நாலு சக்கர போதிமரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 12,845 
 

கல்யாண வீட்டிலிருந்து இன்னும் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பியிருக்கலாம். கட்டாயப்படுத்தினார்களே என்று டின்னருக்குக் காத்திருந்திருக்கவேண்டாம். எத்தனை கூட்டம்! பழைய நண்பர்கள் பலரைப் பார்த்துவிட்டதில் நேரம் போவது தெரியாமலாகிவிட்டது. பேச்சைக் குறைத்திருந்தால் நேரத்தோடு கிளம்பியிருக்க முடியும். மேடையேறி, பரிசுப் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு, புகைப்படத்துக்குச் சிரித்துவிட்டு அப்படியே கைகூப்பியவண்ணம் வெளியே வந்திருக்கலாம்.

ஆனால், கல்யாண வீடென்பதென்ன? நினைவில் மங்கத் தொடங்கிய பலரைச் சந்திக்கிற ஒரு வாய்ப்பு. போட்டோ க்களை தூசு தட்டி மீண்டும் மாட்டிவைக்கிற மாதிரி. அங்கே தாமதமானதில் பிழையில்லை. திரும்பும்போது இந்த வழியைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டாம். மவுண்ட் ரோடு டிராஃபிக்குக்கு பயந்து அகிலா தான் இந்த உபாயம் சொன்னாள். ஸ்டெர்லிங் ரோடைப் பிடித்து, கோத்தாரி சாலை வழியே டேங்க் பண்ட் ரோடைத் தொட்டு, மகாலிங்கபுரம் தாண்டி, கோடம்பாக்கம் ஹைரோடைக் கடந்துவிட்டால் ஐந்து நிமிஷத்தில் அசோக் பில்லர். அங்கிருந்து பதினைந்தாவது நிமிஷத்தில் பல்லாவரம்.

கொஞ்சம் காதைச் சுற்றி மூக்கைத் தொட்டாலும் நேரமாகிவிட்டதைக் கருத்தில் கொண்டால் பாதுகாப்பான வழி தான். எத்தனை வருஷம் பழகினாலும் ராத்திரியில் கார் ஓட்டும்போது வேண்டாத பயங்கள் வந்துவிடுகின்றன. ஒரு டிரைவரை வைத்துக்கொள்வதில் என்ன சங்கடம்? எப்போதும் அகிலா கேட்பாள். ஒரு சங்கடமும் இல்லைதான். ஆனாலும் புத்தி அது அநாவசியம் என்று இன்னும் சொல்லிக்கொண்டிருக்கிறது. அநாவசியங்களைத் தொடர்ந்து தவிர்த்து வந்திருப்பதன் மூலமே கார் வாங்க முடிந்திருக்கிறது. சம்பாதிப்பதா ஒரு பொருட்டு? சேமிப்பல்லவா நினைத்ததை எல்லாம் சாத்தியமாக்கி வந்திருக்கிறது?

“நீ க்ளினிக் வெச்சுட்டேன்னா யோசிக்காம நாம டிரைவர் வெச்சுடலாம்” என்பான் அருண்.

குறுகிய கால லட்சியங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து அர்த்தமுடன் வாழச்செய்துகொண்டிருக்கின்றன. அகிலா ஒரு க்ளினிக் வைக்க வேண்டும். அவன் சுயமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும். பன்னாட்டுக் குளிர்பான நிறுவனத்தின் உயர் அதிகாரி என்றாலும் மாதம் தவறாமல் இன்னொருவரிடமிருந்தே சம்பளம் பெற வேண்டியிருக்கிறது. கொஞ்சம் மூச்சைப் பிடித்து ஒரு தாவல் தாவ முடிந்தால் போதும் . சுயதொழில் சாத்தியமே. அதன் வெற்றிக்கு இன்னும் கொஞ்சம் மூச்சைப் பிடித்து, இன்னும் சற்று வேகமாகத் தாவவேண்டும். முடியாதென்று ஏதுமில்லை. மனத்தில் மிச்சமிருக்கும் மிடில் கிளாஸ் பயக்குப்பைகளை மொத்தமாகப் பெருக்கித் தள்ளியாகவேண்டும், முதலில். அது முக்கியம்.

அப்புறம் பல்லாவரத்திலிருந்து இடம் பெயர்ந்து சென்னைக்குள் குடி பெயர வேண்டும். கைக்குட்டை அளவு நிலம் வாங்கி, தீப்பெட்டி அளவு வீடாயினும் சரி. சென்னைக்குள் கட்டி, குடிபுக வேண்டும். மாபெரும் மக்கள் சமூகத்தில் கரைந்து காணாமல் போய்விடுவதல்ல இதன் நோக்கம். பெருங்கூட்டத்தின் நடுவே இருப்பது தெரியாமல் ஒளிந்து வாழ்ந்தபடிக்கு ஏதாவது ரகசியமாகச் சாதித்து, என்றாவது ஒரு நாள் நாளிதழின் முதல் பக்கத்தில் மறுபிறப்பு எய்தவேண்டும்.

சின்னச்சின்னத் தாற்காலிக இலக்குகள் இதற்கு மிகவும் உதவும். காருக்கு ஒரு டிரைவர் வைக்கிற அளவுக்கு உயர்வது அதில் முதலாவது செயல்திட்டம். அதைவிட முக்கியம் இந்த நள்ளிரவுப் போதில் ஒழுங்காக வீடு போய்ச் சேரவேண்டும்.

“உண்மையிலேயே நமக்கு இதெல்லாம் தான் லட்சியமா அருண்?”

அவன் புன்னகை செய்தான். நல்ல ராத்திரி. விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் எரிகின்றன. கோத்தாரி சாலையின் முடிவில் எதிர்ப்பட்ட ஹவுசிங் போர்டு குடியிருப்புகளின் வெளியில் மக்கள் கூட்டம் வானம் பார்த்துப் படுத்துக் கிடக்கிறது. வீடு இருக்கிறவர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள். இல்லாதவர்களுக்கு பூமி வீடாகிறது.

குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிகின்றன. நாய்கள் அவற்றின்மேல் படுத்து உறங்குகின்றன. சோடியம் விளக்குகளின் வெளிச்சத்துக்கு எட்டுலட்சம் ஈசல்கள் சுற்றிச்சுற்றி வருகின்றன. மூடிய கடைகளின் வெளியில் போர்வை போர்த்திய உடல்கள் உருண்டு கிடக்கின்றன.

அரை மணி நேரமாக அவன் அகிலாவை ஸ்டியரிங் பிடிக்கச் சொல்லிவிட்டு, கீழே இறங்கி தள்ளிக்கொண்டிருந்தான். சக்கரம் தொடர்ந்து நகர மறுத்துக்கொண்டிருந்தது. சிறிய பள்ளம் தான். கஷ்டம் அதிகமில்லை. ஆனால் ஏதோ ஒரு சூட்சுமத்தில் தவறவிட்டுக்கொண்டிருக்கிறோம் என்று அவன் உணர்ந்தான். கார் வாங்கத் தெரிந்தால் போதாது. முன்னதாக அவசரகால முதலுதவிகளை அதற்குச் செய்யப் பயின்றிருக்கவேண்டும்.

யாராவது ஓரிருவர் உதவிக்கு வந்தாலொழிய பள்ளத்தில் இறங்கியிருக்கும் காரின் சக்கரங்களை வெளியே இழுக்க முடியாது. இப்போதைக்கு உண்மையான லட்சியமென்றால் அதுதான். அது மட்டும் தான்.

நாலு தூறல்கள் விழுவதற்குள் சென்னையின் சாலைகள் இப்படிப் பிளந்து சிரிக்க வேண்டாம். அக்கறை என்பது அத்தியாவசியங்களில் சேர்த்தி என்று யார் எடுத்துச் சொல்லப்போகிறார்கள்?

“கார்ப்பரேஷனை அப்புறம் வீட்டுக்குப் போய் திட்டிக்கலாம் அருண். நாளைக்கு சண்டே தான். நிறைய டைம் இருக்கு. இப்போ வண்டி கிளம்ப என்ன வழி பாருங்க” என்றாள் அகிலா.

“இரு வரேன்” என்று பள்ளத்தைத் தாண்டி எதிர்ப்புற ப்ளாட்பாரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். உழைத்துக் களைத்து உறங்கிக்கொண்டிருக்கிறவர்களைத் தன் சுயலாபத்துக்காக எழுப்புவதில் எத்தனை சதவீதப் பாவம் சேரும்? வண்டி புறப்பட்டதும் ரொம்ப நன்றிங்க என்று கைகூப்பிவிடுவதில், செய்த பாவங்களில் எத்தனை கரையும்?

குருட்டுக் கணக்குகள் மட்டுமே போடத்தெரிந்த மனம். சந்தேகமேயில்லை. மிக அதிகமான எண்ணிக்கையில் தான் பாவங்கள் புரிந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் அள்ள அள்ளக் குறையாத சந்தோஷங்களின் அடியில் ஆழமாக அப்படியொரு சோகத்தை இறைவன் புதைத்து வைப்பானேன்?

வாய்விட்டுப் பேசிவிட முடியாது. நினைத்துப் பார்த்துக்கொண்டிருப்பதிலும் பல சங்கடங்கள் இருக்கின்றன. ஒரே விஷயம் தான். தான் எண்ணிப்பார்க்கும்போது ஒரு பரிமாணத்திலும் அகிலாவின் நினைப்பில் இன்னொரு பரிமாணத்திலுமாக எப்போதும் துக்கத்தின் வாசல்களை மட்டுமே தொடர்ந்து அது திறந்துகாட்டிக்கொண்டிருக்கிறது. உறவுகள், நட்புகள், உள் உலகம், வெளி உலகம். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பழகியவர்கள், பழகாதவர்கள். யாருக்கும் அது புரியாது. புரியவேண்டிய அவசியம் தான் என்ன? ஆனாலும் ஒருத்தரிடமிருந்தும் அந்தக் கேள்வி மட்டும் வராமல் போகாது.

உலகம் கேள்விகளால் ஆனது. பதில் சொல்ல விருப்பமற்ற, சமயத்தில் பதில்களே இல்லாத கேள்விகள். உங்களுக்குக் கல்யாணம் ஆகி ஏழெட்டி வருஷம் இருக்கும் இல்லே?

School 20Kids நாலு சக்கர போதிமரம்ஆமாம். ஏழெட்டு வருடங்கள் ஆகின்றன. அதனால் என்ன? இன்னும் வயது இருக்கிறது. வாழ்க்கை இருக்கிறது. சாதிக்க ஏராளமான இலக்குகளும் இருக்கின்றன. திருமணத்தை ஒரு இலக்காகவும் குழந்தையை அடுத்த இலக்காகவும் வைத்துக்கொண்டிருக்க உலகில் கோடிக்கணக்கான ஜீவராசிகள் இருக்கின்றன. தயவு செய்து அந்தப் பட்டியலுக்குள் எங்கள் பெயர்களைத் தேடிக்கொண்டிருக்காதீர்கள்! கண்டிப்பாகக் குழந்தை பிறக்கும். பிறந்ததும் சொல்லி அனுப்புகிறேன். முடிந்தால் வந்து வாழ்த்திவிட்டுப் போகலாம். அது கூட அவசியமில்லை. ஒரு தொலைபேசி அழைப்பு. ம்ஹும். இருந்த இடத்திலிருந்தே மானசீகமாக ஒரு ஆசீர்வாதம். போதும். இப்போது உங்களது இரண்டாவது கேள்வியை உதடுகளுக்கு உள்ளேயே வைத்துப் பூட்டிக்கொள்ள முடியுமா? மிக்க நன்றி.

கேள்விகள் பிறக்கும்போது அவனுக்கு சலிப்பு மட்டுமே உண்டாகும். சமயத்தில் அடிமனத்திலிருந்து பீறிடுகிற வெறுப்பும்கூட. ஆனால் இந்தச் சலிப்பாலோ, வெறுப்பாலோ அதிக ஆபத்து இல்லை. ஆனால் அகிலாவின் விஷயம் வேறு. அவளுக்கு ஏனோ உடனேயே அழுகை வந்துவிடுகிறது. எல்லார் எதிரிலும் அழமாட்டாள். ஆனால் அவன் மட்டும் தனியே அகப்படும்போது திரும்பத்திரும்பச் சொல்லி அழுதுகொண்டே இருப்பாள். பத்து நிமிடம். அரைமணிநேரம். ஒரு மணி நேரம். முகம் சிவந்து, கண்கள் கலங்கி, மூக்கிலிருந்து நீரூற்று பீறிடும் அளவுக்குக் கொப்பளித்துப் பொங்குகிற அழுகை.

மருத்துவக்கல்லூரியில் பதக்கம் பெற்ற மாணவி. அரசு மருத்துவமனையில் கைராசி டாக்டர் என்ற பெயரை, உத்தியோகத்துக்குப் போகத்தொடங்கிய வெகுசில நாட்களிலேயே சம்பாதிக்கத் தெரிந்த நம்பகமான மருத்துவர். அகிலா பார்க்கிற பிரசவங்கள் எது ஒன்றும் பிரச்னைக்கு உள்ளாவதில்லை என்று எத்தனை பேர் சொல்லிவிட்டார்கள்!

அவளது வலியை அதிகப்படுத்துவதும் அதுதானோ என்று அவன் நினைத்தான். எத்தனை பிரசவங்களை வெற்றிகரமாக முடித்திருக்கிறோம் என்கிற எண்ணிக்கையில் என்ன இருக்கிறது என்று அவள் நினைக்கலாம்….

ooOoo

படுத்திருந்த நபர்களில் ஒருத்தரைத் தான் அவன் தொட்டு எழுப்பினான்.

“இன்னா சார்?” என்று அவன் எழுந்திருக்கும்போது ஒரு குடும்பமே விழித்துக்கொண்டது. விஷயத்தைச் சொல்லி, கொஞ்சம் வண்டியைத் தள்ள வரமுடியுமா என்று அவன் கேட்டுக்கொண்டதும் அந்த ஆள் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு எழுந்து, லுங்கியைத் திருத்தமாகக் கட்டிக்கொண்டான். அருகே படுத்திருந்த அவனது மனைவி எழுந்து உட்கார்ந்துகொண்டு, கூந்தலை அள்ளி முடிந்துகொண்டாள். இரண்டு சிறு குழந்தைகள் உரக்கக் குரலெடுத்து அழத்தொடங்கின.

“தே, தூங்கு, தூங்கு. லோலோலோலோலோலோஓஒ…”

தொப்பு தொப்பென்று அவள் தட்டியதில் நிச்சயம் குழந்தைகள் இரண்டுக்கும் உறக்கம் கலைந்துதான் போயிருக்கும்.

“இந்நேரத்துல எங்க சார் போயிட்டுவரே?” என்றான் அந்த ஆள்.

“லேட்டாயிடுச்சுப்பா. ஒரு கல்யாணத்துக்குப் போனோம். வர வழில இப்படி ஆயிடுச்சி.”

“இந்த இடமே பேஜார்தான்சார்” என்றபடி அவன் முதலில் பள்ளத்தையும் அதில் இறங்கியிருந்த காரின் சக்கரத்தையும் ஆராய்ந்தான்.

“தே, கனகா… அந்த தீப்பெட்டிய எடுத்தா” என்று அங்கிருந்தே தன் மனைவியைப் பார்த்துக் குரல் கொடுத்துவிட்டு ஒரு பீடியை எடுத்து உதட்டில் வைத்தான்.

தீப்பெட்டி வந்ததும் பற்ற வைத்துக்கொண்டு, “நீ போய் உக்காந்து ஸ்டார்ட் பண்ணு சார்” என்று சொன்னான். லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு தள்ளத் தயாரானான்.

” என் ஒய்ஃப் ஸ்டார்ட் பண்ணுவாப்பா. நானும் உனக்கு ஹெல்ப் பண்றேன்” என்று அருண் இன்னொரு பக்கம் போய், தள்ளுவதற்குத் தோதாக நின்று கொண்டான்.

அவனது குழந்தைகள் இரண்டும் இப்போது இன்னும் உக்கிரமாக அழத்தொடங்கியிருந்தன. சுற்றிலும் படுத்திருந்த வேறு பல உருவங்கள் புரண்டு படுத்தன.

“தே. அதுங்களை சும்மாகெடக்க சொல்லு” என்று தன் மனைவியிடம் அவன் சொன்னான். சும்மா கிட என்று கைக்குழந்தைகளிடம் எப்படிச் சொல்லுவாள் அவள்? கருப்பாக, ஒரே உயரத்தில் கால்களை உதைத்துக்கொண்டு கிடந்தன இரண்டும்.

“ரெட்டைக் குழந்தைங்களாப்பா?” என்று அருண் கேட்டான். பொதுவாக அகிலா அருகில் இருக்கும்போது குழந்தை என்கிற சொல்லையே அவன் கவனமாகத் தவிர்த்துவிடுவது வழக்கம். அவளுக்கென்று எந்தத் திரி எங்கே அகப்படும் என்று சொல்லமுடியாது. சட்டென்று பிடித்துக்கொண்டு சரசரவென்று சிந்தனையில் ஓட்டமாக ஓடி, தன் குறையில் வந்து நின்று சிந்தித்து, சுய சோகத்தில் அழத்தொடங்கிவிடுவாள். வாழ்விலும் சமூக அந்தஸ்திலும் மிக உயர்ந்த நிலை என்கிற இலக்கை நிர்ணயித்து அவள் மனம் முழுக்க அந்தச் சிந்தனையை மட்டுமே படரவிடும் முகமாக அவன் மேற்கொண்டிருந்த முயற்சிகள் இவ்வளவு அவ்வளவு அல்ல.

என்றாவது தமக்கும் அந்தத் தருணம் வரும். இந்தக் கஷ்டங்களையெல்லாம் பேசிச் சிரிக்க அந்தக் குழந்தைதான் ஒரு வழி உருவாக்கும். அதுவரைக்கும் ஒற்றைக்காலில் தவமிருந்தாக வேண்டும்.

ஆனால் சட்டென்று தனக்கு ஏன் அந்தக் கேள்வியைக் கேட்கத் தோன்றியது என்று அவனுக்குப் புரியவில்லை. கேட்டுவிட்டான். இனி பதில் வரும். பதிலுக்கு பதில், அதற்கொரு பதில் அல்லது கேள்வி என்று பேச்சு நீளும். அவனும் சராசரி மனிதன் தானே? கல்யாணத்துக்கு உங்க கொளந்தைய இட்டார்லியா சார்? என்று கேட்டுவிடக்கூடும். வேறு வினையே வேண்டாம். கடவுளே! இப்படியொரு இக்கட்டு இப்போது எதற்கு? வண்டி கிளம்பிவிடாதா?

“இன்னாது? ரெட்டையா? நீ வேற!”

அவன் சிரித்தான். “ஒண்ணு தான்சார் நம்முது. அந்தா கெடக்குது பாருங்க ரைட் சைடுல? அது எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.

“என்னது?”

keep a child alive நாலு சக்கர போதிமரம்”இங்க இருந்தவ தான்…வளிகெட்டுப் போனா… யார் சொல்லுறது? சொன்னாங்காட்டியும் கேப்பாங்களாக்கும்? பெத்துப் போட்டா… ஆத்தாளுக்கு இருந்த நோய் புள்ளைக்கும் இருக்குதுன்னு டாக்டருங்க சொன்னாங்க… தப்பு செய்யசொல்ல வராத வெக்கம், பெத்துப் போட்டதும் வந்திரிச்சி…. நாண்டுகிட்டு போனா…இது என்னா செய்யும் பாவம்? சரி, உசுரு இருக்கறமட்டும் நம்மோட இருந்துட்டுப் போவட்டும், எடுத்தாடின்னு சொல்லிட்டேன்…. எளவு, தூங்க மாட்டேங்குது பாரு. டெய்லி நைட்டு இப்பிடித்தான், லோ லோன்னு கத்திக்கிட்டே இருக்கும்… என்னா செய்யிறது? அதும் ஒடம்புக்குள்ள என்னா வேதனையோ, என்னா வலியோ? ஆசுபத்திரிலேயே உட்டுட்டுப் போயிருன்னு எல்லாரும் சொன்னாங்க. மனசு கேக்கல தொர. எடுத்தாந்துட்டேன். வாரம் ஒருக்கா தூக்கிட்டு ஆசுபத்திரிக்குப் போவறது தான். மாத்திரை குடுப்பாங்க. மருந்து குடுப்பாங்க…. இருக்கறமட்டும் இருக்கட்டுமே! சோறு திங்கறவங்களுக்குத் தான் ஒரு சோறு சாஸ்தின்னு தோணும். நாங்க கஞ்சி தானே குடிக்கறோம்? அதுக்கு ஒரு வாயி. அவ்ளோதான்….”

பிரமை கொண்டவன் போல் அவன் பேச்சற்று நின்றிருந்தான்.

“தள்ளு…தள்ளு…” அவன் மூச்சைப் பிடித்துக் காரைத் தள்ளினான். எதிர்பாராத கணத்தில் சடாரென்று இஞ்சின் உயிர் பெற்று சக்கரம் சுழன்றடித்துப் பள்ளத்தை விட்டு மேலேறிப் பாய்ந்து நாலடி போய் நின்றது.

“ரைட்டு சார்! வரேன்” அவன் லுங்கியைத் தூக்கி முகத்தைத் துடைத்துக்கொண்டான்.

நன்றி சொல்லக்கூடத் தோன்றாமல் வெறுமனே கைகூப்பிவிட்டு, காரில் ஏறிக் கிளப்பினான் அருண்.

அசோக் பில்லர் தாண்டுகிறவரை அங்கே அமைதி மட்டுமே இருந்தது. ஆட்களற்ற, வாகனங்களற்ற சாலையில் வண்டி விரைந்துகொண்டிருந்தபோது காற்றில் குழல் பறக்க, வெளியே பார்த்துக்கொண்டிருந்த அகிலாவின் முகத்தில் சிறு முறுவலொன்று உண்டானது. சட்டென்று மௌனத்தைக் கலைத்தாள்.

“அருண், எனக்கு ஒண்ணு தோணுது…”

அவன் சட்டென்று அவளைத் திரும்பிப்பார்த்துப் புன்னகை செய்தான். இப்படியும் நேருமா என்று மனத்துக்குள் அவன் நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். நாடகம் போல. திரைப்படம் போல.

சீச்சீ, ஏன் அப்படி நினைக்கவேண்டும்? வாழ்க்கை அழகானது. புதிரானது. இருளுக்குள்ளும் சிறு வெளிச்சத்தை எப்படியோ ஒளித்துவைத்துக்கொண்டு கையைப் பிடித்து அழைத்துப் போகிறது. எங்கெங்கோ. எப்படி எப்படியோ. ஏன், இப்படித்தான் இருந்தால் என்ன?

மொட்டவிழ்ந்த அவனது புன்னகையின் அர்த்தம் இருளில் மின்மினி போல் பிரகாசித்தது.

“சரி சொல்லு. வண்டியைத் திருப்பட்டுமா?”

அவள் சிரித்தாள். என்ன ஆனாலும் இனி அவள் அழமாட்டாள் என்பது மட்டும் அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்துவிட்டது.

ooOoo

(தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம், தங்களது பிரசாரத்துக்காகக் கேட்டதால் எழுதிய கதை இது.)

– பெப்ரவரி 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *