ஜெயந்திக்கு ஞாயிற்றுக் கிழமை பிடிப்பது

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 20,050 
 

மின்சார ரயில் வருவதற்கு இன்னும் நேரம் இருந்தது. ஜெயந்தி வெங்காயம் வாங்கிய

பிளாஸ்டிக் பையுடன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று இருந்தாள். சனிக் கிழமை மாலை என்பதால், அளவுக்கு அதிகமான கூட்டம். காதல் ஜோடிகள் சுற்றுப்புறம் மறந்து விரல்கள் பிடித்து கொஞ்சிக்கொண்டு இருந்தார்கள்.

ஜெயந்திக்கு ஞாயிற்றுக் கிழமைகள் பிடிப்பதே இல்லை. அந்த ஒருநாள் வராமல், அப்படியே தாவி திங்கள் கிழமை வந்துவிடாதா என்றுகூட நினைத்து இருக்கிறாள். ஏனோ, ஞாயிற்றுக் கிழமை அவளுக்குத் தண்டனை தினமாகவே இருக்கிறது.

திருமணத்துக்கு முன்பு வரை அவள் ஞாயிற்றுக் கிழமைக்காக ஏங்கியவள். அலுவலகம் போக வேண்டிய அவசரம் இல்லை என்பதால், காலை 10 மணி வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்கி இருக்கிறாள்.

யாரும் அவளை எழுப்பியதே இல்லை. காலை சாப்பாட்டை விலக்கி, நேரடியாக மதியச் சாப்பாடுதான். அதன் பிறகு, அவளும் தங்கை மாலினியும் சீட்டு ஆடுவார்கள். மாலினி தோற்கத் துவங்கினால், இடத்தைக் கலைத்துவிடுவாள். 4 மணி அளவில் ஜெயந்தி மீண்டும் உறங்கத் துவங்குவாள். 5 மணிக்கு எழுந்து குளித்து, அலங்காரம் செய்துகொண்டு, அவளும் மாலினியும் சினிமாவுக்கோ அல்லது கோயிலுக்கோ செல்வார்கள்.

இரவு வீடு திரும்பும்போது மணி 9 ஆகி இருக்கும். மாலினி சாலையில் கதை பேசியபடியே நடந்து வருவாள். அவளுக்குப் பயமே இல்லை. அம்மா ஞாயிற்றுக் கிழமை இரவுக்கு என்றே விசேஷமான உணவைத் தயாரித்துவைத்து இருப்பாள். சாப்பிட்டுவிட்டு, அருகருகே படுக்கையைப் போட்டு, ரேடியோவில் பாட்டு கேட்டுக்கொண்டே அவளும் மாலினியும் கண் அயரும் வரை பேசிக்கொண்டு இருப்பார்கள்.

அந்த ஞாயிற்றுக் கிழமைகள் யாவும் அவளது திருமணத்துக்குப் பிறகு, மாயமாக மறைந்துவிட்டன. அருண், ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே போக விரும்புவதே இல்லை. அது ஓய்வு நாள். ஆகவே, முழுவதும் வீட்டிலே இருக்க வேண்டும் என்பான். அவளுக்கும் இப்போது எல்லாம் வெளியே போய் வர இஷ்டம் இல்லை. ஆனால், இவை எல்லாவற்றையும்விட, ஞாயிற்றுக் கிழமையை அவள் வெறுப்பதற்கு முக்கியமான காரணம் ஒன்று இருந்தது. அது சாப்பாடு.

அருண் வீட்டில் ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணிக்கே அவனது அம்மா ஆட்டுக் கறி வாங்கி வந்துவிடுவாள். தலைக் கறி, ரத்தம், ஆட்டு ஈரல், கொத்துக் கறி, ஆட்டுக்கால் சூப் என்று காலை டிபனுக்கே அசைவம் தயாராகிவிடும். மதிய உணவுக்கு நண்டு அல்லது மீன், அத்துடன் கோழிக் கறி. இரவில், கடையில் பரோட்டா வாங்கி வந்து மீதம் இருக்கும் கோழிக் குழம்பு, வெங்காயம் இட்ட கறி வறுவல்களுடன் அவர்கள் சாப்பிடுவார்கள்.

ஜெயந்தி பிறந்ததில் இருந்து அசைவம் சாப்பிட்டதே இல்லை. அவள் சுத்த சைவம். காய்கறிகளில்கூட கத்திரிக்காய் முட்டையைப்போல இருக்கிறது என்று வீட்டில் வாங்க மாட்டார்கள். பட்டை, லவங்கம், கசகசாபோன்ற மசாலா சாமான்களை அவள் முகர்ந்து பார்த்ததுகூடக் கிடையாது. ஒரே ஒரு முறை அம்மாவுக்கு உடல்நலம் இல்லாமல் போனபோது, நாட்டுக் கோழி முட்டையைப் பாலில் அடித்துக் கொடுக்கச் சொன்னார்கள். அதைச் சாப்பிடுவதற்கு அம்மா ஒப்புக்கொள்ளவே இல்லை. இன்றைக்கும் அதை சொல்லிக்காட்டுவாள்.

அம்மாவுக்காக வாங்கிய முட்டைகளை வீட்டு வேலைக்காரப் பெண்ணுக்குத் தூக்கிக் கொடுத்தார் அப்பா. பள்ளியில் அவளோடு படித்த வேலம்மாள் என்ற பெண், சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள பொரித்த நெத்திலிக் கருவாட்டைக் கொண்டுவருவாள். அதனால், அவள் அருகில் யாரும் உட்கார்ந்து சாப்பிட மாட்டார்கள். ஆனால், அவள்தான் ஜெயந்தியின் தோழி. அதனால், இருவரும் ஒன்றாகத்தான் சாப்பிடுவார்கள். எப்படி வேலம்மாள் கருவாட்டை மென்று தின்கிறாள் என்று கூச்சத்துடன் பார்த்துக்கொண்டு இருப்பாள் ஜெயந்தி.

சில வேளைகளில் வேண்டும் என்றே வேலம்மாள் தன் கையை முகர்ந்து பார்க்கும்படி செய்து, ஜெயந்தியைப் பரிகாசம் செய்வாள். கருவாடு சாப்பிட்ட கையில் அந்த நாற்றம் போகவே செய்யாது.

அருணைக் காதலிக்கத் துவங்கியபோது, அருண் என்ன சாப்பிடுவான் என்று ஜெயந்தி கேட்டுக்கொள்ளவில்லை. அவர்கள் காதலிக் கும் நாட்களில் பலமுறை ஐஸ் க்ரீம் சாப்பிட்டு இருக்கிறார்கள். சில வேளைகளில் காபி, டிபன் சாப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால், அருண் தினமும் அசைவம் சாப்பிடக்கூடியவன் என்பது அவளுக்குத் தெரியவே இல்லை.

ஒரே ஒரு முறை, பேக்கரியில் அருண் சிக்கன் ரோல் வாங்கி வந்தபோது, ஜெயந்தி தயக்கத் துடன், “நான் அதை எல்லாம் சாப்பிட மாட்டேன். சைவம்” என்று சொன்னாள். அருண் இரண்டு சிக்கன் ரோலையும் சாப்பிட்டபடியே, “நீங்க ஐயரா?” என்று கேட்டான். “இல்லை. ஆனால், எங்கள் வீட்டில் யாரும் அசைவம் சாப்பிடுவது இல்லை” என்று சொன்னாள் ஜெயந்தி. “அதனால் என்ன, உனக்குப் பிடிக்காட்டி நீ சாப்பிட வேண்டாம்” என்றான் அருண். சாப்பாடு அவரவர் பழக்கம். அதில் என்ன பேதம் இருக்கிறது என்றுதான் ஜெயந்தியும் அன்று யோசித்தாள். ஆனால், இந்த இரண்டு வருடங்களில் ஏன் அன்று சாப்பாட்டைச் சிறிய விஷயமாக நினைத்தோம் என்று தன் மீதே கோபப்பட்டுக்கொண்டு இருக்கிறாள்.

அருணுக்காக அவள் எவ்வளவோ விட்டுக் கொடுத்து இருக்கிறாள். அருண் வீட்டில் காலையில் யாரும் காபி குடிப்பது இல்லை. டீதான். கல்யாணமான சில நாட்களில் அவள் ஃபில்டர் காபி குடித்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தாள். அருண் இதற்காக ஒரு காபி ஃபில்டரை வாங்கித் தந்தான். ஆனால், அந்த காபி அம்மா தரும் காபிபோல இல்லை என்று அவளுக்கு எரிச்சலாக இருந்தது. அதோடு, அவள் காபி குடிப்பதை ஒரு குற்றமாகவே சொல்லிக்காட்ட ஆரம்பித்தார்கள். இரண்டு வாரங்களில், ஜெயந்தி டீ குடிக்கப் பழகிவிட்டாள்.

ஜெயந்தி வீட்டில் இட்லிக்குத் தொட்டுக்கொள்ள மிளகாய்ப் பொடி கட்டாயம் இருக்கும். அது அருண் வீட்டில் கிடையாது. கேட்டால், கேலி செய்வார்கள். அருண் வீட்டில் சாதம் வேகும்போது, உப்பு போட்டுவிடுகிறார்கள். ஜெயந்தி வீட்டிலோ, ஒருபோதும் உப்பிட்டு சாதம் சமைப்பது இல்லை. ஜெயந்தி அம்மா தக்காளியை மிக அழகான வட்டமாக வெட்டித்தான் சமைக்கப் பயன் படுத்துவாள். ஆனால், அருண் வீட்டில் அதைக் கையால் நசுக்கிப் பிழிந்துவிடுகிறார் கள். அருண் வீட்டில் ஒரே டம்ளரில் நாலு பேரும் தண்ணி குடிக்கிறார்கள். ஜெயந்தி வீட்டில் அப்படி யாரும் செய்வது இல்லை.

ஜெயந்தி வீட்டில் சாப்பிடும்போது, பேசிக்கொண்டோ… புத்தகம் படித்துக்கொண்டோதான் சாப்பிடுவார்கள். ஆனால், அருண் வீட்டில் சாப்பிடும்போது, பேசினால் பிடிக்காது. ஜெயந்தி இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக எவ்வளவோ விட்டுக்கொடுத்துத் தன்னை மாற்றிக்கொண்டுதான் இருக்கிறாள். ஆனால், ஞாயிற்றுக் கிழமைகளில் அசைவத்துக்குப் பயந்து, தான் மட்டும் பட்டினிகிடக்க அவளால் முடியவில்லை.

அருண் குடும்பத்தில் அனைவரும் விரும்பி அசைவம் சாப்பிடுவார்கள். மீதமான மீன் துண்டுகளையும் சப்பிப்போட்ட மீன் முள்ளையும் தின்பதற்காகவே வீட்டில் மூன்று பூனைகள் வளர்க்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால், ஜெயந்தி மட்டுமே சைவம் என்பதால், அவளுக்காகத் தனி சமையல் செய்வது அவர்களுக்குப் பிடிப்பதே இல்லை. அவள் வேண்டுமானால், தனக்காக எதையாவது செய்து சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று அருண் சொன்னான். ஆரம்ப நாட்களில் அதற்காக அவள் தனி சமையல் சாமான்கள், தட்டு, டம்ளர், கரண்டி எல்லாம் வாங்கிவைத்திருந்தாள். கீரை, காய்கறிகளை வேகவைத்துச் சாப்பிடுவாள். ஆனால், அது அசூயையாக இருந்தது. தான் ஏதோ முகம் அறியாத ஒருவர் வீட்டில் தங்கி இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

அத்துடன், ஓர் ஆளுக்காகச் சமைத்துச் சாப்பிடுவது அவளுக்கே பிடிக்கவில்லை. பெரும்பான்மை ஞாயிற்றுக் கிழமைகளில் இரண்டு வேளைகளும் ரொட்டித் துண்டையும் ஊறுகாயும்வைத்து ஓட்டிவிடுவாள். இரவு கடையில் பரோட்டா வாங்கி வரும்போது, அவளுக்காக மூன்று இட்லி வாங்கி வருவான் அருண். அதை சீனிவைத்துச் சாப்பிட்டு நாளைக் கடத்திவிடுவாள். அதனால்தானோ என்னவோ, அவளுக்கு ஞாயிற்றுக் கிழமை என்றாலே ஆத்திரமாக வருகிறது.

அருண் வீட்டில் அவளை யாரும் அசைவம் சமைக்கச் சொல்வதோ, சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்துவதோ இல்லை. ஆனால், அருண் மசாலாவை அம்மியில் அரைத்துத்தான் குழம்புவைக்க வேண்டும் என்பதில் கறாராக இருப்பவன். ஆகவே, காலையில் எழுந்து அம்மியில் மல்லி, கசகசா, பட்டை, சோம்பு, தேங்காய் என்று பெரிய கவளம் அளவுக்கு மசாலா அரைக்க வேண்டும். அந்த வாசனை அவள் குடலைப் புரட்டும். ஆனால், அவள் அதைச் செய்ய மாட்டேன் என்று மறுக்க முடியாது. அது முடிந்தவுடன், அரைக் கிலோ வெங்காயம் உரிக்க வேண்டும். கால் கிலோ வெள்ளைப்பூண்டு உரிக்க வேண்டும். இதன் ஈடாகப் பெரிய அலுமினி யக் கிண்ணத்தில் நீண்ட ஆட்டுக் குடலை அருண் அம்மா கழுவுவதைப் பார்ப்பதே அவளுக்குத் தலை சுற்றலை உண்டாக்கிவிடும். மதியம் வரை சமையல் அறையில் மூன்று பெண்கள் பரபரப்பாக வேலை செய்துகொண்டு இருப்பார்கள்.

அருண் டி.வி. பார்த்தபடியே ஆட்டுக் கால் சூப் குடித்துக்கொண்டு இருப்பான். அவனது அப்பா சமையல் அறைக்குள்ளாக ஸ்டூலைப் போட்டு உட்கார்ந்துகொண்டு, கறி வேகும்போதே கொஞ்சம் கொஞ்சமாகக் கரண்டியில் எடுத்துத் தின்று பார்த்தபடியே இருப்பார். தங்கை சாதத்தில் கறியைப் போட்டுப் புரட்டிச் சாப்பிடுவாள். ஜெயந்தியால், அந்தக் காட்சிகளைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அவள் நிறைய நேரம் கழிப்பறைக்குள் போய்க் கதவை மூடிக்கொண்டு நின்றபடியே இருப்பாள். தாங்க முடியாத சில வேளைகளில், அருணிடம் தன் அம்மா வீட்டுக்குப் போய் வரட்டுமா என்று கேட்டு இருக்கிறாள். ஆரம்ப நாட்களில் அதை அனுமதித்த அருண், பிறகு அப்படிப் போய் வருவது தனக்குப் பிடிக்கவில்லை என்று நிறுத்திக்கொள்ளச் சொல்லிவிட்டான்.

திருமணமான மூன்றாம் நாள், அவர்கள் இருவரையும் அருணின் சித்தப்பா மதிய விருந்துக்கு அழைத்து இருந்தார். அதுவும் ஒரு ஞாயிற்றுக் கிழமையே. அருணும் அவளும் பைக்கில் மேடவாக்கத்துக்கு மதியம் 12 மணி அளவில் போய்ச் சேர்ந்தார்கள். புதிதாகக் கட்டிய வீடு என்பதால், அதைப்பற்றிப் பெருமையாகச் சொல்லிக்கொண்டு இருந்தார் அருணின் சித்தப்பா. அவளுக்கு யாரோடு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவர் களில் எவர் பெயரும் அவளுக்குத் தெரியவில்லை. வீட்டில் இருந்த பெண்கள் சமையல் அறையில் ஏதோ வேலையாக இருந்தார்கள்.

ஜெயந்தி டி.வி. ஸ்டாண்டில்கிடந்த பெண்கள் பத்திரிகை ஒன்றை எடுத்துப் படம் பார்த்துக்கொண்டு இருந்தாள். 2 மணிக்கு சாப்பிட உட்கார்ந்தார்கள். இலை நிறையச் சாதம் போட்டு, குழம்பும் கறியுமாக அள்ளிப்போட்டாள் ஒரு பெண். ஜெயந்தி, தான் சைவம் என்று சொல்வதற்கு முன்பாக இலையில் நிறைய மீனும் கறியும் நிரம்பிவிட்டது. வழிந்தோடும் குழம்பும் எண்ணெய் மினுங்கும் கறித் துண்டுகளும் அவளுக்குக் குமட்டலை உருவாக்கின.

அவள் இலையை வெறித்துப் பார்த்தபடியே இருந்தாள். அருண் தயக்கத்துடன், “அவள், கறி சாப்பிட மாட்டாள்” என்று சொன்னான். சித்தி பொய்யான வருத்தத்துடன் “ஐயோ, நான் வேற ஒண்ணும் செய்யலையே. ரசம், மோரு மட்டும்தானே இருக்கு. அப்பளம் வேணும்னா பொரிக்கட்டுமா?” என்று அருணிடம் கேட்டாள். “பரவாயில்லை” என்று சொல்லிய அருண், “சும்மா… சாப்பிட்டுப் பாரு. பிடிக்காட்டிவெச்சிரு” என்று கடுகடுத்த குரலில் ஜெயந்தியிடம் சொன்னான்.

என்ன செய்வது என்று தெரியாமல், இலையைப் பார்த்தபடியே இருந்தாள். “சாப்பிடாம எழுந்திரிச்சா, அவங்களை அவமானப்படுத்தின மாதிரி ஆகிரும். வெறும் சோற்றை மட்டுமாவது நாலு வாய் சாப்பிடு” என்றான் அருண். வேறு வழி இல்லாமல் வெறும் சோறாக உருட்டி அவள் இரண்டு வாய் சாப்பிட்டாள். அவளை யும் மீறி குமட்டிக்கொண்டு வந்தது. எழுந்து ஓடி வாஷ்பேசினில் வாந்தி எடுத்தாள். ஒரு பெண் எலுமிச்சம்பழம் தந்து முகர்ந்துகொள்ளச் சொன்னாள். அதுவும் பொரித்த மீனுக்குச் சுவையூட்ட வாங்கியது என்பதால், முகர்ந்து பார்க்கவே தயக்கமாக இருந்தது. ஜெயந்தி தலையைப் பிடித்தபடியே பின் வாசலில் உட்கார்ந்துகொண்டாள். அருண் நிதானமாகச் சாப்பிட்டு முடித்து வெற்றிலை போட்டுக் கொண்டு இருந்தான்.

“நாளைக்கு நீ தனியா வீடு பார்த்துப் போனா, கறிக்கு ஏங்கிப்போயிருவே அருண். உன் பொண்டாட்டிதான் கவிச்சி சாப்பிட மாட்டேங்கிறாளே” என்று கேலி செய்துகொண்டு இருந்தார்கள்.

“அதுக்கு என்ன சித்தி, நான்தான் சமைப்பேனே” என்று அருண் சொன்னான். அது உண்மைதான். அருண் மட்டும் இல்லை… அவனது அப்பாவும்கூட நன்றாக அசைவம் சமைக்கக்கூடியவர்தான். ஆனால், மற்ற நாட்களில் அவர்கள் சமையல் அறைப் பக்கம் எட்டிக்கூடப் பார்ப்பதே இல்லை. மேடவாக்கத்தில் இருந்து வீடு வந்து சேரும் வரை ஜெயந்தியைத் திட்டிக்கொண்டே வந்தான் அருண்.

அவள் மௌனமாகக் கேட்டுக்கொண்டே வந்தாள். “இனிமே, நீ எங்கே போனாலும், கூடவே சாப்பாட்டையும் ஒரு டிஃபன் பாக்ஸில் கொண்டுவந்துடு. உன்னால நான் அவமானப்பட முடியாது” என்று கத்தினான். அன்று இரவு நெடு நேரம் ஜெயந்தி அழுதுகொண்டு இருந்தாள். அன்போடும் அக்கறையோடும் நடந்துகொள்ளும் அருண், இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவளிடம் இவ்வளவு கோபமாக நடந்துகொள்வதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவே இல்லை.

ஒருவேளை அசைவத்தை வெறுப்பது, தனது குறையோ என்றுகூட நினைத்து இருக்கிறாள். இதற்காகவே, ஒருநாள் யாரும் அறியாமல் அலுவலகத்தின் எதிரில் உள்ள தேநீர் கடைக்குப் போய், முட்டை பப்ஸ் வாங்கி வந்து கொஞ்சம் கடித்துப் பார்த்தாள். ருசியைவிடவும் மனசாட்சி உறுத்தத் துவங்கியது. அப்படியே தூக்கி எறிந்துவிட்டாள். அவளோடு வேலை செய்யும் கிருத்திகா கூட திருமணத்துக்கு முன்பு வரை அசைவம் சாப்பிட்டது இல்லை. “இப்போது வாரம் தவறாமல் சிக்கன் பிரியாணி சாப்பிடுகிறேன்” என்று சொல்லி, “அது எல்லாம் பெரிய விஷயம் இல்லை” என்றாள். மற்றவர்களால் எளிதாக மாறிவிட முடிகிறது. தன்னால் ஏன் அப்படி முடியவில்லை என்று தன் மீதே அவளுக்கு ஆத்திரமாக வந்தது.

ஒரு முறை அருணிடம், “நான் அசைவம் சாப்பிடாமல் இருப்பது உனக்குக் கோபமா?” என்று கேட்டாள். “அது எல்லாம் இல்லை. ஆனால், நீ அதை வெறுப்பதுதான் பிடிக்கவில்லை. உனக்கு வெண்டைக் காய், கொத்தவரங்காய் எப்படியோ, அப்படித்தான் எனக்கு மீனும் கோழியும். அதில் என்ன தப்பு இருக்கிறது?” என்றான் அருண். அன்று முழுவதும் அருண் சொல்வதுதான் சரி என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். ஆனாலும், அவளால் அந்த வாசனையைத் தாங்கிக்கொள்ள முடியவே இல்லை.

அருண் அதன் காரணமாகவோ, என்னவோ, மற்ற நாட்களைப்போல் இன்றி, ஞாயிற்றுக் கிழமைகளில் சுபாவம் மாறிவிடுகிறான். அருணைக் காதலித்தபோது, இதைப்பற்றி எதுவும் நினைத்துப் பார்க்கவே இல்லை. சில வேளைகளில், ஏன் அவனைக் காதலித்தோம் என்றுகூட யோசித்து இருக்கிறாள். அப்பா பார்த்துத் திருமணம் செய்துகொடுத்து இருந்தால், நிச்சயம் அசைவம் சாப்பிடும் ஆளைக் கட்டியிருக்க மாட்டோம். ஆனால், சைவம் மட்டும் சாப்பிடும் ஓர் ஆள் முரடனாக, அயோக்கியனாக, ஏமாற்றுக் காரனாக இருந்துவிட்டால்? அவளுக்கு தான் காதல் திருமணம் செய்துகொண்டது குறித்து ஒரு தடுமாற்றம் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது.

ஒருநாள் அம்மாவிடம் இதைப்பற்றிச் சொல்லி அழுதாள். அம்மா தீர்க்கமான மனதுடன், “ஆம்பளைங்க அப்படித்தான் இருப்பாங்க. ஆம்பளை ருசியைத்தான்டி நாம ஏத்துக்கிடணும். நம்ம நாக்குக்குனு தனியா எந்த ருசியும் இருக்கக் கூடாது. ஊர்ல எங்க பாட்டி ஒருத்தி இருந்தா. அவளுக்கு 10 வயசுல கல்யாணம் நடந்திருச்சு. அவ வாழப்போன வீட்ல பொம்பளைப் பிள்ளைங்க சாப்பிடும்போது வாய் மெல்ற சத்தம் கேட்கக் கூடாதுன்னு சொல்வாங்களாம். அதனால, பாட்டி எல்லாத்தையும் கோழிபோல முழுங்கப் பழகிட்டா. அவ புருஷன் 13 வயசுல செத்துட்டார். பாட்டி 80 வயசு வரைக்கும் இருந்தா. ஆனா, ஒருநாள்கூடச் சாப்பாட்டை மென்னு, ருசித்துச் சாப்பிட்டதே இல்லை.

செத்துப்போன புருஷன் ஆவியாக வந்து பக்கத்தில் உட்காந்து பார்த்துக்கிட்டு இருக்கிற மாதிரியே பயந்துகிட்டுச் சாப்பிடுவா. நல்லவேளை, நாம எல்லாம் மென்னு சாப்பிடுறோம். எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டுதான் போகணும். நான் வேற என்ன சொல்றது?” என்றாள். அதைச் சொல்லும்போது, அம்மாவும் அழுதாள். அதன் பிறகுதான், ஜெயந்தி ஞாயிற்றுக்கிழமைகளில் தனி சமையல் செய்து சாப்பிடுவதைக் கைவிடத் துவங்கினாள்.

அருணைக் காதலித்த நாட்களில் அவள் நிறையக் கனவு கண்டு இருந்தாள். அவர்கள் காதலித்ததுகூட மிக இயல்பாகவே நடந்தது. ஜெயந்தி வீட்டின் மாடியில் உள்ள தாமோதரன் சாரைப் பார்க்க அருண் வந்த நாட்களில், அவர்களது காதல் துவங்கியது. முதன்முதலில் அருண்தான் அவளைக் காதலிப்பதாகச் சொன்னான். ஜெயந்திக்கு அதை ஏற்றுக்கொள்வதா… வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. அவள் இரண்டு நாட்கள் வரை பதில் சொல்லவே இல்லை.

மூன்றாம் நாளில் அருண் வேலை செய்யும் வங்கிக்குச் சென்றாள். அருண் அதை எதிர் பார்க்கவே இல்லை. அவன் கம்பி வலை இடப்பட்ட கூண்டுக்குப் பின்னால் இருந்து அவளைப் பார்த்துச் சிரித்தான். பிறகு, அவன் வெளியேறி வரும் வரை வங்கியில் ஒட்டப்பட்டு இருந்த விளம்பர வாசகங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அருண் உள்ளேயே தலை சீவி, பவுடர் அடித்து வந்திருப்பது பார்த்த உடனே தெரிந்தது. அவள் சிரித்துக்கொண்டாள். அருண் மெல்லிய குரலில், “இன்னிக்குக் காலைல உன்னை ரயில்ல பார்க்கவே இல்லை. நீ வரலையோன்னு நினைச்சேன்” என்றான். அவள் பதில் சொல்லாமல், “நாம எங்கே போகலாம்?” என்று கேட்டாள். அருண் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, “பக்கத்தில் ஒரு ஜூஸ் கடை இருக்கு” என்று சொன்னான். ஜெயந்தி தலையாட்டினாள். இருவரும் நடந்து சாலை ஓரம் உள்ள ஒரு ஜூஸ் கடையின் முன்னால் போய் நின்றுகொண்டார்கள். அருண் உரிமையோடு அவள் கையைப் பிடித்துக்கொண்டு, “தேங்க்ஸ்” என்று சொன்னான்.

அவள் தன் மனதில் இருப்பதை இன்னமும் சொல்லவே இல்லை. ஆனால், எதற்காக தேங்க்ஸ் சொல்கிறான் என்பதுபோலப் பார்த்தாள். அருண் அவளுக்கும் ஒரு சப்போட்டா ஜூஸ் வாங்கினான். அவளுக்கு சப்போட்டா பழங்களைப் பிடிக்காது. வீட்டில் அப்பா வாங்கி வந்தால், தொட்டுக்கூடப் பார்க்க மாட்டாள். ஆனால், அருண் வாங்கித் தந்தான் என்பதற்காக அதை உதட்டில்வைத்துக் கொஞ்சமாக உறிஞ்சிவிட்டு, “ரொம்ப சில்லுனு இருக்கு” என்று நடிக்கத் துவங்கினாள்.

அருண் தன்னுடைய வேலை, பதவி உயர்வு மற்றும் அவன் சேமிப்புபற்றிப் பேச ஆரம்பித் தான். சாலையில் போகிற, வருகிறவர்கள் தங்களைக் கவனிக்கிறார்களோ என்று ஜெயந்திக்குக் குழப்பமாக இருந்தது. அடிக்கடி சாலையை வெறித்துப் பார்த்துக்கொண்டாள். அருண் மட்டுமே பேசிக்கொண்டு இருந்தான். இடையிடையே ஜெயந்தி சிரித்துக்கொண்டாள். உள்ளூர அவளுக்கு நடுக்கமாக இருந்தது. பிறகு, தனக்கு வங்கியில் வேலை இருக்கிறது என்று சொல்லி, அவளைப் பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டு, அருண் புறப்பட்டுப் போனான்.

தனியே பேருந்தில் வரும்போது, தான் காதலிக்கத் துவங்கி இருக்கிறோம் என்பது ஜெயந்திக்குப் பெருமிதமாக இருந்தது. வீடு வந்து சேரும் வரை கனவில் பீடிக்கப்பட்டவளைப்போலவே இருந்தாள். வீட்டில் அன்று அவளாகப் பழைய பாடல்களைப் பாடியபடியே அம்மாவுக்குக் காய்கறி நறுக்க உதவி செய்தாள். உறக்கம் வரும் வரை அருண் பெயரை ஒரு நோட்டில் எழுதிக்கொண்டு இருந்தாள்.

இதுபோன்ற சந்திப்புகள் அதன் பிறகு வாரம் மூன்று நாட்கள் நடந்தன. அப்போதுதான் முதன்முறையாக ஸ்வாகத் உணவகத்தை அவளுக்கு அறிமுகம் செய்துவைத்தான் அருண். மரங்கள் அடர்ந்த உணவகம் அது. மைசூரில் இருந்து வந்த அப்பா ராவ் அதை 80 வருடங்களுக்கு முன்பு துவங்கி இருக்கிறார்.

ஒரு காலத்தில், அங்கே சினிமா நடிகர்கள்கூடச் சாப்பிட வருவார்கள் என்று அருண் சொன்னான். ஆனால், அவள் வரத் துவங்கிய பிறகு, ஒருநாள்கூட நாலைந்து பேர்களுக்கு மேல் அங்கே பார்த்ததே இல்லை. ஸ்வாகத் உணவகத்தில்தான் அருண் முதன்முறையாக அவளை முத்தமிட்டான். அவளால் அந்த முத்தத்தை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. சுற்றிலும் தன்னை பல நூறு கண்கள் வேடிக்கை பார்க்கின்றனவோ என்றுதான் தோன்றியது. ஒரு வருடம் அருணும் அவளும் காதலித்தார்கள்.

அந்த நாட்களில், அவள் வீட்டில் சமைத்த உணவை அருண் ருசித்துப் பாராட்டி இருக் கிறான். அவளது பிறந்த நாளுக்காக 10 ஆயிரம் ரூபாய்க்குக் கடிகாரம் வாங்கித் தந்திருக்கிறான். அருண் மீது அப்போது இருந்த வசீகரம் திருமணமான ஆறே மாதங்களில் முற்றாக வடிந்துபோனது.

இப்போது அவள் என்ன நிறத்தில் புடவை கட்டிக்கொள்கிறாள்… என்ன சாப்பிடுகிறாள்… என்ன மாத்திரைகள் சாப்பிடுகிறாள்… என்று எதையும் அருண் கண்டுகொள்வதே இல்லை.

அவனைப் பொறுத்தவரை, காலை ரயில் நிலையத்தில் அவளைக் கொண்டுபோய்விடுவதோடு, வேலை முடிந்துவிட்டது. இரவு வீடு திரும்பத் தாமதமானால், சில வேளைகளில் ரயில் நிலையத்துக்கு வந்து நிற்பான். மற்றபடி, அவனுக்கு ஒரு பெண்ணின் தேவை, உடல் சார்ந்தே அதிகம் இருந்தது. அந்த முத்தங்கள், தழுவல்கள்கூட அவனுக்கு அலுத்துப்போய் இருந்தது. அலுவலகத்தில் வேலை செய்துகொண்டு இருக்கும்போது, திடீரென இந்த யோசனை பீறிடத் துவங்கியதும் அவள் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டு இருப்பாள். தன்னை மீறி அழுகை முட்டிக்கொண்டு வரும்.

நல்ல வேலை, சொந்த வீடு, வங்கி சேமிப்பு, அன்பான கணவன், அக்கறையான மாமியார் – மாமனார், காதல் திருமணம் என்று எல்லாமும் நன்றாகத்தானே இருக்கிறது. பின், ஏன் அழுகிறோம் என்று அவளாகத் தன்னைத் திட்டிக்கொள்வதும் உண்டு. ஆனாலும், சொல்லில் வெளிப்படுத்த முடியாத வருத்தம், வலி அவளைவிட்டுப் போகவே இல்லை.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அறிவிப்பு ஒலித்தது. ஜெயந்தி தன்னைச் சுற்றிலும் நின்றபடியே காதலித்துக்கொண்டு இருந்த இளம் பெண்களை ஒரு முறை திரும்பிப் பார்த்துக்கொண்டாள். இவர்களில் எவள் தன்னைப்போல அவதிப்படப்போகிறாள் என்று தெரியவில்லை. சாலையோரம் உள்ள டீக் கடைகள், தள்ளுவண்டி உணவகங்கள், பேக்கரிகள், பேல்பூரி விற்பவன் என்று எல்லா இடங்களிலும் ஆண்களாக நின்றபடியே கையில் சிற்றுண்டியை வாங்கிச் சாப்பிட்டபடி இருக்கிறார்கள். பொது இடத்தில் அப்படிச் சாப்பிடும் பெண்கள் எவரையும் ஜெயந்தி பார்க்கவே இல்லை. ஏன், ஆண்களுக்கு மட்டும்தான் வயிறு இருக்கிறதா? இல்லை, அவர்களுக்கு மட்டும்தான் பசித்தபோது தெருவில் நின்று சாப்பிடத் தெரியுமா? ஜெயந்தி இதைப்பற்றியும் நிறைய ஆதங்கப் பட்டு இருக்கிறாள்.

ரயில் வந்து நின்றது. கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு ஜெயந்தி ஏறிக்கொண்டாள். ரயிலின் உள்ளேயும் காதலர்கள். ஒரு பெண் மடியில் காதலன் சாய்ந்துகிடந்தான். ஒரு பெண்ணை மற்றொரு ஆண் முகத்தைத் தடவியபடியே இருந்தான். நிறைய ஆண், பெண்கள், நிறையக் காதல்கள். அந்தப் பெண்கள் மீது அவளுக்கு வருத்தமாக இருந்தது.

ரயிலைவிட்டு இறங்கி சுரங்கப் பாதையின் வெளியே வந்தபோது அவல் விற்றுக்கொண்டு இருப்பவன் கண்ணில்பட்டான். நாளை காலை உணவுக்கு ஊறவைத்த அவல் சாப்பிட்டு ஒப்பேற்றிவிடலாமே என்று தோன்றியது. பிறகு, அப்படி ருசியாகச் சாப்பிட்டு என்ன ஆகப் போகிறது. எப்போதும்போல ரொட்டியும் ஊறுகாயும்போதும் என்றபடியே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

தெரு முனையில் பூ விற்கும் பெண் அவளைக் கண்டதும் முல்லைப் பூவை நீட்டினாள். அது அருணுக்குப் பிடிக்கும். அதற்காகவே வாங்கித் தலையில் சூடிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்துபோகத் துவங்கினாள். இப்போதுதான் அவளுக்கு வயது 26 ஆகிறது. இன்னும் எவ்வளவோ வருடங்கள் மீதம் இருக்கின்றன. எப்படி வாழப்போகிறோம் என்ற நினைப்பு ஏனோ வீடு வரை கூடவே வந்துகொண்டு இருந்தது!

– அக்டோபர் 2010

Print Friendly, PDF & Email

3 thoughts on “ஜெயந்திக்கு ஞாயிற்றுக் கிழமை பிடிப்பது

  1. ஏன் பெண்களின் ஆசைகள் எப்போதும் அங்கீகரிக்க படுவதே இல்லை?

  2. அருமை. அசைவமே சாப்பிடாத என் மனைவி முழுமையாக அசைவம் சாப்பிடும் எங்கள் வீட்டில் அடியெடுத்து வைத்த போது கிட்டத்தட்ட இது போன்ற ஒரு நிலைமை வந்தது. மனைவியின் சங்கடத்தைப் பார்த்து என் வீட்டில் அசைவச் சமையலை முற்றிலுமாக நிறுத்தி விட்டு, தேவைப் படும் போது ஓட்டலில் வாங்கி வந்து சாப்பிட்டுக் கொள்கிறோம். எங்கள் பக்குவத்தைப் பார்த்து மனைவி எங்களுக்காக முட்டை / ஆம்லட் போடுமளவு பக்குவப்பட்டு ( ???) விட்டார்.

  3. பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி 🙂 வெகு நாட்களாக இக்கதையை தேடி கொண்டிருந்தேன் 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *