சீறிப்பாய்… செவியில் அடி…

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 7,503 
 

வீட்டு முற்றத்தில் நின்று முற்றத்து கைப்பிடியை பிடித்தவாறு வாசலை வெறிக்க பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் அசைவில்லாது நிற்பது, ஏதோ தீவிர யோசனையில் இருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது. அவனது விழிகள் திறந்த கதவைப் போல் நின்றன. முற்றத்து மூலையொன்றில் வீடு கட்டிய சிலந்தி ஒன்று அவனது கால்களில் ஏறி முதுகுப்புறமாய் விளையாடிக்கொண்டிருக்க இருந்தது.

“விடிஞ்சு மணி எட்டாவப் போவுது தொரை அப்புடி என்ன ரோசணையில இருக்கீக… படிப்பு முடிஞ்சு ஏழெட்டு மாசம் ஆச்சு… காலிபசங்க கூட சேர்ந்து நல்லா ஊர் சுத்துற… இப்புடி ர் சுத்துறதுக்கு அச்சுக்காட்ல இருக்க சீமக்கருவய புடுங்கி போட்டானாச்சும் மழ தண்ணி பெய்யும்ல…சேவ கூவுனதுல இருந்து வாசல வெறிக்க வெறிக்க அப்புடி என்னத்த பாக்குறீயோ… காலுகையி கடுக்கலயா….அந்த ஆம்பள காத்தால போனது…. நீச்சத்தண்ணி குடிக்கச் சொன்னதுக்கு ரமேசு கலப்புக்கடைல டீ தண்ணி குடிச்சுட்டுப் போறேனு வாச்சாத்தையும் வம்பட்டியையும் தூக்கிட்டுப் போச்சு….. சொல்லிக்கொண்டே தட்டுக்கூடையில் சோறு குழம்ப சட்டிகளில் ஊற்றி லாவகமாய் அடுக்கினாள்.

“உப்ப அந்த கேரி பையிலதான் மடிச்சு வச்சேன்… எங்கே வச்சேனு மட்டுப்படல. …. என்றவள் தூக்குச்சட்டியைப் பார்த்தாள். “அதானே பாத்தேன் ….. நூறுநாளு வேலைக்கி நேத்துப் போகும்போது தூக்குச்சட்டி காதுல கட்டி தொங்கவிட்டிருந்தேன்…. மறந்தே போச்சு…ஒரே ரோசணைல இருந்தானே…..

உப்புப் பையை எடுத்து கூடையில் வைத்தவள் தலை முடியை வாரி சுருட்டிக் கொண்டாள்…. கிழிந்து கிடந்த பாதி வேட்டியை சும்மாடு கோலி தலையில் வைத்து தட்டுக்கூடையை தூக்கினாள்.

“இந்தப் பயலுக்கு என்னாச்சு…. இம்புட்டுக் கத்துறேன் .. காதுலயே வாங்கிக்க மாட்டேனுறான்… எல்லைல இருக்க அய்யனாரு சாமி மாறில இருக்கான்.. பொழுதுசாய பேச்சியம்மா கோயிலு பூசாரிகிட்ட கூட்டிப்போயி தின்னூறு போட்டாதான் சரி வரும்….” புலம்பிக் கொண்டாள்.

” ஏலே கவியரசு…. சோத்த குண்டான்ல வச்சுருக்கேன் … ராத்திரி வச்ச வெந்தயக்கொழம்புதான் இருக்கு… கத்தரி வத்தல பொறிச்சு வச்சுருக்கேன்.. வாசல்லயே பிராக்கு பாக்காம வெளிய தெருவுல போய்ட்டு பல்ல வெலக்கிட்டு சாப்புடு…. பயலுவ கூட ஊர் சுத்தாம வீட்ல இரு.. இல்லனா… அப்பறமாத்துக்கு அச்சுக்காட்டுகாச்சும் வா… ஒத்தாசையா இருக்கும்ல… அந்த ஆம்பள தனியா, அந்த சீமைக்கருவக்கூட போராடிட்டு இருக்கு…” சொல்லிக்கொண்டே புறப்பட்டாள் சித்ரா.

“மெதுவாய் ம்….. என்றவன் வாசலின் தெற்குப்புறமாய் திரும்பிப் பார்த்தான்.

வெள்ளாடு இரண்டை ஓட்டியபடி போய்க்கொண்டு இருந்தாள். சும்மாடு சிம்மாசனத்தில் அந்த தட்டுக்கூடை அவள் பிடிக்காமலேயே சொகுசாய் பயணித்துக் கொண்டு இருந்தது.

காலை நேரத்திலும் உச்சி வெயில் போலிருந்தது அவனுக்கு. கண்களை மூடி தனக்குள் ஏதோ சமாதானம் செய்துகொண்டான். நாக்கால் பற்களை துலாவினான். வீட்டுக்கு பின்புறம் கிடந்த பெரிய மரக்கட்டையில் அமர்ந்து பல் துலக்க ஆரம்பித்தான். அவனை ஏதோ ஒன்று தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதை உணர்ந்தான். திடீரென்று பற்பசையையும் பிரசையும் குப்பையை நோக்கி வீசினான்.

” இதுக்கு முன்னாடி நம்ம தாத்தா பாட்டியெல்லாம் இதுலயா வெலக்குனாங்க …. அவங்க பல்லு எவ்ளோ உறுதியா இருந்துச்சு… தாத்தா சாகுற வரைக்கும் …. கறிக்குழம்புல கெடக்குற எலும்ப கடிச்சு மென்னுருவாரே… அவரு இதுல வெலக்கி ஒருநாளுகூட பாத்தது இல்லயே…. அப்புடினா… எல்லாம் வணிக நோக்கத்தோடுதான் வாழ்க்கைய மாத்திட்டானுகளா… இல்ல மாத்திக்கிட்டோமா…” நடக்க ஆரம்பித்தான். நான்கைந்து வீடு தள்ளி சித்திரவேல் வீட்டு முன்னால் நின்ற வேப்பமரத்தில் கீழே நின்றுகொண்டே குச்சியை ஒடித்து பல் துலக்கினான்.

” என்னடா பயலே… காலேசு படிப்பு முடிஞ்சதும் குச்சில வெலக்க ஆரம்பிச்சுட்ட… காசுகன்னி முத்துபய கொடுக்க மாட்டேங்கிறானா…. சொல்லுல அவன உண்டு இல்லனு ஆக்கிப்புடுறேன்…. குச்சியை ஊன்றியபடி சென்ற பெரியவர் மலையப்பனை உதட்டை திறக்காமலேயே சிரித்தபடி பார்த்தான்.

“எல்லாரும் விடிஞ்சுருச்சுனு சொல்றாங்க … ஆனா இப்பதான் இருட்டாயிகிட்டே இருக்கு.. இந்த இருட்டுல இருந்து எப்படி காப்பாத்துறது… நம்ம படிச்சப் படிப்பு இந்த இருட்ட வெலக்காதா… வெளிச்சத்த கொடுத்துறாதா….” யோசணையோடு தொட்டியில் இருந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து சோப்பு போடாமல் முதன்முதலாக குளித்து முடித்தான். அவனுக்குள் ஏதோ புதிதாய் பிறந்தவன் போல் இருந்தது. அடிக்கடி கண்ணாடியில் முகத்தைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டான். அவன் தெருவில் நின்ற அந்த வேப்ப மரம் அவனுக்கு மெல்லிய காற்றை வாரி வழங்கிக்கொண்டு இருந்தது. அவன் சாப்பிட்டுக்கொண்டே அந்த தூய காற்றை சுவாசிக்க தொடங்கினான். இந்தக் காற்று இத்தனை நாள் என்ன செய்துகொண்டு இருந்தது. ஒருவேளை சிறையில் அடைபட்டுக் கிடந்ததா… இல்லை … நான்தான் நேசிக்க மறந்துவிட்டேனா… தனக்குள் கேட்டுக்கொண்டான்.

அவனுக்குத் தெரியும்… இத்தனை நாள் நின்று யோசிக்கக்கூட நேரம் ஒதுக்காமல் பொழுதை வீணாக கழித்துவிட்டோம் என்று. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று எண்ணியே செம்மறி ஆட்டுக் கூட்டம்போல் வாழ்ந்து விட்டோம் என்று தனக்குள் வெட்கப்பட்டுக் கொண்டான். அப்போதுதான் அவனுக்கு நினைவுக்கு வந்தது ….

“எதற்காக அச்சுக்காட்டு ஓரமாய் நின்ற சீமைக்கருவை மரத்த வேரோடு வெட்ட அம்மாவும் அய்யாவும் அவசரப்படுறாக… பேரூராட்சி மூலமா நேத்து பூராவும் ஆட்டோவுல மைக் வச்சு அறிவிச்சது எதுக்கு…. சீமைக்கருவ மரம்தான் மழையத் தடுக்குது. நெலத்தடி நீரு கொறயுதுனு எந்த விஞ்ஞானி சொன்னாரு… எதுக்கு இப்புடி பண்றாங்க … நாம பொறந்ததுக்கு இந்த சுரண்டலயாவது தடுத்தாகனும்…..

வெந்தயக் குழம்பு சோறும் கத்தரி வத்தலும் சுவையாக இருந்தது அவனுக்கு … அப்போது அவன் வீட்டு வாசல் வழியே, வாசலில் சாணம் தெளித்து கோலம் போடும் அம்மாவைப்போல் இரண்டு தண்ணீர் லாரிகள், தண்ணீரை மண் சாலையில் சிந்தியபடி சென்றுகொண்டு இருந்தன. மண்வாசணை அவனை கிரங்கடித்தது.

அவனுக்கு இப்போதுதான் புரிய ஆரம்பித்தது… சின்னவனாக இருந்ததில் இருந்தே இந்த தண்ணீர் லாரிகள் அவன் வீட்டு வழியாகத்தான் செல்லும். லாரிகள் சென்றதும், அவை சிந்திய நீர்பட்ட இடத்தில் தங்களது பெயர்களை அவனது நண்பர்களுடன் எழுதி விளையாடியது நினைவுக்கு வந்தது. யோசிக்க ஆரம்பித்தான்… மழை வராததுக்கும் நிலத்தடி நீர் குறஞ்சதுக்கும் சீமைக்கருவ மரங்கள் மட்டும் என்னடா பாவம் பண்ணுச்சு…”

சாப்பிட்டு முடித்தவன் கதவை பூட்டிவிட்டு நடக்க ஆரம்பித்தான். அவனுக்கு ஓரளவு விடை கிடைத்திருந்தது….

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வானம் பார்த்த பூமிதான். சீமைக்கருவ மரத்துக்கு இணையா சோளக்காடும் சக்கரவள்ளிக்கிழங்கும் எப்படி வெளஞ்சுச்சு… அப்பவும் மழை கொஞ்சமாதானே பேஞ்சுச்சு… குடிக்கிற தண்ணிக்கு ஒரு குறையும் வரலயே….

“ஏலே மாப்ள.. கால்ல செருப்பு கூட போடாம எங்கள கெளம்பிட்ட..எப்பவும் என்னயக் கூப்படுவ… இன்னக்கி மறந்துட்டேளோ… அப்புடி என்னலே தல போற காரியம் …” மாரிமுத்து கூப்பிட்டதும் திரும்பி பார்த்தான். அவன் முகத்தில் ஏதோ ஒரு வெறி குடிகொண்டிருப்பதை உணர்ந்து கொண்டான்.

“எதுக்குலே மூஞ்சி வாட்டமா இருக்கு…..ஏலே சவுதில இருந்து வந்து ஏழுநாளா.. எங்காச்சும் ஒன்னவிட்டு பிரிஞ்சுருக்கேனா…. இந்த ஒட்டப்பிடாரத்துல ஒன்னய காயப்படுத்துனவன் எவன்ல…மூஞ்ச பேத்தர்றேன். முகத்தை தட்டிக்கொடுத்து கைகள் இரண்டையும் இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.

” மாப்ள ஒனக்கு தெரியும்ல.. எங்க அய்யா அடிக்கடி சொல்வாருலே… அப்ப சோளப் பஞ்ச காலமா… அந்த நேரத்துல இந்த சீமைக்கருவதான்ல எல்லாருக்கும் சோறு போட்டுருக்கு. இன்னக்கிவரைக்கும் நம்மாளுகளுக்கு இந்த சீமைக்கருவதான்ல கஞ்சி ஊத்திகிட்டு இருக்கு. சீமைக்கருவ தண்ணிய உறிஞ்சுதுங்குறதுகூட உண்மையா இருக்கலாம். அதுக்காக நெலத்தடி நீரு வத்துற அளவுக்கு அது உறிஞ்சுறது இல்லயே…. இத்தன வருசமா உறிஞ்சாத சீமைக்கருவயா இப்ப அதிகமா உறிஞ்சப் போகுது….”

” ஏலே என்னலே ஆச்சு.. இப்புடி பேசுற. நீ எதையும் புதுசா கெளப்பி விட்றாதல… நாடு கெட்டுப்போயி கெடக்குது. வய வாக்கானு அத்தனையும் அவனுகளே எடுத்துக்கிற அளவுக்கு சட்டத்த போட்டு நாட்டக் கெடுத்துக்கிட்டு இருக்கானுக… மாடா மனுசனானு பாத்தா .. மாடுதான் முக்கியமுனு மனுசன கொல்லுற காலமா இருக்குலே… அதுல வேற கெவுர்மெண்ட் கம்பெனிய பூரா தனியாருக வாங்கிக்கிட்டு இருக்காக… போற போக்கப்பாத்தா பெரிய பணக்காரனுககிட்ட நாட்ட ஏலம் விட்டு சம்பாதிக்கிற அளவுக்கு இந்த நாட்டோட அரசியல் போயிகிட்டு இருக்கு. இதுல நீ எதயாவது சொல்லப் போயி தேசத்துரோகினு சொல்லி காலம்பூரா செயிலுல அடச்சுவச்சு களி திங்க வச்சுருவானுகலே….”

“அப்ப வாய மூடிக்கிட்டு இருக்க சொல்றியா…இந்த ஒட்டப்பிடாரத்துலயே போர் போட்டு தண்ணிய எடுத்து அதயே ஒரு கேனு தண்ணி நாப்பது ரூவானு விக்கிறானுக பாத்துக்கிட்டு சும்மா இருக்கனுமா…”

“மாப்ள நமக்கெல்லாம் ஒத்து வராதுலே… படிச்சு முடிச்சுட்டியல்ல.. பாஸ்போட்டுக்கு அப்ளே பண்ணு எங்கூடவே சவுதி வந்துரு… கண்ணுக்கு தெரியாம கஷ்டப்பட்டாலும் சொந்த ஊர்ல காசு பணத்தோட நிம்மதியா கொஞ்ச காலமாவது வாழலாம்லே…”

“தங்கண்ணே … ரெண்டு டீ போடுண்ணே…” சொல்லிக்கொண்டே இருவரும் டீக்கடை மேசையில் உட்கார்ந்தனர்.

அப்போது நான்கு அலுமினியக் குடங்களை சைக்கிளில் கட்டிக்கொண்டு வேகமாய் அழுத்திக்கொண்டு புறவழிச்சாலை நோக்கி போய்க்கொண்டு இருந்தான் செல்லத்துரை.

“மாப்ள பாத்தியல்ல அவன… புறவழிச்சாலை தாண்டி விளாத்திகுளம் பக்கத்துலதான் நல்ல தண்ணி கெடக்கிதுனு தண்ணி எடுக்க போயிகிட்டு இருக்கான். அவன் வீட்டுக்கு வர்றதுக்குள்ள பொழுது சாஞ்சுரும்டி… நீ சவுதி போன மூனு வருசத்துல என்னன்னமோ நடந்துருச்சு….”

மாரிமுத்து கையில் இருந்த டீ குவளை இப்போது அதிகமாக சூடாகி இருந்தது. அவனால் டீயை குடிக்க முடியவில்லை. சூட்டோடு குடிக்க முயற்சித்தான். உப்புக்கரித்தது…

” மாப்ள நாம ஏதாவது செஞ்சே ஆகனும்டா…” உதட்டைக் கிழித்துக்கொண்டு வார்த்தைகள் குதித்தன.

கவியரசும் இதைத்தான் எதிர்பார்த்தான்.

இருபது ரூபாய் தாளை எடுத்து தங்கச்சாமியிடம் நீட்டினான் மாரிமுத்து.

“தம்பி நீங்க காசு தர வேண்டாம்பா..நீங்க ஏதோ பண்ணப்போறிகனு எம்மனசு சொல்லுது.. நம்ம ஒட்டப்பிடாரத்த காப்பாத்திருங்கய்யா… ஒங்களோட என்னயவும் சேத்துக்கங்கய்யா…அது போதும் …”

“ஏன்ணே… அடுத்தவங்க வேர்வைய சுரண்டுறது எங்களுக்கு பிடிக்காது. இது ஒன்னோட உழைப்பண்ணே… வாங்கிக்க.. ஆனா எப்பவும் எங்க கூட இரு. ..”

இருபது ரூபாயை வாங்கிக்கொண்டு மீதி எட்டு ரூபாயை திருப்பிக் கொடுத்தார்.

இருவருக்கும் தெரியும் கூட்டாளிகளின் எண்ணிக்கை கூடும் என்று….

இருவரும் கவியரசு வீட்டுக்கு வந்தனர். விவாதங்கள் முற்றி முடிவுக்கு வந்தது.

“ஏலே நீதாலே ஊர்ல இருந்து வந்ததுலயிருந்து இவன கூட்தயிக்கிட்டே திரியுற. ஒரு எடத்துல இருக்க மாட்டேளா… பொழுது சாய ஆரம்பிச்சிருச்சு இப்ப எந்த பஞ்சாயத்துக்குலே தீர்ப்பு சொல்ல கெளம்பிட்டிய… கூட்டாளிக சேந்துருக்கானுக பாரு… சின்னாத்தாகிட்ட நீ சரிபட்டு வருவ… அவ ஆட்ட மேச்சு தேஞ்சு போறா… நாலு காச பாத்தவுடனே ராசாமாருக சுத்த ஆரம்பிச்சுட்டீக…” சித்ரா சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை …

இருவரும் மாரிமுத்து பைக்கில் தூத்துக்குடி நோக்கி பயணித்தனர். எதிரே தண்ணீர் குடங்களுடன் செல்லத்துரை சைக்கிளில் வந்து கொண்டு இருந்தான்.

” குடிக்க தண்ணி கெடக்காம எல்லாரும் பஞ்சாயத்துபோர்டு முன்னால எத்தனையோ தடவ போராட்டம் பண்ணும்போது நாம கண்டுக்காம போயிட்டோமே… படிப்பு கண்ண மறச்சிருச்சோ… தண்ணி லாரி மூலமா ஒன்னுரெண்டு தடவ அதிகாரிக கொடுத்தானுக அதோட சரி …. இனி தண்ணி கஷ்டமே வரக்கூடாது. பெய்யிர மழை மண்ணுல தங்கி காலகாலத்துக்கும் உதவனும்…” நெனப்போடு கவியரசு மாரிமுத்தோடு போய்க்கொண்டு இருந்தான்.

அன்ரது இரவு முழுவதும் மாரிமுத்தும் கவியரசும் ஊர்ஊராக சென்று வந்ததில் சோர்வு அதிகரிக்க விடிந்தும் உறங்கிக்கொண்டு இருந்தனர் அவரவர் வீட்டில்….

ஊருக்குள்ல ஒரே கலவரமா கெடக்குது. இந்த பய சித்ரா மயன்கூடதான் திரிஞ்சான். எல்லாரும் இவனுகளத்தானே சொல்றானுக… நமக்கு எதுக்கு ஊர் வம்பு .. ரோட்டுல போகும்போது லாரியவிட்டு அடிச்சுப் போட்டுட்டு போயிட்டானுகனா கேக்குறதுக்கு யாரு இருக்கா…” சின்னாத்தாள் ஒப்பாரியே வைத்துவிட்டாள்.

“பய எந்திரிக்கலையாத்தா… ” அசோக் கேட்டதும் திடுக்கிட்டாள் சின்னாத்தாள்.

“ஏந்த்தா… ஓம்மயன் எந்திரிச்சுட்டானா…” பதட்டமானாள் சித்ரா.

“இன்னும் எந்திரிக்கல… புள்ள அசந்து தூங்குறான்.. விடிஞ்சதுல இருந்து ஏகப்பட்ட பேரு இவன கேட்டுட்டுப் போயிட்டாங்க… பயமா இருக்கு….”

“அவனையும்தான் ஆளாளுக்கு வந்து வாசல பாத்துட்டு பாத்துட்டு போறாங்க….”

தங்கச்சாமி டீக்கடை எப்போதும் இல்லாத அளவுக்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. எல்லாவற்றையும் தங்கசாமியும் கவனித்துக் கொண்டே இருந்தார். தங்கசாமி எதுவும் தெரியாதது போல் காட்டிக் கொண்டார்.

“நம்ம பசங்க சரியாதானய்யா போஸ்டரு ஒட்டிருக்கானுக…. தலைப்ப பாத்தீகளா எவ்ளோ காரசாரமா இருக்குனு. அந்தக் காரம்தானய்யா நமக்கு இப்ப வேணும். பசங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராம நாமதான் பாத்துக்கனும் ”

” ஊரெல்லாம் ஆரசுவதி மரத்த நட்டு வச்சா எப்புடில நெலத்துல தண்ணி தங்கும். மழை எப்புடில பெய்யும். சீமக்கருவய அழிச்சுப்புட்டா அடுப்பெரிக்க கேசு கம்பெனி காரனுககிட்ட நாம கையேந்தி நிக்கணும். கரி மூட்டம் போட்டு பொழப்பு நடந்துச்சு. இனிமே அதுக்கும் வழி இருக்காது … அரசாங்கம் நம்மல காசு கொடுத்தா ஓட்டு போடுற வக்கத்த கூட்டமுனு நெனச்சுக்கிட்டு இருக்கு…”

“அன்னக்கி எனக்கு தெரிஞ்சு அஞ்சாறு தண்ணி லாரிதான் போச்சு….இப்ப ஆத்துல அங்க இங்கனு போர்போட்டு அய்யாயிரத்துக்கும் மேல தண்ணி லாரிக பெருகிருச்சு… பயலுக சரியாத்தானே சொல்லிருக்கானுக….”

“அப்பல்லாம் திருவு பைப்புல திருவிவிட்டா பைப்புல நாலடிக்கு மேல தண்ணி வந்துச்சு…. இப்ப அஞ்சடி கீழ தோண்டி புடிச்சாலும் சொட்டுச் சொட்டாதானே வருது….”

“கூல்டிரிங்ஸ் கம்பெனி காரனுகளையும் தண்ணி கேனு கம்பெனி காரனுகளையும் பயலுக சொல்ற மாறி விரட்டுனாலே நெலத்துல உள்ள தண்ணி தங்கிடுமே…..”

“அங்க வேல பாக்குறதுல பாதி பேரு நம்ம ஊர சுத்தி உள்ளவனுகதானே….”

“வேலக்கி போகாதனு சொல்லுவோம். அதையும் மீறுனா… சீறுவோம்… அதையும் மீறுனா… தம்பிக சொன்னமாதிரி செவில ஒரக்கிற மாறி போட்டா அடங்கப் போறானுக… எல்லாரையும் மீறி என்னத்த பண்ணிருவானுக…. ஆனா நாம ஒத்துமையா இருக்கனும். நாம பயந்ததாலதான் தாமிரபரணி இன்னக்கி செத்துக்கிட்டு இருக்கு… காப்பாத்துனாதான் நாம வாழ முடியும் ….”

“நெலத்தடி நீரு கொறஞ்சதுக்கு சீமக்கருவையும் ஒரு காரணம்னு தெரிஞ்சா காலப்போக்கில கொஞ்சம் கொஞ்சமா நாமலே அழிச்சிருவோம்….”

“பதனி எறக்குவோம் …. எளநீ குடிக்க வைப்போம்… ஆண்டாண்டு காலமா இதத்தானே குடிச்சோம்…. காப்பி தண்ணிய குடிக்க ஆரம்பிச்சோம்… நீச்சத்தண்ணி குடிச்சா சக்கர வியாதி வருதுனு நம்பி ஏமாந்தோம்…”

“தண்ணி கம்பெனியவும் கூல்டிரிங்ஸ் கம்பெனியவும் மூடச் சொல்லி கலைட்டர் கிட்ட எல்லாரும் முறையிடுவோம்…. அதிகாரத்துல யாரு இருந்தாலும் பேச வந்துதானே ஆகனும்…. நம்ம மண்ண காப்பாத்துனாதான் நாம வாழ முடியும் …. நம்ம வயித்துல அடிச்சவனுக எவனா இருந்தாலும் சொல்றத கேட்கலனா… செவில ஒரைக்கிற மாதிரி அடிக்கிறது தப்பே இல்ல…..”

அங்கிருந்தவர்கள் ஆளுக்கொன்றாய் பேசிக்கொண்டார்கள். டீ ஆத்திக்கொண்டே ” சீறிப்பாய்…. செவியில் அடி….” உரக்க முழக்கமிட்ட தங்கசாமியால் அந்த இடம் சற்று நேரம் நிசப்தமானது…..

எல்லோரும் உள்ளுக்குள் முழங்க ஆரம்பிக்கும் போதே எப்போதும் வாய் திறக்காத தங்கசாமி முழக்கமிட்டதும் ஒட்டப்பிடாரமே போர்க்களம் காண தயாராகியது….

” இன்னக்கி பொழப்பு தலப்புக்கு யாரும் போக வேணாம்… புள்ளக்குட்டிய கூட்டிக்கிட்டு சீக்கிரமா கலெட்டர் ஆபிசுக்கு வந்துருங்கலே… இல்லனா… நாம செத்தா எள்ளு தண்ணீ எறக்க கூட அவனுககிட்டதான் கையேந்தி நிக்கனும்….” சரண்ராசு சொல்லிக்கொண்டே வீட்டுக்கு விரைந்தார்.

தொலைக்காட்சி ஒலி அளவு அதிகமாய் இருக்கவும் கவியரசு மெதுவாய் கண் விழித்துப் பார்த்தான். நாற்காலி ஒன்றில் அமர்ந்தவாறு தலைப்புச் செய்திகளை பார்த்துக்கொண்டு இருந்தான் மாரிமுத்து ….. ” சீறிப்பாய்…. செவியில் அடி…..” அனைத்து அலைவரிசைகளிலும் இதுதான் முக்கியச் செய்தியாக இருந்தது…

Print Friendly, PDF & Email

3 thoughts on “சீறிப்பாய்… செவியில் அடி…

  1. மாறுபட்ட கோணத்தில் சிறுகதை பயணித்து பின்புலத்து நோக்கங்களை உணரவைத்து உயிர்ப்புள்ள மனிதத்தை மனது எங்கும் தூவிச்செல்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *