கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 25, 2014
பார்வையிட்டோர்: 8,918 
 

[என்றாவது ஒரு நாள் தமிழீழம் மலர்ந்தே தீரும் என்று நம்புகிறவர்களுக்கும் தமிழீழப் போராளிகளுக்கும் இப்படைப்பு சமர்ப்பணம்]

ஆரவமர பத்து மணிக்கு எழிஞ்சே பழக்கமா போயிடிச்சிப்போ. என்னாவோ கெட்ட பழக்கம்! கண்ண முழிச்சதும் சொவருல ஒட்டிவச்சிருக்குற அந்தப் படத்தப் பாத்துப்புட்டாதான் நமக்கு நாளே ஓடும். அது மொத வேல; ரெண்டாவது, காலண்டர கிழிக்கனும். குணாவும் அமுதாவும் காலைலே முழிச்சுட்டாலும் காலண்டர கிழிக்காம எனக்குன்னு விட்டுட்டுப் போகுற ஒரே வேல அதுதான்.

எந்திரிச்சுப் போய் அந்த ஒத்த வேலயச் செஞ்சேன். இன்னிக்குத் தேதி இருவத்தியாறு பெப்பரவரி ரெண்டாயிரத்தி நுப்புது.
தபால்காரன் வீட்டு வாச முன்னுக்கு வந்து நின்னு லெட்டர ஆட்டி ஆட்டி காமிச்சிருக்கான் போல; நா கவனிக்கல்ல. போஸ் பொக்ஸயாச்சும் வச்சுத் தொலைங்கய்யான்னு சொல்றத்துக்காவோ என்னாவோ கடுப்புல கொய்ய்ங்னு ஹார்ன அடிச்சி வாச கேட்டத் தாண்டற வேகத்துக்கு வீசிட்டுப் போனான் லெட்டர.

ஃ ஃ ஃ

அடேயப்பா! பத்து வருஷங்குற பிரமிப்பவெட சாதிச்சிட்டேங்குற பெருமதான் மிஞ்சி நிக்குது. எத்தன எத்தன சவாலுங்க, போட்டிங்க, போராட்டங்க! ஆனாலும் விடுவனா? மதியழகனா கொக்கா?

லெட்டர பத்திரமா எடுத்து வச்சிக்கிட்டேன். குணா வந்ததும் அவன்கிட்டச் சொல்லி அடுத்தக்கட்ட வேலயைக் கவனிக்கனும்.
ஐயோ எனக்குக் கையும் ஓடல காலும் ஓடலயே. நான் என்ன செய்வேன்! எகிறி குதிக்கலாம்னு தோனுது. இந்த வயசுல நிக்குறதே பெரும்பாடாயிடுது. இதுல குதிச்சா ரொம்ப நல்லா இருக்கும்போ.

எங்க என் தலைவன்? தெனமும் அந்தச் சூரியனப் பாத்துத்தான் கண்ணத் தொறந்தாலும் இந்த லெட்டர் கெடச்சவுடன மறுபடியும் அந்தப் பிரகாசமான மொகத்த நான் பார்த்தே ஆவனும்னு கண்ணு ரெண்டு சண்ட போடுதுக.

படுக்கை அறைக்கு ஓடினேன். என் கட்டிலுக்கு எதிர்த்தபடியா சொவருல ஆள் ஒசரத்துக்கு கம்பீரமா இடுப்புல கைவச்சுகுட்டு நிக்குற அந்த வேங்கையப் பாத்ததும் அவரோடக் காலத் தொட்டுக் கும்பிட்டேன்.

என்னையும் சேத்துக்க, உன்கூட சேத்துக்கன்னு பல வருஷமா கெஞ்சின என் கொரல் ஒனக்கு கேட்டுருச்சா? இதோ, நானும் உன் தேசத்துக்கு ஓடி வரேனைய்யா.
கிலோ கணக்கா சந்தோஷம் நெஞ்சில குதிச்சி ரத்தக்குழாய அடைச்சி கொஞ்ச நேரத்துல எனக்கு மூச்சு விடமுடியாம தெனரிட்டேன்போ! அப்படியே கட்டுல்ல உக்காந்து கால நீட்டி வச்சு மனதிருப்திக்கு இன்னொரு தடவ அந்த லெட்டர படிச்சுப் பாத்துக்கிட்டேன்.

தமிழ் ஈழத்துக்கு நிரந்தரக் குடியுரிமை கேட்டு நாயா பேயா பதிநஞ்சு வருசமா போராடிக்கிட்டு இருந்த எனக்கு இத்தன நாள் முடியாது என்கிற மொறப்பான லெட்டரே பதிலா வந்துதான் பழக்கம். ஆனா, இந்த தடவ கதயே வேற. சிரிச்சவாக்குல வந்து காய்ஞ்சிருந்த என் வயித்துலயும் மனசுலயும் பால வார்த்துடுச்சு. குணா என் வாயில பால ஊத்துற காலம் வர்ரத்துக்கு முன்னமே இதெல்லாம் நடந்து முடிஞ்சிடனும்னு கனவு கண்டது பலிச்சிடிச்சே!
தமிழீழம் பொறந்து இருவது வருஷத்துல எத்தன பெரிய வளர்ச்சி, எத்தன பெரிய முதிர்ச்சி! இந்திய வல்லரசுகூட கைகூப்பி வணங்குற காலக்கட்டம் வரும்னு அப்பவே தலைவன் சொன்னானே…

அடடே, இப்ப ஏதாவது செய்யலன்னா பொங்கி எந்திரிச்ச ரத்தம் காது மடல வெடிச்சு வெளிய வந்து ஊத்திரும்போல. ரத்தஞ் சுண்டின இந்த வயசுலயே உடம்பு இப்புடி திமுறுதே, ஈழத்துக்கு விடுதல கடச்சப்பவே இந்த லெட்டரு வந்து தொலஞ்சிருந்தா?

குணாவுக்கு மொதல்ல போனைப்போட்டு சமாச்சாரத்தச் சொல்லிப்புடலாம். இந்தப் போனை எங்க வச்சித் தொலைச்சேன்னு தெரியலையே. அனேகமா கட்டில் தலகானி அடியிலதான் வச்சிருப்பேன்; இல்லன்னா டீவிக்குப் பக்கத்துல; அங்கியும் இல்லன்னா சாப்பாட்டு மேசையில இருக்குற பழமே இல்லாத பழக்கூடையில கெடக்கும்; இல்லாட்டிப்போனா தலமுடி சீவுற மேக்காப் அலமாரில தலவாரும்போத வச்சிருப்பேன்; நல்ல வேள தேடுற முன்னமே கண்ணுல சிக்கிடுச்சி கழுத. ச்சார்ஜர்ல போட்டது போட்டபடியே கடக்குது.

என்னாதான் கரண்டத் தின்னாலும் அப்பப்ப பசி எடுத்துக்குது அதுக்கு.
ச்சார்ஜர்லயே போட்டுட்டே போன் பேசக்கூடாதுன்னு குணா கண்டிப்பாச் சொல்லிப்புட்டான் பலதரவ. ஒருவேள நான் மறந்துருவேன்னு ஏ4 பேப்பர்ல நோட்டீஸ் எழுதி ச்சார்ஜர் பக்கத்துலயே ஒட்டி வச்சிட்டான். உனக்கு ஞாபக மறதி கூடிக்கிட்டே வருதுடா மதியழகான்னு நேரடியாச் சொல்லாம இப்படி எழுதிவச்சிக் கிண்டல் பன்றான் மவன். நெனச்சா சிருப்புதான் வருது போ…

“அல்ல்லோ? எப்பா குணா… இமிகிரேசன்லருந்து லெட்ரு வந்துச்சுப்பா இப்பத்தான். எல்லாம் சந்தோஷமான சமாச்சாரந்தான். ஈழத்துக்கு பீ.ஆர் கொடுக்க சரின்னுபுட்டாங்க. என்னால நம்பவே முடியலபோ. கையும் ஓடல காலும் ஓடல எனுக்கு. இப்ப நான் என்னத்தச் செய்யிட்டும்?”

அங்கயிருந்து குணா, “ஆமாவா? சரிப்பா. இன்னிக்கு வேல முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வந்துற்றேன். நாளிக்கு லீவுக்கு அப்லை பன்னிற்றேன். இப்ப நீங்க ஒன்னுத்தையும் செய்ய வேணா. நாங்க வந்தோன மத்த மத்த வேலய கவனிச்சுக்களாம். ஓக்கே?” ன்னான்.
அவெஞ்சொல்லிட்டா மாட்டேன்னா சொல்லிட முடியும்? ஓக்கேன்னு சொல்லிபுட்டு செவப்பு பட்டனத் தேடி அமுத்திட்டு வச்சிட்டேன்.

ஒரு வேலயும் செய்ய வேணாம்னு சொல்லிப்புட்டான். அதான் என்னா செய்யிறதுன்னு ஒரே யோசனையா இருக்கு. பேசாம நாக்காலியில போய் சாஞ்சிகிருவோம்னு மட்டுந்தான் இப்போதிக்குத் தோனிச்சி.

எப்பவுமே எம்மனசுல எரிஞ்சிக்கிட்டுருந்த பல விஷயங்க கண்முன்னால வந்து வந்து படங்காட்டிக்கிடுதுபோ. மறக்க முடியுமா அந்த ரெண்டாயிரத்தி ஒம்போத?
சிங்களப் பேய்ங்க சிப்பாய்ங்கள அனுப்பிச் செதச்சிதே என்னோட ஒடன்பொறப்புக்கள. நடக்குறத தைரியமா எழுதமுடியாம தணிக்க செஞ்சி போட்டாங்க நம்ப நாடு தமுழ் பேப்பருங்க எலங்கச் சேதிய. சுறுக்கிப் போட்ட செய்தியப் படிச்சாலுங்கூட அங்க நடந்துகிட்டுருந்த சமாச்சாரத்த நெனச்சு எம்மனசு தவிச்ச தவிப்பு இருக்கே… எல்லாம் எதுக்காவ? தமுழ் பேப்பரே தேவலாம்னு மத்தமத்த பேப்பர பாத்ததுந்தான் தோனுச்சு. ஒரு கொசுரு கூட போடக்காணம் போ. ஆனா, பாலஸ்தீன போரப் பத்தியும் சூடான் நாட்டுப் போரப் பத்தியுந்தான் ரொம்ப அக்கற காட்டிகிருந்தாங்க. ஈழத்தப் பத்தி என்னா கவல?

பாலஸ்தீனத்துல வெரும் ஆயரத்துச் சொச்ச ஆளுக செத்ததுக்கு போர நிப்பாட்டு போர நிப்பாட்டுன்னு தொடையத் தட்டிக்கிட்டு நின்னாக. ஆனா, எலங்கைல வாரத்துக்கு ஆயரப்பேரு சாவச் சந்திக்குறாங்கன்னு சொன்னதுக்கு டெலிவிஷன்ல படத்துக்கு இடயில இடயில வர்ர விளம்பரங்கள கண்டுக்காம விட்ரது மாதிரி இருந்துகுடுச்சு. பாலஸ்தீனத்துல செத்தா மனுஷங்க; நம்மாளுங்க செத்தா பொம்மைங்க. என்னடா ஒலகமிது?

இவனுங்கதான் பரவால்ல, நமக்கும் அவங்களுக்கும் ஒட்டு ஒறவா, ரத்த பந்தமா? உட்டுப்புட்டான் கண்டுக்காம. நம்ம இனத்துலருந்துதான பிரிஞ்சு போனாங்க கேரளாகாரங்களும் ஆந்தராகாரங்களும் கர்நாடகாகாரங்களும்? இவங்ககூட மருந்துக்கும் ஒரு துடிப்பக் காட்டிக்கிலயே? தொன்று தொட்டு வாழ்ந்த தமுழ் சமுதாயத்துக்குக் கடச்ச மரியாதயப் பாத்தியா?

ஒலகத்தக் காக்கறொம் காக்கறொம்னு வேஷத்தப் போட்டுக்குட்டு ஊர ஏமாத்தத் தெரிஞ்ச ஒலக அமைப்புக்கு அங்க நாதியில்லாம சாவுற மக்களுங்களுக்காவ ஒத்தக் கட்டளயாச்சும் குடுத்துருந்தா சிங்கம்னு சொல்லிப் பீத்திக்கிட்டு பீசாசு மாதிரி ரத்தங்குடிக்கிற அந்த அரசு கொஞ்சமாச்சும் பயந்துருக்காதா? அப்படி என்னாத்தான் சொக்குபொடி போட்டுவச்சானுங்களோ இந்த பிசாசுக. இல்ல, அப்படி என்னாதான் வெறுப்பச் சம்பாரிச்சு வச்சிதோ இந்த தமுழ் சனங்க…

நம்பிக் கெடந்த ஒரே நாடின்னு இந்தியாவ கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சிச்சே ஒட்டுமொத்த தமுழ் சாதி; ஹ்ம்ம்ம்… இப்ப நெனச்சிருப்பான் அன்னிக்கே ஈழத்துக்காவ கொரல் குடுத்துருக்கலாமேன்னு.

லேசா கண்ணச் சொக்குறாப்புல இருந்துச்சு. எந்திரிச்சு பசியாரக்கூட இல்ல. அதுக்குள்ள இன்னோரு தூக்கம் சாடையா கூப்புடுத. தலய ஒதரிக்கிட்டேன் தண்ணி தெளிச்ச ஆடாட்டம். அமுதா என்னா செஞ்சி வச்சிருக்கா பசியாறன்னு போய் பாத்தா, எனக்குப் புடிச்ச ரவயத்தான் கிண்டி வச்சிருந்தா. ஹ்ம்ம்… மருமகளானாலும் மக கணக்கா என்னிய பாத்துகிறாபோ. இதுகள வுட்டுப்புட்டு போறதுதான் மனசுக்குச் சங்கடமா இருக்கு. எதோ ஒன்னு உறுத்துறாப்புல, நெஞ்ச சொரண்டறாப்புல இருக்கு.

இருந்த ரவய மொத்தச்சட்டமா அள்ளி தட்டுல கொட்டிக்கிட்டு சோஃபா நாக்காலிக்கு வந்தேன். இன்னைக்குப் பேப்பரு “படிக்கிலியா படிக்கிலியா”ன்னு இவ்ளோ நேரம் கெஞ்சிக்கிட்டு இருந்தது இப்பத்தான் கண்ணுல பட்டது. லெட்டர் வந்த குஷி அன்னாட வேலயவே மறக்கடிச்சிருச்சிப்போ.

பேப்பரத் தொறந்தாலே இந்தியா செய்திக்கு அடுத்தப் பக்கத்துல வர்ர ஈழச்சேதிங்கலத்தான் மொதல்ல படிப்பேன் நானு. அதுகூட ஈழத்துக்காவ நடந்த சமருக்கு அப்பறமாத்தான் ஒரு பக்கத்த ஈழச் சேதிங்களுக்காவ ஒதுக்கியிருந்தாவ நம்ம பத்திரிக்கைங்க.

பக்கத்தத் திருப்பிப் பாத்தேன்; சேதி ஒன்னுமில்ல. நல்லா பொரட்டி பொரட்டிப் பாத்தேன்; எல்லாச் சேதியும் கலர் கலராவும் கருப்பு வெள்ளையாவும் பிரமாதமா வந்துருக்கே ஒழிய ஈழச்சேதிய மட்டொம் காணொம். எனக்கு கிறுகிறுன்னு மண்டைக்கு ஏறிடுச்சுப்போ. பேப்பர தூக்கி தூரமா வீசிப்புட்டேன்.

வெளிய கடைக்குப் போய்ட்டு வரலாமான்னு தோனுச்சு. சரிதான்னு தடிய எடுத்துக்கிட்டு களம்பிட்டேன். அன்னாடம் வீட்டுத் தெருவுக்கு முன்னால இருக்குற மாமாக் கடைக்குப் போவற வழக்கம் இருக்கு எனுக்கு. போனேன்.

உச்சி வேள வரப்போவுது இன்னுமும் மாமாக் நாசிலெமாவ வித்து முடிக்க முடியாம இங்குட்டும் அங்குட்டும் லாத்திக்கிட்டு இருந்தாரு. “அஜி, தே தாரே ஒன்னு”ன்னு சொல்ல, ஆயிரந்தடவ கேட்டாலும் வீட்டுலயே பசியாறிட்டேன்னுதான் சொல்லுவேன்னு தெரிஞ்சும் அலுக்காம “சாப்புட?”ன்னு கேட்டுறுவாரு. இந்த தடவயும் வேணாம்னு சொல்லிப்புட்டேன்.
அவரு தே தாரேவ ஹாயா போட்டுக்குட்டு இருக்க அப்பிடியே கடய சுத்திப் பார்வய உட்டேன் புதுசா பாக்குற மாதிரி. சொவரு முழுக்க அரபு எழுத்துல வளைவு வளைவா சுருள் சுருளா எழுதியிருந்த படங்க தொங்கிகிட்டு இருந்துச்சி.

இவுரு கூட பாலஸ்தீனத்துக்காவ நன்கொட வாங்கிக் குடுத்தார ஒழிய, ஈழத்துக்குன்னு ஒத்த ஆறுதல் வார்த்தயாச்சும் சொல்லியிருப்பாரான்னு மனசு ஆர்ப்பரிச்சிச்சு. என்னத்தப் பன்ன?
நம்மாள மட்டும் என்னத்தக் கிழிக்க முடிஞ்சிச்சி? ஏதோ நம்ம நாட்டுல நமக்கு இருக்குற மரியாதைக்குத் தவுந்த மாதிரி ரெண்டுமூனு பேரணி; கண்டன ஆர்ப்பாட்டம்; கொஞ்சமா டொனேஷன்; இப்படின்னு நம்ம சக்திக்கு ஏத்த மாதிரிதான எதயும் செய்யமுடியும். நான் மட்டும் இந்த நாட்டு தளபதியா இருந்துருந்தா… போதும் போதும்னு மனசு நிறுத்திக்கச் சொல்லிச்சி, நானும் நிறுத்திக்கிட்டேன் என்னோட நெனப்ப.

போர் முடிஞ்சி ஈழம் மலந்து எழுந்து பல வருஷம் ஆனாகூட அந்த ரத்தக் களரிய மறக்கவே முடியலபோ.

அஜி கூட கத பேசி சாயங்கால வாக்குலதான் நான் மறுபடியும் வீட்டுக்குப் போவேன் எப்பவும். சமயத்துல கூட சேந்துக்குவாங்க ரெண்டுமூனு வேல வெட்டி இல்லாமயும் பேச்சித் தொண இல்லாமயும் இருக்குற கெழுடுக; என்னப்போல. ஆனா இன்னிக்கு அவுக யாரும் வரக்காணம். நானும் அஜியும் தான்.

ஃ ஃ ஃ

நேரமாயிருக்கும். மவனும் மருமவளும் வந்துருப்பாங்க. அஜிக்கு பைசல் பண்ண வேண்டிய பாக்கியக் கணக்குப் பண்ணி கடத்தத் தீத்துட்டேன். ரொம்ப பெரிய கடன்லாம் இல்ல. ஆறு வெள்ளி எம்பது காசுதான். அடிக்கடி காசு எடுத்தார மறந்துருவேன். அப்பச் சேந்த கணக்குதான் இது. காச எடுத்து வந்துருந்தா கணக்கக் க்ளியர் பன்னிருவேன். ஒரு வேள நான் ஈழத்துக்கு அஜியோட ஆறு வெள்ளி எம்பது காசுக் கடனாளியா போயிட்டன்னா? அப்பறம் அஜி என்னப்பத்தி என்னா நெனச்சுக்குவாரு?
வீட்டுக்குப் போவும்போதுதான் ஒரு விஷயம் எனக்குத் தோனுச்சு. இத்தன வருசம் ஆயிருந்தும் இந்த எடம் மட்டும் அப்பிடியே இருக்கு பாருன்னு மனசுகுள்ள நெனச்சிக்கிட்டேன். ஏதோ ஆச்சரியம் பொதஞ்சி கெடக்குதுபோன்னு மனசுக்குச் சொல்லிப்புட்டு வீட்டுக்கு உள்ள பூந்தேன்.

குணா டீவி பாத்துக்குட்டு இருந்தான். அனேகமா அமுதா சமச்சிக்கிட்டு இருக்கனும். “குணா, எப்ப வருவ எப்ப வருவன்னு காத்துகிட்டு இருந்தேன் போ. இந்தா கொஞ்ச நேரம் இரு. போயி லெட்டற எடுத்தாறேன்”ன்னு தடிய ஓரமா நிப்பாட்டி வெச்சிட்டு ஓடுனேன். கொண்டாந்து குடுத்தேன்.

குணாவும் படிச்சிட்டு உறுதிபடித்திட்டான் எனக்கு ஈழத்துல எடங்கெடச்சிடிச்சின்னு. ஒடனே ஒரு கோச பேப்பர எடுத்து வச்சிக்கிட்டு பேனாவால கிறுக்கி கிறுக்கி திட்டம் தீட்ட ஆரம்பிச்சுட்டான்போ. செலது புரிஞ்சது; பலது புரியல. இருந்தாலும் ஊங்கொட்டிக் கேட்டுக்கிட்டேன்.

திட்டத்தப் போட்டு வரஞ்சி முடிக்கிறத்துக்குள்ளார இருட்டிபுடுச்சி. குணா நாளிக்கு வேலைக்கு லீவு சொல்லிட்டானாம். ஷாப்பிங் சமாச்சாரத்தயெல்லாம் நாளிக்கிப் பாத்துக்கலாம்னு சொல்லிப்புட்டான். எனக்குத்தான் இப்பவே போவனும்போல இருந்துச்சு.

அமுதா கையால சமச்ச சாப்பாட்ட இன்னும் எத்தன நாளிக்குத்தான் பாக்கமுடியும்னு இப்பவே கவல அப்பிக்கிருச்சி. ஈழத்துல இப்போதிக்கு இருக்குறது கூட்டாளி பரந்தாமனும் புலிகேசியுந்தான். இன்னும் கொஞ்ச நாளிக்குத்தான. கண்ண மூடிக்கிட்டு இருந்துபுடுவோம். கண்ண மூடுறத்துக்குள்ள குணாவ அங்க வரவழச்சுற முடியாதான்னு மனசு சாப்புடும்போதயே கணக்குப் போட்டுக்குச்சு. போடட்டும்னு சொல்லி நானும் பேசாம இருந்துபுட்டேன்.
அப்பறம்தான் எனக்குத் தோனிச்சி, இத்தன வருஷமாயும் குணாவுக்கு புள்ளைங்க இல்லியா?
“அப்பா, இதயே யோசிச்சி தூக்கத்தக் கெடுத்துக்காம நிம்மதியா போயி தூங்குங்க. நாளிக்கே நாம வேலைய ஆரம்பிச்சிரனும்”

எத யோசிக்க வேண்டாம்ங்குறான்? மனசுல நெனச்சது அவென் காதுக்கு எட்டிபிடுச்சோ? இல்ல நாளிக்கு ஷோப்பிங்கப் பத்திச் சொல்றானோ?

அந்தச் சூரியனோடக் காலத் தொட்டுக் கும்பிட்டுட்டுப் படுக்கைக்குப் போனேன். தூக்கம் எதமா என் காலத் தொட்டு கண்ணு வரைக்கும் வளந்து கவ்விக்கிருச்சி.

ஃ ஃ ஃ

இன்னைக்கும் பத்து மணிக்குத்தான் எழிஞ்சேன்போ. இன்னிக்கு ஷோப்பிங் போவவேண்டிய நாளு இல்ல? குடுகுடுன்னு எழுந்து அவசர அவசரமா அவரோட காலத் தொட்டுக் கும்பிட்டுட்டு ஹாலுக்கு வந்தேன். யாரையுமே காணோம். இன்னைக்கும் குணா வேலைக்குப் போய்ட்டானா? இன்னிக்கு என்னிய ஷோப்பிங் கூட்டிப் போறதாதான சத்தியம் பண்ணுனான்? வரட்டும் இன்னிக்கு.

அமுதா எனக்குன்னு வழக்கமா வெச்சிட்டு போற காலண்டற கிழிக்குற வேலயச் செய்யப் போனேன். லாவகமா கிழிச்சேன் காலாவதியான காகிதத் துண்ட. இன்னிக்குத் தேதி இருவத்தியாறு பெப்பரவரி ரெண்டாயிரத்தி ஒம்போது!

(தமிழ்மன்றம்.காம் நடத்திய 2009-சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை)
(அநங்கம் – மலேசிய சிற்றிதழ் நான்காம் இதழில் பிரசுரமானது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *