தொலைதூரத்து வெளிச்சம்

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 10,179 
 

“”பாத மலை தெரியுது சிவா….எழுந்திரு”

– மனசுக்குள்ளிருந்து எழுப்பினாள் மாலினி

பசுந்தேயிலைகள் நிரம்பிய மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் துயில்பவனைப் போல் கண்களை மூடியபடி அமர்ந்திருந்தவன் சட்டென எழுந்து நின்று பேருந்தை நிறுத்தும்படி குரல் கொடுத்தான்.

பேருந்து நிறுத்தமோ, சாலை பிரியுமிடமோ, மனித நடமாட்டமோ இல்லாத அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்ட வண்டியிலிருந்து இறங்கியவனைப் பார்த்து, சில பயணிகள் உதட்டைப் பிதுக்கினர்.

தொலைதூரத்து வெளிச்சம்அண்டவெளி இதோ கூப்பிடும் தூரந்தான், வா என்று அழைப்பு விடுப்பது போல் தூரத்தே வான் தொட்டு இறுமாந்திருந்தது அந்த மலை. வானுயர்ந்த அந்த மலையைச் சுற்றிலும் ஆங்காங்கே சிதறு தேங்காய்களைப் போல சிறு சிறு மலைக்குன்றுகள்.

நீண்டு வளர்ந்த தாடியும், தலைமுடியும் காற்றிலே அலை அலையாகப் பறக்க நடந்தான். ஏற்றமும் இறக்கமும் நிரம்பிய பாதை நெடுகிலும் ஏகாந்தம் நிரம்பிக் கிடந்தது.

மறுபடியும் மனசுக்குள்ளிலிருந்து வெளிப்பட்டது அவள் குரல், போன வருடம் ஒலித்த குரல்.

“”இன்னும் ரொம்ப தூரம் நடக்கணுமா சிவா”

“”தூரத்தை விட செல்ல வேண்டிய இடம் தானே முக்கியம் மாலினி. இந்த சாலை நமக்காகத்தானே முன்னும் பின்னுமாய் நீண்டு கிடக்கிறது?”

“”இதற்கு முன் நான்கு தடவை வந்திருக்கிறாயே அப்படி என்னதான் இந்த மலையில் கொட்டிக் கிடக்கு?”

“”மலையேறுவதிலும் இறங்குவதிலும் தனிச்சுகம் இருக்கு. புதிய யாத்ரீகர்களைச் சந்திப்பதிலும் உரையாடுவதிலும் ஒவ்வொரு முறையும் புதுப்புது அனுபவமும், ஆனந்தமும் கிடைக்குது. இந்த பாதச்சுவடுகள் என் இறைவனுடையது என்று சொந்தம் கொண்டாடும் மனித மனங்களுக்குள் புதைந்து கிடக்கும் உணர்வுகள் எனக்குப் புதிய புதிய செய்திகளைச் சொல்லுது. ஒவ்வொரு சூரியோதயத்திலும் மனிதர்களின் பல வண்ணங்களைத் தரிசிக்க முடியும் மாலினி”

தேயிலைச் செடிகளினூடேயிருந்த மரக் கிளைகளில் காதற் பறவைகளின் சரசம் நிரம்பியிருந்தது. அவனது மன ஓசைக்கு சுருதி சேர்ப்பது போல் பறவைகளின் குரல்கள் ஒலித்தன. இன்னும் மேகம் மூடாத அந்த மலைகளுக்கு அப்பால் சூரியக் கதிர்களின் திசை மாற்றம் நிகழத் தொடங்கியிருந்தது.

யுகாந்திரப் பயணியைப் போல, இடைவெளியற்று நடந்து கொண்டேயிருந்தான்.

ஆங்காங்கே ஓடிய நீர்ச்சுனைகளின் சீரான ஓசையும் பல்வகைப் பறவைகளின் ஒலிகளும் கேட்டுக் கொண்டிருக்க ஒருவழியாக மலையடிவாரத்தை நெருங்கினான்.

மலைப் பாதையில் சிறுகடை நடத்தும் சிலர் முன் கூட்டியே போய் கொண்டிருந்தார்கள். இவன் குறுக்கிட்ட சிற்றோடையின் அருகே அமர்ந்து முகத்தை நீரால் அலம்பி விட்டு வயிறு முட்டும் வரை குளிர்ந்த நீரை அருந்தி விட்டு மறுபடியும் நடக்கத் தொடங்கினான். கடந்த வருடத்தை விட பாதையோரத்தில் செடிகள் நீண்டு வளர்ந்து கிடந்தன. சில படிக்கட்டுகள் சிதிலமடைந்து செப்பனிடப்படாமல் கிடந்தன. அவற்றை மெதுவாகத் தாண்டி குகை போன்ற இடத்திற்கு வந்தபோது ஒரு வேற்று மொழிக் குரல் அவனை அழைத்தது.

“”ஐயா, தேநீர் சாப்பிட்டு விட்டுப் போகலாமே?”

அவனுக்கும் அது தேவை போலத்தான் இருந்தது. தேநீர்க் கடையாளரின் மொழியிலேயே, “”ம், போடுங்கள்” என்று பதிலளித்து விட்டு அருகேயிருந்த கல் ஒன்றில் அமர்ந்து கொண்டான். கடைக்காரன் தீ மூட்டி அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான். இவன் பொறுமையாகக் காத்திருந்து வாழைப்பழம் ஒன்று சாப்பிட்டு, தேநீர் அருந்திய பின் அங்கிருந்து புறப்பட்டான்.

கரடு முரடான ஒற்றையடிப்பாதை, படிக்கட்டுகள், செங்குத்தான பாதை என எல்லாவற்றையும் கடந்து சிகரத்திற்கு வந்து சேர்ந்த போது சூரியக் கதிர்கள் மேற்குத் திசை நோக்கி சரிந்து கொண்டிருந்தன.

சிகரத்தின் மையத்திலிருந்து பெரும்பாறையில் அந்த இராட்சத பாதச்சுவடு அவன் கண்களை நெருட, அப்படியே சில நொடிகள் நின்றான்.

இந்த பாதச் சுவட்டுக்குப் பின்னே மறைந்து கிடக்கும், கண்களுக்குப் புலப்படாத மத நம்பிக்கைகள் தான் எத்தனை ?

கீழே திகிலூட்டும் அதல பாதாளம். மனிதக் காவுக்கு ஏங்கி நிற்பது போன்ற ஈட்டி முனைப்பாறைகள். தொலைவிலே பூதக் கணங்களைப் போல மலைகள்…..

பொழுது சாய்வதை பறவைகளின் ஒலிகள் அறிவிப்புச் செய்யத் துவங்கின. வானம் வண்ணக் கோலமிடத் துவங்கியது…

சிகரத்தை சுற்றி விட்டு சற்று தூரம் கீழிறங்கி வந்தான்.அந்த நடுத்தர வயதுடைய மரம், கடந்த வருடத்தை விட விசாலித்திருந்தது. வா என்று அழைப்பது போல் கிளைகளை அசைத்தது.

மரத்தினடியில் தஞ்சம் புகுந்தவனைப் போல அமர்ந்து கொண்டான். அந்தக் காட்டு மரம் தனக்கே உரிய பூக்களை அவ்வப்போது உதிர்த்துக் கொண்டே இருந்தது.

மெல்லக் குளிர் இறங்கியது. மூடுண்ட கண்களுக்குள்ளிலிருந்து மாலினி சிரித்தாள்…..

“”நமக்காக இயற்கை உருவாக்கித் தந்த இந்த இடம் எவ்வளவு அழகானது?”

“”எனக்குப் பயமாக இருக்கிறது சிவா. பாதச் சுவட்டை மண்டியிட்டு முத்தமிட்டு வணங்கிய அந்த மனிதனை இதற்கு முன் பார்த்திருக்கிறாயா சிவா?”

“”இல்லை, ஏன்?”

“”அவன் எங்கள் ஊர்க்காரன். எனது மொழியையும் இனத்தையும் சேர்ந்தவன்”

“”அதனால் என்ன?”

“”இதயத்தில் ஈரமற்ற பாவி அவன். நீ வேற்றான் என்று தெரிந்தால் கொல்லவும் தயங்க மாட்டான். நாம் கீழே இறங்க வேண்டாம். இங்கேயே மாண்டு போகலாம் சிவா”

“”பயம் துன்பங்களின் நாற்றாங்கால் மாலினி. வாழ்க்கை அற்புதமானது. அதை வாழ்ந்து பார்க்க வேண்டாமா?”

வானத்தின் வண்ணக் கலவைகளைச் சுவைத்து விழுங்கி விட்டு பூமியை நோக்கி இருள் இறங்கி விட்டது. மலைச் சிகரத்தின் வழித் தடங்களில் மின்னொளி பரவிற்று. பறவைகளின் ஓசை அடங்கி சில்வண்டுகளின் இரைச்சல் பெருகிற்று.

ஒரு தனித்த இரவுப் பறவையின் குரல் விட்டு, விட்டு ஒலித்து இதயத்தை இம்சைப்படுத்திற்று.

நிலவின் உயிர்ப்பில் சிகரம் மேலும் எழில் பெறுகையில் அவனது பார்வை, மலையின் காலடியில் தொடங்கும் சமவெளிப் பகுதியில் எதையோ தேடித் துழாவியது.

பொருளாசையும் இன, மத, மொழி பேதங்களும் வன்முறைகளும் பம்மிக் கிடக்கும் பூமி. அங்கு இனி என்ன மீதம் இருக்கிறது?

மலையடிவாரத்திலிருந்து சிகரம் நோக்கி வரும் யாத்ரீகர்களின் சாது சாது, சாமிசாமி என்னும் குரல்கள் நெருங்கி வந்தன. பின்னிரவு முடிவதற்குள் சிகரம் நிரம்பி விட்டது. பாதச் சுவட்டின் கீழே நெருங்கி வந்தன. பின்னிரவு முடிவதற்குள் மனிதர்களால் சிகரம் நிரம்பிவிட்டது. பாதச் சுவட்டின் கீழே ஊதுவத்திகளும் மலர்களும் குவிந்தன.

ஆங்காங்கே தனித்தமர்ந்து மெல்லிய குரலில் உரையாடும் காதலர்கள் இளந்தம்பதியர்…. வெளி நாட்டுப்பயணிகள், இளைஞர்கள்…..

கடைசியாக வெகு சிரமத்தோடு மலைச் சிகரத்தை வந்தடைந்தார் ஒரு முதிய துறவி.

பலர் எழுந்து நின்று குனிந்து வணங்கினர். ஆசீர்வதிப்பது போல் கைகளை உயர்த்திய துறவியின் முகத்தில் சாந்தமும் புன்னகையும் நிரம்பியிருந்தன.

இளைஞன் ஒருவன் எழுந்திருந்து அவர் அமர்வதற்கு இடளித்தான்.

குளிரினூடே உரையாடல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.

“”நிஜமாகவே இது இறைவனின் பாதம் தானா நம்ப முடியலே?”

“”நம்புகிறவர்களுக்கு இது இறைவனின் பாதம். நம்பாதவர்களுக்கு வெறும் கல். வேறு சிலருக்கு இது ஒரு சிற்பியின் கை வண்ணம்”

“”சரி, எந்தக் கடவுளின் பாதம்?” என்கிறாய்

“”அவரவர்களுக்கு அவரவர் கடவுளின் பாதம்”

“”விளக்கம் நன்றாகத்தான் இருக்கு. இந்தச் சிகரத்தில் அமர்ந்துக் கொண்டு பேசும் போது எல்லாம் சரிதான்…. ஆனால் சமவெளிப் பகுதியில் குருதியும் கொலைகளும் பெருகிப் போச்சே”

“” ஆமாம். இரண்டே மொழி, நான்கே மதம். நம்மால் விட்டுக் கொடுத்து அமைதியாக வாழ முடியவில்லை”

அங்குமிங்குமாய் நடந்துக் கொண்டிருந்த துறவி, யாத்ரீகர்களின் முகங்களில் எதையோ தேடுவது போல் துழாவினார்.

“”சாதுவே, யாரைத் தேடுகிறீர்கள்?”

“”உங்களைத்தான் தேடுகிறேன். மானுடம் என்னும் மருந்தைத் தேடித்தான் அலைகிறேன்.

எல்லாவற்றையும் துறந்தவர் நீங்கள். உங்களுக்கு மருந்தா?”

“”ஆம் நான் நிறைய இழந்துவிட்டேன். அன்பு, கருணை, மனிதாபிமானம், சகிப்புத்தன்மை எல்லாவற்றையும் இந்த நாடு இழந்துவிட்டது. இதயவலியை ஆற்றிக் கொள்ள முடியவில்லை. யாரேனும் பாடுங்களேன்”

தனியாக சிலர் பாடினார்கள். ஜோடி சேர்ந்து சிலர் பாடினார்கள்…. இருளையும் குளிரையும் ஊடுருவிக் கொண்டு அவர்களின் பாட்டுக் குரல்கள் சிகரத்திற்கு பரவசம் சேர்த்தன.

அவன் மட்டும் தனித்தொதுங்கி, எவ்வித சலனமும் அற்றவனைப் போல் அமர்ந்திருந்தான். துறவி அவனருகே வந்தார். “”மகனே” என்றழைத்தார்.

அவன் அவரை ஏறிட்டுப் பார்த்தான். அவனருகே அமர்ந்து கொண்டார் துறவி.

“”மவுனத்தைக் கலைக்க மாட்டாயா மகனே?”

அவன் மெல்ல வாய் திறந்தான்.

“”என் சொற்கள் பயனற்றுப் போய்விட்டனவே?”

“”ஆமாம் மகனே… என் சொற்களும் பணியும் கூட பயனற்றுத் தானே போய்விட்டது? ஆனாலும் இந்த மலைச்சிகரத்தை நோக்கி இருவருமே வந்திருக்கிறோம். கடந்த முறை நீ உன் மனைவியோடு இங்கே வந்திருந்தாய். இருவரும் அற்புதமாகப் பாடி எல்லோரையும் பரவசப்படுத்தினீர்கள். எல்லாம் நேற்றுத்தான் நிகழ்ந்தது போலிருக்கிறது”

சுளீரென்று ஒரு குளிர்காற்று பனிச்சாரலை அவர்கள் மீது அப்பி விட்டுப் போயிற்று….

அவன் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு பாடத் தொடங்கினான். காலம் காலமாக மனிதத்தையும், மாண்பையும் தேடியலைந்த ஆன்மாக்களின் குரல் அவனது பாடல்களில் நிரம்பியிருந்தது……

“”அதோ அதோ….” என்றது ஒரு குரல்.

கூடியிருந்தோரின் பார்வை முழுவதும் கிழக்குத் திசை நோக்கிக் குவிந்தது. அதே சூரியன். கடலுக்குள்ளிருந்தது…..

இல்லை, பூமியின் கர்ப்பப்பையைக் கீறிக் கொண்டு சூரியன் எழுகிறான்.

பூமிக்கும் வானத்துக்கும் இடையிலான வெளியிலிருந்து இராட்சத வண்ணப் பந்து ஒன்று வித்தை காட்டியது போல் மேலெழுந்த அந்த சூரியோதயக் காட்சியின் பரவசத்தில் யாத்ரீகர் கூட்டம் ஆர்ப்பரித்துக் கூவிற்று….

எல்லாம் சில கணங்கள் தான் வாழ்க்கையின் சூட்சமத்தை நொடிப் பொழுதில் வெளிப்படுத்திய அந்தச் சூரியோதயம், பார்த்துக் கொண்டிருக்கும்போதே வண்ணச் சிலம்பம் கலைந்து சாதாரணமாகிவிட்டது. இந்தக் கண நேர சூரியோதயத்திற்காக வந்திருந்தவர்களிடம் மலையை விட்டு இறங்கும் அவசரம் வெளிப்பட்டது.

“”சாதுவே, எல்லோரும் இறங்குகிறார்கள். நீங்கள் எங்களுடன் வருகிறீர்களா?”

“”எனக்கு ஒரு சிறிய வேலை இருக்கிறது. முடித்துவிட்டு வருகிறேன். நீங்கள் முன்னே இறங்குங்கள்”

முழுச் சூரியக்கதிர்கள் சிகரத்தைத் தழுவுகையில் மனிதர்களில் பெரும்பகுதியினர் கீழிறங்கிவிட்டார்கள். பறவைகளின் குரல்களில் இரைதேடும் அவசரம் வெளிப்பட்டது.

துறவி அவனை நோக்கி வந்தபோது கண்கள் மூடியிருந்தன.

“”மகனே” என்றழைத்தார்.

“”நீங்கள் இன்னும் மலையிறங்கவில்லையா சுவாமி”

“”உன்னுடன் சேர்ந்து இறங்கலாமென்று காத்திருந்தேன். வருகிறாயா?”

“”எனக்காக நீங்கள் காத்திருக்க வேண்டாம் சுவாமி”

“”ஏன்?”

“”திரும்பிப் போக வேண்டும் என்ற எண்ணத்துடன் இங்கு வரவில்லை சுவாமீ”

“”அப்படியென்றால்?”

“”என் நினைவுகளில் என் மாலினியைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவளையும் என் நண்பர்களையும் பறித்துக் கொண்ட மனிதர்களிடம் ஏன் நான் திரும்ப போக வேண்டும்? அவளை நினைவில் சுமந்தபடி சூரிய வெப்பத்தில் கருகி, பனிக்குளிரில் உறைந்து, புயல் மழைகளில் வதையுண்டு காற்றையும் நீரையும் உட்கொண்டு உயிர் தரித்திருக்க விரும்புகிறேன். என்னை என் வழியில் விட்டுவிடுங்கள் சுவாமி”

“”இது கடுமையான சுய தண்டனை அல்லவா?”

“”அதனால் என்ன சுவாமி, நானும் என் மனைவியும் மனிதர்களை எப்படியெல்லாம் நேசித்தோம் அதற்குக் கிடைத்த வெகுமதி படுகொலையும் வன்கொடுமைகளும் தானே! சொந்தத் தாய் மண்ணிலேயே நான் அகதியாக்கப்பட்டுவிட்டேனே?”

“”உண்மைதான், ஆனால் என்னைப் போன்ற துறவிகளும் சாமானியர்களும் இங்கே மிஞ்சியுள்ளோம். எனது இனத்தோர் இழைத்த அநீதிகளை வரலாறு மன்னிக்காது. உனது இனத்துக்கான நீதிதான் முக்கியம். என்னுடன் நீ இணைந்து செயல்படுவாயா?”

“”பிறந்த மண்ணில் எல்லாவற்றையும் பறி கொடுத்துவிட்டு ஓடிக் கொண்டிருக்கிற என்னால் என்ன செய்துவிட முடியும்?”

“”உன் இழப்புகளை அறிந்தவன் நான். அதேவேளை உன் பலத்தை நீ அறிய வேண்டும்”

“”இல்லை நான் பலமற்றுப் போனவன். அகதியும் அநாதையுமானவன்”

“”நானும் என் இனத்தால் நிராகரிக்கப்பட்டு பலமற்றுப் போனவன் தானே? ஆனாலும் எனக்கு ஒரு கடமை இருக்கிறது. வஞ்சிக்கப்பட்ட சமூகம் உன்னுடையது. வஞ்சித்த சமூகம் என்னுடையது. ஆனாலும் நம் இருவராலும் உரையாட முடிகிறது. இனத்தாலும் மொழியாலும் நாம் வேறெனிலும் நாம் எண்ணத்தால் ஒன்றுப்பட்டவர்கள் தானே?”

“”என்னிடம் எதை எதிர்ப்பார்க்கிறீர்கள்?”

“”பல மொழிகள் கற்றவன் நீ”

“”அதனால் என்ன பயன்? என் மனைவியைக் கூட காப்பாற்ற முடியவில்லையே… நான் போராடத் திராணியற்றுப்போய்விட்டேன். மொழி, ஆடை, ஆகாரம், ஆலயம் எதுவும் வேண்டாமென்றுதான் இங்கே வந்திருக்கிறேன். என்னை இங்கேயே அஸ்தமித்துப் போகவிடுங்கள்”

கண்களை மூடிக் கொண்டு பெருமூச்செறிந்தார் துறவி. இமைகளுக்கு வெளியே கண்ணீர் திரண்டது.

“”உனக்கும், எனக்கும் இடையிலான வித்தியாசம் எனக்கு இன்னும் சற்று நம்பிக்கை மீதமிருக்கிறது என்பதுதான். நான் வாழ்நாள் பூராவும் அன்பையும் கருணையையும் சமாதானத்தையும் தேடித் திரிந்தவன். போதித்தவன். ஆனால் என் ஆன்மாவும் நசுக்கப்பட்டுவிட்டது.வெகு காலமாகவே மரணத்தின் அழைப்புக்காக காத்திருக்கிற துறவி நான். ஆயினும் இன்னும் சற்றுக் காலம் வாழ வெண்டுமென்கிற நப்பாசையுடன் நீ செல்லுமிடமெல்லாம் பின் தொடருகிறேன். ஏன் தெரியுமா?”

“”ஏன்?”

“”எந்தத் தேசத்தின் பெருமையும் இனத்தின் மேம்பாடும் நிலப்பரப்பிலும் மனித எண்ணிக்கையிலும் ஆயுதபலத்திலும் இல்லையென்று கருதுகிறவன் நான்”

“”………….”

“”ஓர் இனத்தின் பெருமை அது மனித குலத்திற்கு வழங்கியிருக்கிற நீதிநெறிகளிலும் தத்துவங்களிலும் இலக்கியங்களிலும் இருக்கிறதென்று திடமாக நம்புகிறவன் நான். அதனால்தான் உங்கள் நூலகம் எரிக்கப்பட்ட நாட்களில் பல நாட்கள் உறங்காமல் கண்ணீர்விட்டு அழுதிருக்கிறேன்”

“”……………….”

“”என் இனம் உன் இனத்திற்கு இழைத்திருக்கிற பழி பாவங்களுக்கும் அநீதிகளுக்கும் பரிகாரம் செய்தே ஆக வேண்டும். அதற்குத் தேவை உன் மொழியின் இலக்கியங்களும் நீதிநெறி நூல்களும், அவற்றை என் மொழிக்குக் கொடு. அதைப் படிக்கும் நாளைய தலைமுறையேனும் இந்த மண்ணில் அன்பையும் அமைதியையும் மறுபடியும் மீட்டெடுக்கும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. அதற்குத் தேவையானவற்றை செய்வதற்கு இந்தப் பையில் விவரம் வைத்திருக்கிறேன். என்ன சொல்கிறாய் மகனே?”

துறவியின் குரல் கரகரத்தது. மூச்சு இரைக்க உடல் நடுங்கிற்று. கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தது.

துறவியின் உடலை அணைத்து அவரை சாய்ந்தவாறு அமரச் செய்தான் அவன்.

“”சுவாமீ…நீங்கள் ரொம்பவும் தளர்ந்து போயிருக்கிறீர்கள், ஒய்வெடுக்க வேண்டிய தருணத்தில் இங்கே வந்திருக்கவே கூடாது”

“”உண்மைதான் மகனே… ஆனால் படுகொலைகளையும் மரண ஓலங்களையும் சகித்துக் கொண்டு எப்படி ஓய்வெடுக்க முடியும், சொல்?”

சூரிய ஒளியில் வெப்பம் மிகுந்து கொண்டிருந்தது.

“”சற்றுப் பொறுங்கள் நீரும் கனிகளும் கிடைக்குமா? என்று பார்த்து வருகிறேன்”

சில அடி தூரம் நடந்தவனை குரல் அழைத்தது.

“”ஒரு நிமிடம் மகனே”

இப்போது துறவியின் விழிகளில் அபூர்வமானதொரு ஒளி நிரம்பியிருந்து.

இந்தத் துறவிக்கு கனிகள் பயன்தருமென நான் கருதவில்லை.

அவரிடமிருந்து வெற்றுக் குடுவையை எடுத்துக் கொண்டு அவசரமாக கீழிறங்கி ஓடிப்போய் சுனையிலிருந்து நீரெடுத்துக் கொண்டு மூச்சிரைக்க மேலேறி வந்து “”சுவாமீ” என்று குரல் கொடுத்தான்.

பதில் வரவில்லை.

அவரது மடியில் அந்தப் பை காத்திருந்தது. விழிகளில் அந்தப் பிரகாசமும் உதடுகளில் குறுநகையும் அச்சுப்பிசகாமல் அப்படியே இருந்தன.

– சி.பன்னீர்செல்வம் (ஆகஸ்ட் 2013)

தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *