ஒரு மனசாட்சியின் டைரி குறிப்பு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 10, 2020
பார்வையிட்டோர்: 9,453 
 

என் பெயர் வினய் சந்திரன். இது என்னுடைய உண்மையான பெயர் தான். நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்று யோசிப்பீர்கள்.

என் டைரியைப் படித்து முடிக்கும் போது உங்களுக்கே புரியும்.இவனை கழுத்தை நெரித்து கொல்ல மாட்டோமா என்று தோன்றும்…..!!!!!!

எனக்கு இப்போது வயது நாற்பத்தைந்து . நல்ல அன்பான மனைவியும் மணி மணியாய் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.

நான் கொஞ்ச நாளாகவே மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். அதனால் எனக்கு மன நலம் சரியில்லை என்று எண்ணி விடாதீர்கள்… ..

பெரிய நிறுவனத்தில் கை நிறைய சம்பாதிக்கிறேன். குடும்பத்தை கூடிய மட்டும் மகிழ்ச்சியாகவே வைத்திருக்கிறேன்.

வெளியிலிருந்து பார்த்தால் நான் உங்களில் ஒருவனைப் போலத்தான் சாதாரணமாக இருப்பேன். ஆனால் உள்ளுக்குள் நான் அனுபவிக்கும் சித்திரவதையை இன்றைக்காவது வெளியில் பகிர்ந்துகொள்ள கொள்ளா விட்டால் நிச்சயம் பயித்தியம் பிடித்து விடும்…..!!!!

நான் ஐந்தாவது படிக்கும்போது தான் அந்த கொடிய அரக்கன் என்னுள் சத்தமில்லாமல் புகுந்திருந்த வேண்டும்.

நான்படித்தது ஒரு இருபாலரும் படிக்கும் பள்ளி…. சென்னையில் பிரபலமான பள்ளி.

மாணவிகளுடன் நட்பாகவே பழகினோம். ஒரு நாள் வகுப்பு முடிந்து எல்லோரும் போனபின் நானும் சந்தியாவும் தனியாக இருந்தோம்.

திடீரென்று சந்தியாவைக் கட்டிப் பிடித்து தொடக்கூடாத இடத்தில் தொட்டு விட்டேன். மிரண்டு போய் என்னைத் தள்ளி விட்டு ஓடி விட்டாள். எனக்கு பயம் பிடித்துக்கொண்டது.

மறுநாள் பள்ளிக்கு விடுமுறை போட்டு விட்டேன். அடுத்த நாள் சந்தியாவை நேரில் பார்க்கவே பயமாயிருந்தது. யாரிடமும் சொல்லியிருக்க மாட்டாள் போலிருந்தது. அத்துடன் அந்த சம்பவத்தை மறந்து விட்டேன்.

நான் பள்ளிக்கு சைக்கிளில் தான் செல்வது வழக்கம். எப்பொழுதாவது பஸ்ஸில் போவேன். அநேகமாய் நின்று கொண்டு தான் போவேன். பக்கத்தில் இருக்கும் பெண்கள் மீது பிரேக் போடும்போது வேண்டுமென்றே விழுவது ஏதோ ஒரு கிளுகிளுப்பைத் தந்தது.

பெரும்பாலான சமயங்களில் அவர்கள் முணுமுணுத்துக்கொண்டே முன்னால் நகர்ந்து விடுவார்கள்.

ஒரு தடவை ஒரு பெண் ” செருப்பு பிஞ்சிடும் ” என்று உரக்க சொன்னதும் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விட்டேன்.

என்னைப் பார்த்தால் நான் இப்படியெல்லாம் செய்வேன் என்று நம்பவே தோணாது! என்னுடைய வளர்ப்பு சரியில்லையோ என்ற சந்தேகமே வேண்டாம்.

அப்பாவும் அம்மாவும் ஒரு பெற்றோர் தரவேண்டிய அத்தனை அன்பையும் பாசத்தையும் எனக்கும் என் தங்கைக்கும் தாராளமாக தந்திருக்கிறார்கள்.

+2 வில் நல்ல மதிப்பெண் எடுத்து விட்டேன். கல்லூரி அட்மிஷனுக்காக காத்திருந்தேன். தங்கை வர்ஷா பத்தாவது விடுமுறையில் இருந்தாள்.

அவளுடைய தோழிகள் அடிக்கடி வீட்டிற்கு வருவார்கள். சில நாள் நானும் அவர்கள் அரட்டையில் கலந்து கொள்வேன். மஞ்சுவும் , ஆர்த்தியும் என்னுடன் நன்றாகவே பழகுவார்கள்.

ஒரு நாள் ஆர்த்தி வீட்டிற்கு வந்த போது வீட்டில் நான் மட்டும் இருந்தேன். ஒரு வீடியோ பார்த்துக் கொண்டிருந்தேன்.

” Wow ! nice movie ! ” என்றாள்.

” Why don’t you sit and watch ? ”

என்றதும் என் பக்கத்தில் உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தாள்.

ஒரு பத்து நிமிடம் போயிருக்கும். திடீரென்று அவளை அப்படியே கட்டிப் பிடித்து மாறி மாறி வெறி பிடித்தது போல் முத்தம் கொடுத்து விட்டேன்.

” You ! dirty rascal ” என்று சடாரென்று தன்னை விடுவித்துக் கொண்டு

” wait ! I’m going to tell Varsha ”

என்று சொல்லி விட்டு சிட்டாக பறந்து விட்டாள்.

வர்ஷா இது பற்றி என்னிடம் கேட்பாள் என்று இரண்டு நாள் காத்திருந்தேன். ஒன்றையும் காணம். ! டின்னர் சாப்பிடும் போது அம்மாவே ஆரம்பித்தாள்!

” என்னாச்சு ஆர்த்திக்கு ? ஒரு நாளைக்கு ஒம்பது தடவை கூப்பிடுவாளே ! ஃபோனைக் காணமே ? “

” அவளுக்கு உடம்பு சரியில்லையாம் ! தலைவலி , ஜூரம் ! இரண்டு நாள் கழித்து கூப்பிடுவாளாம்!! ‘

சரி இரண்டு நாள் போகட்டும் என்று விட்டு விட்டேன்.வர்ஷா என்னுடன் எப்போதும்போல் தான் பேசிக் கொண்டிருந்தாள்.

ஆர்த்தி தான் சொல்லவில்லையா அல்லது வர்ஷாதான் மறைக்கிறாளா தெரியவில்லை. எனக்கு அதற்கு மேல் அதைப்பற்றி நினைக்க நேரமில்லை.

எனக்கு பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்து விட்டது. ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டும். கொஞ்சம் கண்டிப்பான கல்லூரி தான்.

படிப்பில் திடீரென்று ஆர்வம் வந்து விட்டது. நம்பினால் நம்புங்கள் , அந்த நாலு வருஷமும் படிப்பைத் தவிர வேறு எதிலுமே கவனம் செலுத்தவில்லை.

நாலு வருஷமும் சொல்லி வைத்த மாதிரி நான் தான் கோல்ட் மெடலிஸ்ட்…

உடனேயே IIM ல் MBA Finance. கேம்பஸ் செலக்க்ஷனில் போட்டி போட்டுக் கொண்டு பெரிய நிறுவனங்கள் வா…. வா.. என்று அழைத்தது.

இந்தியாவில் உள்ள ஜெர்மன் கம்பெனி ஒன்றில் எடுத்ததுமே Finance departmentல் முக்கிய பொறுப்பு.

இரண்டே வருடங்களில் கம்பெனியின் டர்ன் ஓவர் இரட்டிப்பானதற்கு நான் தான் காரணம் என்று எனக்கு கிடைத்த பதவி financial controller!

இதற்கு நடுவில் நல்ல பணக்கார வீட்டில் சம்பந்தம். அகிலா என்னை எப்படி பார்க்கிறாள் என்றே எனக்கு புரியவில்லை. அவளைப் பொறுத்தவரை நான் அவளுக்கு ஒரு ஹீரோ….!! நான் சொல்வதுதான் வேதம்.!

நிறுவனத்தைத் தாங்கி நிறுத்தும் தூண்களில் ஒன்றானேன். இப்போது நான் இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை. நிறுவனத்தின் சிஇஓ. . வீட்டை விட ஆஃபீஸில் அதிக நேரம் செலவழித்தேன் .

ஏன் என்று கேட்கிறீர்களா ? ஒன்று நான் எனது வேலையை அகிலாவை விட அதிகமாக நேசித்தேன். இரண்டாவது எனக்கு இரண்டு அழகான பெர்சனல் செக்ரட்டரி….ஏன் சீக்கிரம் வீட்டிற்கு போகவேண்டும்?

நந்தினி இரண்டு பேரில் சீனியர்….. மிக முக்கியமான , நிறுவனத்தின் இரகசியமான கோப்புகளை எல்லாம் அவளை நம்பி தாரளமாக ஒப்படைக்கலாம்.! நல்ல உயரம். எப்போதும் மடிப்பு கலையாத காட்டன் புடவை…. தீபிகா படுகோனே சாயல். நேராக கண்களைப் பார்த்து தான் பேசுவாள்.

” யெஸ் … சார்….. ” என்று அவள் ஆரம்பிக்கும் போதே ” சுற்றி வளைக்காமல் வேலையைச் சொல் ” என்று ஆணையிடுவதுபோலத் தோன்றும். ஒரு நாள் நான் ” என்னை ‘ sir ‘ என்று கூப்பிட அவசியமில்லை.! Call me Vinay or Chandran ” என்றேன்.

” No sir ! I feel comfortable this way ” என்று சொல்லிவிட்டு ” what next ?என்பது போல் என்னைப் பார்த்தாள். சரி இவளை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் ! காயத்ரி தான் இருக்கிறாளே என்று விட்டு விட்டேன்.

காயத்ரி நாகரீக யுவதி. வெட்டி விட்ட முடியும் , மேற்கத்திய பாணி உடையும் எதையும் விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் மனோபாவமும் எனக்கு அவளிடம் ரொம்பவே பிடித்திருந்தது. கற்பூர புத்தி….!!!!

நான் சொல்லும் ஜோக்ஸ் அவளுக்கு பிடித்த மாதிரி சிரிப்பாள். வினய் என்று கூப்பிடும் போதெல்லாம் ஒரு நெருக்கத்தை உணர்ந்தேன். சின்ன சின்ன சீண்டல்களை அதிகம் பொருட்படுத்தாததால் , கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினேன். !

ஒரு நாள் ” காயத்ரி ! இன்றைக்கு கொஞ்சம் வேலையிருக்கு ! Keep yourself free for two hours after six… “

முதலில் ஒரு நிமிஷம் யோசித்தவள் ” sure ” என்று சொல்லி விட்டு புறப்பட்டாள். இது போன்ற நிறுவனங்களில் இது ஒன்றும் புதிதல்ல. ஒரு தடவை நந்தினியைக் கேட்டதற்கு ,

” அத்தியாவசியாமாயிருந்தால் மட்டுமே என்னால் இருக்க முடியும். எந்த வேலையாயிருந்தாலும் ஆறு மணிக்குள் முடித்துக் கொடுக்க என்னால் முடியும் ” என்று அழுத்தமாகக் கூறிவிட்டாள்.என்னைப் பற்றி ஆபீஸில் தெரியாமலிருக்குமா ??

ஆறு மணிக்கப்புறம் காயத்ரி கேபினில் நுழைந்தாள் . நிஜமாகவே நிறைய அவசர வேலையிருந்தது. இடையில் snacks ம் coffee யும் வந்தது.

” ‘ ரிலாக்ஸ் ‘காயத்ரி ! ”

பின்னால் வந்து அவளுடைய தோளின் மீது கைபோட்டேன். கொஞ்சம் நெளிந்தாள். அப்புறம் என்ன செய்தேன் என்று நினைவில்லை.

அவள் முகமெல்லாம் சிவந்து எந்த நிமிடமும் உடைந்து போய் விடுவாள் போலிருந்தது. வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.

” I think you are not ok ! நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் ! You can go now… ” என்று அனுப்பி வைத்தேன்.

அடுத்த நாள் காயத்ரி வழக்கம் போல வந்து வேலையைப் பார்த்தாள். ஆனாலும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்.. ..

நந்தினிக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் . அந்த வாரம் முழுதும் நான் குழம்பியிருந்தேன் . வீக் எண்ட் கிளப்பில் கழிந்தது.

திங்கட்கிழமை எனக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. காயத்ரியின் ராஜினாமா கடிதம்.

‘ Due to personal problems …..” என்று சொல்லியது. அக்கவுன்ட்ஸ் செக்க்ஷனுக்கு வந்து அவளுக்கு சேரவேண்டியதை வாங்கிக் கொள்வதாய் எழுதியிருந்தாள்.

ஆபீஸில் எல்லோருக்குமே அதிர்ச்சி! பல வித கற்பனைகள் , யூகங்கள் ! M.D. casual ஆக என்னிடம் பேசும்போது ,

” What a talented girl ! She was as asset to our firm ! என்னாச்சு வினய் ? உனக்கு ஏதாவது தெரியுமா ? Infact அடுத்த மாதம் அவளை என்னுடைய P.A. வாக promote பண்ணலாம் என்றிருந்தேன்.”

” Sorry sir ! I too don’t know anything !! ”

மனசு பொறுக்காமல் நந்தினியிடம் கேட்டு விட்டேன். என்னையே உற்றுப் பார்த்தாள்.

” எனக்கு இது மட்டும்தான் தெரியும்….அவள் தான் குடும்பத்தின் ஒரே bread winner.!

அவளுடைய மனவளர்ச்சி குன்றிய தம்பியும், போதைக்கு அடிமையான அப்பாவும் இவளுடைய சம்பளத்தை நம்பிதான் வாழ்கிறார்கள். இந்த வேலை அவளுக்கு எவ்வளவு அவசியம் என்று நிறையவே சொல்லியிருக்கிறாள்……. .!!! “

அவள் கண்களின் குற்றச்சாட்டை எதிர் கொள்ள முடியாமல் ,

” Thank you நந்தினி. … you can go ….. ” என்று அனுப்பி வைத்தேன்.

அந்த வாரம் முழுதும் கடுமையான தலைவலி. தலையைச் சுற்றி இறுக்குவது மாதிரி இருந்தது.

டாக்டர்.சக்திவேல் என்னை பரிசோதித்து விட்டு ” இது உங்களைப்போன்ற இளம் நிர்வாகிகளுக்கு சாதாரணமாக ஏற்படுவதுதான்.

Too much stress in the office.! நிறைய ‘ relaxation techniques ‘ பழகிக் கொள்ள வேண்டும். ஒரு வாரம் முழுவதுமாக ஆஃபீஸை மறந்து விடுங்கள். !

Why don’t you take a vacation with your family ?? “

எனக்கும் ஒரு பிரேக் தேவைப்பட்டது.

அகிலாவுக்கு நம்பவே முடியவில்லை.

நல்ல சாப்பாடு, தூக்கம் !

” வினய் ! நீ வீட்டிலிருப்பது எவ்வளவு நல்லதாப் போச்சு தெரியுமா? உன்னிடம் முக்கியமான ஒன்று பேச வேண்டும் ! ”

ரதி கேம்ப்பிலிருந்து வந்ததிலிருந்து ஒன்றுமே பேச மாட்டேங்றா ! தலை வலி ன்னு எப்பப்பாரு கதவ சாத்தி ரூமுக்குள்ளே அடைந்து கிடக்கிறாள்……

” என்ன கேம்ப் .. ?”

” என்ன வினய் ?? மறந்துட்டயா? பள்ளிக்கூடத்தில் N.S.S. camp. நீதானே பணமும் குடுத்து விஷ் பண்ணி அனுப்பி வச்ச !! ”

சத்தியமாய் மறந்து விட்டேன்.

ரதி என்னுடைய செல்லப் பெண். நிதியைவிட என்னிடம் அதிகம் ஒட்டிக்கொள்வாள். எப்போதாவதுதான் என்னுடன் பேச நேரம் கிடைத்தாலும் மனம் திறந்து எல்லாம் சொல்லுவாள் !

அகிலாவும் நிதியும் வெளியே போயிருந்தார்கள். ரதி அறையில் இருந்தாள். படுத்திருந்தாள்.!

” ரதி ! என்னம்மா ? உடம்புக்கு என்ன ?”

” நத்திங்…” என்னைப் பார்க்காமலே பேசினாள்.

” கெட் அப் டியர்… ப்ளீஸ்! எழுந்து உட்காரும்மா !”

எழுந்து உட்கார்ந்தவள் , ஒன்றுமே பேசவில்லை. என் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

அழட்டும்என்று விட்டு விட்டேன்.

” எதுவாயிருந்தாலும் அப்பாவிடம் சொல்லுடா ! ”

” டாட்…எனக்கு ரொம்ப பயமாயிருக்கு ! எப்படி சொல்றதுன்னு ஒண்ணும் புரியலை !”

” என்ன சொல்லணும்னு தோணுதோ சொல்லு !

Don’t hesitate ! I’ll try understand ! Come on ! “

” அப்பா ! கேம்ப் முடிஞ்சு கிளம்பும்போது எல்லொரும் சாப்பிட்டு விட்டு போய்ட்டாங்க.! நானும் அர்ஜுனும் தனியாக இருக்கும் போது அவன் என்னை … “

அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.

அதற்கு மேல் என்னால் யூகிக்க முடியாதா என்ன?

” You mean rape ???? “

” நோ டாட்…! ஆனால் ரோம்ப கேவலமாக நடந்து கொண்டான். என்னை கட்டாயப் படுத்தி கிஸ் பண்ணினான். அப்புறம்..”

இரண்டு பேரும் ஒன்றும் பேசவில்லை…..

” ரதி ! கூல் டியர்… ! உனக்கு நேர்ந்த முதல் கசப்பான அனுபவம்ன்னு நினைக்கிறேன். இதுவே முதலும் கடைசியுமா இருக்கலாம். இல்லைனா இது மாதிரி மறுபடியும் நடக்கலாம். அதற்காக ஆண்களுடன் பேசாமல் பழகாமல் இருக்க முடியாது.

ரொம்ப கண்ணியமாகத் தோன்றும் ஆணுக்குள் கூட ஒரு மிருகம் ஒளிந்திருக்கலாம்! அதுக்காக எல்லா ஆண்களையும் சந்தேகத்தோடு பார்த்துக்கொண்டிருந்தால் உன் வாழ்க்கையே அர்த்தம் இல்லாமல் போகும்.

நீ கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். உன்னுடைய உயிருக்கு ஆபத்து இல்லை என்று நிச்சயமாக தெரிந்தால் , உன்னிடம் தப்பாக நடப்பவனை உடனேயே எப்படி முடியுமோ , அப்படி தட்டிக் கேட்க பயப்படாதே ! உன்னுடைய பயம்தான் அவனுடைய ஆயுதம்….. . அதை நீயே அவனிடம் குடுத்து விடாதே !

எங்கிட்ட. நீ ஷேர் பண்ணினது எவ்வளவு புத்திசாலித்தனம் தெரியுமா ? முதலில் உன் மேல எந்த தப்பும் இல்லை என்பதை நம்பு! நீ அவனுடைய தப்பை மறைக்க மறைக்க அது அவனை மீண்டும் தப்பு செய்ய அனுமதிக்கும் லைசென்ஸ்.. !

நாளைக்கு நாம் அர்ஜுன் வீட்டுக்கு போறோம். அவனுடைய பெற்றோரை மீட் பண்றோம்.”

” ப்ளீஸ் . !!! நோ டாடி !!! ”

“பயப்படாத ரதி ! அவனும் எனக்கு பையன் தான்! அவனுடைய எதிர்காலமும் எனக்கு மிகவும் முக்கியம்….

சட்டென்று எழுந்து அப்படியே என்னைக் கட்டிக் கொண்டாள்.

” I love you so much.!! You are the best daddy in the whole world ! I’m so proud of you dad !! நான் ரொம்ப பயந்துட்டேன் அப்பா தற்கொலை பண்ணலாமான்னு கூட ஒரு நாள் நினைச்சேன்! தாங்யூ ஃபார் எவ்ரிதிங்…. ! “

ரதியின் குரலுடன் எனக்கு சந்தியா , ஆர்த்தி , காயத்ரி எல்லோருடைய குரல்களும் சேர்ந்து ஒலித்தது !

ஒரு நாள் நந்தினியை இவளுக்கு அறிமுகம் பண்ணனும்!

எனக்குள் இருக்கும் அரக்கன்?? ?? பொறுத்திருந்து பார்க்கலாம் !!!!!

இன்றும் எனக்கு தூக்கம் வரவில்லை! ரதியின் அழுது சிவந்த முகமே கண்முன்னால் வந்து போனது !

இதோ என் மனதில் அரித்துக் கொண்டிருந்த எல்லா விஷயத்தையும் இந்த டைரி மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…. படித்து விட்டு என்னை என்ன திட்டினாலும் சரி!!!

எனக்கு என்ன தண்டனை கொடுக்கலாமென்று நினைக்கிறீர்கள்???????

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *