கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 1, 2012
பார்வையிட்டோர்: 14,717 
 

பத்மாவைப் பார்த்த மாத்திரத்திலேயே கல்யாணம் செய்துகொண்டு அவளுடன் குடும்பம் நடத்த வேண்டுமென்று தோன்றியதில் வியப்பேதுமில்லை. பார்க்க உயரமாக கொஞ்சம் வெளுப்பாகத் தோற்றமளித்தாள். நான் அணிந்திருப்பதுபோல் அவளும் கண்ணடி அணிந்திருந்தாள். பிரசுரமான என் முதல் கதையைப் பாராட்டி என்னுடன் நட்பைத் துவக்கியவள். என் முதல் கதை ஒரு சிறு பத்திரிக்கையில் பிரசுரமாகி இருந்தது. பத்திரிக்கையின் நூறு சந்தாதாரர்களில் பலர் என் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு நாள் ஜகன் என்னைத் தொடர்புகொண்டு அவன் பணிபுரியும் பகுதிக்கு வரச் சொன்னான். இரண்டாவது மாடியிலிருந்து, ஐந்தாவது மாடியிலிருக்கும் அவனிடத்திற்குச் சென்றேன். அப்போதுதான் பத்மாவின் அறிமுகம் எனக்குக் கிட்டியது. பத்மா ஜகன் பக்கத்திலுள்ள இருக்கையில் அமர்ந்திருந்தாள். கையில் என் கதை பிரசுரமான சிறு பத்திரிக்கை. சம்பிரதாய வணக்கத்துடன் அறிமுகம் முடிந்து, நான் ஜகனுடன் பேசிக்கொண்டிருந்தேன். பத்மாவைப் பார்த்த திகைப்பு என் மனத்திலிருந்து மறையவில்லை என்பதை ஜகன் உணர்ந்திருக்கலாம்.

எங்கள் பேச்சின் நடுவில் ‘ஒங்க செருப்பு நன்றாக இருக்கிறது ‘ என்றாள் பத்மா எதிர்பாராவிதமாய். நான் திகைத்துப் போய் என் செருப்பைப் பார்த்தேன். நான் அணிந்திருந்தது பழைய செருப்பு. அதைப் பார்த்தால் பாராட்டும்படி தோன்றாது.

பத்மா சிரித்தபடியே, ‘ஒங்கக் கதையைச் சொன்னேன் ‘ என்றாள்.

என் திகைப்பு ஆச்சரியமாக மாறி புன்னகை ததும்பும் முகத்தோடு அவளைப் பார்க்க ஆரம்பித்தேன். பிரசுரமான என் முதல் சிறு கதையின் தலைப்பு ‘செருப்பு ‘ என்பது எப்படி எனக்கு மறந்தது என்று தெரியவில்லை. ஆனால் என் முதல் கதையை நான் சிறப்பாக எழுதவில்லை. பத்மாவின் நட்பு கிடைக்க என் கதை உதவி செய்துவிட்டது.

இது நடந்த இரண்டு வாரம் கழித்து பத்மா வீட்டிற்கு வந்தாள். கூடவே அவளுடன் அவள் வீட்டில் பணிபுரியும் பெண்ணையும் அழைத்து வந்திருந்தாள்.

அவள் என் வீட்டிற்கு வருவது முதல் தடவை என்பதோடல்லாமல் பணிப்பெண்ணுடன் வருவது ஒருவித ஜாக்கிரதை உணர்வாகக்கூட இருக்கலாமென்று தோன்றியது. நானும் அவளும் ஒரே பகுதியில் வசித்து வருகிறோம்.

அவளை ‘வா ‘ வென்று கூப்பிட்டு உட்கார வைத்தேன். பணிப்பெண் வாசல் கதவைப் பிடித்தபடி நின்றிருந்தாள். வீட்டிலுள்ளவர்களிடம் பத்மாவை அறிமுகப்படுத்தினேன். அவளுக்குக் காப்பி தயார் செய்யும்படி உள்ளே ஆணையிட்டேன். பத்மா கூச்சத்துடன் அமர்ந்திருப்பதுபோல் தென்பட்டாள். நானும் சங்கடத்துடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘என்ன காலை நேரத்திலே ? ‘

‘எனக்கு லீவு சொல்லணும் ‘ என்று என் கையில் ஒரு லீவு லெட்டரைக் கொடுத்தாள். பிறகு சுற்று முற்றும் வீட்டைப் பார்வையிட்டாள். நேரிடையாக என்னைப் பார்த்துப் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பது போல்.

‘என்ன திடார்ன்னு லீவு ? ‘

‘ஊர்ல கொஞ்சம் வேலை இருக்கு. சொந்த ஊருக்கு அவசரமாப் போகணும். ‘

பத்மா காப்பி குடித்துவிட்டு வீட்டைவிட்டுக் கிளம்பும்போது, என் கையில் அவள் எழுதி இருந்த கதையை கொடுத்தாள்.

‘எனக்கும் எழுதணும்னு ரொம்பநாள் ஆசை இதப் படிச்சுப் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க. ‘ என்றாள்.

நான் அந்தக் கதையை வாங்கி வைத்துக்கொண்டேன். எனக்கு அதன் மூலம் அவளுடன் ஏற்படுகிற தொடர்பு பிடித்திருந்தது. அவள் விடைப்பெற்றுக் கொண்டு சென்றுவிட்டாள். எனக்கு அன்று முழுவதும் அவள் ஞாபகமாகவே இருந்தது.

இரண்டு மூன்று நாட்கள் கழிந்தும், அவள் கதையைப் படிக்கத் தொடங்கவில்லை நான். அவளிடமிருந்து கதையை வாங்கியவுடனேயே, அவள் எழுதியிருக்கும் கதையின் நாடி புரிந்துவிட்டது. சில புத்தகங்கள்கூட அப்படித்தான். ஒரு பக்கத்தைக்கூட புரட்டிப் பார்க்க வேண்டுமென்கிற உணர்வை உண்டாக்காது. இதெற்கெல்லாம் அனுபவம் வேண்டும். கடையில் எதையாவது வாங்கச் செல்லும்போது, சிலருக்கு பொருள்களைப் பார்த்த மாத்திரத்திலேயே எடைப்போட தெரிகிற அனுபவம்போல் தான் இதுவும். இருந்தாலும் பத்மாவிற்காக கதையைப் படித்துத்தான் ஆகவேண்டும். அவள் கதை என் மனதைக் கவரவில்லை. அதில் எந்தவித நயமும் இல்லை, பத்திரிக்கைகளில் வருகிற கதைகளையெல்லாம் படித்து அதுமாதிரிகூட எழுத அவளுக்குத் தெரியவில்லை.

பத்மாவை அவள் கதைக்காகவாவது பார்க்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன். ஒரு நாள் உணவு இடைவேளையின் போது, தொலைபேசியில் அவள் பணி புரியும் பகுதிக்குத் தொடர்பு கொண்டேன்.

‘ஒங்கக் கதையைப்பத்திப் பேசணும் ‘

‘எங்கே பாக்கலாம் ? ‘

‘ஓட்டலுக்குப் போலாமா ? ‘.

அவள் யோசிப்பதுபோல் தோன்றியது.

‘என்ன பதிலே காணும் ? ‘

‘சரி ‘ என்றாள்.

‘அப்ப நீங்க ஓட்டலுக்குப் போய் இருங்க, நான் வரேன். ‘

எங்கள் அலுவலகக் கட்டிடத்திற்கு எதிரிலிருந்தது அந்த ஓட்டல், ஓட்டலில் தனி அறையில் நாங்கள் இருவரும் சென்றமர்ந்தோம். அவள் இயல்பாக இல்லை என்பதோடல்லாமல், நானும் இயல்பாக இல்லை என்பதை உணர்ந்தேன். சாப்பிட உணவு வகைகளைக் குறித்துக் கொடுத்துவிட்டு,

‘என்ன, ஊருக்கெல்லாம் போயிட்டு வந்தாச்சா ? ‘ என்று செயற்கையாகப் பேச்சை ஆரம்பித்தேன்.

‘ஊருக்குப் போனா, ஏன் இங்க வரணும்னு தோணுது. ? ‘

‘ஏன் ‘

‘நிம்மதியான வாழ்க்கை…. வேளா வேளைக்குச் சாப்பாடு…. இஷ்டத்திற்குச் சுத்தலாம்…. நல்லா தூங்கலாம்…. ஆபீஸ் போகணும்னு நினைப்பே வராது ‘

‘எனக்கும் அதுமாதிரியான ஊர் கிடைச்சா நல்லா இருக்கும். ‘

பத்மா ஒன்றும் பேசாமல் சிரித்தாள். ஒரு வினாடி அவள் சிரிப்பைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன். நான் அவளை ஓட்டலுக்குக் கூப்பிட்டது கொஞ்சம் துணிச்சலான விஷயம். இது என் மனத்திற்குள் நெருடியதால், அவளுடன் நான் ஓட்டலுக்குள் நுழையும்போது, இயல்பாக இல்லை. ஜாக்கிரதை உணர்வோடு இருந்தேன். பத்மா பார்ப்பதற்கு கவர்ச்சியாக உடை உடுத்தி இருந்தாள். அதுவும் மனதை பிடித்து இழுத்தது ‘

‘என்ன நான் பேசறது ஒங்கக் காதுலே ஏறலையா ? ‘ என்று அவள் கேட்டபோது, நான் திகைத்தேன்.

‘என்ன கேட்டாங்க நீங்க ? ‘

‘என் கதையைப்பத்தி ‘

‘நான் ஏதோ யோசனையிலே இருந்துட்டேன் ‘

‘எழுதறவங்களே அப்படித்தான் ‘

‘நீங்க நினைக்கிற மாதிரி எழுதறவங்க, அப்படியெல்லாம் கிடையாது ‘

அவள் அதற்குப்பதில் எதுவும் சொல்லாமல் இர்ந்தாள். சாப்பிடுவதற்கான உணவு வகைகள் வந்ததால், எங்களிடையே மெளனம் நிலவியது. பத்மாவின் விரல்கள் நீளமாகத் தெரிந்தன. சாப்பிடும்போது அவளிடம் தென்பட்ட ஒழுங்கு எனக்குள் பிரமிப்பை உண்டாக்கியது.

‘ஒங்கக் கதையை இன்னும் நல்லா எழுதி இருக்கணும் ‘

இதைக் கேட்டவுடன் அவள்முகம் சுருங்கி விட்டதுபோல் தோற்றமளித்தது. நான் அப்படிச் சொல்லி இருக்கக் கூடாது.

நாங்களிருவரும் அந்த இடத்தை விட்டுக் கிளம்பும்போது, அவள் எழுதிய கதையைத் திருப்பிக் கொடுத்தேன். என்னிடம் முதன்முதலாக அவள் கதையை கொடுத்தபோது ஏற்பட்ட மலர்ச்சி, இப்போது. திரும்பப் பெறும்போது ஏற்படவில்லை. ஆனால் அவள் நட்பை என்னால் இழக்க முடியாது.

‘ஒரு கதையை இன்னும் திறன்பட கணிக்க எனக்கு அனுபவமில்லை ‘ என்றேன்.

நான் சொன்ன இந்த வார்த்தைகள் அவளுக்குத் திருப்தியைத் தந்திருக்கும்.

இந்தச் சந்திர்ப்பிற்குப் பிறகு, நானும் அவளும் இரண்டு மூன்று வாரங்கள் பார்த்துக்கொள்ளவில்லை. உண்மையான காரணம், அன்று ஓட்டலிலிருந்து நாங்கள் திரும்பி வரும்போது ஜகன் பார்த்துவிட்டான். அவன் கிண்டலிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமென்கிற ஜாக்கிரதை உணர்வு எனக்கு ஏற்பட்டது. பத்மாவிற்கும் அப்படித் தோன்றி இருக்கலாம்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை நேரத்தில், வீட்டிற்கு வெண்ணெய் வாங்குவதற்காக வெளியே சென்று கொண்டிருந்தேன். போகும் வழியில் பத்மாவை அவள் வீட்டு வாசலில் பார்க்க நேர்ந்தது. அவள் இருக்குமிடம் எனக்குத் தெரிந்தாலும், ஒரு முறை கூட அவள் வீட்டிற்குள் நான் நுழைந்ததில்லை. அவளும் எங்கேயோ கிளம்புவதற்குத் தயாராக இருப்பவள்போல் தென்பட்டாள்.

‘வீட்டிற்கு வர்றீங்களா ‘ என்று உபசரித்தாள். எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அவள் வீட்டிற்குள் நுழைந்தேன். அவள் வீட்டிலுள்ள எல்லோரிடமும் என்னை அறிமுகப்படுத்தினாள். அன்று வீட்டிற்கு அழைத்து வந்த பணிப்பெண் உள்பட. அவள் அம்மா அவளைப் போல் வெளுப்பாகத் தென்பட்டாள். அவள் அப்பாவைவிட அவள் அம்மா நன்றாகப் பழகினாள். என் குடும்பத்தைப் பற்றியெல்லாம் விசாரித்தாள். அவள் அம்மா காப்பி எடுத்துவர உள்ளே சென்றாள்.

‘எங்கே இந்தக் காலை நேரத்திலே கிளம்பிட்டிங்க ? ‘ என்று கேட்டேன் பத்மாவைப் பார்த்து.

‘கம்ப்யூட்டர் கத்துக்கலாம்னுதான் ‘

‘என்னாலே ஒங்க நேரம் வீணாப் போச்சா ? ‘

‘இல்லே…இன்னிக்குத்தான் போலாம்னு நினைச்சுண்டிருந்தேன். நீங்களும் சேர்றீங்களா. நம்ம இடத்திலேருந்து கிட்டக்க ‘

நான் யோசித்தேன். இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. பத்மாவை அலுவலகத்தில் பார்ப்பது அவ்வளவு சுலபமில்லை. ஜகன் இருப்பான். காரணமில்லாமல் அவளைப் பார்க்கணும்னா கம்ப்யூட்டர் வகுப்புதான் லாயிக்கு.

நானும் அவளும் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள ஒன்றாக சேர்ந்தோம். தினமும் அவள் வகுப்பிற்குச் செல்லும் நேரத்தை அறிந்து அவள் வீடு இருக்கும் தெருமுனையில் சந்திப்பதுபோல் வருவேன். பிறகு இருவரும் ஒன்றாகச் செல்வோம். சில நாட்களில் நான் வருவதை அவள் எதிர்ப்பார்க்கத் தொடங்கிவிட்டாள்.

ஒருநாள் காலை நேரத்தில் அவளைச் சந்திக்கவில்லை. கம்ப்யூட்டர் வகுப்பில் அவள் இல்லாதது நன்றாகத் தெரிந்தது. அன்று வகுப்புமுடிந்து, திரும்பும்போது போகும்வழியில் அவள் நின்றுகொண்டிருந்தாள்.

‘இன்னிக்கு ஏன் வரலை ? ‘

‘எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்றாங்க ‘

நான் பேசாமல் திகைத்து நின்றேன். கிட்டத்தட்ட அதிர்ச்சி அடைந்த நிலைதான். அதை அவள் புரிந்து கொண்டு விடுவாளென்று நினைத்து,

‘வாழ்த்துக்கள் ‘ என்று கூறி அவளிடமிருந்து விடைபெற்றேன்.

அன்று இரவு எனக்குத் தூக்கம் வரவில்லை. மொட்டை மாடியில் இருட்டில் அமர்ந்துக்கொண்டு ‘ஆனந்த்ஷங்கர் ‘ பாட்டுக்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். சோகமாக இருப்பது போல் உணர்ந்தேன். ஏதோ ஒன்று என்னிடமிருந்து நழுவிவிட்டது போலிருந்தது. இந்தச் சமயத்தில் மோசமாக கற்பனை செய்ய ஆரம்பித்தேன். எதிர்பாராவிதமாய் பத்மாவிற்கு இதயநோய் ஏற்பட்டுவிடுவது போலவும், நோயின் காரணமாக, அவளை மணப்பதற்காக நிச்சயமான பையன், அவளை மணக்க மறுத்துவிடுவது போலவும் என் கற்பனை ஓட ஆரம்பித்தது. அவள் இந்த எதிர்பாராத அதிர்ச்சியில் சோகமாக இருக்கும்போது, அவள்முன் நான் தென்பட வேண்டும். அவள் கண்ணீரைத் துடைத்து, அவளை நான் ஏற்பதாகச் சொல்ல வேண்டும்.

பத்மாவைப் பார்ப்பதை நான் கொஞ்ச கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டேன். ஒரு குறுகிய காலத்திற்குள் கம்ப்யூட்டர் கற்றுக் கொள்வதும் நின்றுவிட்டது. உண்மையில் கம்ப்யூட்டர் எதுவும் என் மூளையில் ஏறவில்லை. எங்கள் அலுவலகம் ஏழு மாடிக் கட்டிடம் கொண்டது. ஆயிரக்கணக்கானவர்கள் பணிபுரியும் இடத்தில் நானும் அவளும் ஏதோ ஒரு மூலையில் இருப்போம். ஒருநாள் எனக்குப் போன் செய்தாள்.

‘என்ன உங்களிடமிருந்து போன் வரலை ? ‘

‘எப்ப கல்யாணம் ? ‘

‘இன்னும் நாலைஞ்சு மாசமிருக்கு ‘

நான் எதிர்பாராவிதமாய் மெளனமாகிவிட்டேன். எனக்கு இயல்பாய் ஏற்படும் விஷயம் இது. அவளுக்கு நடக்கப்போகும் திருமணத்தின் மீது என் கவனம் சென்றுவிட்டதால் என்னால் பேச இயலாமல் போய் விட்டது.

‘ஒண்ணுமே பேசமாட்டேங்கறீங்க. ‘

‘ஒண்ணுமில்லை ‘

‘ஏதாவது கற்பனையிலே மூழ்கிட்டாங்களா ? ‘

‘இல்லை ‘

‘அப்புறம் ஏதாவது எழுதினீங்களா ? ‘

‘ஒண்ணும் எழுதலை. ‘

‘அம்மா ஒங்களைப் பாக்கணும்னு சொன்னாங்க. ஏதோ பேசணும்மா….. ‘

எதற்கு அவள் அம்மா என்னுடன் பேச வேண்டும் என்று யோசித்தேன்.

‘நான் போனை வெச்சுடட்டுமா ?…. ‘

‘கோபப்படாதீங்க, பத்மா…. நான் அம்மாவைப் பாக்க வரேன் ‘

‘என்னிக்கு வர்றீங்க ? ‘

‘நாளைக்கு வரேன். ‘

ஆனால் அடுத்த நாள் அவள் வீட்டிற்குப் போக முடியவில்லை. ஞாபகமாக பத்மாபோன் மூலம் என்னுடன் தொடர்பு கொண்டாள்.

‘ஒங்கள எதிர்ப்பார்த்துண்டுருந்தேன் ‘

‘அவசர வேலை வந்துடுத்து. ஞாயிற்றுக்கிழமை வரேனே ? ‘

அவள் போனை வைத்துவிட்டாள். கோபமாகக் கூட இருக்கலாம். அவள் அம்மா என்னை ஏன் பார்க்க விரும்புகிறாள் ?

ஞாயிற்றுக் கிழமை காலை பத்து மணி சுமாருக்கு, பத்மா வீட்டிற்குச் சென்றேன். அவள் அம்மாதான் முதலில் தென்பட்டாள். சிரித்தபடியே என்னைக் கூப்பிட்டு உட்காரவைத்தாள். குளித்துவிட்டு தலை மயிரை பறக்க விட்டபடி பத்மா வந்தாள். அவளைப் பார்த்தவுடன், ஒரு வினாடி திகைத்துவிட்டேன். என் உணர்வுகள் துடிக்க ஆரம்பித்தன.

‘சங்கருக்கு காப்பி கொண்டு வாம்மா ‘ என்றாள் அவள் அம்மா பத்மாவைப் பார்த்து.

பத்மா உள்ளே சென்று மறைந்துவிட்டாள். ஒரு மின்னலைப் போலிருந்தது. அவள் அம்மா, பத்மா சிறு குழந்தையாக இருந்து வளர்ந்ததுவரை பலகதைகள் சொல்லிக்கொண்டு வந்தாள். புகைப்படங்களை எடுத்துக்கொண்டு வந்து காட்டினாள். அந்தப் புகைப்படங்களில் பத்மாவைப் பார்க்க சகிக்கவில்லை. ஒல்லியாக உயரமாக ஒவ்வொரு புகைப்படத்திலும் தென்பட்டாள். அவள் அம்மாவும் அப்பாவும் சேர்ந்திருந்த புகைப்படத்தில் யாரோ ஒருவர் சரியில்லாமல் இருந்தார்கள். பத்மாவைப்பற்றி இன்னும் ஏதோ பேசிக்கொண்டே வந்தாள் அவள் அம்மா. இதெல்லாம் எதற்கு என்று தோன்றியது. பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். முகமலர்ச்சியுடன் பத்மா எனக்கு காப்பி கொண்டு வந்து கொடுத்தாள். திரும்பவும் திகைப்புடன் அவளைப் பார்த்தவுடன், எனக்குச் சொல்ல முடியாத துக்கம் ஏற்படுமென்று தோன்றியது. அவள் கையிலிருந்து காப்பி டம்ளரை வாங்கும்போது, கை நழுவி விழுந்துவிடுமென்று நினைத்தேன். இழந்தது இழந்ததுதான். அவளிடம் எனக்கிருந்த ஈடுபாட்டை குறிப்பால் கூட உணர்த்தாமல் போய்விட்டேன். இத்தனை நாட்கள் பழக்கத்தில் அவளாவது உணர்த்தியிருக்கலாம்.

‘தம்பி, நீ கதையெல்லாம் எழுதுவியாமே ? ‘

நான் கூச்சத்துடன் அவள் அம்மாவைப் பார்த்துச் சிரித்தேன். எழுதுவதென்பது இந்த நிமிஷம் வரை உறுதி இல்லாத ஒன்றாகத் தோன்றும் எனக்கு.

‘பத்திரிக்கை எதிலாவது பிரசுரமாயிருக்கா ? ‘

‘நீங்க படிக்கிற பத்திரிகையில வராது. ‘

‘வேற எதுல வரும் ? ‘

‘சிறு பத்திரிகையிலதான் வரும் ‘

‘அம்மா, இவர் எழுதின ‘செருப்பு ‘ கதை நல்லாயிருக்கும் ‘

‘பத்மா எங்கிட்ட கூட காட்டிச்சு. அதெல்லாம் எனக்குப் புரியறதில்லே. ‘

‘புரியாது போனாலும், புரிஞ்சாலும் அதெல்லாம் பெரிய விஷயமில்லை. ‘

நான் கிட்டத்தட்ட எழுந்துவிடலாமென்று நினைத்தேன். அவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தது அலுப்பாக இருந்தது. மேலும் பத்மாவின் தோற்றம் என்னைச் சங்கடப்படுத்தியது.

பத்மாவின் அப்பா வெளியில் சென்றவர் வந்தார். நான் சிரித்தபடியே அவரைப் பார்த்து கை கூப்பினேன். எனக்கு அதெல்லாம் செயற்கையாகத்தான் பட்டது. யாரையாவது பார்க்கும்போது, எனக்குத் தலை ஆட்டாமல் தான் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

‘பத்மாவைக் கட்டிக்கப் போறவன் எனக்கு தம்பி முறை ஆகணும் ‘

பத்மா வெட்கப்படுவதுபோல், நான் அவளைப் பார்க்காமலே உணர்ந்தேன். நான் அந்த இடத்திலிருந்து கிளம்புவதற்கான தருணம் வந்து விட்டதாகத் தோன்றியது. இன்னும் அங்கிருப்பது என் சுதந்திரத்தை இழந்து கொண்டிருப்பதுபோல் பட்டது. என்னுடைய நிலையைப் புரிந்துக்கொண்டிருப்பாள். அவள் அம்மா எதிர்பாராத விதமாக.

‘என் அருமைக் குழந்தையே ‘ ‘ என்றாள் ஆங்கிலத்தில், என்னைப் பார்த்து. அவள் அம்மா ஒரு நர்ஸரி பள்ளிக்கூடத்தில் ஆங்கிலம் சொல்லித்தரும் டாச்சராகப் பணி புரிகிறாள்.

அவள் அம்மா கூப்பிட்டவிதம், எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. நான் ஒன்றும் புரியாமல் அவள் அம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘பத்மா கல்யாணத்துக்கு என்ன பண்ணப் போறேன்னு தெரியலை. பணம் நிறையா செலவாகும் போலத் தோணுது. ‘

அவள் அம்மா அழைத்ததற்கான காரணம் எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. இதை ஓரளவு நான் ஆரம்பத்திலேயே எதிர்ப்பார்த்தேன். நான் ஒன்றும் பதில் பேசாமலிருந்தேன்.

‘நீ தப்பா நினைச்சுக்காதே. நான் ஒன்னை என் பையன் மாதிரி நினைக்கிறேன். பத்மா சொன்னா ஒனக்கு அம்மா கிடையாதாமே…. சின்ன வயசிலிருந்து பத்மா கெட்டிக்காரி… ஒன்னாலே ஒரு உதவி செய்ய முடியும்… எனக்கு நீ மூவாயிரம் நாலாயிரம் முடிஞ்சா எப்படியாவது புரட்டித் தரணும்…. ஒன்கிட்ட அவ்வளவு பணம் உடனே கிடைக்காது… நீ ஒங்க ஆபீஸிலே இருக்கிற சொசைட்டிலே ஒன்னைப் பதிவு செய்தேன்னா பணம் கிடைக்கும்னு பத்மா சொன்னா… அதை மாசம் மாசம் பத்மா கொடுத்துடுவா…. ரெண்டு பேரும் சேர்ந்து சொசைட்டியில் மெம்பர் ஆனா, ஒருத்தருக்கொருத்தர் சொசைட்டிமூலம் கிடைக்கிற பணத்துக்குப் பொறுப்பேத்துக்கலாம்…. இரண்டு பேரும் ஒரே ஆபீஸிலே இருக்கிறதனாலே இது செளகரியம் ‘.

நான் ஒன்றும் சொல்லாமல் மெளனமாக இருந்தேன்.

‘ஒன் முடிவை எனக்கு இப்ப சொல்லணும்னு இல்லை. ஒரு வாரம் கழிச்சுக்கூட சொல்லலாம். ‘ என்று பேசிக் களைத்துப் போய்விட்டதுபோல் தோற்றமளித்தாள் அவள் அம்மா.

நான் அந்த வீட்டைவிட்டுக் கிளம்பும்போது, ஒன்றை கவனித்தேன். அவள் அப்பா என்னுடன் எதுவும் பேசவில்லை. பத்மா வாசல்வரை என்னுடன் வந்தாள்.

‘கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்க, சங்கர். ‘

‘சரி ‘ என்று கூறியபடி அங்கிருந்து விடுதலை ஆகி வந்தேன்.

கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து பத்மா என்னைப் பார்க்க அலுவலகத்தில் நான் பணிபுரியும் பகுதிக்கு வந்தாள். என் வீட்டிலுள்ளவர்கள் சொசைட்டியில் நான் கடன் வாங்குவதை விரும்பவில்லை. இது மாதிரியான விஷயங்களில் தலை கொடுக்க வேண்டாமென எச்சரிக்கை செய்திருந்தார்கள்.

‘வீட்ல வேண்டாம்னு சொல்றாங்க ‘ என்றேன்.

இதைக் கேட்டவுடன் விருட்டென்று பத்மா அந்த இடத்தில் நிற்காமல் போய்விட்டாள். எனக்கு சங்கடமாகப் போய்விட்டது. எனக்குப் பிடித்தமான பெண்ணின் கோபத்திற்கு ஆளாகிவிட்டேன். ஒரு விதத்தில் நான் சொன்னதும் சரியென்று பட்டது. அலுவலகத்திலுள்ள சொசைட்டியில் கடன் வாங்கினால், சம்பளத்தில் ஒரு கணிசமான தொகை குறைந்து விடுவதோடல்லாமல், கடனை முழுவதும் அடைத்துவிட முடியாமல், அவள் வாங்கும் கடனுக்கும் நான் பொறுப்பேற்றுக்கொள்வதாக ஒப்புதல் அளிக்க வேண்டும். அது இன்னும் தொல்லையான விவகாரம்.

என் மனநிலை அன்று மட்டும் சரியாய் இல்லை. பிறகு என் இயல்பான நிலைக்கு மனநிலை திரும்பிவிட்டது. பலநாட்கள் பத்மா என் கண்ணில் தட்டுப்படவில்லை. நானும் அவளைப் பார்ப்பதற்கு எந்தவித முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை.

திரும்பவும் பத்மாவை, அவள் கல்யாணப் பத்திரிக்கை கொண்டு வரும்போதுதான் பார்த்தேன். வீட்டிற்கு வந்து பத்திரிக்கை கொடுப்பாளென்று நினைத்திருந்த எனக்கு ஏமாற்றமாக இருந்தது. சாதாரணமாக மற்றவர்களைப் பார்த்து பத்திர்க்கை கொடுப்பது போல் எனக்கும் கொடுத்தாள். பத்திரிக்கையை நீட்டும்போது, ஒரு வார்த்தை சொன்னாள், ‘கல்யாணத்துக்கு வாங்க ‘ என்று. இதுவும், எல்லோருக்கும் சொல்வதுபோல்தான் எனக்கும். அறிமுகமில்லாதவர்களைப் பார்க்க நேரும்போது, ஏற்படும் முகபாவனைகள்தான் அவளிடத்தில் தென்பட்டன. கொஞ்சம் கூர்ந்து அவளைக் கவனிக்கும்போது, அவள் என்னைத் தவிர்ப்பது புரிந்தது.

நான் அவள் போனபிறகு, அவளைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். அவளுக்காக நான் கடன் விஷயத்தில் மாட்டிக்கொள்ளாமலிருந்தது இன்னும் அவள் நினைவிலிருந்து போகவில்லை. ஒரு சமயம் அவள் இதை என்னிடமிருந்து எதிர்ப்பார்க்காமலிருந்திருக்கலாம்.

என்றாலும் அவள் கல்யாணத்திற்கு போவதென்று தீர்மானித்திருந்தேன். அவள் திருமணம் செய்து கொள்ளப்போகும் மண்டபம்கூட நாங்கள் இருந்த பகுதியில்தான் இருந்தது. கிட்டத்தட்ட மேற்கு மாம்பலம் பகுதியில் சிறுவனாக இருந்து இன்றுவரை இருக்கத்தொடங்கி 20 வருடங்கள் மேலிருக்கும். இருபது வருடங்களுக்கு முன்பு, இந்த இடம் பார்க்க சகிக்காமலிருக்கும் போக்குவரத்து இந்தப் பகுதிக்கு வராது. கல்யாணப்பத்திரிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்த மண்டபம் நாங்கள் முன்பு குடியிருந்த (இப்போது சொந்த வீட்டிலிருக்கிறோம்) இடத்திற்கு பக்கத்தில்தான் இருக்க வேண்டும். பல வருடங்களாக எங்கள் பகுதியில் எனக்குத் தெரிந்தது அந்த ஒரு மண்டபம்தான்.

இப்போதெல்லாம் இந்த இடம் மாறிவிட்டது. தார் ரோடு போடப்பட்டு போக்குவரத்தெல்லாம் ஓட ஆரம்பித்துவிட்டது. அதிகமாக நெரிசலுள்ள இடம். அங்கங்கே புதுப்புதுக் கட்டிடங்கள். வேண்டிய பொருள்கள் எங்கும் அலையாமல் கிடைக்கக் கூடிய வசதிகள். மருந்துக் கடைகளும் மருத்துவமனைகளும் அதிகமாக தோன்றிவிட்டன. ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு இயங்கும் உலகமாகத் தோன்றியது. நான் பள்ளியில் படிக்கும் பிராயத்தில், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட மொட்டை மைதானத்திற்குப் போவேன், அந்த இடத்தில் இப்போது பிரும்மாண்டமான பள்ளிக்கூடம் ஒன்று உருவாகி விட்டது. தினமும் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த இடத்தில், நைட் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். எப்போதும் அந்த இடத்தில் அரசியல் கூட்டமும் நடை பெறும். ரயில்வேஸ்டேஷன் ஒட்டியுள்ள தெருவில், மழைக்காலங்களில் நடக்கவே முடியாது. சேறு படிந்திருக்கும். குறுகலான அந்தத் தெருவில் நெரிசல் அதிகம். இப்போது அங்குள்ள கடைகளை அப்புறப்படுத்திவிட்டு, தெருவை அகலப்படுத்திவிட்டார்கள்.

பத்மாவின் கல்யாணத்திற்காக விடுமுறை எடுக்க வேண்டாமென்று நினைத்திருந்தேன். கல்யாணத்தன்று சீக்கிரமாகவே வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டேன். முதல்நாளே அலுவலகத்திற்கு ஒரு மணி நேரம் தாமதமாக வர அனுமதி பெற்றிருந்தேன். முகூர்த்த நேரம் சீக்கிரமாகவே ஆரம்பிப்பதால், சரியாக அந்த நேரத்திற்குள் அங்கு போக இயலவில்லை என்னால்.

கல்யாண மண்டபத்திற்குள் நுழைந்தவுடன் கூட்டமே இல்லை. என்னை வெறும் நாற்காலிகள் வரவேற்றன. நுழைவாயில் நின்று கொண்டிருந்த இரண்டு சிறுமிகள் என்மேல் பன்னீர் தெளித்தார்கள். சந்தனத்தைக் கையில் பூசிக்கொண்டு உள்ளே திரும்பினேன். ஒருவர் என்னைப் பார்த்தபடியே, ‘வாங்க சார், வாங்க ‘ என்று உபசரித்தார். நானும் அவருடன் நடந்தேன். என்னைக் கல்யாண கூடத்திலிருந்து மாடிக்கு அழைத்துக் கொண்டு போனார். அங்கு கிட்டத்தட்ட 20 அல்லது 25 பேர்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். தெரிந்த முகமாக ஒன்றும் கண்ணில் படவில்லை, ஒரு சமயம் அலுவலகத்திலிருந்து இன்னும் யாரும் வரவில்லை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். இந்த கல்யாணத்திற்காக அவசரப்பட்டு வந்து விட்டதாக எண்ணி வருந்தினேன். டிபன் சாப்பிடும் இடத்திற்கு அழைத்து வந்து, என்னையும் டிபன் சாப்பிட உட்கார வைத்தார்.

இந்த கல்யாணத்தின்போது எனக்குள் ஏற்பட்ட மனநிலையின் போக்கை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. எனக்கும் பத்மாவிற்கும் ஏற்பட வேண்டிய திருமணம், அப்படி நடக்காமல் போனதால், ஏமாற்றம் தரக்கூடிய ஒன்றாக மாறிவிட்டதாக எனக்குத் தோன்றியது. அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருந்தாலும், சாதாரணமாக திருமணம் எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்றுதான். ஆனால் நான் எதையோ எதிர்பார்த்து பழகக்கூடிய பத்மாவாக அவள் எப்படி மாற முடியும்….. ? நான் கடன் தர இயலாது என்று கூறியதிலிருந்து, அவள் போக்கில் தென்பட்ட மாறுதல்கள், என்னைச் சங்கடத்திற்கு உள்ளாக்கிவிட்டன. அவளுக்காக, அவள் எனக்கில்லை என்று ஆனபிறகு, என்னிடமிருந்து இயல்பாக கழன்று கொண்டாள். கல்யாண கோலத்தில், அவளைப் பார்க்க வேண்டுமென்று வந்திருக்கும் நான், காரணமில்லாத படபடப்புகளுக்கு ஆளாகி இருந்தேன். அந்தக் கோலத்தில் அவளை மட்டும் வெகுசீக்கிரத்தில் பார்த்துவிட்டு திரும்பிவிட வேண்டுமென்று நினைத்திருந்தேன். நல்ல காலம் இதுவரையில் என் கண்ணிற்கு அவள் அம்மா தென்படவில்லை. எல்லோரும் புதியவர்களாக இருந்தார்கள். ஒருவர்கூட எனக்கு அறிமுகமான அல்லது பழக்கமான ஒருவராகத் தென்படவில்லை.

ஒரு வழியாக நான் டிபன் சாப்பிட்டுவிட்டு, கீழே இறங்கி வந்தேன். என்னை மாடிக்கு அழைத்துக் கொண்டு போனவர் கீழே காத்திருந்தார். அவர் என்னைப் பார்த்தவுடன் ஓடி வந்தார்.

‘கல்யாணம் எங்கே நடந்தது ? ‘ என்று நான் அவரைப்பார்த்து கேட்க, அவர் என்னை உள்ளே அழைத்துக்கொண்டு போனார். பத்மாவைப் பார்க்கும் ஆவலுடன், எனக்குள் ஏற்பட்ட படபடப்புடனும் நான் காணப்பட்டேன். நான் நிமிர்ந்து பத்மாவைப் பார்க்க எத்தனித்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்குண்டதுபோல் மாறிவிட்டிருந்தேன். நான் கண்டது பத்மாவை அல்ல. ஒரு வயதான தம்பதிகளை. மாலையும் கழுத்துமாக சிரித்தபடியே அவலட்சணமாக காட்சி அளித்தார்கள். அவர்கள் என்னைப் பார்த்தும் சிரித்தார்கள். திடுக்கென்று எனக்கு அவர்கள் பக்கத்திற்கு போவதற்கே அருவெறுப்பாய் இருந்தது. எப்படி இந்தத் தவறு நிகழ்ந்தது…. ? நான் உடனே வெளியே வந்துவிட்டேன். என் படப்படப்பு அடங்கவில்லை. வாசலில் போடப்பட்டிருந்த நாற்காலி ஒன்றின் மீது நான் தொப்பென்று விழுந்த போது, என்னை டிபனுக்கு அழைத்துக்கொண்டு போனவர், என் அருகில் வந்தார். நான் என் அதிர்ச்சிகளை அவரிடம் காட்டாமல், வலிய புன்னகையை வரவழைத்துக்கொண்டு அவரைப் பார்த்தேன்.

‘நமஸ்காரம் பண்ணீனிங்களா ? ‘

நான் வெறுமனே தலை ஆட்டினேன். அவர் திருப்தியுடன் தள்ளிப் போய் நின்றார். டிபன் சாப்பிட்ட கும்பலிலிருந்த ஒவ்வொருவரும் உள்ளேயும், வெளியேயும் வந்த வண்ணம் இருந்தார்கள்.

எனக்கு தற்போது ஏற்பட்ட சங்கடம், எப்படியாவது இந்த இடத்தை விட்டு ஓடிப்போக வேண்டுமென்பதுதான். ஆனால் என்னை டிபன் சாப்பிட அழைத்துக்கொண்டு போனவர், தூரத்தில் நிற்பதுபோல் பட்டது. அவர் பார்க்காத தருணத்தில் ஓடிப் போய்விடவேண்டும். ஆனால் அவர் நகர்வதாக தெரியவில்லை. தூரத்திலிருந்து என்னை நோட்டம் விடுவதுபோல்கூட எனக்குத் தோன்றியது. மெதுவாக நகர்ந்து நகர்ந்து போய் விடலாம். பெரிய தர்மசங்கடத்திலல்லவா மாட்டிக்கொண்டு விட்டேன். பாவி மனுஷன் நகர்வதாகக் காணோமே…. ? அவர் பார்க்காத சமயத்தில் நான் அவரைப் பார்க்க ஆரம்பித்து, அவரும் என்னை அதுபோல் பார்ப்பதாக உணர்ந்தேன். இந்தச் சமயத்தில்தான் சமயோசிதமாக நடந்து கொள்ள தெரிய வேண்டும். தவறுதலாக இந்தக் கல்யாணத்திற்கு வந்து மாட்டிக்கொண்டதாக யாரிடமும் காட்டிக்கொள்ளக்கூடாது.

அவர் வேறு பக்கம் திரும்பும் சமயம் பார்த்து, பொறுக்க முடியாமல் எழுந்து விட்டேன். நான் நிற்பதைப் பார்த்து, அவர் என்னிடம் ஓடிவந்தார். நானும், அவரும் தேவை இல்லாமல் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்.

‘இன்னும் என் நண்பர்கள் வரவில்லை ‘ என்றேன் மழுப்பலாக.

‘அப்படியா ? ‘

‘வாசல்ல போய்ப் பாக்கட்டுமா ? ‘

‘பாருங்களேன் ‘

நான் வாசலுக்கு வந்தேன். அவர் அசையாமல் நான் இருந்த இடத்தில் நின்றிருந்தார். தெருவை அடைந்த போது, யாரையோ எதிர்பார்த்து நிற்பதுபோல் நடக்க ஆரம்பித்து, கல்யாண மண்டபம் தாண்டியவுடன் ஓட்டமும் நடையுமாக வர ஆரம்பித்துவிட்டேன். என் காரியம் எனக்கே சிரிப்பை மூட்டியது. அந்தத் தெருவை ஒட்டிய பிரதான சாலையை அடைந்தபோது, ஒருமுறை கல்யாண மண்டபத்தை நோட்டம் விட்டேன். யாரும் என்னை கவனிக்கவில்லை. கல்யாண மண்டபம் என் பார்வையிலிருந்து மறைந்தபிறகுதான் எனக்கு மூச்சு வந்தது.

அவசரம் அவசரமாக பத்மா கொடுத்த கல்யாணப் பத்திரிகையை பையிலிருந்து எடுத்துப் பார்த்தேன். வேறு ஒரு தெரு பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. எனக்குத் திகைப்பாக இருந்தது. புதியதாக இங்கே எப்படி இன்னொரு கல்யாண மண்டபம் முளைத்தது என்று. நான் அறிந்த வரையில் இந்தப் பகுதியில் ஒரு கல்யாண மண்டபம்தான். அதில் உறுதியாக அப்போதும் இருந்தேன்.

கல்யாணப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்த சரியான மண்டபத்திற்குள் நுழைந்தபோதுதான், ஒன்று புரிந்தது. என்கூட பள்ளியில் படித்த நண்பனின் வீடு கல்யாண மண்டபமாக மாறி விட்டிருந்ததென்று. தெருப் பெயரை கவனிக்காமல் விட்டது எவ்வளவு பெரிய தவறு…. ? கல்யாண மண்டபத்தின் பெயரும் என் ஞாபகத்தில் வரவில்லை.

கல்யாண மண்டபத்திற்குள் ஒரே கூட்டமாக இருந்தது. அலுவலகத்திலிருந்து அதிகம் பேர்கள் வந்திருப்பதாகத் தோன்றியது. பத்மாவின் அம்மா தூரத்தில் பேசிக் கொண்டிருந்தாள். உள்ளே வாவென்று கூப்பிடக்கூட வாசலில் யாருமில்லை. பத்மாவைப் பார்க்க முடிந்தது. பட்டுப்புடவையில் ஜொலித்தாள். அவளைச் சுற்றி அவளுடன் பழகும் அலுவலகப் பெண்மணிகள். பட்டுப் புடவைகளின் கனத்துடன் அவர்களுடைய கனத்தையும் சேர்த்துச் சுமப்பதுபோல் நின்றிருந்தார்கள்.

அலுவலகத்தில் என்னுடன் பணிபுரிபவன், என்னை கண்டு கொண்டான்.

‘சாப்பிட்டியா ? ‘

‘ஆயிற்று. ‘

‘இப்பத்தான் நீ உள்ளே நுழையிரே. அதற்குள் எப்படிச் சாப்பிட்டிருப்பே ? ‘

நான் அவனிடம் மாட்டிக்கொண்டதை உணர்ந்து ‘வீட்ல லேசாக சாப்பிட்டு வந்தேன் ‘ என்று புளுகினேன்.

கூட்டத்தை விலக்கிக்கொண்டு, பத்மாவின் முன் போய் நின்றேன். அவள் கணவரை எனக்கு அறிமுகப் படுத்தினாள். நானும் சிரித்தபடியே, அவர் கையைப் பிடித்துக் குலுக்கினேன். இந்த உயரமான தோற்றத்தில் பத்மாவிற்குப் பட்டுப் புடவை கச்சிதமாக இருப்பதுபோல் உணர்ந்தேன். என் பின்னாலிருந்து யாரோ என்னைத் தள்ளாதகுறையாக, பத்மாவை வாழ்த்திச் சிரிப்பது என் காதில் விழுந்தது. பத்மாவின் கவனத்திலிருந்து, நான் அப்புறப்படுத்தப் பட்டேன். யாரிடமும் சொல்லாமல், நான் அங்கிருந்து நகர் ஆரம்பித்தேன். யாரும் என்னை சாப்பிட உபசரிக்கவில்லை. பத்மாவின் அம்மா யாருடனோ பேசிக்கொண்டே இருந்தாள். அவள் பார்வையில் தென்படும்படியாக, நான் இருந்தாலும், அவளுக்கு என் ஞாபகம் வராது. மண்டப வாசலுக்கு வந்தவுடன், யாரோ பை கொடுத்தார்கள். வாங்கிக்கொண்டு வேகமாக அலுவலகம் நோக்கி நடையைக் கட்டினேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *