கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: July 24, 2014
பார்வையிட்டோர்: 10,604 
 

‘சாமி வந்தாச்சா?”

‘வந்தாச்சாவா? இன்னிக்கு பௌர்ணமில்லா, சாமி இங்கேயேதான் இருக்கும். புதுசா கேக்குறீகளே
வெளியூரா?”

‘ஆமா, பக்கத்துல அரிமர்த்தனபுரத்திலயிருந்து வாறேன். கேள்விப்பட்டிருக்கேன். ஆனா முழு விவரமும் தெரியாது. அப்ப, பௌர்ணமின்னா, சாமி இங்கேயேதான் இருக்கும் என்ன?”

‘ம், விடியகாலை அஞ்சு மணிக்கெல்லாம் இங்க வந்துருவாப்ல”.

‘இப்ப எங்கே இருக்காரு?”

‘அந்தா, வனசாஸ்தா சன்னதிக்கு பக்கத்துல மூணு பேரு நின்னு பேசிக்கிட்டிருக்காங்கள்ல, அதுல குங்கும கலர் துண்டைக் கழுத்துல போட்டுக்கிட்டு குள்ளமா இருக்கிறாரே ஒருத்தர், அவரு தான் சங்கிலிச்சாமி”

‘ வீட்டுல ஒரு விவகாரம், அதான் வாக்கு கேட்டுட்டுப் போலாம்னு வந்திருக்கேன்”.

‘ பாப்பும். இன்னிக்கு உங்களுக்கு யோகயிருந்தா சாமி உங்க பேரைக் கூப்பிடும். இல்லைன்னா அடுத்த பௌர்ணமிக்குதான் வரணும். நானும் போன மாசம் வந்தேன் கூப்பிடலை!. இன்னிக்கு எப்படியும் கேட்டுலாம்னு நம்பிக்கிட்டிருக்கேன்”.

செம்பூர் ஆளுங்க இப்படித்தான் சங்கிலிச்சாமியை மலையா நம்பிகிட்டிருக்காங்க. இப்ப ரெண்டு மூணு மாசமா வெளியூர்காரங்களும் வர ஆரம்பிச்சிட்டாங்க. சங்கிலிச்சாமி வாக்குச் சொன்னா அது பலிதம் ஆகுது. அவருட்ட வாக்கு கேட்டுட்டு போயி எது செஞ்சாலும் அது சரியா நடக்குது. அதான், பௌர்ணமிக்குப் பௌர்ணமி இந்த முக்கண்ணியம்மன் கோயில்ல கூட்டம் சேர்ந்துகிட்டேயிருக்குது. முன்னாடி, பெரிய சங்கிலிச்சாமி இருக்கும் போதும் கூட்டம் வரும். ஆனா இந்த அளவுக்கில்ல. சனங்க, பாவம் அதிகமாப் பண்ணப் பண்ண பக்தியும் வளருது.

முக்கண்ணியம்மன் கோயில், ஒரு காட்டுக் கோயில். ஊருக்கு வெளியில, மலையடிவாரத்துல ஒதுங்கியிருக்கிறதால அவ்வளவா யாரும் வரமாட்டாங்க. பௌர்ணமிக்குதான் அங்க விசேஷம். முன்னாடி பெரிய சங்கிலிச்சாமி தான் அங்க நித்திய பூசை பண்ணுவாரு. யாருமே வராத கோயிலுக்கு எல்லா வேலையும் செய்வாரு. தூத்துப் பெருக்கி, சுத்தம் பண்ணி, அவரே தீவார்தனையும் காட்டிடுவாரு. கோவிலு ஒதுங்கியிருக்கிறதால, அங்க கழுதப்புலி, கரடி நடமாட்டம் இருக்குதுன்னு, மலைப்பக்கமா மாடு பத்திட்டு, போனவங்க சொன்னாங்க. அதுலயிருந்து கொஞ்ச நஞ்சம் வந்திட்டுருந்த ஆளுகளும் வர்றதில்ல. சாமிமேல அம்புட்டு நம்பிக்கை. பெரியச் சங்கிலி இதையெல்லாம் கூட்டாக்கவே மாட்டாரு. யாராவது கேட்டா ‘முக்கண்ணியம்மா, பின்ன என்னத்துக்கு இருக்கா? மனசுல அம்மன நெனைச்சுக்கிட்டு வாங்கப்பா! சிங்கம், புலியெல்லாஞ் சீண்டாது”ன்னு சொல்லிடுவாரு.

அவருக்கிருந்த தைரியமும் நம்பிக்கையும் அந்த ஊருல, தங்கதுரைக்கு மட்டுந்தான் இருந்துச்சு. தங்கதுரையப் பத்தி தெரிஞ்சுக்க வேணாமா? அவனுக்கு அம்மா, அப்பா கிடையாது. ஒரே புள்ளை. அவனோட தாத்தா சொத்துன்னு ரெண்டு, மூணு குச்சு வீடு இருந்துச்சு. அதுல ஒன்னுல குடியிருந்துட்டு, மத்தத வாடகைக்கு விட்டிருக்கான். அதான் அவனுக்கு வருமானம். அத்த, ஒண்ணு விட்ட பெரியம்மா எல்லாம் உள்@ர்லயே இருக்காங்கன்னாலும் இவன் அங்கப் போக மாட்டான். அவுங்களும் இவன பெரிசாக் கண்டுக்கிடுததில்ல. சண்iடெயல்லாங் கிடையாது. ஆரம்பத்திலருந்தே அப்படித்தான்.

தங்கதுரை, அவனே பொங்குவான், அவனே சாப்பிடுவான். பத்தாவது வரைக்குந்தான் படிச்சான். எல்லா பாடத்திலயும் ஒரளவுக்கு மார்க் வாங்கிடுவான். ஆனா, இங்கிலீசு தான் அவனுக்கு எட்டிக்காயா இருந்துச்சு. கடைசிப் பரிட்சையில இங்கிலீசு மட்டும் கால வாரிவிட, ‘விட்டதடி ஆச, விளாம்பழத்து ஓட்டோட’ன்னு அத்தோட படிப்புக்கு முழுக்கு போட்டுட்டான். ஆனாலும் புஸ்தகம் வாசிக்கறதுன்னா அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். உள்@ர்ல ஒரேயொரு நூலகம் இருந்துச்சு. அங்க நியூஸ் பேப்பருங்க, வாரப்பத்திரிக்கை, மாசப்பத்திரிக்கை எல்லாம் வரும். இது தவிர பாரதியாரு, பெரியாருன்னு எல்லா முக்கியமான புஸ்தகங்களும் கிடைக்கும். காலைலயிருந்து ராத்திரி வரைக்கும் சேர்த்து, நீளமா ஒரு கொழம்பு, சோறு செஞ்சி வச்சுக்கிட்டு குளிச்சு எடுத்து நெத்தியில அவனுக்கே உண்டான தனி அடையாளம் ஒரு வெரலு நீளத்துக்கு குங்குமத்த இழுத்துக்கிட்டு வெள்ளையுஞ், சொள்ளையுமா லைப்ரரி பெஞ்சுல போயி உக்காந்தான்னா, அவ்வளவுதான். மதியானம் சாப்பிடறதக்குத்தான் வீட்டுக்குப் போவான். திரும்பவும் வாசிக்க வந்துடுவான்.

சாயங்காலம் அஞ்சு மணிக்கு லைப்ரரியன், சாஸ்தாபிள்ளை வீட்டுக்குக் கௌம்பும் போதுதான் அவனும் கௌம்புவான். அது என்னவோ, புஸ்தகம் வாசிக்கறதுன்னா அவனுக்கு ரொம்ப இஷ்டம். ‘இந்த வெள்ளக்காரன் மட்டும் நம்ம நாட்டுக்கு வரலைன்னா, இங்கிலீசுன்னு ஒண்ண பள்ளிக்கூடத்துல வக்கலன்னா எனக்கு இருக்குற அறிவுக்கு, இந்நேரம் படிச்சு பெரிய ஆளா ஆயிருப்பேன்’ தங்கதுரை இப்படித்தான் அடிக்கடி நெனைச்சு பெருமூச்சு விட்டுக்குவான்.

அந்த ஊருல இளவட்டங்கள் எல்லாரும் அவனுக்கு தோஸ்துன்னாலும், சொக்கலிங்கம் ரொம்பவே நெருங்குன நண்பன். சொக்கலிங்கத்துக்கும் அம்மா கெடையாது. சித்திக்காரி கொஞ்சம் கொணங்கெட்டவ. அவ வாய்க்குப் பயந்து பய பாதிநேரம் வீட்டுல இருக்க மாட்டான். பல நாளு தங்கதுரை வீட்டுலதான் சாப்பாடு. அவன் கூடயே தங்கிடுவான். அந்த ஊருல நிறைய பேருக்குப் படிப்பு வாசம் கிடையாது. தங்கதுரை லைப்ரரியே கதின்னு கெடக்கறதாலயும் ஊரு பொதுக் கூட்டங்கள்ல,

திருவிழாக்கள்ல அறிவுப் பூர்வமா தத்துவாத்தமா பேசறதாலயும் ஊருக்குள்ள அவம் பேச்சுக்கு நல்ல மரியாதை. அவனுக்கு இயற்கையாவே நாக்குத் தெறம நல்லாயிருந்துச்சு. யகன மொகனயா எடுத்துகாட்டுகளப் போட்டு அவன் பேசறதுக்கு அந்த ஊருல நெறைய பேரு ரசிகருங்க. ஊர் திருவிழா, கொடை இதெல்லாம் எடுத்து நடத்தறதுல ஊர் பெரியவங்களோட இவனும் முன்னாடி நிப்பான். தங்கதுரைக்கு பக்தியும் அதிகம்தான். ரொம்ப சாமி கும்பிடுவான்.

எல்லா நாளும் சாயங்காலம் அஞ்சுமணிக்கு லைப்ரரி மூடுனதும் நேரா நயினார் கடைக்கு டீ குடிக்கப் போவான். சொக்கலிங்கமும் அங்க வருவான். ரெண்டு பேரும் டீய குடிச்சிட்டு சொக்கலிங்கத்தோட சைக்கிள்ல, மலையடிவாரத்துல இருக்கற முக்கண்ணியம்மன் கோவிலுக்கு போயிருவாங்க. அங்க பெரியசங்கிலிக்கு ஒத்தாசையா வேலைகள செஞ்சு குடுத்துட்டு அவரு பிரசாதமுன்னு ஏதாவது கொஞ்சங் கொடுப்பாரு. அத சாப்பிட்டுட்டு கோயில் வாசல்ல காத்தோட்டமா உக்காந்து பேசிக்கிட்டிருப்பாங்க. அந்த மலையடிவாரத்துக் காத்தும் பட்சிகளோட பாட்டும் ரெண்டு பேருக்கும் மனசுக்குப் பிடிச்ச சமாசாரங்க.

‘அங்க ரெட்டமல நடுவுல விழுத கடம்பா அருவிய பாரேன்டே! தண்ணியா? பாலான்னு சந்தேகமா இருக்கு”. சொக்கலிங்கம் வருணிப்பான். தங்கதுரை இப்படி பதில் சொல்லுவான்.

‘ஆமா! இதப் பாத்தா தண்ணியா? பாலா?ன்னு கேக்கத் தோணும். மாடசாமி கோனாரு மகன் பால் எடுத்தாந்தான்னா பாலா? தண்ணியான்னு? கேக்கத் தோணும்”.

இப்படியே சுவாரசியமா பேசிக்கிட்டிருப்பாங்க. நடைய சாத்திட்டு பெரியசாமி கௌம்பறப்போ, இவங்களும் கௌம்பிடுவாங்க. மூணு பேரும், சைக்கிள் மிதிச்சுகிட்டே, பேசிக்pட்டு ஊரு வந்து சேருவாங்க. யாரு கூடயும், அவ்வளவா பேசாத பெரியசங்கிலி, இந்த ரெண்டு பயக்கக்கூட மட்டுந்தான் கொஞ்சம் சிரிச்சுப் பேசுவாரு. அவருக்கு வாரிசு கெடையாது. சம்சாரமும் உடம்பு சரியில்லாத ஆளு. வீட்டுல பெரியசங்கிலிதான் சமையல் பொறுப்பு. அவரும் எப்பயாச்சும் காய்ச்சல், காமலைன்னு, படுத்துட்டாருன்னா, தங்கதுரைதான் சமைச்சு எடுத்துட்டுப் போயிக் குடுப்பான். இல்லேன்னா, நயினார் கடையில இட்லி வாங்கிட்டுப் போய் குடுப்பான்.

பௌர்ணமிக்குப், பௌர்ணமி முக்கண்ணியம்மன், பெரியசங்கிலி மேல எறங்குதது வழக்கம். அன்னைக்கு மட்டும் அவரு வேற ஆளா இருப்பாரு. காலேலயிருந்து பச்சத் தண்ணிக்கூட பல்லுல படாம, அப்படியொரு வெரதம் இருப்பாரு. யாரு கூடயும் பேசவும் மாட்டாரு. அம்மனுக்கு அன்னைக்கு, ஆறுகால பூசையும் நடக்கும். மத்தியானத்துக்கு மேல ஒவ்வொருத்தரா ஊரு ஆளுக, வர ஆரம்பிப்பாங்க.

கருக்கல்ல, ஆறுமணிக்கெல்லாம் அந்தக் கோயிலே, பரபரன்னு ஆயிடும். வெளிப்பிரகாரத்துல இருக்கற, ‘வனசாஸ்தா’ சன்னதிக்கு பக்கத்துல ஒரு வேப்பமரமும், அதுக்குக் கீழ ஒரு மேடையும் இருக்கும். உடம்பு முழுக்க சங்கிலியைச் சுத்திட்டு, பெரிய சங்கிலி அந்த மேடையில் வந்து உக்காருவாரு. தங்கதுரையும், சொக்கலிங்கமும், திருநீறுத்தட்டு அதுல சூடம், எலுமிச்சப்பழம், எல்லாம் வச்சுக்கிட்டு பயபக்தியோட அவர் பக்கத்துல நின்னுக்கிட்டிருப்பாங்க. கொஞ்சநேரம் கண்ண மூடிகிட்டு அப்படியே இருப்பாரு. வாயி எதையோ முணுமுணுக்கும். அப்புறம் உடம்பு லேசா ஆட ஆரம்பிக்கும். அப்புறம் வட்டம் போடற மாதிரி, எட, வலமா ஆட ஆரம்பிப்பாரு. நேரம் ஆக, ஆக வேகங்கூடும். முன்னாடி நிக்கிற ஆளுக, பரவசமா கும்பிட்டபடி பாத்துக்கிட்டு நிப்பாங்க. அங்க இருக்கிறதுல, யாரையாவது சட்ட கலர வச்சோ தல முடிய வச்சோ அடையாளஞ் சொல்லிக் கூப்பிடுவாரு.

கண்ண மூடிக்கிட்டு, சாமி சரியா தங்களோட அடையாளத்தச் சொல்லி கூப்பிட்டத நெனச்சு ஆச்சரியத்துல, உடம்பு புல்லரிக்க சாமி முன்ன போயி நிப்பாங்க. அவங்க எதுவும் வாயத் தொறக்காமலயே என்னப் பிரச்சனைக்காக வந்திருக்காங்கன்னும் அதுக்கு தீர்வு என்னன்னும் அது எப்படி தீருமுன்னும் ‘வாக்கு’ சொல்லுவாரு. அவங்க விழுந்து கும்பிட்டு எந்திரிக்கறப்போ, திருநீறு பூசி ஒரு எலுமிச்சப்பழமும் குடுத்து, ஆசீர்வாதம் பண்ணுவாரு. அவரு யாரைக் கூப்புடுதாரோ அவங்க மட்டும்தான் முன்னாடி வரணும். பேரு கூப்பிடாதாவங்க இத்தோட அடுத்த பௌர்ணமிக்குத்தான் ‘வாக்கு’ கேட்க வரணும். சங்கிலிச்சாமி வாக்குச் சொல்லி முடிச்சதும், அந்தக் கோயில விட்டு எல்லோரும் உடனே வெளியே போயிடணும். தங்கதுரையும், சொக்கலிங்கமும், கூடத்தான். அப்புறம் உள்ள என்ன நடக்கும்னு தெரியாது. எட்டு எட்டரை மணிக்கெல்லாம் ஒயர் கூடையை;த் தூக்கிட்டு, நடைய சாத்திக்கிட்டு சைக்கிள்ல ஊருக்கு கௌம்பிடுவாரு.

அவரு பாட்டன், முப்பாட்டன் காலத்திலயிருந்து அவங்க குடும்பத்தச் சேந்தவங்க, இப்படி உடம்புல சங்கிலியச் சுத்திக்கிட்டு அருள் வாக்கு சொல்லிக்கிட்டு வாரது வழக்கம். அது என்ன சங்கிலி? அத ஏன் உடம்புல சுத்திக்கிடுதாங்க. இந்த மாதிரி வௌரமெல்லாம் ஊருக்குள்ள யாருக்கும் தெரியாது. பெரிய சங்கிலிக்கிட்ட கேட்டா, ‘பரம்பரபழக்கம் மத்தப்படி எனக்கு முழு வௌரமெல்லாம் தெரியாதுன்னு’ சொல்லிடுவாரு.

பெரியசங்கிலி, சாகறப்போ ரெண்டு நாளு கெடையில கெடந்தாரு. ஊரு பெரியவங்கள தன்னோட வீட்டுக்கு வரச்சொல்லியிருக்காரு. தங்கதுரையும், சொக்கலிங்கமும் அவரு பக்கத்துலயேதான் இருந்தாங்க. தங்கதுரையைத் தொட்டுக் காம்பிச்சாரு. ‘எனக்கப்புறம் இவன் மேலதான் முக்கண்ணியம்மன் எறங்கப்போறா. இவன்தான் சங்கிலிச்சாமியா அருள்வாக்குச் சொல்லப் போறான். கோயில்ல தினப்படி பூசையும் இவன்தான் பண்ணனும். இது அம்மனோட கட்டளை. நேத்து எங்கனவுல வந்து,முக்கண்ணியம்மா சொன்னா!’ அப்படின்னு சொல்லிட்டுப் பொசுக்குன்னு கண்ண மூடிட்டாரு. இதுதான் தங்கதுரை, ‘சின்னச்சங்கிலியா’ ஆன கதை.

இப்ப, இந்தச் சின்னச்சங்கிலியோட அருள்வாக்குக்காகத்தான், இங்க வேப்பமூட்டு மேடைக்கு முன்னாடி எல்லாரும், ஆர்வமா உக்காந்திருக்காங்க. ஆறுமணி ஆச்சுது. தங்கதுரை சங்கிலிய எடுத்து சொக்கலிங்கம் கையில கொடுத்தான் அவந்தானே கூடவே நிக்குற ஆளு!. சொக்கலிங்கம் அதப் பக்தி பரவசத்தோட தங்கதுரை உடம்புல குறுக்கா நெடுக்கா சுத்திவிட்டான். தங்கதுரை ‘சின்னச்சங்கிலியா’ மாறினாரு. மேடையில வந்து உக்காந்தாரு. மெல்ல ஆட ஆரம்பிச்சாரு. ஒவ்வொருத்தரா அடையாளஞ் சொல்லி கூப்பிட ஆரம்பிச்சாரு. அன்னைக்கு என்னவோ ஆறு பேருக்குத்தான் ‘வாக்கும்’ ‘எலுமிச்சப் பழமும்’ வாங்குற யோகமிருந்துச்சு. எட்டு மணிக்கெல்லாம் ரெண்டு பேரும் நடைய சாத்திட்டு கௌம்பிட்டாங்க. அன்னைக்கு ராத்திரி, சொக்கலிங்கம், தங்கதுரை கூடயேத் தங்கிட்டான்.

‘துரை!”

‘ம்”

‘ஒன்னய ஒண்ணு கேக்கலாமாடே!”

‘கேளப்பா”

‘பௌர்ணமிக்குப் பௌர்ணமி, நெசமாவே முக்கண்ணியம்மன் ஒம்மேல எறங்குதோ?”

தங்கதுரை, நண்பனைப் பார்த்து மொறைச்சான். சொக்கலிங்கத்துக்கு ஒரு மாதிரி ஆயிடுத்து. ‘இந்தக் கேள்விய இன்னிக்குக் கேட்டிருக்கக் கூடாதோ? அம்மன் இவன விட்டு, இன்னும் முழுசா எறங்கிப் போகலியோ?’ மனசுக்குள்ள பயந்தான்.

‘கோபப்படாத ஆத்தா! வெளையாட்டுக்குக் கேட்டுட்டேன்;”

இதக் கேட்டதும் ‘ஓஹ்ஹக்ஹோ’ன்னு ஒங்காரமாய்ச் சிரிச்சான், தங்கதுரை. சொக்கலிங்கம் உடம்பு ஓதற, எந்திரிச்சு நின்னு கையெடுத்துக் கும்பிட்டான்.

சிரிச்சு, சிரிச்சு கண்ணு ஓரத்துல தண்ணி கட்டியிருந்துச்சு தங்கதுரைக்கு.

‘;ஏன்டே எந்திரிச்சிட்ட? உக்காருடே? ஆமா! இன்னிக்குத்தான், இந்தக் கேள்விய கேக்கணும்னு உனக்குத் தோணுச்சாக்கும்”

‘ அது . . . . . . . . . . வந்து “

‘பயப்படாம சொல்லு. அம்மன கோயில்லயே எறக்கி விட்டுட்டுத்தான் வீட்டுக்கு வந்தேன்”

‘நீ மொத மொறயா சாமி ஆடின பாரு, அப்பவே யோசிச்சேன். கண்ண முழுசா மூடாம ஓட்டக்கண்ணு போட்டுப் பாக்குறயோன்னு தோணிச்சு. பெரியசங்கிலி மாதிரி இல்லையே, இது வேறமாதிரி இருக்கேன்னு நெனச்சேன். உங்கிட்ட கேக்கப் பயமா இருந்துச்சு”

‘இறுக்கிக் கண்ண மூடிக்கிட்டா எதிர்தாப்புல இருக்கிறவங்கள எப்படி அடையாளஞ் சொல்லி கூப்பிடுதது, நீயே சொல்லு?”

‘அப்பம்?”

‘ஏ நீ என் உயிர் நண்பன்டே! உங்கிட்ட சொல்லுததுக்கு என்ன? பௌர்ணமிக்கு, முக்கண்ணியம்மாவ நெனச்சு நா வெரதம் இருக்கிறது உண்மைதான். சங்கிலிய எடுத்து நீ உடம்பெல்லாஞ் சுத்திவிட்டதும் ஒரு மாதிரி பரவசமா இருக்குமே ஒழிய, வேறெந்த மாயமும் எனக்குள்ள நடக்காது”

‘அப்ப நீ குறி சொல்லுதது?”

‘குத்துமதிப்பாதான்! நான் என்ன பெரியசங்கிலி மாதிரி, வந்தவங்கள எதுவுமே கேக்காம ஞானதிருஷ்டிலயா குறி சொல்லுதேன்?;. ரெண்டு மூணு கேள்வியக் கேட்டு, அவங்க வாயிலயிருந்தே பிரச்சனையைப் போட்டு வாங்குதேன். யாருக்கும் எதுவும் தப்பா தோணுததில்ல போல. ஆளுங்;களுக்கு, பக்தி; முத்திக் கெடக்குல்லா!”

‘நீ சொல்லுத வாக்கு, நெறைய வாட்டி பலிச்சிருக்கு?”

‘ஒரு பிரச்சனையைக் கேக்கும் போதே, அடுத்தடுத்து, அதுல எது, எது நடக்க வாய்ப்பிருக்குன்னு ஊகிச்சுக்குவேன். அதையே அருள்வாக்காச் சொல்லிடுவேன் அவ்வளவுதாம்பா!”

‘ஆனா. . . . . . . . . எதுக்கு துர, இதெல்லாம்?”

“ ஏ! நீ வேற! நானா சங்கிலிச்சாமி ஆவுதன்னு அடம்பிடிச்சேன்?. உசிரு போறப்போக்குல அந்தப் பெரியசங்கிலி என்னய தூண்டிக்காட்டிட்டுப் போயிட்டாரு. நானும், ‘சரி! இந்த ஊரு ஆளுக பௌர்ணமிக்கு முக்கணியம்மன் கோயிலுக்குப் போனா, பிரச்சனையெல்லாஞ் சரியாயிடும்னு நம்புதாங்க. அந்த நம்பிக்கைய வீணா ஏங்கெடுப்பானேன்னு நெனைச்சேன். நம்மால முடியாட்டாலும், தன்ன நம்பி, சன்னிதிக்கு வாரவங்கள, அந்த முக்கண்ணியம்மன் நிச்சயமாக் கைவிடமாட்டா!’ இப்பிடி, அம்மன் மேல எனக்குள்ள நம்பிக்க, எம்மேல ஊருக்கு, இருக்குற நம்பிக்க, அப்பிடியும், இப்படியுமா ஒருபடியா ஓடுது என்ன நாஞ்சொல்லுதது?”

‘சரி விடுடே! நீ என்ன துட்டுக்கு ஆசப்பட்டா இப்படியெல்லாம் செய்யுத?”

‘துட்ட வச்சு நா என்னப் பண்ணப் போறேன்? எனக்கென்னன்னா, இருக்குற வரைக்கும், யாருக்கும் உவத்திரவங் குடுக்காம, நாலு பேருக்கு நல்லது நெனைச்சுக்கிட்டு, நல்லபடியா வாழனும் அவ்வளவுதான். எய்யா ராசா! நீ எதுவும் ஊருக்குள்ள உளறிப்புடாத என்ன?”

‘ஒன்னையப் போயி விட்டுக்குடுப்பனாடே?”

‘அடுத்தமாசம் வாரது ஆடிப்பௌர்ணமி. அதுக்குப் புதுசா ஒண்ணு ரெண்டு விஷயம், செய்யனும்னு மனசுல நெனச்சிருக்கேன்”

‘என்ன செய்யப் போற ?”

‘ஊருக்குள்ள, நெறைய விஷயத்த மாத்த வேண்டியிருக்கு! ஊரு ஊராவா இருக்கு? எங்கப்பாத்தாலும் அட்டூழியம.; எல்லாவனும் வேண்டாத்தனம் நெறைய பண்ண ஆரம்பிச்சுட்டான். நாம என்ன பண்ணுதோம்னா…….”

தங்கதுரை சொன்னதைக் கேட்ட சொக்கலிங்கத்துக்கு கண்ணு பெரிசாச்சு! சிரிச்சான்.

‘சரிதான்! பண்ணிருவம்!” உற்சாகமாச் சொன்னான்.

ஆடிப்பௌர்ணமி வந்துச்சு. முந்தின நாள் சாயங்காலமே ஊரு பெரியதலைங்க, சுந்தரம் பிள்ளை, ‘பர்மா’ சட்டநாதன் , பெரியவீட்டு சோமசுந்தரம் செட்டியாரு எல்லார் வீட்டுக்கும் சொக்கலிங்கமும் அவங்க கூட்டாளி ஜீவக்கனியும் போனாங்க. ‘நாளைக்கு ஆடிப் பௌர்ணமிக்கு அருள்வாக்கு கேக்குற எடத்துக்கு உங்க எல்லாரையும் சங்கிலிச்சாமி கண்டிப்பா வரச் சொல்லியிருக்கு” அப்படின்னுச் சொல்லிட்டு வந்துட்டாங்க.

சொன்னபடியே அடுத்த நாள் ஒருத்தர் பாக்கியில்லாம, எல்லாப் பெரிய மனுசங்களும், வாக்குக் கேக்கதுக்கு வந்துட்டாங்க. ஆறு மணி சுமாருக்கு சின்னச்சங்கிலி ‘அருள்வாக்கு’ மேடையில வந்து உக்காந்தாரு. ஒண்ணு ரெண்டு பேர அடையாளஞ் சொல்லிக் கூப்பிட்டாரு. ‘வாக்குக்” கேட்டுட்டுப் போனாங்க!. அப்புறம் கண்ணத் தொறக்காமலயே சாமி பேச ஆரம்பிச்சது.

‘ஊரு ஆளுக, ஆளுக்கொரு கஷ்டமுன்னு எங்கிட்ட ‘வாக்கு’ வாங்க வந்திருக்காங்க. ஆனா ஊருக்கே நெறைய கஷ்டம் வரப்போவுதே?”

ஏத்த எறக்கமா, சாமிச் சொன்னதும், எல்லாரும் ஒருத்தர ஒருத்தர் பாத்தாங்க.

‘புதுசு புதுசா நெறைய பழக்கமெல்லாம் ஆரம்பிச்சிருக்கீங்க! அதையெல்லாம் நிறுத்திடணும். நம்ப ஊருக்கு அது சரிப்பட்டு வராது. . . . . சரியா வராது. பிள்ளையாரு ப+சைக்கு, கொழுக்கட்டை அவிச்சோமா கோயிலுக்குப் போயி வெடலயப் போட்டோமான்னு இருந்த ஊரு, சாமி செலய வாங்கி வச்சு அத ஆத்துல தூக்கிப் போட்டு. . . .ம்ம். . . . .ம்” சாமிக்கு கோவம் கூடுச்சு. இன்னுங் கத்திப் பேச ஆரம்பிச்சுது.

‘கண்டதையும் கொண்டாந்து கொட்டி, தாயா இருக்கற தாமிரவருணிய நோய் புடிச்சா மாதிரி ஆக்கிட்டீங்க. இதுல இதுவேறயா? ம் …. ம் ….” மெரட்டுற குரலுல சாமி கேட்டுச்சு.

‘இப்ப ரெண்டு வருஷமாத்தானே செலய வாங்கி ஆத்துலப் போடுதோம்?”

‘அதான் சாமி சொல்லுது. நம்ம ஊருக்கு, அப்படி புதுப் பழக்கமெல்லாம் எதுக்குன்னு” ஆளாளுக்கு முணுமுணுன்னு இப்படிப் பேசிக்கிட்டாங்க.

‘தெரியுமா? தாமிரவருணி அம்மா ‘என்ன காப்பாத்தும்மா’ன்னு எங்கிட்ட வந்து கதறுதா. ம் ம் எம்புள்ள கணேசனும், நீங்க இப்படி பண்ணுததுல கோவமா இருக்கான். அப்பிடி உங்களுக்குக் கரைச்சே ஆவனும்னா, கலரு கிலரு போடாத களிமண்ணு பொம்மைய வாங்கிக்கிடுங்க சரியா?” சாமிக்கு ஆட்டம் இன்னும் குறையவே இல்ல.

‘அதென்ன களிமண்ணு செலய மட்டுங் கரைக்கலாமாக்கும்?” இளவயசுக்காரன் யாரோ ஒருத்தன் முணுமுணுத்தான். பக்கத்துலயிருந்த ஒரு பெரிய மனுஷன் சொன்னாரு.

‘அட! சும்மாயிரப்பா. சாமி சரியாத்தான் சொல்லுது. பிள்ளையாரு என்ன கலர் கலராவா இருப்பாரு. கருப்புதான அவரு கலரு? அதான் களிமண்ணுச் செல!”

சாமி திருப்பியும் பேசுச்சு! ‘ஊரு பெரிய மனுசங்களா! எல்லாரும் கேட்டுக்கங்க. ஆடிப்பௌர்ணமிக்கும், தைப் பௌர்ணமிக்கும் நீங்கெல்லாம் எங்கிட்டக் கண்டிப்பா வரணும். ஊருக்குப் பொதுவா நான் சொல்லுத ‘அருள்வாக்க’ வாங்கிக்கிடணும். ஊரச்சுத்தி நெறய கெட்ட தேவதை அலயுது. ஊரைக் காப்பாத்தனுமுன்னா, எஞ்சொல்லக் கேட்டு நடங்க ம். . . . . . .ம் .. .. .. சரியா?”

எல்லாரும் தலைக்கு மேல கையைத் தூக்கி கும்பிட்டாங்க.

‘சாமி சொல்லுதபடியேச் செய்யுதம்”.

கோயில்லயிருந்து ஊருக்கு திரும்பறப்ப, கூட்டம் கூட்டமாக நடந்து போயிட்டிருந்த ஊர்க்காரங்க சங்கிலிச்சாமி புதுசா ஆரம்பிச்சிருக்கற, இந்த ‘ஊருக்குப் பொது வாக்கு”ங்கற விஷயத்தப் பத்திதான் விவாதம் பண்ணிகிட்டுப் போனாங்க.

‘ஊரோட நல்லதுக்குதானய்யா? முக்கண்ணியம்மாதான் இந்த ஊரயும் நம்மளயும் காப்பாத்திட்டு வாரா. அவளே, சங்கிலிச்சாமிய இப்படி சொல்ல வச்சிருக்கான்னா, நாம அத நெறவேத்திதான் ஆவணும்” ஒருத்தர் இப்படிச் சொல்ல,

‘அம்மன், சங்கிலிச்சாமி மேல எறங்கி இப்படியெல்லாஞ் சொல்ல வைக்கான்னா, அதுல ஏதோ இருக்கும்பா! ஊரு நல்லதுக்காக, சத்தங்காட்டாம சாமி சொல்லுதத கேளுங்க!” இன்னொருத்தர், பயபக்தியோடு அதட்டினார்.

ஆகக் கூடி, அந்த வருசம் பிள்ளையாரு பண்டிகைக்கு எல்லாரும் முன்ன மாதிரி கொழுக்கட்டை, சுண்டல் சாப்பிட்டுட்டு ஆத்துப் பிள்ளையார் கோயிலுக்கு சப்பரம் இழுக்கக் போயிட்டாங்க. சொக்கலிங்கம் கேட்டான்.

‘அவங்க செலைக்கு செலவு பண்ணுததுல ஒனக்கு என்னப்பா நட்டம்?. நீ பொசுக்குன்னு இப்படி ‘வாக்கு’ சொல்லவும் பாவம் எல்லார் மூஞ்சிலயும் ஈ ஆடலத் தெரியுமா?”

‘அட என்னப் பழக்கம் நீயே சொல்லு! நம்ம சுத்து வட்டதுக்கு, குடிக்கத் தண்ணி எடுக்கற ஆத்த எப்படி நாசமாக்குதானுக? ஏற்கனவே பேக்டரிகாரனுங்க கண்டதையும் கொண்டாந்து கொண்டாந்து கொட்டிட்டுப் போறானுக. மண்ணு அம்புட்டையும் அள்ளிட்டானுக. ஆறு ஆறாவா இருக்கு?. பத்தாக்கொறைக்கு இப்படி கலர் கலரா கரைச்சு உட்டுட்டு போயிட்டா, ஆறும் எம்புட்டுதான் தாங்குஞ் சொல்லு. இப்ப இப்படி சங்கிலிச்சாமி சொன்னதால இந்த பழக்கத்த மட்டுமாவது நிறுத்துனானுகன்னு வையேன், ஆத்தோட நெலம கொஞ்சம் சரியாகும். சாமி சம்பந்தப்பட்ட விஷயங்கதால இதமட்டுந்தான் நம்மால சொல்லமுடியும். பேக்டரிகாரங்களையும், மண்ணுக்களவாணிகளையும் தடுக்கதுக்கு நாம என்ன கலெக்டருக்கா படிக்சிருக்கோம்?. அதாம் பாத்தேன். இந்த வாட்டி ஊரு நன்மைக்குன்னு அப்படியொரு ‘வாக்கு’ சொல்லிட்டேன். என்ன நாஞ் சொல்லுதது?”

‘தப்பே இல்லடே! சரி ! தை மாசப் பௌர்ணமிக்கு?”

‘பாப்பம்! ஊடேல இன்னும் நாலுமாசங் கெடக்குது. யோசிப்பம். ஊருல மாத்த வேண்டிய விசயத்துக்காப் பஞ்சம்?

ரெண்டு பேரும் சிரிச்சுக்கிட்டாங்க. தைப்பௌர்ணமிக்கு சங்கிலிச்சாமி மேல ‘எறங்குன’ முக்கண்ணியம்மன், ஊரு பொது வாக்கா என்ன சொன்னாத் தெரியுமா?

‘இனிமே ஊருல ஒரு பய பிளாஸ்டிக்கு காயிதம், சருகத்தாளு இதல்லாம் விக்கப்படாது, வாங்கப்படாது இதுகளால, பூமாதேவிக்கு மூச்சு முட்டுதாம். கோமாதா எல்லாம் புல்லுக்கு பதிலா இந்த காயிதங்கள சாப்பிட்டுட்டு அவதிப்படுதாம். சாமிக்கிட்ட, பூமாதேவி ஆவலாதி சொல்லியிருக்கா. சாமிக் குத்தமா ஆகப்போவுது. இப்படி மண்ணுல கவர வீசுதத எல்லாப் பயக்களும் உடனே நிறுத்திக்குங்க இல்லன்னா, யாரு சருகப் பைய, உபயோகம் பண்ணுதாங்களோ அவங்க கையி . . . . . ம் . . . . ம் . . . . . . .”

வாக்கியத்த முடிக்காம சாமி உறும ஆரம்பிச்சுது. சரிதான்னு எல்லாரும் கேட்டுக்கிட்டாங்க. ஊருல எல்லாக் கடையிலயும், நியூஸ் பேப்பர்ல பொட்டலம் போட்டுக் குடுக்க ஆரம்பிச்சாங்க. ஆளுகளும், மஞ்சப் பையும் ஓயர் கூடையுமா கடைக்குப் போயி சாமான் வாங்க ஆரம்பிச்சாங்க. அடுத்தடுத்து வந்த ஆடிப்பௌர்ணமிக்கும், தைப்பௌர்ணமிக்கும் இப்படி, ஊருக்கு ‘பொது வாக்கு” சொல்லுச்சு சங்கிலிச்சாமி.

‘பௌர்ணமிக்குப் பௌர்ணமி வீட்டுல பொம்பளைங்க சமைக்க கூடாது. நம்ம ஊரு பொம்பளைங்க எல்லாருமே முக்கண்ணியம்மன் அம்சந்தான். அதனால பௌர்ணமி அன்னிக்காவது அவங்கள மரியாதையா நடத்தணும். ஆம்பளைகதான் சமைச்சு அவங்களுக்குக் குடுக்கணும். அன்னிக்கு மட்டும் அவங்கள எந்த வேலையும் செய்யவிடாம அன்பா பாத்துக்கணும்”.

‘வரப்போற தை மாசக் கொடை வரைக்கும் ஆம்பளைக, ‘தண்ணீ” மாதிரியான சமாச்சாரங்கள கையாலத் தொடக்கூடாது. ரொம்ப சுத்தப்பத்தமா இருந்து இந்த வருசம் கொடய நடத்தணும். போன வருசம் செஞ்சது அம்மனுக்கு அவ்வளவா திருப்தி இல்ல”.

இந்த ரெண்டு ‘வாக்கும்’ ஆம்பளைங்கக்கிட்ட படாதபாடு படுத பொம்பளைகளுக்காக, ஒரு ஆடிப்பௌர்ணமியில சங்கிலிச்சாமி சொன்னது. அவங்களும் கொஞ்சநாளு நிம்மதியா இருக்கட்டுமேன்னுதான்.

இந்த வாக்குகள நெறைவேத்த ஊருக்காரங்களுக்கு ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. அப்படி இப்படி ஒப்பேத்திப் பாத்தாங்க. ஆனா சொல்லி வெச்சா மாதிரி அந்த வருசம் கோடை, அவங்கள பாடா படுத்தி எடுத்துட்டுது. தாமிரவருணி, சொட்டுத் தண்ணி இல்லாம காஞ்சுது. குடிக்கத் தண்ணிக்குப் பஞ்சம். ஊருல சின்னப்பிள்ளைக்களுக்கெல்லாம் அம்மன் போட்டுச்சு. வெயிலு கொடும அந்நியாயத்துக்கு இருக்க, ரெண்டு, மூணு பேரு செத்துப்போயிட்டாங்க. காணாக்குறைக்கு, எல்லா ஊருலயும் இப்ப வந்துகிட்டிருக்கற மாதிரி அந்த ஊருலயும் ஒரு தடவ நெல நடுக்கம் வந்துடுச்சு. நெறைய வீடுகள்ல சொவருல விரிசல் விழுந்துடுச்சு. அவ்வளவுதான். இது கண்டிப்பா சாமி குத்தந்தான். முக்கண்ணியம்மன் வாக்க சரியா நெறவேத்தாததால வந்த வெனைதான் அப்படின்னு அந்த ஊரு ஆம்பளைகளுக்கு மனசு உறுத்த ஆரம்பிச்சுச்சு.

இளவட்டங்க எல்லாம் ‘சாமியாவது, சாத்தானாவதுன்னு” வெளியில சவடால் உட்டுட்டுத் திரிஞ்சாலும் உள்ளுக்குள்ள அவங்களுக்கும் உதறல் இருக்கத்தான் செஞ்சுச்சு. ‘சரி! ஆறு மாசந்தானே, எதையும் தொடாம இருப்பம்’ அப்படின்னு நல்லவனுகளா இருக்க முயற்சிப் பண்ணுனானுங்க. பெரிசுகள்லாம் ரொம்பவே கண்டிஷனா எதையுந் தொடாம இருந்துடுச்சு. ‘மாசத்துக்கு ஒரு நாள் தான நம்ம பொண்டாட்டி புள்ளைகளுக்கு தான செய்யுதம்!இ அப்படின்னு சமாதானஞ் சொல்லிக்கிட்டு ஆம்பளைக, சமைச்சுக் குடுத்து, சம்சாரத்தையும், புள்ளைகளையும் பௌர்ணமிக்குப் பௌர்ணமி பக்குவமா பாத்துகிட்டாங்க.

‘ஏதோ நம்மால முடிஞ்சதுடே!” இது தங்கதுரை.

‘நீ நடத்துடே! ஊரு உலகம் நல்லாயிருக்கனும்னா என்ன வேணாலுஞ் செய்யலாம். அது தப்பில்ல”, இது சொக்கலிங்கம்.

ஊருக்காரங்களுக்கு சின்னச்சங்கிலி சொல்லுத ‘வாக்குல” டவுட்டு வர ஆரம்பிக்குதுன்னு தெரிஞ்சவுடனே இந்த, ‘ஊரு பொதுவாக்கு” சொல்லுத விசயத்த மட்டும் பைய பைய நிறுத்திடணும்னு அவங்க ரெண்டு பேரும் முடிவு எடுத்து, ஆனவரைக்கும் பாப்பம்னு ஊரத் திருத்திக்கிட்டிருந்தாங்க, முக்கண்ணியம்மனோட முழு ஆசீர்வாதத்தோட.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *