கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 9,808 
 

துரை

இன்று வியாழக்கிழமை. ‘ரீம் லீடர்’ வந்து ஆளியை அழுத்தி வேலையத் தொடக்கி வைத்தான். ‘ஃப்றீ வே’யிலை வாகனங்கள் வாற மாதிரி ‘சுக்கா சுக்கா’ எண்டு புத்தகக் கட்டுகள் பெல்றில் வந்து கொண்டிருந்தன. புழுத்த மணமொன்று மந்தமாருதமாகிறது. மனித இயந்திரங்களாக நாங்கள் இருவரும்! வரிசையாக வந்து கொண்டிருக்கும் புத்தகக் கட்டுகளுக்கு இடமும் வலமுமாக நின்று வேலை செய்து கொண்டிருந்தோம். வலது புறத்தில் இருப்பவன் றோமன். போலண்ட் நாட்டைச் சேர்ந்த ‘போலிஸ்’ (Polish) இனத்தவன். எங்களூர் நாதஸ்வர தவில் வித்துவான்களுடைய ‘கிருதா’வைப் போலிருக்கும் தலை மயிரை நீவி விட்டுக் கொண்டவாறே கடின உழைப்பில் அவன்.

கீரைப்பிடி பிடிக்கிறமாதிரி பத்துப் பத்துப் புத்தகங்களாகப் பிடிச்சு ஒரு மெஷினிலை நீட்ட அது கயிறு போட்டுக் கட்டி விடும். பின்பு குறுக்குப் புறமாக நீட்ட இன்னொரு கட்டு. அப்படியே அங்கை இஞ்சை பாக்காமல் குனிந்து ‘பலற்’றில் (Pallet) உள்ள பெட்டிக்குள் அடுக்க வேண்டும். முதுகு சொறிந்தா மூக்கு வந்தா ஒண்டும் செய்ய முடியாது. அது தன்பாட்டிலை வந்த மாதிரி போக வேண்டியதுதான். காலையில் எட்டு மணிக்கு தொடங்கும் வேலை எடுத்தல் – நீட்டல் – கட்டுதல் – குனிந்து வைத்தல் என்றபடியே நான்கு மணி வரை தொடரும். இடையே இரண்டு ‘ரீ பிறேக்’, ஒரு ‘லஞ்’. செக்கில் பூட்டிய மாட்டிற்கும் ஓய்வுண்டு. “இந்தப் ‘புறோசஸ்’ வேலையைப் போல ஒரு தரித்திரம் பிடித்த வேலை உலகத்திலை வேறை எதுவும் கிடையாது” றோமன் புறுபுறுத்துக் கொண்டான்.

‘டயமண்ட் பிறஸ்’ – ‘ஓஃப்செற் பிறின்ரிங்’. தூரத்தே ‘உஸ் உஸ்’ என்ற தாள லயத்துடன் விசிறி அடிக்கும் இயந்திரங்கள். ஒவ்வொரு இயந்திரங்களும் விதம் விதமான சத்தங்களை எழுப்பும். மொத்தத்தில் அது ஒரு சத்தங்களின் கலைக்கூடம். காது செவிடாகிப் போய்விடாமல் இருக்க ‘காதடைப்பான்’ (ear plug) போட்டுக் கொண்டுதான் இங்கு வேலை செய்ய வேண்டும். அந்தக் காதடைப்பானை தூக்கி எறிந்துவிட்டு விசர் பிடித்தது போல அங்கு நிற்கின்றேன். இப்பொழுது எனது தலையை எல்லாத் திசைகளிலிருந்தும் அழுத்திக் கொண்டிருக்கும் ஒரே சத்தம் – மனைவி கல்யாணிதான்.

நேற்று மாலை எனக்கும் மனைவிக்குமிடையே கடுமையான வாக்குவாதம் நடந்திருந்தது. வேலை முடிந்து களைத்துப் போய் வந்திருந்தேன். கல்யாணி சண்டையைத் துவக்க உகந்த தருணமாக அந்த நேரத்தைந்தான் தெரிவு செய்வாள்.

கல்யாணியின் அம்மா, எனது மாமியார் யாழ்ப்பாணத்தில் மூன்று கிழமைகளுக்கு முன்பாக இறந்துவிட்டார். எங்களுக்கு போன சனிக்கிழமைதான் தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்த போது செத்தவீடு எல்லாம் முடிந்து விட்டது. வடபகுதி வழமையைப் போல புற உலகிலிருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டு இருந்தது. பிரச்சினைகள் உச்சமாக நடந்து கொண்டிருந்த நேரம். ரெலிபோன் இணைப்புகள்கூட அப்பொழுது வேலை செய்யவில்லை. மாமியார் இறந்த போது கல்யாணியின் அப்பாதான் அங்கே கூட இருந்தார். கல்யாணியின் தம்பி சுவிசில் இருக்கின்றான். அவனால் சொந்த நாட்டிற்குத் திரும்பிப் போக முடியாத சூழ்நிலை. கல்யாணி யாழ்ப்பாணம் போவதற்கு அடம் பிடித்தாள்.

சாப்பாட்டுக் கோப்பைக்குள் கை வைக்கத் தொடங்கும்போது, கல்யாணி தன் முதலாவது அஸ்திரத்தை என்மீது வீசினாள்.

“அப்பா பாவம். தனிச்சுப் போனார். நாங்கள் போனா இந்த நேரத்திலை கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.”

“செத்தவீடு முடிஞ்சு மூண்டு கிழமையாப் போச்சு. இனி அங்கை போய்ப் பிரயோசனம் இல்லை. இப்ப போனாக்கூட யாழ்ப்பாணம் போகலாமோ தெரியாது.”

“இப்ப பிரச்சினையள் கொஞ்சம் குறைஞ்சிட்டுது எண்டு கதைக்கினம்.”

“போறதை விட்டிட்டு கொஞ்சக் காசை அனுப்பினோமெண்டால் அப்பாவுக்கும் உதவியா இருக்கும். பிரச்சினையள் திரும்ப எப்ப துவங்கும் எண்டு சொல்லேலாது. அதுகளுக்கை மாட்டுப்பட்டுப் போனால், இஞ்சை வேலைக்கு உலை வைச்சுப் போடுவான்கள்.”

“அப்ப நீங்கள் நில்லுங்கோ. நானும் பிள்ளையளும் போட்டு வாறம்.”

“அதுகளின்ர படிப்பு வீணாப் போகும்.”

“சின்ன வகுப்புத்தானே. பிரச்சினையில்லை.”

“எனக்கெண்டா இது நடக்கிற காரியமா தெரியேல்லை.”

“உங்களுக்கு காசு. இப்ப அதுதானே உங்கட பிரச்சினை?”

“காசு எண்டாப்போல உமக்கேதோ சும்மா வருகிறமாதிரி. இப்ப ஒஸ்ரேலியாவிலை இருந்து இலங்கைக்கு நாலு பேர் போய் வர பத்தாயிரம் டொலர் மட்டிலை முடியும்.”

“தேவையெண்டு வந்தா காசைப் பாக்கேலாது.”

“நீர் உழையும். உழைச்சுப் பாரும். அப்ப தெரியும் காசின்ர அருமை.”

“எனக்கு இப்ப வேலை இல்லையெண்டதைக் குத்திக் காட்டிறியளோ? செத்தவீட்டுக்கு உதவாத காசை வைச்சு என்ன செய்யப் போறியள்?”

சாப்பிட்டுக் கொண்டிருந்த எனக்கு ‘காசு’ என்றவுடன் வெறி பிடித்தது. வெறி கையிலே இருந்த சாப்பாட்டுக் கோப்பைக்குத் தாவியது. சாப்பாட்டுக் கோப்பை கல்யாணியை நோக்கிப் பறந்தது. கல்யாணி குனிந்து கொண்டாள். கோப்பை சுவர் மீது மோதி, சாப்பாடு சுவரிலும் ‘காப்பெற்றி’லுமாகப் பரவியது.

அறைக்குள்ளே இருந்து விளையாடிக் கொண்டிருந்த இரண்டு பெண் பிள்ளைகளும் வெளியே வந்து எட்டிப் பார்த்தார்கள். ‘காப்பெற்’றிலே கொட்டியிருந்த சாப்பாட்டைத் துடைப்பதற்காகக் குந்தி இருந்தார்கள்.

“போங்கோ உள்ளுக்கை. போய்ப் படியுங்கோ. உது உப்பிடியே கிடக்கட்டும்” ‘செற்றி’க்குள் புதைந்து போயிருந்த கல்யாணி கத்தினாள். அவளின் கண்கள் செர்ரிப்பழங்கள் போல் சிவந்து போயிருந்தன. பயத்தில் பிள்ளைகள் இருவரும் உள்ளுக்குள் ஓடிப் போனார்கள்.

பொறுமையை மீறி வாய்க்கு வந்தபடி கத்தினேன். பசி அகோரம். வேலைக் களைப்பு. கோபத்தில் அங்குமிங்குமாக நடந்தேன். பட்டென்று காரை எடுத்துக் கொண்டு நண்பன் ராஜனின் வீட்டிற்குப் போனேன். இரவு நெடு நேரமாகிய பின்பே வீட்டிற்கு வந்தேன். நண்பனின் வீட்டில் கொஞ்சம் குடித்து விட்டு வந்தந்தால் காரிற்குள் படுத்து உறங்கிக் கொண்டேன்.

இன்று வேலைக்குப் புறப்படும் வரைக்கும் கல்யாணியும் பிள்ளைகளும் என்னுடன் ஒன்றும் கதைக்கவில்லை.

“என்ன துரை இண்டைக்கு ஒரே ‘டல்லா’ இருக்கிறீர்?” வேலை செய்து கொண்டே றோமன் கேட்டான்.

“ஒண்டுமில்லை” றோமனுடன் கதைத்தால் மனம் ஆறுதலடையலாம் போல் இருந்தது.

றோமன்கூட விவாகரத்து செய்து இருபத்தைந்து வருடங்கள் ஆகிவிட்டன. அவனும் மனைவியும் தமது சுய விருப்பின் பேரிலேயே பிரிந்து கொண்டார்கள். றோமன் அவளை விட்டுப் பிரியும்போது, அவர்கள் வசித்து வந்த வீட்டை அவளுக்கே எழுதிக் கொடுத்துவிட்டான். தான் ஒரு வாடகை வீட்டில் போய் இருந்து கொண்டான். இப்பொழுது றோமனுக்கு அறுபத்தைந்து வயதாகிறது. அடுத்த வருடத்திலிருந்து ஓய்வு பெற இருக்கின்றான். இவ்வளவு காலமும் உழைத்துச் சேமித்த பணத்தைக் கொண்டு தனக்கென ஒரு வீட்டைக் கட்டி முடித்துவிட்டான். றோமனைப் பார்ப்பவர்கள் அவனது வயதை மதிப்பிட மாட்டார்கள். அவ்வளவிற்கு மிக இளமையாகவும் பலசாலியாகவும் இருந்தான். அவன் தனது நாட்டில் இருந்த காலத்தில் இரண்டு வருடங்கள் இராணுவத்தில் இருந்தான். அப்போது போலண்ட்டில் கட்டாய இராணுவ சேவை இருந்தது.

றோமனின் சாப்பாடு அப்பிளும் வாழைப்பழமும் தான். மதியம் சாப்பிட்டுவிட்டு, இயந்திரங்களின் பின்னால் உள்ள மறைவிடத்தில் தூங்கிக் கொண்டிருப்பான். நான் சாப்பாட்டில் ஒரு பிடி பிடித்துவிட்டு அவனுக்குப் பக்கத்தில் போய் நின்று செருமினேன்.

“றோமன்! எனக்கும் மனைவிக்குமிடையே சண்டை.”

“என்ன? என்ன?” பதறிக் கொண்டே நித்திரைத் தூக்கத்திலிருந்து எழும்பினான் றோமன்.

நான் நடந்தவற்றை ஒவ்வொன்றாகச் சொன்னேன்.

“எப்பிடியும் மாமியின் செத்த வீட்டிற்கு நீங்கள் போயிருக்க வேண்டும். உங்கள் மதம் – அப்பா அம்மாவை இறைவனிற்கும் மேலாக வைத்திருக்கின்றது அல்லவா!” என்றான் அவன்.

“ஓம் றோமன். பிழை விட்டிட்டன் போலை கிடக்கு.”

“நான் நேற்று வேலைக்கு வரவில்லை அல்லவா! ஒரு புதினம் சொல்கின்றேன், கேள்!! என்னுடைய ‘எக்ஸ் வைவ்’ நேற்றுக் காலை எனக்கு ரெலிபோன் செய்து தன்னை ஒருக்கா ‘சென்ற் கில்டா மெடி கிளினிக்குக்கு’ (St Kilda medi clinic) கூட்டிக் கொண்டு போக முடியுமா என்று கேட்டாள். நேற்று முழுக்க என்னுடைய பொழுது அவளுடன் கழிந்தது” என்று சொன்னான் றோமன்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருபோதும் லீவு என்று எடுக்க மாட்டான் றோமன். “தன்னுடைய ‘சா வீட்டுக்குத்தான்’ றோமன் லீவு எடுப்பான்” என்று அவனைப் பற்றிச் சொல்லுவார்கள். ‘மெடிக்கல் லீவு’ எடுப்பது கூட மிக அருமை. அவனும் மனைவியும் பிரிந்து இருபத்தைந்து வருடங்கள் கழிந்து விட்ட நிலையில் இது எப்படி நடந்தது?

“இதற்கு முன்பும் அப்படிப் போயிருக்கிறீரா?” வியப்புடன் கேட்டேன் நான்.

“இரண்டொரு தடவைகள் அவளிடம் போயிருக்கின்றேன். ஒன்று எங்களுடைய மகனின் கலியாண வீட்டிற்கு. நாங்கள் பிரியும்போது மகன் அம்மாவுடன் இருந்தான். பிறிதொருநாள் ‘கரண்ட் வயர்’ அறுந்து திருத்திக் குடுக்கப் போனேன். தண்ணிப் பைப் உடைஞ்சதெண்டு ஒருக்கா. இது நான் நினைக்கின்றேன் நாலாவது தரம் எண்டு. என்ன செய்வது? என்னை விட்டுப் பிரிந்தாலும் அவள் இன்னொரு திருமணம் செய்யவுமில்லை. திரும்பி ஒரு தடவையாவது சொந்த நாட்டிற்கும் போகவில்லை.”

அவர்களின் உறவை நினைத்து நான் குழம்பிப் போனேன். இது விடயத்தில் எனக்கும் கல்யாணிக்குமிடையே இருக்கும் பிரச்சினை தூசுதான். மனம் என்னுள்ளே தீவிர விசாரணை செய்கிறது. ஒப்பீடு அடுத்தவருடன் நிகழ்த்துகிறது. வேலை முடிந்து வீட்டிற்கு வருவதற்கு ஆயத்தமாகின்றேன். திறப்புக்கோர்வையில் கொழுவியிருக்கும் ‘கீ ராக்’கில் உள்ள குடும்பப் புகைப்படத்திலிருந்து கல்யாணி முறைத்துப் பார்க்கின்றாள். பெண்கள் என்றால் என்ன அவ்வளவு இளக்காரமா? விட்டுக் கொடுத்தலும் பொறுமையும் எங்களுக்கு மாத்திரமா சொந்தம்? உங்களுக்குக் கோபம் வந்தால் அடிப்பியள், பிறகு தேவை வந்தால் அணைப்பியள்! உங்களால் மட்டும்தான் சாப்பாட்டைத் தூக்கிச் சுழற்றி எறிய முடியுமா? ஒரு சோற்றுப் பருக்கையின் விலை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? கல்யாணி பொரிந்து தள்ளினாள்.

மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் ஏதாவது வாங்கிக் கொண்டு போனால் மகிழ்ந்து போவார்கள் என கடைக்குப் போனதில் வீடு வர தாமதமாகிவிட்டது.

கதவைத் தட்டுகின்றேன். திறக்கவில்லை. ‘கல்யாணி’ என்று கூப்பிட்டுப் பார்த்தேன். சத்தமில்லை. என்னிடமுள்ள திறப்பினால் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே செல்கின்றேன். அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டினில் மனைவியையும் பிள்ளைகளையும் காணவில்லை. ஒவ்வொரு அறையாகச் சென்று பார்த்தேன். மேலும் அதிர்ச்சி. உடுப்புகள், ரீ.வி., கொம்பியூட்டர், டைனிங் ரேபிள், ஒரு பெட் போன்றவையும் மாயமாக மறைந்திருந்தன.

கல்யாணி

அதிர்ச்சி வைத்தியம் தான் இனிமேல் மருந்து என்று தீர்மானித்தேன்.

பள்ளிக்கூடத் தோழி சுகுணா எனக்குக் கிட்ட இருந்தாள். எனக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் அவள் செய்து தந்தாள். ஒரே ஒரு நாள் அவளுடன் தங்கி விட்டு இலங்கைக்குப் புறப்பட்டேன். கொழும்பில் எனது மாமா மாமி இருந்தார்கள். மாமாவும் மாமியும் எனக்கு நல்ல ‘சப்போட்’. நான் சுகுணாவின் வீட்டில் தங்கியிருந்த இரவு, துரை அங்கே வந்து என்னை விசாரித்தார். ‘எனக்குத் தெரியாது’ என்று சொல்லி அவரை அவமானப்படுத்தி வீட்டு வாசலிலேயே வைத்து திருப்பி விட்டாள் சுகுணா.

இரண்டு நாட்கள் கொழும்பில் தங்கிவிட்டு, மிகவும் கஸ்டப்பட்டு யாழ்ப்பாணம் சென்றேன். வரும்போது மாமியும் என்னுடன் கூட வந்தார். அப்பா, ஆஸ்மா டயபிற்றீஸ் போன்ற வருத்தங்களுடன் ஒரு அறையினுள் முடங்கிக் கிடந்தார். அம்மாவின் இறப்பு அப்பாவை நடைப்பிணமாக்கி விட்டது.

எங்களைக் கண்டதும்,

“ஏன் இஞ்சை வந்தனீ?” என்று நெஞ்சு படபடக்கக் கத்தினார்.

“அப்பா, ஏன் உப்பிடிக் கதைக்கிறியள்? உங்களைப் பாக்கத்தான் வாறம்” அப்பாவின் கேள்வியில் மனம் உடைந்து நொருங்கிப் போனேன். பிள்ளைகள் அப்பாவுக்கென்று விதம்விதமான பொருட்களுடன் வந்திருந்தார்கள். அவர்கள் திகைத்துப் போனார்கள்.

“வரவேண்டாம் எண்டு ஆர் சொன்னது? வாருங்கோ. தாராளமாக வாங்கோ. குடும்பத்தோடை ‘பமிலியா’ வாங்கோ எண்டுதான் சொல்லுறன்.”

துரை நன்றாகவே போட்டுக் குடுத்திருக்கின்றார் என்று புரிந்தது.

“அப்பா, உங்களைப் பாக்க எண்டுதான் அவரோடை சண்டை பிடிச்சுக் கொண்டு வாறன். எவ்வளவோ போராட்டங்களுக்கு மத்தியில் கஸ்டப்பட்டு வாறன், நீங்கள் போ எண்டு கலைக்கிறியள்!”

‘கலியாணம் முடிச்சுப் போயிட்டா, பிறகு அது இது எண்டு எங்களிட்டை வரப்படாது. நீங்களே உங்கடை பாட்டைப் பாத்துக் கொள்ள வேணும்” அப்பா சொல்லுறார்.

எங்களின்ர மனதின்ர வலியைப் புரிந்து கொள்பவர் யார்? பிரிந்து வருவதை அப்பாவும் விரும்பவில்லை. சமுதாயத்தில் பெண்களின் நிலை இற்றை வரைக்கும் இதுதானே! அம்மாவின் செத்தவீட்டிற்கு போக அனுமதிக்காதவரை – கண் காணாத இடத்திலை கொண்டு வந்து காசைப் பிசாசாக நினைக்கிற புருஷனின் சித்திரவதைகளை – அனுபவித்துக் கொண்டு வாழ வேணுமாம். அப்பாவும் ஆண் வர்க்கம்தானே!

மாமி எங்களுக்கிடையே சமாதானம் பிடித்தாள்.

“சரி வந்திட்டாய். இரண்டொரு கிழமைகள் இருந்துவிட்டுப் போ” என்றார் அப்பா. மாமி என்னைத் திரும்பிப் பார்த்தார். கண் காட்டினார். நான் ஒன்றும் பேசவில்லை. இப்பொழுது கதைத்தால் எல்லாம் குழம்பி விடும்.

அன்று முழுவதும் பிள்ளைகள் நேர வித்தியாசத்தால் மாய்ந்து மாய்ந்து நித்திரை கொண்டார்கள். முழிக்கும் நேரங்களில் அப்பாவுடன் போயிருந்து கதைத்தார்கள். வாஞ்சையுடன் அப்பாவை ‘தாத்தா’ என்று சொல்லி செல்லம் பொழிந்தார்கள். அப்பா குளிர்ந்து போனார்.

இரவு நித்திரை வரவில்லை. நானும் மாமியும் பிள்ளைகளும் ஒரு அறைக்குள் படுத்திருந்தோம். அப்பா விறாந்தையில் படுத்திருந்தார். மனம் வாழ்க்கையை அசை போட்டது.

துரை மீது அப்பாவிற்கும் மிகுந்த பாசமுண்டு. துரை வெளியிலை எல்லாருக்கும் மரியாதை கொடுத்து நல்லபடி நடக்கின்றார். அதாலை வெளியுலகத்துக்கு ‘நல்லபிள்ளை’ எண்டு பெயர். வீட்டிலை எங்களின் மீது கோபம் கொண்டு வெறியைக் காட்டுகிறார். சமயங்களில் பிள்ளைகளின் கொப்பி புத்தகங்களையும் வீசி எறிகின்றார். கோபம் வரும்போது ஒரு மன நோயாளியைப் போல நடந்து கொள்கின்றார். எங்களுக்கிடையே அடிக்கடி சச்சரவுகள் ஏற்படுவதுண்டு. சண்டையைத் துவக்க சிறு துரும்பு போதும். ஊரில் இருக்கும்போது நாங்களும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம். இந்தப் புலம்பெயர்வின் பின்புதான் பிரச்சினைகள் முளைவிட ஆரம்பித்தன. அதுவே எனக்கு இந்த வேகத்தையும் விவேகத்தையும் கற்றுக் கொடுத்தது.

“இந்தப் படிக்கிறதுக்கு ஒரு எல்லையே இல்லையப்பா! வாழ் நாள் முழுதும் படிச்சுக் கொண்டே இருக்கலாம். அப்பதான் வாழ்க்கைக்கு ஒரு பெறுமதி உண்டாகும்” என்பது துரையின் கருத்து.

“வெள்ளையளைப் பாருங்கோ! கொஞ்சக்காலம் படிப்பினம். பிறகு வேலை செய்வினம். பிறகு உழைச்சுச் சேமிச்சதைக் கொண்டு உலகம் சுத்தக் கிழம்பி விடுவினம். பிறகு திரும்ப வந்து படிப்பைத் தொடருவினம். இப்படியா ஒரு சுழற்சியா அவையளின்ர வாழ்க்கை போகும். அதுதான் வாழ்க்கை” அவனுக்கு நேர் எதிரான கருத்தை முன் வைப்பேன் நான்.

“உமக்கு இப்ப வேலை இல்லை. அதாலைதான் உப்பிடி வெறுப்பிலை கதைக்கிறீர்?”

“இது வெறுப்பில்லை. உண்மை. நீங்கள் என்னையும் பிள்ளையளையும் எப்பவாவது ஏதாவது ஒரு கலை நிகழ்ச்சிக்கோ அல்லது படத்துக்கோ கூட்டிக் கொண்டு போயிருக்கிறியளா? ஏதாவது ஒரு இடம் போய் பாத்திருக்கிறோமா? ஒஸ்ரேலியா வந்து பத்து வருஷமாப் போச்சு. ஒரேயொருக்காத்தான் ‘ரெஸ்ற்றோறண்ட்’டிற்குக் கூட்டிக் கொண்டு போயிருக்கிறியள். அதுவும் சாப்பிட்டுக் கொண்டிருக்கேக்கை – இந்தச் சாப்பாட்டின்ரை விலை என்னவெண்டு தெரியுமா? எண்டு கேட்டியள். சாப்பாடு மேலுக்கும் போகேல்லை, கீழுக்கும் போகேல்லை.”

தொழிலும் படிப்பும் வாழ்க்கையின் ஆதார சுருதிதான். ஆனால் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும் என்பதை மறந்து விடுகின்றார். துரை அவுஸ்திரேலியா வந்ததன் பிற்பாடு ‘மோட்டர் மெக்கானிஸம்’ படித்தார். இப்பொழுது ‘மெல்பேர்ண் யூனிவசிட்டியில்’ பகுதி நேரமாக ‘இஞ்சினியறிங் ரெக்னோலஜி’ படிக்கின்றார். நான் தாதி வேலைக்குப் படிந்தேன். ‘வாழ்க்கையிலை எண்டைக்கும் நிலைச்சிருக்கக்கூடிய தொழில் அது’ என்று துரைதான் எனக்கு அதைத் தெரிவு செய்திருந்தார். நாங்கள் நினைத்தது போல ‘நேர்ஷிங்’ படிப்பு இலகுவானதாக அமையவில்லை. மிகவும் கஸ்டப்பட்டே அதைப் படித்து முடிக்க வேண்டியிருந்தது. இரண்டு வருடங்கள் தற்காலிகமாக ‘றோயல் மெல்பேர்ண் ஹொஸ்பிட்டலில்’ வேலை செய்தேன். இப்பொழுது மூன்று வருடங்களாக வேலை இல்லை.

இரவு இரண்டு மணி இருக்கும். அப்பா உறக்கம் வராமல் கால் கைகளைப் போட்டு அடிக்கும் சத்தம் கேட்டது. மாமியும் பிள்ளைகளும் நல்ல உறக்கம்.

“என்ன அப்பா நித்திரை வரேல்லைப் போல இருக்கு.”

“ஓம் கல்யாணி. தேத்தண்ணி குடிச்சால் நால்லா இருக்கும் போல கிடக்கு.”

தேநீரைப் போட்டுக் கொண்டு அப்பா இருக்கும் கட்டிலுக்கு போனேன். “நீயும் கொஞ்சம் போட்டு எடுத்துக் கொண்டு வா” என்றார் அப்பா. தேநீரைக் குடிக்கும் போது கதையைத் தொடங்கினார்.

“அப்ப நீயென்ன விவாகரத்து எடுக்கப் போறியா?”

“அப்பா, உங்களுக்கென்ன விசரா? நான் எப்ப சொன்னனான் விவாகரத்து எடுக்கிறன் எண்டு? விவாகரத்து எடுத்தாலும் இன்னொரு கலியாணம் நான் செய்ய மாட்டன். கலியாணம் செய்து பத்துப் பன்னிரண்டு வருஷமாகியும் இன்னும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு கொள்ள முடியேல்லை. அதுக்குள்ளை இன்னொருத்தனைக் கலியாணம் செய்து… அவனைப் புரிஞ்சு… எந்தப் புற்றுக்கை எந்தப் பாம்பு இருக்கோ ஆர் கண்டது? போதுமப்பா!”

“உங்களுக்கெல்லாம் சாப்பாட்டுத் திமிர்” என்று சொல்லி விட்டு அப்பா படுத்துக் கொண்டார்.

மூன்றாம் நாள் மாலை எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ‘அரைமணி நேரத்தில் துரை ரெலிபோன் எடுப்பார்’ என்று ‘கொமினியுக்கேசன் சென்ரரில்’ வேலை செய்யும் ஒருவன் வந்து சொல்லி விட்டுப் போனான். அப்பா என்னையும் கடைசிப் பிள்ளையையும் கூட்டிக் கொண்டு போனார். மூத்தவள் மாமியுடன் நின்றாள்.

“என்ன தம்பி! இப்பிடிச் செய்து போட்டீர். என்ன இருந்தாலும் சாப்பாட்டாலை எறியிறது கூடாது தம்பி. பெம்பிளையளை கை நீட்டி அடிக்கிறவையையும் சாப்பாட்டாலை எறியிறவையையும் எனக்குப் பிடிக்காது. அது நரம்பில்லாத மனிசர்கள் செய்யிற வேலை” துரை ரெலிபோன் எடுக்க அப்பா கடுப்பாகிக் கதைத்தார்.

மறுபுறத்தில் துரை கதைப்பது போல் தெரியவில்லை. அப்பாவே தொடர்ந்தார்.

“அவளும் பிடிவாதக்காரிதான். நானும் நிறையப் புத்திமதி சொல்லியிருக்கிறன் தம்பி! எல்லாத்தையும் மறந்து போட்டு ஒண்டா இருக்கப் பாருங்கோ. இந்தா கல்யாணி, நீயும் ஒருக்காக் கதை” திடீரென்று றிசீவரை என் கையில் தந்தார் அப்பா.

“கல்யாணி எண்டதும் திகைச்சே போய் விட்டன். அதுக்கிடையிலை உங்கை போய் சேந்திட்டீரா?” திகைத்தே போய் விட்டான் துரை.

“எப்பிடி இருக்கிறியள்?” ஒன்றுமே நடக்காதது போலக் கேட்டேன்.

“நான் இருக்கிறன். எப்பிடி உங்கை போய்ச் சேர்ந்தீர்?” கோபத்தை மறந்து விட்டான் துரை.

“இப்ப இஞ்சை எல்லாம் நோர்மலா இருக்கு. சுகுணாதான் எல்லா உதவியும் செய்து தந்தவள். அதுக்காக அவளோடை போய்ச் சண்டை பிடியாதையுங்கோ. காசு தேவையா இருந்தபடியாலை எடுத்துக் கொண்டு போன எல்லாத்தையும் வித்துப் போட்டன். பிறகு வாங்கலாம்தானே! கடைசி உங்களோடை கதைக்கவேணுமெண்டு நிக்கிறாள்.”

“அப்பா! அப்பா!! எப்பிடி அப்பா இருக்கிறியள்? அம்மா நேற்றைக்கு எங்களை ஒரு இடத்துக்கு கூட்டிக் கொண்டு போனவா. கனபேர் கையில்லாமல், கால் இல்லாமல் எல்லாம் முனகிக் கொண்டு அங்கை இருக்கினம் அப்பா. அம்மா இனிமேல் அங்கைதான் வேலை செய்யப் போறாவாம்.’

“இஞ்சை கொண்டுவாடி ரெலிபோனை. மாமி எனக்கு ஹொஸ்பிட்டலிலை வேலை எடுத்துத் தந்திருக்கிறார். இஞ்சை அரச மருத்துவ மனைகள், தனியார் மருத்துவ மனைகள் எல்லாம் நோயாளிகள் நிறைஞ்சு போயிருக்கினம். அதைவிட இருக்க இடம் இல்லாமல் கன நோயாளிகள் வீடுகளிலும் இருக்கினம். எத்தினை விதமான நோயாளிகள். ஷெல் பட்டு, குண்டு பட்டு, நிலக்கண்ணி வெடிச்சு எண்டு. அதைவிட கான்சர் அது இது எண்டு இப்ப புதுப் புது வருத்தங்களும். கொஞ்ச நாளைக்கு இஞ்சை வேலை செய்திட்டு வரட்டே?”

“கொஞ்ச நாளைக்கெண்டா?”

“அப்பாவுக்கும் எழுபது வயதாகுது. நிறைய வருத்தங்களாலை கஸ்டப்படுகிறார்.”

“சரி இருந்திட்டு வாரும். நாளைக்கு நானும் ஒருக்கா ‘றவல் ஏஜென்சிக்’காரரைச் சந்திக்க வேணும். ஒரு மாதம் உங்கை வந்து நிக்கிற பிளான். ஒருத்தருக்கும் சொல்லிப் போடாதையும். பிள்ளையளுக்கும்தான். திடீரெண்டு வந்து எல்லாருக்கும் ஒரு அதிர்ச்சியைக் கொடுக்க வேணும்!”

“சரி வைக்கிறன்.”

நான் சிரித்துக் கொண்டேன். அப்பா என்னைக் கூர்ந்து பார்க்கின்றார். என் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. நாங்கள் அசாதாரண மனிதர்கள் அல்லத்தானே!

வீட்டிற்குச் சென்ற போது, அங்கே வீட்டினில் என் பள்ளித் தோழிகள் நிறைந்திருந்தார்கள். என்னைப் பார்ப்பதற்கென்று வந்திருந்தார்கள். வீடு கலகலத்துப் போனது. போகும்போது, “கல்யாணி இனி எப்ப ஒஸ்ரேலியா திரும்பிப் போகிறாய்?” என்றார்கள்.

“கல்யாணி கொஞ்சக் காலத்துக்கு நாட்டிலை இருந்து மருத்துவச் சேவை செய்ய விரும்புகிறாள். அவளுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் இருக்கிற உறவுமுறைகளை ஒருத்தராலும் புரிஞ்சு கொள்ள முடியாது” அப்பாவே பதிலில் முந்திக் கொண்டார். எனக்கு அப்பாவின் பதில் பெருத்த ஏமாற்றத்தைக் தந்தது. அவர்கள் போன பின்பு,

“ஏன் அப்பா அப்பிடிச் சொன்னியள்?” என்று கோபமாகக் கேட்டேன்.

“பின்னையென்ன புருஷனோடை சண்டை பிடிச்சுக் கொண்டு வந்து நிக்கிறாய் எண்டு சொல்லவா? ஒரு அப்பாவாலை இதைத்தான் சொல்ல முடியும்” என்றார் அப்பா.

ஒருவேளை துரைகூட இதைத்தான் அவுஸ்திரேலியாவிலும் சொல்லக்கூடும்.

ஏ லெவலில் ‘கெமிஸ்ரி’ படிக்கேக்கை ‘கூற்று – காரணம்’ எண்டொரு கேள்வி பகுதி வரும். ஒரு கூற்றும் ஒரு காரணமும் தருவார்கள். ‘கூற்று சரி – காரணமும் சரி, கூற்று சரி – காரணம் பிழை, கூற்றும் பிழை – காரணமும் பிழை’ எண்டமாதிரி விடைகள் தருவார்கள்.

அப்பா சொன்ன கூற்று சரி; ஆனால் காரணம் பிழை.

பெரும்பாலானவர்களின் விடயத்தில் – இந்தக் கூற்றும் காரணமும் சரியாக அமையுமானால் எங்கடை பிரச்சினைகளுக்கெல்லாம் எப்போதோ தீர்வு கிடைத்திருக்கும்.

– யுகமாயினி, வைகாசி 2010

‘கந்தர்வன்’ நினைவுச் சிறுகதைப்போட்டி (2008, தமிழ்நாட்டிற்கு வெளியே / முதல் பரிசு ), தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்தியா.

– சென்றிடுவீர் எட்டுத்திக்கும் (பரிசுபெற்ற பன்னிரண்டு சிறுகதைகள்), முதற் பதிப்பு:ஏப்ரல் 2014, அக்கினிக்குஞ்சு வெளியீடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *