கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 14,366 
 

அம்மா… பிறந்ததிலிருந்து சுகம் என்பதையே அறியாதவள். சிறுவயதில் தந்தையை இழந்தாள். பாட்டியோ மாமாக்களின் அரவணைப்பில். கட்டிய கணவனோ கோபக்காரன். பேயிடம் தப்பித்து பிசாசிடம் வந்த கதை. ஒரு பெண்ணுக்கும் பையனுக்கும் தாயான பின் அவர்களுக்காகவே வாழ்க்கையை வாழத் தொடங்கினாள்.

காலம் எத்தனை விரைவில் போகிறது. எனக்குக் கல்யாணமாகி என் பெண்ணுக்கே மூன்று வயதாகிறது. என்னை வளர்த்த அதே அம்மாதான் அண்ணனையும் வளர்த்தாள். ஆனால் அவன் மனதில் மட்டும் எப்படி பாசம் இல்லாமல் போனான் என்பது எனக்கு இன்று வரை புரியாத புதிர். அவனைப் பொறுத்தவரை எல்லாமே கடமைக்குத்தான். பெருமைக்குத்தான். வெளிநாட்டிலேயே தங்கிவிட்ட அவன், பெருமைக்கு ஒருமுறை இருவரையும் கூட்டிக் கொண்டு போனான். இங்கேயே ஒரு வீடு அவன் பெயரில் வாங்கி அவர்களைத் தங்க வைத்தான். ஆனால் எப்படியிருக்கிறீர்கள்? என்று ஒரு வார்த்தை கேட்க அவனுக்கு ஒரு வருட கால அவகாசம் ஆகும். அதுவும் அவன் வேலை ஏதாவது இங்கு ஆக வேண்டி இருந்தால்…

நிரூபணம்அப்பா இறந்த போது கூட உடனே வந்தான், செய்ய வேண்டிய சடங்குகளைச் சிறப்பாகச் செய்தான். காரணம் அது அவனுக்குப் புண்ணியமாம். செத்த அப்பாவுக்குக் கர்மசிரத்தையாய் காரியம் செய்தவன், உயிரோடிருக்கும் அம்மாவின் நிலை என்ன என்பதை யோசிக்கவே இல்லை.

“”உனக்குத்தான் அந்த ஊர் ஒத்துக்காதே அம்மா” வசதியாக பழியை அம்மாவிடமே போட்டுவிட்டு ஊருக்குப் புறப்பட்டுவிட்டான்.

ஒருவேளை மகள் நான் உள்ளூரில் இருக்கும் தைரியமோ? நானும் என்னால் முடிந்தவரை என்னுடன் வந்து இருக்கச் சொல்லி அம்மாவை வற்புறத்திப் பார்த்துவிட்டேன். அம்மா பிடிவாதமாக மறுத்துவிட்டாள். ஊருக்குப் பயந்து, வீட்டு ஓனருக்குப் பயந்து நானும் விட்டுவிட்டேன். மாடியில் தங்கியிருக்கும் வீட்டுக்காரத் தாத்தா பேசும் பேச்சை நான் வேண்டுமானால் பொறுத்துக் கொள்ளலாம். சொந்த வீட்டில் வசதியாக இருக்கும் அம்மாவுக்கென்ன தலையெழுத்து? சரி… உள்ளூர்தானே அவ்வப்போது போய் பார்த்துக் கொள்ளலாம்… என்று விட்டுவிட்டேன்.

ஆனால், விதி யாரை விட்டது? சில மாதங்களிலேயே அம்மா என்னுடன் வரும் நிலை வந்தது. அம்மா ஒருத்திக்கு அவ்வளவு பெரிய வீடு எதற்கு? என்று எண்ணிய அண்ணன் அவளுக்கே தெரியாமல் புரோக்கரிடம் கூறி வாடகைக்கு விட ஏற்பாடு செய்துவிட்டான்.

“”நீ வேணா பின்னாடி இருக்கற ஒரு ரூம்ல இருந்துக்கோயேன். வாடகைக்கு விட்டா உனக்கும் ஒரு பாதுகாப்பு இருக்குமில்ல” அம்மாவாய் ஃபோன் செய்து கேட்டதற்கு பதில் இது.

ஆனது ஆகட்டுமென்று கூட்டிக் கொண்டு வந்துவிட்டேன் அம்மாவை என்னுடன், என் கணவர் மேல் எனக்குள்ள நம்பிக்கையில்.

வீட்டிற்கு வந்த உடனேயே ஆரம்பித்துவிட்டார் வீட்டு ஓனர் தாத்தா.

“”வாங்கம்மா… நல்லா இருக்கீங்களா? என்னதான் சொல்லுங்க நீங்க அதிர்ஷ்டசாலிங்க… எந்தப் பொண்ணு அம்மாவை இப்படித் தாங்கும்? சொல்லுங்க… பொண்ணை விடுங்க…அதுக்கேத்த மாப்பிளையையும் பிடிச்சுருக்கீங்க பாருங்க. அதைச் சொல்லணும். இந்தக் காலத்துல பசங்க பெத்த அம்மா அப்பாவைவிட மாமனார் மாமியாரைத்தானே நல்லா கவனிச்சுக்கறாங்க”

அவர் பேசப் பேச எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது., ஏற்கெனவே அரைமனதோடு வந்திருக்கும் அம்மாவை இப்படிப் பேசியே அனுப்பிவிடுவார் போலிருக்குதே…

சொல்லப் போனால் இப்போது இவர் இருப்பதே பெண்ணின் வீட்டில்தான். வெளிநாட்டில் இருக்கும் அவருடைய பெண் தான் கட்டிய வீட்டை பார்த்துக் கொள்ளச் சொல்லி இருக்கிறார் என்ற ஒரே காரணத்தால், உள்ளூரிலேயே இரு மகன்கள் சொந்த வீட்டில் இருந்தாலும் அவர்கள் வருந்தி வருந்தி அழைத்தாலும் உயிருடன் இருக்கும் மனிதர்களைவிட உயிரில்லாத கட்டடம்தான் மேல் என்று கருதி வாழும் இவருக்கு என்னைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?

“”வாம்மா உள்ளே” சட்டென்று பேச்சை மாற்றி அம்மாவை அழைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தேன்.

ஆரம்பத்தில் அம்மா ஒதுங்கியே இருந்தாள். நான் எவ்வளவு சொல்லியும் மாற்ற முடியவில்லை. சரி… மனவேதனையில்தான் அப்படி இருக்கிறாள். கொஞ்சநாளில் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் அவளுக்கு உடல் வேதனையும் இருந்திருக்கிறது. என்னிடம் சொல்லாமல் மறைத்திருக்கிறாள். பொறுக்க முடியாமல் போன நிலையில் என்னிடம் சொல்லி டாக்டரிடம் ஓடினேன்.

“” இத்தனை நாள் என்ன செஞ்சீங்க… உங்கம்மாவுக்கு ஹெர்னியா… எவ்வளவு சீக்கிரம் முடியுமோ ஆபரேட் பண்ணிடறது நல்லது”

டாக்டர் சொன்னதைக் கேட்க கேட்க எனக்கு அழுகையும் கோபமும் ஒரு சேர வந்தது. செலவுக்கு என்ன செய்வது? என்ற இயலாமையால் வந்த அழுகை… இத்தனை நாள் இதை நம்மிடம் சொல்லாமல் மறைத்து என்னை அந்நியப்படுத்திவிட்டாரே அம்மா என்ற கோபம். இரண்டையும் காட்ட அதுவல்ல இடம் என்பதால் அம்மாவை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

வாசலிலேயே காத்திருந்தார் ஓனர் தாத்தா. வேறு வழியில்லை. சொல்லித்தான் ஆக வேணடும்.

“”எவ்வளவு ஆகுமாம் ஆபரேஷனுக்கு?” கேள்வியைப் போட்டார்.

“”முப்பதாயிரம் வரை ஆகுமாம்”

“”என் வயசுக்கு இதுவரைக்கும் இவ்வளவு செலவு வைத்ததில்லை என் உடம்பு. அதிகபட்சம் ஒரு ஐநூறு ரூபாய்… அதுவும் எப்பவோ பத்து வருஷம் முன்னாடி…” தேள் தன் கொடுக்கை நீட்ட ஆரம்பித்துவிட்டது.

“”நாம என்ன வரம் கேட்டு வாங்கிட்டா வரோம். இல்லை ஆஸ்பத்திரி போய் படுத்துக் கிடக்கறதென்னு சந்தோஷமான விஷயமா? ஆசைப்பட்டு போய்ட்டு வர… வந்திருச்சு… வேற வழியில்லைன்னா செய்துதானே ஆகணும்… ”

பதிலுக்குக் கேட்க ஆசைதான். ஆனால் முடியாதே…

விதியை நொந்தபடியே வீட்டுக்குள் நுழைந்தேன். அம்மா ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தாள். இந்தச் செய்தி அண்ணன் காதுக்குப் போகக் கூடாதென்று. போனால் மட்டும் கூடவா வந்து இருக்கப் போகிறான்? பெற்ற கடனுக்குத் திட்டிக் கொண்டே பணத்தை மட்டும் அனுப்புவான்.

இப்படித்தான் அப்பா இருக்கும்போது அம்மாவுக்கு ஒருமுறை உடம்பு முடியாமல் போனது. அப்போது அண்ணி சொன்ன வார்த்தைகள் இன்னும் நெஞ்சைவிட்டு அகலவில்லை.

“”ஏங்க உங்கம்மா பார்க்க பப்ளிமாஸ் மாதிரி நல்லாத்தானே இருக்காங்க. சும்மாவாணும் ஏதாவது சொல்லறதே வேலையாப் போச்சு. சும்மாவே உட்கார்ந்திருந்தா இப்படித்தான்”

நல்லவேளை இந்த சொற்கள் அம்மா காதுவரை போகவில்லை. அண்ணி தன் பிரசவத்துக்கு கூட அம்மா வீட்டுக்குப் போகாமல் இங்கேயே இருந்து சொகுசு கொண்டாடியதும், அம்மா வரிந்து கட்டிக் கொண்டு மருமகளுக்குப் பணிவிடை செய்ததையும் சுலபமாக மறந்துவிட்டாள்.

மாலையில் என் கணவர் வீட்டுக்கு வந்தவுடன் எல்லாவற்றையும் சொன்னேன். அவர் என்னைப் பார்த்த பார்வையே சொன்னது: “”பணத்துக்கு என்ன செய்வது?”

“”கவலைப்படாதீங்க.. அம்மா தன்னோட வளையலை விக்கச் சொல்லிட்டாங்க. நான் எவ்வளவு சொல்லியும் கேட்கலை. அவங்களுக்கு நம்மைக் கஷ்டப்படுத்தறோம்னு இருக்கு. உடம்பாலே நீங்க செய்யறது போதாதுன்னு கேட்கறாங்க. பணத்தாலயும் செய்ய கடவுள் நமக்கு நிறைய கொடுக்கலியே… என்ன செய்யறது?”

இயலாமையை உணர்ந்து, “சரி’ என்று தலையாட்டிவிட்டு வாசல் பக்கம் சென்றார் என்னவர்.

“”என்ன தம்பி… அடுத்த செலவு வந்துடுச்சு போல”

“”ஆமாங்க…”

“”என்ன பண்ணப் போறீங்க?”

“”அவங்க வளையலை வித்துச் செலவுக்கு எடுத்துக்கச் சொல்லியிருக்காங்க. இருந்தாலும் அது தப்புன்னு தோணுது. அதான் அவங்க பையனுக்கே தகவல் சொல்லிடலாம்னு பார்க்கறேன். ஆனால் அதுவும் கூடாதுங்கறாங்க.”

“”தம்பி நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. அவங்க பையனுக்குச் சொன்னா மட்டும் கூடவே இருந்து கவனிச்சுக்கவா போறான். அந்தம்மாவுக்கோ வயசாச்சு… இவ்வளவு செலவு பண்ணி காப்பாத்தி… இன்னும் எத்தனை வருஷம் இருந்து என்ன சாதிக்கப் போவுது… பேசாம அப்படியே கொஞ்சநாள் தள்ளிப் போடுங்க. அது காலம் முடிஞ்சுடும். பொண்ணைக் கட்டிட்டு வந்த பாவத்துக்கு எவ்வளவுதான் நீங்களும் செய்வீங்க? ”

அப்படியே பூமி பிளந்து அந்த மனிதரை விழுங்கிவிடாதா? என்று கோபம் வந்தது. மனிதனா இவன்… வயதுக்கேற்ற வார்த்தைகள் சொல்லத் தெரியாதா? பெண்ணைப் பெற்றவர்கள் அவளைக் கல்யாணம் செய்து கொடுத்து கடமைகளை முடிக்கும் வரைதான் வாழ வேண்டுமா? கடமைகளை முடித்தவுடன் கட்டையில் போய்விடுங்கள் என்பதுபோல் அல்லவா உள்ளது?

நல்லவேளை… அம்மா பின் அறையில் இருந்ததால் இந்த விஷக் கொடுக்கு அவளைத் தீண்டவில்லை. கூடிய சீக்கிரம் வேறு வீடு பார்த்துப் போய்விட வேண்டும்.

டாக்டரை மீண்டும் போய்ப் பார்த்துவிட்டு வந்து ஆபரேஷனுக்கு நாள் குறித்தாகிவிட்டது. அம்மாதான் மிகவும் சோர்வாகக் காணப்பட்டாள். இன்னும் நான்கு நாட்கள் தான். ஆபரேஷன் பண்ணிவிட்டால் சரியாகிவிடும் என்று நினைத்தபடி,

“”அம்மா… நான் ஆபிஸýக்கு கிளம்பறேன். வர லேட்டாகும். இன்னும் இரண்டு நாள் ஓவர்டைம் பார்த்தால்தான் ஆபரேஷனின் போது லீவு போட முடியும்” என்றபடி கிளம்பினேன்.

எப்படா இன்னும் மூன்றுநாள் போகும் என்று எண்ணியபடி வேலை முடிந்து வீடு வந்தபோது, வீட்டில் சூழ்நிலை அசாதாரணமாக தென்பட்டது.

அம்மா வேர்த்துக் கொட்டியபடி பாத்ரூம் அருகே விழுந்து கிடந்தாள். விபரமறியாத குழந்தையோ டிவியைச் சத்தமாக வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். டிவி சத்தத்துக்கு மேல் கத்த முடியாமல் விழுந்து கிடந்த அம்மாவை நோக்கி ஓடினேன்.

“”அம்மா… என்ன செய்யுது?” என்று அவளைத் தூக்கியபடியே இன்னொரு கையால் ஆம்புலன்ஸýக்குப் போன் அடித்தேன்.

கையிலிருந்த போனைப் பிடுங்கினாள் அம்மா.

“”வேண்டாம். வலி தாங்கலை. இனிமேல் நான் பிழைப்பேன்னு தோணலை… விட்டுடு… நீ சிரமப்படாதே… ஒரு வேளை நான் செத்துட்டா… உன் புருஷனையே எனக்குக் கொள்ளி போடச் சொல்லு. நான் கெஞ்சிக் கேட்டுக்கிட்டேன்னு அவர் கிட்ட சொல்லு… இந்த வளையல் என் கடைசி சொத்து… வாழப்போற உன் பொண்ணுக்கு பாட்டியோட சீதனம். என்னோட செலவு போக கண்டிப்பா மிஞ்சும்…” புலம்பியவளை எடுத்துப் போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரி சென்றும் பயனில்லை. மானஸ்தி…. எங்களுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாதென்பதில் உறுதியாக இருந்துவிட்டாள்.

அதிர்ச்சியிலிருந்து மீளவே சில மணி நேரம் ஆனது. அண்ணனுக்குச் சொல்வதா? வேண்டாமா? என்ற குழப்பத்துக்கு விடை கிடைத்தாற் போல அவனே போன் செய்தான்.

எப்படி இருக்கிறாய்? என்று கூடக் கேட்காமல் “”அம்மா காசிக்கு வருவதற்கு டிக்கெட் புக் பண்ணியிருக்கிறேன். நாளைக்கு அம்மாவை ஏத்தி அனுப்பிடு”

“”எதுக்குண்ணா?”

“”அப்பாவோட திவசத்தை காசியில செய்தால் விசேஷம்னு சொன்னாங்க… அதான் இருக்கறதுலேயே காஸ்ட்லியா எப்படிப் பண்ண முடியுமோ, அப்படிச் செய்வதற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். அம்மா உயிரோடு இருந்தால் அவங்களும் கூட வரணுமாம். நாங்க இன்னிக்கு கிளம்பிட்டோம். அம்மாவை அங்க வரும்போது நான் கூப்பிட்டுக்கறேன். காரியம் முடிந்ததும் ஏத்தி அனுப்பிடறேன்” வேகமாகக் கூறியவனுக்கு என்ன பதில் சொல்வதென்று ஒரு வினாடி திகைத்தேன்.

“”என்ன நான் சொல்றது கேட்குதா?”

“”ம்… கேட்டுது… கவலைப்படாதே அண்ணா… உனக்கு இரட்டைப் புண்ணியம் கிடைக்கப் போகிறது.. செலவும் மிச்சம். நீ அம்மாவுக்கும் சேர்த்தே திவசம் அங்கே செய்துவிடலாம். இங்கே அம்மாவுக்கு செய்ய வேண்டியதை நான் செஞ்சுக்கறேன்”

முதல்முறையாக மனம் பேச நினைத்ததை வாய் பேசியது.

“”யார் போன்ல?” என்ற கணவரிடம், “”ராங் நம்பர்” என்றபடி தொடர்பைத் துண்டித்தேன்.

– ஆகஸ்ட் 2012

தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.1,250/- பெற்ற கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *