சர்வம் பிரம்ம மயம்!!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 13, 2020
பார்வையிட்டோர்: 7,255 
 

‘இன்னிக்கு சுவாமிகளின் தரிசனம் கிடைக்குமா ??’

ஒரு மூதாட்டி பக்கத்தில் நிற்கும் ஒரு பெரியவரிடத்தில் மெதுவாக கேட்டுக் கொண்டிருக்கிறாள்…

“நம்ப கைல எதுவுமேயில்லை பாட்டி… அதிர்ஷ்டம் இருந்தா இதோ இப்பவே கிடைக்கும்…

இல்லையானால் தலைகீழா நின்னா கூட நாலு நாளானாலும் கிடைக்காது..”

தமிழ் நாடு , கேரளா பார்டரில் ஒரு பெரிய மலையடிவாரத்தில் சின்ன குடிசை… அதில் அமர்ந்திருக்கிறார் கருணாமூர்த்தி சுவாமிகள் ..!!!!

ஒளி வீசும் முகம் … தீர்க்கமான ஊடுருவும் விழிகள் …. பெரும்பாலும் மெளனமே மொழியாய்…. தியானத்தில்…..!!

“லஷ்மி… அம்மா கைய பிடிச்சுக்கோம்மா.. சுவாமிகள் வந்ததும் விழுந்து நமஸ்காரம் பண்ணணும் …”

“தாரா … கொஞ்சம் குழந்தைய பிடி… வேஷ்ட்டிய சரியா கட்டிக்கறேன்…அவுந்து அவுந்து போறது…”

கிரிதரன் குழந்தையை தாராவிடம் நீட்டினான்….

“சந்து ….அம்மா கிட்ட வா..”

குழந்தை பேசாமல் சிரித்துக் கொண்டே இருந்தது….

“கூப்பிட்டா திரும்பி பாக்கறானா பாருங்க… சந்து … இங்க பாரு…”

தாரா குழந்தையை வாங்கிக் கொண்டாள்… குழந்தை சிணுங்க ஆரம்பித்தான்…

அதற்குள் அங்கே சின்ன சலசலப்பு….

“எல்லோரும் அமைதியா நில்லுங்க… சுவாமிகள் வர சமயம்…”

பிரதான சீடர்களில் ஒருவர் சொல்லி விட்டு போகிறார்..

அந்த பெரிய மைதானத்தில் அமைதியாக பக்தர்கள் நின்றபடி சுவாமிகளை வரவேற்க தயாராய் நின்றனர்…

சுவாமிகள் எல்லோரையும் பார்த்து ஆசீர்வாதம் செய்கிறார்.. !!

அவர்களாகவே ஒருவர் பின் ஒருவராக அவரை தரிசிக்க வரிசையில் நிற்கின்றனர் …

தாராவும் கிரிதரும் சுவாமிகளின் அருகில் வந்துவிட்டார்கள்…

கையிலிருந்த பழத்தட்டை லஷ்மி அவர் பாதங்கள் முன்னே வைத்தாள்.எல்லோரும் நமஸ்கரித்தனர்..

“குழந்தை சந்திரசேகரின் ஆயுஷ் ஹோமம் அடுத்த மாசம் வருது.. சுவாமிகள் ஆசீர்வாதம் பண்ணணும்..இது என்னோட மனைவி தாரா.. நான் கிரிதரன்..”

கிரி முடிக்குமுன்…

“வாம்மா குழந்த… நீ லஷ்மி இல்லையா ?? இன்னிக்கு உன் பிறந்த நாள் ஆச்சே …இந்தா பழம் எடுத்துக்கோ..”

வாஞ்சையாய் தலையைத் தொட்டு ஆசீர்வாதம் பண்ணி ஒரு ஆப்பிள் பழத்தைக் குடுத்தார்..

“இல்ல தாத்தா.. என் பர்த்டே நவம்பர் ஆறாம் தேதி…”

ஆறு வயது குழந்தை சுவாமிகளைப்பார்த்து தைரியமாய் பதில் சொன்னாள்…

“லஷ்மி..என்ன இது… அவர் சுவாமிகள் … தாத்தா இல்ல…”

தாரா அவசர அவசரமாய் லஷ்மியை அதட்டினாள்.

“விடும்மா.. நான் தாத்தா தானே… இன்னிக்கு உன்னோட. ஜென்ம நட்சத்திரம் ….அம்மா கிட்ட கேளு…

உங்க தாத்தா நட்சத்திரம்….. அதனால்தான் உங்க தாத்தா பேரு உனக்கு….

உங்க தாத்தா டாக்டர் லஷ்மி நாராயணன் …மகா உசத்தியான சர்ஜனாயிருந்தார் தெரியுமா ……??”

லஷ்மி. ‘ அப்படியா ?’ என்பது போல் அம்மாவைப் பார்த்தாள்….

தாரா அவர் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தாள் ……

கிரிதருக்கு ஒரு சின்ன உறுத்தல்…

குழந்தையை ஆசீர்வாதம் பண்ணாமல் லஷ்மியுடனே பேசிக்கொண்டிருக்கிறாரே…..!!!!

“குழந்த…நீயும் தாத்தா மாதிரி ஊருக்கு உபகாரமாய் இருக்கணும் தம்பிய நீதான் புரிஞ்சுக்கணும்…”

இப்போது சுவாமிகள் கிரிதரிடம் பேசினார்..

“ஆண்டு நிறைவு ஒரு குறையில்லாமல் நடக்கும்…குழந்தை பரிபூரணன்… மௌனத்தால் உலகத்தை புரிந்து கொண்ட பிரம்மன்…”

கிரிதருக்கு அவர் கூறியது தெளிவாக புரியவில்லை…

திரும்பி வரும்போது தாரா ஒன்றுமே பேசவில்லை.. லஷ்மி தான் பேசிக்கொண்டே வந்தாள்.

“தாத்தாவுக்கு எப்படி என்னோடே பர்த்டே தெரிஞ்சுது ???? தாத்தா பேரு எப்படிம்மா தெரியும் …?? …”

“அவருக்கு தெரியாததே இல்லை லஷ்மி…..”

“தாரா … அவர் சந்துவைப் பத்தி சொன்னது உனக்கு புரிஞ்சுதா ???”

***

இரண்டு வருஷத்தில் அவர் சொன்னது கொஞ்சம் கொஞ்சமாய் புரிய ஆரம்பித்தது …..

தாராவின் அப்பா லஷ்மி நாராயணன் ஊரில் புகழ் பெற்ற நரம்பியல் நிபுணர்…

மூளையில் எந்த பிரச்சனையும் வந்தாலும் அவர் கை வைத்தால் சரியாகி விடும்…

பணம் அவருக்கு ஒரு பொருட்டேயில்லை…. எத்தனையோ இலவச ஆபரேஷன்கள்….

தாரா அவரின் ஒரே செல்ல புத்திரி… அவருடைய மாணவன் குகனே அவருக்கு மருமகனாய் வந்தது அவருடைய பாக்கியம்…

ஆனால் அவர்களுடைய சந்தோஷம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை…!!!

பங்களூருவில் ஒரு நியூராலஜி கான்ஃப்ரன்ஸ் முடிந்து வரும்போது காரும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் , தப்பித்தது தாரா மட்டும் தான்..!!!

இல்லை.. இல்லை..!!!!

லஷ்மியும்…தாரா வயிற்றில் மூன்று மாச குழந்தையாய்..!!

தாரா அதிர்ச்சியிலிருந்து மீள ஒரு வருஷமானது… லஷ்மி , தாரா முகம் மட்டுமே பார்த்து வளர்ந்த குழந்தை…

மன நிம்மதிக்காக தாரா இந்தியா எக்ஸ்போர்ட்டில் வேலைக்கு சேர்ந்தாள்.. கிரிதரின் P.A . வாக….!!!

கிரிதரன் கம்பெனியின் நிர்வாக அதிகாரி.. பக்கா ஜென்டில்மேன்…

எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காதவன் தாராவின் அறிவிலும் அழகிலும் விழுந்து விட்டான்…

கிரிதரன் அவ்வளவு சுலபத்தில் ஒரு முடிவுக்கு வர மாட்டான்.வந்துவிட்டால் அதில் மாற்றம் என்பதே கிடையாது ..

தாராவை தன்னுடைய வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள முடிவு செய்து விட்டான்.

தன்னுடைய அம்மாவிடமும் தாராவிடமும் அனுமதி பெற தீர்மானம் செய்து விட்டான்..

ஆஃபீஸ் வேலைகளைத் தவிர தாராவிடம் இது வரை ஒரு வார்த்தை பேசியதில்லை.!!!

ஒரு நாள் தாரா வேலையை முடித்து விட்டு அறையிலிருந்து வெளியேறும்போது…

“எக்ஸ்யூஸ் மீ , தாரா.! எனக்காக ஒரு நிமிடம் ஒதுக்க முடியுமா…?? உன்னிடம் ஒரு பர்சனல் விஷயம் பேச வேண்டும்…”

இதுவரையில் கிரி இதுமாதிரி அவளிடம் பேசியதில்லை..தாரா ஒரு நிமிடம் தயங்கியவள் திரும்பி வந்தாள்..

“உட்காருங்கள் தாரா ..”

“இல்ல.. வேண்டாம்.. சொல்லுங்க சார் .”

“தாரா… உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ஐ மீன்…ஐ லவ் யூ…..I உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன்….நீ நல்லா யோசிச்சு பார்த்து பதில் சொல்லலாம்.. எவ்வளவு நாள் வேணும்னாலும் எடுத்துக்கோ..பதில் எப்படி இருந்தாலும் பரவாயில்லை.. ஆனால் என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை… இவ்வளவு பிளன்ட்டா கேட்டதுக்கு மன்னிச்சிடுங்க….”

“சார் .. நான்…. எனக்கு… சாரி.. எனக்கு இப்போ போகணும் சார்…….”

கிரிதர் ஆஃபீஸில் யாருடனும் அநாவசியமாக பேச மாட்டான்..

அவனுடைய ஒரே நண்பர் மேனேஜர் கமல்நாத் ஒருவர்தான்.. கம்பெனியில் பத்து வருஷம் அனுபவம்….

“கமல்…உங்க கிட்ட ஒரு விஷயம் ஷேர் பண்ணலாம்னு நினைக்கிறேன்… ரொம்ப பர்சனல்……உங்க ஆலோசனையும் ஆதரவும் தேவை…”

“சொல்லுங்க கிரி…”

“என்னுடைய P.A. தாராவ உங்களுக்கு தெரியும் தானே…”

“அஃப்கோர்ஸ்… ! நான் தானே அப்பாயின்ட் பண்ணினேன். டாக்டர்.லஷ்மிநாராயணனின் ஒரே மகள் .. மிகவும் புத்திசாலியும் சின்சியரான பெண்மணியும் கூட…….”

“நான் அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்…அவ கிட்ட நேத்து இதைப் பத்தி சொல்லி விட்டேன்…”

“கிரி…தாராவைப்பற்றி உங்களுக்கு நல்லா தெரியுமா …?? அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பத்தி…..???”

கிரிக்கு தாராவைப்பற்றி மட்டுமல்ல .. கம்பெனியில் வேலை பார்க்கும் யாருடைய பெர்சனல் வாழ்க்கை பற்றியுமே ஒன்றும் தெரியாது…

ஏன்… கமல்நாத் பற்றி கூட அவ்வளவாய் ஒன்றும் தெரியாது…

“இல்லை கமல்… ஏதாவது முக்கியமாக…..??”

“தாரா ஏற்கனவே திருமணம் ஆனவள்.. ஆனா இப்போ தனியாத்தான்…”

“யூ மீன்…டிவோர்சி ???”

“இல்லை கிரி !! அவள் ஒரு விதவை.. ஒரு கோர கார் விபத்தில் கணவனையும் பெற்றோரையும் பறி கொடுத்தவள்…அதுவும் திருமணமான ஒரு வருடத்துக்குள்ளாகவே..”

ஒரு நிமிஷம் கிரி பேசவேயில்லை…

“கேட்கவே வேதனையாக இருக்கிறது..”

“அது மட்டுமில்லை… அவளுக்கு இரண்டு வயசில் ஒரு பெண் இருக்கிறாள்.லஷ்மி…குழந்தை அப்பா முகத்தைத் கூட பார்த்ததில்லை…”

கொஞ்ச நேரம் இரண்டு பேரும் பேசவில்லை…”

“கிரி…இப்போ உங்க முடிவில ஏதாவது மாற்றம்…..???”

“போ… நாட் அட் ஆல்..!!!

முன்னவிட இன்னும் தீவிரமா இருக்கேன்….”

ஆனால் கிரி நினைத்து போல் காரியங்கள் சுலபமாய் இருக்கவில்லை…

தாராவும் , கிரியின் அம்மாவும் சம்மதிக்க ஆறு மாசமானது..

இப்போது தாரா கிரிதரன்…. ஆறுமாத சந்திரசேகரனின் அம்மா…

கிரிதரன் லஷ்மியிடம் மிகுந்த பாசத்துடன் இருந்தாலும் சந்துவிடம் காட்டும் நெருக்கத்தை அவளிடம் காட்டியதில்லை…

தாராவுக்கு இது கொஞ்சம் நெருடலாகவே இருந்தது…

லஷ்மி பள்ளி விட்டு வந்தால் நேராக சந்துவிடம் தான் வருவாள்……

சந்து லஷ்மியைப்பார்த்தால் இரண்டு கையையும் மேலே தூக்கி சிரிப்பான்…

ஆனால் ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு மூலையில் போய் உட்கார்ந்து விடுவான்…

“அம்மா …சந்து கூப்பிட்டா திரும்பி கூட பாக்க மாட்டேங்கிறான்…

திரும்பி திரும்பி அந்த மூலையில போய் உக்கார்ந்துக்கிறான்…

என்னோட விளையாட மாட்டானா ….???

சந்து யாரையும் திரும்பி பார்ப்பதேயில்லை… சில சமயம் நிறுத்தாமல் பெரிதாக அழுவான்…

அவனுக்கு என்ன வேண்டும் என்றே தாராவுக்கு புரியவில்லை…

வெளியில் கொண்டு போனால் அவனை சமாளிப்பதே பெரும்பாடாகிவிடும்…

சுவாமிகளை பார்த்துவிட்டு வந்தபின் கிரிதரின் கவலை அதிகமானது..

“தாரா.. இரண்டு வயசாகப் போறது… இன்னும் ஒரு வார்த்தை கூடப் பேசலியே..

‘.மௌனத்தால் உலகத்த புரிஞ்சுப்பான்னு சொன்னாரே…ஒருவேள பேச்சு வராதோ …??”

லஷ்மி மட்டும் சுவாமிகளை மறக்கவேயில்லை..

“அம்மா ! எனக்கு மறுபடி அந்த தாத்தாவை பார்க்கணும் போல இருக்கு…”

தாராவுக்கும்தான்…

நாலு பேரும் கருணாமூர்த்தி சுவாமிகளைப் பார்க்க புறப்பட்டனர்…

சுவாமிகள் லஷ்மியைக் கேட்டார்….

“லஷ்மி .. என்னம்மா.. தம்பி பாப்பா உன்னோட பேச மாட்டேங்கிறானா ??
சீக்கிரமே அவன் நினைக்கிறதை நீ புரிஞ்சுப்ப….”

“சுவாமி… மூணு வயசாகப் போறது… சொன்னதெல்லாம் புரிஞ்சுக்கிறான்.. ஆனால் ஒரு வார்த்தை கூட பேசலியே…”

“அவனோட உலகம் வேற….அதிலேயிருந்து அவனை வெளில இழுக்கறதவிட அவனோட உலகத்துக்குள்ள நாம போகமுடியுமான்னு பார்க்கலாமே…லஷ்மியால முடியும்னு தோணறது…!

அவனைப் பத்தின கவலையை விடுங்கோ… அவன் பேசாவிட்டால் என்ன ?? நாமெல்லாம் தான் நிறையவே பேசறோமே !!

அவனால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது….”

கிரிதரால் அப்படி இருக்க முடியவில்லை.. ரொம்பவே உடைந்து போனான்…

ஆனால் தாரா அவனை அப்படியே ஏற்றுக் கொண்டாள்..ஒரு நல்ல குழந்தை மனவளர்ச்சி நிபுணரிடம் காட்ட முடிவு செய்தாள்…

“சந்து பேசாம இருக்கிறதுக்கு அவனோட மூளை வேற மாதிரி செயல்படுவது தான் காரணம் ! இன்னும் விடுபடாத புதிர் இது…

அவன் ‘ Autism spectrum disorder பாதிக்கப்பட்ட குழந்தை… இந்த மாதிரி குழந்தைகள் பலர் ஏதாவது ஒரு துறையில் பிரகாசமான வர வாய்ப்புகள் நிறைய உண்டு..

முதலில் அவனை அப்படியே ஏத்துக்கற மனோபாவமும் பொறுமையும் ரொம்ப அவசியம்…

அவர்களால் மற்றவர்களுடன் எளிதாக பழக முடியாது…தாங்கள் நினைப்பதையும் மற்றவர்களுடன் பேசிப்பகிர்ந்துகொள்ள இயலாது.

நிறைய சென்சரி பயிற்சி மையங்கள் இருக்கு…முதல்ல அதில கவனம் செலுத்துங்க.. நல்ல பலன் இருக்கும்…’”

தாரா தளர்ந்து போகவில்லை… அவனுக்காக எதுவும் செய்ய தயாரானாள்…

லஷ்மி படிக்க உட்காரும்போதெல்லாம் சந்துவும் கூடவே இருப்பான்..

அவன் கையைப்பிடித்து புத்தகத்திலுள்ள படங்களை காட்டுவாள்..

சந்து jigsaw puzzle என்னும் புதிரில் ஒரு ஜீனியஸ் என்றுதான் சொல்ல வேண்டும்..1000 துண்டுகள் உள்ள புதிரை ரொம்ப எளிதாக இருபது நிமிஷத்தில் முடித்து விடுவான் !

லஷ்மி Human Anotomy முழுவதையும் jigsaw puzzle மூலம் அவனுக்கு சொல்லிக் கொடுத்தாள்..!!

மெள்ள மெள்ள அவனுடைய கையைப் பிடித்து கம்யூட்டரில் அவனுக்கு நிறைய கற்றுக் கொடுத்தாள்…

சில சமயம் லஷ்மியே ஆச்சரியப்படும் வகையில் மனித மூளையின் செயல்திறன் பற்றி கம்யூட்டரில் கேள்விகள் கேட்பான்….!

கிரிதர் இப்போதெல்லாம் லஷ்மியுடன் நிறையவே பேசுகிறான்… அவளை முன்னால் ஒதுக்கி வைத்தது இப்போது உறுத்தியது……

அவள் மூலம் தானே சந்துவை புரிந்து கொள்ள முடிகிறது…

சந்து இப்போதெல்லாம் கோபப்படுவதேயில்லை….

அம்மாவுடன் கடைக்குப் போய் தனக்கு வேண்டிய பேஸ்ட் , பிரஷ் , சோப்பு , ஷாம்பூ எல்லாம் அவனே எடுத்துக் கொள்ள பழகிவிட்டான்…..

இதற்கிடையில் மூன்று நான்கு முறை கருணாமூர்த்தி சுவாமிகளை தரிசித்து விட்டார்கள்…

சந்து அங்கு போனதுமே சாந்தமாகி விடுவான்…

சுவாமிகளின் கண்களை நேருக்கு நேர் பார்க்க தயங்கியதே இல்லை… இருவருக்கிடையே மற்றவர்க்கு புரியாத ஏதோ ஒரு பந்தம்….. தொடர்பு…..!!!

லஷ்மி இப்போது ஒரு டாக்டர்….தாத்தா மாதிரி நரம்பியல் துறையில் ஆராய்ச்சி செய்கிறாள்…

ஒரு நாள் சந்துவுடன் கம்ப்யூட்டரில் அவனுடைய சில குறிப்புக்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள்…

திடீரேன்று சந்து ஒரே உணர்ச்சி வசப்பட்டான்….. எழுந்து நின்று இரண்டு கைகளையும் பலமாகத் தட்டினான்.. குறுக்கும் நெடுக்கும் நடக்க ஆரம்பித்தான்….!!!!!

லஷ்மியின் பக்கத்தில் வந்து சத்தமாய் ‘ அம்மா ‘ என்றான்..

லஷ்மியால் நம்ப முடியவில்லை..
உடனே “அப்பா அம்மா “என்று கத்திகொண்டே அவர்களுடைய அறைக்கு போனாள்..

“அம்மா… !!!…. அப்பா….!! உடனே வாங்க..சந்து பேசறான்…’ அம்மான்னு கூப்பிட்டான்…”

இத்தனை நாளாய் ஏங்கினதற்கு பலன் கிடைத்து விட்டது என்று இரண்டு பேரும் ஓடி வந்தார்கள்…

“சந்து….கூடப்பிடுடா… அம்மா சொல்லு… “

எவ்வளவோ கெஞ்சியும் ஒரு வார்த்தை கூட வரவில்லை… அதுதான் முதலும் கடைசியுமாய் அவன் பேசிய ஒரே வார்த்தை…

“லஷ்மி….நீ அதிர்ஷ்டம் பண்ணியிருக்க…உண்மையிலியே நீதான் அவனுக்கு அம்மா அப்பா எல்லாம்.. அதனால்தான் அவன் உன்னை அம்மான்னு கூப்பிட்டிருக்கான்….

லஷ்மியிடம் அவன் ஏதோ முக்கியமாய் சொல்ல வருகிறான் என்று தெரிந்தது…

அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டான்.

அவன் கணினியில் எழுத எழுத லஷ்மி ஆச்சரியத்தில் மிதந்தாள்.
‘”My Brain… My Mind…. The Person I’m…”

அவனுடைய மூளையின் நரம்பணுக்கள் எப்படி வேலை செய்கிறது என்பதை படம் பிடித்து காண்பிப்பது போல் அவ்வளவு நுணுக்கமாக எழுதிக் காண்பித்தான்…

இது வரை விடை தெரியாத எத்தனையோ கேள்விகளுக்கு அதில் விடை இருந்தது…

“அப்பா … அம்மா.. நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன் …என்னோட ஆராய்ச்சியை கொஞ்சம் நிறுத்தி வைக்கப் போறேன் …

சந்துவோட கட்டுரைகள நீங்க படிக்கணும்… ஆட்டிசம் பத்தி அவனுடைய ஆராய்ச்சி நிச்சயம் ஒரு அதிசய கண்டுபிடிப்பு…

இது உலகத்துக்கே பயன் படப்போகும் கண்டு பிடிப்பா இருக்கும் அம்மா…

தன்னுடைய மூளை நிமிஷத்து நிமிஷம் எப்படி செயல்படுதுன்னு இதைவிட விரிவா யாருமே research பண்ணியிருக்க முடியாது…

அதை பப்ளிஷ் பண்றது தான் என்னோடே முதல் வேலை…

“லஷ்மி… அன்னிக்கு கருணாமூர்த்தி சுவாமிகள் சொன்னது நல்லா நினைவிருக்கு…

‘ நீதான் அவன புரிஞ்சுப்ப… அவன் மௌனத்தாலேயே சாதிப்பான் என்றாரே…அது உண்மைதானோ…”

சீக்கிரமே அது உண்மையானது……

***

“மருத்துவ துறைக்கான இந்த வருட நோபல் விருதுக்கு இளம் இந்திய ஆராய்ச்சியாளர் சந்திரசேகர் பரிந்துரை…..

முப்பது வயது நிரம்பிய சந்திரசேகர் ஆட்டிஸம் பற்றிய அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டமைக்காக இந்த பெருமைக்கு தகுதி உடையவராய் தேர்ந்ததெடுக்கப்பட்டிருக்கிறார்….

இவர் ஆட்டிஸம் என்னும் மூளையின் நரம்பணுக்கள் செயல்பாட்டு கோளாறினால் பாதிக்கப் பட்டவர்…

தனது மூளையில் ஏற்பட்ட விஞ்ஞான மாற்றம் குறித்து மிகவும் தெளிவாக..
“My Brain…My Mind….The Person I’m…”என்ற தலைப்பில் மிக அற்புதமான கண்டுபிடிப்பை வெளியிட்டு ஆட்டிஸம் என்னும் புதிரை விடுவிக்க உதவியுள்ளார்..

இந்த ஆராய்ச்சியில் முற்றிலும் உறுதுணையாக இருந்தவர் அவருடைய அக்கா லஷ்மி..

இவரும் ஒரு நரம்பியல் நிபுணர்… காலம் சென்ற பிரபல நியூரோசர்ஜன் டாக்டர்.லஷ்மிநாராயணனின் புதல்வி ஆவார் …..”

***

லஷ்மி தான் ரொம்பவே நெகிழ்ந்து போனாள்… சந்து இத்தனை பெரிய சாதனையை நிகழ்த்துவான் என்று கிரிதரன் கனவிலும் நினைக்கவில்லை….

தாரா லஷ்மியை அப்படியே அணைத்துக் கொண்டாள்…

“லஷ்மி….எப்பிடிம்மா உன்னால….”அவளால் மேலே பேசமுடியவில்லை…

சந்து ஒன்றுமே நடக்காத மாதிரி பழையபடி ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு கை விரல்களால் எதையோ எண்ணிக் கொண்டிருந்தான்….

“ஏம்மா.. நாம சுவாமிகளப் பாத்து இந்த விஷயத்த சொல்ல வேண்டாமா…..???”

“கண்டிப்பா… நாங்களும் அதப் பத்திதான் பேசிட்டிருந்தோம்… நாளைக்கே போலாம்…”

சாதாரணமாக சுவாமிகளைப் பார்க்கப்போவதேன்றால் முதல் நாளே அவருடைய படத்தை சந்துவுக்குக் காட்டி,

“டுமாரோ…. வி… கோ….”என்று சொல்வாள். மறுநாள் சந்து தயாராக காரின் அருகே சிரித்துக் கொண்டே வந்து நிற்பான்..

ஆனால் லஷ்மி சுவாமிகள் படத்தைக் காட்டும் போது அதைப் பார்க்காமல் ஏதோ திருப்பி திருப்பி கைகளை மேலும் கீழும் ஆட்டிக் கொண்டிருந்தான்..

அன்று முழுவதும் தூங்காமல் அறையிலேயே குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டேயிருந்தான்…

அவனைப் பார்க்கவே கஷ்ட்டமாயிருந்தது….தாராவும் தூங்கவில்லை…

காலையில் காரில் எல்லாம் எடுத்து வைத்து விட்டு லஷ்மி அவனைக் கூப்பிடப் போனாள்…அறைக் கதவுமூடியியிருந்தது…

“சந்து…சந்து..வா..நாம சுவாமிகளை பாக்க போகவேண்டாமா …?? நேரமாச்சு… கிளம்பு…”

அறையிலிருந்து ஏதேதோ சத்தம் கேட்டது…. கதவைத் திறந்து பார்த்தாள் லஷ்மி…

கட்டிலின் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான் சந்து ..

“சந்து ..வா..புறப்படு…”

சந்து அங்கிருந்து நகரவில்லை… முடியாது என்பது போல் கையை ஆட்டினான். எவ்வளவோ கெஞ்சியும் கேட்பதாயில்லை …

“லஷ்மி….விட்டுடும்மா … இன்னொரு நாள் பார்ப்போம்….”

அன்றைக்கு பத்திரிகையில் வந்த செய்தி சந்துவின் நடத்தைக்கு விடையாக அமைந்தது…

***

“கருணாமூர்த்தி சுவாமிகள் சமாதி அடைந்தார்…. அவரது பூதவுடல் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது….”

மௌனத்தின் மொழி எல்லைகளைக்கடந்தது அல்லவா…..???

இருவருக்கும் இடையே என்னென்ன பரிமாற்றம் நடந்திருக்குமோ …..???

யாமறியோம் பராபரமே …..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *