கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 8, 2022
பார்வையிட்டோர்: 14,572 
 

ஒரு தீர்மானத்துடன் ஆரம்பித்தாயிற்று. இன்று ஐந்தாவது நாள். தலையிலிருந்து கால்கள் வரை கறுப்பு நிற புர்கா உடை அணிந்து ஆஸ்மி காட்சியளித்தாள். அருகில் மூன்று இளம் பெண்கள் அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள்.

‘இந்த ஏழை ஜனங்கள் மறுபடியும் வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பிக்கும் வரை இவர்களுக்கு உதவுவதற்கு வேண்டிய சக்தியை அல்லாஹ் எனக்கு அளிப்பானாக!’ என்று மனதில் ‘துவா’ சொல்லியபடி, விளங்கியம்மன் கோயிலை ஒட்டிய திடலில் நின்றாள் ஆஸ்மி.

திடலுக்கு சற்றுத் தொலைவில் ஒரு குறுகிய சந்து. அங்கு பாதையின் இரு புறமும் கீற்றுக் குடிசைகள்.

கட்டிடம் கட்டும் சித்தாள் வேலைக்குச் செல்பவர்கள், பஸ் நிலையம், ரெயில்வே ஸ்டேஷன்களில் மூட்டை தூக்கும் கூலி வேலை பார்ப்பவர்கள் என தினமும் சம்பாதித்துக் கொண்டு வரும் பணத்தில் இரவில் சோறு பொங்கும் ஏழைக் குடும்பங்களே அங்கு வசித்தார்கள். கொரோனா ஊரடங்கு அவர்களின் வயிற்றில் அடித்தது. வேலை இல்லை. அவர்களை நம்பிக் கடன் கொடுப்பாரும் இல்லை.

அருகாமையில் இருந்த காட்டுபாவா தெருவில் வசித்த ஆஸ்மி இந்த நிலையை அறிந்து மனம் நொந்தாள். அந்தக் குடிசைகளில் வாழும் சுமார் முந்நூறு பேருக்குத் தினமும் மதியம் ஒரு வேளையாவது வயிறார உணவு வழங்குவதைத் தான் ஏன் செய்யக் கூடாது என நினைத்தாள். செயலில் இறங்கினாள்.

பக்கத்தில் சைக்கிள் ரிக்‌ஷா மாதிரியான ஒரு திறந்த வண்டி. பெரிய அலுமினிய தேக்சாக்களில் ஆவி பறக்கும் உணவு. ஒரு நாள் வெஜ் பிரியாணி, இன்னொரு நாள் காய்கறிகள் போட்டு சாம்பார் சாதம், அடுத்த நாள் புளி சாதமும், தயிர் சாதமும் என்று பாக்கு மட்டைத் தட்டில் நிறைவாகப் போட்டு இளம் வயதுப் பெண்கள் சிலர் கொடுக்க, அதை இரு கைகளாலும் ஏந்தி மூன்று அடி இடைவெளி விட்டு நின்று அவளருகில் வரும் ஏழை மக்களுக்குப் பணிவோடு வழங்கி வந்தாள் ஆஸ்மி.

வந்தவர்களில் எவராவது முகக் கவசம் அணியவில்லை என்றால், ஆஸ்மியின் உதவிக்கு அங்கு நிற்கும் பெண்கள் இருப்பு வைத்திருக்கும் ஏராள முகக் கவசங்களில் ஒன்றை அவருக்கு இலவசமாக வழங்கி “மாஸ்க் போடாம வெளியில் நடமாடக் கூடாது ஐயா, தெரியுமில்லே?” என்று அன்புடன் கூறுவார்கள்.

கையில் சேமிப்பாக இருந்த பணத்தில் இதுவரை உணவு வழங்கியாயிற்று. நாளைக்கு என்ன செய்வது? மனசில் கவலை லேசான வலியாய் வந்து உட்கார்ந்தது.

உதவியாளர்கள் கொடுத்த உணவுத் தட்டை வாங்கி கியூ வரிசையில் இடைவெளி விட்டு நின்று, நகர்ந்து நகர்ந்து வந்து கைகூப்பி அவளை வணங்கி வாயாற வாழ்த்தியவர்களுக்கு இயந்திரம் போல் ஆஸ்மி கொடுத்தாள். மகிழ்ச்சியோடு உணவுத் தட்டை வாங்கி நகர்ந்தார்கள் குடிசை வாசிகள்.

“நாளை உணவு வழங்கும் செலவுக்குப் பணம் இல்லை என்றாலும் அல்லாஹ் கைவிட மாட்டார். நிச்சயம் உதவுவார். இந்த இருட்டுக் காலம் முடியும் வரை என் உயிரைக் கொடுத்தாவது இந்த ஏழை மக்களுக்கு நான் அவர்களின் பசியைப் போக்குவது நிச்சயம்’’ என்று மனதில் ‘நிய்யத்’ செய்து கொண்டாள் ஆஸ்மி.

காட்டு பாவா தெரு முனையில் ஆஸ்மியின் வீட்டை ஒட்டியிருந்த ஆரம்பப் பள்ளிக்கூட வளாகத்தில் நஸீம் பாய் சிலம்பப் பள்ளி நடத்தி வந்தார். மாவட்டத்திலேயே சிலம்பம் சுழற்றுவதில் நஸீம் பாய்க்கு இணை சொல்ல யாரும் இல்லை என்று எல்லோருக்கும் தெரியும்.

அம்மன் கோயில் திருவிழாக்களில் ‘சிறப்பு’ என்று வாண வேடிக்கைகள், சிலம்பச் சண்டைப் போட்டிகள் என்று அமர்க்களப் படும். நஸீம் பாயும் அவருடைய சீடர்களும் வருகிறார்கள் என்றால், நல்லூர்ப் பெருமணம் கிராமத்து முத்து கோஷ்டியினரும் வருவார்கள். ஊர்க் கோடிப் பிள்ளையார் கோயிலில் தொடங்கி, தில்லையம்மன் கோயில் வரை சுமார் நூறு அடி தூரத்துக்கு ஒரு முறை நின்று இரு கோஷ்டிகளும் ஜதை போட்டு மோதுவார்கள். நஸீம் பாய் ஆளுயரக் கம்புகள் இரண்டின் முனையில் துணி சுற்றி, எண்ணெய் ஊற்றித் தீ வைத்து இரட்டைக் கம்பைச் சுழற்றினார் என்றால், எங்கும் தீ ஜ்வாலை சுழன்று பிரமிக்க வைக்கும். திறந்த வாய் மூடாமல் கூட்டம் பார்த்து ரசிக்கும். அதே மாதிரி சிலம்ப விளையாட்டில் ‘குறவஞ்சி’ என்ற வகை ஆட்டத்தில் எதிராளியைத் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட விடுவதில் நஸீம் பாய் பெயர் பெற்றவர்.

பகலில் அவர் தன் வெற்றிலைக் கொடிக்கால் விவசாய வேலைகளைக் கவனிக்க வயலுக்குச் சென்று விடுவார். வீராணம் ஏரியின் கிளையான ராஜன் வாய்க்காலில் பிரிந்து அந்த ஊர் வழியே ஓடும் பாசிமத்தான் ஓடையை ஒட்டி அவருடைய ஒன்றரைக் காணி கொடிக்கால் இருந்தது. நல்ல வருமானம்.

நல்ல இடத்தில் மகள் ஆஸ்மியைத் திருமணம் செய்து கொடுத்தார் நஸீம் பாய். ஊரே திரண்டு வந்து வாழ்த்தியது. யார் கண் பட்டதோ, மூன்றே மாதத்தில் இன்னும் பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண் ஒருத்தியை மணக்கும் நோக்கத்தில் தலாக் சொல்லிப் பிரிந்து விட்டான் ஆஸ்மியின் கணவன். இந்த வேதனை நஸீம் பாயை நோயில் தள்ளியது. ஆஸ்மியைத் தவிக்க விட்டுவிட்டு நஸீம் பாய் இறந்து போனார்.

வீரம் மிக்க தந்தையின் மறைவு வருத்தினாலும் ஆஸ்மி, சீக்கிரம் சமாளித்து எழுந்தாள். அப்பா சிலம்பம் சொல்லிக் கொடுத்த அதே இடத்தில் பெண்களுக்குச் சிலம்பம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள். நிறைய இளம் பெண்கள் வந்தார்கள். குறைவான கட்டணம் வசூலித்தாள்.

இந்த நேரத்தில்தான் கொரோனா ஊரடங்கு, வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று கெடுபிடிகள். ஏழைகளுக்கு உணவளிப்பது நல்ல செயல்தான்.. ஆனல் பணம் வேண்டுமே? யோசித்து ஒரு முடிவு செய்தாள். தனக்கென்று அப்பா விட்டுச் சென்ற ஒன்றரைக் காணி நிலத்தில் பாதியை விற்று விடலாம் என்பதே அவளுடைய முடிவு.

மேல வீதியில் தண்டபாணிச் செட்டியார் என்று ஒரு செல்வந்தர் இவளுடைய வெற்றிலைக் கொடிக் காலை வாங்க முன்வந்தார். பெங்களூருவில் கணிணித் துறையில் வேலை பார்க்கும் அவருடைய மகன் பிற்காலத்தில் விவசாயம் பண்ணும் நோக்கம் இருப்பதால், மலிவாகக் கிடைத்தால் வாங்கிப் போடலாம் என்று சொன்னானாம்.

முக்கால் காணி நிலம், ஐந்து லட்சம் பேசி, நாலரை லட்ச ரூபாய் என்று முடிவானது. பணம் மகனிடமிருந்து வர வேண்டும் என்றார் செட்டியார். சீக்கிரம் வந்துவிடும் என்றார்.

ஆஸ்மிக்கு நாளையப் பொழுதை எப்படிப் போக்கப் போகிறோம் என்று தெரியவில்லை.

அன்று காலை பதினோரு மணிக்கு உணவு வழங்கல் துவங்கி சீக்கிரமே முடிந்து விட்டது. உடன் வந்த சிலம்பப் பள்ளி சீடப் பெண்களிடம் உணவுப் பாத்திர்ங்களைத் தன் வீட்டுக்குக் கொண்டு சேர்க்கும்படிச் சொல்லிவிட்டு மேலவீதியை நோக்கி நடந்தாள் ஆஸ்மி.

“அடடே, சிலம்பப் பள்ளிக்கூட வாத்தியாரம்மாவா? வாம்மா வா! உட்கார்ம்மா!” என்றார் தண்டபாணிச் செட்டியார். அவருடைய மனைவி தனம்மாள் சிரித்த முகத்தோடு ‘வாம்மா ஆஸ்மி, தாகத்துக்கு என்ன சாப்பிடறே… காபி, பால்?” என்று அன்போடு கேட்டாள்.

“இல்லைங்க. நான் நோம்பு இருக்கறதால் எதுவும் சாப்பிட மாட்டேன்” என்றாள் ஆஸ்மி.

“அட, ஆமால்ல. நான் ஒரு மடச்சி. மறந்து போய் கேட்டுப்புட்டேன். ஆமா, உன்னைப் பத்தி ஊரே புகழ்ந்து பேசுதே தாயி! விளங்கியம்மன் கோயில் தெருவில் இருக்கிற சந்து மக்களைத் தத்து எடுத்துக்கிட்டு தினம் சாப்பாடு போட்றியாமேம்மா. ஒன்னை நினைச்சால் எனக்கு உடம்பே சிலிர்த்துப் போவுது தாயி. நீ செய்றது சாதாரண விஷயமில்லேம்மா, மிகப் பெரிய தர்மம்!’’

ஆஸ்மி சங்கடத்துடன் நின்றாள். ‘‘என்னமோ செய்யணும்னு தோணுச்சு செய்றேன் ஆண்ட்டி. உங்க ஆசீர்வாதம்!’’

“அது என்ன ஆஸ்மி, சாதாரணமாச் சொல்லிப்புட்டே? எவ்வளாவோ பணம் இருக்கறவங்க செஞ்சுடறாங்களா? அஞ்சு ரூபாயைக் கொடுத்துட்டு போஸ்டர் அடிச்சு ஒட்டிக்கிறானுவ. நீ செய்றதுதான்மா உண்மையான தர்மம். பசிச்ச வயிற்றுக்குச் சோறு போடறவங்க மனுஷங்க இல்ல ஆஸ்மி, அவங்க தெய்வம்தான்!’’

“ஐயோ ஆண்ட்டி, நா சாதாரண மனுஷிதான். எனக்குச் சாப்பாடுபோடப் பணம் தேவைப்படுது. அதுக்குதான் இங்கே வந்தேன். என் வெத்தலைக் கொடிக்கால் முக்கால் காணியை இந்த லாக் டவுன் பிரச்னை முடிஞ்சப்புறம் அங்கிள் பெயருக்கோ இல்ல, உங்க மகன் பெயருக்கோ ரிஜிஸ்தர் பண்ணிக் கொடுத்துடறேன்னு அன்னிக்குச் சொன்னதேதான். இப்போ எனக்குக் கொஞ்சம் பணம் தேவைப்படுது. நாளைக்குச் சாப்பாடு போடணும். ஒத்தைப் பைசா இல்லை. அங்கிள் கொஞ்சம் பணம் அட்வான்ஸாக் கொடுத்தா ரொம்ப உதவியா இருக்கும். அதுக்குத்தான் வந்தேன்’’.

தண்டபாணி செட்டியார் மேலே பார்த்தார். கீழே பார்த்தார். ‘‘கொடுக்கலாம்தான் அம்மாடி. உனக்குக் கொடுக்காம யாருக்குக் கொடுக்கறது சொல்லு? ஆனா இருந்த பணத்தை யெல்லாம் கடைக்குச் சாமான் பர்ச்சேஸ் பண்றதுக்கு சின்ன மகன் வாங்கிட்டுப் போயிட்டானே, என்ன செய்வேன்? ஒரு வாரம்.. வேணாம், ஒரு ரெண்டு மூணு நாள் பொறுத்துக்கோ. பெங்களூர்லேர்ந்து பெரிய பையன் பணத்தைச் சீக்கிரம் அனுப்பிடுவான்!’’ என்றார் செட்டியார்.

‘பக்’கென்றது ஆஸ்மிக்கு. ‘என்னது, இவரை ரொம்பவும் நம்பி வந்தோமே, இவர் இப்படிச் சொல்லுகிறாரே?’

நாளைக்கு மதியம் கட்டாயம் உணவு கொண்டு வருவேன் என்று நம்பி ஒரு முந்நூறு பேர் வயிற்றுப் பசியோடு காத்திருப்பார்களே, அவர்கள் பசியைத் தீர்க்கும் வழி என்ன? இதென்ன சோதனை?

‘‘தப்பா நினைச்சுக்காதே அம்மா… ஒரு மூணு நாள்ல பாதிப் பணம் கொடுத்துப்புடறேன். அப்புறம் மீதியை ரிஜிஸ்டர் அன்னிக்குத் தந்துப்புடறேன்!’’ என்றார் தண்டபாணி செட்டியார்.

“அதுக்கென்ன அங்கிள், அப்ப நான் வர்றேன்!’’ ஏமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மெல்ல எழுந்து அவர்களிடம் விடை பெற்றுக் கிளம்பினாள் ஆஸ்மி.

வெயிலில் நின்று உணவு வழங்கியது, ரொம்ப தூரம் நடந்து இங்கு வந்தது, நினைத்தபடி பணம் கிடைக்காதது எல்லாம் சேர்ந்து தலை சுற்றியது. வாசற்படி இறங்கினாள்.

“ஆஸ்மி, ஒரு நிமிஷம்..” என்று ஒரு குரல்.

திரும்பிப் பார்த்தாள். செட்டியாரின் மனைவி தனம்மாள் ஆஸ்மியை நோக்கி விரைவாக வந்தாள்.

“ஆஸ்மி இந்தா, இதைப் பிடி!” என்று ஒரு மஞ்சள் துணிப்பையை நீட்டினாள்.

ஏதாவது ஸ்வீட்டாக இருக்கும் என்று நினைத்த ஆஸ்மி, ‘‘இல்லை ஆண்ட்டி, எனக்கு இதெல்லாம் வேண்டாம்!” என்றாள்.

தனம்மாள் சிரித்தாள். “வாங்கிப் பார்க்காமலேயே வேணாம்கிறியே ஆஸ்மி, வாங்கிப் பாரு தாயி!” என்றாள்.

தயக்கத்துடன் வாங்கினாள் ஆஸ்மி. பையினுள் பேப்பர் சுற்றி ரூபாய் நோட்டுக் கட்டுகள் இருந்தன. திகைத்தாள். ‘‘என்ன இது ஆண்ட்டி? எதுக்கு இந்தப் பணம்?’’

“தப்பா நினைச்சுக்காதே ஆஸ்மிக் கண்ணு. என் மகள் ஆனந்தியை உனக்குத்தான் தெரியுமே. அவளுக்கு நாங்க பார்க்காத ஜாதகம் இல்லை, தேடாத மாப்பிள்ளை இல்லை. ஒரு இடமும் குதிரலை. அப்புறம் ஒரு பாட்டி சொன்னாங்க… திருப்பதி ஏழு மலையானுக்கு வேண்டிக்குங்க. கல்யாணம் ஆச்சுன்னா, ஆன மூணு மாசத்துல திருமாங்கல்யத்தைக் கொண்டு வந்து வெங்கடாஜலபதி உண்டியல்ல காணிக்கையாச் செலுத்தறேன்னு. கல்யாணம் ஆகுதா இல்லையான்னு பாரு’ன்னு. அதுபடியே நாங்க வேண்டிகிட்டோம். ஆஸ்மி, வேண்டிகிட்ட ஒரே மாசத்துல நல்ல இடத்துல மாப்பிள்ளை அமைஞ்சது. கல்யாணமும் சென்னைல சிறப்பா நடந்துச்சு. அதனால மூணரைப் பவுன் தாலிக் கொடியும் அரைப் பவுன் தாலியுமா திருப்பதி போய் பெருமாள் உண்டியல்ல போடணும்னு இருந்தோம். ரெண்டு நாளைக்கு முன்னலதான் நீ தன்னந்தனியா நின்னு, படாத கஷ்டம் பட்டு முந்நூறு ஏழைகளோட பசியைப் போக்கறேன்னு கேள்விப்பட்டேன். அப்பவே நான் முடிவு செஞ்சுட்டேன். திருப்பதி உண்டியல்ல இந்த நாலு பவுன் நகையைப் போடறதை விட ஏழை ஜனங்களின் வயித்துப் பசியைப் போக்க உதவினா வெங்கடாஜலபதி சந்தோஷம்தான் படுவார்னு யோசிச்சேன். உடனே நகையை விக்கறதுக்கு ஏற்பாடு செஞ்சேன். இதுல ஒரு லட்ச ரூபாய் இருக்கு ஆஸ்மி. உன்னோட தர்ம காரியத்துக்கு இது உதவட்டுமே!’’

பேச நா எழவில்லை ஆஸ்மிக்கு. கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது.

“ஆண்ட்டி, இதை நான் கடனாகத்தான் வாங்கிக்குவேன். நிலம் ரிஜிஸ்டர் ஆகும்போது அங்கிள் கொடுக்கிற பணத்துல இதைக் கழிச்சுகிட்டு மீதியைக் கொடுத்தால் போதும்!’’

“ஊஹும், மூச்சு விடக் கூடாது ஆஸ்மி. உன் தர்ம காரியப் புண்ணியத்துல எங்களுக்கும் கொஞ்சம் பங்கு கொடுக்கக் கூடாதா? இந்தப் பணம் முழுசும் உன் தர்ம காரியத்துக்குத்தான். போயிட்டு வா தாயி!”

மெய் சிலிர்த்து நின்றாள் ஆஸ்மி. இது கைகளையும் வானை நோக்கி உயர்த்தி, ‘‘அல்ஹம்துலில்லாஹ்!’’ என்று தன் மன நிறைவை நன்றியோடு சொன்னாள்.

– ‘குமுதம்’ வார இதழ், 10-6-2020. சிறப்புச் சிறுகதை

Print Friendly, PDF & Email

1 thought on “தர்மம்

  1. கொரோனாவின் கொடுங்கரங்களால் மனிதம் நசுக்கப்பட்டபோது, உலகெங்கும் ஏழைகளின் பசி போக்கும் முயற்சியில் மதம் தோற்று, மானுடம் வென்ற உண்மையை புதுக் கோணத்தில் சித்தரித்து மனித நேயத்தை போற்றும் சிறப்பான சிறுகதை.

    சிறுகதை ஆசிரியருக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள்
    வாழ்த்துக்கள்.
    ஜூனியர் தேஜ்

    பி.கு
    கீழ்க்காணும் பகுதி 2 முறை அச்சாகி உள்ளது. அதை நீங்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    திடலுக்கு சற்றுத் தொலைவில் ஒரு குறுகிய சந்து. அங்கு பாதையின் இரு புறமும் கீற்றுக் குடிசைகள்.

    கட்டிடம் கட்டும் சித்தாள் வேலைக்குச் செல்பவர்கள், பஸ் நிலையம், ரெயில்வே ஸ்டேஷன்களில் மூட்டை தூக்கும் கூலி வேலை பார்ப்பவர்கள் என தினமும் சம்பாதித்துக் கொண்டு வரும் பணத்தில் இரவில் சோறு பொங்கும் ஏழைக் குடும்பங்களே அங்கு வசித்தார்கள். கொரோனா ஊரடங்கு அவர்களின் வயிற்றில் அடித்தது. வேலை இல்லை. அவர்களை நம்பிக் கடன் கொடுப்பாரும் இல்லை.

    அருகாமையில் இருந்த காட்டுபாவா தெருவில் வசித்த ஆஸ்மி இந்த நிலையை அறிந்து மனம் நொந்தாள். அந்தக் குடிசைகளில் வாழும் சுமார் முந்நூறு பேருக்குத் தினமும் மதியம் ஒரு வேளையாவது வயிறார உணவு வழங்குவதைத் தான் ஏன் செய்யக் கூடாது என நினைத்தாள். செயலில் இறங்கினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *