சத்தியம் தோற்பதில்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 6, 2014
பார்வையிட்டோர்: 16,741 
 

சாரதாவின் மனதை அக்கினிப் பிழம்பாகக் கொதிக்க வைத்து உணர்வுகளால் பங்கமுற்று, அவள் விழ நேர்ந்த மிகவும் துக்ககரமான ஒரு கரி நாள் அது. புனிதமான தீபாவளி நன்னாளுக்கு முந்தைய தினமென்று நன்றாக ஞாபகமிருக்கிறது அவளுக்கு . அவள் கல்யாண வேள்வி கண்டு ஒரு மாதம் கூட ஆகவில்லை . கல்யாணவேள்வியென்பது வெறும் வரட்டுச் சங்கதியல்ல . பரஸ்பரம் ஆணும் பெண்ணும் உடலால் மட்டுமல்ல மனதாலும் உணர்வுகளாலும் ஒன்றுபட்டு அன்பு நிறைவாக வாழ முடியாமல் போனால் , இந்த வேள்வியென்ற பெயரே வெறும் பகிடிக் கதை தான்

கணவனோடு வாழ்வதற்கென்று அவள் புகுந்த வீட்டிற்கு வந்த போதே நேரம் சரியில்லை. வந்தவுடனேயே அவள் புருஷன் பார்த்திபனுக்கு நடை இடறியது. அவனது மனம் கோணலான நடத்தைக் கோளாறுகளின் முதற்கட்டமாய் அது நிகழ்ந்தது. அவளின் முகம் பார்க்கப் பிடிக்காமல். மனசளவில் உயிர் சங்கமித்து நெருங்கி வராமல், கண்றாவியாக ஒரு கேளிக்கைக் கூத்தாக அது அரங்கேறும்… வெட்கம் கெட்ட உடல் உறவென்று வாய் கூசாமல் சொல்லி விடலாம். அதிலேயும் அவனுக்குப் பூரண மனத் திருப்தி வராமல் போனதற்குப் பாவம் பழி அவள் மீது.

என்ன சொல்லிக் கொன்றார்கள்? தாம்பத்திய உறவுக்கே அவள் லாயக்கில்லாதவளாம்.. அதனால் அவனுக்கு அவள் மீது பெரும் கோபம் காசைக் கொடுத்துத் தன்னை விலைக்கு வாங்கி ஏமாற்றி விட்டதாக அவன் அவளின் தலையிலே பெரிய கல்லைத் தூக்கிப் போட்டுச் சிலுவையறைந்து கொன்று போட்ட மாதிரி அவள் நிலைமை. இந்த லட்சணத்தில் எதுவுமேயறியாத அப்பாவிகளாய் அவளின் அப்பா அம்மா அவர்களின் தலை தீபாவளியை எண்ணி அவர்களுக்குப் புது உடுப்பு வாங்கிக் கொண்டு முதல் நாள் தான் அங்கு வந்த போது அவர்களை முகம் கொடுத்து வரவேற்கக் கூட விரும்பாமல் பார்த்திபன் கோடி மறைவில் போய் ஒதுங்கியது கண்டு சாரதா தன்வசமிழந்து ஒரு நொடியில் கதி கலங்கிப் போனாள். அதன் வெளிப்பாடாக வாசலுக்கு ஓடி வந்த அவள், பெருங்குரலெடுத்துக் கதறியழுத சப்தம் நெஞ்சைப் பதறவைக்க அம்மா ஒரு கணம் ஆடிப்போனாள்.

அவள் இப்படி அழுது ஒரு நாளும் அவர்கள் பார்த்ததில்லை. பிறந்த வீட்டிலே ஒரு குறையுமில்லாமல் மிகவும் அரவணைக்கப்பட்ட செல்லப்பிள்ளையாக வாழ்ந்த அவளுக்கு இப்போது என்ன நேர்ந்து விட்டது?

அதைப் பற்றி அப்பாவின் மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்த போதும் கேட்க மனம் வரவில்லை. இதற்குப் பதில் சொல்லக் கூடிய நிலைமையில் அவளில்லை என்பது அறிவு தீர்க்கமாக அவருக்கு நன்றாகவே புரிந்தது. அம்மாதான் மனம் பொறுக்காமல் கேட்டு விட்டாள்.

“ஏன் சாரு அழுகிறாய் சொல்ல மாட்டியே?”

“ஒன்றுமில்லயம்மா”

“ஒன்றுமில்லாமலா இப்படி அழுகிறாய்?”

அவள் மேற்கொண்டு பேச மனம் வராமல் மெளனம் கனத்துப் பார்வை இடறி எங்கேயோ வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள். சாத்தானின் வாய்க்குள் விழுந்து தான் அவலப்பட்டுக் கொண்டிருப்பதை,, எப்படி வாய் விட்டுச் சொல்லி அழுவதென்று அவளுக்குப் புரியவில்லை. அறிவு மந்தமாகி ஓர் அரைப் பைத்தியக்காரன் போல் நடந்து கொள்ளும் பார்த்திபன் பற்றி ,அவர்களோடு மனம் விட்டுப் பேச விரும்பாமல் அவள் கரையொதுங்குவது கண்டு, அம்மா அவளைப் பின் தொடர்ந்து அறைக்குள் வந்து ஒரு பார்சலை எடுத்து அவளிடம் நீட்டினாள்”

என்னம்மா இதெல்லாம்?”

“உங்கடை தலைதீபாவளிக்கு நாங்கள் தாற புது உடுப்பு இதிலையிருக்கு”

“அம்மா! இதெல்லாம் கொண்டாடுகிற நிலைமையா எனக்கு?”

“உனக்கு என்ன வந்ததென்று நான் கேட்கிறன். சொல்லு”

“அம்மா! அதை அப்ப பார்ப்பம். கெதியிலை தெரிய வரும்” இஞ்சை நிக்க எனக்கு நெஞ்சையடைக்குது. நான் தீக்குளிக்கிற மாதிரி ஒரு நிலைமை உங்களுக்கு வரக்கூடாதென்று என்ரை விருப்பம்”

அவள் என்ன சொல்கிறாள்? அம்மாவுக்கு அவள் சொன்னதைக் கேட்டுத் தலை சுற்றி மயக்கம் வந்து விடும் போலிருந்தது அவள் கணவன் மூலம் நடக்கக் கூடாத ஏதோ நடந்து விட்டதாய் அவளால் உணர முடிந்ததூ அது என்ன என்பதுதான் புரியாத செய்தியாக அவள் மனதைக் குழப்பிற்று அதற்கு மேல் அங்கு நிற்பது சக்தியை மனம் ரீதியாக மேலும் பல சரிவுகளைக் கொடுத்துத் தீக்குளிக்க வைப்பதாகவே அமையுமென அப்பாவின் உள் மனம் சொல்லிற்று

அதன் பிறகு அங்கு நிற்பதே சக்தியை இருப்பு நிலை தவறச் செய்கிற ஒரு பாவச் செயலாகவே அவரால் உணர முடிந்தது. மறு நாள் கந்தசஷ்டி விரதம் வேறு. அதிலும் அம்மா இளநீர் மட்டுமே குடித்துப் பூரண உபவாசம்.. இந்த நிலையில் இனம் பிடிபடாத சக்தியின் மனமுடைந்து போன சோகக் கடலின் கரை விளிம்பில் அவளும் என்பதை நினைக்கும் போது அவருக்குப் பெரும் மன உளைச்சலாக இருந்தது.

சக்தியிடம் விடை பெற்றுக் கொண்டு அம்மாவோடு அவர் கிளம்புகிற போது பார்த்திபனின் அப்பா நீண்ட நேரமாகத் தெருச் சுற்றிய களைப்போடு அவர்களை எதிர்கொண்டு பார்த்தபோது, ஒரு குற்றவாயையே பார்க்கிற மாதிரி, அக்கினிச் சுவாலை வீசுகின்ற அவர் பார்வையின் கனம் தாங்காமல், அப்படிக் கருகி ஒழிவதை விரும்பாமல்,அவர்கள் புறம் போக்காகச் சாலையில் தரித்து நிற்பதை வெறுத்து அவசரமாகப் படலையைத் திறந்து கொண்டு வாசலைத் தாண்டிப் போவது தெரிந்தது.

அவர்கள் போன பிற்பாடு பார்த்திபன் கண்கள் சிவக்க வெளிப்பட்டு அவளை நோக்கி வருவது தெரிந்தது

“ நாளைக்கு நீயும் இதே வழியில் தான் பயணமாக வேணும்.. சொரி! நாளைக்கல்ல. .நாளை தீபாவளியல்லே.. எனக்கு நிறைய அலுவல் இருக்கு. உன்ரை தலை தீபாவளியைப் பற்றி நான் நினைக்கேலை.. உந்தப் புதுப் புடவை வேட்டி எல்லாம் எதுக்குக் கொண்டு வந்தவை? குப்பையிலை போடத் தானே “

“அப்படிச் செய்தால் அப்பா அம்மா வருத்தப்பட மாட்டினமே?

“உன்னை என்ரை தலையிலை கட்டினதுக்கு நல்லாய் அழட்டும் அவையள்”

அவள் பிறகு பேசவில்லை. தாம்பத்திய உறவு எடுபடவில்லையே என்ற அவனது கோபம் நியாயமானதுதானோ என்று அவளுக்குப் பிடிபட மறுத்தது.. அது மட்டுமல்ல. அவள் மீது இது ஒன்றல்ல. இன்னும் எத்தனையோ குற்றச்சாட்டுக்களை அவள் மிகவும் மனம் நொந்து போய் எதிர் கொள்ள நேர்ந்திருக்கிறது. இங்கு இப்படித் தினமும் சொல்லடி பட்டுச் சிலுவையில் தொங்கிச் செத்து மடிந்து போவதை விட, பிறந்த வீட்டிலே போய் வாழாவெட்டியானாலும் பரவாயில்லை நிம்மதியாக இருக்கலாமென்று அவளுக்குப்பட்டது

எனினும் அதில் ஒரு சிக்கல். அவள் அப்படி இருக்க நேர்ந்தால் வெறும் வாயையே மெல்கிற ஊர் வாயிலே அவல் விழுந்த கதை மாதிரித் தான். அவள் ஊர் சிரிக்கத் தலை குனிய நேரிடும். இதுக்குப் பயந்து போய் முக்காடு போட முடியுமா? இப்பொழுதே மானம் கொடி அறுந்து போய்க் காற்றில் பறக்கிறது. இனி முக்காடு எதற்கு? மானம் மறைக்கப் புடவை ஒரு கேடா? நான் பெண் என்பதே ஞாபகத்தில் நிற்க மறுக்கிறது. தாம்பத்திய சுகம் ஒன்றையே பெரிசுபடுத்தி என்னைப் புறம் தள்ளி வெறுக்கிற இவரால் எனக்கு எந்த நிலைமையும் வரலாம் “கடவுளே! இதைத் தாங்கிக் கொள்கிற சக்தியை எனக்கு நீதான் தரவேணும்”

தீபாவளி கழித்து மறு தினம் பார்த்திபன் அவளைக் கூட்டிக் கொண்டு ஏழாலைக்கு வந்த போது அவளின் தங்கை பானுதான் அவர்களை வந்து வரவேற்றாள் வாசல் தாண்டும் போது அவன் கடுமையாகக் குரல் உயர்த்திக் கேட்டான்

“எங்கை கொப்பரும் கொம்மாவும்?”

“கோயிலுக்குப் போயிருக்கினம். கந்தசஷ்டி விரதம். முருகன் கோவிலிலே கந்த புராணப் படிப்பு நடக்குது”. அது தான் …… என்று அவள் முடிக்கவில்லை. இடையில் குறுக்கிட்டு ஆவேசமாய் அவன் கேட்டான்

“ஓ!பெரிய தெய்வப் பிறவிகள்!. பாவம் செய்கிறது. பிறகு அதற்குப் பரிகாரமாகப் புராணம் படிச்சுப் பயன் கேட்டுப் பாவம் கழுவுகிற நினைப்போ?”

அவன் என்ன சொல்ல வருகிறான்? அப்படி என்ன பாவத்தை அவையள் செய்து போட்டினம்,? அது சக்திக்குப் புரிந்தாலும் புரியாத பானுவிற்கு வாய் திறந்து சொல்லக் கூடிய விடயா அது? எப்பேர்ப்பட்ட பெரும் பழி அவள் மீது. கேவலம் சதை வெறி தீர்க்கிற வெறும் உடலுறவு சம்பந்தப்பட்ட அந்த விடயம் ஒரு பெண்ணைப் புறம் தள்ளிக் கருவறுக்கும் அளவுக்கு அவ்வளவு பெரிய குற்றச் செயலா? நான் அப்படித் தானென்பது இன்னும் வைத்திய சான்று பூர்வமாக நிரூபணமாகாத நிலையில் என்னவொரு வக்கிர நினைப்பு இவருக்கு”

“என்ன இரண்டு பேரும் அப்படி யோசிக்கிறியள்? இனி என்னத்தை யோசிச்சு அப்படிக் கிழிக்கப் போறியள்? பெரிய கோட்டை பிடிக்கிற நினைப்பா?” எனக்கு நேரமாகுது கொஞ்ச நாளைக்கு இவள் இஞ்சை இருக்கட்டும்”

அவன் போன பின் சக்தியின் வாழ்வு முற்றாக இருண்டு போன மாதிரித் தான். அணில் கொத்தி விட்டுப் போன மாங்காய் மாதிரி இருக்கிற அவளின் கதை, அத்தோடு முடிந்து விட்ட நிலையில் கோவில் பூஜை கண்டு வந்தாலும் இது ஆறாத ரணகளம் தான் அவளின் பெற்றோரைப் பொறுத்த வரை.

இந்நிலையில் அவன் அவளைக் கை கழுவி விட்டுப் போய் சில மாதங்கள் கழித்து அவனின் தகப்பன் சின்னத்துரை ஒரு தினம் எதிர்பாராத விதமாக அங்கு வந்த போது சக்திக்கு நிலை கொள்ளவில்லை. அவர் தன்னைக் குசலம் விசாரித்து விட்டுப் போக வந்திருப்பதாக அவள் மிகவும் அறியாமையோடு நினைவு கூர்ந்தாள் .அது பெரும் தப்புக் கணக்கென்று பின்னர் தான் உறைத்தது

அவரோடு ஏற்பட்ட மனக்கசப்பை அப்பா வெளிக்காட்டாமல் சகஜமாக அவரை வரவேற்று உபசரித்து உரையாடுகிற சமயம் அவர் ஒரு வெற்றுப் பேப்பரை நீட்டி அவசர தொனியில் சொன்னார்

“இதிலை ஒரேயொரு கையெழுத்து சக்தி போட்டுத் தந்தால் பெரிய காரியம்.. நான் போய் விடுறன்”

அதற்கு அப்பா ஒன்றும் புரியாத பாவனையில் குரலை உயர்த்தி உணர்ச்சிவசப்பட்டுக் கேட்டார்

“என்ன கையெழுத்து ? விளங்கேலையே”

“எல்லாம் விவாகரத்து பெறத்தான்”

“இவ்வளவு சீக்கிரம் முடிவு பண்ணுகிற காரியமா இது? என்ரை மகளிலை பிழையிருந்தால் நான் அதை மறைச்சு இப்படியொரு கல்யாணம் செய்து வைச்சிருக்க மாட்டன். வேணுமெண்டால் இதை நிரூபிக்கவும் நாங்கள் தயார். சக்தி என்ன சொல்கிறாய்? என்று அழுகை குமுறக் கேட்டார் அவர்

“உங்கடை விருப்பம் “என்றாள் சக்தி

“சரி அதையும் பார்த்து விடுவம். பார்த்திபன் என்ன பொய்யா சொல்கிறான் எப்ப பாக்கலாம் சொல்லுங்கோ “

“வாற வெள்ளிக்கிழமை “

“எங்கை என்று சொன்னால் தானே நான் வர ஏலும்”

டாக்டர் குமாரவேலுவின் பிரைவேட் ஆஸ்பத்திரியிலை சோதிச்சுப் பார்ப்பம்.. காலை எட்டு மணிக்கு வாங்கோ”

“ அவர் உங்கடை ஆளல்லே “

“ஆனால் பார்க்கப் போறது வேறை டாக்டர்”

“என்னவோ நடத்துங்கோ”

வெள்ளிக்கிழமை வந்தது. அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து சக்தி பார்திபனையே மனதில் தான் ஆராதிக்கின்ற பெருங்கடவுளாய் நினைவு கூர்ந்த வண்ணம், தலை முழுகி ஒரு புனிததேவதையாய் தான் குற்றமற்றவள் என்பதைச் சான்று பூர்வமாக நிரூபித்து வெற்றி வாகை சூட விரும்பி, அப்பாவுடன் புறப்பட்டு ஆசுபத்திரிக்குப் போன போது, சின்னத்துரை முன்னதாகவே வந்து அவர்களுக்காக மர நிழலில் காத்துக் கொண்டிருந்தார். சக்தியைத் தீக்குளிக்க வைத்துச் சோதிப்பதற்காக வர இருந்த டாக்டர் ஏற்கனவே அவர்களுக்கு அறிமுகமான ஒரு டாக்டர் தான்

மோகனென்ற அந்த டாக்டர் பிரசவத்துறையில் பேர் போன ஒரு வைத்திய நிபுணன். சரியாகப் பத்து மணிக்குத் தான் அவர் வந்து சேர்ந்தார். சக்தியைச் சோதித்துப் பார்த்து விட்டு, அவர் சொன்ன சேதி சின்னத்துரையின் தலையில் பேரிடியாய் விழுந்தது. தாம்பத்திய உறவுக்கு சக்தி முழுமையாகத் தகுதியுடையவள் என்பதே அவர் முத்திரை குத்திக் கொடுத்த நற்சான்றிதழ்.

அதைப் பார்த்து விட்டுச் சின்னத்துரை பெரிதாகச் சத்தம் போட்டுச் சொன்னார்

“நான் இதை நம்ப மாட்டன் . இவரும் உங்கடை ஆள் தானே. உது சரி வராது”

சக்தியைத் தட்டிக் கழிக்க இது ஒரு சாட்டு. இந்தப் பொய்க் குற்றச்சாட்டை ஜீரணிக்க வழியின்றி சக்தி மிகவும் மனமுடைந்து போய் வீடு திரும்பினாள்

இது நடந்து ஒரு கிழமை கூட ஆகவில்லை. பார்த்திபன் அவளோடு விவாகரத்து பெறுவதற்கு சட்டத்தரணியைக் கலந்தாலோசிப்பதாகச் செய்தி வந்த போது அவள் முழுவதுமே நம்பிக்கையிழந்து ஜடம் வெறித்துக் கிடந்த வேளையில் தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது.

திடீரென்று ஒரு நாள் அவள் வாயைப் பொத்திக் கொண்டு வேலியருகே போய்த் தலை குனிந்து ஓங்காளிப்பது கண்டு பதறியபடியே பின்னால் வந்து அம்மா கேட்டாள்

“என்ன சக்தி செய்யுது?

வாந்தியெடுத்தபடியே சக்தி கேட்டாள்

‘ஏனம்மா சத்தி வருகுது”

“அது தான் எனக்கும் விளங்கேலை “ ஒரு வேளை அப்படியும் இருக்குமோ?”

“எப்படி?”

“உனக்குப் பிள்ளை பிறக்ககப் போறதுக்கு இது அறிகுறியென்று எனக்குப் படுகுது”.

“ஐயோ அம்மா விசர்க் கதை கதைக்கிறியள்… எனக்காவது பிள்ளை பிறக்கிறதாவது.. அது எங்கை நடக்கப் போகுது? அதுதான் சொல்லி விட்டாரே! தாம்பத்திய உறவுக்கு நான் தகுதியில்லை என்று. அது மட்டுமே சொன்னவை? நான் சாமத்தியப் படவில்லையென்றும் அவையள் சொல்லுறதைப் பார்த்தால் எனக்கு எப்படிக் குழந்த பிறக்கும்? சொல்லுங்கோவம்மா”

இதைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு அப்பா வந்து சொன்னார்

“எல்லாவற்றையும் மீறிச் சத்தியம் என்ற ஒன்று இருக்கல்லே. அது இப்ப உனக்குக் கைகொடுப்பதாய் நீ ஏன் நம்பக் கூடாது?

“இவளை ஏன் குழப்புறியள்?எதுக்கும் ஒருக்கால் சோதிச்சுப் பார்த்து விடுவம்” என்றாள் அம்மா

“இதுக்கு அந்தச் சனி பிடிச்ச மனிசன் வர வேண்டாம். பிறகும் என்ன சாட்டுச் சொல்லுமோ தெரியேலை. முதலில் நல்லபடியாகக் குழந்தை பிறக்கட்டும். பிறகாவது அவனுக்குப் புத்தி தெளியுதோ பாப்பம் “

சக்தியைச் சோதித்து பார்த்த பிறகு புரிந்தது. அவள் வயிற்றில் குழந்தை உண்டான செய்தி அவர்களுக்கு எப்படியோ தெரிய வந்த போதிலும் அதைத் தட்டிக் கழிப்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள் குழந்தையில்லை அது கட்டி என்பது அவர்கள் வாதம்

கடைசியில் அதுவும் எடுபடவில்லை. குழந்தை குழந்தையாகவே பிறந்த போது சக்திக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை அவளுக்குப் புரிந்தது. இது வெறும் குழந்தையல்ல பொய்த்துப் போகாத தனது சத்திய தரிசன நிலைக்கு அது ஓர் ஒளிக் கடவுளாய் வந்து தோன்றிய சான்று முகம் .அதுவும் ஆண் குழந்தை. அதன் ஒளிபட்டுத் தானும் சிலிர்ப்பது போல உணர்வு தட்டிற்று. இந்தச் சத்திய வெளிப்பாடான ஒளித் தோன்றுதலை அவன் நம்புகிறானோ இல்லையோ? ஆனால் அவன் கோரி நிற்கின்ற விவாகரத்து வழக்கிற்கு இது ஒரு முற்றுப்புள்ளிதான். இனி அது எடுபடாது.. அப்படித் தான் வழக்காக எடுபட முடிந்தாலும் இப்படிக் கரி பூசப்பட்டு இருண்டு போன தன் முகத்தை மறைக்க அவன் முக்காடு போட்டல்லவா வெளிப்பட்டு வந்து நிற்க வேண்டும் என்பதை எண்ண அவளுக்கு எல்லாக் கவலைகளையும் மறந்து வாய் விட்டுச் சிரிக்க வேண்டும் போல் தோன்றியது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *