கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,930 
 

தம்பி பெண்ணின் வளைகாப்பிற்கு மனைவியுடன் வந்திருந்தார் ராஜன். வளைகாப்பு வைபவம் முடிந்து, சாப்பாடு பந்தி நடக்க, சுறுசுறுப்பாக ஓடி, ஓடி பரிமாறும் தம்பி மாப்பிள்ளையை பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
“”என்னங்க… என்ன யோசனை? நம் பெண் லதாவுக்கு, இந்த மாதிரி விசேஷம் எப்ப வரப்போகுதுன்னு நினைச்சிட்டிருக்கீங்க தானே. கூடிய சீக்கிரம், அவளும், நல்ல சேதி சொல்லப் போறா பாருங்களேன்!”
பார்வதி கணவனிடம் சொல்ல, “”அதில்லை பார்வதி… அங்க பாரு, தம்பி மாப்பிள்ளையை… மாமனார் வீடுன்னு இல்லாம, எல்லா வேலைகளையும், உரிமையோடு இழுத்து போட்டு செய்யறாரு. என் தம்பியும், நம்மை போல் ஒரு பெண்ணை தான் வச்சிருக்கான். ஆனா, அவனுக்கு அமைந்த மாப்பிள்ளை, அவன் மனசை புரிஞ்சுகிட்ட மாதிரி, ஒரு நல்ல மகனாகவும் இருக்காரு. நம்ப மாப்பிள்ளையை நினைச்சு பாரு… நாலு வார்த்தை கூட நம்ப கிட்டே பேசாம ஒதுங்கி போறாரு. போனில் பேசினால் கூட, “நல்லா இருக்கீங்களான்னு கேட்டுட்டு, அடுத்த நிமிடமே, இருங்க, உங்க மககிட்டே கொடுக்கிறேன்…’ன்னு, லதா கிட்ட கொடுத்திடறாரு. மனைவி அமையறதுக்கு மட்டுமில்லை, மாப்பிள்ளை அமையறதுக்கும் கொடுத்து வச்சிருக்கணும்!”
தங்கமான மாப்பிள்ளை!“”என்னங்க நீங்க… நம்ப மாப்பிள்ளையை, நாமே குறை சொல்லலாமா? அது, அவரோட சுபாவம். நம்ப பொண்ண வச்சு சந்தோஷமா வாழறாரு இல்லையா! அது நமக்கு போதாதா… நம்மகிட்டே எப்படி நடந்துக்கறாருங்கிறதா முக்கியம்? என் மகள் சந்தோஷமா இருக்கா, எனக்கு அது போதும்,” என்று கோபமாகச் சொன்னாள்.
“”நமக்கு ஒரு மகன் இருந்திருந்தா, எனக்கு இந்த நினைப்பு வந்திருக்காது பார்வதி. ஒரே மகளை பெத்து வச்சிருக்கோம். வந்திருக்கிற மாப்பிள்ளை, என் தம்பிக்கு அமைந்தது போல, உரிமையோடு பழகுகிறவரா அமைஞ்சிருந்தா நல்லா இருக்குமேன்னு மனசு நினைக்குது. என் மனசுல இருப்பதை உன்கிட்டே சொல்லாம, வேற யாருகிட்ட சொல்ல முடியும். அதுக்கு ஏன் கோபப்படற?”
அதற்குள், அவர்கள் சாப்பிட அழைக்க, பந்தியில் அமர்ந்தனர்.
“”மாமா… வந்து சாப்பிடுங்க. நேரமாச்சு… மிச்ச வேலைகளை அப்புறம் கவனிக்கலாம்…” உள்ளே வேலையா இருந்த தம்பியை, அவனது மாப்பிள்ளை, கையை பிடித்து அழைத்து வந்து, பந்தியில் உட்கார வைப்பதை கவனித்தார் ராஜன்.
மகள் வீட்டிற்கு போயிருக்கும் சமயத்தில், “சாப்பிட்டீங்களா மாமா?’ன்னு கூட கேட்காமல், “உங்கப்பா சாப்பிட்டாச்சான்னு…’ மகளிடம் கேட்கும் தன் மாப்பிள்ளையின் நினைவு வந்தது.
“”என்னங்க… கம்பெனி வேலை விஷயமா அமெரிக்கா போக போறதா சொன்னீங்களே… எப்ப போகணும்?”
“”அடுத்த மாதம் முதல் வாரத்தில் கிளம்பற மாதிரி இருக்கும் பார்வதி.”
“”நீங்க போயிட்டு வர, ஒரு மாதம் ஆகும். அதுவரைக்கும் ஏன் தனியாக இருக்கணும். பெங்களூருக்கு வந்து எங்களோடு இரும்மான்னு லதா கூப்பிடறாங்க…”
“”உன் மகள் தானே கூப்பிட்டா… உன் மாப்பிள்ளை உன்னை வரச் சொன்னாரா?”
“”இதோ பாருங்க… அவரு தான் லதாகிட்ட சொல்லி, மாமா அமெரிக்கா போகும் சமயம், அத்தையை இங்க வரச் சொல்லுன்னு சொல்லியிருக்காரு, புரியுதா!”
“”ஏன்… அதை உன் மாப்பிள்ளை, நேரிடையா உன்கிட்டே சொல்ல மாட்டாரா?”
“”உங்களை மாதிரி என்னால, எல்லாத்திலும் குறை கண்டுபிடிச்சுட்டு இருக்க முடியாது. நீங்க துரியோதனன் பார்வை பார்க்கறீங்க… அதனால, பார்க்கிற எல்லாத்துலயும், குறை தான் கண்ணுல படுது; முதலில் உங்க பார்வையை மாத்துங்க.”
“”அப்பப்பா, உன் மாப்பிள்ளை பத்தி ஒரு வார்த்தை பேச விட மாட்டேங்கிறே… சரி, சரி… நீ தாராளமா போய், உன் மகள் வீட்டில் இருந்துட்டு வா. திரும்பி வந்து, நீயும் என்னை மாதிரி குறை சொல்ல போறே பாரேன்.”
“”நிச்சயமா நான் அப்படி சொல்ல மாட்டேன், போதுமா!”
ராஜன், அமெரிக்கா புறப்பட்டு செல்ல, பார்வதி மகள் வீட்டிற்கு வந்தாள். அமெரிக்காவில் இருக்கும் ராஜனுக்கு மகளிடமிருந்து போன் வர, “”என்னம்மா லதா… எல்லாரும் சவுக்கியமா? அம்மா நல்லா இருக்காங்களா?”
“”அப்பா… அம்மாவுக்கு ஒரு சின்ன விபத்து… பாத்ரூமில் வழுக்கி விழுந்து, கால்ல லேசான பிராக்சர். ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணி, ஆபரேஷன் செய்து இருக்குப்பா!”
“”ஐயோ… என்னம்மா சொல்ற? பார்வதிக்கு என்ன ஆச்சு?”
பதற்றத்துடன் கேட்க, “”அப்பா ப்ளீஸ்பா… பயப்படாதீங்க… தொடை எலும்பு லேசா முறிஞ்சிருக்கு, மத்தபடி ஒண்ணுமில்லை. பதறாம புறப்பட்டு வாங்கப்பா…”
“”அம்மாவை பத்திரமா பார்த்துக்கம்மா… நான் உடனே புறப்பட்டு வர்றேன்.”
போனை வைத்தவர், “இப்படி இக்கட்டான சமயத்தில் கூட, மாப்பிள்ளை கூப்பிட்டு, என்னிடம் ஆறுதலான வார்த்தை பேசவில்லையே…’ என, அவர் மனம் நினைக்க தான் செய்தது.
ஆஸ்பத்திரியில் நுழைந்தவரை நோக்கி வந்தாள் லதா.
“”அம்மா எங்க? எப்படி இருக்கா?” கண் கலங்க கேட்கும் அப்பாவை பார்த்து, “”அம்மாவுக்கு ஆபரேஷன் நல்ல விதமாக முடிஞ்சுது; வாங்க பார்க்கலாம்.”
கை பிடித்து அழைத்து சென்றாள். ஐ.சி.யூ., வாசலுக்கு வந்தவள்…
“”அப்பா… ஒரு நிமிடம்… நான் சொல்றதை பதட்டப்படாம கேளுங்க. அம்மாவுக்கு காலில் அடிபடலை… “ஹார்ட் அட்டாக்!’ உடனே ஆபரேஷன் செய்யணும்… இல்லாவிட்டால், உயிருக்கே ஆபத்துன்னு சொல்லிட்டாங்க. நாங்க நேரம் கடத்தாம, அதற்கான ஏற்பாடு செய்து, ஆபரேஷன் நல்ல விதமா முடிஞ்சு, அம்மா ஆபத்தான கட்டத்தை தாண்டிட்டாங்க. ஐ.சி.யூ.,வில் தான் இருக்காங்க. இன்னும், இரண்டு நாளில் வார்டுக்கு மாத்திடுவாங்க. பயப்பட ஒண்ணுமில்லப்பா… அம்மா பிழைச்சுட்டாங்க.”
அப்படியே இடிந்து போயி நின்று விட்டார் ராஜன்.
“”என்னது… பார்வதிக்கு, “ஹார்ட்-அட்டாக்’ வந்து… ஐயோ கடவுளே… என் மனைவி, என்னை விட்டு போகப் பார்த்தாளா!”
பேச வார்த்தை வராமல் தன்னையே பார்க்கும் அப்பாவை, ஆறுதல்படுத்தினாள் லதா.
படுக்கையில் கண் மூடி படுத்திருக்கும் மனைவியின் கைகளை பிடித்து, கண்ணீர் விட்டார்.
“”வாங்க… நீங்க தான் அவங்களோட கணவரா… உங்க மருமகன், நீங்க அமெரிக்கா போயிருக்கிறதா சொன்னாரு… சரியான சமயத்தில், தேவையான ஏற்பாடுகளை செய்து, உங்க மாப்பிள்ளை, உங்க மனைவியை காப்பாத்திட்டாரு… ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சாச்சு. இனி, பயப்பட ஒன்றுமில்லை. உங்க மாப்பிள்ளை தான், கடல் கடந்து இருக்கிற உங்ககிட்ட உண்மையைச் சொன்னா, நீங்க பதட்டப்பட்டு, தனிமையில் இருக்கிற உங்களுக்கு ஏதும் ஆகிட கூடாதுன்னு, சமயோஜிதமாக வேறு காரணம் சொல்லி உங்களை வரவழைச்சதா சொன்னாரு; தைரியமாக இருங்க. ஏன் கண்கலங்குறீங்க? இப்படி ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும். நம் மீது உண்மையான பாசம் வைத்திருக்கிற உறவுகளை, இந்த மாதிரி இக்கட்டான சமயத்தில் தான் புரிஞ்சுக்க முடியும். யூ ஆர் லக்கி!”
டாக்டர் சொல்ல, நன்றியுடன் அவரை பார்த்தார் ராஜன்.
மகளுடன் அறையை விட்டு வெளியே வர, உள்ளே நுழைந்த லதாவின் கணவன், “”மாமா வந்தாச்சா… விவரம் சொன்னீயா? அத்தைக்கு ஒண்ணுமில்லை. ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சுது. கவலைபடாதீங்கன்னு…” சொன்னவன், “”லதா… நீ அப்பாவை அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு போ… அவர் ஓய்வு எடுக்கட்டும். நான் ஆபீஸ் ஒர்க் முடிச்சுட்டு வந்துட்டேன். இங்கே இருந்து அத்தையை கவனிச்சுக்கிறேன்.”
இரண்டொரு வார்த்தைகளில் பேச்சை முடித்து, ஐ.சி.யூ.,வை நோக்கி செல்ல, உரிமையோடு நெருங்கி பழகுவதாலும், பேசுவதாலும் மட்டும் அன்பை வெளிப்படுத்த முடியும் என்பதில்லை; உள்ளார்ந்த பிரியமும், பாசமும் மனதில் இருந்தால், ஒதுங்கி இருப்பதும் அன்பின் வெளிப்பாடு தான் என்பதை புரிந்து கொண்டவராக, தன் மகனாக உரிமையோடு செயலாற்றும் மாப்பிள்ளையிடம், மானசீகமாக மன்னிப்பு கேட்டார் ராஜன்.

– ஜூன் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *