கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: May 12, 2022
பார்வையிட்டோர்: 18,307 
 

‘கதவே உடையற மாதிரி இப்படிக் காட்டுத் தனமா யாரு கதவிடிக்கறாங்க?’ என்று யோசித்தபடியே விரைந்து வந்து கதவுத் தாழ் நீக்கினார் சுந்தரபாண்டி.

ஆசிரியர் கதவைத் திறந்து வெளியில் பார்த்தபோது செல்லதுரை தன் மகன் ராசப்பனோடு நின்றிருந்தார். ராசப்பனின் வலது கன்னம் வீங்கியிருக்க அவன் கண்களிலிருந்து அருவியாய்க் கொட்டியது கண்ணீர்.

அப்பா இப்படிச் செய்வார் என்று ராசப்பன் சிறிதும் எதிர்பார்க்க வில்லை. பூனைப் பார்வைக்குத் தப்பி புதைக்குழியில் விழுந்துவிட்டது போல ஆகிவிட்டது ராசப்பனின் நிலைமை.

“கிளம்புடா… அந்தப் பய மவனை…” என்று கச்சை கட்டிக்காண்டு அப்பா கிளம்புவார் என்று லவலேசம் மனசுக்குத் தெரிந்திருந்தாலும் ராசப்பன் சுதாரித்திருப்பான். அப்பாவின் குணம் தெரிந்து எத்தனையோ விசயங்களை அப்பதா வரை கொண்டு போகாமல் மூடி மறைத்துப் பழக்கப் பட்டவன்தான் ராசப்பன். ஆனாலும் இந்த விஷயத்தில் கைப் புண்ணுக்குக் கண்ணாடிஎதுக்கு எனற நிலை ஆகிப்போனதால் சமாளிக்கலாமே என ஏதோ சொல்லப்போக அது இப்படி வினையாக வந்து முடிந்துவிட்டதே என அழுதான் ராசப்பன்.

“யப்பா… யப்பா… யப்பா…”என்று தொடங்கிய ராசப்பனை மேலே பேச விடாமல் அடக்கி, “ லே.. வாடான்னா…” என்று ராசப்பனின் கையைப் பிடித்துக்கொண்டு தெருவில் நடந்தார் செல்லதுரை. செல்லதுரையின் நடைக்கு ஈடுகொடுக்க ராசப்பன் ஓட வெண்டியதாயிற்று.

கசாப்புக்குப் போகிற ஆடு மாதிரி ராசப்பன் செல்லப்பனால் இழுத்துச் செல்லப்பட்ட காட்சியை வைக்கால் போர் மறைவிலும், மரங்களின் மறைவிலும், ஒருக்களித்த கதவின் பின்பிருந்தும், மூடிய ஜன்னல் இடுக்கு வழியாகவும் ஊரே வேடிக்கைப் பார்த்தது.

பல வருடங்களாக ராசப்பனுக்குக் கூட்டாளிகளே கிடையாது. அவன் வயதொத்த பிள்ளைகளுக்கு அந்தக் கிராமத்தில் ஒன்றும் குறைவில்லை. ஆனால் பிறந்த குழந்தைக்கு அரிச்சுவடி சொல்லித் தருவதற்கு முன்னால் ராசப்பனோட சேராத… என்றுதான் கற்றுக் கொடுப்பார்கள். அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. செல்லதுரை மிகவும் கோபக்காரனாக இருப்பதால் அவன் வழிக்குப் போக யாருக்குத்தான் மனது வரும்.

கூட்டாளியே இல்லாத ராசப்பனுக்கு இந்த வருடம்தான் அத்தி பூத்தாற்போல ஒரு சிநேகிதன் கிடைத்தான். வெளியூரிலிருந்து மாற்றலாகி அந்த ஊருக்கு விவசாய இலாக்காவிற்கு வந்த பஞ்ச வர்ணத்தின் மகன் அறிவழகன்தான் அந்த சிநேகிதன்.

புதிதாக அந்த கிராமத்தில் வந்து குடி புகுந்த பஞ்சவர்ணத்தின் குடும்பத்தில் ராசப்பன் பற்றியும் அவன் தந்தை செல்லதுரை பற்றியும் சொல்லி வைப்பதற்கு முன் ராசப்பனுக்கும் அறிவழகனுக்குமிடையே நட்பு வளர்ந்துவிட்டது.

ராசப்பனிடம் சிநேகம் வைத்துவிட்ட விளகு ஊர் சிறுவர்கள் அறிவழகனோடும் பழகாமல் ஒதுக்கிவிட்டார்கள்.

‘அந்தப் புது சிநேகிதப் பயக் கூடத்தான் ஏதாவது பிரச்சனையாக இருக்கும்..’ என்று நினைத்தார்கள் எல்லோரும். அறிவழகம் பாவம் என்று ஊர் முதலைக் கண்ணீர் கூட வடித்தது.

செல்லதுரைக்கு நல்ல வாட்டசாட்டமான உடல் வாகு, ரெட்டை நாடி, ஊர் எல்லை அய்யனார் சிலையொத்த முறுக்கிவிட்ட அடர்த்தியான மீசை, கர்லாக் கட்டை மாதிரி கையும் காலும் உருண்டு திரண்டு கருப்பாய் மலை மாதிரி இருப்பார். அவர் தெருவில் நடந்து வந்தாலே யாரும் எதிரில் வரமாட்டார்கள். அவரைக் கண்டதும் ஒதுங்கி ஓரமாய் நின்றுவிட்டு அவர் கடந்து சென்றதும்தான் புறப்படுவார்கள்.

யாராயிருந்தாலும் தன் வீட்டுக்கு வரவழைத்துத்தான் பஞ்சாயத்துப் பேசும் செல்லதுரை அவரே புறப்பட்டுப் போகிறார் என்றால்…! என்னவாக இருக்கும் என்று ஊரே ஆச்சரியப்பட்டது.

இப்போது செல்லதுரைக்கு வயது ஐம்பத்து மூன்று. செல்லதுரைக்குத் திருமணமானபோது அவருக்கு வயது இருபதுதான்.ஊரில் பாதிக்கு மேல் செல்லதுரை குடும்பத்தின் சொத்துதான். காசு பணத்துல மிதந்த பசையுள்ள குடும்பம். காசு பணம் ஏன் வெளியில் போகவேண்டும் என்று சொந்த மாமன் மகளையே கல்யாணம் செய்து கொண்டார் செல்லதுரை.

கல்யாணமாகி விளையாட்டாக ஐந்து வருடங்கள் ஓடிப்போக தன் மனைவி வேணியின் வயிற்றில் ஒரு வாரிசு உருவாகாத குறை செல்லதுரையை அரிக்கத் தொடங்கியது. போகாத கோவில்களில்லை. பார்க்காத மருத்துவர்களில்லை. தெருவில் வருகிற கிளி ஜோசியம் முதல் வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடம் வரை அனைத்தும் பார்த்தாயிற்று. மருத்துவ ரீதியாகவும் , ஜாதக ரீதியாகவும் குழந்தை பாக்கியம் உண்டு என்றுதான் சொன்னார்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை. பிறக்கும்… பிறக்கும்… என்று கிட்டத்தட்ட பதினைந்து வருடம் காத்திருந்தும் பயனில்லை.

“வயது நாற்பது ஆகப்போகுது இன்னும் எவ்ளோ வருஷம் காத்திருக்கப் போறே… வேணியைத் தள்ளி வெச்சிட்டு வேற கல்யாணம் கட்டிக்க…” என்று எவராவது செல்லதுரையின் மனதைக் கலைத்தார்களோ, அவருக்க அப்படி ஒரு எண்ணம் வந்ததோ தெரியவில்லை. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

வம்சம் வளர்க்க வேறு கல்யாணம் செய்து கொள்ளப் போகும் திட்டம் வேணிக்குத் தெரிந்ததும் அதைத் தடுக்கவில்லை வேணி. “மவராசனா வேற கல்யாணம் கட்டிக்கங்க. அதுக்காக என்னை தள்ளி வெச்சி எங்கேயும் அனுப்பிடாதீங்க. இந்த வீட்டுலயே மாட்டுத் தொழுவம் கூட்டி, மீந்ததைத் தின்னு உங்க காலடியே கிடந்து உசிரைவிட மட்டும் நீங்க எனக்கு அனுமதி தாங்க..” என்று கேட்டுக்கொண்டபோது செல்லதுரை நெகிழ்ந்து போனார்.

“வலங்கிமான் மாரியாத்தாவுக்கு நேந்துக்க. நிச்சயம் ஆத்தா வம்சத்தைக் கொடுப்பா. கல்யாணமாகி இருபத்தைந்து வருசம் கழிச்சி என் மச்சினிக்குக் குழந்தை பிறந்துச்சு, பிரசவமாகி விருத்தி தீட்டு கழிஞ்ச கையோட ஒரு நல்ல நாள் பார்த்து மாரியாத்தா சந்நிதீல பாடை கட்டித் தூக்கினோம் மச்சினியை. நேந்துக்றதோட நான் சொல்ற நாட்டு மருந்து சரக்குகளை சூரணம் பண்ணிச் சாப்பிடுங்க ரெண்டு பேரும்…” என்று ஒரு பெரியவர் சொல்ல, அவர் வாக்குப் பலித்துவிட்டது.

பாடைகட்டி மாரியம்மன் கோவிலில் விருத்தித் தீட்டு முடிந்து பாவனையாகப் பாடைகட்டித் தூக்க இடம் கொடுக்கவில்லை வேணி. ராசப்பனைப் பெற்ற கையோடு செத்துப் போய் பாடை ஏறிவிட்டாள்.

தாயில்லாப் பிள்ளை என்கிற சலுகை. தவமாய்த் தவமிருந்து பெற்ற சீமந்த புத்திரன், ஆஸ்திக்கு.. ஆசைக்கு… என எல்லாவற்றுக்கம் ராசப்பன்தான் என்று ஆகிப் போனதால் செல்லப்பன் ராசப்பன் மேல் உயிரையே வைத்திருந்தான். ராசம்பன் மேல் ஒரு சிறு துரும்பு பட்டாலும் மிருகமாகி விடுவான் செல்லதுரை.

இரண்டாம் தாரமாக வேறு ஒரு பெண்ணைக் கட்டிக் கொண்டால் மகன் சிற்றன்னைக் கொடுமைக்கு ஆளாகக் கூடும் என்று பயந்து 40 வயதில் உடம்பு சுகத்தை உதறி எறிந்துவிட்டு, ராசப்பனை வளர்ப்பது ஒன்றுதான் வேலை என ஆயாவுக்கு ஏற்பாடு செய்து வளர்த்தார்.

ராசப்பனுக்கு மூன்று வயது ஆவதற்குள் பல ஆயாக்கள் மாறிவிட்டனர். ஆயாவாக வருகிறவருக்கு புடவை தினுசு தினுசாக வாங்கித் தருவதும், நகை நட்டுக்கள் என ஆயாவின் மனசு குளிரும்படிச் செய்து வசதியாக இருக்கச் செய்வார் செல்லதுரை.

ஆனால் அருமை மகனின் முகத்தில் ஒரு சுனக்கம் கண்டாலோ… அவ்வளவுதான். விசாரணையே கிடையாது. ஆயாவைத் துரத்திவிடுவார்.

செல்லம் கொடுக்கக் கொடுக்க ராசப்பன் கெட்டுக் குட்டிச்சுவராகத்தான் ஆனான். முதல் வகுப்பு படிக்கும் போது மில் ரங்கசாமி மகன் கோவிந்தராசுதான் ராசப்பனின் கூட்டாளியாக இருந்தான். சின்னஞ் சிறுசுகளின் விளையாட்டில் ராசப்பனின் முன்னம் பல் ஆட்டம் கண்டுவிட்டது.

அருமை மகனின் பல் ஆட்டத்துக்குக் காரணம் கூட விசாரிக்காமல் கோவிந்தராசுவை அறைத்த அறையில் அவன் காதே செவிடாகிவிட்டது.

“பச்சைப் புள்ளைங்க விஷயத்துல பெரியவங்க தலையிடலாமா..?”

“தன் பிள்ளையைக் கண்டிக்காம ஊரான் வீட்டுப் புள்ளைய செவுடாக்கட்டாரே இந்த மனுசன்..இது ஆண்டவனுக்கே அடுக்குமா..?”

ஊர்க்காரர்கள் தங்களுக்குள் இப்படியெல்லாம் பேசிக் கொண்டார்களே தவிர செல்லதுரையிடம் நேரில் சென்று கேட்கவோ, ஞாயம் சொல்லவோ அந்த ஊரில் யாருக்குத்தான் தைரியம் இருக்கிறது?

ஊர் மக்களால் முடிந்தது ‘தன் வீட்டுப் பிள்ளைகளக்கு ராசப்பன் சவகாசம் வேண்டாம்’ என்று தடுப்பது ஒன்றுதான்.

பள்ளிக் கூடத்தில் எந்த ஆசிரியரும் ராசப்பனை கண்டு கொள்வதே கிடையாது. ‘பெரிய இடத்துப் பொல்லாப்பு நமக்கு எதுக்கு..’, ‘பெரிய மனுசனோட கூட்டாளியாக இல்லாவிட்டாலும் எதுக்குப் பகையை சம்பாதிக்கணும்’ என்கிற போக்கில் ஓடிக்கொண்டிருந்த அந்தப் பள்ளிக் கூடத்திற்குள் ஒரு மாற்றம் வந்தது.

இருபத்தைந்து வயதே ஆன சுந்தரபாண்டியன் என்கிற ஆசிரியர் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு வந்து சேர்ந்தார்.

வகுப்பு நடந்துகொண்டே இருக்கும்போது “ஏ… சின்ராசு……” என்ற ஒரு குரல் அசரீரி போலக் கேட்கும். அந்த வகுப்பில் இருக்கும் சின்ராசு என்பவன் யாருடைய அனுமதியும் இல்லாமல் வகுப்பை விட்டு வெளியே போவான். பிறகு எப்பொழுதாவது வந்து உட்காருவான். டிசிப்ளின் இல்லை என்று நடவடிக்கை எடுத்தாலோ, தண்டனை கொடுத்தாலோ அவ்வளவுதான். ஊர் கூடி போராட்டம் நடத்தும். தண்ணியில்லா காட்டுக்கு ட்ரான்ஸ்பரில் செல்ல யாரும் தயாராக இல்லை.

“படிக்கவா வருதுங்க. சத்துணவு திங்கத்தானே வருதுங்க.. மாசம் பொறந்தாச்சா சம்பளம் வாங்கினமான்னு போனாத்தான் இந்த ஊர்ல இந்தப் பள்ளிக்கூடத்துல காலம் தள்ள முடியும்.”

“இந்த ஊர் பசங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கறதுங்கறது விழலுக்கு எரைச்ச தண்ணிதான்..”

சக ஆசிரியர்கள் சொன்னதையெல்லாம் மனதில் வாங்கிக் கொண்டார் சுந்தரபாண்டி.

சுந்தரபாண்டியின் அணுகுமுறையே தனி ரகமாயிருந்தது.

பள்ளிக்கூடம் விடுவதற்கு முன்னே துண்டை உதறிக்கொண்டு வீட்டுக்குப் புறப்படும் ஆசிரியர்களுக்கு மத்தியில், சுந்தரபாண்டி சார் பள்ளி நேரம் முடிந்ததும் ஒரு மணி நேரம் இருந்து மாணவர்களோடு மைதானத்தில் விளையாடினார். ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவித்து விடியற்காலையில் அவர்களோடு ‘ஜாக்கிங்’ சென்றார். கிட்டிப் புள், கோலி குண்டு, பேய்ப் பந்து என்று விளையாடிக் கொண்டிருந்த கிராமத்து மக்களுக்குக் கிரிகெட், ஃபுட்பால் விளையாடுவது சந்தோஷமாகவும் இருந்தது.

வேலைக்கு வந்த ஒரு மாதத்தில் சுந்தரபாண்டி சாருக்கு மாணவர்கள் மத்தியிலும், ஊர் மத்தியிலும் நல்ல பெயர் வந்துவிட்டது.

காலை பத்து மணிக்கு எழுந்து பன்னிரெண்டு மணிக்குப் பள்ளிக் கூடம் போய் இரண்டு மணிக்கெல்லாம் வீட்டுக்குத் திரும்பிவிடும் ராசப்பன் இப்போதெல்லாம் விடிகாலையில் எழுந்திருந்து அந்த வாத்தியாரோடு ஓடுவதும் வீட்டில் உட்கார்ந்து பாடம் படிப்பதும், எழுதுவதுமாக இருந்த ராசப்பனின் மாற்றம் செல்லதுரைக்குப் பெருமையாக இருந்தது-

அறிவழகன் அடித்த கிரிக்கட் பந்து கன்னத்தில் பட்டு வீக்கம் கண்டு போன விபரம் தெரிந்தால் தன் புது சினேகிதன் காதைச் செவிடாக்கிவிட்டால் என்ன செய்வது என்று பயந்து, “கணக்குப் போடலேன்னு வாத்தியாரு அடிச்சாரு…” என்றான் ராசப்பன்.

“சின்ன வயசா இருந்தாலும் பசங்களுக்குத் தக்கபடி வாங்கற சம்பளத்துக்கு வஞ்சனையில்லாம உழைக்கறார்ல…”

“வந்த ஒரு மாசத்துல பள்ளிக்கூடத்துப் போக்கையே மாத்திப்புடுச்சே அந்தப் புள்ள…” என்று அடிக்கடி சுந்தரபாண்டி சாரை சிலாகித்துச் சொல்லும் அப்பா, அவர் அடித்ததாகச் சொன்னால் அதை பெரிதுபடுத்த மாட்டார் என்று நினைத்து, அத்தி பூத்தாற்போல தனக்கு வாய்த்த சினேகிதனுக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்றும் ராசப்பன் சொன்ன பொய் இப்படி ஆகிவிட்டது.

‘வாத்தியாரா பழகாம அண்ணன் தம்பியாட்டம், ஒரு நல்ல சினேகிதனாய்ப் பழகிய சுந்தரபாண்டி சார் கிட்டே அப்பா ஏதாவது ஏடாகூடமா பேசிப்புட்டா.. நான் உங்க மகனை அடிக்கவே இல்லையேனு சார் சொல்விப்புட்டா…அப்பறம் நிலவரம் தெரிஞ்சி எல்லார் முன்னும் அசிங்கமாப் போயிடுமே…’ என்று அப்பாவிடம் உண்மையைச் சொல்லிவிடத் துடித்தாலும் ராசப்பனின் எந்தப் பேச்சையும் கேட்கத் தயாராயில்லை செல்லதுரை.

“யோவ்… நீயெல்லாம் வாத்தியாரா… இல்ல போலீசா…? இப்படி அடிச்சிருக்கியே… அதே போல உன்னை அரையட்டுமா…? எப்படி இருக்குன்னு பார்க்கறியா…?”

செல்லதுரையின் ஆத்திரமான, ஆவேசமான பேச்சையும், ராசப்பனின் கன்ன வீக்கத்தையும் கண்டபோது அதிர்ச்சியாயிருந்தது சுந்தரபாண்டி சாருக்கு.

‘நான் யாரையும் அடிக்கறதே கிடையாதே..! உங்க மகனை நான் அடிக்கலையே..! என்று சொல்லி விட்டால் தன்னளவில் பிரச்சனை தீர்ந்துவிடும். ஆனால் “வாத்தியார் அடிச்சாரு…” என்று தன்னை முன்னிலைப் படுத்தித் தப்பித்த ராசப்பனின் நிலை மோசமாகிவிடும்’

ராசப்பன் தன் மேல் வைத்த நம்பிக்கையைக் குலைக்க விரும்பவில்லை சுந்தரபாண்டி.

‘இந்தப் பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது..?’

ஊசியை ஊசியால்தான் எடுக்க வேண்டும். பொய்யை பொய்யால்தான் வெல்ல வேண்டும். பொய்மையும் வாய்மையுடைத்து…

“நான் காரணமில்லாம உங்க பையனை ஏன் அடிக்கப் போறேன்..?” சுந்தரபாண்டியின் குரலில் உறுதி இருந்தது.

“அவன் கணக்குப் போடலேன்னு நீங்க அடிச்சிருக்கீங்க… அதுக்காக இப்படியா கன்னம் வீங்கறமாதிரி அடிக்கறது. உங்களை ரொம்ப உயர்வா நினைச்சிக்கிட்டிருந்தேன். இப்படிப் பண்ணிட்டீங்களே..” என்று நொந்து கொண்டார் செல்லதுரை.

“நீ என்ன போலீசா’னு கேட்டீங்க… உன்னை அரையட்டுமா’னு கேட்டீங்க… என்னை நீங்க அரையறதானா அறையலாம். நான் உங்களைத் தடுக்கலை. உங்க மகனோட வருங்காலம் நல்லா இருக்கணும்னா அவனைத் திருத்திக் கொண்டு வர்றதுதான் என் கடமை. எப்படிச் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, தான் அடி பட்டாலும், தன் உயிரை விட்டாலும், போலீஸ்காரங்க அதுக்கெல்லாம் அஞ்சாம நடவடிக்க எடுக்கறானோ அது போல நாங்க வருங்காலப் பிரஜைகளான மாணவர்களைத் தண்டிக்கத்தான் செய்வோம். பசங்களோட ஒழுங்கைப் பாதுகாக்கற போலீஸ்தான் ஆசிரியர்கள். நீங்க ஊர்ல பெரிய மனுசன்னும், நீங்க நினைச்சா என்னை தண்ணி இல்லாக் காட்டுக்கு மாத்தல் வாங்கிக் கொடுத்துடுவீங்கனும் கேள்விப்பட்டிருக்கேன். இதுக்கெல்லாம் பயந்து என் சுய நலத்துக்காக உங்க மகனோட வருங்காலத்தைக் கெடுக்க நான் தயாரா இல்லை. நாளைக்கும் வீட்டுக் கணக்கு போட்டுக்கிட்டு வரலேன்னா அடுத்த கன்னமும் பழுக்கறாப்பல, வீங்கறாப்பலத்தான் அரைவேன். நீங்க என்னை அடிக்கறதையோ, எனக்கு மாத்தல் வாங்கித் தரதைப் பத்தியோ எனக்குக் கவலையில்லை..”

இதுநாள் வரை கூழைக்கும்பிடு போடும் வாத்தியார்களை மட்டுமே பார்த்திருந்த செல்லதுரைக்குப் பொதுநலத்துக்காகத் தன்னை அர்பணிக்கும் தைரியமுள்ள சுந்தரபாண்டி சாரைப் பார்த்தபோது மரியாதை வந்தது. “என்னை மன்னிச்சிடுங்க தம்பீ…” என்றார் செல்லதுரை.

தான் அடிக்காவிட்டாலும், அடித்ததாய் சொன்ன மாணவனைக் காட்டிக் கொடுக்காமல் சமாளித்த சுந்தரபாண்டி சார் குன்றென நிமிர்ந்து நின்றார்.

(பன்மலர் – ஏப்ரல் 2002 இசக்கியம்மாள் பகவதி நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை)

Print Friendly, PDF & Email

1 thought on “தன்மை இழவேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *