டாஸ்மாக் நாடெனும் போதினிலே..

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 13,866 
 

பாரதிக்கு வயது 22தான். அவன் வாழ்க்கையில் எல்லாமே பாதி கிணறு தாண்டிய கதைதான். இன்றும் அப்படித்தான் ஆகிவிட்டிருந்தது. ஒரு குவாட்டரை முடித்திருந்தான். இன்னும் போதை போதவில்லை. அம்மாவிடம் பிடுங்கிக்கொண்டு வந்திருந்த 100 ரூபாயில் 75 ரூபாய் சரக்குதான் வாங்க முடிந்திருந்தது. 65 ரூபா சரக்கை 75 என்று விற்றுக் கொண்டிருந்தார்கள் பாவிகள்.

வாட்டர் பாக்கெட்டும் காலியாகியிருந்தது. கொறித்த பயிரும் காலியாகியிருந்தது. கரட்டுப்பட்டியின் டாஸ்மாக் பார் மின்வெட்டில் இருண்டிருந்தது. ரீசார்ஜ் லைட்தான் போட்டிருந்தார்கள். அது அழுதுகொண்டிருந்தது. இவனோ தன்னை நினைத்து மனதுக்குள் அழுதுகொண்டிருந்தான். தனக்கு அந்த விபத்து மட்டும் ஏற்பட்டிருக்கக் கூடாது என்று நினைத்தான்.

அந்த விபத்துக்கு முன்பு அவன் வெகுநாள் வேலைக்குப் போகவில்லை. அம்மா திட்டிக் கொண்டிருந்தாள். அவள் கட்டுமான வேலைக்குப் போய் சம்பாதித்து வருவதில் எப்படியும் 50 ரூபாய் பிடுங்கிக் கொள்வான். மிச்சம் மீதியை நண்பர்களுடன் சமாளித்து அன்றைய ‘தண்ணி தேவையை’த் தீர்த்துக்கொள்வான். அந்த 50 ரூபாயைக்கூட அன்று பிடுங்க முடியவில்லை. இரவு தூக்கம் வரவில்லை.

மறுநாள் காலையில் சேகர் வந்து இவனை வேலைக்குக் கூப்பிட்டான். வீடு இடிக்க வேண்டுமாம். 300 ரூபாய் சம்பளமாம். உடனே ஒப்புக்கொண்டு புறப்பட்டான். ஒரு பெரிய பாட்டில் போக கையிலும் காசு நிற்கும் என்று மனது கணக்குப் போட்டது.

சேகர் இவனை விட சில வயது மூத்தவன். 14 வயதில் கரண்டி பிடிக்க ஆரம்பித்து இன்று கொத்தனார் ஆகிவிட்டான். சேகரின் ஸ்பெலண்டரில் இவனும் மற்றொரு பையனும் சேகரின் பின் அமர்ந்து சாணாம்பட்டி சென்று சேர்ந்தார்கள். சேகர் இவனையும் பையனையும் இறக்கி விட்டு இடிக்க வேண்டிய வீட்டைக் காட்டினான்.

அதனை கிராமத்தில் தொகுப்பு வீடு என்பார்கள். எம்ஜிஆர் கொடுத்த வீடு என்றும் சொல்வார்கள். தலித்துகளுக்கு வீடு கட்டுவதற்குக் கொடுத்த சொற்ப பணத்தில் காண்ட்ராக்டர்ளும் தலைவர்களும் அதிகாரிகளும் சுருட்டியது போக மீதமுள்ளதில் கட்டியது. இத்தனைக் காலம் சமாளித்த பின்னர், இனி பெய்யும் மழைக்கு தாங்காது என்று வீட்டுக்காரர் வீட்டுக்கு வெளியே குடியிருக்க குடிசைப் போட்டுக்கொண்டார். மழைக்கு உள்ளே படுத்தால் மரணம் நிச்சயம். தளத்தை உடைத்து தகரம் போடலாம் என்று யோசித்து இடிக்க அழைத்திருந்தார். இந்த வீட்டுக்காரனிடம் சம்பளம் தேறுமா என்று பாரதிக்குச் சந்தேகம் வந்தது.

இருந்தாலும் என்ன செய்ய? சேகர் வாங்கித் தராமலா போய்விடுவான் என்று யோசித்தவாறு சம்மட்டியைத் தூக்கிக்கொண்டு வீட்டின் மேலே ஏறினான்.

ஒரு மணி நேரம் போயிருக்கும். உச்சி வெயிலில் வேர்த்துக்கொட்ட இவன் மேலே நின்று சம்மட்டியால் அடித்துக் கொண்டிந்தான். சின்னவன் மற்றொரு பக்கம் உடைத்துக் கொண்டிருந்தான். என்ன நடந்தது என்று தெரியவில்லை. சரிகிறது என்று தெரிந்து பாரதி தாவித் தரையில் குதிக்க அவன் மீது சுவர் சரிந்தது.. கண்கள் இருண்டன. நினைவுத் தப்பியது. நினைவு திரும்பியபோது வலி உயிர்போனது.. ஊரே திரண்டு கான்கிரீட்டுகளைத் தூக்கி, இவனை மீட்டெடுத்து, 108ஐ அழைத்தார்கள்.

அப்புறம் 6 மாதங்கள் ஆஸ்பத்திரியில் இருந்து, ஐந்து ஆப்பரேஷன்கள் முடிந்து, பிழைத்து வந்தான். வீட்டுக்கு வரும்போதும் கையிலும் காலிலும் மாவுக் கட்டு இருந்தது. அம்மாதான் ஆஸ்பத்திரியில் அருகே இருந்து பார்த்துக்கொண்டாள். தங்கைகள் வருவார்கள் போவார்கள். அவர்களுக்கென்ன காலேஜில் படிக்கிறார்கள். அப்பாவோ நோயாளி. வேலைக்குப் போகாதவர்.

அன்று இடிக்கக் கூப்பிட்டுக் கொண்டு சென்ற சேகர்தான் இன்று வருவதாகச் சொல்லியிருந்தான். அவன் வந்தால் அடுத்த குவார்ட்டர் வரும்.

அது என்ன ‘இந்த மொசக்கெட்ட பய இம்புட்டு லேட்டாக்கிறான்’, என்று முனகியபடியே பாட்டிலைத் தலைகீழாகக் கவிழ்த்து சிந்திய சொட்டுகளை நாக்கில் வாங்கிக் கொண்டான். 75 ரூபாய் சரக்கு சுர்ரென்றது.

இவன் குடிக்குப் பழகியது ஹாஸ்டலில்தான். அப்பாவுக்கு டிபி வந்து வேலைக்குப் போகமுடியவில்லை, அம்மாவின் சம்பாத்தியம் மட்டும்தான். இவனை எஸ்சி ஹாஸ்டலில் சேர்த்துவிட்டாள் அம்மா. அதுதான் அவன் முதன்முறையாக வீட்டுக்கு வெளியே சென்று தங்குவது. பயமாக இருந்தது. ஆனால், மூன்று வேளை சோறு கிடைக்கும் என்று அம்மா சொன்னது சின்னதாக ஆசையை மூட்டியது.

இவன் வீட்டில் இரவு உணவு உத்திரவாதம். காலையில் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு வீட்டில் வேலை முடிந்திருக்காது. சாப்பாடு கிடைக்காது. இரவு அம்மா வந்து சமைத்துப் போடுவதற்குள் ‘மேங்கொடல கீழ்க்கொடல் தின்னுடும்’

அந்தச் சாப்பாட்டு ஆசையிலும் மண் விழுந்தபோதுதான் பாரதிக்கு வெறுப்பு உச்சத்துக்குப் போனது. அந்த ஹாஸ்டல் சமையலறை இந்த டாஸ்மாக் பார் போல நாறிக்கிடக்கும். பிளாஸ்டிக் வாளிகளில் சாம்பார் இருக்கும். மற்றொரு வாளியில் ரசம் இருக்கும். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது. முந்திக்கொண்டவர்கள் காய்களைச் சாப்பிட்டு விடுவார்கள். சோறு பழுப்பு நிறத்தில் கட்டி கட்டியாகச் சில்லிட்டுக் கிடக்கும்.

அம்மாவின் சாப்பாட்டைச் சாப்பிட்டவனுக்கு இந்த சோறு ஒத்துவரவில்லை. அன்று இரவு சாப்பிடப் பிடிக்காமல் மாடிக்குச் சென்றவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பேச்சு சத்தம் கேட்டது. யார் இந்த இருளில்?

அந்த மாடியின் மீது அரச மரம் கவிழ்ந்திருக்கும். அந்த இருளில் இவனின் மூத்த மாணவர்கள் இருப்பது தெரிந்து, என்ன நடக்கிறது என்று பார்க்கச் சென்றான். வெள்ளை பிளாஸ்டிக் டம்ளர்கள் மெல்லிய வெளிச்சத்தில் பளிச்சென தெரிந்தன. ஒரு பாட்டில் மையத்தில் இருந்தது. இவன் அவர்கள் அருகே அமர்ந்துகொண்டான். மயக்கத்தில் இருந்த அவர்கள் இவனைக் கவனிக்காமல் ஏதோ ஒரு சினிமா பற்றி சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

ஒருவன் அந்த கதாநாயகியை வர்ணிக்க சுவாரசியம் பற்றிக்கொண்டது. இவன் இடையில் புகுந்து, ‘அண்ணே அது நமக்கெல்லாம் அக்கா மாதிரியிலண்ணே’, என்று குறுக்கிட, அவர்கள் திரும்பினார்கள்.

‘ஒன்னோட வயசுக்கு அவ அக்காடா… எங்க வயசுக்கு… அதுலயும் பெரிய பொண்ணுன்னா…’, என்று அவன் விளக்கம் அளிக்கத் துவங்கினான். இவனுடைய அறியாப்பிள்ளை குறுகுறுப்பு, அங்கே அமர்ந்து அதனைக் கேட்கச் சொன்னது. அப்படி ஆரம்பித்து அப்புறம் ஜோதியில் கலந்து கொண்டான். முதலில் பிடிக்கவில்லை. கொஞ்சம் உள்ளே போனதும், தலை வேசானது… இறுக்கம் குறைந்தது.

தலை லேசானவுடன் பாரதி கேட்ட முதல் கேள்வியே, ‘எப்புடிண்ணே இதுக்கெல்லாம் காசு?’ என்பதுதான். அம்மா இவனுக்குக் காசு தர மாட்டாள். பசிக்கும்போது பன் வாங்கிச் சாப்பிடக் கூட வழியிருக்காது. இவனை மாதிரிப் பையன்கள் எப்படி காசு சம்பாதித்தார்கள்?

‘வார்டனோட சேர சாய்ங்காலம் தூக்கிப் போயி வித்திட்டோம்.. அந்த ஆளு வரதே வாரத்துக்கு ஒரு நாளு… அவனுக்கு எதுக்கு சேரு?’, என்றான் ஒருவன்.

அன்று சுவைக்க ஆரம்பித்தவன் நிறையச் சுவைத்துவிட்டான். அந்த அரச மரத்து நிழலில் கஞ்சாவும் இழுத்திருக்கிறான்.

பாரதிக்குக் கஞ்சா இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அது வேண்டாம் ஒரு சிகெரெட்டாவது கிடைத்தால் நல்லது.

இன்னமும் சேகரைக் காணவில்லை. பாரில் சிகெரெட் கேட்டால் ஒரு ரூபாய் கூட கேட்பார்கள். பாக்கெட்டில் கைவிட்டபடி வெளியே நடந்தான். பார் அட்டன்டருக்குக் காசு கொடுப்பது அவன் வரலாற்றிலேயே இல்லை. பாட்டில் வாங்கிக்கொண்டு வாட்டர் பாக்கெட்.. அப்புறம் பிளாஸ்டிக் கப். அவ்வளவுதான். பார் கடைக்காரர் இவன் போன்ற ஆட்களை ‘மூஞ்சை’ப் பார்த்தவுடன் கண்டுபிடித்து விடுவார். ‘காசில்லாத குடிகாரக் கேசு’, என்று இவர்கள் முகத்தில் எழுதி ஒட்டியிருக்கும்.

வெளியே இருந்த பெட்டிக் கடையில் ஒரு சிகெரெட் வாங்கிப் பற்ற வைத்துக்கொண்டு சாலையைப் பார்த்தான். சேகர் பைக்கில்தான் வருவான்.

லாரியை முந்திக்கொண்டு ஒரு பைக் சென்றது. லாரியின் வெளிச்சத்தில் ஒரு சுடிதார் பெண் ஓட்டுபவனை இறுக்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. இவனுக்கு வெறுப்பு மேலிட்டது. ‘…ளுக’ என்று திட்டிக் கொண்டான்.

உடல் தேறி இவன் திருப்பூரில் வேலைக்கு சேர்ந்தபோதுதான் அவளைச் சந்தித்தான். இவனுடைய உடைந்துபோன காலுக்கும் கைக்கும் நோவு கொடுக்காத வேலை. திருப்பூரின் வெளியே ஒரு கிராமத்தில் அந்த கோழிப்பண்ணை இருந்தது. அங்கே கோழிகளுக்குத் தீவனம் போடுவது உள்ளிட்ட வேலைகள்தான் இவனுக்கு. அங்கேதான், சரண்யாவைச் சந்தித்தான்.

வெளுத்த நிறம். இவனுக்குச் சமமான உயரம். பளீர் சிரிப்பு. சுடிதார் அழகு என்று இவன் வியக்க, நம்ம உயரத்துக்கு ஒரு ஆளு, கள்ளச் சிரிப்பு என்று அவள் சிரிக்க காதல் பற்றிக் கொண்டது.

அப்புறம் சில நாட்களில், இவனின் ‘தண்ணி’ விவகாரம் காதல் தீயை அணைத்துவிட்டது. அவளைக் கைபிடித்தவுடன் தண்ணியை விட்டுவிட வேண்டும் என்று இவன் தீர்மானித்திருந்தான். அவளோ, ‘ ஒரு நாளைக்குத் தண்ணி போட்டவேன். என்னிக்கு நிறுத்துவானாம்..?… போடா..போ’, என்று போய்விட்டாள்.

இவன் ஊருக்கே திரும்பி வந்துவிட்டான்.

அதன் பின் இவன் தண்ணி போடுவதும் சாலையில் சவால் விடுவதும் அதிகரித்தது. இவன் சிறுவயதிலிருந்தே அமைதியானவன். யாருடனும் பேசமாட்டான். தண்ணி போட்டுவிட்டால் எல்லாப் பேச்சும் வெளியில் வரும். நிச்சயம் தகராறு வரும்.

பாரதி பெருமூச்சு விட்டுக்கொண்டான். இவனுக்கு எல்லாமே பாதி கிணறுதான். இரண்டு தங்கைகளும் நன்றாகப் படிக்கிறார்கள் என்று காலேஜில் சேர்த்தார்கள். எஸ்சி ஹாஸ்ட்டல்.. அப்புறம்.. கோடையில் 100 நாள் வேலை, இல்லாவிட்டால், தண்ணி பாட்டில் கம்பெனியில் வேலை, அதுவும் இல்லையென்றால், மண்புழு உரக் கம்பெனியில் வேலை என்று சம்பாதித்துக்கொண்டு படித்தார்கள்.

இவன் 11 தாண்டவில்லை.

சின்ன தங்கை காதலிக்கிறாள் என்று தெரியும். இவனுக்குத் தெரிந்தவன்தான்… இவனின் சாதிக்காரன்தான். ஆர்ம்டுபோர்சில் இருந்தான். இவனோ கைகால் உடைந்ததால் போலீஸ் இண்டர்வியூவுக்கே போக முடியவில்லை. தங்கை கூட காதலிக்கும் நிலைக்கு வந்துவிட்டாள். இவனைப் பார்த்தாலே எந்தப் பெண்ணும் ஓடிப்போகிறாள் என்று இவனுக்குத் தன் மீதே வெறுப்பு வந்தது.

‘எல்லாமே… பாதிதான்… இன்னிக்கு போதையும் பாதிதான்’ என்று முனக ஆரம்பித்தபோது சேகர் வந்து சேர்ந்தான்.

‘கோச்சுக்காதடா, பைக் பன்ஞ்சராயிடுச்சி’, என்று காரணம் சொன்னான். மட்டக் கம்பு, கொத்துக் கரண்டி எல்லாம் வண்டியிலேயே ஆங்காங்கு இருந்தன.

பைக்கை நிறுத்திவிட்டு சேகர் பாருக்குள் நுழைய இவனும் பின்னால் சென்றான். பார் பையனிடம் சேகர் 500 ரூபாய் தாளை எடுத்து நீட்டி விவரம் சொன்னான். மறக்காமல் சிக்கன் சொன்னான்.

சேகரை ரொம்ப நாளாகத் தெரியும், நன்றாகப் பழகியவன் என்றாலும் பாரதிக்கு சேகர் மேல் வருத்தம் இருந்தது. அன்று அழைத்துப்போய் சிக்க வைத்துவிட்டான் என்று வருத்தம். அதைவிட பெரிய வருத்தம் மருத்துவமனை செலவுக்கென்று 1000 ரூபாய் கொடுத்துவிட்டுப் போனவன் அப்புறம் வரவேயில்லை என்பது.

மருத்துவமனையில் இருந்தபோதே பாரதி முடிவு செய்து வைத்திருந்தான். ‘இருடி… ஒனக்கு வைச்சிருக்கேன்’, என்று மனதுக்குள் முனகிக்கொண்டான்.

பாரதி ஒரு வகையில் பார்த்தால் நல்லவன். யாருடனும் சண்டை போடமாட்டான். அனாவசியமாக சுற்ற மாட்டான். இதெல்லாம் பள்ளிக் காலத்தில்தான். அந்த ஹாஸ்டலுக்குப் போனபின்புதான் வாழ்க்கை மாறிப்போனது. இப்போதும் கூட அம்மாவிடம் சண்டை போடுவான். தங்கைகளை மிரட்டுவான். ஆனால், ஊருக்குள் தலையை நிமிர்ந்து பேசமாட்டான். ஆனால், தப்பு செய்துவிட்டு மறைத்தால் அவனுக்குப் பிடிக்காது. தப்பு செய்துவிட்டால் முதல் மிரட்டலுக்கே சரணடையும் ஆள்.

ஆனால், டாஸ்மாக் போய்விட்டு வந்தான் என்றால், கதை தலைகீழ். அரக்கன் போல நடப்பான். வீரன் போல கூவுவான். முடிந்தால் அடிப்பான். முடியாவிட்டால் அடியை வாங்கிக் கொண்டு முக்காமல் முனகாமல், ஓடாமல் அப்படியே அமர்ந்து விடுவான். ‘ஆம்பளயாடா… வாடா.. வந்து அடிடா..’, என்று கூவியபடி, கையைக் காட்டி அழைப்பான்.

அதற்குள், சேகர் பாட்டிலைத் திறந்து பிளாஸ்டிக் கப்பில் நிரப்பியிருந்தான். துணைக்கு கோக்கை நுரை பொங்க ஊற்றி, இவன் முன்பு நீட்டினான். டம்ளர்களை மோதிவிட்டு சற்றே உறிஞ்சிவிட்டு இருவரும் கீழே வைத்தனர்.

சேகர் சிரித்தபடியே, ‘இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம்..’, என்று இவனைப் பார்த்தான். பாரதி தலையைச் சற்றே சாய்த்துக்கொண்டு அரைக்கண்ணைத் திறந்தபடி கோண வாய் தெரிய சிரித்தான். ஆனால், அவன் மூளை சிரிக்கவில்லை.

சட்டென்று சரண்யா வந்து போனாள். யாரையோ பார்ப்பது போல.. சலனமற்ற கண்களால் பாரதியைப் பார்த்தபடி, சுழித்த உதடுகளில் வெறுப்புத் தெறிக்க, கைகளைக் கட்டிக்கொண்டு, ‘போடா… போ’, என்று திரும்பி நடந்தாள்.

சட்டென்று தலையைக் குலுக்கியபடி சேகரைப் பார்த்தவனை சேகர் கேட்டான், ‘என்ன ஆச்சு?’.

‘ஒன்னும் ஆகல… எல்லாமே பாதிதான் ஆவுது மாமு… எனக்கு.. ஒனக்காவது முழுசா ஆவட்டும்’, என்றபடி டம்ளரை எடுத்து உறிஞ்ச ஆரம்பித்தான்.

சேகருக்குப் புரியவில்லை. ‘என்னா சொல்ற நீயி? மொதல்லயே தண்ணி போட்டுட்டியா?’, என்றான்.

பாரதி சரண்யா கதையைச் சொன்னான். சேகருக்கு சிரிப்பு பிய்த்துக்கொண்டு வந்தது. ‘தோ பாரு… காதல்ங்கறது சினிமா… முடிஞ்ச வரைக்கும் போயிட்டு அப்புறம் வந்துடனும்… என் கதையைக் கேளு’.

சேகருக்கு நிறைய அனுபவங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் கேட்கக் கேட்க பாரதிக்குத் தான் பாதிக் கிணறு கூட இல்லையென்று தோன்றியது. எதிலும் பாதி கூட தாண்டவில்லை என்று சொல்வது தப்பு… நெருங்கக்கூட இல்லை என்று தோன்றியது.

பாட்டில் குறையக் குறைய பாரதி தடுமாற ஆரம்பித்தான். அவன் மனதில் மருத்துவமனை வந்தது. இரத்தம் ஏற்றிக்கொண்டிருக்கும்போது சேகர் வந்து போனது நினைவுக்கு வந்தது. அப்புறம் வராமற்போனது நெஞ்சைச் சுட்டது. எதிரேயிருந்த கோக் இரத்த பாட்டிலாகத் தெரிந்தது.

‘ஏன்டா… அப்புடிச் செஞ்ச?’, என்று கேட்டான். தலையைச் சாய்த்தபடி பாதிக் கண்ணை மூடியபடி, உதடுகளில் குரூரம் தெரிய கேட்டான்.

சேகருக்கு மரியாதைக் குறைவது தெரிந்தாலும், ‘சரி தண்ணி’ என்று நினைத்தபடி ‘என்னிக்கு?’, என்று கேட்டான்.

’வூடு இடிச்ச அன்னிக்கு… நான் இடுப்புல அடிபட்டு கெடந்த அன்னிக்கு… எனக்கு ரெத்தம் ஏத்துன அன்னிக்கு..?’ சற்றே நிதானித்த பாரதி, ‘கொஞ்சம் மாறியிருந்தா… நான் பொட்டையாயிருப்பனாம்… டாக்டரு சொன்னாரு… ஏன்.. அப்புடி செஞ்ச?’

‘இல்லடா… அன்னிக்கு நா ரொம்ப கஷ்டத்துல இருந்தேன்.. போலீசு கேசாயிடுச்சி… கேச சரிகட்ட பத்து ரூபா ஸ்டேஷன் செலவு.. அப்புறம் ஆளுங்க கட்சிக்காரனுங்க செலவுத் தனி… சம்பாதிச்சதெல்லாம் போயிடுச்சி… ஒனக்கு செய்ய முடியலன்னு வருத்தந்தான்..’, என்று சொன்னான். அவன் கண்ணில் உண்மையிருந்தது.

அது சரி… காசில்லாட்டுனா என்னா? வந்து பாக்கலாம்ல.. பாரதியின் குரல் பார்காரனைத் திரும்ப வைத்தது. அவருக்குப் புரிந்துவிட்டது. இனி அடிதடிதான்.

‘தம்பிங்களா.. பொறப்படுங்க… மணி பத்தத் தாண்டுது’, என்று வந்து நின்றார், தாடி நரைத்த அந்த பார்காரர்.

‘போவோம்ல, என்னாத்துக்கு வெரட்டுற? நாங்க நாயிங்களா?’, என்று பாரதி எழுந்திருக்க முயன்று தடுமாற, சேகருக்குத் திடுக்கென்றிருந்தது. அளவு தாண்டிவிட்டோமோ என்று யோசித்தபடியே பாட்டிலைப் பார்த்தான். காலியாகியிருந்தது. எப்படி? பாரதி எடுத்து ஊற்றிக்கொண்டானோ.? சரி.. வில்லங்கம்தான் என்று நினைத்தபடி, ‘வாடா.. போவலாம், என்று பாரதியின் கையைப் பிடித்தான்.

‘வுடு சேவுரு… அன்னிக்கு கைவிட்டுட்டு போனல்ல… அப்புறம் எதுக்கு கையப் புடிக்கிற..? என்றபடி பாரதி எழுந்தான்.

‘இல்லடா.. நானு அன்னிக்கு.. சரி வா..’, என்றபடி பாரதியின் தோள் மீது கைபோட்டான். தள்ளியபடி, அணைத்தபடி நடந்தான்.

பார் வாசலில் நின்றுகொண்ட பாரதி, தனக்கு சிகெரெட் வேண்டும் என்று அடம்பிடித்தான். மின்சாரம் இன்னும் வரவில்லை. அந்த சாலையில் எந்த நடமாட்டமும் இல்லை. பெட்டிக் கடைக்காரன் கடையை மூடிக் கொண்டிருந்தான்.

‘இரு வாங்கியாரேன்’, என்று சேகர் விலகி பெட்டிக் கடையை நோக்கி நடக்க, பாரதி நேரே சேகரின் பைக்கருகே சென்றான்.

‘மயிரு.. நானு நட நடன்னு நடக்க இவனுக்கு பைக்கு… … மவுனுக்கு, அன்னிக்கு மதுரை ஆசுபத்திரிக்கு வர பைக் இருந்திச்சு கொடுக்க காசில்லாம போயிடுச்சா..?’ என்றபடி பைக்கை எட்டி உதைத்தான். சைடு ஸ்டேண்ட் போட்டிருந்த பைக் அப்படியே தரையில் சாய்ந்தது.

பெட்டிக்கடைக்குச் சென்றிருந்த சேகர் பாதியிலே ஒடி வந்தான்.. ‘டேய் பாவி.. என்னாடா செய்யிற?’

‘ஒனக்கு என்னோட ஆசுபத்திரிய செலவைப் பார்க்க பணமில்ல.. அப்புறம் எதுக்கு பைக்கு?’, என்று கேட்டவன் மனதுக்குள் ‘இருடி… ஒனக்கு வைச்சிருக்கேன்’ என்று சொல்லிக் கொண்டான்.

‘சரி மாமு.. மன்னிச்சிக்க.. வா போவலாம்’.

‘என்ன மன்னிச்சிக்க?’, என்று பாரதி சேகரை நெட்டித் தள்ளினான். பைக் மீது சரிந்த சேகர் சுற்றியும் பார்த்தபடி எழுந்தான். யாரும் இல்லை.

‘சரிடா… தப்புத்தான் உட்டுடு..’

‘எப்புடி உடுறது? அன்னிக்கு எனக்கு உயிர் நாடியில அடிபட்டிருந்தா.. நானு பொட்டயாயிருப்பன்ல.. இன்னிக்கு எனக்கு கல்யாணமும் இல்ல கருமாதியும் இல்ல.. ஒனக்குக் கல்யாணமா?’

சேகருக்கு கோபம் தலைக்கேறியது. உழைத்துக் கனத்த கையால் ஒரு அறைவிட்டான். அப்படியே சரிந்த பாரதிக்கப் புரிந்துவிட்டது. இவனை அடிக்க முடியாது. இந்த உடைந்த கையை வைத்துக்கொண்டு அடிக்க முடியாது.

அப்படியே உட்கார்ந்து கொண்டான். ‘நானு எல்லாத்துலயும் பாதிடா… சேவுரு. அடிடா சேவுரு அடி. ஆம்பளன்னா அடி… அத்தனைப் பொட்டச்சி கதை சொன்னல்ல.. ஆம்பளன்னா அடிடா.. நீ பொட்டபபய இல்லாட்னா அடிடா’

சேகருக்குத் தலையில் இரத்தம் ஏறியது. அடித்த சரக்கெல்லாம் இறங்கி விட்டதுபோலத் தோன்றியது. சுற்றி முற்றி பார்த்தான். பைக்கிலிருந்து விழுந்திருந்த மட்டக் கம்பு கண்ணில்பட்டது. நான்கு பக்கமும் மட்டம் செய்யப்பட்டு தரையை மெழுகி மட்டமாக்கும் கம்பு. விளிம்புகள் எல்லாம் கூர்மையான ஆறு அடி நீள புத்தம் புதிய மட்டக் கம்பு.

ஓடிச் சென்று மட்டகம்பை எடுத்த சேகர் அப்படியே ஓங்க பாரதியின் நடு மண்டையில் இறக்கினான். தடுக்க முயன்ற பாரதியின் கையில் விழுந்தது. அப்படியே சுருண்டு பாரதி வலியில் துடிக்க அடுத்த அடி பாரதியின் உச்சந்தலையில் இறங்கியது.

பாரதிக்குத் தன் தலைக்குள் வெளிச்சம் தெரிந்தது. தலையை இரத்தம் நனைப்பது தெரிந்தது. வெளிச்சம் பெரிதாகி அப்புறம் இருண்டது.

சேகர் மட்டக்கம்பை கையில் வைத்தபடி அதிர்ந்து நின்றிருக்க பாரதி, அடிபட்ட நாய் போல… தரையில் சரிந்தான்.

அப்புறம் அவன் எழுந்திருக்கவில்லை.

– டிசம்பர் 2012

Print Friendly, PDF & Email

1 thought on “டாஸ்மாக் நாடெனும் போதினிலே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *