கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 15,464 
 

“குஞ்சம்மா’

சாருமதி சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவளை யாரோ கூப்பிட்ட மாதிரி. அப்புறம்தான் ஞாபகம் வந்தது. அந்தப் பெயரில் அழைக்கிற ஒரே ஒருத்தரைப் பார்க்கத்தான் இன்று ஸ்ரீரங்க விஜயம். ரயில்வே ஸ்டேஷனில் சிறு பெட்டியுடன் தனியே இறங்கியவளை அந்த அதிகாலை இபுருட்டில் யார் கவனிக்கப் போகிறார்கள்?

ரொம்ப நாளாச்சு இப்படி விச்ராந்தியாய் வெளியே வந்து. எப்போதும் ஏஸி கார். கூடவே தம்பூர் போடுகிற பெண். சுருதி பெட்டி… சில சமயங்களில் கணவர் ராஜகோபாலன்… எப்போதாவது மகள் மதுவந்தி…

இன்று யாரும் வேணாமென்று தனியே.

“நிஜமாத்தான் போறியா…’

“ஆமா’

“ஒரு வாரத்துக்கா’

“ஆமாப்பா’ கேள்வி மேல் கேள்வி கேட்ட கணவரைக் குழந்தை போலப் பார்த்தாள்.

“ஏதாச்சும் கச்சேரி பேச வந்தா…’

“பார்த்துக்கலாம்பா… என் நம்பரைத் தர வேணாம்…’

“ஆர் யூ ஓகே.’

புருவம் சுழித்து அவளைப் பார்த்தவரை நேருக்கு நேர பார்த்து சிரித்தாள்.

“ஐயாம் ஃபைன்’

ஏஸி டூ டயரில் ஏற்றிவிட்டு கடைசி நிமிடம் அவள் மனம் மாறுமா என்பது போலப் பார்த்தார்.

“ஸீ யூ பா… டேக் கேர்.’

இதை விடத் தெளிவாக அவள் சொல்ல முடியாது. ராஜகோபாலன் திரும்பி நடந்து போனபோது லேசாகக் கோபம் தெரிந்தது. இரவு பத்தரைக்கு என்றாலும் அத்தனை தூக்கக் கலக்கத்திலும் சிலர் அவளை அடையாளம் கண்டு கொண்டார்கள். சிலர் நாசூக்காக ஒதுங்க ஓரிருவர் அருகே வந்து சிரித்தார்கள்.

“உங்க பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும் மேடம்.’

“ம்…’

“இப்ப எதுவும் கச்சேரியா மேடம் திருச்சில…’

“இல்லம்மா. பர்சனல்.’

“ஓ….’

அவள் இசையை நேசிக்கிறவர்கள்.. ஆத்மார்த்தமான அன்பில் வழிபவர்கள்… மெல்ல நகர்ந்து குட் நைட் சொல்லிப் போனபோது அந்த நிமிடம் அவர்களுக்காக ஏதாவது பாடலாமா என்று தோன்றிவிட்டது அவளுக்கு.

இதுதான்…. இந்தக் குணம்தான்… அவளை இன்னமும் ஜீவனோடு வைத்திருக்கிறது. அதுவே சிலரிடம் அவளை கேலிக்கு ஆளாக்குகிறது.

“அன்னிக்கு ஒரு கல்யாணத்துல பார்த்தேன். உக்கிராண அறையில் இவ ஒரு கிழிஞ்ச பாய் மேல உட்கார்ந்துண்டு நகுமோமு பாடிண்டிருக்கா… சுத்தி சமையக்காராளும்… எச்செல எடுக்கிற மாமிகளும்… என்ன கூத்து இது?’

இவள் காது கேட்கவே விமர்சனம்.

“மைக் செட் இல்லை. புள்ளையார் கோயிலாம்… கும்பாபிஷேகமாம்… வந்து பாடுவீங்களான்னு கேட்டதும் உடனே சரின்னுட்டாளாம். போக வர ஆட்டோவாம்…’
“புரட்சிக்காரின்னு நினைப்பு.’

லோயர் பர்த்தில் படுத்திருந்தவளுக்கு நினைவலைகளின் அதிர்வுகள். தூக்கம் வரவில்லை. எதனால் கிளம்பினாள் என்று புரியவில்லை. அதுவும் இன்றே கிளம்பணும் போல ஒரு படபடப்பு.

“குஞ்சம்மா’.

குரல் மனசுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறது. எந்த வேலையும் பார்க்க விடாமல். இன்று சாதகம் செய்யும் போதும். அந்த நிமிஷம்தான் முடிவெடுத்து விட்டாள்.

“நான் ஸ்ரீரங்கம் போறேன்… ஒரு வாரம் அங்கேதான்.’
சாருமதியின் குணம் தெரியும்; அவள் தீர்மானித்துவிட்டால் அவ்வளவுதான். அவரசமாக டிக்கெட் ஏற்பாடு செய்து வந்து ஏற்றியும் விட்டாச்சு. ராஜகோபாலன் சும்மா இல்லை. போகும்போதே ஸ்ரீரங்கத்துக்கு போனும் செய்து விட்டார். “அவ தனியா வர்றா’.

ரயிலடியை விட்டு வெளியே வந்தபோது ஆட்டோக்காரர் வந்தார்.
“ஆட்டோ வேணுமா?’

பதில் சொல்வதற்குள் கைப்பெட்டியை யாரோ பிடுங்கிய மாதிரி இருந்தது.

“யா…. யாரு.’

உடம்பெல்லாம் தேமல். முகத்தில் சிரிப்பு வந்த சுவடே இல்லை. “ஹ்ம்ம்’ என்கிற கனைப்பு மட்டும்.

“சேது… நீயா?’

கோணலாகச் சிரித்தான். நிச்சயம் அவளை விட வயது கூடுதல்தான் அவனுக்கு. ஆனால் சாரு அவனைப் பெயர் சொல்லிக் கூட அழைத்ததில்லை.

“அம்மா சொன்னா… நீ வர்றேன்னு…’

அம்மா. எப்படித் தெரியும். சாரு விக்கித்தாள்.

“வா. போகலாம்.’

“ஆட்டோல போலாம் சேது’.

உள்ளடங்கி உட்கார சேது நுனியில் பட்டும் படாமலும் அமர்ந்தான். தெருப்பெயர் சொன்னாள். ஆட்டோ கிளம்பியது.
“அம்மா சொன்னாளா. நான் வர்றேன்னு… எப்படித் தெரியும்?’
இதென்ன குழந்தைத்தனமாக ஒரு கேள்வி என்பது போல சேது அவளைப் பார்த்தான்.

“போன வாரமே சொல்லிட்டா. நீ வரப் போறேன்னு. இன்னிக்குக் காலைல அவதான் எழுப்பினா, போடா ஸ்டேஷனுக்குன்னு.’
சாருமதிக்கு அழுகை வந்தது.

“யார் வரப் போறான்னு கேட்டேன்… நம்ம குஞ்சம்மாடான்னு சிரிச்சா.. அம்மா சிரிச்சு ரொம்ப நாளாச்சு தெரியுமோ?’
ஆட்டோ போன வேகம் குறைவு போலத் தோன்றியது சாருமதிக்கு. அப்போதே அந்த வினாடியே அம்மாவைப் பார்க்கணும்…

“என்னவோ பெத்த அம்மா மாதிரில்ல துள்ளறா…’ குரல்கள் மறுபடி கேட்க ஆரம்பித்து விட்டன.

“போடி வெளியே… பாட்டுக் கத்துக்கணும்ன… சரின்னு விட்டா இப்ப சொத்துக்கு ஆசை வந்துருச்சா.’

“எனக்கு எதுவும் வேணாம்… அம்மா மட்டும் போதும்..’
“இந்த ஜாலக்கெல்லாம் வேண்டாம். இழுத்து இழுத்து ஸ்வரம் பாடறதுல்லாம் மேடையோட வச்சுக்கோ…’

அம்மா எதுவும் பேசாமல் படுத்திருந்தாள் அன்று. சாருமதியை வலுக்கட்டாயமாக வெளியேற்றியபோது. அன்றும் ஸ்டேஷனுக்கு சேதுதான் ஓடி வந்தான்.

“சாதகம் பண்றதை விட்டுறாதேன்னு அம்மா சொல்லச் சொன்னா… இந்த வீபூதியை இட்டுக்கச் சொன்னா.’

“நீயே இட்டு விடு சேது.’

ஒரு மகானைப்போல நெற்றியில் பூசி விட்டான். கண்ணில் விழுந்து கரித்தது.

“அம்மாவைப் பார்த்துக்கோ.’

தலையாட்டினான்; போய்விட்டான்.

இத்தனை நாட்கள் கழித்து இதோ மீண்டும் அம்மாவைப் பார்க்க…
வீடு சூரிய வெளிச்சத்தின் வரவுக்காகக் காத்திருந்தது.

ஆட்டோவை அனுப்பி விட்டுப் படியேறினாள். உள்ளே ஹாலில் இருட்டு. கூடத்தின் மூலையில் கட்டில் அதே இடத்தில். பழைய புடைவை போர்த்திக் கொண்டு படுத்திருந்த உருவம்.
சேது பின்பக்கம் கிணற்றடிக்குப் போய் விட்டான்.

“குஞ்சம்மா’

அம்மாவின் குரல் தீனமாய்க் கேட்டது. ஒரு காலத்தில் கணீரென்று இவளுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்தவளா…
“அ..ம்மா’ ஓடிப்போய் அவள் அருகில் அமர்ந்தாள்.

“உட்காருடி’ சைகை செய்தாள்.

“எப்படி இருக்கே?’

“ம்ம்… என்னம்மா ஏன் என்கிட்ட சொல்லல…’

அம்மா சிரித்ததில் நிறைய அர்த்தங்கள்.

“பாடிண்டிருக்கியா?’

“ம்ம்’

“ரெண்டு நாள் என் கூட இருக்கணும்னு தோணித்தா.’

“ஆமாம்மா…’

“தெரியும். நீ வருவேன்னு… போ குளிச்சுட்டு வா.. பூஜை ரூம் இப்போ பொம்மணாட்டி கை படாம சோபை போயிடுத்து… சேதுதான் இப்போ வெளக்கேத்தறான்.’

கிணற்றடிப் பக்கம் போனாள். சேது அம்மாவின் புடைவைகளை அலசி உலர்த்திக் கொண்டிருந்தான். ஆங்காங்கே கிழிசல்.
அவனும் அந்நியம்தான், அவளைப்போல. ஆனால் அவனுக்கு எந்தத் தொல்லையும் வரவில்லை. அவனை விரட்டவில்லை யாரும். போன வருஷம் அம்மாவைப் பற்றிக் கேள்விப்பட்டு அவள் இங்கே வந்தபோது சேது இருந்தான். பார்த்ததும் வெளிப்பார்வைக்குத் தெரியாமல் ஒரு சிலிர்ப்பு. அழுக்கு வேட்டி. காவித் துண்டு. அவனைப் பார்க்கவே என்னவோ செய்தது. ஆனால் மிக நாசூக்காக அதைக் காட்டிக் கொள்ளாமல் அம்மாவை நமஸ்கரித்தாள்.

“அம்மா… உங்க கிட்ட பாட்டுக் கத்துக்கணும்னு வந்திருக்கேன்மா…’

அம்மா அப்போது இன்னும் கொஞ்சம் தெம்பாக இருந்தாள். கொல்லைப் பக்கம் போக நடக்க முடிந்தது. புடவையைத் தானே அலசி உலர்த்தினாள். துலா ஸ்நானத்துக்கு காவேரி போனாள்.
சரியென்றும் சொல்லவில்லை. போ என்றும் விரட்டவில்லை. கூடத்தில் தன் பெட்டியை வைத்துவிட்டு அம்மா முன் அமர்ந்தவளைக் கவனிக்காதவள் போல, சேதுவிடம் ஏதோ ஜாடை செய்தாள்.

பார்த்தாலே அசூயை வழிகிற அந்த ரோக உடம்பிலிருந்து சாஸ்வதமான ராகம் பீறிட்டுக் கிளம்பியது.

தோடியை ஆலாபனை செய்தான். கொஞ்சமும் பிசிர் தட்டவில்லை. அது சேது இல்லை… கண்ணை மூடிக்கொண்டு கேட்டால். யாரோ ஒரு மகாவித்வான்.

சாருமதிக்கு ஏதோ புரிந்தது. எழுந்து அம்மாவை நமஸ்கரித்தாள். திரும்பி சேதுவையும். சேதுவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. யாரையோ அவள் நமஸ்கரித்தாள் என்பது போல அமர்ந்திருந்தான்.

“யார்னே தெரியல… கேட்டா பேர் மட்டும் சேதுவாம்… என்ன பிறவியோ… கர்மாவைக் கழிச்சுட்டுப் போக வந்திருக்க… போடான்னாலும் கேட்கல… கூடவே ஒட்டிண்டு…’
அம்மா சிரித்தாள்.

சாருமதி இப்போது தன் பால்யத்துக்கு திரும்பி விட்டாள். சங்கீதப் பாடம் ஆரம்பித்த நாட்கள். குருவே சரணம். குருவே தெய்வம்.
அடுத்தடுத்த நாட்களில் அம்மாவுக்கு இவள் மீதும் கரிசனம் திரும்பியது. இது நாள்வரை இபுருந்த பாடாந்தரம் மறந்து புதிதாக ஓர் உலகத்தில் பிரவேசித்த மாதிரி. ராஜகோபாலன் எப்போது அழைத்தாலும் “அப்புறம் பேசலாமே’ என்று தவிர்த்து அம்மாவின் அருகிலேயே இருந்தாள். ஒரு தடவை அவள் தாய் மனசு தளும்பி விட்டது. மதுவந்தியின் பிஞ்சுக் குரல் கேட்டு.
“வந்துருவேண்டா செல்லம். ப்ளீஸ்டா.. பாட்டி இருக்காளோல்லியோ… உனக்கு… எதுவானாலும் கேளுடா…’
அப்புறம் அன்று புது சிட்சையில் மகள் மறந்து போனாள்.
சேதுவின் குரல் கேட்டது. “குளிச்சாச்சா’ அட… தம்மை மறந்து இது என்ன… வேகமாக வெளியே வந்தாள். தலைக்கு துண்டை சுருட்டி வைத்துக் கொண்டு.

அழகாக ஸ்ரீசூர்ணம் நெற்றியில்… அம்மாவுக்கு பிடிக்கும். ஆண்டாள் மாதிரி இருக்கேடி… பூஜை அறை ஒருவித நெடி அடித்தது. துடைத்து சுத்தம் செய்ய அரை மணி ஆனது. இரு குத்துவிளக்குகளையும் சேது தேய்து வைத்திருந்தான். ஐந்து திரிகளையும் போட்டு விளக்கேற்றினாள். ஊதுபத்தி மணம் கமழ்ந்தது. கூடம் பிரகாசமானது.

பாடினாள். இந்த நிமிஷம் யார் கைதட்டலும் தேவையில்லை. ஆராதனை போல. மனம் விட்டு. மனம் லயித்து. மனம் கசிந்து. ராகம் குழந்தையாக மாறி கூடம் முழுக்குத் தவழ ஆரம்பித்தது. அது தவழ்ந்த இடமெல்லாம் பூக்களின் வாசனை.

அம்மா எப்போது எழுந்தாள் என்று தெரியவில்லை… எப்படி நடந்து வந்தாள் என்று புரியவில்லை. ஏதோ ஓர் உணர்வில் கண் விழித்துப் பார்த்தபோது, அம்மா அவள் மடியில் அருகில் வந்து… சாருமதி உடனே பற்றிக் கொண்டுவிட்டாள்.

“அம்மா.’

சேதுவுக்குக் கூட கண்களில் ஆச்சர்யம். உணர்ச்சியே காட்டாத பரப்பிரும்மம்.

“நன்னா இருப்பேடி குழந்தே… ஷேமமா இருடி.’
அம்மாவின் எச்சில் தெறித்தது அவள் மேல். தம் புடைவையால் துடைத்து விட்டாள். இருவருமாய் அம்மாவை மெல்லப் பற்றிக் கொண்ட போய் கட்டிலில் விட்டார்கள். கஞ்சியை மெல்லப் புகட்டி விட்டாள். தன் எலும்புக் கையால் அம்மா சாருவைப் பிடித்துக் கொண்டு விட்டாள். விடவே இல்லை. கடைசி மூச்சு பிரிகிற வரை..

அக்கம் பக்கம் வந்தார்கள். சொந்தங்களும்.

பரபரவென்று இறுதிக்காரியங்கள். திருமங்கை மன்னன் படித்துறையில் கொழுந்துவிட்டெரிகிற நேரம் வரை சாரு மனசுக்குள்ளேயே பாடிக் கொண்டிருந்தாள். கொள்ளிடத்தில் குளித்து வீடு திரும்பி அம்மாவின் கட்டில் முன் அமர்ந்து மறுபடியும் வாய்விட்டு… சேதுவும் கூடவே.

அம்மா வந்தாள். “போதும்டி குழந்தே… எனக்கு திருப்தியாச்சு.. கிளம்புடி.’

ரயிலுக்கு சேது வந்தான். அவன் கையிலும் ஒரு துணிப்பை.
எதுவும் பேசவில்லை. இவளை பெட்டியில் ஏற்றிவிட்டான். திரும்பிப் பார்க்காமல் போய்விட்டான்.

சென்னை எக்மோரில் ராஜகோபாலனுடன் மதுவந்தியும் வந்திருந்தாள்.

“அ….ம்மா’ அந்தக் குழந்தை அழுதபோது இந்த வளர்ந்த குழந்தையும் அழுததை எல்லோரும்தான் பார்த்தார்கள்.

– டிசம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *