சின்ன முள்ளும் பெரிய முள்ளும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 1, 2013
பார்வையிட்டோர்: 27,204 
 

அனிதாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது. பரத்தைக் குளிப்பாட்ட வேண்டும், வயிற்றுக்கு ஏதாவது கொடுத்து பள்ளிக்குக் கிளப்ப வேண்டும். இன்றைக்கென்று பார்த்து குழந்தைக்கு ‘மூடே’ சரியில்லை.

அனிதாவின் கோபம் பரத் மேல் இல்லை. பரத் அழுவது, அனிதா பரபரப்பது எல்லம் தெரிந்தும், தலையே நிமிராமல் கர்மமே கண்ணாக செய்தித்தாளில் ஆழ்ந்திருக்கும் மாமனாரிடம் தான். கொஞ்சம் பேரனைக் கூப்பிட்டு சமாதானப் படுத்தி வைத்துக் கொண்டால் ‘பரபர’வென்று எத்தனை காரியங்களை அனிதா முடிப்பாள்?

ஸ்ரீபெரும்புதூர் மோட்டார் கம்பெனியில் உதவி மேலாளராகப் பணி புரியும் வெங்கடேஷ் சூரியோதத்துக்கு முன்பே கம்பெனி பஸ்ஸைப் பிடிக்க ஓட வேண்டியிருக்கிறது. மாமியார் கல்யாணி ஊரிலிருந்தால் கவலையில்லை. பேரனைக் குளிப்பாட்டி, பருப்பு சாதம் ஊட்டி, கையில் தயிர் சாதமும் அவனுக்குப் பிடித்த காயும் வைத்துக் கட்டிக் கொடுத்து அவனைப் பள்ளிக்குச் செல்ல தயார் செய்து விடுவாள். நகரத்தில் பிரபலமான சாஃப்ட்வேர் கம்பெனியன்றில் சீனியர் இன்ஜினியராகப் பணியாற்றும் அனிதாவுக்கும் காலை உணவைத் தயார் செய்து கொடுத்து வீட்டிலேயே சாப்பிட்டு விட்டுப் போகச் செய்வாள்.

மாமியார் ஊரிலில்லையென்றால் பரத்துக்கு கையில் நூடுல்ஸோ, பிரட்டோ தான் அனிதாவால் கட்டிக் கொடுக்க முடியும். இங்கே சாப்பிட எளிதாக ‘கார்ன்ஃப்ளேக்ஸ்’ போட்டுக் கொடுத்து விடுவாள்.

மாலையில் பரத் பள்ளி விட்டு வந்ததும் தினமும் இட்லி, தோசை, பூரி என்று விதவிதமாக டிபன் செய்து கொடுப்பாள் கல்யாணி. பாட்டி ஊரிலில்லையென்றால் அனிதா ஃப்ரிட்ஜில் வாங்கி வைத்திருக்கும் பழங்களும், நொறுக்குத் தீனிகளுந்தான் தாத்தாவுக்கும் பேரனுக்கும்.

பசை போட்டு ஒட்டினாற் போல சோபாவில் அமர்ந்து நாள் முழுவதும் செய்தித்தாள் படித்து, டீவி பார்த்துப் பொழுதைப் போக்கும் மாமனாரைப் பார்த்தாலே அனிதாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வரும்.

“நாம எல்லோரும் பரபரப்பா ஏதோ பண்ணிக்கிட்டிருக்கிறதைப் பார்த்தும் எந்த உதவியும் செய்யாம நாள் முழுக்க வெட்டியா உட்கார்ந்திக்கிட்டிருக்காரே, நீங்க அவரை ஒரு வார்த்தையாவது கேக்கறீங்களா?” என்று வெங்கடேஷிடம் சீறுவது சமயங்களில் கல்யாணியின் காதுகளிலும் விழத்தான் செய்யும். ஆனால் அம்மாவின் சாந்தமான முகபாவத்திலிருந்து அவள் என்ன நினைக்கிறாள் என்று வெங்கடேஷால் கண்டு பிடிக்கவே முடியாது.

காலை எட்டரை மணிக்குத் தன் காரை எடுத்துக் கொண்டு சோழிங்கநல்லூரில் இருக்கும் அலுவலகத்திற்குப் போகும் அனிதா இரவு வீடு திரும்ப எட்டு ஒன்பது மணியாகி விடும். அக்கம்பக்கம் இருப்பவர்களோடு பழக அவளுக்கு நேரமும் இல்லை, விருப்பமும் இருந்ததில்லை.

அனிதா, வெங்கடேஷ் இருவரும் இரவு தாமதமாக வீட்டுக்கு வருவதால் முதலிலிருந்தே பரத்துக்கு ட்யூஷன் ஏற்பாடு செய்து விட்டாள். ட்யூஷன் மிஸ் சிந்து மாலையில் வந்ததும் முகம் மலர அவளை வரவேற்று பிஸ்கட்டும் டீயும் கொடுத்து உபசரிப்பாள் கல்யாணி. சிந்துவும் பள்ளி ஆசிரியையாக வேலை செய்து விட்டு களைத்துப் போய் வருவதால் நன்றியுடன் அதைப் பெற்றுக் கொள்வாள்.

பரத்துக்கு சிந்து அன்று கடிகாரத்தில் மணி பார்க்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

பெரிய முள் பன்னிரண்டு கட்டங்களையும் ஒரு முழு சுற்று சுற்றி வந்ததும் தான் சின்ன முள் ஒரு கட்டத்தை விட்டு அடுத்தக் கட்டத்துக்கு நகரும் என்று சிந்து சொன்னதும் பரத் சட்டென்று, “சின்னமுள் சரியான சோம்பேறி முள் மிஸ்!” என்றான்.

சிந்து சிரித்தாள்.

“வேகமா ஓடிக்கிட்டே இருந்தா தான் சுறுசுறுப்பு, நிதானமா ஒவ்வொரு கட்டமா நகர்ந்தா சோம்பேறின்னு அர்த்தமில்லே பரத்!” என்றாள்.

“பன்னிரண்டு கட்டங்களையும் பெரிய முள் ஒரு சுற்று சுற்றி வந்ததும் சின்ன முள் ஒரே ஒரு கட்டம் நகருது இல்லே, அப்பத்தான் ஒரு மணி நேரங்கற காலக் கணக்கு நமக்குக் கிடைக்குது. இரண்டும் சேர்ந்து செய்யற வேலையால தான் நமக்கு நேரம் பார்க்க முடியுது” என்ற சிந்து, மேலும் இதை பரத்துக்கு எப்படித் தெளிவாகச் சொல்லலாம் என்று சுற்றுமுற்றும் பார்த்தபோது சமையலறையில் கிரைண்டர் இயங்கிக் கொண்டு இருப்பது தெரிந்தது.

“பரத்! அந்த கிரைண்டரைப் பார்த்தியா? கிரைண்டரோட ஃப்ரேமும், மேல் மூடியும் நகராம ஜாக்கிரதையா பிடிச்சிக்கிறதுனாலத்தான் கிரைண்டர் பாத்திரமும் குழவியும் வேகவேகமாகச் சுத்தி அரைச்சு உனக்கு சாப்பிட டேஸ்டான இட்லியும் தோசையும் கிடைக்குது. அதனால அது அதுக்குன்னு ஒரு வேலை இருக்கிறப்போ எதையும் சோம்பேறி, சுறுசுறுப்புன்னு சொல்ல முடியாது!” என்றாள்.

கல்யாணி ஆர்வமாக தான் சொல்வதையே கவனிப்பதைப் பார்த்துவிட்டு,

“இல்லியாம்மா! அவ்வளவா செயல் திறன் இல்லாதவங்க, சீராகச் செயல் படறவங்க எல்லோரும் சேர்ந்தது தானே குடும்பம், வாழ்க்கை?” என்றாள் சிந்து புன்சிரிப்புடன்.

ஏதோ புரிவது போலிருக்க கல்யாணி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள்.

அடுத்த மாதம் தான் மும்பைக்குக் கௌம்பியபோது தன் கணவரையும் வற்புறுத்தித் தன்னுடன் அழைத்துப்போனாள்.

“பெரியவனுக்கும் வர முடியல. பேத்தியும் உங்களைப் பார்க்கணும்னு கேட்டுக்கிட்டேயிருக்கா. ஒரு பத்து நாள் தானே? வந்துரலாம்!” லேசில் வீட்டை விட்டுக் கிளம்ப மனசு வராமல் கிளம்பினார் அவர்.

மாமியார், மாமனார் இருவரும் இல்லாமல் மொத்தமாக பத்து நாட்கள் தனியாக இருப்பது அனிதாவுக்கு இதுதான் முதல் தடவை.

காலையில் எழுந்ததும் டீவிக்கெதிரே காலியாக உள்ள சோஃபாவைப் பார்த்து, ‘அப்பாடா! சோம்பேறி முகத்தில முழிக்கற வேலை இன்னிக்கு இல்லை!’ என்று இகழ்ச்சியாகத் தன் மாமனாரை நினைத்துக் கொண்டாள்.

பரபரவென்று இயங்கி பரத்தை பாள்ளிக்குத் தயார் செய்தாள். லஞ்ச் பாக்ஸில் நூடுல்ஸ் வைத்து இங்கே சாப்பிட ‘கார்ன்ஃப்ளேக்ஸ்’ கொடுத்தாள். தனக்கு எதுவுமே தேவையில்லை. எல்லாம் அலுவலகத்திலேயே வேளாவேளைக்கு சூடாகக் கிடைக்கும். இரவு மெஸ்ஸில் சப்பாத்திக்குச் சொல்லி விட்டால் போதும், ஒரு நாள் பொழுது ஓடிவிடும்.

பரத் குழந்தையென்பதால் வீட்டுச் சாவியை அவனிடம் குடுக்க முடியவில்லை. அக்கம்பக்கத்தாருடன் பழக்கமில்லாததால் அவர்களிடமும் குடுக்க முடியவில்லை. அதனால் பரத் சாயந்திரம் வந்ததும் பில்டிங் வாட்ச்மேன் அருகேயே விளையாடிக் கொண்டிருக்க வேண்டும், வெங்கடேஷ் வந்ததும் வீட்டுக்குள் வந்து விடலாம் என்று முடிவாயிற்று. சாயந்திரம் ‘ஸ்னாக்ஸ்’ பிஸ்கட்டும் லஞ்ச் பேகிலேயே வைத்தாயிற்று. எல்லா வேலைகளையும் முடித்து விட்டோம் என்கிற மனத் திருப்தியுடன் அனிதா ஆபிசுக்குக் கிளம்பினாள்.

இரவு எட்டு மணிக்கு அனிதா வீடு திரும்பிய போது பரத்தின் முகம் சுரத்தாகவேயில்லை.

“அப்பாவும் லேட்டா வரா. நீயும் லேட்டா வரே. நா எப்போதான் ஹோம் வொர்க் பண்றது?” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே உதடு பிதுங்கி அழுகை வந்து விட்டது.

“ஏன் ட்யூஷன் மிஸ் இன்னிக்கு வரலியா?” என்றாள் அனிதா கோபமாக.

“மிஸ் வந்தாங்க. ஆனா எங்கே ஒக்காந்து சொல்லிக் குடுப்பாங்க? நீ தான் வீட்டைப் பூட்டிட்டுப் போயிட்றயே?” என்றான் பரத் அழுகையினூடே.

“அடச்சே!” அனிதா வெறுப்போடு கைகளை உதறிக் கொண்டாள். “யார் வீட்டில சாவி குடுக்கிறது? வாட்ச்மேன் கிட்டே கொடுக்கவும் பயமாயிருக்கு! அது மட்டுமில்லே! வீடு திறந்திருந்தாலும் குழந்தை எத்தனை நேரம் தனியாயிருப்பான்? உள்ளே தாழ்ப்பாள் போட்டுக்கிட்டு அலுப்பில தூங்கிப் போயிட்டா என்ன செய்யறது?” அனிதா வரிசையா கேட்ட விடை தெரியாத கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாமல் வெங்கடேஷ் மௌனமாக இருந்தான்.

அடுத்த நாள் இரவு அனிதா ஏழுமணிக்கே சீக்கிரமாக வீடு திரும்பினாள். வெங்கடேஷ் இன்னும் வந்திருக்கவில்லை. அ¢ழுதழுது முகம் வீங்கி உட்கார்ந்து கொண்டிருந்த பரத்தை சமாதானப்படுத்தி ஹோம் ஒர்க் செய்ய வைப்பதற்குள் குழந்தைக்குத் தூக்கம் வந்து ஒன்றும் சாப்பிடாமலேயே தூங்கியே விட்டான்.

“ஆயிரம் ரூபா மாசம் சொளையா வாங்கிக்கறா. கார் ஷெட்ல கூட உட்கார்ந்து ட்யூஷன் எடுக்கலாமே?” என்று அனிதா கோபத்தில் இரைந்தாள் வெங்கடேஷ் வந்ததும்.

அது போல பொதுவான இடத்தில் உட்கார்ந்து சொல்லிக்குடுக்கக் கூடியதில் உள்ள அசௌகரியங்களை யூகித்துப் பார்த்த வெங்கடேஷ் மனைவியை சமாதானம் செய்தான்.

“இன்னும் ஆறே நாள் தான்! அப்புறம் அப்பாவும் அம்மாவும் வந்துருவாங்களே?”

மறுநாள் காலை எழுந்ததுமே பரத்துக்கு லேசாக ஜுரம். வெங்கடேஷ் அலுவலகம் போயாகி விட்டது. அனிதாவுக்கு, தான் அலுவலகத்தில் அன்றைய தினம் முடித்துக் குடுக்க வேண்டிய முக்கியமான “ப்ராஜெக்ட்” நினைவுக்கு வர, குழந்தைக்கு ஹார்லிக்ஸைக் கரைத்துக் கொடுத்து ஜுரத்திற்கு மருந்தும் கொடுத்து பள்ளிக்கு அனுப்பி வைத்தாள், ‘லேசான ஜுரந்தான். மாலைக்குள் சரியாகிவிடும்’ என்று.

அலுவலகம் வந்து விட்டாளே தவிர அனிதாவுக்கு வேலையே ஓடவில்லை. ‘குழந்தை என்ன செய்கிறானோ தெரியவில்லையே? ஜுரம் அதிகமாயிருக்குமோ?’ என்ற கவலை மனதை அரித்துக் கொண்டேயிருந்தது. பரத் முந்தைய நாள் இரவும் ஒன்றும் சாப்பிடவில்லை யென்பது நினைவுக்கு வந்ததும் அலுவலகத்தில் அவளுக்கு காலை உணவு உள்ளே இறங்க மறுத்தது.

மாலையில், “ஸாரி அனி! இரவு எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவேன்னே தெரியல. இங்கே எக்கச்சக்கமா ஒரு பிரச்சினைக்கு நடுவில இருக்கேன். நீ கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிடேன்!” என்று வெங்கடேஷ் ஃபோன் செய்ய, அனிதா அவசர அவசரமாகக் கிளம்பினாள்.

பரத் அலுப்பில் வாட்ச்மேன் அருகிலேயே ஒரு செய்தித்தாளின் மீது படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். ஜுரம் நன்றாக விட்டிருந்தது.

மறுநாள் யார் பெர்மிஷன் போட்டு வீட்டுக்கு வருவது என்று இரவு அனிதாவும் வெங்கடேஷ§ம் பேசிக் கொண்டிருந்தபோது,

“பாட்டியில்லேன்னா கூட பரவாயில்லே! தாத்தா மட்டும் இருந்தா கூட வீடு தொறந்திருக்கும் இல்லே? அப்ப சிந்து மிஸ் வர முடியுமே? ஹோம் ஒர்க் முடிக்கலாம். மண்டே டெஸ்ட் வேற இருக்கு” என்றான் பரத் கவலை தோய்ந்த முகத்துடன்.

அனிதாவுக்குத் தூக்கி வாரிப்போட்டது.

‘அட! இவன் சொல்வது கரெக்ட்தான்! மாமியார் எத்தனையோ முறை ஊரிலில்லாமல் இருந்திருக்கிறாள். அப்போதெல்லாம் மாமனார் வீட்டிலிருந்ததால், வீட்டைப் பற்றியோ, குழந்தையைப் பற்றியோ தான் கவலைப் பட நேர்ந்ததே இல்லை’ என்பது நினைவுக்கு வந்தது.

மாமனார் வீட்டிலிருந்தால் வீடு எப்போதும் திறந்தேயிருக்கும். டீவிக் கெதிரேயுள்ள சோஃபாவில் அமர்ந்து, ஹிந்து பேப்பரை காலையில் விட்ட இடத்திலிருந்து படித்துக் கொண்டிருப்பார்.

அடுத்த நாள் மாலையும் அனிதா தான் முதலில் வீடு திரும்பினாள். வாட்ச்மேன் அருகே சின்னதாய் கும்பலைப் பார்த்ததும் பரபரப்பாய் அங்கே சென்றாள்.

“கொழந்த இஸ்கோல் வுட்டு வந்து இங்கே எம் பக்கத்திலேயே தான் குந்திக்கினு இருந்தான். திடீர்னு ‘கேர்’ ஆயிருச்சா இன்னான்னு புரியலீங்கம்மா. மழக்கம் போட்டு வுழுந்திருச்சி!” என்றான் வாட்ச்மேன்.

அதற்குள் கீழ் ஃப்ளாட்டில் இருக்கும் ஒரு பெண்மணி, பரத் முகத்தில் தண்ணீர் அடித்து அவனுக்கு சூடாக பால் குடுக்க முயன்று கொண்டிருந்தாள்.

அனிதா பொங்கி வந்த அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் பரத்தை வாரிப் போட்டுக் கொண்டு காரை அருகிலுள்ள நர்ஸிங்ஹோமுக்கு ஓட்டினாள்.

“ஒண்ணுமில்லேம்மா! பையன் சரியா சாப்பிடலே போல! அதான் பசியில ‘லோ ஷ¨கர்’ ஆகி மயக்கம் வந்திருக்கு!” என்று சொல்லி டாக்டர் உடனடியாக ‘க்ளுக்கோஸ்’ ஏற்ற ஆரம்பித்தார்.

வெங்கடேஷ§க்குத் தகவல் போக பதறியடித்துக் கொண்டு நேராக மருத்துவமனைக்கு ஓடி வந்தான்.

“ரெண்டு பேரும் லட்சங்களில் சம்பாதிக்கிறோம். என்ன ப்ரயோஜனம்? நம்ம ஒரே குழந்தை பசியில மயக்கம் போட்டு………” மேற்கொண்டு பேசமுடியாமல் அனிதா இருதயமே வெடித்து விடும் போல விம்மி விம்மியழுதாள்.

வீட்டிலும் சரியாகச் சாப்பிடவில்லை. கையில் கட்டிக் கொடுத்ததும் அப்படியே திரும்பி வந்து விட்டது. ஜுர வாய்க்கு பிடிக்கவில்லை போலிருக்கிறது. பசிக்காதா பின்னே? மயக்கந்தான் வராதா?

‘பாவம்! ஒண்ணாங்கிளாஸ் படிக்கிற குழந்தைக்கு வயசுக்கு மீறிய டென்ஷன்! ஹோம் ஒர்க் செய்ய யார் உதவி செய்வார்கள்? வீட்டுக்குள் போக முடியவில்லையே? என்று பலவிதமாக!’ வெங்கடேஷ் திக்பிரமை பிடித்தது போல நின்று கொண்டிருந்தான்.

இரண்டு நாட்களாக அனிதா அலுவலகம் போக வில்லை. லீவு எடுத்துக் கொண்டு குழந்தையுடன் வீட்டிலேயே இருந்தாள். பரத் உடல் சற்றே தேறினாற் போல இருந்தது.

மாலை கல்யாணியிடமிருந்து ஃபோன் வந்தது. வெங்கடேஷிடம் பேசிய போது பரத்துக்கு உடம்பு சரியில்லாதது,, மருத்துவமனையில் சேர்த்து ‘டிரிப்ஸ்’ ஏற்றிய விவரமெல்லாம் சொன்னானாம். பதறிப் போய் ஃபோன் செய்தாள்.

“நாளைக்குக் காலை ஃப்ளைட்ல டிக்கெட் கெடச்சிருக்கு. அப்பா உடனே புறப்பட்டு வந்துருவா. நானும் இந்த வாரக் கடைசியில வந்துருவேன். ரொம்பக் கவலையா இருக்கு. குழந்தையை ஜாக்கிரதையா பார்த்துக்கோ!” என்றாள்.

ஒரு வாரத்தில் அனிதா அன்று தான் சற்று ஆசுவாசமாக உணர, பரத் சந்தோஷத்தில் நடனமாடினான்.

“ஹையா! ஜாலி! தாத்தா வந்துருவாளே!”

மறுநாள் மாலை வீடு திரும்பும்போது வீடு தொறந்திருக்கும், தாத்தா இருப்பார் என்று சந்தோஷமாக காலை பரத் பள்ளிக்குச் செல்ல, பரபரப்பாக அலுவலகம் செல்லத் தயரான அனிதா சட்டென்று தயங்கி நின்றாள்.

‘யார் வீட்ல சாவி குடுத்து விட்டுப் போவது? இதோ மாமனார் வந்து விடுவாரே?’
‘பரவாயில்லே! கொஞ்ச நேரந்தானே? அவர் வந்ததும் நா லேட்டா ஆபீசுக்குப் போயிக்கிறேன்’ என்றெல்லாம் அவள் மனதில் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும்போதே, வெங்கடேஷிடமிருந்து ஃபோன்!

“அப்பா கிட்டே வீட்டுச் சாவி ஒண்ணு இருக்காம். உன்னைப் பூட்டிண்டு ஆஃபீசுக்குக் கிளம்பிடச் சொன்னார்” என்றான்.

பளாரென்று கன்னத்தில் அறை விழுந்தது போலத் துடித்துத் திகைத்துப் போய் நின்றாள் அனிதா.

தன் மாட்டுப் பெண்ணிற்கு இன்னொருத்தர் வீட்டில் போய் சாவி கொடுத்து “இன்னார் வந்தால் குடுத்து விடுங்கள்” என்று தயவாகக் கேட்பதெல்லாம் பிடிக்காது என்பதை எவ்வளவு நன்றாக உணர்ந்திருந்தால், அனிதாவை எவ்வளவு நன்றாக புரிந்து வைத்திருந்தால், இவ்வளவு முன்யோசனையோடு வீட்டுச் சாவி ஒன்றைத் தன்னோடு எடுத்துப் போய் அவளுக்கு எந்த மனசங்கடமுமின்றி காப்பாற்றியிருப்பார்?

வாய்க்கு வாய் மாமனாரை ‘வெட்டி! சோம்பேறி!’ என்று சொல்லிக் கொண்டிருந்த மகா சுறுசுறுப்பான அனிதா தான் இப்போது உணர்ச்சி வேகத்தால் தாக்கப்பட்டு குற்ற உணர்வோடு சோம்பேறி போல ஒவ்வொரு படியாக எண்ணி எண்ணி இறங்கிக் கொண்டிருக்கிறாள், அலுவலுகம் போக.

– மங்கையர் மலர் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *