நிலையில்லா மீன்கள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 24, 2013
பார்வையிட்டோர்: 13,472 
 

அடர் மஞ்சள் பூக்களை சாலை எங்கும் யாரோ அள்ளி தெளித்து விட்டு சென்றிருக்கிறார்கள் போல. வளைவுகள் அற்ற நீண்ட அந்த சாலை சாலையின் இருமருங்கிலும் நின்ற‌கொன்றை மரத்தில் இருந்து விழுந்திருந்த பூக்களை பார்க்கும் போது எனக்கு அப்படித் தான் தோன்றியது. ஒரு கையால் ஸ்டியிரிங்கை பிடித்துக் கொண்டே மற்றொரு கையால் அவளின் கரம் பற்றி இறுக்கினேன். திரும்பிப் பார்த்து ஒரு புன்னகை ஒன்றை வீசினாள். மஞ்சள் பூக்களை அள்ளி முகத்தில் வீசியதை போன்ற உணர்வு. அதிக வாகனங்கள் இல்லாததால் மெதுவாகவே எனது காரை செலுத்திக் கொண்டிருந்தேன். எங்கள் விரல்கள் மட்டும் பேசிக்கொண்டிருந்தன.

டிரிங் டிரிங் டிரீரீரீரீங்…

“ஹே ஹலோ சஞ்ஜய், ஜஸ்ட் காட் அப் மேன்”

“…..”

“யா, ஒகே,ஐ யாம் கம்மிங், ஐ வில் பிக் யூ அப் அட் 8.30, வில் கால் யூ வென் ஐ ஸ்டார்ட்…”

“…..”

“ஓகே, மேன், பை”

கனவை கலைத்த அந்த அழைப்பு எனக்கு இன்று சென்னை ஐஐடியில் நடைபெற‌இருக்கும் பயிற்சிக்கு போவதற்காக. நான் சென்னையில் ஒரு ப்ரெஞ்சு பன்னாட்டு நிறுவனத்தில் சீனியர் கன்சல்டன்ட். அழைத்தது எனது சகா. சென்னைக்கு புதுசு. அவளுடனான என் கனவை கலைக்க அவனுக்கு வாய்ப்பை கொடுத்தது நான் தான், இன்று காலை பயிற்சிக்கு அழைத்துப் போவதாக நேற்று சொல்லியிருந்தேன். அவனிடம் சொல்லியிருக்காவிட்டால், நீண்ட அந்த மஞ்சள் பூக்கள் இறைக்கப் பட்டிருந்த சாலையில் இந்த சமயம் நாங்கள் போய் கொண்டிருப்போம்.

மணி 7.30 ஆகியிருந்தது. இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாமா என்ற எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. சனிக்கிழமைகளும் ஞாயிற்றுக்கிழமைகளும் ஏற்படுத்தாத ஒரு எண்ணம் அது. வார நாட்களில் மட்டுமே இந்த அதிமதுர சோம்பேறித்தனம் அதிகமாக தலைதூக்கும். அது ஒரு அருமையான உணர்வு. இந்த ஜென்மத்தின் தூக்கம் முழுவதையும் இப்போதே தூங்கிக் கழித்து விடப்போகிறோம் என்ற உணர்வு. இனிமேல் தூங்கவே நேரம் கிடைக்காது இப்போதே தூங்கித் தீர்த்துவிடுவது என்ற நிலை தரும் தருணம்.

சட்டென தலையணைக்கு அந்தப்பக்கம் போட்ட செல்போனை எடுத்து மணியைப் பார்த்த போது மணி 7.45 ஆகியிருந்தது. செல்போனில் வேறு ஏதாவது மெசேஜோ மிஸ்டு காலோ இருக்கிறதா என்று பார்த்தேன், ஒன்றும் இல்லை. விருட்டென எழுந்து பல் தேய்த்துவிட்டு. சாப்பிட எதாவது இருக்கிறதா என்று ப்ரிட்ஜை திறந்துபார்த்தால், ஆளில்லா அந்தமான் கடற்கரைகள் போல் சுத்தமாக இருந்தது, தனிமை உறுத்தியது.

இருபது நிமிடங்களில் தயாராவிட்டேன். பல்லாவரம்- துரைப்பாக்கம் பைப்பாஸ் ரோடு. அன்று சனிக் கிழமையாதலால் சாலையில் போக்குவரத்து குறைவு தான். செல்போன் சிணுங்கியது.

“ஹே சஞ்ஜய், ஆன் தி வே மேன்”

“…..”

“யூ பீ தெ நியர் பெருங்குடி டோல்கேட்”

“…..”

“யா, வில் பி தேர் இன் ட்வென்டி மினிட்ஸ்”

வேளச்சேரி-தாம்பரம் சாலையை கடந்ததும் கார் நூறை தொட்டிருந்தது. முன்பு இது சதுப்பு நிலப்பகுதி. இப்போது அதற்கான அடையாளமே இல்லை. இடது புறம் முழுவதும் குப்பை மலை. வலது புறம் வரண்ட முட்புதர் காடு போல் காட்சியளிக்கிறது. இன்னும் பத்து வருடங்களில் பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள் இந்த குப்பை மலையையும் வறண்ட முட்புதர் காடாக இருக்கும் இந்த பகுதிகளை அழகு படுத்தலாம். திருவான்மியூர் முதல் சோழிங்கநல்லூர் வரை இப்போது அப்படி தான் இருக்கிறது, பத்து வருடங்களுக்கு முன் அப்படி இல்லை என்று அலுவலக நண்பர்கள் சொல்வதுண்டு.

துரைப்பாக்கம் டோல்கேட். முன்னால் ஒரு கழிவுநீர் ஊர்தி. டோல்கேட் ஊழியரிடம் கழிவுநீர் ஊர்தியின் ஓட்டுனர் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார். இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஆனது. அவர்கள் பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது இது போன்ற இடங்களில் காத்திருத்தல் என்பது பொறுமையை இழக்க வைக்கும். ஆனால் மணிக் கணக்கில் அவளுக்காக காத்திருந்த நாட்கள் உண்டு.

ஒரு சம்பவம். ஒரு நாள் மாலை வேளையில் இரவு உணவிற்கு போகலாம் என்று அவளிடம் இரண்டு வாரங்களுக்கு முன்பே சொல்லியிருந்தேன். ஏழு மணிக்கு உணவகத்திற்கு போவதாக ஏற்பாடு. அவளது அலுவலகத்திற்கு வந்த போது மணி ஆறு. பதினைந்து நிமிடங்களில் வருவதாக சொன்னவள் வந்தது மூன்று மணி நேரம் கழித்து. அந்த காத்திருத்தல் என்னை பொறுமையிழக்க செய்யவில்லை. ஒருவேளை இந்த காத்திருத்தலுக்கு பழக்கப்பட்டுவிட்டிருந்தாலோ என்னவோ. எப்போது வருவாள் என்று கண்ணாடியை பார்த்தே காலம் கரையும், சில நாட்களில் காத்திருந்து கண் அயர்வதுண்டு. தலையில் பட் என ஒரு அடி விழுந்து எழுந்து பார்த்தால், “சாரி டா” என்பாள், கொஞ்சம் வேலை என்று கண்களை உருட்டுவாள். காத்திருத்தலின் பயன் கிடைத்தது போன்ற உணர்வு எழும்.

கழிவுநீர் ஊர்தி நகர்வது போல தெரியவில்லை. பின்னால் வண்டி ஏதுவும் இல்லை. ரிவர்ஸ் கியர் மாற்றி பின்னால் வந்து டோல்கேட்டின் அடுத்த கவுன்டருக்குள் நுழைந்து வெளியேறினேன். செல்போனை எடுத்துப்பார்த்தேன், எந்த மெசேஜும் இல்லை. ஏன் இன்னும் அழைக்காமல் இருக்கிறாள். இரவு சொல்லியிருந்தேன். காலை எஸ்எம்எஸ் பண்ணு என்று. பழைய மஹாபலி புரம் சாலை வந்து இடது புறம் திரும்பி பெருங்குடி டோல்கேட் தாண்டியதும் சஞ்சய் ஞாபகம் வந்தது. வண்டியை ஓரம் கட்டிவிட்டு அவனை போனில் அழைத்தேன்.

“வேர் ஆர் யூ மேன், ஐ ஜஸ்ட் க்ராஸ்ட் பெருங்குடி டோல்கேட்”

“……”

“ஒகே, யூ பீ தேர்”
பெருங்குடி டோல்கேட் தாண்டி நின்று கொண்டிருந்த சஞ்சயை ஏற்றிக் கொண்டு ஐஐடி நோக்கி வண்டியை செலுத்தினேன். ஒஎம்ஆர், இந்த சாலை நவீன சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது. மத்திய கைலாஷ் முதல் தரமணி வரையிலான சாலையில் சுமார் 15 வருடங்களுக்கு முன் சரளைக் கற்களுக்கு நடுவே பயணித்திருக்கிறேன். ஞாயிற்றுக் கிழமை பிற்பகல்கள் என்பது எவ்வளவு கொடுமையானது என்பது தனிமையை அடிக்கடி ருசிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு தான் தெரியும்.

இந்த சாலையில் அந்த தனிமையை ருசித்திருக்கிறேன். எப்போதாவது தூசியை மேலெழுப்பி செல்லும் 5சி பேருந்து. யாருமே இல்லாத பாழடைந்த பெரிய கட்டிடம் போல் நிராதரவற்று நிற்கும் கஸ்தூரிபாய் நகர், இந்திரா நகர் ரயில் நிலையங்கள், அவப்போது அங்குமிங்கும் பறக்கும் ஒன்றிரண்டு காக்கைகள் என்று தனிமைக்கு ஏற்ற அத்தனை வசதிகளையும் தரும் சாலை, இன்று வாகன நெருக்கடி, பள பள சாலை, நடுவில் செடிகள் என்று முற்றிலும் மாறியிருந்தது, இந்த சாலை இனி ஒரு போதும் தனிமைக்கான தளத்தினை தராது.

செல்போனை எடுத்துப்பார்த்தேன். மெசேஜ் எதுவும் வரவில்லை. மத்திய கைலாஷ் அருகே கொஞ்சம் ட்ராபிக்.

“வாட்ஸ் த ஆஃப்டர்நூன் ப்ளான் டியூட்”
“ஹவ் ப்ளான்ட் நத்திங்க் யெட், வாட் அபவுட், யூ”
“வானா கோ டு ஆஃபீஸ், ஹாவ் சம் திங்க் டு, தென் டு ஹோம், தட்ஸ் இட்”
“ஓகே”

டிராபிக்கை தாண்டி ஐஐடிக்குள் நுழைத்தோம். பதிவு செய்துவிட்டு சிறிது தூரம் சென்றவுடன் தான் உறைத்தது, இது வேறு உலகம். அடர் மரங்கள், ஏதோ காட்டிற்குள் செல்வதைப் போன்ற உணர்வு. சில நூறு வருடங்களுக்கு முன் இது அடர்ந்த காடாக இருந்திருக்க வேண்டும். பெரிய ஆலமரங்களும் புதர்களும் நிறைந்து ஒரு பரப்பரப்பான நகரத்தின் வாசனை சிறிதும் இல்லாமல் வேறு உலகமாக காட்சியளித்தது. வண்டியை நிறுத்திவிட்டு நடக்கலாம் என்று நினைத்தேன். பயிற்சி வகுப்பு தொடங்குவதற்கு சில நிமிடங்களே இருந்தது. பசி வேறு. வழியில் எதிர்பட்ட ஒருவரிடம் பயிற்சி வகுப்பு நடக்கும் ரங்கனாதன் பில்டிங்க் எங்கு என்று கேட்டுத் தெரிந்து கொண்டோம்.

அந்த அறையில் ஒருரிவரே வந்திருந்தனர். ஒன்பது மணிக்கு வகுப்பு தொடங்க வேண்டும். ஓரமாக ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டேன். அந்த வளாகத்தின் பச்சை கண் முன் வந்து நின்றது. ஒரு பெரிய கானகத்தின் நடுவில் உயர்ந்து வளர்ந்த மரமொன்றின் மீதேறி நின்று காண்பதை போன உணர்வு. மனம் பயணப்படுவதை உணர்கிறேன். அறையில் மற்றவர்கள் வந்ததும், எங்களுக்கு வகுப்பு எடுப்பவர் தனது பிரச‌ங்கத்தை தொடங்கியதும் என்னை பாதிக்க வில்லை. ஆனால் எஸ்எம்எஸ் வரவில்லை என்பது மட்டும் என்னை ஏதோ செய்து கொண்டிருந்தது.

தூரத்தில் ஒரு காகம் தனியாக பறந்து கொண்டிருந்தது. அதன் கூடவே பயணிக்க ஆசை. இந்த கானகத்தின் ஒவ்வொரு மரமாக ஒவ்வொரு கிளையாக காண வேண்டும். பெருங்குடும்பத்துடன் வாழ்பவர்களுக்கு தனிமை கிடைத்திராத வரம் தான், ஆனால் பெரும்பாலும் வாழ்வில் தனிமையோடு கழித்த என்னைப் போன்றவர்களுக்கு தனிமை மழை போல, எப்போது வரும் என்று காத்திருப்பதுண்டு, வந்துவிட்டால் எப்போது முடியும் என்ற அடுத்த காத்திருப்பு துவங்கும். காகத்தை காணவில்லை. நான் பறந்துகொண்டிருந்தேன்.

“லெட்ஸ் கேவ் எ டீ பிரேக், வில் மீட் அகெய்ன் இன் டென் மினிட்ஸ்” என்ற பயிற்சியாளரின் குரல் கேட்டு தரை தொட்டேன். அறையை விட்டு வெளியே வந்ததும், வலப்பக்கத்தில் ஒரு மேசை மேல் தின்பதற்காக ஏதோ வைத்திருந்தனர். அருகில் சென்று பார்த்த போது அது கீரை வடை என்று தெரிந்தது, ஒன்றை எடுத்து கடித்து மென்று கொண்டே செல்பொனை எடுத்துப் பார்த்தேன். மூன்று எஸ்எம்எஸ்-கள் வந்திருந்தது. இன்பாக்ஸை திறந்து பார்த்தால் இரண்டு பெர்சனல் லோன் வேண்டுமா என்றிருந்தது. மற்றது கொசு வலை அடித்துத் தருகிறார்களாம். எரிச்சல் தலைக்கேறியது.

மணி 11 கடந்திருந்தது காலையில் இருந்து எந்த போன் காலும் இல்லை மெசேஜும் இல்லை. இது போல் எப்போதும் இருந்தது இல்லை. பதட்டம் லேசாக எட்டிப்பார்த்தது, இருந்தாலும் மனம் எனோ திரும்ப அழைக்கவோ தகவல் அனுப்பவோ ஒத்துழைக்கவில்லை. ஏன் இப்படி என்று யோசித்துப் பார்த்தேன். காரணம் கிடைக்கவில்லை. ஒருவித இனம்புரியாத கனத்தினுடனே மனம் இருந்தது. பயிற்சியிலும் கவனம் இல்லை. இன்று வந்திருக்க வேண்டாமோ என்று கூட தோன்றியது. அறையை எட்டிப்பார்த்தேன் அனைவரும் உள் நுழைந்து விட்டிருந்தனர். இப்படியே வெளியேறி விடலாமா என்று தோன்றியது. நோட்ஸும் உபகரணங்களும் அறையினுள் மாட்டிக்கொண்டன. மேலும் இப்படி பாதியில் காரணம் ஏதும் இல்லாமல் வெளியேறுவது சரியாக படவில்லை. இன்னும் இரண்டு மணி நேரம் கடத்திவிட்டு வீட்டுக்குப் போய்விடலாம் என்று முடிவெடுத்து அறையினுள் நுழைந்தேன்.

அது அட்வான்ஸ்டு இஞ்சினியரிங்க் இன் மெசின் டிசைன் என்ற இயந்தரவியல் தொடர்பான பயிற்சி. மிகவும் அரிதாக கிடைக்கும் வாய்ப்பு. நான் வந்திருந்தும் தவறவிடுகிறேன் என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. கவனம் பயிற்சியில் செல்லவில்லை. பொதுவாக இது போன்ற வகுப்பறை பயிற்சிகளின் போது முன் வரிசையில் அமர்ந்தாலும் ஒரு கட்டத்தில் தூங்கி விழுவதுண்டு. இன்று அது நிகழவில்லை. முழுகவனத்துடன் இருந்தேன் பயிற்சியில் அல்ல ஏதேனும் தகவல் வராதா என்பதில்.

எண்ணங்கள் நினைவுகளை கிண்டிக்கொண்டிருந்தது. அழகாக நினைவுகளை அசை போடுவதன் சுகம் தனித்துவமானது. மனதில் பரவும் பரவசத்தால் சிரிப்பு வரும், நாணம் வரும், அனைத்து மகிழ்வான உணர்வுகளின் கூட்டுக்கலவையாக பொங்கி வரும் தருணமாக இருக்கும். இப்போது அத்தருணத்தை கடந்து கொண்டிருக்கிறேன். பல வித நினைவுகள் ஆனால் அனைத்தும் மகிழ்வானவை. சில நிமிடங்களாக இருந்த மன இறுக்கம் விலகி மனது இலகுவானது போன்ற உணர்வு. இதே உணர்வில் இன்றைய நாள் முழுதும் கழிந்து விடாதா என்றெழெம்பி வந்த எண்ணைத்தை மறுதலிக்க முடியவில்லை.

ஒருவழியாக பயிற்சி வகுப்பு முடிந்தது. சஞ்சய் வீட்டிற்கு செல்வதாக கூற அவனை ஐஐடி மெயின் கேட்டில் விட்டுவிடுவதாக கூறினேன். மீண்டும் ஒரு அழகான பயணம் ஐஐடி வளாகத்தில். ஒருநாள் அவளைக் கூட்டிக்கொண்டு வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். கார் கொண்டு வரக்கூடாது. சைக்கிளிலோ அல்லது நடந்தோ இந்த வளாகத்தை இந்த கானகத்தை சுற்றி வர வேண்டும். நல்ல சாரல் மழைக்காலமாக இருந்தால் நன்றாக இருக்கும். மரங்களின் இலைகளின் வழியே இறங்கும் மழைச் சொட்டுக்கள் தலையில் நங் நங்கென்று விழும். கானகம் ஆதலால் காற்றின் வேகம் இருக்காது அதனால் சாரலில் சுகத்தை அனுபவிக்க முடியாது. இருந்தாலும் அந்த குளுமை, சிறு இருட்டு என்று கால நிலை நல்ல ஒரு சிறு நடைக்கான இடமாக இது இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் வருவாளா என்ற கேள்வி எழாமல் இல்லை. சொல்லிவிடுவோம். வருவதும் வாராததும் அவள் இஷ்டம்.

சஞ்சயை மெயின் கேட்டில் விட்டு விட்டு அலுவலகத்திற்கு கிளம்பினேன். வீட்டிற்கு போக வேண்டும் என்ற எண்ணம் இப்போது மாறிவிட்டிருந்தது. செல்போனை எடுத்துப்பார்க்கலாம் என்று எண்ணி. வேண்டாம் என்று எண்ணைத்தை மாற்றினேன். ஒரு வேளை எந்த மெசேஜும் வரவில்லை என்றால் இந்த கணத்தின் நிலை மாறலாம் மீண்டும் இறுக்கம் தொற்றிக்கொள்ளும். அலுவலகம் வந்து மேசையில் இருந்த மடிக்கணினியை உயிர்பிக்கச் செய்து, அலுவல் ஈமெயில்களை பார்த்துவிட்டு சிலவற்றிற்கு விளக்க பதில்களை அனுப்பினேன். அடுத்த வாரத்திற்காக வேலை திட்டத்தை எடுத்துப்பார்த்தேன். பெரிய அளவிலான பிரச்சனைகள் வரக்கூடிய வேலை ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. பசிக்க ஆரம்பித்திருந்தது. சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பலாம் என்று அங்கிருந்து அகன்றேன்.

வார இறுதி நாட்களில் சென்னையில் உணவகங்களுக்கு போவதென்பது பெரும் தலைவலி பிடித்த ஒன்று. நல்ல பசியுடன் செல்வோம். ஆனால் அங்கு நமக்கு முன்பே நான்கைந்து குடும்பங்கள் மேசைகளுக்காக காத்துக்கொண்டிருப்பர். குறைந்தது அரைமணி நேரம் காத்திருக்க வேண்டும். அவளுக்காக காத்திருப்பதை தவிர மற்ற காத்திருத்தல்களை அறவே வெறுக்கும் நான் பெரும்பாலும் உணவக‌ங்களை வார இறுதிநாட்களில் தவிர்த்துவிடுவதுண்டு. தனியாக இருக்கும் நாட்களில் இது போன்று போய் காத்திருப்பதற்கு பதிலாக பட்டினி கூட கிடந்ததுண்டு. இப்போது நல்ல பசி. காத்திருக்கும் மனநிலையில் இல்லை. ஏதேனும் ரோட்டோர பிரியாணி கடை இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே சென்றேன். ஒன்றை பார்த்துவிட்டேன். கூட்டம் இல்லை, நான்கைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். பிரியாணியை வாங்கி கொண்டு வீட்டிற்கு கிளம்பினேன்.

வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு, ஆர்வம் தாளாமல் செல்போனை எடுத்துப் பார்த்தேன். இப்போதும் எந்த மெசேஜும் இல்லை. இறுக்கம் கவ்வ ஆரம்பித்து இருந்தது. இது போல என்றும் நிகழ்ந்தது இல்லை. இவ்வளவு நேரம் எந்த தகவலும் இல்லாமல் இருந்தால் நான் அழைத்தோ அல்லது எஸ்மெஸோ அனுப்பி யிருப்பேன். ஆனால் நான் அதை இன்று செய்யவில்லை. இது ஈகோவா என்ற ஐயம் எழுந்தது. ஈகோ என்றிருந்தால் எனக்கு அவள் மேல் கோவம் வந்திருக்கும் ஆனால் கோவம் முற்றிலும் இல்லை. என்னுள் நடக்கும் மாற்றங்களை புரிந்து கொள்ள முடியவில்லை. மன இறுக்கம் அதிகமாக சிறிது நேரம் தூங்கலாம் என்று என்றெண்ணி, படுத்து கண்ணயர்ந்தேன்.

தண்ணீரின் உள்ளே நீந்துகிறேன். மூச்சடைக்கவில்லை. வெகு தூரம் நீந்திச் செல்கிறேன். எங்கும் தண்ணீர் மட்டுமே. கீழே நிலம் இல்லை. சுற்றிலும் தண்ணீர் தண்ணீர். எங்கு செல்கிறேன். தீடீரென முழிப்பு. தண்ணீரில் இல்லை, கட்டிலில் தான் இருக்கிறேன். ஒன்றும் விளங்கவில்லை. சூன்யம். வெகுநேரம் தூங்கிவிட்டிருந்தேன் போல. மணியை பார்க்க செல்போனை எடுத்தேன். இரண்டு மெசேஜ்களும் மூன்று மிஸ்டு கால்களும் இருந்தன. ஆர்வத்துடன் இரண்டையும் பார்த்தேன். அவள் இல்லை. மணி மாலை ஆறு ஆகி இருந்தது. தண்ணீர் கனவு ஞாபகம் வந்தது. மீன் போல எந்த கஷ்டமும் இன்றி இயல்பாக‌ மூச்சு மூச்சு முட்டாமல் எப்படி நீந்தினேன் என்று எண்ணிப்பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. திடீரென வீட்டில் மீன் தொட்டி வாங்க வேண்டுமென்ற எண்ணம் வந்தது.

பத்தாவது நிமிடம் அலங்கார‌ மீன்கள் விற்கும் கடையில் இருந்தேன். மீன்கள் வளர்க்க வேண்டும் என்பது பல ஆண்டுகால ஆசை, ஏறத்தாழ ஒரு இருபதாண்டு ஆண்டுகால ஆசை என்று கூறலாம். பள்ளியில் படிக்கும் காலத்தில் பள்ளி விட்டு வீட்டுக்குப்போகும் போது மாணவர்கள் ஒரு பாலீத்தீன் பையில் சின்ன சின்ன அழகான பல வண்ண மீன்களை வாங்கிச் செல்வதை பார்த்தபோது தொடங்கிய ஆசை அது. நண்பர்கள் வீட்டுக்கு செல்லும் போது, மீன் தொட்டி இருந்தால் அதன் அருகிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிடுவதுண்டு.

“டேய் மீனுகிட்ட‌யே இருக்காத‌, அதுக்கு ஒரு மாதிரி இருக்கும்”

“போடா, பாக்க‌ எவ்வ‌ள‌வு அழ‌கா இருக்கு, அது கூட‌வே நானும் நீந்த‌ணும் போல‌ இருக்குடா”

“வெள‌ங்கும், கெள‌ம்பு நீ, அங்க‌ இருந்து, மீன் மேல‌ க‌ண்ணு வைக்காத‌”

மீன்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளின் உற்ற‌ தோழ‌ர்க‌ளாக‌வே இருந்த‌ன‌. அவ‌ற்றிற்காக‌ அவ‌ர்க‌ள் செல‌வு செய்ய‌ த‌ய‌ங்கிய‌தே இல்லை. வாங்கித்தின்ன‌ கிடைக்கும் ப‌ண‌ம் எல்லாம் மீன்க‌ளுக்கே போகும்.

“சொல்லுங்க‌ பாஸ், என்ன வேணும்”

“மீன் தொட்டி ஒன்னு வேணும், மீடிய‌ம் ஸைஸ்ல‌”

“ஆர்டின‌ரி 250 ருபா , இம்போர்ட‌ட் 400 ருபா”

“ஆர்டின‌ரி போதும், அப்புறம் அந்த கவர் மட்டும் போதும், தொட்டிமேல வைக்கிறது”

“த‌ம்பி சாருக்கு அந்த‌ தொட்டியும், கவரும் எடுத்துவை, மீன் வச்சுருக்கீங்களா சார்”

“இல்ல இனி தான் வாங்கணும், இப்ப தான் மொன்மொதலா வாங்க போறேன், என்ன மீன் வளக்கலாம்”

“கோல்ட் வாங்கிகுங்க சார், ஒரு மாசத்துக்கு பாருங்க அதுக்கு அப்புறம் வேற வாங்கிக்கலாம்”

“ம்ம்ம்ம், சரி ஒரு அஞ்சு ஜோடி, அப்புறம் அந்த பபிள் பபிளா வருமே ஒன்னு”

“ஆக்ஸிஜன் மோட்டாரா”

“ஆங்..அது ஒன்னு”

அரை மணி நேரத்தில் எனது மீன்களும் மீன் தொட்டியும் அதற்கான உபகரணங்களும் தயார். இன்னும் சில மணி நேரத்தில் எனது வீட்டில் மீன்கள் இருக்கப்போகின்றன. என‌து இருப‌து வருட‌ ஆசை நிறைவேற‌ப் போகிற‌து. எல்லாத்தையும் காரில் கொண்டு வ‌ரும் போது வ‌ழ‌க்க‌த்தை விட‌ மிக‌ மிக‌ மெதுவாக‌வே வ‌ண்டியை செலுத்தினேன். மேடுப‌ள்ள‌ங்க‌ளில் பூபோல‌ ஏற்றி இற‌க்கினேன். தொட்டியையும் அதனுள் பாலித்தீன் பையுள் அடைக்க‌ப்ப‌ட்டு சிறு இட‌த்தில் நீந்த‌ முடியாம‌ல் சுற்றி வ‌ரும் மீன்க‌ளையும் நிமிட‌த்துக்கொருமுறை பார்த்துக்கொண்டேன்.

மெதுவாக படிக்கட்டுகளில் மீன் தொட்டியையும் மீன்களையும் குழந்தையை எடுத்துச்செல்வது போல கொண்டு சென்று வீட்டு மேசையில் வைத்தேன். ஒரு பெரிய சாதனை செய்ததை போன்ற உணர்வு மனமெங்கும். முட்டியை மடக்கி “யெஸ்” என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது. பாலித்தீன் பையை தடவிப்பார்த்தேன். மீன்கள் இன்னும் சுற்றிக்கொண்டிருந்தது. இப்போது உள்ளதை போன்ற‌ உணர்வு அரிதாகவே எற்படுவதுண்டு, முதல் வேலை கிடைத்த போது, முதல் காதலை சொன்ன போது, முதல் கார் வாங்கிய போது… என்று பல முதல்களின் போது இந்த உணர்வு ஏற்பட்டதுண்டு, இந்த உணர்வினை எப்போதும் தனிமைகளில் என்னுடன் மட்டுமே பகிர்ந்துள்ளேன். இன்றும்.

யாரிடமாவது சொல்ல வேண்டும் என்றிருந்தது. அவளிடம் சொல்லலாம் என்று தோன்றியது. செல்போனை எடுத்துப்பார்த்தேன். மெசேஜ் எதுவும் இல்லை. வைத்துவிட்டேன். மீன் தொட்டியை பதமாக இடம் பார்த்து வைத்து விட்டு, உள்ளே போட்டு வைக்க வேண்டிய அலங்கார கற்களை கழுவி சுத்தம் செய்து, தண்ணீர் நிரப்பி, ஆக்ஸிஜன், வாட்ட பில்டர் மோட்டார்களை பொருத்தி குமிழ் வரச்செய்து, பாலித்தீன் பையை திறந்து மீன்களை உள்ளே விட்டதும், துள்ளிக் குதித்து விளையாடும் என்று எதிர்ப்பார்த்து ஏமாந்தேன்.

அனைத்தும் தொட்டியின் ஒரு மூலையில் போய் ஒதுங்கின. நீந்தவில்லை, லேசான பயம் கவ்வத் தொடங்கியது. தண்ணீர் ஒத்துக்கொள்ளவில்லையோ. கடைக்காரரிடம் முன்பே கேட்டிருந்தேன். எங்கள் பகுதி நிலத்தடி நீரால் பாதிப்பு உண்டாகுமா என்று அவர் ஒன்று இருக்காது என்று சொல்லியிருந்தார். சிறிது உணவினை எடுத்துப் போட்டேன். மீன்கள் அந்த இடத்திலேயே இருந்தன, நகரக் கூட இல்லை. தவறு செய்துவிட்டோமோ என்று எண்ணினேன். புது தண்ணீர் பழக சில நேரம் ஆகும் என்று தேற்றிக் கொண்டேன். மீன்களை கொண்டு வந்தபோது இருந்த மகிழ்வான மனநிலை இப்போது இல்லை. என்ன செய்யலாம் என்ற யோசனை ஓடத்தொடங்கியது. திரும்ப கொண்டு கொடுத்துவிடுதல் நலம் என்று மனம் சொன்னது. 15 நிமிடங்கள் சென்றிருக்கும் மீன்கள் சிறிது சிறிதாக அசையத் தொடங்கின.

கொஞ்சம் நிம்மதி வந்தது. தீடீரென்று வீட்டில் மின்சாரம் நின்றது. தொட்டியில் இருந்த மோட்டார்களும் நின்றன. செல்போனில் இருந்து பேட்டரி குறைந்த தற்கான சத்தம் வந்தது. எடுத்துப்பார்த்த போது இன்னும் பத்து பதினைந்து நிமிடங்களில் ஸ்விட்ச் ஆப் ஆகிவிடும் என்று தோன்றியது. மின்சாரம் வர குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகும். காற்றாடி சுற்றாததால் புழுங்கத் தொடங்கியது. மின்சாரம் வரும் வரை மாடிக்கு செல்லலாம் என்று வெளியே வந்தேன். கொஞ்ச நேரம் சென்றிருக்கும். செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆவதற்கான அலாரச் சத்தம் கேட்டது, சில நொடிகளில் யாரோ அழைப்பது போல் ஒலி வரவே வேகமாக ஓடி வந்தேன். செல்போனை கையில் எடுத்தேன், அவள் தான் அழைக்கிறாள். கால் அட்டன்ட் செய்து காதில் வைக்கவும். செல்போன் அமைதியானது. லேசான இருட்டில் இருந்த மீன் தொட்டியை பார்த்தேன், மீன்கள் நீந்தத் தொடங்கியிருந்தன. இனி எனக்கு தனிமையில்லை.

Print Friendly, PDF & Email

1 thought on “நிலையில்லா மீன்கள்

  1. கொஞ்சம் அவசரம் இல்லாமல் நிதானமாக எழுதியிருந்தால் சிறந்த சிறுகதையாக வந்திருக்ககூடிய கதைதான் இது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *