கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 14,461 
 

“என்னம்மா அது? பார்த்துப் பார்த்து சிரிச்சிகிட்டிருக்கே?” என்றவாறு எனது படுக்கையருகே வந்தமர்ந்தார் அம்மா.

ஆம். என் கையிலிருக்கும் இந்த புகைப்படம் கடந்த ஒருமணி நேரமாக என்னை எங்கெங்கோ கூட்டிச் செல்லும் வல்லமை பெற்றிருக்கிறது தான்.

எனது பக்கத்துப் படுக்கை, நோயாளி யாருமின்றி காலியாக உள்ளது. எனவே தான் இரண்டாம் வகை சிறப்பு அறை, முதலாம் வகை சிறப்பு அறை போன்ற ஏகாந்தத்தை தருகிறது எனக்கு.

எனது தந்தையின் மத்திய அரசுப் பணிக்கான சிறப்புச் சலுகை என் குடும்பத்தினருக்கான இந்த மருத்துவமனையின் சேவை. பணித் தகுதிக்கேற்ப இட வசதி. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே உள்நோயாளிகள் பிரிவு உண்டு. தலா இருபது படுக்கைகள் கொண்ட பகுதி. அதுவன்றி மூன்றாம் வகை சிறப்பு அறைகள் நான்கு படுக்கைகள் கொண்டிருக்கும். இரண்டாம் வகையெனில் இரண்டு படுக்கைகள் கொண்ட அறைகள். முதல் வகையெனில் ஒரு நோயாளிக்கொரு படுக்கை மற்றும் உடனிருக்கும் துணையாளருக்கு ஒரு படுக்கை. இவையன்றி குழந்தைகள் பிரிவு, கர்ப்பிணிகள் பிரிவு என சகலருக்கும் தனித்தனிப் பிரிவுகளோடு பிரம்மாண்டமானதாய் இருக்கும் மருத்துவமனையின் வளாகம்.

இங்கு வந்து சேர்ந்த போதிருந்த எனது நிலையை இந்தப் பத்து நாட்கள் வெகுவாக சீரமைத்தே இருக்கின்றன.

பாருங்க… இந்த புகைப்படம் எடுத்த கதையை உங்க கிட்ட சொல்லாம ஏதேதோ நட்ட நடுவுல பிடிச்சிப் பேசறேன். நீங்களும் தடுமாறி முழிக்கிறீங்க.

போனமாசம் எங்கப்பா பிறந்த ஊருல கோயில் திருவிழா. பத்திரிகை வந்ததும் அப்பாவுக்கு பால்யகால கும்மாளம் கொண்டாட்டமெல்லாம் நினைவுக்கு வந்தாச்சு. ஒரு நடை போய் வந்தா என்னங்குற ஆசையும் கிளம்பியாச்சு. எல்லா நெருக்கடிகளையும் ஒத்திவெச்சுட்டு, எங்களைத் தயார்ப்படுத்தினார். அம்மாவுக்கு அரை மனசுதான். எதிர்த்துப் பேசாத வழக்கமான அடக்கத்தில் அவங்கவங்களுக்கு வேண்டியதை எடுத்து வெக்கச் சொல்லியாச்சு.

எனக்கு விபரம் தெரிஞ்சு போற முதல் பயணம் அங்கே. தாத்தா பாட்டி அப்பப்போ இங்க வந்து எங்களைப் பார்த்துட்டு, நாலைஞ்சு நாள்கள் தங்கிட்டு கிளம்பிடுவாங்க. ஒவ்வொரு தடவையும் கிளம்பறச்சே எங்களையெல்லாம் தங்களோட கிராமத்துக்கு வரும்படி தவறாம கூப்பிடுவாங்க. தலையாட்டறதோடு சரி நாங்க. ஆதங்கத்தோட அவங்க போறது பார்க்க பாவமாயிருக்கும். தண்ணியக் கிழிச்சிப் போற படகுக்குப் பின்னே உடனடியா ஒண்ணு சேர்ந்துடற தண்ணி போல எங்க தினசரி வாழ்க்கையில அவங்க போன சில நொடியில அந்த அனுதாபமெல்லாம் மறந்து போகும்.

“அங்க உனக்கெல்லாம் சரிப்படாது. அடிக்கடி கரண்ட் போயிடும். டாய்லட் வசதி கிடையாது. எல்லோருமா தாழ்வாரத்துல ஒண்ணுமண்ணா படுக்கணும். நைட்டி போட முடியாது. இருபத்திநாலு மணி நேரமும் புடவையிலதான் இருக்கணும் நான். ஐஸ் வாட்டர் கிடைக்காது. பாத்டப், ஷவர் இல்லாம அண்டா தண்ணிய மொண்டு ஊத்தி தான் குளிக்கணும். ஷார்ட்ஸ், டைட்ஸ் எல்லாம் உனக்கு நாட் அலவ்ட். சுடிதார் தான் அதிகபட்ச நாகரீக உடை அங்கே. கம்ப்யூட்டர், இண்டர்நெட் கிடையாது. பழைய பிளாக் அண்ட் ஒயிட் டி.வி. ஒண்ணுதான். அதிலும் நாலஞ்சு சேனல் கோடும் புள்ளியுமா தெரியும் அவ்வளவுதான். பாட்டி சமையலெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது…”

அப்பப்பா… அம்மா அடுக்கியதெல்லாம் இன்னுமொரு பக்கம் எழுத வரும். அவ்வளவும் வெளியே போயிருந்த அப்பா வீட்டுக்குள்ள நுழையும் வரை தொடர்ந்த பேருரை. எல்லாம் தவளைக் கத்தலாய் பிரயோஜனமற்று, அப்பா குறித்த நாளில் எங்கள் பயணம் நிலைப்பட்டது.

அவரவர் உடமைகள் தனித்தனிப் பைகளில். இணைப்பாக எனது கையடக்க பேனசோனிக் கேமரா பையும்.

“இதெதுக்கு பப்பிம்மா? அங்க வாலுப்பசங்க கையில மாட்டினா அவ்வளவுதான். எதையாவது திருகிவெச்சுடும். இதோட மதிப்பு கூடப் புரியாது அதுங்களுக்கு” அம்மாவின் வெறுப்பில் கசந்து வழிந்தது அவர் குரல்.

“எடுத்துக்கோ வாசு” அப்பாவுக்கு ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். எனக்கு ஆதரவாகவும், அம்மாவுக்கு கண்டனமாகவும்.

அம்மாவுக்கு நான் எப்பவும் ‘பப்பிம்மா’ தான். நான் பிறந்தவுடன் தன் அம்மா பெயரான ‘வாசுகி’யை பிடிவாதமாக ‘வம்சம் விளங்க’ வைத்து விட்டார் அப்பா. தடுக்க முடியாத தன் கையாலாகாத கோபத்தை செல்லப் பெயர் மட்டும் சொல்லிக் கூப்பிட்டு ஆற்றிக் கொள்வாங்க அம்மா. ஆண் வாரிசற்ற ஏக்கம் தெரியாமலிருக்க, ‘வாசு’ எனக் கூப்பிடுவதும், என் மனம் போல் வளர, வாழ அனுமதிக்கும் சுதந்திரத்தோடும் இருப்பவர் அப்பா. நட்பு வட்டாரத்தில் ‘வசு’ என்றோ, ‘வாலு வசு’ என்றோ சொன்னால் அது சாட்சாத் நானாவேன். ரொம்ப மகிழ்வான தருணங்களில் ‘வாடி வக்கி’ என கூப்பிட்டு வாருபவர்களும் உண்டு என் நட்பு பட்டியலில்.

நகரத்தில் என்னை பெரிய்ய தொழில்முறை புகைப்படக்காரியாக்கிய எனது நாற்பதாயிர ரூபாய் மதிப்புடைய டிஜிட்டல் கேமராவும், என் பூர்வீக கிராமத்து மக்களைத் தன்னுள் சுருட்டிக் கொள்ள எங்களுடன் பயணப்பட்டது. ‘எல்லாம் அப்பா தந்த தைரியம் தான்’ முணுமுணுக்கத் தான் முடிந்தது அம்மாவால்.

***

“ஓ… இந்தப் படமா…? உன்னை இந்த நிலைக்குக் கொண்டாந்த அந்தப் பயணத்தையே வெறுக்கிறேன் பப்பிம்மா” கையிலிருந்த புகைப்படத்தை எட்டிப் பார்த்து சொல்றாங்க அம்மா.

“நிச்சயம் நான் அப்படி நினைக்கலேம்மா. என்னைப் பொறுத்தவரை, உற்சாகமான பயணம்தான் அது. நகர வாழ்க்கையோட சொகுசு இல்லாம இருக்கலாம் அங்கே. மனுஷங்க இன்னும் இயந்திரமா ஆகாம அன்பு, பாசம், மனிதாபிமானம் எல்லாம் குறையாம இருக்கிற தன்மை அங்கேயிருக்கு. பணம் ஒண்ணே குறிக்கோளா, சக மனுஷன் பத்தின அக்கறை துளியுமில்லாம, தான், தன் குடும்பம்ன்னு சுருங்கிப் போன நத்தை வாழ்க்கை தானே இங்கே…?”

வாயே திறவாமல் சாத்துகுடியை பிழியும் அம்மாவை பார்த்தபடி தொடர்ந்தேன்.

“டாய்லட் கூட இருக்காதுன்னே. அங்கே பார்த்தா எல்லா வீட்டிலேயும் இருந்தது. தாத்தா வேற நாம சிரமப் படக் கூடாதுன்னு புதுசா நம்ம வீட்டிலிருக்கிற மாதிரியொண்ணும் அவசர அவசரமா கட்டியிருந்தார்…”

“நான் போயி பத்திருபது வருஷம் ஆச்சு. இப்போ பஞ்சாயத்துல எல்லா வீட்டுக்கும் கட்டி தந்திருக்காங்க போல…” இடைவெட்டினார் அம்மா.

“அவங்க பிரியத்துக்கும் வெள்ளந்தியான மனசுக்கும் இணையா நம்மோட சொகுசுகள் ஒண்ணுமே நிக்க முடியாதும்மா. பாருங்க இந்தப் படத்தை… தலையை எண்ணினா நூறைத் தாண்டும் போல. எல்லாரையும் ஒரே புகைப்படத்தில் அடக்க அங்கிருந்த கட்டை வண்டி மேல ஏறி எடுத்தேன்… அந்த அனுபவத்தை இப்ப நினைச்சாலும் சிலிர்ப்பா இருக்கு எனக்கு.”

“ஆ…மா. பொம்பளைங்கள ஒண்ணு சேர்த்து ஆட்டம், பாட்டு, புதிர், பந்தையம்ன்னு நீ செஞ்ச கலாட்டாவில நான் பயந்தே போனேன் பப்பிம்மா. கல்யாணமான புதிசில் அங்கே நாங்க போயிருந்தப்போ இருட்டின பிறகுதான் வாசலுக்கே பொம்பளைங்க வரலாம். அதுவரை அடுப்பங்கரைச் சிறைதான். வெளி ஆம்பளைங்க வீட்டுக்கு வந்தாக்கூட எதிர்ல நின்னு பேசக் கூடாது. மரியாதையில்லையாம். ரொம்ப அவசியம்னா உள்பக்க கதவிடுக்கில மறைஞ்சு நின்னு ரெண்டொரு வார்த்தை பேசலாம். அவ்வளவுதான். இப்ப என்னடான்னா அவங்களும் உன்னோட சேர்ந்து கும்மாளம் போடுறாங்க! என்னா பெருமிதம் உன் மேல அவங்களுக்கு! போற வர்றவங்க கிட்ட எல்லாம் கூப்பிட்டுக் கூப்பிட்டு உன் மகாத்மியத்தைச் சொல்லிச் சொல்லி வாய் ஓயலியே…! தன் வம்ச விளக்கு, தன் ரத்தம்… அதான்”.

“இன்னுமா பாட்டியை மாமியாராவே பார்க்கறே…? ஒரு மனுசியா அவங்களோட நல்ல குணமெல்லாம் தெரிஞ்சும் தெரியாதமாதிரி ‘மருமகள்’ங்கற உறவுப் பிணையிலிருந்து வெளிய வாம்மா…”

“அதிருக்கட்டும்… டாக்டர் ரவுண்ட்ஸ் வர நேரம். டவல்பாத், டிரெஸ் சேஞ்ச் எல்லாம் முடிச்சு ‘நீட்’டாயிடலாம்”.

அம்மா இப்படித்தான். அவள் மனம் ஒப்பாத விஷயமென்றால் அடுத்த செய்திக்கு ‘அதிருக்கட்டும்,’ ‘அது போனாப்போகுது’ போன்ற படிகளிலேறித் தாவி விடுவார்.

அம்மாவுக்கு என்னை ஒப்புக் கொடுத்தபடி, பேச்சைத் தொடர்கிறேன்.

“கபடு சூது இல்லாத மக்கள் மா. திருவிழா முடிஞ்சதும் எல்லோருக்கும் என்னமா ஒரு பரவசம்! ஒருத்தரோடொருத்தர், ‘அப்பாடி, நல்லவிதமா முடிஞ்சுது எல்லாம்’ என்கிற தினுசில் உற்சாகமா பேசிகிட்டே அங்குமிங்குமா நகர்ந்துகிட்டிருந்தாங்க. தூர தேசங்களிலிருந்து வந்து கூடிய உறவும், நட்பும் ஒன்றுகலந்த பெருமிதம். பக்கத்து ஊர்களிலிருந்து திருவிழா பார்க்க வந்த கூட்டம், சாமி பார்க்கவும், திருவிழாக் கடைகளை மொய்க்கவும், வந்த பேருந்தில் ஏற ஓடவுமா ஒரே பரபரப்பு.

முதல்ல நான், ‘எல்லோருமா போட்டோ பிடிச்சுக்கலாம் கூட்டிட்டு வாங்க’ன்னு பொடிசுங்க கிட்ட சொல்லியனுப்பிட்டு கோயில் மேடையில உட்கார்ந்திட்டேன். விடியக்காலம் கூடிக் கும்மியடிச்ச வயசுப்பொண்ணுங்களும், ‘வயசான பொண்ணு’ங்களும், ‘அம்மாடி! நான் மாட்டேன்’ன்னு குடிசைக்குள்ள பதுங்குதுங்க! இதோ… கடைசியில நிக்கற வெள்ளையம்மா பாட்டிதான் அவங்களை அதட்டி மெரட்டி ஒண்ணு சேர்த்தாங்க.

“அடிச் சிறுக்கிங்களா… சேவேரியார் பேத்தி பட்டணத்தில பெரிய படிப்பெல்லாம் படிச்ச குமரி… நம்மளையும் மதிச்சு, போட்டோ புடிக்கக் கூப்புடுது. ரொம்பத்தான் பிகு காட்டிகிட்டு…வெளிய வாங்கடி. எல்லாப் பெண்டுகளும் வீரன்கோயில் திட்டுல இன்னும் ஒரு நாழியில கூடணும்… ஆமாம், சொல்லிட்டேன்.” நான் வெள்ளையம்மா பாட்டி போல குரலை மாற்றிப் பேசியது அம்மாவுக்கு சிரிப்பாய் இருந்தது.

பாட்டியோட பொக்கைவாயில சுதந்திரமா வெளியேறின குரல், மேடையில உட்கார்ந்திருந்த என்வரைக்கும் கேட்டுச்சு. அடுத்த அரைமணியில திட்டே நிரம்பிடுச்சு.”

எனக்கு உடைமாற்ற உதவியபடி, இணக்கமாக அன்றைய சம்பவங்களை அசை போடுவது போல் மேசைமேலிருந்த அந்தப் புகைப்படத்தில் நிலைத்தன அம்மாவின் கண்கள்.

திருவிழாவுக்கு முதல்நாளிரவு நீண்ட தூரம் பயணித்ததாலோ ஏதேனும் உணவு ஒவ்வாமையாலோ அம்மாவுக்கு செரியாமல் வயிற்று வலி வந்து அவதிப்பட்டதும், பாட்டி கொடுத்த கசாயத்தைக் குடித்த கொஞ்ச நேரத்தில் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு நாலைந்து தடவை ஆனதும் சோர்ந்து போன அம்மாவைக் கண்டு பதறிய பாட்டி, அந்த இருட்டிலும் லாந்தர் வெளிச்சத்தில் கொல்லை கடைசியிலிருந்த அரசமரத்திலிருந்து நாலைந்து துளிர்களை பறித்து வந்து அம்மியில் அரைத்த பிறகு, கட்டியிருந்த கன்றை பசுவிடம் அவிழ்த்து விட்டு மடி சுரந்ததும் அவசரமாக பால் கறந்து அதில் கரைத்து கால்டம்ளர் அம்மாவைக் குடிக்கச் செய்ததும், பிறகு ‘போக்கு’ நின்று அசந்து தூங்கியதும் நினைத்துப் பார்த்துக் கொண்டார் போலும்.

இப்போதும் பேத்திக்கு அடிபட்டது தெரிந்தவுடன் கிளம்பி ஓடி வந்து விட்டார்கள் தாத்தாவும் பாட்டியும். வீட்டைப் பார்த்துக் கொள்ளவும் எல்லோருக்குமாக சமைக்கவும் செய்வதோடு அவர்களது இருப்பு மனசுக்கும் ஒருவித தெம்பை தருகிறது.

கிராமம் பற்றிய அவரது வெறுப்பும், தன் மாமியார் மேலான கசப்பும் அதோ… கழற்றியெறிந்த என் பழைய உடைகளுடன் அழுக்குக் கூடையில். அப்பாடா!

அம்மா தலைவாரிப் பின்னியதும் மேசையிலிருந்த புகைப்படத்தை கையிலெடுத்துக் கொண்டு சாய்ந்தேன் படுக்கையில்.

“அடடா… இங்கப் பாரேன்மா. அந்தப் பாட்டி தன் மூணு வயசுப் பேத்தியை இழுத்துப் பக்கத்தில் நிறுத்திகிட்டு, “இவ முழுசா தெரியறாப்புல எடு ஆத்தா… மொத மொத இப்பத்தான் போட்டோ புடிச்சுக்கறா”ன்னுச்சு. ப்ச்… க்ளிக் பண்ற நேரத்துல பாட்டி மடியில கவுந்துட்டா பேத்தி. பாரு… முதுகுதான் தெரியுது.

இங்கப் பாரு… இரண்டாவது வரிசையில வாய் பொத்திச் சிரிக்கறது போல முகத்தைக் கைக்குள்ள ஒளிச்சிட்டாங்க ஒருத்தங்க.

நடுவுல இடது மூலை பாரேன். தன் தூக்கின பல்வரிசை தெரியக்கூடாதுன்னே ஒருபக்கமா திரும்பி நிக்கறாங்க ஒரு அக்கா.

பின் வரிசையில கடைசியில கம்பீரமா கைகட்டி தைரியமா பார்க்கறாங்க ஒரு அம்மா. சிரிக்காட்டியும் அவங்க கண்ணுங்க பிரகாசமாயிருக்கறது அழகாத் தான் இருக்கு”.

நான் போட்டோவில் இலயித்திருக்க அப்பப்போ என்னைப் பார்த்து கசியும் மனசைக் கட்டுப்படுத்தியபடி கேட்பதாய் பாவனை செய்து ம்…ம்… கொட்டுகிறாள் அம்மா. பார்ப்பவரிடமெல்லாம் நிறையொன்றே காணும் நல்ல குணமுள்ள இச்சிறு பெண்ணை எதற்குத் துன்பம் தீண்ட வேண்டும்?

“அம்மாம்மா… தோ… இவங்க எல்லாம் சரியான வாய்க்காரங்க போல. சித்த நேரம் கூடப் பேசாமலிருக்க முடியாம பக்கத்துல நிக்கிற தன் வயசுப் பெண்கள் கிட்டே பேசிட்டே இருந்ததாலே விதவிதமா காட்சியளிக்கிறாங்க. இறுக்கமா நிக்கறதை விட இதுவும் அழகாத்தானிருக்கு.

சிரிச்ச முகமா எப்பவும் இருக்கறவங்க எல்லாம் வெள்ளந்தியா நேரா படமெடுக்கற என்னைப் பார்த்து சிரிக்கிறாங்க. இதோ பாருங்க… புதுப் பொண்ணாட்டம் தலையைக் குனிஞ்சிகிட்டு கண்ணை மட்டும் உயர்த்திப் பார்த்து வெட்கமா சிரிக்கிறவங்களை…!

பக்கத்துல நின்னுகிட்டு ‘எல்லோரும் ஒரு தபா சத்தமா சிரிங்க’ அப்படீன்னு வம்படிக்கிற வாலுப் பிள்ளைகளை முறைச்சு சிரிப்பை அடக்க முயற்சி பண்றாங்க பாருங்க இவங்க எல்லாம்.

சில பேரோட சிரிப்பு ரொம்ப அழகா இருக்கும்மா. பல்லு தூக்கலான சில பேரு கஷ்டப்பட்டு உதட்டால இழுத்து மூடி பல் தெரியாம இருக்க பிரயாசைப் படறது பார்க்க பாவமாயிருக்கு. அவங்க தாழ்வு மனப்பான்மை என்ன பாடுபடுத்துது கண்வழியா?!

மோனலிசா மாதிரி புன்னகைக்கவும் சிலருக்குத் தெரிஞ்சிருக்கு பாரேன். அவங்க அவங்க சுபாவம் அவங்கவங்க சிரிப்பிலேயே வெளிப்பட்டுடுது… இல்லம்மா….?

ஒண்ணா நிக்கிற சினேகிதிகள், அக்கா தங்கைகளுக்கு இந்த படம் நல்ல ஞாபகார்த்தமா இருக்கப் போவுது. அப்பாகிட்ட சொல்லி நூத்தம்பது பிரதி எடுக்கச் சொல்லியிருக்கேன்.

உடம்பு நல்லானதும் நாம மறுபடி அங்க போறோம். இதையெல்லாம் காட்டி அவங்க பூரிச்சு சிரிக்கறதை மறுபடி படமெடுப்பேன். மறக்காம வெள்ளையம்மா பாட்டியோட பேத்தியை முழுசா ஒண்ணு… சிரிப்போட!

சிரிக்க மறந்து போனவங்களுக்கும், சிரிக்கத் தெரியாதவங்களுக்கும் கூட வாய்விட்டுச் சிரிக்க ஒரு வாய்ப்பா பெரும்பாலும் புகைப்படமெடுக்குற தருணம் அமைஞ்சிடுதுதானே…?!”

கண்கள் மின்ன பேசிக்கொண்டிருந்தவள் அறைக் கதவு தட்டப் படும் ஓசைக்கு தடைபடுகிறேன். டாக்டர் உள் நுழைகிறார்.

“வாசுகி, ஹவ் ஆர் யூ? நைட் வலியில்லாம தூங்கினியா? என்ன சாப்பிட்டே காலையில? லிக்விட் ஃபுட் தானே? லுக்கிங் வெரி ஃப்ரெஷ்… குட்…” இப்போது பேச்சின் குத்தகை டாக்டரிடம் கைமாறி விட்டதோ…!

எல்லாவற்றுக்கும் நிதானமாக பதில் கூறியவள், “எப்போ விடுதலை எனக்கு? இந்த அறைச்சிறையிலேர்ந்து?” என்றேன்.

“ரொம்ப சீக்கிரமா. ‘ஆ’ காட்டு பார்க்கலாம்”.

“…”

“வெல்… கீழ்த் தாடையை இன்னொரு எக்ஸ்-ரே எடுத்துடலாம். எலும்பு நல்லா கூடியாச்சான்னு பார்க்க. பேச முடியுதா? கேட்கவே வேணாம். பக்கத்து அறை பேஷண்டைப் பார்த்து முடிக்கிறவரை உன் குரல்தான் சன்னமா கேட்டுட்டே இருந்துச்சே. முடியுதுன்னு ரொம்ப வாயை அசைச்சுகிட்டே இருக்காதீங்க. மெல்ல மெல்ல பழைய நிலைக்கு வரட்டும்.

உடைஞ்ச முன்பல்லுக்கு அளவு கொடுத்துட்டீங்களா? என்னைக்கு? போன வாரமேயா? அப்போ இன்னும் ரெண்டு மூணு நாள்ல ரெடியாகி வந்துடும். எடுத்து மாட்டிகிட்டு சிரிச்சுட்டே போகவேண்டியது தான் வீட்டுக்கு… டோண்டி ஒர்ரி!” சிரிப்பை மருந்தாக்கி விட்டுப் போனார்.

பக்கத்து அறைக்குப் புதிதாக நேற்றிரவு வந்த நோயாளியின் உறவினர், ஒருக்களித்திருந்த கதவை சற்று திறந்து தலையை மட்டும் நீட்டி, அறையைப் பார்வையால் அளந்தார்.

‘என்ன’ என்பதாய் அம்மா பதில் பார்வை வீச, “என்னாச்சு பாப்பாவுக்கு?” என்றார் சைகை பாதி சத்தம் பாதியாக.

அவரது கண்களில் கொப்பளித்த ஆர்வம், பக்கத்து அறைக்காரருக்கு துணைக்கு இருக்க வந்ததே அக்கம்பக்கம் இருக்கும் மனிதர்களைப் பற்றிய செய்திகளை அறிவதற்காகவே என்பது போலிருந்தது. கூட்டி வந்த நோயாளிக்கு எந்த ஒத்தாசையும் செய்வதைக் காட்டிலும் பார்க்கும் மனிதர்களிடம் அவரவர் கதைகளை கேட்கும் ஆவலே மிகுந்திருந்தது.

திருஷ்டி என்றும், நேரம் சரியில்லை என்றும் இதுவரை வருபவர்களிடம் புலம்பிக் கொண்டிருந்த அம்மா, “சொந்த ஊருக்குத் திருவிழா பார்க்கப் போய் திரும்பறச்சே சின்னதா ஒரு விபத்து. சரியாயிடும்” என்கிறாள் கண்களில் சிரிப்புடன்!

– Dec 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *