நினைவுத் தீண்டல்கள்

0
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 5, 2012
பார்வையிட்டோர்: 7,829 
 

மூச்சு விடக்கூட நேரமில்லாமல் பரபரப்பாக ஓடும் தற்போதைய நகர (நரக) வாழ்க்கையின் நடுவே அவ்வப்போது குழந்தைப்பருவத்தின் நினைவுகள் நெஞ்சைத் தழுவிச்செல்லும்போது இனம்புரியாத ஏக்கம் உருவாகிறது, அந்த வாழ்க்கையே தொடர்ந்திருக்கலாமோ என்று.

நானொன்றும் நகரத்தின் அழுத்தமான வாழ்க்கையில் என்னை வெகுவாக அமிழ்த்திக் கொண்டவனல்ல. ம்ஹும்…அதெல்லாம் அந்தக்காலம் என்று பெருமூச்சு விட்டுப் பேச வயதில் பழுத்த பழமும் அல்ல. இருந்தாலும் என்னுடைய குழந்தைப்பருவம் எனக்குத் தந்து சென்ற நினைவுகள் இன்றும் ஆழ்நெஞ்சில் சுகமான வடுக்களாய் நிறைந்திருக்கின்றன. அவ்வப்போது அவை மேல்மனத்திற்கு வரும்போது மனம் தன்னையறியாமல் தியானத்தில் ஆழ்கிறது. அது ஒரு சுகானுபவம். அனுபவித்துப் பார்த்தால் தான் அதன் தீண்டல்களின் தீட்சண்யம் தெரியும்.

அப்பொழுது எனக்கு ஒரு ஏழு வயதிருக்கும். சுமார் இருபது வருடங்களுக்கு முன். ஊருக்கு வெளியில் சுமார் 23 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்த அந்தப் பெரும் வயற்காடு+தோட்டத்திற்கு எங்கள் தாத்தா தான் பொறுப்பாளர். அத்தோட்டத்திலேயே அமைந்திருந்த ஒரு சிறு வீட்டில் தான் எங்கள் வாசம். வயதான தாத்தா பாட்டி, அம்மா, சின்னஞ்சிறுசுகளாய் நானும் தம்பியும்.

அழகான தோட்டம், ஓவியமாய் மரங்கள், ஆயிரத்தைத் தாண்டும் எண்ணிக்கையில் தென்னைகள், கடலைக்காடு, கரும்புத்தோட்டம், சப்போட்டா, மாதுளை மரங்கள், எந்நாளும் தண்ணீர் சுவறிக்கிடக்கும் இரு கிணறுகள், பசுமையான வயல்வெளி, மல்லிகை, பிச்சி, செவ்வந்தி பூந்தோட்டங்கள், மென்மையான கோழிக்குஞ்சுகள், சாந்தமாய்த் திரியும் வெள்ளாடுகள், கம்பீரமாய்த் திரியும் இராஜபாளையம் நாய்கள். இப்போது காண்பதற்கரிய பூலோக சொர்க்கமது. கூடவே, வகை வகையாய் பாம்புகளும், விஷ ஜந்துக்களும். அழகு இருக்குமிடத்தில் ஆபத்தும் இருப்பது இயல்புதானே!

காலையில் சூரியன் சிவப்பாய் அரைகுறையாய் எழுந்திருக்கும்போதே சிவப்புக்கொண்டைச் சேவல் எங்களை எழுப்பிவிட்டுவிடும். பசுங் கன்று ‘ம்ம்ம்ம்மாமாமா….’ என சத்தமெழுப்பும். சரியாய், மிகச்சரியாய் சைக்கிளில் வந்திறங்குவார் பால்காரர்.

கன்றை இழுத்து பசுவிடம் பால் குடிக்கவிடுவார். அய்யோ பாவம்! அந்த சிறு கன்று ஓடிப்போய் தன் தாயின் மடியை முட்டி முட்டிக் குடிக்க, பால்காரருக்கோ அவசரம். பாதியிலேயே கன்றை இழுத்துப் பக்கத்தில் கட்டிப்போட, அரைகுறையாய்ச் சாப்பிட்ட வாயிலிருந்து பால் ஒழுகும் எச்சிலுடன். தன் குழந்தையைப் பரிதாபமாய்ப் பார்க்கும் பசு. பாவம் அது தான் என்ன செய்யமுடியும். துள்ளும் தன் கன்றைப் பார்த்தவாறே கண்களில் ஒரு நீர்க்கோடு ஓட பாலைச் சுரக்கும். கேன்களை நிரப்பிய திருப்தியில் எழுவார் பால்காரர். ஓடிப்போய் நிற்போம் சிறுவர்கள் நாங்கள்.

நுரைநுரையாய்த் ததும்பும் பசும்பால். வாசனையாய் இருக்கும். நுரையுடன் சேர்த்து ஒரு சொம்பில் எடுத்துக்கொடுப்பார். மட மடவெனக் குடித்துவிட்டு ‘ஈ’யென இளித்தப் பல்லுடன் நிற்போம் நாங்கள், பால் வரைந்த வெள்ளை மீசையுடனும், ஒழுகும் மூக்குடனும்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. பள்ளிக்கு விடுமுறை. ‘ம்.ம்ம்…வாங்க சீக்கிரம். வேலையாட்கள் வந்தாச்சு. மல்லிகைப்பூ பறிக்கப்போணும்’ பாட்டி அவசரப்படுத்துவார்கள். குடுகுடுவென ஓடுவோம்.

“ஹைய்யா…எனக்கு இந்த வரிசை”, “ஹேய்..எனக்கு இந்த வரிசை”, “எனக்கு இது தான் வேணும்..நீ அங்கிட்டுப் போ” எங்களுக்குள் சண்டை, வரிசை வரிசையாய் செழித்து நிற்கும் மல்லிகைச் செடிகளின் பூக்களைப் பறிக்க. விறுவிறுவெனப் பறிக்க ஆரம்பிக்க, நேரம் போவதே தெரியாது.

சிறுவர்களாய் இருந்தாலும் சூட்டிகையானவர்கள். பெரியவர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாது. ஆனாலும் முடிந்த வரையில் பூக்களைப் பறித்து பெட்டியை நிறைத்து விடுவோம்.

வெயில் ‘சுள்’ளென உறைக்கும் வெற்று முதுகில். நிமிர்ந்து பார்த்தால் சூரியன் தக தகவென ஜொலித்தபடி அத்துவான எல்லைக்கும், உச்சிக்கும் நடுவில் உக்கிரமாய் நின்று கொண்டிருப்பான். பூக்களையும் பறித்து முடித்திருப்போம்.

“வாங்க..வாங்க. மணி பத்தாச்சு. போயி சாப்பிடுவோம்” வேலையாட்கள்.

பேக் டூ த பெவிலியன்.

வழியும் வியர்வையுடன் நார்க்கட்டிலில் வந்து சாய்ந்தால் பாட்டியின் அதட்டல் “டேய் படுக்காத…கடலைக் காட்டுக்குத் தண்ணி பாச்சப் போகணும்”

நிமிர்ந்த உட்கார்ந்தால் கொழ கொழவென கம்மங்கூழ் தூக்குவாளியில் கையில் கிடைக்கும். வெல்லக்கட்டி ஒன்றும், மிளகாய் ஒன்றையும் கடித்துக் கொண்டு கூழைக் குடித்தால் தொண்டையில் சுகமாய் இறங்கும். வயிற்றுக்குள் குளுகுளுவென குளுமை நிரம்பும்.

“அம்மா…கொஞ்ச நேரம் வெளயாடிட்டுப் போறோம்”

சிறுவர்கள் இருவரும் சைக்கிள் டயரை எடுத்துக்கொண்டு இடுப்பிலிருந்து வழியும் டவுசரை ஒரு கையால் பிடித்தபடி
சர்ரென்று உருட்டிக்கொண்டே செல்வோம். “ஹேய்..அங்க பார். யார் ஃபர்ஸ்ட் அந்த மரத்தைப் போயி பிடிக்கிறாங்கன்னு பாக்கலாமா?”

“டுர்ர்ர்..ர்ர்.” டயர்கள் சீறிப்பாயும். எல்லையைத் தொட்டுவிட்டப் பெருமிதம், மூச்சிறைக்க..மூச்சிறைக்க, ஆசுவாசம்.

தூரத்தில் பாட்டி கையசைக்கிறார்கள்.

“டேய்..கெளம்புடா” மறுபடி டயருடன் ஒரு ஓட்டம்.

ராமர் கடலைக் கொல்லைக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருப்பார். எங்க வீட்டு வேலையாள். தோட்டத்தையும் பொறுப்பாகப் பார்த்துகொள்ளுபவர்.

நிலத்தை பாத்தி பாத்தியாய்ப் பிரித்து கடலை பயிரிட்டிருப்பார்கள். ஒவ்வொரு பாத்திக்கும் தண்ணீரை மடை மாற்ற வேண்டும்.

“ராமர்ண்ணே..ராமர்ண்ணே. இந்த முழு ஏரியாவுக்கு தண்ணிப் பாய்ச்சி முடிக்க எவ்ளோ நேரமாகும்”

“ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆகும்டா”

“ஹைய்யா..ஜாலி…” வரப்புகளுக்கு நடுவே சுடும் வெயிலின் உக்கிரத்தால் தக தக வென வெள்ளி போல் மின்னிக்கொண்டு பாயும் தண்ணீர். சல புல சல புல வென தண்ணீர் தெறிக்க, தண்ணீரின் மேல் ஓடுவோம்.

“ராமர்ணே..அந்த மம்பட்டியக் (மண்வெட்டி) கொடுங்க” வீட்டில் பெருமிதமாய்ச் சொல்லணுமே, நானும் கடலைத் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சினேன் என்று.

“எனக்கு இந்த பாத்தி. உனக்கு அந்தப் பாத்தி. நான் இதுக்குத் தண்ணி பாச்சுறேன்”

குண்டக்க…மண்டக்க.. நாங்கள் மடை மாற்ற, தண்ணீர் பெருக்கெடுத்து கன்னா பின்னாவென்று ஓட, புன்சிரிப்புடன் ராமர்.

“ஏய்..போங்கப்பா..மம்பட்டிய என்கிட்டக் கொடுத்துட்டு”

கொடுத்துவிட்டு, மீண்டும் ஓட்டம்.

வானளவு நெடிதுயர்ந்த கூவாப்புல் மரங்களின் நடுவே குளு குளு வெனத் இருக்கும் நிழலில் கையையும் காலையும் விரித்துப்போட்டபடி அமர்ந்திருப்போம்.

“ஹேய்..உனக்கு ஒன்னு காட்டறேன்..சத்தம் போடாதே” ரகசியமாய் தம்பியின் காதுகளுக்குள் கடித்தேன்.

“என்ன?” என்றான் மெல்லமாய் சத்தம் வராமல்.

“அங்கே பார்”

ஒரு மயில் புதர்களுக்கு நடுவில் ஒரு வகையான அடர்ந்த மரத்தினடியில் படுத்திருந்தது. பெரிய மயில்.

“ஹேய்..நாம இங்க சத்தம் போட்டுப் பேசிட்டிருக்கோம். இந்த மயில் எந்திரிச்சிப் போக மாட்டேங்குது. தாத்தா..தாத்தா…இங்கே பாருங்க. ஒரு மயில் படுத்திருக்கு” தம்பி சத்தம் போட, நான் வெடித்தேன், “முட்டாள்…சத்தம் போடாதேன்னு சொன்னேன்ல”.

அங்கே மீண்டும் திரும்பி பார்த்தால் மயில் சலனமின்றி கால்களை மடக்கி உட்கார்ந்திருந்தது. கண்களை மெல்ல மூடியும் மூடாமலும் ஒருவித மோன நிலையில் அது இருந்ததுபோலத் தெரிந்தது. “நல்ல வேள..அது பறந்து போகல”

“டேய்..அங்க என்னடா பண்ணிக்கிட்டுருக்கீங்க. இந்தப் பக்கம் வாங்க. மோட்டார் ஓடுது, குளிச்சிட்டுக் கெளம்பலாம்”

“தாத்தா..தாத்தா..மயிலு” மீண்டும் பெருங்குரலெடுத்தான் தம்பி.

“ஏலே..சத்தம் போடாதென்னு சொன்னேன்ல” விரட்டினேன் தம்பியை அடிக்க. ஓட்டம் பிடித்தான் தாத்தாவை நோக்கி.

“அந்த மயிலு அது முட்டைகளை அடைகாத்துக்கிட்டிருக்கு. அந்தப் பக்கம் போகாதீங்க” தாத்தா சொன்னார்.

“ஓ”..வியப்பால் விரிந்தன எங்கள் விழிகள்.

பம்ப்செட் ஓடிக்கொண்டிருக்க நுரை ததும்பும் தண்ணீரைப் பீய்ச்சிக்கொண்டிருந்தது பெரிய குழாய். தண்ணீர் விழுந்து நிரம்பும் பக்கத்திலிருந்த தொட்டியில் இருந்த தண்ணீரை வாரியிறைத்துக் குளிக்க, ஓடியாடித் திரிந்த உடம்பின் அயர்ச்சி காணாமல் போனது.

மாற்றுவதற்கு உடையேது! வீட்டுக்குப் போனால் தான் உண்டு. துவட்டுவதற்குத் துண்டு கூடக் கிடையாது. உச்சியில் நின்றிருந்த சூரியன் எங்கள் ஈரத்தை விரைவில் காய வைத்தான்.

நடந்து சென்ற நான் எருமைச் சாணியை மிதித்து விட, “ஐய்..ஆய்..” இளித்தான் என் தம்பி.

திரும்பச் சென்று காலை மட்டும் தொட்டிக்குள் விட்டு ஆட்ட, “அடங்கொக்காமக்க! எங்கன படுத்துக்கெடந்திச்சி இந்தக் கழுத” அலறிக்கொண்டு காலை எடுக்க, தொட்டியில் பாசிகளாய் மிதந்துகொண்டிருந்த தாவரங்களின் நடுவிலிருந்து சீறியபடி தலையைத் தூக்கியது, நல்ல வெளுப்பும் கருப்புமாக கலந்திருந்த நல்ல பாம்பு. நான் காலை வைத்த இடத்தில் பாசிகளின் மீது வெயிலுக்கு ஆனந்த சயனம் கொண்டிருக்கும் போல இருக்கு. படத்தை விரித்துகொண்டு இடமும் வலமுமாக ருத்ர தாண்டவமாடியது.

“தாத்தா…இங்கன ஒரு பாம்பு” அபயக்குரலைக் கண்டதும் சின்னச்சாமி ஓடி வந்தார். ஒரு நீண்டக் கம்பைத் தூக்கியபடி. பாம்பை எடுத்து வெளியே தூக்கிப்போட, பயந்து கொண்டு ஓடி விடுமென்று பார்த்தால்… உன்னை விட்டேனா பார் என்பதாக ஆட்டமாய் ஆடிக்கொண்டிருந்தது.

“நல்ல பூச்சி..அதான் படம் தெரியுதே” சின்னச்சாமி அதன் தலை மேல் ஒரே போடாகப் போட சுருண்டது பாம்பு. அதற்குள் கூட்டம் கூடிவிட, “பொதச்சிட்டு மேல பாலை ஊத்துப்பா” ஒரு பெருசு சொல்லிவிட்டுச் சென்றது.

முதல் முறையாய் ஒரு பாம்பின் கரும்பச்சை நிற படத்தைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை நான்.

அதைத் தோட்டம் என்று சொல்வதை விட, உண்மையில் பாம்புப் பண்ணை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்குப் பாம்புகள், ரக ரகமாய், தினுசு தினுசாய், விஷமுள்ள, விஷமற்ற. அதுவும் பக்கத்திலிருக்கும் கண்மாய் மழைக்காலத்தில் நிறைந்து விட்டால் போதும். அத்தனை பாம்புகளும் அகதிகளாய்த் தஞ்சம் புகும் ஒரே இடம் எங்கள் தோட்டம் மட்டுமே.

ஆனால் ஒரு தடவை கூட எங்கள் குடும்பத்தினர் பாம்புக்கடி வாங்கியதில்லை. வேலையாட்களைத் தீண்டியிருக்கிறன்றன நிறைய பாம்புகள். ஆனால் யாரும் இறந்ததில்லை. அந்த கோமதி அம்பாளின் கருணைப் பார்வைதான் காரணம் என்று சொல்வார்கள். அது என்னவென்று புரியவில்லை. அடிக்கடி இன்று கூட கனவில் பாம்புகள் வரும். அடிக்கடி வரும். சில நாட்களில் தொடர்ந்து வராது. ஆனால் ஒருதடவை கூடத் தீண்டியதில்லை. தீண்டாதவரைக் கஷ்டம் தீராது என்பார்கள். கனவில் ஒரு தடவைக் கொத்தி விட்டால், நம்மைப் பிடித்த பீடையெல்லாம் விலகிவிட்டது என்பார்கள். மனதிற்குள் புன்சிரிப்பு சிரித்துக்கொள்வேன்.

நல்ல பாம்பு, சாரைப் பாம்பு, தண்ணீர் பாம்பு, பச்சைப்பாம்பு, கட்டு வீரியன், இரத்த வீரியன், கண்ணாடிப்பாம்பு, மண்ணுளிப் பாம்பு, சுருட்டை, புடையான்குட்டி, ஓலைப்பாம்பு, என அத்தனை வகையறாக்களும் தோட்டத்தில் உண்டு. இது தவிர இயல்பாய் ஓடிக்கொண்டிருக்கும் செந்தேள், கருந்தேள், நட்டுவாக்கலி, பூரான், செய்யான் பூரான் போன்ற ஜீவன்களும் உண்டு.

எங்கள் வீட்டில் எப்போது ஒரு நீளமான கம்பு உண்டு. அதைச் “செதுக்கி” என்று செல்வார்கள். அதன் முனையில் ஒரு கூரான உலோகம் இணைக்கப்பட்டிருக்கும். அதைக்கொண்டு கொஞ்சம் தள்ளி நின்று குத்தினால் போதும். பாம்பு ரெண்டு துண்டாகி விடும். எப்போதுமே பாம்பின் உச்சி மண்டையில் தான் போடுவார்கள். உடனே செத்துவிடும். உடலில் குத்தி அது ரெண்டு துண்டானால் அது படும் பாடு காணச் சகிக்காது. வால் உடலும் தலை உடலும் தனித்தனியாய் துடிக்கும் துள்ளல் ஒரு மாதிரி ஆக்கிவிடும் நம்மை.

ஆனால் கருணையெல்லாம் பார்க்க முடியாது பாம்புகளிடம். அது பாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும், நாம் அதற்குத் தொந்தரவு செய்யாதவரை.

இன்னும் சில விஷயங்கள் இருக்கின்றன.

ஒரு தடவை மாட்டுக்குப் புல் அறுத்துகொண்டிருந்தார்கள் அம்மா. எப்பொழுதுமே வரட்டு வரட்டென்று விறுவிறுப்பாய் அறுப்பார்கள். திடீரென்று பார்த்தால் பன்னறுவாளில் (புல்லை அறுக்கும் ஒருவகை அரிவாள்) இருந்து சொல சொலவென இரத்தம். பதறிப்போய் என்னவென்று பார்த்தால், புதருக்குள் படுத்திருந்த ஒரு பாம்பு அரவம் கேட்டு எழுந்திருந்திருக்கிறது. இது தெரியாமல் புல்லோடு சேர்த்து அதையும் அறுத்துவிட்டார்கள் அம்மா. நம்ப முடியவில்லையா! “அய்யோ..யப்பா..” எனப் புல்கட்டைப் போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள் அம்மா. அதிலிருந்து, ஒரு கம்பை எடுத்துகொண்டு முதலில் புதரைத் தட்டிவிட்டு அப்புறம் தான் அறுக்க ஆரம்பிப்பார்கள்.

மற்றொருமுறை…

வீட்டுக்குப் பக்கத்தில் சல சல வென ஓடிக்கொண்டிருந்த வாய்க்காலில் அருகே அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்க ஒரு சாண் நீளத்தில், சிவப்பாய், ஒரு டைப்பான செங்கல் கலரில் ஒரு ஜந்து மெதுவாய் ஊர்ந்து கொண்டிருந்தது. கையால் தூக்கிப்போட்டுவிட்டு அம்மாவை அழைத்துவந்து காட்ட, அதிர்ந்து போனார்கள்.

“அடேங்கப்பா…இரத்த வீரியன். இதெல்லாம் இங்கே இருக்கா!!” ஆச்சரியப்பட்டார்கள்.

ரத்த வீரியன் கடித்தால் ரத்த ரத்தமாய் கக்கிச் சாவார்களாமே?? தெரியவில்லை எந்த அளவிற்கு அது உண்மையென்று. ஆனால் வீரியன் பாம்பு தீண்டி யாரும் உயிருடன் இருந்ததில்லை என்பதாகக் கேள்வி.

பிறிதொரு முறை…

வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஆட்டுக்கொட்டகை. சுமார் நூறு வெள்ளாடுகளாவது அடைத்து வைத்திருப்போம். அதன் பக்கத்தில் சொட்டு நீர்ப்பாசனக் குழாய்கள் வளையம் வளையமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதனருகில் நிறைய பொந்துகள் இருந்தன. அந்தக் குழாய்களின் அருகே எப்போது விளையாடிக் கொண்டிருப்போம்.

ஒருநாள் பாம்பு பிடிப்பவர்கள் யதேச்சையாக வீட்டுக்கு வந்தவர்கள், அருகே நிறைய பாம்புகள் இருப்பதாக மோப்பம் பிடித்து குழாய்களினருகே வந்தார்கள். பட பட வென கம்புகளாலும், கம்பிகளாலும் பொந்துகளைக் குத்திக் கிளற சுமார் நூறு பாம்புகளாவது இருக்கும். அத்தனையும் பொடிக்குட்டிகள். ஓரிரண்டு பெரிய பாம்புகளும் கூடவே. கட்டம் கட்டமாய் உடலில் வடிவங்கள். அத்தனையும் கட்டு வீரியன்கள். நல்ல பாம்பைப் போல கொடிய விஷமுள்ளவை.

ஓடியே போய்விட்டோம்.

வீட்டுக்கு மத்தியானத்திற்கு மேல் திரும்பினால் சுவையான சாதம் சுடச் சுட ரெடியாக இருக்கும். குளித்துவிட்டு வந்த குளிர்ச்சிக்கும், காலையில் இருந்து வேலை பார்த்துவிட்டு, ஓடியாடித் திரிந்துவிட்டு வந்த களைப்பிற்கும் சாப்பாடு தேவாமிர்தமாய் இருக்கும்.

இன்று இதுபோல சாப்பாடை யார் ரசித்து ருசித்துச் சாப்பிடுகிறார்கள். வெந்தும் வேகாததை அரக்கப் பறக்கத் தின்றுவிட்டு கம்ப்யூட்டருக்குள் மண்டையை நுழைத்துக்கொள்கிறோம். அலுவல்களினிடையில் சாப்பாட்டைக் கூட சில வேளைகளில் மறந்து விடுகிறோம்.

நன்றாக வயிறு புடைக்கச் சாப்பிட்டுவிட்டு மதியம் மூன்று மணிக்குமேல் வேப்பமரத்தினடியில் படுத்துவிட்டால் போதும். அது தூக்கமல்ல..கிட்டத்தட்ட சமாதி நிலை. உடலின் சகல பாகங்களும் நன்றாக ஓய்வெடுத்துக்கொள்ளும்.

சாயங்காலம் மீண்டும் பால்காரர். மீண்டும் கன்றுக்குட்டியின் கதறல். கேன்களை நிரப்பிக்கொண்டு சிட்டாய்ப் பறந்துவிடுவார். தண்ணீர் கலக்காத ‘திக்’கான பாலில் டீ ரெடியாக இருக்கும், நாம் மீண்டும் எழும் வேளையில்.

குடித்து விட்டு சிறிதுநேரம் படிப்பு. நான் வகுப்பில் முதல் மார்க் மாணவன். ரொம்ப கேஷுவலாய் தான் படிப்பேன். படிப்பு படிப்பு என அடித்துக்கொண்டதில்லை. ஆனால் எளிதாக முதல் மார்க் வாங்கிவிடுவேன். ஆனால் பின்னாளில் பாலிடெக்னிக் படிக்கும் போது படிப்பு படிப்பு என அடித்துகொண்டு படித்தாலும் மார்க் எதிர்பார்த்த அளவுக்கு வராது. அப்போதெல்லாம் தோட்டத்திலிருந்து வெளியே வந்துவிட்ட காலம்.

மணி ஆறை நெருங்கிக்கொண்டிருக்கும். தோட்டத்து வேலையாட்களெல்லாம் சென்றிருப்பார்கள். வெயில் உறைத்து அடித்திருந்தாலும் சாயங்காலம் திடீரென கருமேகங்கள் சூழும். சட சட வென சப்தம். மழை கொட்டோ கொட்டென்று கொட்ட ஆரம்பிக்கும். அப்போதெல்லாம் சும்மா நச நச மழையெல்லாம் கிடையாது. போட்டால் ஒரே போடு. அத்தனை மழையையும் கொட்டிவிட்டு கல் கிடங்குகளையும், கண்மாய்களையும் நிறைத்து விட்டுத்தான் நிற்கும். பெரும் மழை குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது பெய்யும்.

கும்மிருட்டு. மணி எட்டாகிவிட்டது.

மழை நின்று விட்டது. இருந்தாலும் வீட்டின் தாழ்வாரக் கூரையில் இருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டிருக்கிறது. சொட்….சொட்….சொட்…. இந்த சத்தம் இம்சையாய் இருந்தாலும் ஒரு வித ரம்மியம் கலந்திருக்கும்.

“க்ரொக்…க்ரொக்..க்ரொக்…லொட்டட்டி..லொட்டட்டி..லொட்ட்” வீட்டின் பின்புறம் தவளைகளின் பல்லவி. ஓயவே ஓயாது இரவு முழுவதும். இந்தத் தவளைகள் பேசி வைத்துக்கொண்டு பாடுவாய்ங்க போல. திடீரென்று சத்தம் நிற்கும். இன்னொரு க்ரூப் ஆரம்பிக்கும் தாள வாத்தியங்களை.

அலுத்துக்கொள்வார்கள் வீட்டில். “ச்சை….இந்தத் தவளைகளுக்கு வாய் தான் வலிக்குமோ…வலிக்காதோ…ச்சை” நீட்டி முழக்குவார்கள். தவளைகளின் ரீங்காரம் அவைகளுக்கு தேனிசை போல. நமக்கோ மரண வலி.

நெல்லை வானொலியில் நேயர் விருப்பம் இரவு ஒன்பது மணிக்கு.

“வானத்தைப் பார்த்தேன்…பூமியைப்பார்த்தேன்..மனுஷனை இன்னும் பாக்கலியே”

“வைகைக் கரைக் காற்றே நில்லு…வஞ்சி தனைப் பார்த்தாச் சொல்லு.”

சினிமா கதாநாயகர்களாய் நம்மைப் பாவித்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு பாடல்களில் கரைந்து விடுவோம், தன்னந்தனி காட்டுக்குள்ளே, மழை தந்த குளிர் சூழலிலே.

‘விய்’யென்று விசில் சப்தம். என்னவென்று நிமிர்ந்து பார்த்தால் ரோட்டில் சைக்கிளில் ஐந்தாறு பெருசுகளும் சிறுசுகளும் பக்கத்து கிராமத்துக்கு பறந்துகொண்டிருப்பார்கள். மாலை நேர சினிமா பார்த்துவிட்டு வந்து கொண்டிருப்பார்கள். சாலைகளில் விளக்கு வசதி கிடையாது. சுடுகாட்டை வேறு தாண்டிச் செல்ல வேண்டும். யாராக இருந்தாலும் பேயென்றால் பயம்தானே!! பயம் அகல எங்கள் தோட்டத்தைச் தாண்டிச் செல்லும்போது விசில் சப்தங்கள் பறக்கும். சிறிது நேரத்தில் சப்தத்தின் சுருதி குறைந்து குறைந்து காணாமல் போகும்.

சிறிது இடைவேளை விட்டிருந்த தவளைகள் மீண்டும் “க்ரொக்… க்ரொக்.. க்ரொக்… லொட்டட்டி.. லொட்டட்டி.. லொட்ட்”

பகல் நேரத்தில் வேலையாட்கள் வருவார்கள் போவார்கள். எந்நேரமும் ஆட்கள் புழக்கம் இருக்கும். ஆனால், இரவு நேரத்தில் அப்படியல்ல. தனிக்காட்டில் சுற்றிலும் கும்மிருட்டிருக்க வீட்டில் மட்டும் வெளிச்சமிருக்கும். அதில் வசித்த எனது வயதான தாத்தா பாட்டிக்கும், அம்மாவுக்கும், சின்னஞ்சிறுசுகளாய் இருந்த எனக்கும் என் தம்பிக்கும் அந்த ஆண்டவனும் வானத்து நட்சத்திரங்களும் தான் துணை.

சுமார் எட்டு வருடங்கள் அந்தத் தோட்டத்தில் வசித்திருப்போம், ஒரு நாள் கூட வீட்டுக்குள் திருடன் புகுந்தது கிடையாது. ஆனால் தோட்டத்திற்குள் புகுந்து தேங்காய்களையும் பழ வகையறாக்களையும் திருடிச் சென்றிருக்கின்றனர். பக்கத்தில் சுடுகாடு வேறு. திடீரென சாலையோரத்தில் புகை மண்டலமாய்ப் போகும். “இன்னிக்கு ஒரு பொணம் வந்திருக்கு போல. அதை எரிக்கிறாங்க” இது பாட்டி ரொம்ப சாதாரணமாய். நாங்களோ சிறுவர்கள். இதயத்தில் சிலீர் என ஒரு நடுக்கம் மின்னலாய்க் கீறி விட்டுச் செல்லும்.

இரவு நேரங்களில் வீட்டுக்குக் வெளியில் கயிற்றுக்கட்டிலையும், நார்க்கட்டிலையும் தூக்கிப்போட்டுப் படுத்திருப்போம். நிலா காயும் நேரம், விண்மீன்களின் ஒளி வெள்ளம், சலசலக்கும் தென்னை மர ஓலைகளின் சப்தம், எங்கோ ஊளையிடும் நாய், சில்வண்டுகளின் ரீங்காரம்,மினிக்கிக்கொண்டு பறக்கும் மின்மினிப்பூச்சிகள். மனம் ஆழ்ந்திருக்கும், நெல்லை வானொலியின் நேயர் விருப்பத்தில். அழகழகான அந்தக்காலத்துப் பாடல்கள்.

இக்காலத்துப் பாடல்கள் செவிப்பறையைக் கிழிக்கும் உணர்ச்சி மிக்கப் பாடல்கள். அந்தக்காலத்து இளையராஜாவின் இசை ராகங்கள் இதயத்தைத் தீண்டி ஆன்மாவைத் தட்டியெழுப்பும் உணர்வுப்பூர்வப் பாடல்கள். கேட்கக் கேட்க கேட்டுக்கொண்டெயிருக்கத் தூண்டும் ஜால ராகங்கள், பல ரகங்கள். திடீரென பாடல் அரைகுறையாய் நிற்கும். என்னவென்று பார்த்தால் நிகழ்ச்சி முடிந்து போயிருக்கும். சோகம் அப்பிக்கொள்ளும், அவ்வளவுதானா என்று. அப்படியே தூங்கி விடுவோம்.

எங்களுக்குக் காவலே நாய்கள் தான். நிறைய நாய்கள் வளர்த்திருக்கிறோம். பெரும்பாலும் இராஜபாளையம் வகையறாக்கள் தான். இராஜபாளையம் நாய்கள் உலகப் புகழ்பெற்றவை. அதீத மோப்ப சக்தியும், எதிரிகளைக் குறிப்பால் அறிந்து தாக்குதல் தொடுப்பதில் அவைகளுக்கு மிஞ்ச வேறு வகை நாய் கிடையாது. அவைகளுக்குப் பழகிக் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பிறப்பிலேயே சிறந்த காவல்காரன் என்ற அந்தஸ்து பெற்றவை. வேட்டைக்கும் சரியான நாய்.

இப்போதெல்லாம் ஒரிஜினல் இராஜபாளையம் நாய்களைப் பார்க்க முடிவதில்லை. பிற இனங்களுடன் கலப்பு செய்து தங்கள் அசல் தன்மையை இழந்து விட்டன. நல்ல மதமதப்பான உடலுடன், உயரமாக, கால்கள் நீண்டவையாக, சிவந்த கண்களில் எப்போதும் ஒரு ஆக்ரோஷ தன்மையுடன் ஒரிஜினல் நாய்கள் இருக்கும். டைகர், ஜிம்மி, ஜிக்கி, டார்ஜான் எனப் பல பெயர்கள் அவைகளுக்கு சூட்டியிருக்கிறோம்.

டைகர் அசாதாரணமான நாய். என்னால் அடித்துச் சொல்ல முடியும் அது போல ஒரு நாய் வேறு எங்கும் பார்க்க முடியாதென. ஒருவேளை இருக்கலாம். அப்படி இருந்தால் அது வெகு அபூர்வம். நல்ல உயரமாய், கொழு கொழுவென அதேநேரம் உடல் திண்மையாய், வழவழவென தோல், கழுத்தைச் சுற்றி சிங்கத்தைப்போல ரோமங்கள், ஈட்டி போல் தீட்சண்யமாய் பார்வை, அசோக் பில்லர் தூண்கள் போல திடமான கால்கள். ஆஜானுபாகுவாய் அசைந்து வந்தால் சும்மா கம்பீரமாய் சிங்கம் போல இருக்கும். அனாவசியமாய் குரைக்காது. ஆனால் அதன் பார்வைக்குப் பயந்தே தோட்டத்து ஆட்கள் யாரும் பக்கத்தில் வர மாட்டார்கள். குடலை உருவிவிடுமோ என்ற அளவிற்கு குத்தீட்டிப் பார்வை.

நாக்கை வெளியே நீட்டினால் தொங்கி விழுந்துவிடுவது போல இருக்கும். பெரும்பாலும் பகல் பொழுதில் கட்டிப்போட்டு விடுவோம். இரவில் அவிழ்த்துவிடுவோம். தோட்டம் முழுவதையும் சுற்றி வரும். மிகச்சரியாக எல்லையோரமே சுற்றி வரும். வேலியை அடையாளமாக வைத்துக்கொண்டு ஓடும். இரவில் அதன் கண்களைப் பார்க்க எமனும் அஞ்சுவான். மிகைப்படுத்தி ஒன்றும் சொல்லவில்லை. அதுதான் உண்மை.

குரைத்தால் எதிரொலி கேட்குமளவிற்கு அட்டகாசமான சத்தம். அது இருந்தவரைக்கும் களவு என்பது அதிகம் போனதில்லை. அதனிடம் பாசத்தை எதிர்பார்க்க முடியாது. பொதுவான நாய்களைப் போல வாலாட்டிக்கொண்டு வராது. ஆனால், “டைகர்…” என்று சத்தம் கொடுத்தால் போதும். சிறுத்தைப் பாய்ச்சல் பாய்ந்து வரும். வாலாட்டாது. ஆனால் பக்கத்தில் வந்து “என்ன?” என்பதுபோல வந்து நிற்கும்.

ஒருமுறை அதன் ஆக்ரோஷம் அதிகமாகி விட்டது. வேலைக்கு வரும் அனைவரையும் கடிக்கத் தொடங்கிவிட்டது. வெறி பிடித்துவிடவில்லை. ஆனால் ஆக்ரோஷம் அளவுக்கதிகமாகி விட்டது. வீட்டாரையும் கடிக்குமளவிற்கு வந்துவிட, அதை விற்றுவிட முயற்சி செய்யப்பட்டது.

சிங்கத்தை வாங்கி யார் மடியில் கட்டுவார்கள்! ஒருவரும் வாங்க முன்வர மறுக்க, நாளுக்கு நாள் அதன் அட்டகாசம் அதிகமாகிக்கொண்டே போனது. கிட்டத்தட்ட வெறி பிடித்ததுபோல ஆகி விட, இறுதி முடிவாக கொன்று விட முயற்சி செய்யப்பட்டது.

பாவம்..என்னதான் கொலைகார நாயாக இருந்தாலும் விசுவாசமாய் இருந்த ஜீவனல்லவா. எப்படிக்கொல்வது?

கடையில் இருந்து துத்தநாக விஷம் வாங்கிவரப்பட்டது. சாப்பாட்டில் கொஞ்சம் போட்டாலும்போதும் அந்த உயிர் காலி. அதன் உணவில் முழுவதையும் கலந்து வைத்துவிட்டு, இரவில், வெளியில் வைத்து விட்டு வந்து விட்டோம். சங்கிலியை அவிழ்த்துவிட, ஓடிப்போய் சாப்பிடச் சென்றது. சாப்பாட்டுத் தட்டினருகே முகத்தைக் கொண்டு சென்று, திடீரென எங்களைத் திரும்பிப் பார்க்க, எங்களுக்கு பதக் பதக் கென்று நெஞ்சு அடித்துக்கொண்டது.

வழக்கமாக உடனே சாப்பிட்டு விட்டு தட்டை வழித்து நக்கிவிடும் டைகர் அன்று சாப்பிடவில்லை. சாப்பாட்டைச் சுற்றிச் சுற்றி வந்தது. சிறிது தூரம் ஓடிவிட்டு சாப்பாட்டினருகே மீண்டும் வர, மீண்டும் சாப்பிடவில்லை. ஆச்சர்யமாய், வெகு ஆச்சர்யமாய் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க, மனசில்லாமல் சாப்பிடுவதுபோல் மெதுவாய், மிக மெதுவாய் சாப்பிட ஆரம்பித்தது.

பார்க்கப் பார்க்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அது பேசாமல் முதலிலேயே சாப்பிட்டுப் போயிருக்கலாம். நீண்டநேரம் யோசித்துவிட்டுச் சாப்பிட்டது நெஞ்சைப் பிசைந்தது. முழுவதையும் சாப்பிட்டு முடித்த டைகர் காவலுக்கு ஓடி விட்டது. அரண்டுபோய் நின்றோம். விஷம் வைத்துவிட்டதைக் கண்டுபிடித்துவிட்டதா? காலையில் நம்மை எதுவும் செய்துவிடுமோ? கேள்விகளுடன் உறங்கிவிட, பொழுது புலர்ந்தது.

மின்னலாய்..மேகத்திரள்களைக் கிழித்தெறியும் உத்வேகத்துடன் சீறிப்பாயும் மின்னலாய்…எங்களை நோக்கி…

எங்கள் வியப்பிற்கு அளவேயில்லை. செத்து எங்கேயாவது விழுந்திருக்குமென்று நினைத்தால் சிங்கமாய் வந்து நிற்கிறது. எப்போழுதும் விடியும்போது சரியாய் வீட்டிற்குள் வந்துவிடும், காவலை முடித்துக்கொண்டு. இன்றும் வழக்கம்போல வராந்தாவில் தன் சங்கிலி அருகே சென்று சாவதனாமாய் நடந்து சென்று படுத்துக்கொண்டது.

“அடடா..காவல் செய்து ரொம்ப களைப்பு போல இருக்கு. கம்மங்கஞ்சி வைங்க”

உணவு தரப்பட்டது. சாப்பிட்டுவிட்டு மீண்டும் படுத்துகொண்டது. சாகவில்லை. விஷம் என்ன வேலை செய்ததோ தெரியவில்லை. ஆனால் டைகரின் உக்கிரம் மட்டும் குறையவில்லை. மீண்டும் விஷம் வைத்து விஷப்பரீட்சை செய்ய மனம் விரும்பவில்லை.

அழைப்பு விடுக்கப்பட்டது, வேட்டைக்காரர்களுக்கு. சுமார் இருபது பேர் வேல் கம்புகளுடனும், விலங்குகளைச் சுடும் துப்பாக்கிகளுடன் வந்திறங்க, நாயை வீட்டுக்குள் வைத்து அடிக்கவேண்டாம் எனக் கட்டளை இடப்பட்டது.

அதன் சங்கிலியை அவிழ்த்துவிட, மெதுவாய் வெளிவந்த டைகர் சுற்றிலும் நின்ற நபர்களை ஒரு வித அச்சத்துடனும், அதே நேரத்தில் தன் சுயத்தை விட்டுக்கொடுக்காத வீரத்துடனும் உர் ரென உறுமிக்கொண்டே வெளிவந்தது.

ஒருவர் ஓங்கி அதன்மேல் கம்பைப் போட, ஓட்டம் பிடித்தது.

காட்டுக்குள் டைகரின் வெறிப்பாய்ச்சல். மரண ஓலம். துப்பாக்கிகள் கனைக்க… எங்கெங்கும் எதிரொலி.

வீட்டுக்குள் அனைவரது கண்களிலும் கண்ணீர் குளம்போல் நிறைந்து வழிய, டைகரின் சத்தம் குறையவில்லை. சுமார் இரண்டு மணி நேரப் போராட்டம்…

வெற்றியுடன் திரும்பி வந்தது வேட்டைக்காரர் படை. நிலைகுத்திய விழிகளுடன் அஞ்சாநெஞ்சனின் உடல் கிடத்தப்பட்டது.
வீட்டினருகிலேயேப் புதைக்க ஏற்பாடானது.

டைகருக்குப் பிறகு ஜிம்மியும் ஜிக்கியும் வந்தன. இரட்டைப் பிறவிகள். மிகுந்த அன்பானவை. ஒன்று கருப்பாகவும், மற்றொன்று ஆரஞ்சும், மஞ்சளும், வெண்மையும் கலந்த ஒரு நிறத்தில் இருக்கும். அவைகள் பிறந்தவுடன், தாய் நாய் இறந்துவிட்டதால், கண்கள் கூட விழிக்காத பருவத்தில் வாங்கி வந்துவிட்டோம். பால் கொடுக்க வேண்டுமே!

க்யோம்..க்யும்..க்க்கீம்ம்ம்ம்… என இரண்டும் அரற்றிக்கொண்டே இருக்கும். பசும்பாலை புட்டியில் கொடுப்போம். நல்லா சப்புக்கொட்டிக் குடித்தாலும் சில நேரங்களில் மறுத்துவிடும். தாயிடம் குடிப்பது போல இருக்குமா! தாய் பாலை மட்டும் தான் கொடுக்குமா..நாவால் தடவித் தடவி பாசத்தையும் சேர்த்தல்லாவா ஊட்டும். புட்டிப்பாலில் தாய்ப்பாசத்தை அடைத்துக் கொடுக்க முடியுமா? அதனால் தானோ என்னவோ எங்களிடம் நன்கு ஒட்டிக்கொள்ளும் இரண்டும்.

நாங்கள் வளர்த்த நாய்களிலேயே பாசக்கார நாய்கள் அவையிரண்டும். தாய்ப்பாசம் அறியாததால் எங்கள் முகம் பார்த்து வளர்ந்ததினால் எங்களை எப்போதும் விடாது. பள்ளியில் இருந்து திரும்பிவிட்டால் அதனுடன் தான் விளையாட்டு. வாய்க்குள் விரலை விட்டால் கடித்துத் துப்பிவிடுவதுபோல கடித்துக்கொண்டு தலையை வெடுக் வெடுக்கென்று ஆட்டும். ஆனால் கடிக்காது. விளையாட்டு காட்டிக்கொண்டே இருக்கும். படிக்க உட்கார்ந்தால் விடாது. மடியில் வந்தமர்ந்து கொள்ளும். கால் நகத்தால் சுரண்டிக்கொண்டே இருக்கும்.

நன்றாக வளர்ந்தபின் பக்குவமும் கூடவே வளர்ந்துவிட்டது. தேவையில்லாமல் நம்மைத் தொந்தரவு செய்யாது. நாமாகப் பார்த்து ஆவலோடு கூப்பிட்டால் தான், வாலை ஆட்டிக்கொண்டு விளையாட வரும். அல்லது அது பாட்டுக்கு சிவனே என்று அமர்ந்திருக்கும். உடல் ரோமங்கள் மின்னிக்கொண்டு வாளிப்பாய் இருக்கும். கம்மஞ்சோறு தின்று வளர்ந்தவை. எப்போதாவது கோழிக்கறி போடுவோம். வீட்டில் எத்தனையோ கோழிகள் வளர்த்தாலும் ஒருபோதும் அவைகளை நாய்கள் விரட்டியதில்லை. கோழிக்குஞ்சுகள் படுத்திருக்கும் நாய்களின் மீதேறி விளையாடும்.

இரவு முழுவதும் தூங்காது. தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி வரும். அனாவசியமாய் குலைக்காது. எதையாவது வித்தியாசமாய்ப் பார்த்துவிட்டால் விரட்டிச்சென்று அருகில் சென்று பார்க்கும். தேவை ஏற்பட்டால் மட்டுமே குலைக்கும். டைகரைப் போல அல்ல இவை. சாதுவான, அதே நேரம் வேகமும் விவேகமும் ஒருங்கே பெற்ற ஜீவன்கள்.

வழக்கமாக எங்களைப் பள்ளிக்கு அனுப்ப சாலையில் கூடவே நடந்து வரும். ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வந்துவிட்டு திரும்ப தோட்டத்திற்கு ஓடிவிடும்.

அன்று ஒரு துயரச்சம்பவம். நாங்கள் காலையில் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்க, ஜிம்மியும் ஜிக்கியும் கூடவே வந்துகொண்டிருந்தன. ரோட்டின் இரு மருங்கிலும் ஓடி ஓடி விளையாடிக் கொண்டிருக்க, நாங்கள் அவைகளின் ஓட்டத்தையும், விளையாட்டையும் சுவாரஸ்யமாய் ரசித்தவாறு நடந்து கொண்டிருக்க, கண்ணெதிரே நாய்களை அடித்துச்சென்றது ஒரு லாரி. துடிப்பதற்குக் கூட அவகாசம் இன்றி இரத்த வெள்ளத்தில் மடிந்து போயின இரு வாயில்லா ஜீவன்களும்.

சுக்குநூறாய்ச் சிதறிப்போனது மனம்.உடலில் எவ்வளவு பாரத்தை ஏற்றினாலும் தாங்கலாம். சின்னஞ்சிறு மனதில்?

மீண்டு வர வெகு நாட்களாயின. மீண்டும் வேறு நாய்..வேறு விதமான அனுபவங்கள்.

சமீபத்தில் நாங்கள் வாழ்ந்த அந்த ஊருக்கு கோயிலுக்குச் சென்றிருந்தோம். பேருந்தில் திரும்பி வரும் வழியில்தான் நாங்கள் புழங்கிய அந்தத் தேவலோகத் தோட்டம். தோட்டத்திற்குச் சென்று சுற்றிப் பார்க்கும் ஆசை இருந்தாலும் நேரமின்மை காரணமாக உடனே திரும்ப வேண்டிய நிலை. ஆவலாய் பேருந்தின் ஜன்னல் வழியே தலையை நீட்டியபடி பார்த்துக்கொண்டே வர, தோட்டம் நெருங்கிக்கொண்டிருந்தது.

திடீரென மழை. சடச் சட வென பெரிய பெரிய தூறல்கள் விசிறடிக்க, பட படவென ஜன்னல்கள் சாத்தப்பட்டன. நனைந்தாலும் பரவாயில்லை என அரசுப் பேருந்தின் இற்றுப்போன ஜன்னல் கதவை கஷ்டப்பட்டுத் திறக்க முயற்சிக்க, எளிதாக இறக்கப்பட்ட அந்த ஜன்னல் திரை மேலே நகருவேனா என்கிறது.

“அய்யோ..தோட்டம் போயிடுமே” பதைபதைப்பு. சிறிது போராட்டத்திற்குப் பின் திறக்க, கண்ணில் பட்ட அந்தக் காட்சி இதயத்தைக் கிழித்தெறிந்தது.

“காவேரி நகர் – இவ்விடம் பிளாட்டுகள் வாங்க / செல் நம்பர்ஸ..”

எங்கும் வண்ண வண்ண எல்லைக் கற்கள் பதித்திருக்க நாங்கள் வாழ்ந்த அந்தத் தோட்டத்தின் சுவடு கூட இன்றி அழிக்கப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கில் பிளாட்டுகள் பிரிக்கப்பட்டு விற்பனைக்கு ஏற்பாடாயிருந்தன.

பேருந்து அந்த இடத்தைக் கடந்து கொண்டிருக்க, கண்களில் நீர் துளிர்த்து ஓட, தேவலோகம் மயானமாய் மாறியிருந்ததைப் போன்ற பிரமை ஏற்பட்டது.

பக்கத்திலிருந்தவர் சொன்னார். “சொத்துப் பிரச்சினை ஆயிருச்சுங்க. நல்லாத் தான் பாத்துக்கிட்டாங்க. நிர்வாகத்துல ஆளாளுக்கு நாட்டாமையாகி அண்ணன் தம்பிகளுக்குள்ள தகராறு வந்து தோட்டத்தப் பங்கு பாகம் பிரிச்சுட்டாங்க. பராமரிப்பு சரியில்லாததுனால நஷ்டமாகி தோட்டத்தையே அழிச்சுட்டு ப்ளாட் போட்டுட்டாங்க. இப்போ அங்க ரெண்டு கிணறு மட்டும் அப்படியே இருக்கு. மத்தபடி புல்பூண்டு இல்லாம அழிச்சுட்டாங்க”

கண்களை இறுக மூடிக்கொண்டேன். கிழிந்த இதயத்தைத் தைக்க முடியுமெனத் தோன்றவில்லை.

பேருந்து விரைந்து கொண்டிருந்தது நிதர்சனத்தை நோக்கி.

****

திரும்புகிறேன் இன்றைய வாழ்க்கைக்கு.

வீடு நுழைந்ததும் மீண்டும் கம்ப்யூட்டர்..மீண்டும் இண்டர்நெட்..மீண்டும் லொட் லொட் கீ போர்ட். இயந்திரத்துடன் முட்டும் நவீன வாழ்க்கை தொடர்கிறது.

இயற்கையுடன் இணைந்த வாழ்வு இனி கிடைக்குமா!!

– ரிஷிகுமார்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *