கலைஞர்களும் திருடர்களும்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,216 
 

எது பருவம் தப்பினாலும், இந்த ஆடி மாதக் காற்று மட்டும் தப்புவதே இல்லை.

நெடிதுயர்ந்த பனை மரங்கள் காற்றின் வேகத்துக்கு ஏற்ப ஆடிக்கொண்டே இருந்தன. விழுவதற்குத் தயாராக மரத்தில் ஒட்டிக்கொண்டு இருந்த காய்ந்த பனை மட்டைகள் எழுப்பும் ஓசை மட்டுமே ஓடை முழுக்கக் கேட்டது. ராசதுரை தண்ணீரில் இருந்து எழுந்து வெளியே வர மனம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருந்த ஊற்று நீர் ஓடையில் குளித்தபடியே சத்தம் போட்டுக் கத்தினான். அவனது ஒவ்வொரு சொல்லும் சுற்றியிருந்த மலையில் பட்டு எதிரொலித்தது. போதை மயக்கத்தில் இருந்ததாலும், கோபத்தினாலும் அவனது கண்கள் சிவந்து துருத்தி இருந்தன.

திடீரெனக் கோபம்கொண்டவனாகத் தண்ணீருக்குள் மூழ்கிக் கற்கள் கலந்த சேற்றை வாரி, கரையில் போதை தெளியாமல் உட்கார்ந்திருந்த கெளுத்தியான் மேல் வீசினான். கற்கள் அவன் மேல் விழப்போவது தெரிந்தும் அவன் அதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்யவில்லை. சேற்றினை விரல்களால் வழித்துப் போட்டுவிட்டு, கல்பட்ட முதுகுப் பகுதியைத் தடவிக்கொண்டான்.

ராசதுரை காலையில் இருந்து பேசியதையே மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டு இருந்தான். ஊர்க் கோயிலில் இருந்து ஒலிபரப்பான சினிமாப் பாடலைக் கேட்கக் கேட்க… மேலும் ராசதுரைக்குக் கோபம் வந்தது.

இப்போது ஆவேசமாகத் தண்ணீருக்குள் இருந்து எழுந்து நின்று ராசதுரை கத்தினான்.

“கேட்டியாடா நாயே! பாட்டாடா அது? இதல்லாம் கோயில்ல கொண்ணாந்து போடறானுவுளே… இந்த ஊரு வெளங்குமாடா?

எல்லாம் போச்சி. ஒண்ணையாச்சும் வுட்டுவெக்கிறானுவளாடா? போச்சி, எல்லாம் போச்சி. பாட்டாடா பாடறான் அவனுவோ நாக்கெல்லாம் புடிச்சி அறுத்தா என்னடா? இது கெடக்கட்டும் இன்னிக்கி ராத்திரி மட்டும் அவனுவோ அதப் போடட்டும், இருக்கு வென. எப்பிடியும் ரெண்டு பேரையாச்சும் வெட்டாம நான் இன்னிக்கித் தூங்க மாட்டேன்.”

இவ்வளவு நேரம் எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்த கெளுத்தியான், கையில் சப்பிக்கொண்டு இருந்த மாங்கொட்டையைப் போட்டுவிட்டு எழுந்து ஓடி, வெள்ளாவி மேடையை எட்டி உதைத்தான். அவ்வாறு அவன் செய்ததில் மேல் பகுதி உடைந்து சிதறியது.

“எல்லாக் கோவத்தையும் ஏங்கிட்டியே காட்டுடா! ஒன்ன மாரிதான் எனக்கும் கோவம் வருது. நான் யாருகிட்டக் காட்றது?”- கெளுத்தியான் போட்ட சத்தத்தில், கரை ஏறி வந்திருந்த ராசதுரை ஈரம் சொட்டச் சொட்ட அப்படியே நின்றுவிட்டான்.

இதனை எல்லாம் தூரத்தில் இருந்து பார்த்தபடியே கூடை முடைய ஈச்சம் பிரம்பை வெட்டிக்கொண்டு இருந்த கோபாலுக்கு, கெளுத்தியானின் செய்கை கோபத்தை ஊட்டியது. ஓடி வந்த கோபால் பதறிப்போய், சிதறிக்கிடந்த, உடைந்து விழுந்த பகுதிகளைக் கையில் எடுத்துக்கொண்டான். அவனுக்குள் எழுந்த கோபத்தை முழுமையாக அவனால் காண்பிக்க முடியவில்லை. நாக்கு தழுதழுத்தது.

“நீங்க மதங்கொண்டு போய் போதை போட்டுக்கனா, அதுக்கு என் வெள்ளாவிதான் கெடைச்சுதா? மரியாதையா ரெண்டு பேரும் மேல ஏறிப் பூடுங்க. போவலன்னா, எனக்கு இருக்கற கோவத்துக்கு ரெண்டு பேரையும் வாங்குக் கழியாலயே அறுத்து ஓடையில போட்ருவேன்.”

கோபாலின் பேச்சில் இருந்த நியாயம் இருவருக்கும் புரிந்தது. இருந்தும் கெளுத்தியான், கோபாலைப் பார்த்து அவன் முகத்தில் படும்படி கை நீட்டி நீட்டிப் பேசினான்.

“இப்ப வெள்ளாவி வெச்சி என்ன புடுங்கப்போற? நீதான் ஊருப் பக்கம் வர மாட்றியே! நீ ஊருக்குள்ள வந்து அழுக்குத் துணிய எடுத்து எத்தினி வருஷம்டா ஆச்சி?”

பதிலுக்கு கோபால் சிறிதும் யோசிக்காமல் கோபத்தில் நாக்கை மடித்துக் கடித்தபடியே சத்தம் போட்டுக் கேட்டான். அவனைப் பார்க்கிறபோதே ராசதுரைக்குப் பயமாக இருந்தது. கெளுத்தியானுக்குப் பின்னால் மறைந்து நின்றுகொண்டான்.

“நீ கூத்துல ஆடி எத்தினி வருஷம் ஆச்சி… மொதல்ல அதச் சொல்லு? அப்பறம் நான் சொல்றேன். பொழப்பு போச்சேனு வவுறு எரியற மாரிதான் நானும் எரிஞ்சிக்கிட்டு இருக்கேன். பொழப்பு இல்லன்னாலும், அப்பப்ப இந்த எடத்துல வந்து செத்த நின்னுட்டுப் போய்க்கினு இருக்கேன். அதுக்கும் வழி இல்லாமப் பண்ணிடுவபோல இருக்கே. போயி, ஒங் கோவத்தலாம் எங்கியாச்சும் காட்டு.”

கோபாலின் பேச்சுக்குப் பின் இருவரும் அமைதியானார்கள். ஒரு நொடி தாமதித்து இருந்தால், பெரிய காய்ந்த பனை மட்டை ஒன்று அவர்கள் மேல் விழுந்திருக்கும். நடக்கத் தொடங்கியதால், தப்பித் தார்கள். பனை மட்டையோடு அணில்கள் இரண்டும் விழுந்து ஓடுவதை அப்போதுதான் கெளுத்தியான் பார்த்தான். அதில் ஒரு அணில் பந்து மாதிரி உருண்டு உருண்டு ஓடி பின் தப்பித்தது. அதனைப் பார்த்தபோது அந்த நிலையிலும் கெளுத்தியானுக்குச் சிரிப்பு வந்தது. ராசதுரை திட்டுவான் என்பதால், காண்பித்துக்கொள்ளவில்லை.

எப்பொழுதோ வெட்டியதில் சிதறி விழுந்த பனங்காய் ஒன்று தண்ணீரில் மிதந்து வந்ததை கெழுத்தியான் கையில் எடுத்துக்கொண்டான். போதையில் தள்ளாடித் தள்ளாடி ராசதுரை அவனது நீண்ட தலைமுடியை வெயிலில் காயவைத்துக்கொண்டு போனபோது, அவன் பின்னாலேயே அவனுடன் பேசியபடியே முள் குத்தும் வலி யையும் பொறுத்துக்கொண்டு, ஈச்சம் பழம் பறித்துக்கொண்டே போனான் கெளுத்தியான்.

“நம்ம பொழப்புல இப்பிடி மண்ண அள்ளிப் போட்டுட்டுதே இந்த மாரியாத்தா! அதுக்கு எதுக்குடா வருஷா வருஷம் திருவிழா வெக்கிறானுவோ! நாமளும் மானங் கெட்டுப்போய் வரியக் குடுக்குறோம்.”

கோபாலின் பேச்சு ராசதுரைக்கு எரிச்சல் ஊட்டியது. ராசதுரை முடிகளைக் கோதியபடியே கோபத்துடன் சொன்னான், “விடிய விடிய தொண்ட தண்ணி வத்தற அளவுக்குக் கத்திக் கத்திப் பாடினாலும்… நூறு ரூவாக் குடுக்க மேலும் கீழும் பாப்பானுவோ. ஒருவேளை கறிச் சோறு போடறதுக்கு ஆயிரத்தெட்டுக் கேள்வி. இப்ப என்னடான்னா, ரெண்டு மணி நேரம் மைக்கில் இந்த சனியன் சினிமாப் பாட்டப் பாடறதுக்கு அம்பதாயிரம் ரூவாயாம். அதுக்கே கெடைக்க மாட்டானுவோன்னு ஆறு மாசத்துக்கு மின்னாடியே அச்சாரம் குடுத்துடணுமாம். என் வவுறு எரியுதுடா. இவனுவோல்லாம் நல்ல கதியாப் போவானுவோ?”

ராசதுரையின் பேச்சு, இறுதியாக அவனே கண்ணீர் சிந்தும்படி ஆகிவிட்டது. கெளுத்தியான் இதுதான் சமயம் என எடுத்துக் கொடுத்தான். அவனுக்குள்ளும் ஆறாத கோபம் இருந்தது.

“நேத்து ராத்திரி பாத்தியா மாமா? எங்கேருந்துதான் இவ்ளோ சனம் வருதுன்னே தெரிலியே. கச்சேரி ஆரம்பிக்கிறதுக்கு ரெண்டு மணி நேரத்துக்கு மின்னாடியே எட்டு மணிக்கெல்லாம் வந்து ஒக்காந்துட்டுதுங்க. இதுங்களல்லாம் என்ன செய்யலாம். எப்பிடியும் பாஞ்சாயிரம் பேரு இருக்கும்ல மாமா?

நம்ம கூத்து வெச்சா, இவனுவுளக் கூட்டறதுக்குள்ளியே தாலி அறுந்துடுதே! பாக்கு வெத்தலவச்சி அழைக்காதக் கொறையா, எத்தினி தடவ கூப்ட வேண்டியிருக்கு? நம்ம பாவம்லாம் இவனுவுள சும்மாவா வுடும். எத்தினி சாமிக்கி எத்தினி ஊரெல்லாம் போயி ஆடியிருப்போம். அத்தினி சாமியும் என்ன மாமா பண்ணுது?”

கெளுத்தியானின் பேச்சில் ராசதுரை பேசாமல் அப்படியே நின்றுவிட்டான். தோளில்கிடந்த ஈரத் துண்டினை எடுத்து வீசியபடியே பேசினான்.

“இங்க பாரு, ஒரு சாமியும் ஒண்ணும் பண்ணப் போறதுல்ல. கூத்தாடி கூத்தாடின்னு சொல்லியே எவனும் நமக்குப் பொண்ணுகூடக் குடுக்கல. நாமளும் இத எடுக்க மனசில்லாம வளத்துக்குனு அலையறோம். இன்னிக்கி யாருன்னு தெரியவெச்சிடறேன். பொறந்ததுலேர்ந்து கூத்து கூத்துன்னு வெறியா அலைஞ்சேனடா. பத்தரக்கோட்ட ராசவேலு, ஆனத்தூர் சீனிவாசன், புதுச்சத்தரம் கோதண்டம் இவுங்கல்லாமே என் வேஷத்தப் பாத்துட்டு அசந்துபோனாங்க. சுண்டக்கா, இவனுங்க பாக்கலன்னா, எனக்கு மவுசு இல்லாமப் பூடுமா? ராத்திரியே நான் கச்சேரிய நெறுத்திருக்கணும். புத்திகெட்டுப் பூட்டேன். இன்னிக்கி எப்பிடி நடக்குதுன்னு பாக்கறேன்” – இவ்வாறு ராசதுரை சொன்னவுடன் கெளுத்தியான் ஓடிப்போய் கையில் இருந்த ஈச்சம் பழத்தை அவனது கையில் திணித்துவிட்டு கவலையுடன் சொன்னான்.

“இங்க பாரு மாமா! எல்லாம் எனக்குத் தெரியும். ராத்திரி பாஞ்சாயிரம் பேருன்னா! இன்னிக்கி கணக்கே இருக்காது. டி.வி. பொட்டிய வெச்சிப் படம் காட்டப் போறானுவோன்னு பாக்குறியா? பெரிய தெர கொண்டாரானுவோளாம், பாண்டிச்சேரிலேர்ந்து. அப்படியே சினிமாக் கொட்டாமேரியே தெரியுமாம். ஏதோ பழைய படம்கிடம் போடுவானுவோன்னு பாக்குறியா? பள்ளிக்கொடத்தாரு மவன் தங்கம் நேத்தே கௌம்பிப் பூட்டான். பாண்டிச்சேரில சி.டி. அடிக்கிற எடத்துக்கே போயிருக்கான். இன்னிக்கி சனிக்கெழமதான, நேத்துத்தான் வெளியாயிருக்கு ரசினிகாந்த்து படம். அந்தப் படம், அப்பறம் விஜய் நடிச்ச படத்தையும் போடப் போறானுவோளாம். இதுக்கு மேல இந்த ஊர்ல நாம இருக்க முடியுமா? சமா நடத்தனவன்லாம் வுட்டுப்புட்டு கூலி வேலைக்குப் பூட்டானுவோ. இனி, இந்த சனம் சினிமாப் பாட்டக் கேட்டுக்கினு, சினிமாப் படத்தப் பாத்துக்கினே சாவ வேண்டியதுதானா? இந்த சினிமாவ எவனும் அழிக்க முடியாதா?”

கெளுத்தியான் பேசிய அவ்வளவையும் கேட்டுக்கொண்டு வந்த ராசதுரை, நிதானத்தோடு சொன்னான்.

“எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரும்டா. நம்மள மாதிரி கூத்தாடிங்க மட்டுமா அழிஞ்சிபோனாங்க. காலங்காலமாத் தலம்பர தலம்பரயா எத்தினி வகையான ஆட்டம், எம்மாம் பெரிய கலை எல்லாம் இருந்துச்சி. அல்லாத்தையும் அழிச்சிட்டுத்தானடா இந்த சினிமா இன்னிக்கி நிக்கிது. என்னிக்காச்சும் ஒரு நாளைக்கி அது அழியறப்பவாவுது நம்மள எல்லாம் நெனைச்சிப் பாக்க மாட்டானுவோளா?”

ராசதுரை சொல்லச் சொல்ல, கெளுத்தியான் தலையாட்டிக்கொண்டே அவன் பின்னால் நடந்து போனான்.

அன்றிரவு கெளுத்தியான் சொன்னதுபோல பாண்டிச்சேரிக்காரன் பெரிய திரை கட்டிப் படம் காட்டுவதற்கான ஏற்பாட்டினைச் செய்துகொண்டு இருந்தான். அதிக விளம்பரம் செய்திருந்த படம் என்பதால், கூட்டம் அலை மோதியது. சில இளைஞர்கள் சூழ்ந்து நின்று தேங்காய் உடைத்து, முறையாகத் தனது கதாநாயகனுக்குப் படைத்துவிட்டுத்தான் படத்தைப் போட வேண்டும் என மறித்துக்கொண்டார்கள்.

கெளுத்தியானுக்கும் ராசதுரைக்கும் இருப்புக்கொள்ளவில்லை. கூட்டத்தில் நிற்க மனது பொறுக்காமல் இருட்டில் அங்கேயே தூரமாக நின்று எரிச்சலுடன் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

படத்தைத் தொடங்குவதற்காகச் செய்யப்பட்ட பூசையே அமர்க்களப்பட்டது. ராசதுரை பலம் ஒடிந்து அப்படியே அங்கு நின்றிருந்த டிராக்டரில் சாய்ந்துகொண்டான். தனது வேஷம் தோன்றும்போது எழும் கைதட்டுக்களும் விசில் சத்தமும் இளைஞர்களால் பாசத்தோடு போடப்படும், முருக்கு மற்றும் பலகார மாலைகளும், பலூன் மாலைகளும் நினைவுக்கு வந்தது.

படம் திரையிட்டவுடன் இருவராலுமே அங்கு நிற்க முடியவில்லை. விசில் சத்தம் காதைப் பிளந்தது. இவர்களைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு கூட்டம் முன்னேறியது.

ஊருக்கு வெளியே இருந்த ஒழுங்கையில் இருவரும் யாருமற்ற இருட்டில் தனிமையில் நடந்து வந்தபோது, கோயில் திடலில் திருட்டு சினிமாப் படம் ஓடிக்கொண்டு இருந்த சத்தம் தெளிவாகக் கேட்டது.

இருவருமே மேலும் போதையைக் கூட்டியிருந்தார்கள். கெளுத்தியான்தான் தள்ளாடியபடி நடந்து வந்து அங்குகிடந்த கல்லில் மண்வெட்டியைத் திருப்பித் தலைகீழாகத் தட்டி காம்பு வேறு கைப்பிடி வேறாகப் பிரித்தான்.

டிரான்ஸ்ஃபார்மரில் மின்சாரத்தைத் தடைப்படுத்தும் நீண்ட குழாயிலுள்ள சந்தில் மண்வெட்டிக் காம்பை ஒருவழியாக நுழைத்து கெளுத்தியான் பிடித்துக்கொண்டான். இருவரும் பலங்கொண்ட மட்டும் பிடித்து இழுத்தார்கள். வயசாகிப்போனபடியால், பலம் போதாக்குறையால் அவர்கள் மேலேயே இயலாமையால் கோபம் வெளிப்பட்டது. மீண்டும் மீண்டும் நிறுத்த முயன்று தோற்றுப்போனார்கள். அந்தத் தோல்வி இருவருக்குமே அழுகையாக மாறியது. அந்த அழுகை இறுதி வரை யாருக்குமே கேட்கவில்லை!

– செப்டம்பர் 2010

Print Friendly, PDF & Email

2 thoughts on “கலைஞர்களும் திருடர்களும்

  1. உங்களின் சமுக அக்கறை மாபெரும் பாராட்டை பெற வேண்டிய ஒன்று., வழக்கம் போல் இந்த சமூகம் உங்களையும் முழுமையாக அங்கீகரிக்கவில்லை.,

    1. நண்பர் தங்கர் பச்சன் அவர்களுக்கு
      என் வயது 70. உங்கள் படங்கள் எல்லாம் சமூக பாடங்கள் திரு. சந்தனகோபலன் சொன்ன மாதிரி நல்ல கலைஞர். ஆனால் நீங்கள் இந்த கலை உலகத்தில் அடையாளம் காணப்படவில்ல. ச்சே ச்சே இந்த பழம் புளிக்கும் என்கிற மாதிரி புதுமை என்று சொல்லப்படும் அனைத்தும் மெல்ல மெல்ல சாகும். மீண்டும் நாட்டுப்புற கலை வளரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *