கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 17,089 
 

ஓட்டலில் சாப்பிட்டு முடிக்கும் நேரம், சர்வர், பில்லை ஒரு பீங்கான் தட்டில் வைத்து, டேபிளின் மையத்தில் வைத்து விட்டுப் போனார்.
மணிகண்டன் இன்னும் கை கழுவ எழுந்து கொள்ளவில்லை. அவன் தட்டில் இன்னும் பாதி இட்லி இருந்தது. ஆனால், மாதவன் சாப்பிட்டு, கையும் கழுவி வந்து உட்கார்ந்திருந்தார்.
இந்த முறையாவது, அவர் பில்லுக்கு பணம் கொடுப்பாரா என்று பார்த்தான் மணிகண்டன்.
மனிதர் பில் தொகையைப் பார்த்து வியந்தார்.
“”தலா ரெண்டு இட்லி, ஒரு காபி சாப்பிட்டதுக்கு எழுபது ரூபாய், ரொம்ப அதிகம். இந்த தொகைக்கு வீட்டில் சமைத்தால், ஒரு குடும்பமே சாப்பிடலாம். இப்படி ஓட்டலில் சாப்பிட்டால், பணத்துக்கும் கேடு, வயித்துக்கும் கேடு,” என்றவர், “”இதில் என்னையும் இழுத்து வந்து செலவை இரட்டிப்பாக்கிக்கறிங்க, நானும் கூச்சமில்லாமல் கொட்டிக்கறேன்,” என்றார்.
“தெரியுதில்ல… பாக்கெட்ல என்ன பணமா இல்லை; சம்பளக்கவர், பையில பத்திரமா இருக்கே… அதுலருந்து நூறு ரூபாய் எடுத்து வச்சா குறைஞ்சா போயிடுவீங்க?’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான் மணிகண்டன்.
திணையும் பனையும்!“”இப்படி ஒவ்வொண்ணுக்கும் கணக்கு பார்த்து, மிச்சம் புடிச்சி, நான் என்ன கோட்டையா கட்டப்போறேன்?” என்றவன், கடைசித்துண்டு இட்லியையும் விழுங்கிவிட்டு எழுந்தான். வாஷ் பேசினுக்கு கை கழுவ போனான். அங்கே நின்றபடி டேபிளை திரும்பிப் பார்த்தான்.
சர்வர், டேபிளை நெருங்குவதும், “ஆள் கை கழுவ போயிருக்காரு… வந்து தருவாரு…’ என்று மாதவன் சொல்வதும் தெரிந்து, எரிச்சலாக வந்தது.
“பேசாமல், ஓட்டலின் பின் வாசல் வழியாக போய் விடலாமா… மனுஷன் அப்போதாவது பணத்தைக் கட்டுகிறாரா பார்ப்போம்…’ என்று நினைத்தான்.
அப்படித்தான் ஒருமுறை அவருடன் சேர்ந்து ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, பர்சை காணாமல் திடுக்கிட்டான். பேன்ட்டின் பின் பாக்கெட்டில் தான் எப்போதும் பர்சை செருகி வைப்பான். மனக்கண் அதன் மீது பதிந்த படிதான் இருக்கும். வாழ்நாளில் பர்சை தொலைத்தோம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது. அவ்வளவு கவனமாக இருந்தும், கோட்டை விட்டிருந்தான்.
“என்னாச்சு மணிகண்டன்?’
“பர்ஸ் மிஸ் ஆயிடுச்சு சார்…’ என்றான் முகம் வெளுக்க.
“டோன்ட் ஒர்ரி…’ என்றார். பில்லை எடுத்துக் கொண்டு கவுன்ட்டருக்கு வந்தார். ஏதோ, அவர்தான் பில்லுக்கு பணம் கொடுக்க போகிறார் என்று பார்த்தால், காசாளரிடம் பில்லைக் கொடுத்த கையோடு, தன் வாட்சையும் கழட்டி கொடுத்தார்.
“எதிர்பாராத விதமா, பர்சை மிஸ் பண்ணிட்டோம். இந்த வாட்சை, பில் தொகைக்கு ஈடாக வச்சுக்குங்க. நாளை மறுநாள் வந்து பணம் கொடுத்து வாட்சை மீட்டுக்கறோம்…’ என்றார்.
மேல் பார்வைக்கு, அது மிகப் பெரிய உதவி போல தெரிந்தாலும், மணி கண்டனுக்கு கடுப்புதான். காரணம், அந்நேரம் மாதவனிடம் பணம் இருக்கவே செய்தது. அதிலிருந்து பில்லுக்கு கொடுத்திருக்கலாம். வாட்சை கழட்டிக் கொடுத்தது தந்திரம். அதை எப்படியும் அவன் தானே மீட்டுத் தர வேண்டும்.
ஓட்டல் விவகாரத்தில் தான் மாதவன் இப்படி நடந்து கொள்கிறார் என்றில்லை. சாப்பிட்டு வெளியில் வந்து, பெட்டிக் கடையில் வாழைப் பழம் வாங்கினாலும், அது விலை குறைவானதாக இருந்தாலும், “நான் தர்றேன்…’ என்று வாயில் வராது. அவன் கடைக்காரனுக்கு சில்லரை கொடுக்கும் வரை காத்திருந்து, பிறகு பழத்தை சாவகாசமாக சாப்பிடுவார். “அட அல்பமே…’ என்று திட்டத் தோன்றும். திட்ட முடியாது. காரணம் அவன் அழைத்து தான் அவர் வருகிறாரே தவிர, அவராக வந்து ஒட்டிக் கொள்வதில்லை.
அவன், அவரை அழைக்கவும் காரணம் இருந்தது. அவன் புதிதாக மாற்றலில் வந்து சேர்ந்திருந்தான் அந்த அலுவலகத்தில். அலுவலக நிலவரம், நீக்கு போக்கு எதுவும் தெரியாது. எந்த ஒரு சந்தேகம் என்றாலும், அக்கம் பக்கத்தில் கேட்க முடிவதில்லை. அவரவர் வேலைக@ள தலைக்கு மேல் ஓட, இதென்ன அனாவசிய தொந்தரவு என்று பார்த்தனர். அந்த பார்வை அவனுக்கு பிடிக்கவில்லை.
“என்ன பிரச்னை இப்படி வாருங்கள்…’ என்று மாதவன் சார் தான் அழைத்து சந்தேகத்தை நிவர்த்தி செய்து வைத்தார். ஒரே பிரச்னைக்கு நாலுமுறை போய் நின்றாலும், சலிக்காமல், திரும்பத் திரும்ப தெளிவுப்படுத்தினார்.
அந்த பொறுமைக்கும், வேலையில் அவருக்கு இருந்த தெளிவுக்கும், ஏதாவது மரியாதை செய்ய வேண்டுமென்று நினைத்து, அவர் மறுக்க, மறுக்க ஓட்டலுக்கு அழைத்து போய் சாப்பாடு வாங்கித் தந்தான். அவருடைய சேவை தொடர்ந்து தேவைப்பட்டதால், அவன் நேரம் கிடைக்கும் போது கேன்ட்டீன், ஓட்டல் என்று டீ முதல், டிபன் வரை ஆர்டர் செய்வான்.
“இப்படியெல்லாம் வாங்கிக் கொடுத்தால் தான், நான் உனக்கு தொடர்ந்து வேலைகளில் உதவி செய்வேன் என்று எண்ண வேண்டாம். நீ ஒன்றுமே வாங்கித் தராவிட்டாலும், உன் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டியது என் கடமை. ஏனென்றால், அது, உன் தனிப்பட்ட சமாசாரம் இல்லை. அலுவலக வேலையில் அதுவும் ஒன்று…’ என்பார்.
“இத்தனை நேர்மையான ஆபீசருடன் பழகுகிறோமே…’ என்ற மகிழ்ச்சிக்காகத் தான், அவனும் வாங்கி கொடுக்கிறான். சில நாட்கள் அப்படி வாங்கி கொடுத்து, இப்போது, அதுவே நிரந்தர பழக்கமாகி விட்டது.
ஆபீசில் யாராவது வந்து மாதவனைக் கேட்டால், “அவரா… மணிகண்டன் சார் எங்கிருக்கார்ன்னு பாருங்க…’ என்று பதில் சொல்வர்.
“மணிகண்டன் எங்கே காணோம்?’ என்று விசாரித்தால், “மாதவன் சார் எங்கிருக்கார்ன்னு பாரும். அங்குதான் மணிகண்டனும் இருப்பார்…’ என்று சொல்லுமளவுக்கு ஆகி விட்டது.
மணிகண்ட னுக்கு அது ஒரு சந்தோஷம்; சீனியர் பேதமில்லாமல், தன்னுடன் பழகுவது. “ஆனால், அது மட்டும் போதுமா மனிதருக்கு… இத்தனை முறை வாங்கித் தந்திருக்கிறானே… ஒரு முறையாவது, தான், அவனுக்கு ஏதாவது வாங்கித் தர வேண்டும் என்று நினைக்கிறாரா!
“காசு கொடுக்க வேண்டாம்… ஒரு பார்மாலிட்டிக்கு, “இருங்க மணிகண்டன்… இந்த முறை நான் தருகிறேன்…’ என்று பேச்சுக்காவது சொல்லியிருக்கிறாரா… மற்றவர்களுக்கு தான் செய்வதில்லை. தனக்காகவாவது செய்து கொள்ளலாமில்லையா… அதிலும் மகா கருமி?’
அன்று ஆபீசில் மேசைகளை நகர்த்தும்போது, அவர் கால் சிக்கி, சுண்டு விரல் நசுங்கிக் கொண்டது. பக்கத்தில் தான் கிளினிக். மனிதர் அங்கு போகவில்லை. சாயங்காலம் அரசு மருத்துவமனைக்கு போய், கட்டுப் போட்டு, வலியுடன் நடமாடினார். ஆபீசில் அவருக்கு மட்டும், யூனிபார்ம் போட ஆர்டர் போட்டது போல், எப்போதும் வெளுத்து போன, நீல சட்டையும், அயர்ன் பண்ணாமல் சுருக்கம் விழுந்த பேன்டுமாக வருவார். பார்வை குறைபாட்டுக்கு கண்ணாடி போட்டிருக்கிறார். மறு பரிசோதனைக்கு போய் பல வருஷம் இருக்கும். அந்த கண்ணாடியில் மங்கலாக பார்த்துக் கொண்டே வேலை செய்வார்.
“மாத்தணும்… எண்ணும்… எழுத்தும் நல்லாத்தான் தெரியுது. அது போதாதா?’ என்பார்.
காலில் தேய்ந்து போன ஹவாய் செப்பல்.
“நீங்கள் ஒரு ஆபீசர் சார்… அந்த பதவிக்கேத்தாப்லயாவது உடுத்த வேணாமா?’ என்று கேட்டால், “சம்பளம் என் வேலைக்கு தான். தோற்றத்துக்கு இல்லை. நான் சிங்காரிச்சுக்கலை… ஆனால், சுத்தமா தானே இருக்கேன்?’ என்று வாயடைப்பார்.
மனிதர், பிச்சைக்காரனுக்கு கூட தாராளமாக போட மாட்டார். “வியாதியஸ்தர்கள், முதியோர்களுக்கு உதவலாம். மத்தபடி இதையே தொழிலாய் வச்சு, ஏமாத்தும் உதவாக்கரைகளை, “என்கரேஜ்’ செய்யக் கூடாது…’ என்பார்.
“என்னமோ இவர் போடும் ஐம்பது காசில் தான், அவன் குபேரனாகிறது மாதிரி…’ என்று நினைத்தால் கூட, மனிதருக்கு தெரிந்து விடும். “எத்தனை வசதியான பிச்சைக்காரங்க நாட்ல இருக்காங்க தெரியுமா?’ என்பார்.
இவர் மட்டும்தான் இப்படியா… இவர் குடும்பமே இப்படித்தானா என்பதை அறிய, ஒரு முறை அவர் வீட்டுக்கு போயிருந்@தன். வீடு படு எளிமையாக இருந்தது. பழைய மரக்கட்டில், மேசை, இரண்டு நாற்காலிகள். அதுவும் ஏலத்தில், மலிவு விலையில் எடுத்ததாம். அவர் மனைவி, குழந்தைகள் எல்லாருமே அவரை பிரதிபலித்தனர். அன்பாக பேசினர். ஆனால், பேச்சில் கூட சிக்கனத்தை கடைபிடித்தனர்.
இத்தனை கருமிகளாய் இருப்பவர்கள் வரும் சம்பளத்தை சேர்த்து, ஒரு மாளிகையே கட்டியிருக்கலாமே… “குருவிக்கூடு போன்று சிறு வீட்டில் ஏன்…’ என்று கேட்டதற்கு, “தேவைக்கதிகமாக எதுக்கு?’ என்றார்.
“வேறெங்கும் வீடு, மனைன்னு வாங்கி போட்டிருக்கீங்களா, வங்கியில் டெபாசிட் செய்றீங்களா, ஷேர் ஏதும் வாங்கினதுண்டா?’ என்று ஒரு முறை விசாரித்ததற்கு, புன்னகையைத்தான் பதிலாக கொடுத்தார்.
“கோவிலுக்கு போனால் கூட, மனமுவந்து உண்டியலில் காசு போடாத ஆசாமி. எப்படித்தான் இவரை சகித்து இவருடன் நட்பாக இருக்கிறோமோ!’ என்று வியந்தபடி கை கழுவி விட்டு டேபிளை நெருங்கும்போது கவனித்தான். டேபிளில், மாதவன் பக்கத்தில் ஒருவர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு டீ ஆர்டர் செய்தார் மாதவன்.
அதிசயம் தான்!
மணிகண்டனுக்கு அறிமுகப்படுத்தினார்.
“”இவர் சங்கர்… செங்கல்பட்டில் இயங்கிவரும் அருள் ஒளி எனும் ஆர்ப்பனேஜ்ல கணக்கரா இருக்கார். சிறந்த சேவை மனப்பான்மை கொண்டவர். சங்கர்… இது மணிகண்டன்; என்னோடு வேலை பார்க்கிறவர். தாராள மனம் கொண்டவர்,” என்றார்.
இப்படி அறிமுகப்படுத்தப்படுவதற்கு காத்திருந்தவர் போல, சங்கர் ஒரு கும்பிடு போட்டு, ஜோல்னா பையிலிருந்து, இல்லம் குறித்த விவரப் பட்டியல் ஒன்றையும், டொனேஷன் புக்கையும் எடுத்தார்.
“”பழக்க தோஷம்… வற்புறுத்தலை… வசதிக்கேற்ப தொகை எழுதுங்கள். கையிலிருக் காது. நிதானமாக இந்த விலாசத்துக்கு அனுப்பி வைத்தால் போதுமானது அல்லது சார்கிட்ட கொடுத்தாலும் போதும். அவர் அனுப்பி வைத்து விடுவார்,” என்றார் அந்த சங்கர்.
“”அதெல்லாம் கரெக்டா செஞ்சிடுவார் சார்… எங்கே அவரை டொனேஷன் கொடுக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்,” என்று எரிச்சலை நாசூக்காக கொட்டினான். சங்கர், வியந்து போனவராய், “”அவர், இரண்டு குழந்தைகளுக்கு ஸ்பான்சர் செய்துகிட்டிருக்கார் சார்… தெரியாதா உங்களுக்கு?” என்றார்.
“”அப்படின்னா…”
“”கிட்டதட்ட தத்து எடுக்கறது போல. குழந்தைகள், இல்லத்தில் தான் வளரும். ஆனால், அதன் சாப்பாட்டு செலவு, படிப்பு செலவு உள்ளிட்டவற்றை எல்லாம், அந்த குழந்தைகளுக்கு ஸ்பான்சர் செய்பவரே ஏற்றுக் கொள்வர். அந்த குழந்தைகள் வளர்ந்து படித்து, தன் சொந்தக் காலில் நிற்கிறவரை ஆகும் செலவை மாதந்தோறும் அனுப்புவர்…
“”மாதவன் சார், இரண்டு அனாதை பெண் குழந்தைகளுக்கு ஸ்பான்சர் öŒ#றார். அவங்க இப்ப முறையே, பத்தாம் வகுப்பிலும், பதினோராம் வகுப்பிலும் படிக்கிறாங்க…
“”சாருக்கு சொத்து பத்து கிடையாது. உபரி வருமானம் கிடையாது. தன் தேவைகளை குறைச்சுக்கிட்டு, சம்பளத்தில் மிச்சம் புடிச்சு, மாதம்தோறும் ஒரு தொகை அனுப்பிக் கிட்டிருக்கார்… இவரைப் போன்ற நல்ல உள்ளங்களால்தான் இல்லம் நல்லபடியா இயங்கிக்கிட்டு இருக்கு,” என்று நெகிழ்ச்சியாக சொல்ல, மாதவன் கூச்சத்துடன் அவரை தடுத்து, “”என்ன சங்கர்… இதையெல்லாம் பிரமாதப் படுத்திக்கிட்டு. நாட்டில் எத்தனையோ பேர் எவ்வளவோ உதவிகளை செய்துக்கிட்டிருக் காங்க… மணிகண்டன், இந்த சங்கர் சார் எப்பவும் இப்படிதான், தினை அளவு செய்தாலும், பனை அளவு பாராட்டுவார்,” என்றார்.
மிரண்டு போயிருந்தான் மணிகண்டன், “இவரது சிக்கனத்துக்குப் பின்னால், இப்படி ஒரு சேவை இருக்கிறதா?’ வியந்தபடி டொனேஷன் புத்தகத்தில், ஒரு தொகை எழுதிக் கொடுத்தான்.
சங்கர் அருந்திய டீக்கான பில்லையும் தானே கொடுத்தான்.
வெளியில் வரும்போது கேட்டான்…
“”ஏன் சார் இந்த மேட்டரை, இதுவரை என் கிட்ட சொல்லலை?”
“”இதையெல்லாம் வெளியில் சொல்லிக்கக் கூடாது. பேருக்காக செய்தது போல ஆகி விடும். தனிப்பட்ட என் காரியமில்லை இது. என் குடும்பத்தின், முழு ஒத்துழைப்பால் தான் இது சாத்தியம். நன்றி சொல்வதென்றால், அவங்களுக்குத்தான் சொல்லணும்,” என்றபடி, இயல்பாக நடந்தார் மாதவன்.
அவர் அடிச்சுவட்டில் பெருமிதமாக பின் தொடர்ந்தான் மணிகண்டன்.

– மார்ச் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *