கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 22, 2013
பார்வையிட்டோர்: 11,486 
 

எப்போது அந்த ஆசை ஏற்பட்டது என்று சரியாக நினைவில்லை. வீட்டிலும், தெருவிலும்,உறவிலும் யாருக்கும் அந்தப் பழக்கம் இல்லை. ஆனாலும் வந்துவிட்டது. அதற்கு எங்கள் குலதெய்வமே காரணம். படையலில் சுருட்டு இல்லாவிட்டால் சாமி ஏற்றுக்கொள்ளாது என்று சொல்லி அதை வாங்கிவர என்னை விரட்டி விடுவார்கள். அனைவருக்கும் தேங்காய் பழம் பிரித்துக் கொடுத்த பின் சுருட்டை மட்டும் கோடாங்கியிடம் கொடுத்து அனுப்பி விடுவார்கள்.புதிதாய் வந்த கோடாங்கிக்கு சேவல் மார்க் சுருட்டு ஒத்துக்கொள்ளவில்லை. சாமி கும்பிடும் ஒரு நாளில் என்னை அழைத்து, ராஜாபாதர் கடையில வாங்கிக் கொடுப்பா, அங்கதான் நல்லாயிருக்கும் என்று கேட்டுக் கொண்டார்.

ராஜாபாதர் கடை என்பது ஆண்களுக்கு மட்டுமேயான பிரத்யேகக் கடை. பென்சன் அண்ட் ஹெட்ஜஸ், ரோத்மண்ஸ், 555 போன்ற சிகரெட் ரகங்கள்,வெத்திலை பாக்கு, சர்பத், காண்டம் என சில அயிட்டங்களே அங்கேயிருக்கும். கடை அமைந்திருக்கும் இடமும் ஊருக்கு வெகு தள்ளி.

நான் போய் சுருட்டு கேட்டதும், ”இந்தாடா இதுதான் சர்ச்சில் குடிச்ச சுருட்டு” என்று சொல்லி கொடுத்தார்.அந்தக்கடையே அப்படித்தான். எதுவுமே சாதாரணமானதாக இருக்காது. கத்திரி சிகரெட் விற்பதைக்கூட மானக் குறைவாக கருதியவர் ராஜாபாதர்.

ஒருமுறை ஒரு வாடிக்கையாளார் அவரிடம், ஏன்? இந்தக் கடையை ஊருக்குள்ள வச்சா எங்களுக்கு வசதியா இருக்குமே என்று கேட்டதற்க்கு அவர் சொன்ன பதில் “ முருங்கைக்கீரை வீட்டுக் கொல்லையிலேயே கிடைக்கும்,மூலிகை வேணுமின்னா காட்டுக்குத்தான் போகணும்”.

ஆமாம். நன்னாரி சர்பத் என்றால் ஒண்டிப்பிலி, பாதாம் சர்பத் என்றால் ஜனதா, சோழவந்தான் வெற்றிலை,அங்குவிலாஸ் புகையிலை, கும்பகோணம் சீவல் என பார்த்து பார்த்து வாங்கி வியாபாரம் செய்வார். சிகரெட் பத்தவைக்கக் கூட அவர் வெட்டுப்புலி தீப்பெட்டிதான் கொடுப்பார்.

சுருட்டு வாங்க அடிக்கடி சென்ற வகையில் அந்தக் கடையின் மேல் எனக்கு ஒரு காதலே வந்துவிட்டது. மாலை வேளைகளில் பாதாம் சர்பத்தைக் குடித்துவிட்டு, வில்ஸ் பில்டரை ஊதிக் கொண்டிருப்பவர்கள் பார்க்கும் பார்வையை வைத்தே காண்டமை பக்குவமாக பாக் செய்து சில்லறையுடன் சேர்த்துக் கொடுப்பார் ராஜாபாதர். ஒரு அசட்டுச் சிரிப்புடன் அதை வாங்கி பையில் போட்டுக் கொண்டு நடையைக் கட்டுபவர்களைப் பார்க்கையில் ஒரு பொறாமையே வரும்.

சர்பத் மீது நாட்டமில்லை,காண்டமை உபயோகிக்க வயதில்லை என்பதால் சிகரெட்டையாவது பிடித்துப் பார்த்து விட வேண்டுமென்ற ஆசை எனக்கு வந்தே விட்டது.

நேரடியாக கடையில் வாங்கப் பயம் மேலும் பொருளாதார சிக்கல் வேறு. இம்மாதிரியானவர்களுக்கு கைகொடுப்பது ஒட்டுப்பீடி என்றும் துண்டு சிகரெட் என்றும் அழைக்கப்படம் முழுவதும் புகைக்கப்படாத சிகரெட்டுகள்.

இம்மாதிரி துண்டு சிகரெட் ஆட்களில் பலவகையினர் உண்டு. கிடைத்தது போதும் என்று சொக்கலாலோ, மங்களூர் கணேஷோ, தொப்பியோ, கத்திரியோ, சார்மினாரோ எது கிடைத்தாலும் இழுப்பவர்கள்.

எச்சியா சீ சீ நாங்கள் சுத்தமாக்கும் என்று சொல்லி நோட்டு பேப்பரை பீடி போல் சுருட்டி அதைப் பத்தவைத்து இழுப்பவர்கள்.

குடிக்கிறது கூழா இருந்தாலும் கொப்புளிக்கறது பன்னீரா இருக்கணும் என்ற கொள்கையுடையவர்கள்.என்னைப்போல. இவர்களெல்லாம் பில்டர் சிகரெட்டைத்தான் எடுத்து உபயோகிப்பார்கள். ராஜாபாதர் கடை புண்ணியத்தில் எனக்கு அவ்வப்போது பாரின் சிகரெட் மிச்சங்களும் கிடைத்துக் கொண்டிருந்தன.

இந்த நேரத்தில்தான் எங்கள் தெருவுக்கு குடிவந்தனர் ராஜேஸ் குடும்பத்தார். வந்த சில நாட்களிலேயே நன்றாக படிப்பது,தெருவில் யார் சொன்னாலும் கடைக்குப் போவது போன்ற செயல்களால் நல்ல பிள்ளை என்ற பட்டத்தை வாங்கி விட்டான் ராஜேஷ். எனக்கு எரிய ஆரம்பித்தது.அவனை தவிர்க்கத் தொடங்கினேன்.

ஒரு விடுமுறை நாளில் புதர்ப்பக்கம் ஒதுங்கியபோது, ராஜேஸையும் அங்கே பார்த்தேன். அவன் கிடைத்தது போதும் கேட்டகிரி. உடனே அவன் மனதுக்கு நெருக்கமானவனாக மாறிவிட்டான். அவனுக்கும் பில்டரின் மகத்துவத்தை எடுத்துரைத்து என் கட்சியில் சேர்த்துக் கொண்டேன்.

ஆசை தானே மனிதனை குகையில் இருந்து காஸ்மோபாலிட்டன் வரை கொண்டு வந்திருக்கிறது. எங்கள் ஆசை முழு சிகரட்டை நோக்கி எங்களை தூண்டியது. நாளும் குறிக்கப்பட்டது. காசும் சேர்க்கப்பட்டது.அந்த சுபயோக சுபதினம் ராஜேஸ் வீட்டார் ஒரு திருமணத்திற்க்கு செல்லும் ஞாயிற்றுக் கிழமை.

அந்த நாளும் வந்தது. எங்கள் உறவுக்காரர் விக்கெட் ஒன்றும் விழுந்தது. யாருக்கும் தொல்லையில்லாம ஞாயித்துக்கிழமை செத்திருக்காரு, நல்ல சாவு என்று சொல்லி வீடே கிளம்பியது. என் சோகம் இழவு வீட்டிற்க்கு சிங்காகிப் போனது.

திரும்பி வந்தால் தெருவில் ஒரே பேச்சு. நம்ம ராஜேஸா இப்படி? என்று. தப்பை தப்பாகச் செய்து மாட்டிக்கொண்டான் அவன்.

என் தாய்,தமக்கைகள் எல்லோரும் இவனும் இப்படித்தான் இருப்பான். நாலடி போட்டு விசாரிங்க என்று என் தந்தையைத் தூண்டினார்கள்.ராஜேஸிடம் பலமுறை ஜாடை மாடையாக விசாரித்தார்கள்.

அவனும் காட்டிக்கொடுக்கவில்லை. என் தந்தையும் இன்றுவரை என்னிடம் அதைப் பற்றி கேட்டதில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *