கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 18, 2018
பார்வையிட்டோர்: 8,965 
 

இரவு எட்டு ஆக இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தன. அதிவேகத்தில் திலீப் வண்டியில் வந்து இறங்கினான்.வழக்கமாக அவன் பணி முடிந்து வீடு திரும்ப இரவு எட்டு மணிக்கு மேல் ஆகிவிடும்.ஆனால் இன்று எப்படியாவது எட்டு மணிக்குள் வீட்டை அடைந்து விட வேண்டுமென்று முடிவெடுத்தான்.அவன் வண்டியின் சக்கரங்களும் அம்முடிவை ஆமோதித்தன.வேகவேகமாக வீட்டினுள் நுழைந்து முகம் கழுவினான்.அதுவரை அம்மாவின் கட்டுப்பாட்டில் இருந்த தொலைகாட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.

அடுத்த சில நொடிகளில் ஆட்டம் ஆரம்பித்துவிட்டது.ஒவ்வொரு பந்தையும் கவனமாக பார்த்து வந்தான்.அப்படியே இரவு உணவையும் முடித்தான்.மணி ஒன்பது ஆனதும் வழக்கம் போல் சிவகுமரன் அங்கே வந்தான்.அவனது வாடிய முகத்தை கண்டு “ஏன்டா,என்னடா ஆச்சு?. அதிக வேலையா?” என்றான் திலீப்.”அதெல்லாம் ஒன்னும் இல்லடா” என்றான் சிவா.அடுத்து எதுவும் கேட்காமல் ஆட்டத்திலேயே மூழ்கினான் திலீப்.விளம்பரம் போட்டவுடன் “ஒன்னும் இல்லனா, ஏன்டா முகம் இப்படி இருக்குது.என்ன நடந்ததுனு சொல்லேன்டா” என்றான் திலீப்.”திருப்பதி கிட்ட இருபது தமிழர்களை சுட்டுக் கொன்னுட்டாங்கடா” என்றான் சிவா.அவன் குரலிலும் சோகம் தெரிந்தது.”அய்யய்யோ!” என்று பரிதாப பட்டபடி முகத்தை தொலைக்காட்சி பக்கமாக திருப்பினான் திலீப்.உடனே “போல்டு!” என கத்திக்கொண்டே கை தட்டினான்.சிவாவிற்கு ஆத்திரமாக வந்தது.யார் சுட்டார்கள் ஏன் சுட்டார்கள் என்று கூட கேட்காமல் கிரிக்கெட் பார்த்து கொண்டிருக்கிறானே என்று தனக்குள்ளாக முணுகிக்கொண்டு கோவத்தில் ஒரு பெருமூச்சு எறிந்தான்.திலீப்பிடம் ஒரு வார்த்தைகூட கூறாமல் அங்கிருந்து புறப்பட்டான்.அடுத்தநாள் இரவு சிவா வழக்கம் போல் திலீப் வீட்டிற்கு வரவில்லை.பொறுத்து பொறுத்து பார்த்தான் திலீப்.சிவாவின் வீட்டிற்கே சென்று பார்த்துவிடலாம் என்று கிளம்பினான்.

அவன் வந்ததையும் பொருட்படுத்தாமல் சிவா ஏதோ எழுதிக்கொண்டிருந்தான் .”என்னடா எழுதுற?” என்றான் திலீப்.பேனாவை மூடிவிட்டு முகத்தை திருப்பி திலீப்பை பார்த்தான் சிவா.”இருபது தமிழர்களை சுட்டதைப் பற்றி ஒரு கவிதை” என்றான்.”சரி ஏன்டா இன்னைக்கு வீட்டுக்கு வரல?” என்றான் திலீப்.”நீ பிசியா கிரிக்கெட் பார்த்துட்டு இருப்ப வந்தா எங்கள கண்டுக்க கூட மாட்ட உனக்கு அதான முக்கியம்” என்றான் சிவா.”இன்னைக்கு சென்னைக்கு போட்டி இல்ல.நம்ப ஊருடா சென்னை.தமிழ்நாட்டுடையது.அந்த பேர்ல இருக்குற சென்னை அணியும் நம்முடையது மாதிரி தான்டா. தமிழர்கள் எல்லோரும் அதை ஆதரிக்கணும்டா” என்றான் திலீப்.”ஓஹோ! சென்னை தமிழ்நாட்டை சேர்ந்ததுனு அந்த பேர்ல இருக்குற அணிய தமிழர்களாம் ஆதரிக்கணும்.2009 மே மாதம் ஈழத்துல தமிழர்களுக்கு என்ன நடந்துச்சு. அப்போ நீங்களாம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?.இந்த தமிழ் உணர்வெல்லாம் அப்போ எங்கே போச்சி?” என்றான்.பதில் சொல்ல முடியாமல் திலீப் திணறினான்.”சரி டா. நீ ஏதோ கோவத்துல இருக்குற.நாளைக்கு பேசிக்கலாம்” என்று கூறிவிட்டு அங்கிருந்து நழுவினான்.வெகுநேரம் முயன்றும் திலீப்பிற்கு தூக்கம் வரவில்லை.

திலீப்பிற்கும் சிவகுமரனுக்கும் ஒரே வயது.இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள்.சிறுவயதிலிருந்தே நண்பர்கள்.இதுபோன்று அவர்களுக்கு இடையே சச்சரவுகள் அடிக்கடி வரும்.இருவரும் பேசாமல் விட்டுவிடுவார்கள்.ஆனால் எல்லாம் சிறிது காலத்தில் மறைந்து விடும்.பள்ளிப்பருவம் முதலே சிவா நாட்டு நலனில் நாட்டம் கொண்டிருந்தான்.திலீப்பிற்கு அதைப் பற்றியெல்லாம் ஒரு கவலையும் கிடையாது.

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது மாலை வீடு திரும்பியவுடன் அன்றைய தினசரி பத்திரிக்கைகளை சிவா புரட்டிக் கொண்டிருப்பான்.கூடவே இருக்கும் திலீப் முழு பக்கங்களையும் புரட்டும் வரை பொறுக்கமாட்டான்.எடுத்த எடுப்பிலேயே கடைசியில் திருப்பி விளையாட்டு செய்திகளையும்,சினிமா செய்திகளையும் தேடிப் படிப்பான்.முடித்ததும் தன் நண்பனிடம் கொடுத்துவிட்டு கிளம்பி விடுவான்.

சிவா அதிகமாக நூலகத்திற்கு செல்லும் வழக்கமுடையவன்.திலீப்போ திரையரங்குகளில் மட்டுமே நுழைய விரும்புவான்.சிவாவாவது திலீப்போடு அடிக்கடி படம்பார்க்கச் செல்லுவான்.திலீப் சிவாவோடு ஒரே முறை தான் நூலகத்திற்கு சென்றுள்ளான்.அப்பொழுது சிவா ஏதோ ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாற்றை படித்துக் கொண்டிருந்தான்.கைகளில் ஒரு வார இதழோடு சிவாவை சீண்டிய திலீப் “எங்க தலைவர் இப்ப நடிக்கிற படத்துல அவர் சம்பளம் இருபது கோடியாம்” என்றான் பெருமையுடன்.அவனது பற்களெல்லாம் சுதந்திரமாக உலகத்தை பார்த்துக் கொண்டிருந்தன.சிவா பதில் எதுவும் கூறவில்லை.வெளியே வந்தவுடன் “நம் நாட்டு குடியரசு தலைவரின் சம்பளம் எவ்வளவு?” என்று ஒரு கேள்வி தான் கேட்டான்.அதன்பிறகு அவனோடு நூலகம் செல்வதையே திலீப் நிறுத்தி விட்டான்.வருடங்கள் மாறிய போதும் திலீப் தனது பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் திலீப்பின் இருபத்தி ஓராவது பிறந்தநாளுக்காக புத்தாடை வாங்க சிவாவை அழைத்தான் திலீப்.இருவருமாக சேர்ந்து நகரில் உள்ள பெரிய ஆயத்த ஆடை கடைக்கு சென்றார்கள்.பல வண்ணங்களில் நவநாகரீக ஆடைகளை தூக்கிப் போட்டார்கள்.அனைத்தும் வாங்கிவிட வேண்டும் என்றிருந்தது இருவருக்கும்.இருந்தாலும் மனம் இடம் கொடுத்தும் பணம் இடம் கொடுக்கவில்லை.இருப்பதிலேயே திலீப்பிற்கு ஏற்றவாரு மூன்று சட்டைகளை எடுத்துப்போட்டான் சிவா.மூன்றும் கிட்டதட்ட ஒரே மாதிரி டிசைனில் இருந்தன.நிறம் மட்டும் தான் வேறு.சில நிமிடங்கள் யோசித்த பின் “பிங்க்” நிற சட்டையை தேர்ந்தெடுத்தான் திலீப்.துணியை பேக் செய்துக்கொண்டே,”உங்களுக்கு பிடிச்ச கலரா தம்பி” என்றுக் கேட்டார் கடைக்காரர்.”எனக்கு பிடித்த நடிகைக்கு பிங்க் கலர் தான் பிடிக்கும்.போன வாரம் கூட ஒரு போட்டியில சொல்லியிருந்தாங்க” என்றான் திலீப்.”உங்க அப்பா அம்மாக்கு என்ன கலர் பிடிக்கும்டா?” என்று குத்தாலாக கேட்டான் சிவா.தாமதிக்காமல் கடைக்காரர் சிரித்தார்.அதுமேலும் திலீப்பின் எரிச்சலை அதிகமாக்கியது.கோவத்தை வெளிக்காட்டாமல் எப்படியாவது பதிலடி கொடுக்க என்று அவன் நினைத்தான்.

“நான் எந்த கலர் வாங்குறனோ, அது தான் எங்க அப்ப அம்மாவுக்கு பிடிச்ச கலர்” என்றான்.சாமார்த்தியமாக சமாளித்து விட்டதாக நினைத்துக்கொண்டான்.இதுபோன்று தான் திலீப் ஏதாவது தவறாக செய்துவிடுவான்.அதை சிவா உடனே தவறென்று தயங்காமல் சுட்டிக்காட்டி விடுவான்.ஒரு சில சமயங்களில் சிவாவின் செயல்கள் திலீப்பின் கோவத்தை தூண்டும்.என்ன இவன் நான் என்ன செய்தாலும், எதாவது குறை சொல்லிக் கொண்டே இருக்கிறானே என்று திலீப்பிற்கு தோன்றும்.வேறு சில சமயங்களில் சிவா சொல்வது சரி தான் என்றும் கூட தோன்றியது உண்டு.

இந்த முறை பத்து நாட்களை கடந்தும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.எப்படியாவது சிவாவோடு பேசிவிட வேண்டும் என்று திலீப் சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தான்.மறுநாளே சிவா சாலையில் நடந்து செல்வதை திலீப் பார்த்தான்.வண்டியை சிவாவின் அருகில் சென்று நிறுத்தி “உக்காருடா” என்றான்.ஒரு நொடி கூட யோசிக்காமல் சிவா வண்டியில் அமர்ந்தான்.அது திலீப்பிற்கு பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியது. கோவத்தை எல்லாம் நண்பன் மறந்துவிட்டான் என்று நம்பினான்.”எங்கடா போயிட்டு வர?” என்றான் சிவா.”வெள்ளிக்கிழமை தலைவர் படம் ரிலீஸ் ஆகுது இல்ல அதுக்கு கட் அவுட் ரெடி பண்ணிட்டு வரேன்டா. இன்னொரு விஷயம் இந்த முறை எனக்கு நகர துணைத் தலைவர் பதவி மன்றத்துல கொடுத்து இருக்காங்க” என்றான் திலீப் புன்னகையுடன்.சிவா ஒரு வார்த்தையும் பேசவில்லை.

பிரதான சாலையில் இருந்த பூங்கா அருகே வந்ததும் வண்டியை நிறுத்தச்சொல்லி இறங்கிக்கொண்டான் சிவா.”ஏன்டா இங்கே இறங்கிட்ட? இன்னும் கோவம் போகலையா?” என்றான் திலீப்.”இல்ல இங்க தான் ஒரு நண்பரை பார்க்கணும்.நீ கிளம்பு” என்று சொல்லிவிட்டு திரும்பினான் சிவா.”என்னடா பதவி கெடச்சதுக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லாம போற” என்றான் திலீப்.அவன் பேச்சில் நட்பின் உரிமை தெரிந்தது.தலையை தூக்கி நண்பனை நேருக்கு நேர் பார்த்தான் சிவா.”ஒன்னு புரிஞ்சிக்கடா நடிகர்கள் உட்பட எல்லோருக்கும் அரசியலுக்கு வர உரிமை உண்டு.ஆனால் தாங்க பிரபலமானவங்க என்பதையும்,ரசிகர் பலத்தையும் பயன்படுத்தி அவங்க எளிதில் எங்கேயோ போயிடுறாங்க.நடிகரா? இல்லையா? என்பது முக்கியம் இல்ல.அவர் நல்ல கொள்கை உடையவரா,அதை அவர் பின்பற்றுவாரா? என்பது தான் முக்கியம்.வெள்ளிக்கிழமை உன் தலைவர் படம் வெளியாகுதுனு சொன்னியே,நேற்று மக்களவைல என்ன மசோதா நிறைவேற்றுனாங்கனு தெரியுமா?.சினிமாவை பற்றியும்,கிரிக்கெட்டை பற்றியும் தெரிஞ்சிக்குறது தப்பில்ல.ஆனால் சினிமாவை பற்றியும்,கிரிக்கெட்டை பற்றியும் மட்டுமே தெரிஞ்சிக்குறது தான் தப்பு.யாருக்கு வேணா ரசிகர்களா இருக்கலாம். ஆனால் யாருக்கு வேணா தொண்டனா இருக்கக் கூடாது.ஏழ்மையும், எழுத்தறிவின்மையும் ஒன்னும் திரைபட வில்லன்கள் கிடையாது.நாயகன்கள் அடித்து ஒழிக்கிறதுக்கு.நீயும் நானும் நாளைக்கு இந்த நாட்ட ஆளப்போற மன்னர்கள்.இன்றைய இளவரசர்கள்.ஒவ்வொரு இளவரசனும் இளவரசியும் அந்த நாட்டைப் பற்றியும்,சமூகத்தைப் பற்றியும் போதிய அளவுக்கு அக்கறை படலைனா அந்த நாடு பெரும் வீழ்ச்சி அடையும்.

உன்னையும் என்னையும் மாதிரி இளைஞர்களை நம்பி தான் நாடு இருக்குது.”நூறு இளைஞர்கள் இருந்தால் நாட்டையே மாற்றிக் காட்டுவேன்” என்று இன்றைக்கு உலகமே போற்றும் சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கார்.இளைஞர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவங்க என்று இதிலிருந்தாவது தெரிஞ்சிக்கோ.”இன்னும் நம் நாட்டில் கோடிக் கணக்கான மக்கள் பசியிலும் அறியாமையிலும் மூழ்கி இருக்காங்க. அவங்க செலவில் கல்வி பெற்றுக்கொண்டு அவர்களுக்காக ஒரு சிறிதும் கவலைப்படாமல் இருக்கும் ஒவ்வொருவனும் துரோகியே” என்றும் விவேகானந்தர் சொல்லி இருக்கிறார்.நீயும் அப்படிப்பட்ட துரோகிகளில் ஒருவனாக இருக்கணுமா?.அப்படிப்பட்ட இழிச்சொல் உனக்கு தேவை தானா?.நல்லா சிந்திச்சி பாரு.இந்த மன்றம்,கட் அவுட், பாலாபிஷேகம் தேவையானு நீயே ஒரு முடிவுக்கு வா” என்று சொல்லிவிட்டு பூங்காவிற்குள் நுழைந்தான் சிவா.

சில நிமிடங்கள் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி கிடந்தான் திலீப். அவனுக்குள் சிந்தனை அலைகள் பெருக்கெடுத்தன.இறுதியில் உறுதியான முடிவு கொண்டவனாய் வண்டியை பூங்காவிற்குள் திருப்பினான்.சில நண்பர்களோடு எதையோ பற்றி சிவா தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தான்.அமைதியாக அவன் பின்னால் வந்து நின்றான் திலீப்.எப்படியோ அவன் வருகையை சிவா அறிந்து கொண்டான்.“என்னடா எந்த வேலையும் இல்லையா?” என்று திரும்பாமலே கேட்டான் சிவா.”இருக்கு டா.நிறைய வேலைகள் இருக்கு.பொறுப்பும் இருக்கு.அதை நான் உணர்ந்துட்டேன் டா என்றான் திலீப்.முதன் முறையாக அவனை ஆச்சரியமாக பார்த்தான் சிவா.நம்புடா இந்த நாட்டுக்கு நான் துரோகியல்ல இளவரசன் டா” என்றான் திலீப்…

– 2015-ஆம் ஆண்டு இராமகிருஷ்ண விஜயம் மாத இதழ் நடத்திய சிறுகதை போட்டியில் ஊக்க பரிசு பெற்றது

Print Friendly, PDF & Email

1 thought on “நான் துரோகியல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *