கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 28, 2015
பார்வையிட்டோர்: 11,769 
 

வடக்கு லண்டன்;: 2000

வானத்தைப் பொத்துக் கொண்டு மழை கொட்டிக் கொண்டிருந்தது.காலணிகள் நனைந்து சதக் பொதக் என்று சப்தம் போட்டன. வாயு பகவான் வேறு, தன்பாட்டுக்கு எகிறிக் குதித்து மழைநீரை வீசியெறிந்து உடம்பை நனைத்தான்.

‘ஹலோ’ குடையைச சற்று உயர்த்திக் குரல் வந்த திசையை நோக்கினால்.தனது முக்காட்டை உயர்த்தியபடி பக்கத்து வீட்டுப் பரிதா அஹமட் நின்று கொண்டிருந்தாள்.

உடல் நனைந்த தெப்பம்.

முக்காடு நனைந்த முகத்தில் பன்னீர் தெளித்தமாதிரி மழைநீர் முத்துக்கள் உருண்டன.

“ஹலோ பரீதா”நான் நடந்தேன், அவள் தொடர்ந்தாள். ஏதோ முக்கிய விடயத்தை சுமந்துவருகிறாள் என்று அவள் நடை சொல்லியது. ‘என் பூனைக்குட்டியைப் பார்த்தாயா’?

அவள் குரல் நடுங்கியது. குளிரிலா அல்லது சோகத்திலா தெரியாது.

அடுத்தவீட்டு பொல்லாத குறும்பான பூனைக்குட்டிக்கு சொந்தக்காரி அவள்.

பூனைக்குட்டி எங்கே போனது?

நான் அவசரமாக என்வீட்டுக்கதவைத் திறந்தேன். நனைந்த உடையுடன் என் வீட்டு கார்பட்டில் ஈரம் சொட்டச் சொட்ட அவள் என்னைத் தொடர்ந்தாள்.

‘இல்லை நான் உனது பூனைக்குட்டியைக் காணவில்லை’.நான் பரிதாவுக்குச் சொன்னேன்.

பரீதா எனது வலதுபக்கத்து வீட்டுக்காரி. நான்கு குழந்தைகள். அவர்களில் மூன்று பையன்கள், ஒரு மகள். அவளுக்கு பதினெட்டு வயதாம். கலியாணம் பேசி நிச்சயித்து விட்டதாக, எங்களுக்கு இடையில் உள்ள பின்வீட்டு மதிலுக்கு மேலால் வார்த்தைகளை பரிமாறிய போது பரீதா அகமட் எனக்கு சொல்லியிருக்கிறாள்.

‘கலியாணம் நிச்சயமாகிவிட்டதாமா?

அப்படியென்றால் இரவில் மதிலைத் தாண்டி வந்து உன்வீட்டுத் தோட்டத்தில் அந்தப்பெண் முத்தமிட்டுக்கொண்டிருக்கும் பையன் யார்’?

எனது இடது வீட்டுக்காறியான சிந்தியா இப்படித்தான் துள்ளினாள். சிந்தியா வெள்ளைக்கார மாது அவள். அவளுக்கு அறுபது வயதுக்கு மேல். நேர்மையாக நடந்துகொள்பவள்.

பொய் பேசமாட்டாள். இரவு மூன்று மணிவரை அவள் வீட்டு வெளிச்சம் அணைபடாது.

ஏதோ படிப்பாள் போலும். அல்லது வேறு என்ன பண்ணுவாள் அறுபது வயதில்? இரவு நடுச் சாமப் பூதமாக சிந்தியா திரிவதாக எனது சின்னமகன் ஒருநாள் கிண்டலடித்தான்.

‘வயது போனால் நித்திரை வராது. அதனால்தான் சிந்தியா ஏதோ பண்ணிக்கொண்டிருக்கிறாள்’ என்று விளக்கம் சொன்னேன். பகலில் அவள் தோட்டத்தில் என்னதான் பண்ணுவாளோ தெரியாது ஆனால் ஏதோ செய்துகொண்டிருப்பாள். அவளுக்கு இரண்டு பெண்கள். அவர்களுக்கு 35ம் 32 வயதாகிறது.

மூத்தபெண் அவசர அவசரமாக தனது உடல் கனத்தை குறைத்துக்கொண்டுள்ளாள்.

‘சிலிம்’ ஆக இருந்தால் பையன்களின் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்குமாம்.

35 வயது முதுகன்னி என்று சொல்லமுடியாதவாறு உடல் தேய்துகொண்டு வருகிறது.

எப்படியும் 40 வயதுக்குள் ‘செற்றிலாகிவிட வேண்டும்’ என்று சொன்னாள்.

அவளின் தங்கை,32 வயதுப் பெண் காரில் ஓடிக்கொண்டேயிருப்பாள்.

எனது சிந்தனையை தன்னிடம் இழுப்பது மாதிரி “எனது அழகான பூனைக்குட்டி அடிக்கடி உன்னுடைய வீட்டுக்கு வருமே ஞாபகம் இல்லையா?”

பரீதா கொட்டும் மழையில் நனைந்த குரலில் இன்னும் என்னைக் கேட்டுக்கொண்டிருந்தாள். எனது ஞாபகம் பக்கத்து வீட்டுப் பெண்ணில் இருந்து சட்டென்று பரீதாவில் மாறியது.

ஒரு சிலகிழமைகளுக்கு முன் எங்கள் வீட்டு பூனையான ஜோசி தோட்டத்தினால் ஓடி வந்த ஒரு பூனைக்குட்டியை பொறாமையுடன் வெறுத்துப் பார்த்தது.

அந்தப் பூனைக்குட்டியின் கண்களில் எத்தனை குறும்பு. தன்வீட்டுச் சொந்தம் போல் எங்கள் தோட்டத்தில் ஓடித்திரிந்தது. எங்களை கண்டு நிமிர்ந்து பார்த்து கம்பீரமாய் நின்றது.

அள்ளி எடுத்தேன். அணைப்பில் துவண்டது.

“யார் வீட்டுப் பூனையோ?’ சின்ன மகன் பெருமூச்சு விட்டான். என் குழந்தைகளுக்குப் பூனை நாய் என்றால் மிகவும் பிடிக்கும்.

எங்கள் வீட்டு பெண் பூனைக்குக் கர்ப்பத்தடை செய்து விட்டதால் பூனைக் குட்டியைக் கண்டுகளிக்கும் இன்பத்தை அடையாதோர் என் பையன்கள் இந்தப் பூனைக்குட்டியை வைத்த விழி வாங்காமல் ரசித்தார்கள்.

பூனைக்குட்டி அடிக்கடி வந்தது. சாப்பாடு போட்டோம். ருசித்து ரசித்து சாப்பிட்டது. பெரிய பூனை ஜோசி சின்ன மகனின் செல்லத்தில் சீராடும் பூனைக் குட்டியைப் பொறாமையுடன் பார்த்து பெருமூச்சு விட்டது. சக்களத்திப் பார்வை.

“இது யாரோ எறிந்து விட்ட பூனைக்குட்டி எங்களுடையது ஆக்கி விடுவோமா”

சின்னமகன் வாஞ்சையுடன் கேட்டான்.

“இது அனாதைப் பூனையாய் இருந்தால் இதையும் எங்கள் வீட்டில் வைத்திருப்போம்?’ என் அனுமதி என் மகனின் கற்பைனையை வளர்த்து புதுப் பூனைக்குப் பெயர் வைப்பதில் விரிந்தது.

“ஆசை தீர ‘கிளியோ’என்று கூப்பிடுவேன்” என்றான் சின்ன மகன்.அவனின் பிரகடனம் தர்ம சங்கடமாக இருந்தது.

ஒரு காலத்தில் எங்களால் வளர்க்கப்பட்ட ‘கிளியோ’ (கிளயோ பத்ரா) என்ற பூனை காரில் அடிபட்டு இறந்தசோகம் என் பையன்களை இரண்டு நாள் பட்டினியாய் இருக்கப்பண்ணியது. கிளியோபாத்ராவின் விபத்துக்கு நூறு பவுண்கள் செலவழித்தும் பிரயோசனமில்லை. “வேண்டாம்…” நான் தயங்கினேன்.

மகன் ஏன் என்று பார்வையால் கேட்டான்.

“வள்ளி என்று கூப்பிடுவோம.

எனக்குப் பெண் குழந்தை இருந்தால் வள்ளி என்று பெயர் வைப்பேன்.

“சரி”. ‘வள்ளி என்று கூப்பிடுவோம் அவனுக்கு ‘வள்ளி என்று சொல்லச் சரியாகவராது .

‘வரிலி’ என்ற அவனின் செல்லக் குரலில் பூனைக்குட்டிவாஞ்சையுடன் வளைய வந்தது.

பூனை குறுக்காற் போகும் அபசகுனம் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது.

லண்டனுக்கு வந்த நாளிலிருந்து பூனைகள் வளர்க்கிறோம். பூனையில் விழித்துத்தான் மற்ற விடயங்கள் நடக்கும். ‘ஜோசி’ப் பூனை காலையில் தனது சாப்பாடு கேட்டு எனது காலைத்தடவும். சின்ன ‘வள்ளிப் (வாலி) பூனை ‘ஒரு சில நாட்கள் எங்களுக்குச் சந்தோசம் தந்தது.

அது ஒரு ‘அனாதையதகத்தான்’ எங்களுக்கு அறிமுகமானது.

“ எனது பூனைக் குட்டிக்கு எவ்வளவு ஆசையாக நான் நாஸர் என்று பெயர் வைத்தேன் தெரியுமா?’பரீதா நான் கொடுத்த சூடான தேனீரைக் கையில் வாங்கியபடி சொன்னாள்.

நாஸர் என்றால் பிரித்தானியருக்கு எதிராகச் சூயஸ் கால்வாய்க்குச் சண்டைபோட்ட எஜிப்தியத் தலைவர் நாஸரா? நான் பரிதாவிடம் அந்த விடயத்தை எடுக்கவில்லை.

“வள்ளிp (வாலி) என்றுஎனது மகனால் புதுப் பெயர் வைக்க ஆசைப்பட்ட பூனைக்குட்டி அடுத்த வீட்டுப் பூனைக் குட்டி என்று தெரிய ஒன்றிரண்டு கிழமைகள் எடுத்த அதிர்ச்சியை நாங்கள் நாகரீகமாக மறைத்துக் கொண்டோம். நாஸரில்(வாலியில்) உள்ள அன்பு குறையவில்லை.

“முஸ்லிம்கள் பூனை வளர்ப்பார்களா?”

“ஆமா நாய்தான் ஹராம்”பரீதா தன் முந்தானைக்குள் நாசரை அணைத்தபடி மதிலுக்கு அப்பால் நின்று பதில் சொன்னபோது அவள் முகத்திற் தெரிந்த பூரிப்பும் இப்போது தெரியும் சோகமும் முன்னுக்குப் பின் முரணானவை.

“என் மகனுக்கு இந்தப் பூனைக்குட்டியில் பெரிய விருப்பம்…. எங்கள் பிள்ளைகளில் ஒன்றாக வளர்த்தோம் அவள் பெருமூச்சு விட்டாள்.

அடுத்த நாள்.

மழை நின்று விட்டது.

ஆறரை மணிக்கு வேலையால் வரும்போது பரீதா தன் மஞ்சள் நிற சுடிதாருடன் மதிலுக்குமேலால் என்னைக் கூப்பிட்டாள்.

பூனை பற்றி போலிசாரிடம் தகவல் கொடுக்கப்போன போதுபோலிசாரால்த் தான் மிகவும் ‘மோசமாக’நடத்தப் பட்டதாகச் சொன்னாள்.

“இந்தத் தெருவில் எத்தனை கார் உடைபட்டுச் சாமான்கள் களவாடப் படுகின்றது என்று தெரியுமா? எத்தனை வீடுகளில் ஜன்னல்கள் உடைபடுகின்றன என்று தெரியுமா?

பூனை பற்றி நாங்கள் கவலைப் படவேண்டுமென்கிறாய். எங்களிடம் எங்கள் உதவி கேட்டு வருபவர்களுக்கே பதில் சொல்ல நேரமில்லை. நீ ஏதோ பெரிய பூனை பற்றிச் சொல்ல வந்து விட்டாயே என்று கேட்டான் அந்த ‘இன’வாதப் போலிஸ்காரன்”பரீதா திட்டித் தீர்த்தாள்.

என்ன எதிர்பார்க்கிறாள் போலிசார் பரிதாவின் பூனையைத் தேட ஒரு ‘பூனை அதிரடிப் படையை’அனுப்பவேண்டுமா?

பூனையின் படத்தை தெரு மூலையில் கடை வைத்திருக்கும் திரு ரஞ்சித் பட்டேலிடம் கொடுத்திருப்பதாகவும் அவள் அதைத் தன் கடையில் வருபவரிடம் காட்டி பூனை பற்றிய தகவல்களைச் சொல்வதாகவும் சொன்னாள்.

இடது பக்க வீட்டு சpந்தியாவிடம் பரீதாவின் இளம் பூனையைப் பற்றிய விடயத்தைத் சொன்னேன்.

“இருட்டில் அவள் மகளுடன் உன் வீட்டுத் தோட்டத்தில் முத்தமிடும் காதலனிடம்இ பூனைக் குட்டியைப் பற்றிக் கேட்டுச் சொல் என்றாள் சிந்தியா.

கலியாணம் நிட்சயமாகியும் பரீதாவின் மகள் காதலனுடன் கொஞ்சுவது சிந்தியாவுக்குப் பிடிக்கவில்லை. அது காதலனா அல்லது அவளுக்குப் பேசியிருக்கும் வருங்காலக் கணவனா?

என் வீட்டில் பின் பக்கத்துத் தோட்டத்தில் தன் வீட்டு மதில் ஏறி (நடிகைதேவஞானி தன் காதலனுடன் மதிலேறி ஓடுவதற்கு முதல் இது நடந்தது) ,தன் அன்பனுடன்(?) கொஞ்சும் பரீதாவின் மகள் பற்றி நான் அக்கறை எடுக்கவில்லை.

என்பது சிந்தியாவின் குற்றச்சாட்டு. அடுத்தார் வீட்டு விடயத்தில் நான் மூக்கை நுழைப்பதில்லை என்று சிந்தியாவுக்குத் தெரிந்தும் சிந்தியா என்னைச் சீண்டுவதை நான் பொருட்படுத்தவில்லை.

பரீதா தன் மகளின் எதிர்காலக் கணவன் மகளைப் பார்க்க வரும்போது தனக்கு ஒவ்வொரு கிழமையும் செலவுக்கு பணம் தருவதாகச் சொல்லியிருக்கிறாள்.

அப்படியானால் அவள் மகளை இருட்டில் தடவுவது யாராயிருக்கும் என்பது எனக்குந் தெரியாது. அதிலும் என் வீட்டுத் தோட்டத்தைத் தங்கள் சொர்க்க பூமியாக்குவதும் எனக்கு எரிச்சல் வந்தது. எரிச்சல் பரீதாவின் மகளுக்குக் காதல் இருப்பதைப் பற்றியல்ல. பதினெட்டு வயதில் காதல் வராமல் எந்த வயதில் வருமாம். ஆனால் அவர்கள்,நான் மிக மிகக் கஷ்டப்பட்டு வளர்த்த எனது அருமையான ‘கமிலியாச்’செடியைத் தங்கள் அணைப்பில் சேர்த்துத் துவம்சம் செய்தது அடியோடு பிடிக்கவில்லை.

இந்த ‘இரவுக் காதல்’ விடயம் பற்றியும் அவர்கள் எனது தோட்டத்துக் ‘கமிலியாச் செடியைத்’ தங்கள் காதலுக்குப் பலியாக்குவது பற்றியும் என்ன செய்யலாம் என்று என் பையன்களிடம் ஆலோசனை கேட்டபோது ,’காதலிப்பது அவர்கள் உரிமை.. ஆனால் எங்கள் வீட்டுத் தோட்டத்தைத் தவிர பாதுகாப்பான இடம் அவர்களுக்குக் கிடைக்காதது பாவம்தானே“ன்று இளைய மகன் கேட்டான். அவனுக்குப் பதினேழுவயது. “சுதந்திpரமான ” கருத்துக்களில் நம்பிக்கையுள்ளவன்.

பெரிய மகன் சொன்னான், ‘பிரிட்டிஷ் சட்டத்தின்படி பதினாறு வயதில் பெண்கள் காதல் செய்யலாம்’ என்றான்.

அடுத்த வீட்டார் தோட்டத்திலா?

நான் எரிச்சல் பட்டுக்கொண்டேன். கடைசி மகன் அண்மையில் அடுத்த வீட்டில் (பரீதா வீட்டில்) அவள் மகனுக்கு அவளின் தமயன் அடித்ததைத்தான் கேட்டதாகச் சொன்னான்.

மகளின் காதல் தெரிந்த தமயன் வெடித்தானா? பரீதா வீட்டில் இல்லாத போது, ஒரு நாள் பெரிய அலறல் கேட்டது.

“யூ பிளடி பிச்” என்று பரீதாவின் மகன் ஒருத்தன் பரீதாவின் மகளை அடிப்பதும் அவள் அலறுவதும் கேட்டது. சத்தம் சிந்தியாவுக்கும்
கேட்டிருக்க வேண்டும். “பூனை மதிலேறி ஓடி விட்டதாகப் பரீதா ஒப்பாரி வைக்கிறாள். மகள் ஏறிப் பாயும்போது ஏன் தெரியாதாம்”

சிந்தியாவுக்கு மறுமொழி சொல்லவில்லை நான்.

ஒரு சில தினங்களின் பின் ஒரு இரவு, பூரணை இரவு, லண்டன் வெண்ணிலவில் குளிர்த்துக் கொ ண்டிருக்கும் போது பரீதா முக்காடுபோட்ட முழு நிலவின் தோற்றத்துடன் எங்கள் கதவைத் தட்டினாள்.

திருவாளர் பட்டேல் தனது ‘பூனை இருக்குமிடத்தைக் கண்டுபிடித்ததாகச் சொன்னதாகச் சொன்னாள். திருவாளர் பட்டேல் மிக நல்லவர். பெண்களில் மிக “அக்கறை”கொண்டவர். அழகாகச் சிரிப்பார். “நல்ல வpடயம்,பூனை எங்கேயிருக்கிறது என்று கண்டுபிடித்தது நல்ல விடயம்” என்றேன்.

“மிகக் கெட்ட விடயம்” பரீதா குமுறினாள்… எனக்கு விளங்கவில்லை.

“உனக்குத் தெரியுமா, என் பூனை எனது முன் வீட்டுப் பக்கம் விளையாடிக் கொண்டிருக்கும் போது இந்தப் பக்கத்தில் காரில் வந்த ஒருத்தி எனது செல்லப் பூனையைக் களவாடிக்கொண்டு போய்விட்டாள். அதைப் பார்த்த ஒருத்தர் திரு.ரஞ்சித் பட்டேலிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்.” பரிதா அதிர்ந்தாள்.

எங்கள் தெருவில் எதுவும் ரகசியம் பண்ண முடியாது என்று எனக்குத் தெரியும்.

“பூனை எங்கேயிருக்கிறது என்று தெரிந்தால் போய்க் கேட்பதுதானே”

குழப்பத்துடன் நான் கேட்டேன்.

“அங்கேதான் சங்கடம்… பூனையைத் திருடியவளின் வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டினால் மூன்று நிறத்தில் மனிதர்கள் என்னைத் தாறுமாறாகப் பேசுகிறார்கள்”

பரீதா வெடித்தாள். பல இன மக்களை ஒரே நேரத்தில் பார்த்த பயம் முகத்தில் பரவிக் கிடந்தது.

“மூன்று நிறமா”

“ஆமா, அவள் வெள்ளைக்காரி, அவளுடன் இருந்த இளைஞன் அவள் மகனாய் இருக்க வேண்டும். நீலக்கண்ணும் கலப்பு நிறமுமாக இருந்தான். மற்றவன் அவனின் தோளைத் தடவியபடி இருந்தவன் காதலனாக இருக்க வேண்டும். அவன் கறுப்பன், தடியன் என்னை முட்டாள் என்று பேசினான். பூனை தொலைந்தை நான் கேட்டால் என்னை இடியட் பிச் என்று பேசலாமா?” பரீதா பெண்மை சிலிர்க்க கேட்டாள்.

“இப்போது என்ன பண்ணப்போகிறாய்”

“போலிசாரிடம் போனேன். தாங்கள் நேரமிருந்தால் இதுபற்றி விசாரிப்பதாகச் சொன்னார்கள். எனது பூனை எங்கேயிருக்கிறது என்று தெரிந்ததும், ஒரு அக்கறைறம் எடுக்காமல் இருப்பது போலிசாரின் இனவாதம் தானே?’ அவள் வெடித்தாள்.

கொஞ்ச நாளைக்கு முன் வழிப்பறி செய்து காசு பிடுங்கும் சில கறுப்பர் எனது கடைசி மகனைக் கண்ட மாதிரி உதைத்து விட்டார்கள். நான் போலிசாரிடம் போனபோது இரண்டு அல்பங்களைத் தந்தார்கள். இவர்கள் தான் இந்த வட்டாரத்தில் கைதேர்ந்த கேடிகள்இ இவர்களிpல் உன்னை யார் உதைதத்தார்கள் பொலிசார் என் மகனைக் கேட்க “அவர்கள் எனது மூக்கிலும் முகத்திலும் குத்தி விழுத்தி வயிற்றில் உதைத்தார்கள்.

அவர்களின் முகத்தைச் சரியாகப் பார்க்க முடியவில்லை.” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டான். முகத்தில் குத்தி வழிப்பறி செய்பவன் முகவரியா கொடுத்து விட்டுப் போவான்?

“வெள்ளைக்காரர்கள் என்றால் இப்படிச் சொல்வார்களா? பரீதா தன் அபிப்பிராயத்தை அன்று சொன்னாள்.

அதே கால கட்டத்தில் சிந்தியாவின் மூத்த மகள் மிக விலையுயர்ந்த கார் வைத்திருப்பவள். அவள் ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி. மத்தியதர வாழ்க்கை வாழுபவள். ஓரு விலையுயர்ந்த கார் வைத்திருக்க வசதியானவள். ஆனாலும் ‘இந்தக் கார் திருட்டுப் போன

கார்மாதிரியிருக்கிறது’ என்று சொலி அவளை விசாரிப்பதற்காக,ஒரு நாள் முழுக்க பொலிசார் வைத்திருந்தார்கள்.

தாங்கள் செய்தது தவறு என்று தெரிந்ததும் மன்னிப்புக் கேட்டார்கள்.’என்ன செய்வது நாங்கள் எப்போதும் கறுப்பரைத்தான் தடுத்தி நிறுத்திச் சோதனை போடுவதாகச் சொல்கிறார்கள். நாங்கள் வெள்ளையர் கறுப்பா,ஆண்கள் பெண்கள் என்று பேதம் பார்ப்பது கிடையாது என்ற அடிப்படையிற்தான் உன்னையும் தடுத்து நிறுத்தினோம்’ என்று போலிசார் சொன்னார்களாம்.

‘எனது மரியாதையைக் கெடுத்தவர்களைச் சும்மா விடப்போவதில்லை ‘என்று எடை குறைப்பதில் தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் சிந்தயாவின் மகள் எகிறிக்குதித்தாள். போலிசார் பற்றி மேலிடத்திற்குப் புகார் செய்தாள்.

“எனக்கு உதவி செய்வாயா?’

பரிதாவின் குரலில் கெஞ்சல். தண்ணொளி நிலவில் தனியாக நின்று என்னிடம் பரிந்தாள் பரீதா.

உதவி செய்ய விட்டால் விடமாடாள் போலும்.

“என்ன பண்ணணும்”

“அந்த வெள்ளைக்காரி வீட்டுக்கு வந்து அந்தப் பூனையை வாங்கித்தா”

எத்தனை பெரிய எதிர்பார்ப்பு இது?

“உன்னால் முடியாதது, திருவாளர் பட்டேலால் முடியாதது, பொலிசாரால் முடியாதது என்னால் முடியும் என்று என்னவென்று எதிர் பார்க்கிறாய்”

ஆச்சரியத்துடன் கேட்டேன்.

“உம்… நீ வெள்ளைக்காரிகளுடன் வேலை செய்பவர்… அவர்களுடன் நன்றாய்ப் பேசுவாய்”

பரிதாவின் எதிர்பார்ப்பு யதார்த்தமற்றதாகத் தெரிந்தது.

“எதற்கும் அந்த வெள்ளைக்காரியுடன் போய்ப் பேசிப் பார்” என்று நழுவி விட்டேன். குறும்புத் தனமாய் ஓடித்திரிந்து தொலைந்து போன நாஸரில் கோபம் வந்தது.

அடுத்த இரவு இந்தப் பூனை விடயத்தை முழுக்க மறந்தவளாக நான் டி.வி.

நிகழ்ச்சியில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தேன்.

முன் கதவில் யாரோ தட்டினார்கள். டி.வி. நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும்போது,பூசை வேளையில் புகுந்த கரடியைப்போல் யார் குழப்புகிறார்கள் என்ற எரிச்சலுடன் வந்தேன்.

முக்காட்டு மறைவைத் தாண்டி ஆயிரக்கணக்கான பெறுமதியான நகைகள் குலுங்க (பரிதா எப்பவும் நிறைய நகை போட்டிருப்பாள். ஏழை என்று சொல்பவள். கழுத்தில் கிடக்கும் நகை மட்டும் ஐயாயிரம் பவுண் வெகுமதி யானவை என்று சொலியிருக்கிறாள்) நின்று கொண்டிருந்தாள்.

“பிளீ ஸ் … அவள் அடுத்த தெருவிற்தான் இருக்கிறாள். ஒரு நடை நடந்துவிட்டு வருவோம்.”

“வேலையால் ரொம்பவும் களைத்துப் போய் வந்திருக்கிறேன்.” நான் முணுமுணுத்துக் கொண்டிருக்கும்போது கார் ஒன்று வீட்டு முன் நின்றது.

உயர்ந்த நெடுப்பான உருவம். காரால் இறங்கிய பெண் எனக்குத் தெரிந்தவள்.

“ஹலோ ஆஞ்சலா”நான் ஆச்சரியத்தில் கூவி விட்டேன். வந்த பெண்மணி என்னையும் பரீதாவையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“ஹலோ ராஜி, நீ இந்தப் பக்கம் இருக்கிறாயா?’ அவள் குரலிலும் என்னைப் போல ஆச்சரியம்.

பரிதா இப்போது எங்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.

“உனக்கு இந்த வெள்ளைக்காரியை தெரியுமா?”

பரிதா ரகசியம் பேசுவதுபோற் கேட்டாள்.

“இருவரும் ஒருகாலத்தில் ஒன்றாய் வேலை செய்தவர்கள்”நான் சொல்லிமுடிக்கமுதல், “இவள்தான் என்பூனையைக் களவாடியவள்” பரிதா ஆத்திரத்துடன் கூவினாள்.

“ஏய் வாயை அடக்கிப்பேசு அனாதையாய் ரோட்டில் திரிந்த பூனைக்குட்டியை அன்பாக நான் பாதுகாக்கிறேன்”ஆஞ்சலா வெடித்தாள்.

“என்ன அனாதைப்பூனை என்கிறாய்.என்முன் வீட்டில் விளையாடிய பூனை.’—பரிதா

“உன்முன் வீட்டிலல்ல தெருக்கோடியில் அனாதையாக நின்றது”—ஆஞ்சலா துருதுருவென்ற அந்தபூனைக்குட்டி தெருக்கோடி வரைக்கும் போயிருக்கும்.அது யாராலும் மறுக்கமுடியாது.

“நான் போலீசாரிடம் போனேன் அவர்கள் உன்னை சும்மா விடப்போவதில்லை”

பரிதா அழத்தொடங்கி விட்டாள்.

பொல்லாத மெளனம். வெண்ணிலாவும் மேகத்தில் முகத்தை மறைத்துக்கொண்டது.

“அதுபற்றித்தான் உன்னிடம் பேசவந்தேன்——-“ஆஞ்சலாவின் குரலில் தணிவு.

“போலீசார் என் வீட்டுக்கு வந்தார்கள்—–“ஆஞ்சலா சொல்லி முடிக்க முதல்

“அப்படியானால் எனது பூனையை என்னிடம் கொண்டுவருவதுதானே”

……..ஆஞ்சலாவுடமிருந்து பதிலில்லை.

“என்ன கறி செய்து சாப்பிட்டுவிட்டாயா”

பரிதா அதிர்ந்தாள்.

ஆஞ்சலா முறைத்துப் பார்த்தாள்.ஆஞ்சலாவுக்குப் பூனைக்கறி பிடிக்கும் என்று நான் நம்பவில்லை. அவளுடன் நான் வேலை செய்த காலத்தில் மிகவும் அவள் மிகவும் ஆசாரமான “வெஜிற்டேரியன்”.

ஆஞ்சலா ஒரு லெஸ்பியன,மரக்கறி சாப்பிடுபவள்;. ஆனால் அவள் ‘காதலி ‘கரலைன் இறுக்கமாக இறைச்சி வகைகளுடன் இணையும் போது இவள் அவளை அருவருப்பாக அவதானிப்பதை கண்டிருக்கிறேன். காதலுக்கும் கத்தரிக்காய் குழம்புக்கும் வெகுதூரம் என்று கரலைன் காதல் விவகாரத்தில் புரிந்தது.

“கரலைன் எப்படியிருக்கிறாள்”மனதில் வந்ததை அப்படியே கேட்டுவிட்டேன்.

ஆஞ்சலாவின் புருவங்கள் உயர்ந்தது.நிலவு வெளிச்சத்தில் மங்கலாக தெரிந்தது.

“என்பூனைநாஸரை என்ன பண்ணினாய்”பரிதா அம்பை ஏந்திக் கொண்டு சண்டைக்கு வந்த ராணிபோல் (நிறைய நகையணிந்து)தெரிந்தாள்.

“ஏன் இருவரும் உள்ளே வர முடியாது?”நான் கதவை திறந்து விட்டேன்.தெரிவில் இரு பெண்கள் அடிபட்டுக்கொள்வதை விரும்பவில்லை.

“அந்த பூனை என்னிடமில்லை”.

செற்றியில்(சோபாவில்)உட்காரும்போது ஆஞ்சலா முணுமுணுத்தாள்.

“அதுதான் கேட்டேனே , சமைத்து சாப்பிட்டுவிட்டாயா?”

” ஆஞ்சலா வெஜிடேரியன்” இது என் முணுமுணுப்பு”

“போலீசார் வந்து நான் ஏதோ பூனைக்கொள்ளைக்காரி மாதிரி வீடெல்லாம் தேடினார்கள்”ஆஞ்சலா போலீசாரிடம் கோபப்பட்டாள்.

“அட என் பூனையை தேட அவர்களுக்கு நேரம் கிடைத்ததா”

தன் பூனைக்காக போலீசார் எடுத்துக்கொண்ட சிரமத்தில் பூரித்துப் போனாள் பரீதா.

“ரோனி ..அதுதான் அந்தப் பூனை”—.ஆஞ்சலா தயங்கினாள்.

ஆஞ்சலா அந்தப் பொல்லாத பூனைக்குட்டிக்கு ரோனி என்று பெயர் வைத்தாளா?பிர்pத்தானிய பிரதமர், ரோனி பிளேயர் பொது மக்களின் அபிமான மனிதராக இருந்த கால கட்டமது.

“நாஸருக்கு என்ன நடந்தது” பரீதா துடித்து விட்டாள்.

ஆஞ்சலாவுக்கு பூனையின் பெயர் நாஸர் என்று கண்டு பிடிக்க ஒருசில கணங்கள் எடுத்தன.

“ம். எனது சினேகிதியின் குழந்தை மிகவும் சுகவீனமாக இருக்கிறாள் இவளுக்குப் பூனைக் குட்டி விருப்பம். அதனால…”

“நாசரைத் தானம் பண்ணினாயா…” பரீதா கத்தினாள்.

“அந்தப் பூனைரோனியை…சாரி நாஸரை (வாலியை?) அந்தச் சிறு பெண்ணுடன் ஒட்டிக்கொண்டது…”

“எனக்கு அதைப் பற்றித் தெரியாது. எனக்கு என் பூனை தேவை”

“ரோனி..பூனை…” ஆஞ்சலா இழுத்தாள்.

பரீதா எரித்து விடுபவள் போல் ஆஞ்சலாவைப் பார்த்தாள்.

“பூனை ஸ்கொட்லாந்துக்குப் போய்விட்டது.”

“எனது சினேகிதி குடும்பம் ஸ்கொட்லாந்துக்குக் குடி பெயர்ந்து விட்டார்கள்” ஆஞ்சலா சொல்லி முடிக்க முதல், பரீதா விசுக்கென்று எழுந்தாள்.

எனக்குக் குட்பை கூடச் சொல்லவில்லை. கதவைப் பட்டென்று சாத்தி விட்டுப்போனாள். போகும்போது,

“எப்படியும் நான் நாஸரை எடுப்பேன். பொலிசார் என் பூனையை எப்படியும் கண்டு டிப்பார்கள்” என்று இரைந்துவிட்டுப் பரிதாபோனாள்.

கடந்த முன்னுர்று வருடங்களக்கு மேலாகப் பிரித்தானியரும் ஸ்கொட்லாந்தும் போர்ப் பிரகடனம் செய்யவில்லை.இப்போது பரிதாவின் பூனையால் சிலவேளை போர் வெடிக்கலாமா? நான் யோசித்தேன்.

“இப்படியெல்லாம் நடந்ததற்கு மன்னிக்கவும் அந்தப் பூனையை அடிக்கடி ரோட்டுக் கரையிற் பார்த்திருக்கிறேன். அனாதைப் பூனையாக இருக்கலாம் என்று நினைத்துத்தான் கொண்டு போனேன்.”

ஆஞ்சலா உண்மையைச் சொல்கிறாள் என்று தெரிந்தது. நாங்களும்தான் அந்தப் பூனை எல்லை தாண்டி எங்களின் தோட்டத்திற்கு வந்தபோது அனாதைப் பூனை என்றுதான் நினைத்தோம்.பரீதாவுக்கு பூனையிலுள்ள வாஞ்சை பற்றிச் சொன்னேன்,’வாலி’ என்ற பெயர் வைத்தது பற்றிச் சொல்லவில்லை.

“புரிகிறது ஆனால் நானாக அவள் வீட்டுக்கு வந்து பூனை திருடினேனா…

அனாதைப் பூனை என்றுதானே எடுத்தேன்.”

“கரலைன் என்ன சொன்னாள்…”

கரலைனும் ஆஞ்சலாவும் இணைபிரியாக் காதலிகள். அந்தக் காலத்தில் எங்கள் ஆபீசில் தனித்தும் காணமுடியாது. இரு பெண்களுக்கிடையே இப்படி ஒரு காதல் இருக்க முடியுமா என்று மற்றவர்கள் வியக்கத் தக்கதாக அவர்கள் காதல் மிளிர்ந்தது.

ஆஞ்சலா முன் ஒரு காலத்தில் திருமணமாகி ஒரு பையனுக்குத் தாயானவள். ஒரு கறுப்பு மனிதனைக் கல்யாணம் செய்து அவனுக்கு இவளில் சந்தேகம் வந்ததால் வந்த சண்டையில் அவன் கம்பி எண்ணிக் கொண்டிருப்பதாக எங்களுக்கு சொல்லியிருக்கிறாள்.

“கரலைன்…” ஆஞ்சலா தயங்கினாள்.

“இன்னும் ஒன்றாய்த்தானே…” சட்டென்று எனக்குப் பரீதா சொன்ன மூன்று நிற மனிதர்கள் ஞாபகம் வந்தது. பழுப்பு நிறத்துடன் நீலக் கண்களுடனிருந்தவன் இவள் மகனாகத்தான் இருக்க வேண்டும். அப்படியால் “பிளடி பிச்” என்று பரிதாவைப் பேசிய கறுப்பு மனிதன்?

“ராஜி.. நான் கரலைனுடனில்லை நான் இப்போ மார்க் என்பவனைத் திருமணம் செய்திருக்கிறேன்” பரீதாவைத் திட்டிய இவளின் காதலன் பெயரா மார்க்? ஆஞ்சலா அவசரமாகச் சொன்னாள்.

கரலைனின் காதலுக்கு என்ன நடந்தது.

“நான் உண்மையாக ‘லெஸ்பியன்’ இல்லை. என் கணவனின் (முதல்) உள்ள ஆத்திரத்தில் ஆண்களிலேயே ஆத்திரமும் வெறுப்புமாக இருந்தது. அந்த நேரத்தில் கரலலைனுடன் தொடர்பாhக இருந்தன்” ஆஞ்சலா சொல்லிக கொண்டிருந்தாள்.

பரீதா இவள் பூனைக் கள்ளியில்லை என்பதை நம்பப் போவதில்லை. அதே போல் இவள் “லெஸ்பியனில்லை ‘என்பதை நான் ‘நம்ப’ வேண்டும் என்று அவள் எதிர்பார்ப்பது போலிருந்தது.

“மார்க்… அதுதான் உன் கணவர்…”

“ஒரு ஹொலிடேய் போயிருக்கும்போது சந்தித்தேன். சுவாரசியமென்னவென்றால் அந்த ஹொலிடேய்யில் மார்க்கின் சந்திப்பு கிடைத்தது.” குரலில் மகிழ்ச்சி.

எனக்கு என்னவோ நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்கப் பிடிக்கவில்லை. பார்வையைத் திருப்பிக் கொண்டேன்.

“தேனீர் தந்ததற்கு நன்றி” அவள் எழுந்தாள்.

மர்ர்க் தன்னைத் தாறுமாறாக ‘இடியட் பிச்’என்று திட்டியதாக பரீதா சொன்னதை இவளிடம் கேட்கலாமா என்று ஒரு கணம் சிந்தித்த பின் அதைக் கேட்க வேண்டாம் என்று மனம் சொல்லியது.

கதவு வரையும் வந்த என்னிடம், “என்னை என் கணவருடன் சந்தித்தால் நான் லெஸ்பியனாக இருந்ததைத் தயவு செய்து சொல்லிவிடாதே.”

பழைய சரித்திரத்தைப் புதைத்து விட்டாள்! அவள் குரலில் கெஞ்சல்.

மார்க்-ஆஞ்சலா அன்பை நான் ஏன் வெட்ட வேண்டும்.?

அடுத்த நாள் பரீதா முக்காட்டுக்குள்ளாக என்னைப் பார்த்து முறைத்தாள்.

நாஸரைரத் ‘திருடியவளிடம்’ நான் சினேகிதமாகப் பேசியது பரீதாவுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது.

ஆஞ்சலா எப்படி எனக்குப் பழக்கம். அவளின் வாழ்க்கை எப்படியானது என்று நான் பரீதாவுக்குச் சொன்னால் பரீதா என்ன பண்ணுவாளோ தெரியாது.

அதேபோல மதில் ஏறி மறைந்து நின்று என் வீட்டுத் தோட்டத்தில் மாய விளையாட்டு நடத்தும் அவள் மகளைப் பற்றியும் நான் சொன்னால் பரீதா என்ன பண்ணுவாளோ தெரியாது. அழகிய குட்டிப் பூனை“நாஸர்’-‘வாலி’-ரோனி’ தொலைந்ததால் தெரியவந்த உண்மைகள் என்னுடனிருக்கட்டும்.

(யாவும் கற்பனையே)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *