ஜோஸலினின் உருமாற்றம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 21,171 
 

அமெரிக்காவில் ஹார்ட்ஃபோர்ட் நகர மையத்தில் இருக்கும் கேப்பிடல் டவர்ஸ் அப்பார்ட்மெண்ட்டில் குடியேறியபோதுதான் ஜோஸலினைப் பார்த்தேன். பார்த்தவுடனேயே அவளைப் போன்ற அழகி உலகில் இருக்க முடியாது என்ற நிச்சயம் ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக அவள் உதடுகள். அவளை முத்தமிடக் கொடுத்துவைத்தவன் அதிர்ஷ்டசாலி. மெல்லிய புன்னகையுடன் அப்பார்ட்மெண்டை எனக்கு வாடகைக்குத் தருவதில் உள்ள சிக்கல்களை எடுத்துச் சொன்னாள்.

நான் அமெரிக்கா வந்து ஒரு மாதமே ஆகியிருந்தது.

இந்தக் கட்டட வாசலில் கீழிறங்கிப் போகும் அசைலம் அவென்யுவில் இரண்டு ப்ளாக்குகள் தொலைவில் இருக்கும் ரமடா இன் என்னும் பாடாவதியான ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தேன். என் அலுவலகம் ஹார்ட்ஃபோர்ட் நகரிலிருந்து அரை மணித் தொலைவில் வெஸ்ட்பரி என்னும் புறநகர்ப் பகுதியில் இருந்தது. ஹார்ட்போர்ட் நகர மையத்திலிருந்து வெஸ்ட்பரி போகக் கேப்பிடல் டவர்ஸ் அப்பார்ட்மெண்டின் வாசலுக்கு எதிர்ப் பக்கமாய் இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்குத்தான் தினமும் வர வேண்டும்.

பகல் நேரத்திலும் இருட்டாய் இருக்கும் காரிடார்கள் நிறைந்த ரமடா இன் ஹோட்டல் என்னுடைய தூக்கத்திற்கு எதிரியாய் இருந்தது. இரவில் அறைகளிலிருந்து என்னென்னவோ சத்தமெல்லாம் கேட்கும். எனக்கு மின்விசிறியில்லாமல் தூங்க முடியாது. காற்று வராவிட்டாலும் வெறும் சத்தமாவது வர வேண்டும். ஹார்ட்ஃபோர்ட் நகர வீதிகள் சாயந்திரம் ஐந்தாறு மணிக்குப் பிறகு பேய்கள் மட்டுமே உலாவும் ஆளரவமற்ற வீதிகளாக மாறிவிடும். தெருவில் போகும் கார்கள்கூடப் பொழுது சாய்ந்ததும் இஞ்சின் ஓசையைச் சற்றேனும் குறைத்துக்கொள்ளும். எனக்கோ இந்தியத் தெருக்களின் ஓசைக்கு நடுவில் தூங்கியே பழக்கம். குறைந்தபட்சம் தெரு நாய்களின் நீண்ட குறைப்பாவது தாலாட்ட வேண்டும். கூடவே சீறும் ஆட்டோக்களும் தடதடக்கும் மோட்டார்சைக்கிள்களும் இருந்தால் கண்கள் ஆழ்ந்து சொருகிக்கொள்ளும்.

இங்கே கண்ணில்பட்ட நாய்கள் அன்னியர்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொண்டன. இரவில் முடிவில்லாது விரியும் அமைதியை அவ்வப்போது உடைப்பது மற்ற அறைகளிலிருந்து கேட்கும் ஓசைக் கீறல்கள். கட்டிலில் முனகுவது, யாரோ நடக்க மரத்தாலான தரை அதிருவது, எதோ ஒன்று சுவரில் விட்டு விட்டு மோதுவது, கதவுகள் மூடிக்கொள்ளுவது. இந்த மாதிரி ஓசைகளுக்கு நடுவே நான். ஓசை ஒரே மாதிரியாய்த் தொடர்ந்து வந்தாலும் பரவாயில்லை. ஒரு கணத்தில் வெடிக்கும் ஓசையில் பதற்றமுற்று நான் விழிக்க உடனே பாறாங்கல்லைப் போல அமைதி என்மீது விழும். இதயம் வெகுவேகமாகத் துடிக்கும். எனக்குத் தூக்கம் வர வெகுநேரமாகும். இடைவெளி விட்டு எழும் ஒவ்வோர் ஓசையிலும் தூக்கம் என்னிடமிருந்து ஒரு காலடி பின்னால் போகும்.

ஹோட்டல்காரியிடம் (அவள் பெயர் ஜீனா. என் தாத்தாவுடைய தொந்தியைவிடப் பெரியதாய் நான் அதுவரையில் பார்த்ததில்லை. அவளுடைய உடலில் அதுபோல இரண்டு மடங்கு இருந்தது) மின்விசிறி கிடைக்குமா என்று கேட்டபோது வினோதமான ஜந்துவைப் பார்ப்பதுபோல என்னைப் பார்த்தாள். எல்லோரும் வெளியே வீசும் காற்றுக்கு எதிராகத் தடிமனான கோட்டுகளை அணியத் தொடங்கியிருந்தார்கள். நான் மின்விசிறி கேட்டேன்.

இதுபோலத் தாறுமாறாக என்னவோ ஆகியிருக்கிறது எனக்கு. வந்த புதிதில் முதல்முறையாக ஹார்ட் போர்ட்டில் உணவு விடுதி ஒன்றுக்குள் நுழைந்து நேரே சென்று காலியாய் இருந்த ஒரு டேபிளைத் தேர்ந்தெடுத்து அமர்ந்துகொண்டேன். அந்த உணவு விடுதி ஈ ஓட்டிக்கொண்டிருந்தது. என்னைத் தவிர இன்னும் இரண்டு அல்லது மூன்று பேர் இருந்தால் அதிகம். ஆனால் என்னிடம் சர்வர் யாரும் வரவில்லை. கொஞ்சநேரம் பொறுத்துவிட்டு எழுந்து, சாப்பிட என்ன இருக்கிறதெனப் பணியாள் ஒருவனைக் கேட்டேன். அவன் என்னை ஒருமாதிரியாகப் பார்த்துவிட்டு உணவு விடுதியின் முன்பக்கத்தைக் காட்டினான். ஒரு பெண் என்னையே விசித்திரமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவள் நின்ற இடத்துக்கு எதிரே இருந்த உயரமான சிறு மேஜைமேல் பல மெனுகார்டுகள் இருந்ததை அவளருகில் போனபோது பார்த்தேன். மெனு வேண்டும் என்று கேட்டேன். அவள் ‘எத்தனை பேர்?’ என்று கேட்டாள். எத்தனை பேரா! நான் சுற்றிப் பார்த்தேன். என்னைத் தவிர வேறு யாருமே இல்லை. ‘வேறு யாருமே இல்லையே’ என்றேன். அவள் இன்னும் வினோதமாகப் பார்த்தாள். ‘என்னுடன் வா’ என்று அழைத்துச் சென்று நான் அமர்ந்திருந்த இடத்தின் பக்கத்தில் வேறு ஒரு டேபிளில் கையில் வைத்திருந்த மெனுகார்டைப் போட்டாள். அங்கேயிருந்த ஒரேயொரு நாற்காலியைப் பின்னால் இழுத்து விசித்திரமாகப் பார்த்துக்கொண்டே போனாள். அதற்குப் பிறகே முன்னால் பார்த்த பணியாள், என்னிடம் ஆர்டர் எடுக்க வந்தான். நான் முன்பு அமர்ந்திருந்தது நான்கு பேர் சாப்பிடக்கூடிய இடத்தில் என்று அப்புறம்தான் எனக்குப் புரிந்தது.

அன்றிலிருந்தே என்னை விசித்திரமாகப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு வந்தது.

இன்னொரு நாள் பர்கர் கிங் உணவு விடுதியில் சீஸ் பர்கரை ஆர்டர் செய்தேன். பன்னைக் கடித்தபோது நடுவில் கறுப்பாய் வடைபோல ஒன்று இருப்பதைப் பார்த்தேன். சீஸ் ஏன் கறுப்பாக இருக்கிறது என்று கேஷியரைக் கேட்டபோது (பர்கர் கிங்கில் சர்வர்கள் கிடையாது) அவளும் ஒருமாதிரியாகத்தான் பார்த்தாள்.

ஒரு வழியாகக் கேப்பிடல் டவர்ஸ் அப்பார்ட்மெண்டில் வாடகைக்குப் போகலாம் எனத் தீர்மானித்ததற்கு முக்கியக் காரணம் அலுவலகப் பேருந்து அங்கேயிருந்து புறப்படுவது தான்.

ரமடா இன் ஹோட்டலிலிருந்து கேப்பிடல் டவர்ஸ்வரை தினமும் நடந்து சென்று பேருந்தில் ஏற வேண்டியிருக்கிறது.

ஜோஸலினின் கீழ் உதட்டையே பார்த்துக்கொண்டிருந்தேன். சில பூக்களின் இதழ் விளிம்பில் இருக்கும் சுருள்போல லேசாக மடியும் அவளுடைய உதட்டை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் எனக்கு ஏன் வீட்டை வாடகைக்கு விட முடியாது என்று சொல்ல ஆரம்பித்தாள். எனக்கு அமெரிக்காவில் credit history என்ற ‘கடன் வரலாறு’ மிகக் குறைவாகவே இருக்கிறதாம். இதுவரை எந்த வங்கியும் எனக்குக் குறிப்பிடத்தக்கக் கடனை அளித்ததும் இல்லை அல்லது கடனைத் திருப்பிக் கட்டிய வரலாறும் என்னுடைய social security number இல் பதிவாகவில்லை. நான் அவளுக்கு எத்தனை வயதிருக்கலாம் என்று உத்தேசமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். மலர்ந்த பூவைப் போன்ற உதடுகளில் புன்னகை ஒளிர அவள் எனக்கு ஏமாற்றமான முடிவைச் சொன்னாள்.

அன்று இரவு வழக்கம்போல ஏகப்பட்ட சப்தம் விட்டுவிட்டுக் கேட்டது. யாரோ ஒருவனின் கழிப்பறையில் நீர் வேகத்துடன் பீறியபோது என்னைச் சூழ்ந்திருந்த மௌனம் கண்ணாடியாய் உடைந்து சிதறியது. பிறகு சில கணங்களில் உடைந்த ஒவ்வொரு சில்லும் ஒட்டுமொத்தமாக ஒட்டிக்கொண்டது. அடுத்ததாகத் தெருவில் ‘வீல் வீல்’ எனக் கத்தியவாறு கடந்த போலீஸ் வண்டியின் சைரனால் மீண்டும் இரவின் மௌனம் உடைந்து சிதறியது. சிதறிய மௌனத்தின் ஒவ்வொரு கூர்த்துண்டும் என் தூக்கத்தை ஓங்கித் தாக்கியது. தூக்கம் வராமல் ஜோஸலின் இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள் என யோசிக்க ஆரம்பித்தேன்.

அவள் கல்யாணமானவளாகத் தெரியவில்லை. விரல்களில் மோதிரத்தைக் காணோம். கணவன் இல்லாவிட்டால் என்ன இத்தனை அழகான பெண்ணுக்கு வேறு துணை இதற்குள் கிடைக்காமலா போயிருக்கும்! ஒருவேளை யாருமே அவளுக்கு இல்லையென்றால் . . . ? இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ஒரு பிரயோசனமும் இல்லை. இந்தப் பாழாய்ப்போன கடன் இல்லாத பிரச்சினையால் வாடகைக்கு வீடு கிடைக்காமல் போயிற்றே.

இரவில் தூக்கம் வராமல் யோசனை எங்கெங்கோ இழுத்துச் சென்றது.

அலுவலகத்தில் பிரமோத்வாலியா எனக்கு ஒரு யோசனை சொன்னான். யாராவது ஒருவர் வாடகை ஒப்பந்தத்தில் எனக்காக உத்திரவாதக் கையெழுத்துப் போட்டால் எளிதாக வாடகை வீடு கிடைக்கும் என்றான்.

‘நீ வந்து எனக்கு உத்திரவாதம் தருகிறாயா?’ எனத் தூக்கக் கலக்கத்துடன் கேட்டேன். அவனும் ஒரு மாதிரியாகப் பார்த்தான். எனக்கே வேறு ஒருத்தன் போட வேண்டியிருந்தது என்றான். பிரமோத் இரண்டு மாதங்களுக்கு முன்னால் தான் அமெரிக்கா வந்திருந்தான். மூன்று வாரங்களுக்கு முன்னால் தான் அலுவலகத்திற்குப் பக்கத்திலேயே ஓர் இடத்தில் வாடகைக்குப் போனானாம்.

‘உனக்கு யார் கையெழுத்துப் போட்டார்கள்?’ என்று கேட்டேன். ‘நிக்சன் எட்வர்ட்’ என்றான். நிக்சன் எட்வர்ட் கேரளாக்காரர். பல வருடங்களாக அமெரிக்காவில் வசிப்பவர். எங்கள் அலுவலகத்தில் தான் பணிபுரிகிறார். அவர் கைவிரித்துவிட்டார். ‘நான் ஏற்கெனவே பிரமோத்திற்குக் கையெழுத்துப் போட்டாயிற்று. இன்னொரு முறை என் உத்திரவாதத்தை வேறிடத்தில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’ என்றார். சிறிய யோசனைக்குப் பிறகு, ‘சாமுவேல் டிஹெட்டைக் கேளேன்’ என்றார்.

சாம் டிஹெட் என்னுடைய அமெரிக்க மேலதிகாரி. தினமும் குறைந்தபட்சம் நூறு வரிகளாவது கம்ப்யூட்டர் புரொக்ராம் எழுதியிருக்க வேண்டுமென எதிர்பார்ப்பவன். அலுவலகத்தை விட்டுக் கிளம்பும் முன்பு அவனுக்கு ஈமெயிலில் எத்தனை வரிகள் எழுதியிருக்கிறேன் எனத் தினமும் தெரிவிக்க வேண்டும். ஏதாவது சிக்கலான முடிச்சில் வேலை மாட்டிக்கொண்டு நின்று விட்டால் உடனே தேடிக்கொண்டு வந்துவிடுவான்.

‘ஏன் நீ நேற்று ஒன்றுமே செய்யவில்லை? எட்டு மணி நேரத்திற்குப் பதிலாக மூன்று மணி நேர அளவிற்கே வேலைசெய்திருக்கிறாய். உன்னுடைய இந்த வார வேலை நேரப் பதிவேட்டில் ஐந்து மணி நேரத்தைக் குறைத்துவிடுவேன்’ என்பான்.

இந்தியாவிலிருந்து என்னை இங்கே வேலைக்கு அமர்த்தியிருக்கும் கன்சல்டிங் கம்பெனிக்கு இதனால் என்னால் வரக்கூடிய வருமானம் குறையும். அப்பேர்ப்பட்ட ஆளிடமா கேட்பது? சாமுக்குக் கீழே வேலை செய்யும் ஆட்கள் அவனுடைய குடும்பப் பெயரான டிஹெட்டை டிக்ஹெட் (dickhead) என்று இழிச் சொல்லாய் மாற்றி அவனைப் பற்றிப் பேசும்போது உபயோகித்தார்கள்.

ஆனால் ஜோஸலினின் முகம் மீண்டும் மீண்டும் மனத்தில் தோன்றி என்னை அலைக்கழித்தது. ஒரு வழியாகத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சாம் டிஹெட்டிடம் போய்க் கேட்டேன்.

‘ஹார்ட்ஃபோர்ட் டௌண்டவுனிலா வாடகைக்குப் பார்த்திருக்கிறாய்?’ என்று ஆச்சர்யத்துடன் கேட்டான். இங்கே உள்ளவர்கள் நகர மையங்களில் வசிக்க விரும்புவதில்லை. புறநகர்ப் பகுதிகளையே நாங்கள் பெரிதும் விரும்புகிறோம். நகரில் குற்றங்கள் அதிகமாக இருக்கும். உனக்குத் தெரியாதா?’ என்றான்.

ஆனால் ஜோஸலின் இருக்கிறாளே எனப் பதில்சொல்ல நினைத்தேன். வெள்ளை அமெரிக்கர்கள் (இந்தியர்களும் இதில் உட்பட) ஏன் ஹார்ட்ஃபோர்ட் நகர மையத்தில் வசிக்க விரும்புவதில்லை என்பது யாரோ சொல்லிப் பிறகு தெரிய வந்தது. அங்கே கறுப்பர்கள் அதிகம். நகர மையத்தில் இருக்கும் லிக்கர் கடைகளின் வாசலில் கறுப்பர்கள் காக்கிநிறக் காகிதப் பைகளுக்குள்ளே பாட்டிலை மறைவாக வைத்துக் குடிப்பதை அலுவலகப் பேருந்தின் பாதுகாப்புக்குள் இருந்தபடி பார்த்திருக்கிறேன்.

சாம் எனக்கு உத்திரவாதக் கையெழுத்துப் போடுவான் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. அன்று மதியமே உணவு இடை வேளையில் தன் லெக்ஸஸ் காரில் என்னை ஹார்ட்ஃபோர்ட் நகருக்குக் கூட்டிச்சென்றான். போகும் வழியெல்லாம் எதுவும் பேசாமல் மௌனமாகவே வந்தான். அந்தக் கார் ஒரு கனவுபோலச் சாலையில் மிதந்தது. இது நிஜமாக இருக்க சாத்தியமேயில்லை என்று எண்ணினேன்.

ஜோஸலினுடன் சிரித்துப் பேசி எல்லா விண்ணப்பப் பத்திரங்களிலும் எனக்காக உத்திரவாதக் கையெழுத்துப் போட்டுவிட்டுக் கையோடு என்னை அலுவலகத்துக்குக் கூட்டி வந்துவிட்டான். எனக்கு அவன்மீது அன்பு பொங்கி வந்தது. இந்தப் பாடாவதியான ஊருக்கு என்னை வேலைக்கு அனுப்பிவைத்த என் கம்பெனி செய்ய வேண்டிய விஷயம் இது. என்னுடைய புரொக்ராமை வரிக்கு வரி விடாமல் படிக்கும் டிக்ஹெட் செய்கிறான். ச்சீ அவனை இனி மரியாதையில்லாமல் டிக் ஹெட் எனச் சொல்லக் கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.

காரில் வரும்போது ‘மிகவும் சுவாரசியமான பெண்!’ என்று மட்டும் ஜோஸலினைப் பற்றிச் சொன்னான் சாம். எனக்கு அவன்மீது உண்டாகியிருந்த அன்பு உடனே சற்றுக் குறைந்து சந்தேகம் வந்தது. அவன் கைவிரல்களிலும் மோதிரம் இல்லை.

அலுவலகம் வந்தவுடன் இன்று ஒரு மணிநேரம் கூடுதலாக வேலை செய்து ஈடுசெய்துவிடு என்றான். மதிய உணவு இடைவேளையின் போதும் சாப்பிட்டுக்கொண்டே புரொக்ராம் எழுதுவதுதான் வழக்கம். அது வீணாகிவிட்டதல்லவா!

மறுநாளே நான் ரமடா இன் ஹோட்டல் அறையைக் காலிசெய்து விட்டு என் புது அப்பார்ட்மெண்ட்டுக்குக் குடிபோனேன். ஹோட்டல் ரிசப்ஷனில் ஜீனா என்னை வருத்தத்துடன் பார்த்து வழியனுப்பிவைத்தாள். அவளுடைய தொந்தியைக் கடைசிமுறையாகப் பார்த்து விடைபெற்றேன்.

கேப்பிடல் டவர்ஸ் பதினைந்து மாடிகளைக் கொண்டது. ஆனால் எலிவேட்டர் பொத்தான்கள் பதினாறு மாடிகள் இருப்பதாய்க் காட்டின. என்னுடைய வீடு பதினான்காம் மாடியில். ஜோஸலின் வீட்டுச் சாவி கொடுத்தபோது ஒரு சிரிப்புடன் சொன்னாள்.

‘பதினான்காம் மாடி என்றாலும் உன் வீடு பதிமூன்றாம் மாடியில் தான் இருக்கிறது.’

‘அமெரிக்காவில் என்னுடைய தொடக்கமே துரதிர்ஷ்டமாக இருக்கிறது’ என்றேன்.

அவளுடைய சிரிப்பு இன்னமும் அதிகமானது. அவளுடைய வெண்மையான கன்னங்கள் சிரிப்பில் சிவந்ததைப் பார்த்தபடி நின்றேன்.

‘கவலை வேண்டாம். நானும் இரு வருடங்களாக அதே மாடியில்தான் வசித்துவருகிறேன். என்னைப் பார். நன்றாகத்தானே இருக்கிறேன்!’ என்றாள்.

கிடைத்த வாய்ப்பை விடக் கூடாது என அவளை நன்றாக உற்றுப் பார்த்தேன். என் உடம்பு ஒரு கணம் நடுங்கியது.

‘Yes, you look fine!’ என்றேன் வெட்கத்துடன்.

எலிவேட்டரில் என்னுடைய மாடிக்குப் போனபோது என் அதிர்ஷ்டத்தை என்னாலேயே நம்ப முடியவில்லை. ஜோஸலின் வேலை செய்யும் அப்பார்ட்மெண்டில் குடிபோனாலும் அவளை அடிக்கடி பார்க்கவா முடியும்? நான் வேலைக்குச் செல்வது ஏழு மணிப் பேருந்தில். அப்போது அப்பார்ட்மெண்ட் அலுவலகம் திறந்திருக்காது. திரும்புவது மாலை ஆறு மணிக்கு. அப்போதும் திறந்திருக்காது. அப்படியென்றால் ஒரு பெரிய அழகி சில மணிநேரம் செலவிடும் இடத்தில் வேறொரு மூலையில் நானும் இருக்கிறேன் என்று அற்பச் சந்தோஷம் மட்டுமே மீதமாகப்போகிறது என்று இங்கே குடிபோக எடுத்திருந்த முடிவு சரிதானா என்றெல்லாம் என்னையே கேள்வி கேட்டபடி இருந்தேன். ‘சாம் டௌண்டவுனிலா இருக்கப் போகிறாய்?’ என்று வேறு கேட்டான். பிரமோத் வாலியாவும் ‘நீ இங்கே வெஸ்ட்பரியில் இருக்கலாமே? நடக்கும் தூரத்தில்தானே அலுவலகம் இருக்கிறது’ என்றான். அவன் மனைவி இரண்டு மாதக் கைக்குழந்தையுடன் வீட்டில் இருக்கிறாள்.

புறநகர்ப் பகுதியான வெஸ்ட்பரியில் பஸ் வசதி கிடையாது. நடக்கும் தூரத்தில் கடைகள் எவையும் கிடையாது. யாரையாவது கெஞ்சிக் காரில் ஓசி ட்ரிப் அடித்தால்தான் உண்டு. கடைகளுக்குப் போகவும் அலுவலகம் வரவும் ஹார்ட்ஃபோர்ட் நகருக்குள் பஸ் வசதி உண்டு. இதை யெல்லாம் நான் அவனுக்கு எடுத்துச் சொன்னாலும் உள்ளுக்குள் எல்லாம் பொய் என்று எதோ ஒன்றின் குரல் கேட்டது. கைக்குழந்தையை வைத்துக்கொண்டு வெஸ்ட்பரியில் அவன் சமாளிக்கவில்லையா என்ன? தனி ஆளான எனக்கு என்ன அப்படிப் பெரிய சிரமம் ஏற்படப் போகிறது?

ஆனால் ஜோஸலின்!

என்னுடைய மாடியிலேயே அவள் வீடு என்றால் அவளைச் சந்திக்கப் பல வாய்ப்புகள் வரலாம். எலிவேட்டருக்காகக் காத்திருக்கும்போது, எலிவேட்டருக்குள், காரிடாரில், தற்செயலாக எதிரே வரலாம் போகலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் என்ன பேசுவது என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன்.

என்னுடைய மாடியில் ரமடா இன் ஹோட்டல்போலவே நீளமான காரிடார், அதன் இருபக்கமும் அப்பார்ட்மெண்ட்டுகள். 1411, 1412, 1413 . . . என்று வீட்டு எண்கள் பொறித்திருக்கும் கதவுகள் இருபக்கமும் மாறி மாறிப் போகின்றன. இதில் அவளுடைய எண் எதுவாக இருக்கும்? என் வீட்டு எண் 1421. அவளிடம் கேட்டிருக்கலாமோ? அவள் வீட்டில் அவள் மட்டும் தனியாகவா இருக்கிறாள்? பெற்றோர், அண்ணன்மார்? Boyfriend?

வீடு ஹால், பெட் ரூம், கிச்சன், பாத்ரூம் என. ஹால் முடியும் இடத்தில் இருக்கும் கண்ணாடிக் கதவுக்கு அப்பால் ஒரு சிறிய பால்கனி இருந்தது. ஆனால் அந்தப் பால்கனியால் எந்தப் பிரயோசனமும் இல்லை. அதன் கதவைத் திறக்கவே முடியவில்லை. உடனே கீழ் தளத்தில் இருக்கும் அப்பார்ட்மெண்ட் அலுவலகத்துக்கு விரைந்தேன்.

ஜோஸலின் அப்போது மலர்ந்த பூவாய்ச் சிரித்தாள்.

‘பால்கனிக்குக் கீழே என்ன இருக்கிறது தெரியுமா? போய்ப் பார். உனக்கே தெரியும்.’

அப்போதுதான் எனக்குத் தோன்றியது. இந்தக் கட்டடத்திற்கு பின்புறம் நெடுஞ்சாலை ஒன்று சரிந்து இறங்கி மேலெழும்புகிறது.

‘ஓ மி 84 நெடுஞ்சாலை இருப்பதால்தானே? பால்கனியைப் பார்த்தவுடன் ஆசைப்பட்டு யோசிக்காமல் . . .

‘பால்கனி இருந்து எந்தப் பிரயோசனமும் கிடையாது. பால்கனிக் கதவைத் திறக்கும்படி வைத்தால் எங்கள் கம்பெனியுடைய insurance premium பயங்கரமாக ஏறிவிடும். பிறகு இவ்வளவு குறைந்த வாடகையில் உனக்கு வீடு கொடுக்க முடியுமா?’

கிண்டல்!

அவளுடைய மேஜைக்குப் பக்கத்தில் காப்பி மேக்கர் இருந்தது. அதைக் கைகாட்டி ‘காப்பி எடுத்துக்கொள்’ என்றாள். நான் அவள் பக்கத்தில் இருக்கும் நேரத்தை அதிகப்படுத்துவதற்காகக் காப்பியைக் காகிதக் கோப்பையில் அவசரப்படாமல் நிதானமாக ஊற்றினேன். சக்கரைப் பொட்டலங்களைக் கிழித்துச் சக்கரையைக் கோப்பைக்குள் கொட்டினேன். பக்கத்தில் பால் இல்லை. பால் பௌடர்தான் இருந்தது. ‘பால் இல்லையா?’ என்று கேட்டேன்.

‘அடடா இங்கே cappucino வோ latte வோ கிடைக்காதே . . . வெறும் கடுங்காப்பி தான் கிடைக்கும். மன்னித்துக்கொள். இது சாதாரண அலுவலகம் மட்டுமே. என் வீடு அல்ல!’

மீண்டும் கிண்டலான சிரிப்பு.

கூப்பிட்டால் அவசியம் வருவேன் எனச் சொல்ல நினைத்தேன். சிரித்து வார்த்தைகளை விழுங்கிக்கொண்டேன்.

‘பால் பௌடரில் ஒரு வாசனை இருக்கிறது. அது எனக்குப் பிடிக்காது’ என்றேன்.

மீண்டும் அழகிய சிரிப்புடன் மேஜைக்கு அடியில் இருந்த ஒரு குட்டிப் பிரிட்ஜைத் திறந்து ஒரு பால் கேனை எடுத்துக் கொடுத்தாள்.

அந்த வீட்டில் பால்கனிக் கதவைத் திறக்க முடியாதது பெரிய இழப்பாகத் தோன்றவில்லை. காரணம் வீட்டுக்குப் பின்னால் இருந்த நெடுஞ்சாலையிலிருந்து கடலோசைபோலச் சீராகப் போக்குவரத்துச் சத்தம் எப்போதும் கேட்டபடி இருந்தது. இரவில் நிம்மதியாக என்னால் தூங்க முடிந்தது.

அடுத்த சில நாட்கள் என்னால் ஜோஸலினைப் பார்க்க முடியவில்லை. அலுவலகப் பணியிலும் வீட்டுக்கு வேண்டிய சில அவசியப் பொருட்களை வாங்குவதிலும் நேரம் போயிற்று. அமெரிக்க வீட்டுக்குக் குடிபுகுவது முன்பின் பழக்கமில்லாததால் சில சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தது.

கிச்சனில், பாத்ரூமில் மட்டுமே விளக்கு எரிந்தது. ஹாலிலும் பெட்ரூமிலும் பொழுது சாய்ந்தால் கிச்சன் விளக்கு தரும் வெளிச்சம் மட்டுமே. ஹாலுக்கும் பெட் ரூமுக்கும் விளக்குகளை நானே வாங்கிப் பொருத்த வேண்டும்.

குளியல் தொட்டியில் நின்று ஷவரில் ஆனந்தமாகக் குளித்துவிட்டுக் காலை எடுத்து பாத்ரூம் தரையில் வைத்தவுடன் வழுக்கி விழுந்தேன். குளித்த வேகத்தில் ஷவர் நீர் பாத் ரூமின் வைனைல் தரையெங்கும் ஈரப்படுத்தியிருந்தது. இந்தக் குளியலறை ரமடா இன் ஹோட்டலில் இருந்ததைப் போல இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறதே என முதலில் தோன்றியிருந்தது. என்னவென்று இப்போதுதான் புரிந்தது. அங்கே ஷவர் உள்ளிருக்கும் குளியல் தொட்டிமீது கண்ணாடிக் கதவு இருந்தது. நீர்த்தெறிப்பைத் தடுப்பதற்காக. இங்கே குளியல் தொட்டிக்குள் ஷவர் இருந்தது. ஆனால் நீர்த் தடுப்பு ஒன்றுமே இல்லை. அப்போது குளியல் தொட்டிக்குள் படுத்துக்கொண்டு தான் குளிக்க வேண்டுமோ? ஷவரை உபயோகிக்க முடியாதோ? இந்த விஷயத்தை அடுத்தமுறை ஜோஸலினைப் பார்க்கும்போது கேட்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன். அடுத்தமுறை பார்க்கும்போது என்ன, அவளைப் பார்க்கவே இதை ஒரு சாக்காக வைத்துக்கொள்ளலாம் என மனம் திட்டம் போட்டது. ஆனால் அவள் இருக்கும் வீட்டு எண் தெரியாமல் ஒன்றுமே செய்ய முடியாது. சனிக்கிழமையன்று கீழே சென்று அலுவலகத்தில் அவளைச் சந்திக்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

சனிக்கிழமை விடிந்ததும் நான் முதல் காரியமாய்க் கீழே அப்பார்ட்மெண்ட் அலுவலகத்திற்குச் சென்றேன். ஜோஸலின் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள். ஆனால் அவள் வெகுநேரம் தொலைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். பேச்சின் இடையே அழகாகச் சிரித்தாள். கண்களை உருட்டித் தலையைப் பின்னால் சாய்த்துச் சிரித்தாள். கூந்தலைக் கோதிக்கொண்டு சிரித்தாள். பிறகு சில சமயம் தொலைபேசியின் வாயருகே கையைக் கொண்டுபோய் ரகசியமாகப் பேசிச் சிரித்தாள். அவள் சிரித்த அழகைப் பார்த்துக்கொண்டே நின்றேன். ஒரு கணத்தில் என்னைக் கவனித்தவள் சிரித்துக்கொண்டே கையாட்டினாள். கட்டை விரலை உயர்த்தி வீட்டில் எல்லாம் சரியாய் இருக்கிறதாவெனச் சைகையால் கேட்டாள். வளைந்துயர்ந்த விரலின் நளினத்தைப் பார்த்தபடி நின்றேன். பிறகு கட்டை விரலை உயர்த்திக் காட்டினேன். அதற்குள் இரண்டு மூன்றுமுறை அலுவலகம் பக்கம் எட்டிப்பார்த்தேன். அவள் அப்போதும் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருந்தாள். அவளைத் தொலைபேசியில் இப்படித் தொந்தரவு செய்யும் ஆள் யாரோ? எனக்கு எரிச்சலாக இருந்தது.

ஒரு நாள் நள்ளிரவு தாண்டியிருக்கும். நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த வேளையில் பெரும் ஓசை கேட்டது. ‘வீல் வீல்’ என்று காதுகள் கிழிந்துவிடும் போன்ற ஓசை. வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து அலங்கமலங்க விழித்தேன். மணி அதிகாலை இரண்டரை என்று கைக்கடிகாரம் காட்டியது. என்னவெனப் புரியாமல் வெளியே காரிடாரில் எட்டிப்பார்த்தால் எல்லாக் குடித்தனக்காரர்களும் வரிசையாகக் கீழே போய்க்கொண்டிருந்தார்கள். என்ன ஓசை என்று கிழவி ஒருத்தியைக் கேட்டேன்.

‘யார் வீட்டிலோ அடுப்பைச் சரியாக அணைக்காமல் விட்டிருப்பார்கள். புகையத் தொடங்கியிருக்கும். தீ அபாய மணி அடிக்கிறது. இனிமேல் தீயணைப்புப் படையினர் வந்து பார்க்கும்வரையில் நடுரோட்டில் குளிரில் அல்லல்பட வேண்டும்’ என்று அலுத்துக்கொண்டாள்.

அந்த இரவில் தீயின் சுடுநாக்குகளைக்கூடக் குளிருக்குக் கதகதப்பாய் ஏற்றுக்கொண்டிருக்கலாம் ஆனால் காதைக் கிழிக்கும் மணிச் சப்தத்தைச் சற்றும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அத்தனை குடித்தனக்காரர்களும் வாசலுக்கு வெளியே சாலையில் தான் நின்றார்கள். அமெரிக்காவில் நடுத்தெருவில் நின்றாயிற்று! எல்லோரும் தூக்கக் கலக்கத்துடன் படுக்கையில் அணிந்த ஆடைகளுடன் தலை கலைந்து ஒருவிதமான நிலை குலைந்த நிலையில்!

ஜோஸலினும் தீயணைப்புப் படையினர் வரும்வரையில் வெளியே காத்திருந்தாள். அவளும் படுக்கையிலிருந்து தூக்கம் தடைபட்டு எழுந்து வந்திருக்க வேண்டும். அந்தக் கோலத்திலும் அவளுடைய முகத்தின் பிரகாசம் கொஞ்சமும் தணிந்திருக்கவில்லை. அலங்காரமின்றி இருந்தாலும் இயல்பான மலர்ச்சியுடன் இருந்ததால்தான் என்னால் அந்தக் குளிர்பொழுதில் அபத்தமான நேரத்தில் வெளியே சாலையில் காத்திருக்க முடிந்தது.

என்னைப் பார்த்து வழக்கம்போல் ‘நீ ஒருவேளை முதல்முறையாகச் சமையல் செய்தாயோ?’ எனக் கிண்டலடித்தாள்.

பூதாகரமான ஆடை அணிந்து தீயணைப்புப் படையினர் வந்து இறங்கினார்கள். அவர்கள் வந்தவுடன் அவர்களுடன் சென்று கட்டடத்தின் அலார இணைப்புகளைக் காட்டுவது அவர்களுக்குத் தேவையான விவரங்களை அளிப்பது, நடுவில் வீட்டுக்குத் திரும்பலாமா என்று தொணதொணக்கும் குடித் தனக்காரர்களுக்குப் புன்னகையுடன் பொறுமையாகப் பதிலளிப்பது எனச் சுழன்றுகொண்டிருந்தவளைப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம் போலிருந்தது.

ஹார்ட்ஃபோர்டில் இவ்வளவு குளிர் கிளப்பும் காற்று வீசும் என்று நான் சற்றும் எதிர்பார்த்திருக்க வில்லை. செப்டம்பர்மாதம் சூரிய ஒளியும் மிதமான காற்றும் அற்புத மாய் இருந்தன. அக்டோபர் தொடங்கிச் சில நாட்களுக்குள்ளாகச் சூரியனுக்கு எதோ ஆகிவிட்டது. சூரியன் எப்போதாவது தலையைக் காட்டுகிறது. குளிர் காற்று வீசத் தொடங்கிவிட்டது. வெளிச்சமாய் இருக்கிறதே என்று வெளியே போனால் காற்றில் உடல் நடுங்கத் தொடங்குகிறது.

Wind Chill அதிகம் என்கிறார்கள். சூரியன் தரும் வெப்பத்தைக் காற்றில் ஏறியிருக்கும் குளிர் கபளீகரம் செய்துவிடுகிறது. நான் கொண்டுவந்திருந்த ஸ்வெட்டர், ஜாக்கெட் எல்லாம் பித்தளையாய் இளிக்கின்றன.

டி. வி. இல்லாமல் பொழுதைப் போக்குவது கடினமாகிக்கொண்டு வந்தது. ஒரு சிறிய டி. வியாவது வாங்குவோம் என ஒரு நாள் மாலை நேரம் பஸ் ஏறி சர்க்யூட் சிட்டிக் கடைக்குச் சென்றேன். கடையின் சுவர் முழுக்க டி. வி. திரைகள் நிரம்பியிருந்தன. எல்லாத் திரைகளிலும் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனும் பாப் டோலும் வரவிருந்த தேர்தலையொட்டி விவாதத்தில் பங்கேற்றுக்கொண்டிருந்ததைக் கடையில் எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பில் கிளின்டன் இரண்டாம்முறையாக அதிபராகப் போட்டியிடுகிறார்.

It is not midnight in America, Senator எனப் பாப் டோலைப் பார்த்துக் கிளிண்டன் சொல்லக் கடையில் சிலர் வலுவாகக் கைதட்டினார்கள்.

கிளிண்டனுக்கு இருக்கும் வசீகரம் டோலுக்கு இல்லை எனத் தோன்றியது. நான் ஓட்டுப் போட்டால் நிச்சயம் கிளின்டனுக்குத்தான். ஆனால் கிளின்டனுக்கு என்னால் ஒரு பிரயோசனமும் கிடையாது. என் ஓட்டு இந்தியாவில்தானே செல்லும். அதைக்கூட வேறு யாரோ போட்டுவிடுகிறார்கள். ஜோஸலின் யாருக்கு ஓட்டுப் போடுவாள்? அவளுடைய அழகான ஓட்டுக்கு தகுந்த வேட்பாளர் பில் கிளின்டன் மட்டுமே என்று நினைத்தேன்.

நான் தேர்ந்தெடுத்த டி. வியின் திரை அளவு 19 இன்ச்தான். RCA பிராண்ட். அதுதான் இருப்பதில் மிகவும் மலிவான விலையில் இருந்தது. கடையில் இருந்த ஜாம்பவான் டி. விகளுக்கு நடுவில் எலிபோலச் சின்னதாக இருந்தது. ஆனால் விற்பனையாள் என்னிடம் கொடுத்த அட்டைப்பெட்டியோ பெரிதாக இருந்தது. விற்பனையாள் கடையில் இருந்த தள்ளு வண்டியில் ஏற்றிக்கொடுத்தான். கடையின் அளவைவிட இருமடங்கு இருந்த கார் நிறுத்துமிடம் வழியாகச் சக்கர வண்டியைத் தள்ளிச் சென்றேன்.

பஸ் ஸ்டாப் வெளியே அல்லவா இருக்கிறது. சக்கர வண்டியை அங்கே தள்ளிக்கொண்டு செல்ல முடியுமா? காரில் கடைக்கு வந்தவர்கள், வெளியேறியவர்கள் எல்லோரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துக்கொண்டு போனார்கள். வண்டியைத் தள்ளிக்கொண்டு கடைக்கு வெளியே சாலைக்குப் போகிறானே எனப் பார்த்தார்கள். பஸ் ஸ்டாப்பில் என்னைத் தவிர வேறு யாருமில்லை. குளிர் காற்று விடாமல் அடித்தது. வந்த பஸ்ஸில் என்னைவிடப் பெரியதாக இருந்த டி. வி. பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஏறுவதற்குள் டிரைவர் பொறுமை இழந்து வெளியே இறங்கினார். ஒரு கணத்தில் பெட்டியைத் தூக்கிப் பஸ்ஸுக்குள் வைத்தார். என்னை முறைத்துப் பார்த்துவிட்டு ஏதும் பேசாமல் அவருடைய இடத்தில் அமர்ந்துகொண்டார். நன்றிகூடச் சொல்ல முடியாமல் எனக்கு மூச்சு வாங்கியது.

பஸ் ஸ்டாப்பிலிருந்து டி. வியைத் தூக்கிக்கொண்டு சாலையைக் கடந்தேன். கேப்பிடல் டவர்ஸ் கட்டடத்துக்குள் நுழைவது அடுத்த பிரச்சினையாகிவிட்டது. பெட்டியைக் கீழே வைத்துவிட்டுச் சாவியால் வெளிக் கதவைத் திறந்தேன். குனிந்து பெட்டியைத் தூக்குவதற்குள் கதவு மூடிக்கொண்டுவிட்டது. இதுபோல மூன்றுமுறை குனிந்து நிமிர்ந்து கதவுடனும் பெட்டியுடனும் சண்டை போட்டுக்கொண்டிருக்கையில் திடீரென்று கதவு வாயைப் பிளந்துகொண்டது.

ஜோஸலின் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு நின்றாள்.

நான் பெருமூச்சுடனும் வெட்கம் கலந்த சிரிப்புடனும் ‘நன்றி’ என்று அவள் முகத்தைப் பார்த்தேன்.

அவள் என் நன்றியை ஏற்றுக்கொள்வதுபோல லேசாகத் தலையை மட்டுமே அசைத்தாள்.

அவள் பொறுமையற்று அவசரத்துடன் இருந்தாள். நான் உள்ளே நுழைவதற்குள் அவள் பார்வை சாலைக்குப் போய்விட்டது. அவள் மிகவும் நேர்த்தியாக உடை அணிந்திருந்ததைக் கவனித்தேன். முதன் முறையாக அலுவலுகத்திற்கு வெளியே அவளைப் பார்த்தேன். நான் பெட்டியுடன் உள்ளே நுழைந்தவுடன், அவளை வெளியே தள்ளிச் சில்லென்ற காற்றுச் சீறலை மட்டும் இறுதியாக உள்வாங்கிக்கொண்டு கதவு மூடியது.

ஜோஸலின் கட்டடத்திற்கு வெளியே நடைபாதையில் எதையோ யாரையோ எதிர்பார்த்து நின்றிருந்தாள். தாக்கும் குளிரை எதிர்கொள்ளுவதுபோல நேரான முதுகுடனும் பரந்த தோள்களுடன் நின்றாள். இறுகக் கட்டியிருந்த கூந்தலில் சில கற்றை பிரிந்து காற்றில் பறந்தன. அவள் முகத்தைப் பார்க்க முடியாவிட்டாலும் குளிர் தாங்க முடியாமல் அவளுடைய கன்னங்கள் சிவந்திருப்பதையும் மெல்லிய சுருள் கொண்ட கீழிதழ் துடிப்பதையும் மனக் கண்ணால் உருவாக்கியெழுப்பியபோது, பக்கத்தில் வந்து நின்ற காரில் அவள் ஏறிக்கொண்டாள். அந்தக் காரின் இடதுபுறமாக லேசாகத் திரும்பிச் சாலையில் சேர்ந்துகொண்டபோது அது லெக்ஸஸ் கார் என்பதைக் கவனித்தேன்.

அன்றிரவு என் எதிர்காலத்தைப் பற்றிய பல விதமான சந்தேகங்கள் என்னைச் சூழத் தொடங்கின. அறையில் நெடுஞ்சாலைப் போக்குவரத்து ஓசையைக் கேட்டபடி படுத்திருந்தபோது பல விதமான எண்ணங்கள் ஒரே சமயத்தில் முளைத்து வெவ்வேறு திசைகளில் கிளைவிட்டு நீண்டன.

ஜோஸலின் எல்லாக் கிளைகளிலும் பூக்கும் பூவாக அதில் இருந்தாள். கையெட்டும் தூரத்தில் இருந்தாலும் எதோ ஒன்று அவளை என்னிடமிருந்து தள்ளியே வைத்தது. இந்த அன்னிய மண்ணில் எனக்கு இது தேவையில்லாத சிக்கல். எனக்கு முன்னால் நீளும் இருட்டில் வழிகாட்டும் விளக்குகூட ஒளிராதபோது ஜோஸலின் போன்ற பெண்ணைப் பற்றிய கனவில் காலத்தைக் கடத்துவது முட்டாள்தனமல்லவா?

நான் உண்டு என் வேலை உண்டு என்று சென்னையில் விருகம்பாக்கத்தில் காலத்தைக் கழித்துவந்தேன். தப்பித் தவறி ஏதோவொரு கம்ப்யூட்டர் கம்பெனியில் புரொக்ராமராகத் தாம்பரத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அவர்கள் என்னை அமெரிக்காவுக்கு ஏன் அனுப்ப வேண்டும்? அதுவும் மாலை ஆறு மணியானால் சுடுகாடுபோலத் தோற்றம்கொள்ளும் ஹார்ட்ஃபோர்டிற்கு? இங்கே வந்து பிரமோத் வாலியாவைப் போல வயிற்றைக் கட்டிக்கொண்டு வெஸ்ட்பரியிலாவது இருந்திருக்கலாம். அல்லது அவனைப் போல ஊரில் கல்யாணம் கட்டிக்கொண்டு வந்திருந்தால் டி ஹெட் கிளப்பும் வயிற்றெரிச்சலுக்கு மருந்தாக மனைவியுடன் மாலைகளைக் கழிக்கலாம்.

இப்போது இந்த வீட்டின் சுவர்கள் எல்லாப் பக்கங்களிலிருந்தும் என்னை நோக்கி வருவதுபோல இருக்கிறது. மூச்சுமுட்டுகிறது. காற்றே இல்லை. பால்கனிக் கதவாவது திறக்கும்படி இருந்திருக்கலாம். அந்தக் கண்ணாடிக் கதவு மூடியிருந்தே நெடுஞ்சாலைப் போக்குவரத்து ஓசை இவ்வளவு கேட்கிறது. திறந்துவைத்தால் அவ்வளவுதான். இந்தப் பால்கனியிலிருந்து யாராவது குதித்து விழுந்துவிடுவார்களோ என்ற பயத்தில்தான் அங்கே போக வழியில்லாமல் செய்திருக்கிறார்கள். குதித்தால் ஏதாவது கார் அல்லது பிரும்மாண்டமான ட்ரக் அடியில் கூழ்! அது சற்றுமுன் ஜோஸலின் ஏறிக்கொண்ட லெக்ஸஸ் காராகக் கூட இருக்கலாம்.

அவள் ஏறிய லெக்ஸஸ் காரில் யார் இருந்தார்கள்?

இந்தப் போக்குவரத்து ஓசைகூட இப்போது ஆசுவாசத்தை அளிப்பதாக இல்லை. நாராசமாக இருக்கிறது. தூக்கத்தைத் துரத்தியடிக்கிறது.

இது என்ன சிக்கல். ஜோஸலின் பற்றிய எண்ணங்களை என்னிடமிருந்து தள்ளியே வைக்க வேண்டும் என்று நினைத்தேன். உடனே கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது.

அடுத்த பல நாட்கள் வெகுவேகமாக கழிந்தன.

இன்னும் இரண்டு பையன்களை இந்தியாவிலிருக்கும் என் கம்பெனி அனுப்பிவைத்தது. ஹார்ட்ஃபோர்டு வந்துசேர்ந்து ரமடா இன் ஜோதியில் சேர்ந்துகொண்டார்கள். அவர்களுக்கு நிறைய உதவ வேண்டியிருந்தது. ஏர்போர்ட்டிலிருந்து ரமடா இன் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தவுடன் அவர்களைப் போய்ப் பார்த்தேன். அமெரிக்காவைப் பற்றிய கனவுகள் அவர்கள் கண்களில் ஒளிர்ந்தன. ஆனால் அவர்களுக்கு அமெரிக்காவைப் பற்றிய பல விஷயங்கள் ஏற்கெனவே தெரிந்திருந்தன. உதாரணமாக சீஸ் பர்கரில் இருப்பது வெறும் பால் கட்டி மட்டும் அல்ல என்பதை நான் அவர்களுக்கு விஸ் தாரமாக விளக்க ஆரம்பித்தபோது அதில் சீஸுடன் மாட்டிறைச்சி உண்டென்று தங்களுக்குத் தெரியும் என்று அவர்கள் முடித்தார்கள். வரவிருக்கும் அமெரிக்கத் தேர்தல் பற்றியும் தெரிந்திருந்தது. ‘சமீபத்தில் நடந்த பில் கிளிண்டன், பாப் டோல் விவாதத்தைப் போய்ப் பார்த்தாயா?’ என்று கேட்டான் ஒருவன். ‘நான் எங்கே போய்ப் பார்ப்பது? டி. வியில்தான் பார்த்தேன்’ என்றேன். ‘ஏன் டி. வியில் பார்த்தாய்? நீ நேரில் போகவில்லையா? இதே ஹார்ட்ஃபோர்டில் அல்லவா விவாதம் நடந்தது!’ என்றான்.

ஆனால் எல்லாம் தெரிந்தது போல நடந்துகொண்டாலும், ஆங்கிலத்தை அமெரிக்க உச்சரிப்புடன் பேசினாலும் அவர்களுக்கு பாங்க் அக்கௌண்ட், சோசியல் செக்யூரிட்டி எண் பதிவுசெய்வது போன்ற விஷயங்களைச் செய்ய என் உதவி தேவைப்பட்டது. தவிர முக்கியமாகச் சாம் டிஹெட்டிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தேன். அவர்கள் இருவரும் தங்களுடைய அமெரிக்க உச்சரிப்பால் அலுவலகத்தில் சாம் போன்றவர்களைச் சமாளித்துவிடலாம் என்ற கனவில் இருந்தார்கள் என்று எனக்குத் தெளிவாகப் புரிந்தது. ஆனால் சாம் சாதாரண ஆளல்ல. இவர்களைத் தூக்கிச் சாப்பிட்டுவிடுவான் என்பதும் எனக்குத் தெரியும். இரண்டு நாளிலேயே சாம் அனுப்பிய மின்னஞ்சலைப் படித்துவிட்டுப் பேயறைந்தது போல என்னிடம் வந்தார்கள். இவர்களுக்கு ஊரிலிருந்து வந்ததில் நேர மாற்றம் பழகாமல் ஜெட் லாகுடன் (ழீமீt றீணீரீ) எழுதிய புரொக்ராமில் ஏகப்பட்ட பிழைகள். சாம் எங்கள் கம்பெனிக்கு அனுப்பிய இமெயிலில் இது போன்ற ‘பக்ஸ்’ இருந்தால் வேறு கம்பெனியிலிருந்து ஆள் எடுக்க வேண்டி வரும் என்று எழுதியிருந்தான்.

அன்று சாம் என்னை அழைத்து, ‘நீ இந்தப் பையன்களின் வேலையை மேற்பார்வையிட வேண்டும்’ என்றான். அவனுடைய முசுடான சுபாவம் மாறியிருப்பது முதன்முதலாகக் கவனத்தில் விழுந்தது. கொஞ்சம் யோசித்ததில் இது இப்போது ஏற்பட்ட மாற்றமல்ல, சில நாட்களாகவே அவன் என்னைப் பார்த்துச் சிரிப்பது, டௌண் டவுன் வாசம் பற்றிய கேள்விகள் கேட்பது என்றிருந்திருக்கிறான். முக்கியமாக நான் ஒவ்வொரு நாளும் எழுதும் புரொக்ராமின் வரிகளைக் கண்காணிப்பதை நிறுத்தியிருந்தான். இவையெல்லாம் முதல்முறையாக என் கவனத்தில் படிந்தன. இவையெல்லாம் அவன் எனக்கு உத்திரவாதம் கொடுத்த நாளிலிருந்துதான் தொடங்கியதாகத் தோன்றியது.

அக்டோபர் 31ஆம் தேதி முதன் முறையாக உறைபனி பெய்ததைப் பார்த்தேன்.

காலையில் விழித்து ஜன்னல் வழி பார்த்தால் மென்மையான வெண்மை எல்லா இடத்திலும் நிரம்பியிருந்தது. நெடுஞ்சாலையோரத்தில் சிறு குன்றுபோலப் பனி குவிந்துகிடந்தது. வாகனப் போக்குவரத்து இல்லாத இடங்கள் எல்லாம் பனியால் மூடிக் கிடந்தன. கட்டடங்களின் கூரையைப் பனி அடர்ந்து போர்த்தியிருந்தது. வானத்தில் சூரியனைக் காணோம். பனியால் செய்த ஒளி ஹார்ட்ஃ போர்ட் நகரெங்கும் நிறைந்திருந்தது.

நாள் முழுவதும் பனிமழை விட்டு விட்டுப் பெய்துகொண்டிருந்தது.

ஜோஸலினை அன்று மாலை என்னுடைய மாடியிலேயே பார்த்தேன். அவள் வீடு எதுவென்ற மர்மமும் அன்று அவிழ்ந்தது. என்னுடைய வீட்டுக்கு எதிர்ப்புறத்தில் நான்கு கதவுகள் தள்ளிதான் அவள் வீடு.

காரிடாரில் இருந்த மங்கலான விளக்கு வெளிச்சத்தில் ஜோஸலினின் மங்கலான பிரதிபோலவே இருந்தாள். எலிவேட்டரில் இருந்து காரிடாரில் நடந்து வந்தாள். அவள் நடையில் தளர்ச்சி இருந்தது. வாசல் கதவைத் திறந்து வெளியே போகவிருந்தவன் கதவைப் பூட்டாமல் நின்று அவளையே பார்த்தேன். என்னைப் பார்த்ததும் தலையைக் குனிந்துகொண்டாள். தன்னுடைய வீட்டுக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டாள்.

கதவைத் தாழிட்டுவிட்டு அங்கேயே நின்றேன். பிறகு எலிவேட்டர் வரை சென்றேன். பொத்தானை அழுத்திக் கீழ்த்தளத்தை அடைந்தேன். என் மனத்தில் அதுவரை துடித்துக்கொண்டிருந்த ஒன்று அகன்று காலியான வெளி உருவானது. கட்டடத்தை விட்டு வெளியேறி வாசலில் கால்வைத்தபோது அங்கே ஒட்டி நின்றிருந்த கார் மெல்ல விலகியதைக் கவனித்தேன்.

அதே லெக்ஸஸ் கார்!

மாலையில், மனித சஞ்சாரமில்லாமல் கார் போக்குவரத்து மட்டுமே இருக்கும் ஊரில் இன்று எல்லா இடங்களிலும் மனிதர்களும் குழந்தைகளும்! வினோதமான ஆடை, அணிகலன் அணிந்து, கூடவே முகத்திலும் தலையில் சாயம் அணிந்து ஒவ்வொருவரும் அவரவரின் உருவத்தை வேறு ஒன்றாய் உருமாற்றம் செய்திருந்தார்கள்.

காலையில் அலுவலகத்திலும் நிறைய பேர் மாறுவேடம் அணிந்து வந்திருந்தார்கள். சாம் டிஹெட் நீளமான ஒற்றைக் கொம்பு பதித்த தொப்பியையும் கறுப்பு அங்கியையும் அணிந்திருந்தான். சிலர் ரகசியமாக dickhead, the devil என்று அவனைக் காட்டிச் சிரித்தார்கள்.

சாம் என்னிடம் வந்து, ‘இன்று ஹாலோவீன் நாளாயிற்றே! என்னைப் பார் எப்படி மாறிவிட்டேன். நீ என்னவாக மாறப்போகிறாய்? உங்கள் ஊரில் ஹாலோவீன் கொண்டாடும் பழக்கம் இல்லையா?’ எனச் சிரித்துவிட்டுப் போயிருந்தான்.

ஹாலோவீன் நாளில் எல்லாரும் வெவ்வேறுவிதமாய்த் தங்களை மாற்றிக்கொண்டார்கள். ஒருவேளை அவர்களுக்கு இருக்கும் சாத்தியங்களை அடையாளப்படுத்தும் வேஷத்தை அணிந்துகொள்கிறார்களோ? எனக்கு என்ன வேஷம் போட முடியும்? என்னுடைய சாத்தியங்கள் என்ன? ஜோஸலின் என்ன மாதிரியாகத் தன்னை மாற்றிக்கொள்வாள்? பூவாக? தேவதையாக?

அவளுக்குப் பொருத்தமான உருமாற்றம் ஜோஸலின் என்ற உருவத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை. அவள் அவளாக, மலர்ந்த முகத்துடன் பார்ப்பவரைக் கவரும் சிரிப்புடன் இருப்பதுதான் அவளுக்கான சாத்தியம். அது வெறும் சாத்தியக்கூறு மட்டுமல்ல. அப்படித்தான் அவள் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.

கொட்டும் பனியில் மாலை விளக்கு வெளிச்சம் நீராய் வழிவதைப் போலிருந்தது. வானில் சூரிய ஒளியின் மரண ஊர்வலம்போல மேகங்கள் சங்கிலித் தொடராய்ச் சூரியனைக் கீழே இழுத்துச் சென்றுகொண்டிருந்தன. அந்த அறைகுறை வெளிச்சமும் பனியடர்ந்த சூழலும் வினோத உருவம்கொள்ளும் மக்களும் இருந்த ஹார்ஃபோர்ட் நகரம் நான் அதுவரை அறிந்திராத உலகமாய் மாறியிருந்தது.

குளிரில் என்னால் அசைலம் அவென்யூவில் வெகுதூரம் நடக்க முடியவில்லை. ரமடா இன் ஹோட்டல்வரை சென்றுவிட்டுத் திரும்பினேன்.

மீண்டும் வீட்டுக்குத் திரும்பியபோது ஜோஸ்லின் வீட்டுக் கதவு முன்னால் நின்றேன். உள்ளேயிருந்து எந்த ஓசையும் கேட்கவில்லை. அழைப்பு மணியை அழுத்தினேன்.

எந்தப் பரபரப்பும் இல்லாமல் அமைதியுடன் நின்றேன். எதற்காக அவள் வீட்டுக் கதவு முன்னால் நின்றேன். அவள் கதவைத் திறந்தால் அவளிடம் என்ன கேட்கப்போகிறேன் என்று ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் நின்றேன்.

ஒரு கணம் அவள் கண்களில் எதிர்பார்ப்பும் தேடலும் மின்னி மறைந்தன. காட்சியளித்த என் முகத்தின் நிச்சயத்தில் சட்டென்று அவள் முகத்தின் மலர்ச்சி தோற்று வேறு ஒன்றாக மாறியது. லேசான கருமையும் களைப்பும் மட்டுமே அவள் முகத்தில் மீதமிருந்தன. வீட்டுக்குள்ளேயிருந்த தனிமையின் சோபையற்ற ஒளி நிழல்களை நிறைத்திருந்தது. என்னை மிகவும் கவர்ந்திருந்த அவளுடைய உதடுகள் திரட்சியிழந்து வறண்டு இறுக்கமான கோடுகளாய் மாறியிருந்தன.

ஜோஸலினின் முகம் வேறு யாரோ ஒருவருடையதைப் போல, துர்பாக்கியத்தின் வடிவாக உருமாறிவிட்டதுபோல் இருந்தது.

நான் ஒரு கணம் தயங்கினேன். என்ன சொல்வது எனத் தெரியாமல் நின்றேன்.

பிறகு ‘குட்நைட்’ என்று மட்டும் முனகிவிட்டுப் படபடத்த இதயத்துடன் நிற்காமலும் திரும்பிப் பார்க்காமலும் என் வீட்டுக் கதவை நோக்கி விரைந்தேன்.

சிறிது நேரம் கழித்துக் கதவு மூடப்பட்ட சத்தம் காரிடாரில் கேட்டது. யாருமற்ற காரிடாரில் அந்தச் சத்தத்தின் எதிரொலி விம்மல்போல மாறியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *