூங்கிகிட்டு தான் இருந்தேன் டாக்டர்…… அவர் ரூம்ல ஏதோ சத்தம் கேட்டதால் எழுந்து போய் பார்த்தேன்…… அவர் லாக்கர் திறக்க திண்டாடிக் கொண்டிருந்தார்….. அந்த லாக்கரில் தான் துப்பாக்கி இருந்தது…. அதை எடுக்கப் போகிறார் என்று பயந்து அவரை பார்த்து கத்தினேன்….. ஓடிப்போய் அவரை தடுக்க கெஞ்சிக்கொண்டு இருக்கும்போதே…. நான் கதறக்கதற கொஞ்சமும் தயங்காமல் பயப்படாம சுட்டுக்கிட்டார்” விமல் சொல்லச் சொல்ல அவன் உடல் நடுக்கம் கண்டது… கண்களும் கலங்கியது….. ஆனால் அவன் டாக்டரின் கண்களை தவிர்த்தான்….

டாக்டரோ அவனை விடாமல் விழுங்குவது போல் பார்த்துக் கொண்டே இருந்தார்….’விமல் செத்துப் பிழைத்த ஜீவனாக இருக்க முடியுமோ?….. சேச்சே இவன் முதலில் எப்படி செத்து இருக்க முடியும்?….. ஆனால்…. ஆனால் இவன் செத்து விட்டதாக மாணிக்கம் சொன்னாரே?’

“நான் இங்க ஏன் நானாக வந்தேன்னு நீ கேட்கலையே விமல்…” டாக்டர் விமலை கேட்க அவன் தலை நிமிர்ந்து பார்த்தான்…. விமலின் கண்கள் ‘டாக்டர் என்ன சொல்லப் போகிறார்?’ என்பதை அறியும் ஆவலில் இடதும் வலதுமாக வேக வேகமாக ஆடியது

“ஏன் டாக்டர் வந்தீங்க?….. எனக்கு ஒன்னும் புரியலை!”

“ஒரு அரைமணி நேரத்துக்கு முன்னால உன் அப்பா கிட்டே இருந்து ஒரு போன் வந்தது….” டாக்டர் வேண்டுமென்றே பேச்சை பாதியில் நிறுத்தி விமலின் ஆர்வத்தை சீண்டினார்.

“அப்பா என்ன சொன்னார் டாக்டர்?…… தற்கொலை பண்ணிக்கப் போகிறேன், என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று?…” இப்பொழுது விமலின் பேச்சில் சத்தில்லை.

“இல்லை…. நீ வயிற்று வலியில் செத்து விட்டதாக சொன்னார்”

அதைக் கேட்ட விமல் சற்றே நிலை குத்திப் போனான்…. பின்பு தவிக்கத் தொடங்கினான்…. செய்வதறியாமல் தவிப்பவன் போல் இப்படியும் அப்படியும் மேலும் கீழும் வெற்றுப் பார்வை பார்த்தான்….. கடைசியில் அம்மாவின் புன்னகை தவழும் படத்தில் கண்கள் நிலைகுத்தி நிற்க, ஒரு சில விநாடி அந்த படத்தையே பார்த்தவன்….. தடாலென்று தரையில் விழுந்தான்.

“அம்மா…. அம்மா…. நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கேன் இப்படி?” என்று தலையை தரையில் ‘நங் நங்’ என்று அடித்துக்கொண்டு கதறினான்.

டாக்டர் அவனை சமாதானப்படுத்த முயன்றார். “விமல் நீ சீக்கிரம் நடந்த உண்மையைச் சொல்வது உனக்கு தான் நல்லது….. வெளியில் நிற்கும் ஜனங்களில் யாராவது போலீசுக்கு தகவல் கொடுத்தால், அவர்கள் எந்நேரமும் வந்துவிடுவார்கள்…. நானும் நாழி கழிப்பது எனக்கு நல்லதல்ல…. சொல்லு….. சீக்கிரம் சொல்லு” டாக்டர் விமலை லேசாக உலுக்கினார்.

“சொல்கிறேன் டாக்டர்….. நான் கொஞ்ச நேரம் முன்னாடி என் கட்டில்ல தூங்கிக்கிட்டு இருந்தேன்…. அப்போது திடீரென அப்பா வந்து என் மேல சாய்ந்து ஒரு தலையணையால் என் முகத்தை அப்பி ‘என்னை மன்னிச்சிடு விமல் நீ சாகறதுதான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது’ன்னு சொல்லிக்கிட்டே என்னை சாகடிக்க பார்த்தார்…. நான் மூச்சு திணறிக் கொண்டே இருந்தப்போ என்னை காப்பாத்திக்க எனக்கு ஒரு ஐடியா தோனுச்சு… கைய கால உதைச்சு முரண்டு பிடிச்சு ஆடிக்கிட்டு இருந்த நான்….. செத்துப் போன மாதிரி எல்லாத்தையும் நிறுத்தி உடம்பை அசைவில்லாமல் கிடக்கச் செய்தேன்….. உண்மையிலேயே எனக்கு மூச்சு நின்ன மாதிரி இருந்துச்சு….. நான் மயங்கிப் போய்விட்டேன்னனு நினைக்கிறேன்….. கொஞ்ச நேரம் கழிச்சி கண் திறந்து பார்த்தா…. அப்பா என் ரூம்ல இல்லை…”

“இரு…. இரு…. அப்பா உன்னை ஏன் கொல்லனும்?”

“என் மேல் அனுதாபம்…. என் வயிற்றுவலியை உண்மை என்று நம்பி…. நீங்க எனக்கு வயிற்றில் கேன்சர் என்று சொன்னதையும் உண்மை என்று நம்பியிருக்கணும்….. நம்ம நாடகமே அது தானே?… நான் வேற அடிக்கடி ‘நான் சாகணும் நான் சாகணு’ம்னு சொல்லி நடிச்சது அவர் நெஞ்சை உருக வைத்திருக்கும்…. மெர்சி கில்லிங் செய்யறது தப்பு இல்லைன்னு முடிவு செய்துவிட்டார் போல தோணுது…”

“ஓ மை காட்!” என்று தன் தலையை அடித்துக் கொண்டார் டாக்டர்

“அப்புறம்?…. நீ கண் முழிச்சப்புறம் என்ன நடந்தது?…. சொல்லு” என்றார்.

“அப்பா ரூம்ல ஏதோ சத்தம் கேட்டு நான் உள்ளே நுழைந்தேன்…. அவர் லாக்கரில் இருந்து துப்பாக்கியை எடுத்து….. அதை பார்த்ததும் நான் நடுங்கிப் போய்விட்டேன்….. என்னை கொன்னுட்டு அவரும் தற்கொலை பண்ணிக்க தீர்மானித்து விட்டார் என்று உடனே புரிஞ்சது….. என்னை பார்த்ததும் மிரண்டு போனார் அப்பா…. நான் ஆவியோன்னு நினைச்சு தடுமாறினார்…. ‘நீ இன்னும் சாகலையா?’ன்னு கேட்டு…. என்னைத் தொட்டுப் பார்த்து உணர்ந்ததும்….. அவர் தலையை அடிச்சிக்கிட்டு…..’நானாவது செத்து தொலைகிறேன்’னு…. நான் கதறக் கதற…. எவ்வளவு கெஞ்சியும் கேட்காம…. என் கண் முன்னாலேயே துப்பாக்கியால் சுட்டு….”

டாக்டர் ‘நல்ல வேளை நம்ம நாடகம் விமலின் உயிரையும் எடுத்து விடவில்லை…. ஒரு மோசடி குற்றவாளியான மாணிக்கம் தான் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார்…. பாவம் மாணிக்கம்!’ என்று பெருமூச்சு விட்டார்.

தெருவில் போலீஸ் கார்கள் வந்து நிற்கும் ஓசை கேட்டது. மூன்று போலீஸ் அதிகாரிகள் கையில் துப்பாக்கியை ஏந்தியவாறு கதவை தட்ட, டாக்டர் விமலை உஷார் படுத்தி விட்டு கதவைத் திறந்துவிட்டார்.

ஒரு காவல் அதிகாரி ஏதும் பேசாமல் விமலின் கைகளை மடக்கி அவனுக்கு கை விலங்கு மாட்….”டாக்டர்… டாக்டர்….. சார்…. சார்…. என்ன சார் இது? என்னை ஏன் அரெஸ்ட் பண்றீங்க?” என்று விமல் முரண்டு பிடித்து கத்தினான்.

டாக்டருக்கு மறுபடியும் குழப்பம்…. பதற்றம்… “சாரி ஆபீஸர்…. நீங்க ஏதோ தவறுதலாக….” என்று டாக்டர் மற்றொரு காவல் அதிகாரியை நோக்கினார்.

“நோ…. நோ…. நோ ஆர்க்யுமெண்ட்ஸ்….. எங்களுக்கு எல்லாம் தெரியும். உங்களுக்கு….. நீங்க டாக்டர் சுதாகர், இவங்க குடும்ப டாக்டர் தானே”

“ஆமாம்…..பட்…. ஆனா”

“உங்களுக்கு தெரியாது டாக்டர்….. இவன் ஒரு பயங்கர கொலைகாரன்…. இங்கே நடந்த எல்லாத்தையும் CCTV மூலமா நாங்க பார்த்துட்டோம்… பதிவும் பண்ணியிருக்கோம்…… எல்லோரும் பார்க்கலாம்….. யூ ப்ளடி ஸ்கவுன்ட்ரல்….. இந்த வயசுல அப்பாவை கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லாமல் கொன்ற நீ…. இன்னும் பெரியவனானா??” காவல் அதிகாரி விமலை இடித்து தள்ளி செல்ல….. டாக்டருக்கு தலைசுற்றியது…. ‘டாக்டர் மயங்கி விழுந்தார்!!’ என்று யாரும் கிண்டலடித்து விடக்கூடாது என்கிற எண்ணம் தாக்க, சுதாரித்துக்கண்டு காவல் அதிகாரிகளை பின்தொடர்ந்தார்.

***

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே மாணிக்கத்தின் மேல் ஒரு புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் மாணிக்கத்தை வேவு பார்க்க தொடங்கினர். மாணிக்கத்தின் மோசடி குற்றத்திற்கு ஆதாரம் தேடும் வகையில் பல கோணங்களில் செயல்பட்டனர் அதில் ஒரு கட்டமாக மாணிக்கத்தின் வீட்டில் வேலைக்காரியின் உதவியோடு CCTV கேமரா பொருத்தினார்கள் மாணிக்கத்தின் அலுவலகம் சம்பந்தமான மோசடி வழக்கு குறித்து ஆதாரம் சில கிடைத்ததோடு…… இந்த CCTV இல்லை என்றால் விமலின் மேல் கொஞ்சமும் சந்தேகம் வராமல் போய் இருக்கும்…. மாணிக்கம் தான் ஒரு குற்றவாளி என்கிற அவமான உணர்வினால் தற்கொலை செய்துகொண்டார் என்று முடிவாகி இருக்கும்.

காவல்துறை கும்பல் ஒன்று டாக்டர் சுதாகர் & விமல் அமர்த்திக்கொண்டு நடந்த உண்மை சம்பவத்தை டிவியில் படமாக பார்க்கலானார்கள்…….

***

உணவு சாப்பிட்டபின் மறுபடியும் விமல் “வயிறு வலிக்கிறது….. நான் சாகணும்….. நான் செத்து போயிடுவேன்….. என்னை கொன்னுடுங்க அப்பா” நாடகம் ஆடினான்.

“தாங்கிக்கோ விமல்…… இந்தா….. இந்த பெயின் கில்லர் சாப்பிட்டு கொஞ்சம் தூங்கு….. உன் வலி சரியாகிவிடும்” என்று கூறிய மாணிக்கம் அவனுக்கு மருந்து கொடுத்து படுக்கச் செய்தார்.

பிறகு அவர் தன் அறைக்குச் சென்று விமல் பெயரில் எடுக்கப்பட்ட ஆயுள் காப்புறுதி சான்றிதழ்களை எடுத்துப் புரட்டிப் பார்த்து கிடைக்கப்போகும் பெருந்தொகையை நினைத்து புன்னகை பூத்தார்…….

கொஞ்ச நேரம் கழித்து விமல் செத்துப் போவதுதான் சரி என்று போட்ட திட்டம் வலுவாக அவர் மனதை ஆக்கிரமித்துக் கொள்ள…… விமலின் அறைக்குள் நுழைந்து கட்டிலை நெருங்கினார்…

பாதி போர்த்திக் கொண்டு படுத்திருந்தான் விமல். அந்தப் போர்வையை முழுவதுமாக இழுத்துப் போர்த்தி விமலின் சாவுக்கு தயார்படுத்தினார்…..

ஒரு தலையணையை எடுத்துக் கொண்டு மெதுவாக கட்டிலில் அமர்ந்தார். தன் வலுவான உடலை விமல் மேல் அழுத்திக்கொண்டு கப்பென்று தலையணையை விமலின் முகத்தின் மேல் வைத்து அழுத்தி….. அழுத்தி…. அழுத்தி….

திடீரென்று எங்கிருந்து வந்தது அந்த மிருகவெறி என்று அவருக்கே புரியாமல் குரல் தழுதழுக்க “என்னை மன்னிச்சிடு விமல்….. நீ சாகரது தான் உனக்கும் நல்லது…… எனக்கும் நல்லது” என்று அவன் மேல் அப்படியே அழுத்திப் பிடித்து படுத்து கொண்டார்……. விமலின் உயிர் போராட்டம் சில வினாடிகளில் அடங்கியதும் தளர்ந்து எழுந்தார்….

வாழ்க்கையில் முதல் கொலை ….அதுவும் தன் மகனை……உடலெல்லாம் பயங்கரமாக ஆட்டம் கண்டது மாணிக்கத்திற்கு…….போர்வையை சற்று விலக்கி……அவன் கண்களை பார்க்கவே பயமாக இருந்ததால்……. நடுங்கிய கையால் கண்களை மூடச் செய்தார்…

ஏகப்பட்ட பயம் அவர் இதயத்தை கவ்விக்கொள்ள, அவன் உண்மையிலேயே இறந்து விட்டானா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளக்கூட அவருக்குத் தோன்றவில்லை…… அவ்வளவு பயம்….. போர்வையையும், கட்டிலையும் சீர்படுத்திய மாணிக்கம் மேற்கொண்டு விமலை பார்க்க பயந்தவராக மெல்ல அறையை விட்டு வெளியேறினார்.

மாணிக்கம் தன் பயமும் பதற்றமும் அடங்க முதலில் சமையலறைக்குள் நுழைந்து குளிர்சாதனப் பெட்டியில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கடகடவென்று விடாமல் முழுவதுமாக குடித்து தீர்த்தார். பிறகு தன் அறைக்கு சென்று கட்டிலில் சாய்ந்தார்… சில நிமிடங்கள் கழித்து, கைகள் இன்னமும் உதறல் காண…… கைத்தொலைபேசியை எடுத்து டாக்டர் சுதாகரிடம் தொடர்புகொண்டு தன் நாடக கதையை நன்றாகவே அரங்கேற்றினார்.

டாக்டர் சுதாகரிடம் பேசி முடித்ததும், கட்டிலை விட்டு இறங்கி அறைக்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாக நடக்கலானார்,,,,, சில நிமிடங்களுக்குப் பின் விமல் இருந்த அறைக்குச் சென்று, வாசலில் நின்றபடி உள்ளே எட்டிப்பார்த்தார்…….

‘உஷ்ஷ்ஷ்ஹ்ப்ப்ப்….’ என்று இரத்தம் உறைந்து….. தூக்கிவாரிப்போட்டது மாணிக்கத்திற்கு……

விமல் கட்டிலில் இல்லை!!

(சற்று முன் தான் மாணிக்கம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த இருந்த வேளையில்….. செத்து விட்டது போல் நடித்திருந்த விமல்….. எழுந்து, அறையை விட்டு வெளியே சென்று சமையலறைக்குள் நுழைந்து இருந்தான்…… தண்ணீர் அருந்த)

மாணிக்கம் திண்டாடினார்….. அறையின் நான்கு மூலையிலும் தேடிய பின் அறை கதவு அருகே வந்து நின்றவர் தன்னையே விழி கொட்டாமல் பார்த்து நின்றுகொண்டிருந்த விமலை கண்டு மறுபடியும்…….

‘உஷ்ஷ்ஷ்ஹ்ப்ப்ப்….’ என்று இரத்தம் உறைய சிலையாகிப் போனார்!

‘இவன் அதற்குள் ஆவியாகி…. என்னை பழிதீர்க்க வந்துவிட்டானா?’ உடலெல்லாம் மீண்டும் பயங்கரமாக ஆட்டம் கண்டது மாணிக்கத்திற்கு….. ஆனால் சில நொடிகளில் சுதாரித்துக் கொண்டவர் என்ன நடந்திருக்கும் என்பதை புரிந்து கொள்வதற்கு முயன்றார்.

“விமல்….. என்னை மன்னிச்சிடு விமல்…. உன் கஷ்டத்தை பார்க்க என் மனசு கேட்கலை….. அதனால்தான் அப்படி….. உனக்கு ஒன்றும் ஆகிவிடவில்லையே?….. நல்லவேளை…. உனக்கு ஆயுள் கெட்டி விமல்!”

தந்தையையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்த விமல், “என் ஆயுள் கெட்டி?…. ஹூம்?!!…. அப்படின்னா என் பேர்ல எதுக்கு ஆயுள் இன்ஷூரன்ஸ் எடுத்து வச்சிருக்கீங்க?…. அதுவும் அவ்வளவு பெரிய தொகைக்கு?” விமலின் தொ ணியில் அவன் ஏதோ ஒரு தீவிர முடிவுடன் இருப்பது புலப்பட்டது.

“உனக்கு எப்படி தெரியும்?…..”

“எல்லாம் தெரிஞ்சுகிட்டேன் அப்பா…….” களுக்களுக் என்று சிரித்த விமல் “நான் உன் புள்ள இல்லையா?…. அப்பா, நீ பத்தடி பாய்ந்தால் நான் 20 அடி பாய மாட்டேனா??….. அப்பா நான் உன் புள்ள அப்பா!”…. பேச்சில் ‘நீ… உன்….’ உச்சரிப்பு மரியாதைக் குறையை காட்ட ‘அழுத்தமாகவே’ இருந்தது.

“இன்னிக்கு என்னை ஆஸ்பத்திரியில் பார்த்தப்போ இருந்த அனுதாபம்…. அக்கறை…. வீட்டுக்கு வந்தப்புறம்….. சாப்பிடறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி மாறிப்போனதை நான் கவனிச்சிட்டேன் அப்பா…. உனக்கு பணம் வேண்டி இருக்கு….. இப்போ நான் செத்தால் பணம் கிடைக்கும்னு நம்பித்தானே என்னை கொலை செய்யத் துணிந்தே?”…. விமல் சீற்றத்துடன் பார்த்தான்.

“எனக்கு பணம் வேணும் தான்….. ஆனா அது இரண்டாம் பட்சம் விமல்…. உண்மையிலேயே உன் கஷ்டத்தை என்னால பார்த்துட்டு சும்மா இருக்க முடியலை!”

“சனியனேன்னு நினைச்சீங்க??….. அப்படித்தானே?” களுக்களுக் என்று மீண்டும் சிரித்தான் விமல்….அதில் ஆழ்ந்த சோகமும் இருந்தது.

“இல்லை விமல்….. இல்லை விமல்…..”

“இவ்வளவு காலம் நான் உனக்கு சனியன் தானே?… இப்போ மட்டும் எங்கே இருந்து பரிவு பாசம் அனுதாபம் எல்லாம் பொங்கிக்கிட்டு வருது?”

மாணிக்கம் தலையை தொங்கப் போட்டார்.

விமல் திடீரென்று மாணிக்கத்தின் அறையை நோக்கி வேக நடை போட்டான்….. மாணிக்கம் குழம்பியவாறு…..புலம்பியவாறு பின்தொடர்ந்தார்…. கட்டில்மேல் விமல் பெயரில் இருந்த ஆயுள் காப்புறுதி சான்றிதழ்கள் மாணிக்கத்தின் நோக்கத்தை தெளிவாக்கியது விமலுக்கு.

“இதை இப்போ சரண்டர் பண்ணா கூட…. போனஸ் எல்லாம் சேர்த்து பெரிய தொகை கிடைக்குமே?!!… சபாஷ்… சபாஷ்…. சபாஷ்….” விமல் கேலி சிரிப்பு சிரித்தான்.

“விமல் உன் வயிற்றில்…..கேன்சர்…. உன் வயித்து வலி என்ன ஆச்சு?… ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிற?”

“என்னை அப்படி நடத்தி இருக்க….. இப்போ இப்படி நடந்துக்குறேன்” விமல் மீண்டும் கேலி சிரிப்பு சிரித்தான்.

“விமல் உன் பேச்சு சரியில்லை….. என்ன ஆச்சு உனக்கு?…. சொல்லு”

“சொல்றேன்…… சொல்றேன்….. எல்லாத்தையும் இப்போ சொல்லத்தானே போறேன்?…….” எல்லாம் அறிந்தவன் போல் மாணிக்கத்தின் லாக்கர் சாவியை எடுத்து லாக்கரை திறந்தான்; ஆயுள் காப்புறுதி சான்றிதழ்களை அதில் வைத்து, உள்ளே இருந்த துப்பாக்கியை வெளியே எடுத்தான்…… மாணிக்கத்தை நோக்கி நடந்தான்…….

“இந்தத் துப்பாக்கியை எடுத்து உன்னை சுட்டுப் பொசுக்கத் தான் போன வாரம் ஒருநாள் துடிதுடித்து…. லாக்கரை திறந்து பார்த்தபோது தான்இந்த இன்ஷூரன்ஸ் விஷயம் தெரிஞ்சுக்கிட்டேன்…… பந்திக்கு முந்தினா தான் சோறு கிடைக்கும் என்கிற கேவல நிலைக்கு நீ என்னை வளத்து வச்சிருக்க இல்லையா?….. அதனால தான் இந்தத் துப்பாக்கில குண்டுகளை நான்…… நான்தான் போட்டு ரெடியா வச்சி இருக்கேன்!!

‘நான் சாகணும் ….. நான் சாகணும்…. என்னை கொன்றுவிடுங்க அப்பா …. என்னை கொன்றுவிடுங்க அப்பா… என்று நாடகமாடி (விமல் உண்மையாகவே இப்பொழுது அது போல் செய்து காட்டினான்)…. உன் அனுதாபத்தை எல்லாம் வேணும்னு நான் ஈர்த்தது….. உண்மையில் நீ என்னை கொலை செய்யத் தூண்டத் தான்…… துப்பாக்கிய உன் கைல கொடுத்து ‘என்னை கொன்றுவிடுங்க அப்பா’னு தூண்டத் தான் என் அடுத்த கட்ட நாடகமா இருந்துச்சு….. என்னை கொலை பண்ணச் சொல்லி தூண்டி…. திடீர்னு உன்னை சுட்டு…. தற்கொலை பண்ணிக்கிட்டதா கதையளக்க இருந்தேன்….. ஆனா நீ வேற ரூட்ல போயிட்டே!…..

ஆனாலும் நான் அங்கேயும் சாமர்த்தியமாக நாடகமாடி உன்னை ஏமாற்றி விட்டேன்” என்று விமல் மீண்டும் கேலி சிரிப்பு சிரித்தான்.

“எல்லாம் நாடகமா?…. என்ன சொல்றே நீ?……”

“பின்னே?….. உன்னோடு சேர்ந்து நீ செஞ்ச பாவத்துக்கு நானும் நடுத்தெருவில் நிக்கனுமா?….. இது என்ன நியாயம்? உன்னால சமுதாயத்தில் எனக்கு எவ்வளவு அவமானம் தெரியுமா உனக்கு?…. தெரியுமா உனக்கு?…. எல்லாரும்….. எல்லாரும் என் மேல…. என் மேல….. காரித் துப்பறாங்க…… யு பிளட்டி ஓமனைசர்…… பொம்பள பொறுக்கி….நாயே!” பயங்கர ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய விமல் மாணிக்கத்தின் முகத்தில் காரித் துப்பினான்……

“என் நெருங்கிய ஸ்நேகிதியையும் விட்டுவைக்கலை நீ” தந்தையை மேலும் பல கடும் சொற்களால் பேசி நெருங்கினான்.

“நான் செத்தா உனக்கு நல்லது தானே?….. இந்தா…. சுடு…. சுடு….” துப்பாக்கியை மாணிக்கத்தின் வலது கையில் திணித்தான் விமல்.

முழு உண்மை அறிந்த அதிர்ச்சியில், டாக்டர் சுதாகர் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்தால் என்ன சொல்லப்போகிறோம்,,,, செய்யப்போகிறோம் என்ற குழப்பத்தில்…… மகனுக்கு தன் மேல் எவ்வளவு வெறுப்பு இருந்தால் இப்படியெல்லாம் பேசுவான், நடந்து கொள்வான் என்கிற குற்ற உணர்வில்……. அலுவலக மோசடி வழக்கில் என்ன தீர்ப்பாகி என்ன தண்டனை கிடைக்குமோ என்கிற பயத்தில்……. முற்றிலும் இடிந்து போனவராக கட்டிலில் சரிந்தார் மாணிக்கம்.

“என்ன யோசிக்கிற?….. மை டியர் பொம்பள பொறுக்கி?…. மகனை கொல்லத் துணிந்த கிரிமினல் நீ….. துப்பாக்கியை யூஸ் பண்ணத் தெரியாதா?….. இதோ…. இதோ…. இதை இப்படி….. பிடித்து….. இப்படி…… குறிபார்த்து….” திடீரென்று தன்னை நோக்கி பிடிக்க செய்த துப்பாக்கியை திசைதிருப்பி விமல் தன் தந்தையின் வலது பக்கம் இழுத்துச் சென்று அழுத்திப்பிடித்தான்

“இது ஓகே தானே சார்?…… இப்போ நீ செத்தா உனக்கும் நல்லது……. எனக்கும் நல்லது!” விமல் மீண்டும் களுக்களுக் என்று சிரித்தான்.

“கொஞ்ச நேரம் முன்னாடி என்னை சாவின் வாசலுக்குப் போய் வரச் செய்த நீ….. இப்போ…… நீ…… சுத்தமா….. செத்…..துப்……போ…… செத்…..துப்……போ”

‘ப்ப்டூம்….ம்ம்ம்’

***

டாக்டர் சுதாகருக்கு……. முதன்முறையாக அந்த காட்சியை பார்த்த சில போலீசாருக்கும்……. ஏன் விமலுக்குமே அந்த காட்சியை டிவி திரையில் கண்டதும் உடல் முழுக்க தூக்கிவாரிப்போட்டது வாரிப்போட்டது.

துப்பாக்கியில் விமல் தன் கைரேகையை அழித்து…. அதை உயிர் பிரிந்து கொண்டிருக்கும் தந்தையின் கையில் பதியவைத்து…. பக்கத்தில் கிடத்தி…..

டிவி திரையில் படம் முடியும் முன்னரே டாக்டர் சுதாகர் தடாரென்று எழுந்து அருகில் அமர்ந்திருந்த விமலை நோக்கித் தாவி…. அவனை தாறுமாறாக அடித்து உதைத்தார்… “உன் பேச்சை கேட்டு உன்னோடு சேர்ந்து நானும் நாடகமாடினேனே?”….. ஆத்திரம் தீரவில்லை டாக்டர் சுதாகருக்கு

போலீசார் அவரை பிடித்து இழுக்க…. அனைவரின் கவனமும் டாக்டர் பக்கம் திரும்பி இருக்க…… விமல் திடுதிப்பென்று ஓடிச் சென்று, அருகில் இருந்த ஜன்னல் கதவை அடைந்து அதை திறந்து 5 மாடியிலிருந்து வெளியே குதித்தான்….. நொடிப்பொழுதில் மாண்டு போனான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *