கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 39,243 
 

”அப்பா, அந்த ‘பார்க்’ வழியா போகலாம்பா!” -கௌரி கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கினாள். ”ச்சீ, கழுதை! விடு அப்பாவை. நடு ரோட்ல என்ன இது வெட்கமில்லாம… எருமை மாதிரி வயசாறது. பொண் குழந்தையா லட்சணமா அடக்கம் வேண்டாம்..?” – என் மனைவி சீறலுடன் கை ஓங்கினாள். நான் அமர்த்தினேன். கௌரியின் கையைப் பிடித்துக்கொண்டு பார்க்கில் நுழைந்தேன்.

கௌரி என் மூத்த பெண். பாவாடையும் தாண்டாத, தாவணியும் தாங்காத பதிமூணு வயசுப் பெண். அம்மாவின் சாயலும் படபடப்பும் அச்சாய் இறங்கியிருக்கிறது அவளிடத்தில். அவள் அம்மாவுக்கோ எனக்கோ இல்லாத புத்திக் கூர்மையும், குறுக்குக் கேள்வியும், கிரஹிக்கும் தன்மையும் வந்திருக்கிறது. உலகத்தில் நடக்கிற அத்தனைக்கும் அர்த்தம் கேட்கும் ஞானம் வந்திருக்கிறது. உள்ளதை உள்ளபடிக்கு குழந்தைக்குச் சொல்லித் தருவதில் எனக்குப் பிரியம். எனக்குத் தெரிந்தது அத்தனையும் அவளுக்குச் சொல்லித் தருவதில் விருப்பம்.

”அப்பா, இங்கே வாயேன். இந்தச் செடியைத் தொட்டுப் பாரேன்… ‘கப்பு, கப்பு’னு மூடிக்கிறதுப்பா. ஏம்பா இந்தச் செடி இவ்வளோ வெட்கப்படறது?”

வெட்கப்படும் செடி! செடி வெட்கப்படுமா? பளிச்சென்று ஒரு நூலிழை மண்டைக்குள் பற்றி அணைந்தது.

”செடி ஏதாவது தப்பு பண்ணியிருக்கும், கௌரி!”

தலையை நிமிர்த்தி விழிகள் குறு குறுக்க, குழந்தை என்னைப் பார்த்தாள்.

”அகலிகை அகலிகைன்னு ஒரு பெண்…”

”அந்தக் கதை எனக்குத் தெரியும். ட்ராமால வருது. ராமர் நடந்துண்டே வரப்ப, கல் மேல கால் படும். படார்னு கல் வெடிக்கும். ‘பளிச் பளிச்’சுனு லைட்டெல்லாம் அணைஞ்சு அணைஞ்சு எரியும். அகலிகை வந்து ராமனை நமஸ்காரம் பண்ணுவா. மேலேர்ந்து கனகாம்பரமா கொட்டும்.”

நான் என் குழந்தையின் தலையைக் கோதியபடி மெல்லப் பேச ஆரம்பித் தேன்…

”தன்னைவிட வயதில் மூத்தவளும், அமைதியான முகத்தைக் கொண்டவளும், கருணை நிரம்பிய கண்கள் உடையவளுமான அகலிகை, தன்னை நமஸ்கரிப்பதைக் கண்டு ராமன் தயக்கத்துடன் விஸ்வாமித்திரன் அருகே நகர்ந்தான்.

‘ராமா! இவள் கௌதமரின் மனைவி. இந்திரனின் ஏமாற்றுதலுக்குப் பலியான பெண். அவன் கௌதமராய் வந்து மயக்கியது அறியாமல் தன்னைத் தவற விட்ட பேதை. கணவரின் சாபத்துக்கு இலக்கான இவள் பழி, உன் பாதம் பட்டதும் நீங்கியது. அதோ – இவள் விமோசன நேரம் இது என்று அறிந்து கௌதமரும் வந்திருக்கிறார்.

கௌதமரின் கண்களில் ததும்பும் சோகத்தைப்பார் ராமா. ‘ஆயிரம் சபித்தாலும் நீ என் மனைவியல்லவா’ என்று அணைத்துக் கொள்வதைப் பார். கல்ப கோடி காலம் பிரிந்து இணையும் தம்பதியைப் பார். தானறியாது செய்த தவறுதானே என்று கௌதமர் தேற்றுவதைப் பார். காதல் பேசுவதில்லை ராமா, உணர்த்தும். அன்பு அரற்றாது ராமா, ஆழ்த்தும்! அமைதி தரும். உலகமனைத்தும் மறந்து அவர்கள் மௌனமாய் நடந்து போவதைப் பார்.’

இணைந்து மெல்ல நகரும் உருவங்களை ராமன் அசையாது பார்த்துக் கொண்டிருந்தான். இதுவரை அறியாத உணர்ச்சிக்கு இலக்கானான்.

மறையும்வரை காத்திருந்து, பிளந்த பாறைகளைக் கடந்து பாதைக்கு வருகையில், கால் இடற, ஒரு க்ஷணம் தடுமாறி வில்லூன்றி, நிலையானதும் இடறியதைக் குனிந்து பார்த்தான்.

பிளவுபட்ட பாறையின் கீழ் ஒற்றைப்புல், வலக்கால் பெரு விரலை வளைத்து இறுக்கியிழுத்தது. விடுவிக்க முயல்கையில் மேலும் இறுக்கி, ‘ராமா!’ என்று கூவிற்று.

பேசும் தாவரம்! தாவரம் பேசுமா? இது கௌதமர் இருந்த இடம். வேதமே சொல்லும். சுள்ளென்ற குரலில் ஒற்றைப்புல் அழைத்தது… ‘அந்தக் கௌதமனைக் கூப்பிடு ராமா! விழியிளகி நீர் துளிர்க் கப் பார்த்தாயே, அந்த முனிவனை வரச் சொல். ‘வழக்கொன்று இருக்கிறது, வா!’ என்று கூப்பிடு. மனைவி கிடைத்த மகிழ்ச்சியில் என்னை மறந்து விட்டுப் போகிறான். வரச் சொல் இங்கே.’

‘கௌதமரை இப்போது அழைப்பது பண்பில்லை. அமைதி கொள். யார் நீ? உன் கோபமென்ன? ராமன் தீர்த்து வைப்பேன். விரலை விடு.’

‘கௌதமன் மனைவி தவறிழைத்தாள். தண்டனை பெற்றாள். கல்ப கோடி காலம் கல்லாய்க் கிடந்தாள். நான் என்ன செய்தேன்? அவள் காலின் கீழ் புல்லாய் இருந்த எனக்குப் பழி எதற்கு? செய்த பாவமென்ன? பெண்ணைப் பாறையாக்கி, பாறைக்குள் என்னை அழுத்திக் கௌதமன் போவதென்ன? வளர்ச்சியும் வாழ்வும் அற்று விதியே என்று கிடந்திருக்கிறேன். என்னோடு பிறந்தவை மரமாகி, மரத்தின் மரமாகிப் பெருத்துப் பூரித்துப் பேயாய் வளர்ந்திருக்கின்றன. ராமா, எனக்கேன் இந்த ஹிம்சை?’

சுள்ளென்ற குரலில் ஒற்றைப்புல் பேசிற்று.

‘அன்று நடந்ததென்ன… தெரியுமா உனக்கு?’ – வினவினான் ராமன்.

‘இந்திரன் வந்து இறங்கினான். இங்கே நின்று கோழி போல் கூவினான். இரவு முடிந்ததென்று நீராட கௌதமன் போனதும் உருமாறினான். அகலிகையைப் பெயர் சொல்லி அழைத்தான்…’

‘தெளிவாய்த் தெரிந்ததா, இந்திரன் தானா?’

‘நன்றாய்த் தெரிந்தது. இந்திரனே தான். அகலிகை வந்ததும் அணைத்து முகர்ந்தான். அகலிகைக்கு ஆச்சர்யம் – எதற்கு இந்நேரம் அணைப்பதும் முகர்வதும்…’

‘அகலிகை மறுத்தாளா? ஏன் எனக் கேட்டாளா?’

‘அவளிடத்தில் மறுப்பில்லை, ஆச்சர்யப்பட்டாள். ஆனால் முகமே சொல்லிற்று, குழப்பத்தில் தவித்தது.’

‘மேற்கொண்டு என்ன?’

‘உண்மைக் கௌதமன் சப்தம் கேட்டதும், இந்திரன் ஓடினான். வந்தபடி மறைந்தான். அகலிகை விழித்தாள். ‘கௌதமன் மறைந்து – கௌதமன் வருவதா? யார் இதில் கௌதமன்?’ – நிற்க வலுவின்றித் தரையில் சரிந்தாள்.’

‘மேற்கொண்டு என்ன?’ – உயர்ந்தது ராமன் குரல்.

‘தொட்டது புருஷனா? தெரியாத ஜன்மமா? உணர்ச்சியில் கல்லா?’ கௌதமன் இரைந்தான். கோபத்தில் முனிவன் சொன்னதெல்லாம் சாபம். அகலிகை நமஸ்கரித்தாள். அந்த க்ஷணமே பாறையானாள். என்னை அழுத்தினாள். கல்பகோடி காலம். என்னோடிருந்தவை மரமாகி மரத்தின் மரமாகி…’ – விசித்தது ஒற்றைப்புல்.

‘புல்லே! விரல் வளைத்து என்னை விடமாட்டேன் என்கிற வலுவுண்டு உனக்கு. இந்திரன் வரவை முதலில் அறிந்தது நீ. கௌதமன் நகர்ந்ததும், அகலிகை குழப்பத்தில் தவித்ததும் தெரியும் உனக்கு; இல்லையா?’ – குமுறினான் ராமன்.

‘கூவியழைத்திருக்க வேண்டாமா கௌதமனை? விரல் மடக்கி வீழ்த்தி யிருக்க வேண்டாமா இந்திரனை? முற்றும் உணர்ந்த முனிவன் – தன் கணவன் முழங்கால் தேய விழமாட்டான் என்று தெரிந்திருக்காதா அவளுக்கு? தெளிவாய்ப் புரிந்திருக்காதா யாரென்று? தீயாய்ப் பொசுக்கியிருக்க மாட்டாளா இந்திரனை? பிறர் வேதனையில் அத்தனைக் களிப்பு உனக்கு! பெண்ணுக்குத் தீங்கிழைப்பது தெரிந்தும் தடுக்காத குணம். இந்திரன் குணத்தில் உனக்கும் இணக்கம்; உள் மனசில் விருப்பம்.

இல்லையென்று சொல்லவேண்டாம் சிறு புல்லே, விரலை விடு! இந்த வீரம் அன்று இருந்திருக்க வேண்டும், விவரம் அறியாப் பெண்ணுக்கு உதவியிருக்க வேண்டும். விவேகம் அற்றாதால் விளைந்தது இக்கோலம்.

விரல் விட்டு நீயாய் நீங்குகிறாயா, நீக்கட்டுமா?’ – வில்லின் அடிப்புறத்தால் மெல்ல அழுத்தினான் புல்லை.

புல் சுருங்கிற்று.

அன்று முதல் இன்று வரை யார் தொட்டாலும், ராமனோ என்று வெட்கத்தால் குவியுமாம் தொட்டாற் சிணுங்கிகள்.”

குழந்தை கௌரி மௌனமாய்ப் புற்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த வயசுக்கு இந்தக் கதை அதிகம்தான். அவள் சின்ன மனசில் ஆயிரம் கேள்விகள். புரிந்தும் புரியாததுமாய் நூறு நினைப்புகள்.

விரல் நீட்டி மீண்டும் புற்களைத் தொடப் போனவள், சட்டென நிறுத்தினாள். தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்தாள். ”பாவம்பா, இந்தப் புல். ஏற்கெனவே ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கு. திருப்பித் திருப்பி ஞாபகப் படுத்தவேண்டாம்பா! வா, போகலாம்.” – என்னைக் கடந்து எழுந்து நடந்தாள்.

என் குழந்தைக்கு ஒரு விஷயம் புரிந்துவிட்டது. இனி மற்றதும் மெல்ல மெல்லப் புரியும்.

– 08-01-1978

Print Friendly, PDF & Email

2 thoughts on “கதை கதையாம் காரணமாம்

  1. தொட்டால் சிணுங்கி பற்றி அறிந்ததும் சிணுங்கி போனேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *