கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 12,857 
 

அந்த கம்ப்யூட்டர் நிறுவனத்தின் நேர்முகத் தேர்வுக்கு வந்த ஏழெட்டுப் பெண்களும் அவர்களோடு என் மகள் லதாவும் வரிசையாக நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள். நான்
கண்ணாடித் தடுப்புக்கு வெளியில் ரிசப்ஷனில் காத்திருந்தேன்.

இது லதாவுக்கு ஏழாவது முயற்சி. இந்த வேலையாவது கிடைக்க வேண்டுமே என்று சிதம்பரம் நடராஜப் பெருமானை வேண்டிக் கொண்டேன். இங்கிருந்து பார்த்தாலே அவர்கள்
அமர்ந்திருப்பதும் சற்றுத் தள்ளி பி.ஏ. டூ எம்.டி என்ற பலகை இருந்த மேஜையில் ஒரு கம்ப்யூட்டருக்கு முன் இளம் பெண் ஒருத்தி அமர்ந்து ஏதோ வேலையில் மும்முரமாக இருப்பதும்
தெரிந்தது. அவளுக்கு இடப்பக்கம் எம்.டி.யின் அறைக் கதவு..

பார்த்துக் கொண்டிருக்கும்போதே எம்.டி.யின் அறைக்கதவு திறந்தது. கதவின் வெளிப்புறம் நின்ற பியூன் விறைப்பாக சல்யூட் அடித்து முழுமையாகக் கதவைத் திறந்து பிடித்துக்கொள்ள,
கோட்டும் சூட்டும் கழுத்தில் டையுமாக எம்.டி. வெளிப்பட்டார். அவரது முகம் கடுகடுவென்று இருந்தது. எனக்கு அந்த முகம் பரிச்சயமானதாகத் தெரிந்தது. சட்டென்று நினைவில் ஒரு
ஃபிளாஷ்… அட, இது நம்ம தியாகு! உடம்பு நடுங்கியது. தியாகுவா?.. அவன்தான் இங்கே எம்.டி.யா?

எழுந்து நின்ற பி.ஏ.விடம் ஏதோ உத்தரவு கொடுத்தபடி பக்கவாட்டிலிருந்த இன்னொரு அறைக்குள் நுழைந்தார் எம்.டி. இந்தத் தியாகுவும் நானும் எவ்வளவு நெருக்கம்! சிதம்பரம்
விளங்கியம்மன் கோயில் தெருவில் என் வீடு. வீட்டின் முன் அறையில் மாலை வேளையில் மட்டும் இயங்கும் லெண்டிங் லைப்ரரி வைத்திருந்தேன். அக்காலத்தில் பிரபலமாக விளங்கிய
சிரஞ்சீவி, மேதாவி, சந்திரமோகன், கலாதர் ஆகியோரின் மர்ம நாவல்கள், தேவனின் துப்பறியும் சாம்பு, வாண்டுமாமாவின் வீர விஜயன் என நிறையப் புத்தகங்கள். ஒரு வாரம் வைத்துப் படித்துத் திருப்பித் தர ஒரு அணா வாடகை.

தியாகு என் லைப்ரரிக்கு வந்து தொடர்ந்து புத்தகம் எடுத்துப் போவான். அவனே நான் படித்த பள்ளியில்தான் படிக்கிறான் என்று எனக்குத் தெரியாமற் போயிற்று. நான் 9 ம் வகுப்பிலிருந்து 10 ம் வகுப்பு தேறியதும் சி பிரிவுக்குப் போகச் சொன்னார்கள். அங்கு முதல் பெஞ்சில் தியாகு இருந்தான். சந்தோஷத்தோடு தன் பக்கத்தில் உட்கார இடம் ஒதுக்கிக் கொடுத்தான். அவன் வீடு பள்ளி செல்லும் வழியில் இருந்ததால் போகும்போது அவனை அழைத்துச் செல்லுவேன். திரும்பி வரும்போது ஒன்றாகவே வீடு திரும்புவோம்.

இருவரும் குண்டு மல்லிகை என்று ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்தினோம். நான் கதை கட்டுரைகள் எழுதுவேன் அவன் நன்றாக ஓவியம் வரைவான். குண்டு மல்லிகையை வகுப்பில் சுற்றுக்கு விடுவோம்.

அவன் வீட்டுக்கு அருகில் ஒரு சந்து. அங்கு இரவில் தினமும் ஷம்ஷு பாய் எனக்கு சிலம்பம் கற்றுக் கொடுப்பார். தியாகு ஓர் ஓரமாக நின்று அதைப் பார்த்து ரசிப்பான். நான் சிலம்பம்
விளையாடுவதை ரசிக்கத்தான் அவன் அங்கு வருவதாக நினைத்த என் நினைப்பு தவறு என்று தாமதமாக எனக்குப் புரியவந்தது. அவன் தினமும் அங்கு வந்ததற்குக் காரணம், சரசு!

அந்தச் சிலம்பப் பள்ளிக்கு எதிர் வீட்டில்தான் சரசு என்கிற சரஸ்வதி இருந்தாள். அவளும் எங்கள் பள்ளிக்கூடம்தான். அவள் 10-ம் வகுப்பு ஏ பிரிவு. படிப்பில் படு சுட்டி! அவள் பரத நாட்டியம் கற்று வந்தாள். பள்ளி ஆண்டு விழாக்களில் அவளுடைய நாட்டியம் கட்டாயம் இடம் பெறும். பாம்பு நாட்டியத்தில் அவள் கெட்டிக்காரி. இரு உள்ளங்கைகளையும் சேர்த்து நல்ல பாம்பின் படம் போல வைத்துக்கொண்டு, சுழன்று சுழன்று ஆடி அப்ளாஸை அள்ளுவாள்.

நானும் மேலவீதி காபிக்கடை பாண்டியனும் ஒருநாள் ஜதை போட்டு சிலம்பத்தில் மோதியபோது தியாகு கைதட்டினான். கூடவே, இன்னொரு கைதட்டல் சத்தமும் கேட்டது. எதிர்வீட்டு
ஜன்னலில் முழு நிலவாக நின்று சிரித்தபடி, சரசு கைதட்டிக் கொண்டிருந்தாள். என் இதயம் பூரிப்பில் அதிர்ந்தது. உற்சாகமான என் சிலம்பக் கழி வீச்சில் பாண்டியனின் கையிலிருந்த சிலம்பம் எகிறி வானில் பறந்தது.

சரசுவின் சிரிப்பு என் மனதில் ஆழப் பதிந்து விட்டது. அன்று முதல் நானும் தியாகுவும் சரசு பள்ளிக்குக் கிள்ம்பிய சில நிமிடங்களில் கிளம்பி, சற்று தூரத்தில் பின் தொடருவோம்.
பள்ளியில் எங்காவது வழியில் பார்த்தால் சரசு என்னை நோக்கிச் சிரிப்பாள்; நானும் பதிலுக்குச் சிரிப்பேன்.

பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என எல்லாவற்றிலும் தியாகுதான் பள்ளியில் முதல் பரிசைத் தட்டிச் செல்வது வழக்கம். இரண்டாவது பரிசு பெரும்பாலும் சரசுவுக்குத்தான்! கொஞ்ச
நாளிலேயே பள்ளிக்குப் போகும்போதும், வீட்டுக்குத் திரும்பி வரும்போதும் சரசுவும் அவள் தோழிகள் சிலரும் எங்களோடு சேர்ந்து பேசிக் கொண்டே நடப்பது வழக்கமாகி விட்டது.
நுட்பமாகக் கவனித்தபோதுதான் தெரிந்தது, தியாகுவும் சரசுவும் பக்கம் பக்கமாகச் சேர்ந்து நடப்பது, அடிக்கடி அவள் எதற்கோ வெட்கபட்டுச் சிரிப்பது, பேச்சுச் சுவார°யத்தில் அவள்
இவன் கையைத் தட்டித் தமாஷ் செய்வது… என் மனதுள் பொறாமைத் தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

பள்ளி விழாவுக்கு நாடகம் ஒன்று திட்டமிடப்பட்ட்டது. சேர நாட்டு அரசனாக தியாகுவும் சரசு அரசியாகவும் வேடம் ஏற்று ஒத்திகை தினமும் மாலையில் வகுப்பு முடிந்ததும் நடந்தது.
இருட்டியபின் தியாகு, சரசு இருவர் மட்டுமே தனியாகப் பேசியபடி வீடு திரும்பினார்கள்.

எனக்குப் பொறுக்க முடியவில்லை.

ஒருநாள் சரசு பள்ளிக்கு வந்தபோது அவளுடைய அப்பாவும் உடன் வந்தார். அழுது அழுது சரசுவின் முகம் வீங்கியிருங்தது. இருவரும் ஹெட்மா°டர் ரூமுக்குப் போனார்கள். சற்று
நேரத்தில் வீட்டுக்குக் கிளம்பி விட்டார்கள். சரசு டி.சி. வாங்கிக் கொண்டு போய்விட்டதாகப் பள்ளி முழுவதும் பேச்சு அடிபட்டது.

தியாகு பிறகு என்னிடம் நொந்துபோய்ச் சொன்னான்.

“என்னையும் சரசுவையும் இணைத்து யாரோ மொட்டைக் கடிதம் போட்டிருக்காங்கடா! நாங்க காதலிக்கிறோமாம்; வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கப் போகிறோமாம்…எந்தப் பாவி இப்படியெல்லாம் கதை கட்டி விட்டானோ?”

செங்கல்பட்டுக்கு சரசுவின் அப்பா மாறுதல் வாங்கி விட்டதாகவும், அங்குள்ள பள்ளியில் சரசு சேரப்போவதாகவும் விஷயம் தெரியவந்தது.

தியாகு ஒருநாள் மாலையில் ஸ்கூல் கிரவுண்டில் என் சட்டையைப் பிடித்து நெருக்கி, என் கன்னத்தில் பளாரென்று அறைந்தான். “ஏண்டா உனக்கு இந்த வேலை? நீதான் அந்த
மொட்டைக் கடிதத்தை எழுதினவன்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு. சரசுவோட அப்பா ஊருக்குப் போகும்போது அந்தக் கடிதத்தை என்கிட்டே காட்டினார். உன் கோணல் கையெழுத்து
எனக்குத் தெரியாதா? உன் கையெழுத்து மாதிரியே உன் புத்தியும் ஏண்டா கோணலாப் போச்சு? துரோகி! எனிமே என் மூஞ்சியிலேயே விழிக்காதே!” என்று கூச்சல் போட்டான்.
கூட்டம் கூடி விட்டது.

ஆம், அந்தத் தப்பைச் செய்தவன் நான்தான்! நானும் அவனும் சேர்ந்து கையெழுத்துப் பத்திரிகை நடத்தியதால் என் கையெழுத்து அவனுக்கு நிரம்பவே பரிச்சயம் ஆகியிருந்தது. அதற்கப்புறம் அவன் என்னிடம் பேசுவதையே நிறுத்தி விட்டான்.

காலம் வேகமாக ஓடுகிறது இல்லையா? நான் பி.ஏ. முடித்து விட்டு அரசு உத்தியோகம் கிடைத்து, திருமணம் ஆகி, ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையானேன், அம்மா, அப்பா, நான்கு தங்கைகள் என்று பெரிய குடும்பத்தின் எல்லாப் பொறுப்புகளும் என் தோளில்! இடையில் என் மகளைக் கஷ்டப்பட்டு இன்ஜினீயரிங் காலேஜில் சேர்த்தேன். நன்றாகப் படித்துப் பட்டமும்
வாங்கினாள். அவளுக்கு ஒரு வேலை கிடைத்தால்தான் குடும்பக் கஷ்டம் தீரும் என்ற நிலை.. இதோ, இந்தக் கம்பெனியின் எம்.டி. என் நண்பன். என் மூஞ்சியிலேயே முழிக்காதே! என்று பல வருடங்களுக்கு முன் என்னைச் சாடியவன்! இந்நிலையில் இண்டர்வியூவுக்கு வந்திருக்கும் லதா என் மகள் என்று தெரிந்தால் எவ்வடி ஆத்திரம் கொள்வான்?

சற்று நேரத்தில் இண்டர்வியூவுக்குன் வந்திருந்த பெண்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு உள்ளே போய்த் திரும்பினார்கள். முள்ளின் மீது உட்கார்ந்திருப்பது போல நான் உட்கார்ந்திருந்தேன். லதாவின் முறை வந்தது. உள்ளே போனாள். மனசில் லேசான வலி. சே… அன்று ஏன் அப்படி ஒரு கேவலமான காரியத்தைச் செய்தோம்? எத்தனயோ வருடங்கள் கழிந்தும் அது இன்று பாதிப்பை ஏற்படுத்துகிறதே?

தோளில் ஒரு கரம் விழ, சட்டென்று சுய நினைவுக்கு வந்தேன். லதா!

“என்னம்மா… இண்டர்வியூ முடிஞ்சதா?” என்றேன், பலவீனமான குரலில்.

“வாங்கப்பா, போகலாம்!” என்று முன்னே நடந்தாள்.

“என்னம்மா சொன்னாங்க?”

கம்பெனியின் வாசலுக்கு வந்து கொஞ்ச தூரம் நடந்ததும் சாலையோர மர நிழலில் நின்றாள். ஹேண்ட் பேக்கிலிருந்து ஒரு கவரை எடுத்து நீட்டினாள். வாங்கிப் பிரித்தேன். என்ன ஆச்சர்யம்! சம்பளம், இதர அலவன்ஸ்கள் என்று மாதம் நாற்பதாயிரம் ரூபாய் நிர்ணயித்து என் மகளுக்க்கு அப்பாயின்மெண்ட் ஆர்டர்!

என்னால் நம்பவே முடியவில்லை; திக்குமுக்காடி நின்றேன்.

ஆனால், லதாவின் முகத்தில் அதற்கான சந்தோஷமில்லையே, ஏன் வருத்தமாக இருக்கிறாள்?

“ஏம்ப்பா அப்படிச் செஞ்சீங்க?” என்றாள் மெல்லிய, அழுத்தமான குரலில்.

“என்னம்மா சொல்றே? நான் என்ன செஞ்சேன்?” என்றேன்.

அவள் உதடுகளில் விம்மல் வெடித்தது. கண்களில் குபுக்கென்று நீர் பூத்துச் சிதறியது.

“இந்தக் கம்பெனியின் எம்.டி. உங்க பள்ளிக்கூட நண்பராமே? ரெண்டுபேரும் ரொம்ப நெருக்கமாப் பழகினவங்களாமே? அவருக்கு நீங்க எப்பேர்ப்பட்ட கெட்ட பேரை ஏற்படுத்தினீங்கன்னு விவரமா சொன்னாருப்பா. அப்படிச் செய்ய உங்களுக்கு எப்பிடிப்பா மனசு வந்துச்சு?”

என் உடல் நடுங்கியது. முப்பது வருடங்களுக்குப் பிறகு என்னைப் பற்றி என் மகளிடம் போட்டுக் கொடுத்துப் பழி தீர்த்து விட்டான் தியாகு. லதா தொடர்ந்து சொன்னாள்: “அப்பா, உங்க
மேல் நான் எவ்வளவோ மதிப்பு வெச்சிருந்தேன். எல்லாம் போச்சுப்பா! உங்களை என் அப்பான்னு சொல்லவே நா கூசுது!”

மகளின் பேச்சில் என் உச்சி முதல் உள்ளங்கால் வரை கூனிக் குறுகியது. “லதா!” தள்ளாடினேன்.

“இருந்தாலும் உன் அப்பா மீதுள்ள பகையை மனசுல வெச்சுகிட்டு திறமைசாலியான உனக்கு இந்த வேலையை நான் கொடுக்க மறுத்தா அது நேர்மையே இல்லைன்னு சொல்லி,
எனக்கான அப்பாயின்மெண்ட் ஆர்டரை என் கையில் கொடுத்தாருப்பா! அவர் உங்களைப் பற்றிய விவரத்தைச் சொன்னபோது, நீங்க வெளியில்தான் காத்திருக்கீங்கன்னு நான்
அவர்கிட்டே சொல்லலை. எப்படியப்பா சொல்ல முடியும்?”

“ஸாரிம்மா… அந்த வயசில் என் புத்தி அப்படிப் போயிடுச்சு! தப்புதான். என்னை மன்னிச்சுடும்மா!” என்றேன், தழுதழுத்த குரலில்.

“நான் எப்படிப்பா உங்களை ம்மன்னிக்க முடியும்? தப்பு பண்ணினவங்க கட்டாயம் தண்டனை அனுபவிச்சுத்தான் ஆகணும்னு நீங்கதானே அடிக்கடி சொல்லுவீங்க? நீங்க பண்ணின
தப்புக்குத் தண்டனை வேண்டாமா?” என்றபடியே லதா அந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை இரண்டாக, நாலாகக் கிழித்துக் காற்றில் பறக்கவிட்டாள்.

“ஐயோ!” என்று அலறினேன்.

“என்னப்பா, என்ன ஆச்சு?” என்ற குரல். என்னை யாரோ உலுக்கினார்கள்.

திடுக்கிட்டுக் கண் விழித்தேன். எதிரில் லதா. அவள் அருகில் புன்முறுவலோடு நிற்பது.. தியாகு!

அப்படியானால்… இவ்வளவு நேரம் நான் கண்டது கனவா?

லதா சிரித்தாள். “எம்.டி.சார் உங்க பால்ய நண்பராமேப்பா? என் ரெஸ்யூமில் உங்க பெயரை ராமேசன்னு பார்த்ததுமே, எந்த ராமேசன்? சிதம்பரத்தில் இருந்தாரே, அவரா?”ன்னு
கேட்டார்ப்பா. நான் ஆமாம்னேன். “அடடே, அவன் என்னோட நெருங்கிய ஃப்ரெண்டாச்சேம்மா. இப்ப எங்கே அந்தப் படவா?”னு கேட்டார். “இங்கேதான் ரிசப்ஷன்ல உட்கார்ந்திருக்கார்”னு சொன்னதும், ரொம்பச் சந்தோஷத்தோடு ஓடி வந்திருக்காரு. நீங்க என்னடான்னா, பகல்லயே தூங்கி வழியறீங்க?” என்று செல்லமாகக் கோபித்தாள்.

தியாகு என்னைக் கட்டிக் கொண்டான். “படவா! எத்தனை வருஷம் ஆச்சு உன்னைப் பார்த்து? சிலம்பம் கிலம்பம்லாம் ஆடி, உடம்பை இன்னும் கிண்ணுனு வெச்சிருக்கியே! நான்தான்
தொப்பை போட்டுட்டேன். வாடா உள்ளே! உன் பொண்ணு உன்னை மாதிரி இல்லே. ரொம்பவும் புத்திசாலி… ஷி ஈஸ் அப்பாயிண்டட்!”

எம்.டி.யின் அறைக்குள் ஏ.ஸி. சில்லிட்டது. கண்கள் பனிக்க கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு, “என்ன மன்னிக்கணும் தியாகு.. அன்னிக்கு நான்…” என்று நான் பேச ஆரம்பித்தபோது, என்
பெண்ணுக்குத் தெரியாமல், “உஸ்ஸ் ..” என்று என்னை அடக்கிவிட்டு, “சரி, உன்னையும் உன் மகளையும் சந்தித்த சந்தோஷம் எனக்கு. என்ன ஸ்வீட் சாப்பிடலாம், சொல்லு ராமேசா?” என்று புன்னகையுடன் கேட்டான் தியாகு.

பேச முடியாமல் சிலையாக அமர்ந்திருந்தேன் நான். என் கண்ணில் ஏனோ கண்ணீர் பொங்கி வந்தது.

(இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதையாகத் தேர்வு பெற்ற சிறுகதை. – ஆனந்த விகடன் வார இதழ்)

Print Friendly, PDF & Email

1 thought on “ஒரு இண்டர்வியூவில்

  1. ஒரு இண்டர்வியூவில் சிறுகதை மனதைத் தொட்டது. மறப்பவன் மனிதன், மன்னிப்பவன் பெரிய மனுசன் என்ற வரிக்கு உதாரணமாக தியாகு. சிறப்பாக சொல்லப் பட்ட கதை.
    செய்யாறு தி.தா.நாராயணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *