ஒரு ஆலமரத்தின் கதை….

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 14,261 
 

திருச்சியிலிருந்து முசிறி செல்லும் பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில்,
தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுறம் பிரியும் மண் சாலையில் ஒன்றரை
கிலோமீட்டர் பயணித்தால் நான் அமர்ந்திருக்கும் இந்த ஆலமர நிழலை
அடைந்துவிடலாம்… திருச்சியில் நான் குடியேறிய இந்த பதினைந்து
வருடங்களிலும், என் சோகத்தை முழுமையாக உள்வாங்கிக்கொண்டு, அந்த
மரத்திலிருந்து பறக்கின்ற பறவையை போல என் மனதையும் இலகுவாக்கிவிடும் இந்த
ஆலமரம் நிச்சயம் அதிசயமானதுதான்…

ஏழு வருடங்களுக்கு முன்புவரை ஈருருளியிலும், அதன்பிறகு மகிழுந்திலும்
என்று எந்த ரூபத்தில் இங்கு வந்தாலும், என்னை அப்படியே ஏற்றுக்கொள்ளும்
தாய் மடியை போன்ற இந்த மரத்தின் நிழலை நான் கண்டுபிடிக்கவே
சிரமப்பட்டுப்போனேன்….

பதினைந்து வருடங்களுக்கு முன்பு, மனைவி மற்றும் என் நான்கு வயது மகன்
சகிதம் திருச்சியில் குடியேறியபோது ஆலமரம் தேடி அலைந்த நாட்கள் நிறைய
உண்டு… என் சிறுவயது முதல் ஆலமர நிழல் ஒருவித அணைப்பை கொடுத்தது
எனக்குள்… என் கிராமத்திலிருந்து திருச்சி வந்தபிறகும் கூட, அந்த
அணைப்பை என் மனம் தேடியதின் விளைவுதான் அந்த ஆலமர தேடலும்… ஒருவழியாக
பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலமரத்தை கண்டபிறகுதான், என்
பித்தம் தெளிந்தது… என் மனைவி கூட, “உண்மையாவே நீங்க ஆலமரத்துக்குதான்
போறிங்களா?.. இல்ல, சின்ன வீடு எதுவும் செட் பண்ணி வச்சிருக்கிங்களான்னே
தெரியல… பதினஞ்சு கிலோமீட்டர் தூரம் கடந்துதான் நீங்க அமைதியை
தேடனுமாக்கும்?” என்று சலித்துக்கொள்வாள்….

சிரித்தபடியே நான், “அமைதி தேடி இமயமலைக்கு போறவங்கள விட, இது ஒன்னும்
பெருசில்ல சாரு…” என்பேன்….

சில நேரங்களில், “நீ மன நிம்மதிக்காக பல நூறு கிலோமீட்டர் தூரம் உள்ள
பழனி, திருப்பதின்னு போறதில்லையா?” என்பேன்….

ஒருமுறை நான், “அந்த ஆலமரம் எனக்கு தியானம் சொல்லி தரேன்னு ஆயிரம் ஆயிரமா
பணத்தை கறக்கல…. கதவைத்திற காற்று வரட்டும்னு சொல்லி ஏமாற்றல… ஒரு
ஐம்பது அடியை தவிர, அதுக்கு அதிகமான இடத்தை கபளீகரம் கூட செய்யல… உங்க
யோகா குருக்களை விட, ஆயிரம் மடங்கு ஒசந்தது என் ஆலமரம்” என்று
பீற்றிக்கொண்டேன்….

ஆனாலும், சாருவின் அந்த கேள்வி ஒவ்வொருமுறையும் தொடர்ந்துகொண்டே தான்
இருந்தது, அந்த ஒவ்வொரு முறையும் என் வித்தியாசமான பதிலை
எதிர்பார்த்துக்கூட அவள் கேட்டிருக்கலாம்…

இப்போதும்கூட அதன் நிழலில் அமர்ந்திருக்கும் என் மீது சிவப்பு நிற
ஆலம்பழங்கள் விழுந்துகொண்டுதான் இருக்கிறது… கிளிகள், குயில்கள்,
பல்வேறு விதமான பறவைகள் என்று பேதம் பார்க்காமல், எல்லோருக்கும் பழங்களை
வாரியிறைக்கும் மரத்தின் மனது, நிச்சயம் மனிதர்களுக்கு கிடையாது…
முன்பெல்லாம் சிறுவர்கள் பம்பரம், பலுங்கி என்று விளையாடுவதைத்தான் இங்கு
பார்த்திருக்கிறேன்… இப்போதோ காலியான மதுபுட்டிகளும்,
கசக்கிக்கிடக்கும் காகித குவளைகளும், புகைக்கப்பட்ட சிகரெட் துண்டுகளும்,
விந்து நிறைந்த ஆணுறைகளும் அனாசயமாக காணக்கிடக்கிறது… பத்து
வருடங்களுக்கு முன்பு பம்பரம் விளையாண்ட அதே சிறுவர்கள் தான், இப்போது
இந்த விளையாட்டையும் விளையாடுகிறார்களோ? என்று எனக்கு தோன்றுவதுண்டு….

இந்த காலம் இளைஞர்களை நிறையவே மாற்றிவிட்டது… அபாயகரமான கருநாக
புற்றுக்குள் அவர்கள் கண்ணாம்பூச்சி விளையாடுகிறார்கள்…

“வயதானலே இப்டி பெருசுங்க புலம்புறது வழக்கமாகிடுச்சு”னு நீங்க
திட்டுவதையும் கூட என்னால் உணரமுடிகிறது…

ஆனால், என் மகன் கவினோடு பயணித்த அந்த பத்தொன்பது வருட வாழ்க்கையில்,
என்னால் இளைஞர்களை எளிதாகவே கணிக்க முடிகிறது…

அவன் விபரம் தெரியாத வயதில், பல நேரங்களில் என்னோடு அவனை இங்கு அழைத்து
வந்திருக்கிறேன்… குறிப்பாக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எங்கள்
இருவரின் பிக்னிக் தளமாகவே இந்த ஆலமரம் மாறியிருந்ததை நான் வெகுவாக
ரசிப்பேன்… மரத்தில் அமரும் பறவைகளையும், அவை எழுப்பும் ஒலிகளையும்
அந்த பலுங்கி கண்களால் அவன் ரசிப்பது எனக்குள் ஆனந்தத்தை ஏற்படுத்தும்…

ஓடி ஆடும் வயதில், ஆலமர விழுதுகளில் ஊஞ்சல் ஆடுவதில் ஆர்வமாக
இருந்தான்… விவரம் தெரிய தொடங்கிய வயதில் ஆலமரத்தின் “டேப் ரூட்”
பற்றியும், அதன் விழுதுகள் பற்றியும் அறிவியல் பூர்வமாக பேசுவான்….

ஆனால், அந்த பருவ வயதின் தொடக்கத்தில்…. வழக்கமான ஞாயிறுதான் அந்த நாளும்…
“கவின், போகலாமா?” என்று அவன் அறைக்கதவை பாதியாக திறந்து கேட்டேன்….

எழவில்லை… அருகில் சென்று, தோள் உலுக்கி, “கவின் குட்டி,
எழுந்திருடா… போகலாம்…” என்றேன்…. எழவே இல்லை.. போர்வையை இழுத்து
முகத்திற்கும் சேர்த்து போர்த்திக்கொண்டு உறங்கினான்….

“ஞாயித்துக்கிழமை மட்டும்தான் அவன் வீட்டுல இருக்கான்… இன்னிக்காவது
அவனை தூங்க விடுங்களேன்…” சாருவின் குரல் சமையலறையில் இருந்து
ஒலித்தது….

சரி, தூங்கட்டும் என்று எழுந்து சென்று வாசலில் மகிழுந்தில் ஏறினேன்….
வீட்டிற்குள் சாருவும், கவினும் பேசும் குரல் கேட்டது…. நான்
கிளம்பிவிட்டேனா? என்று வேவு பார்க்க சாரு மட்டும் வாசலை
எட்டிப்பார்த்தாள்… அதற்கு மேல் நானும் அவனை தொந்தரவு செய்ய
விரும்பாமல், பதினான்கு வருடங்களுக்கு பிறகு நான் மட்டும் தனியாக
ஆலமரத்தை நோக்கி நகர்ந்தேன்… அன்றோடு, ஆலமரத்துக்கும் கவினுக்கும்
இருந்த தொடர்பு, நூல் அறுந்த பட்டமாக துண்டிக்கப்பட்டது….

இந்த துண்டிப்பில் நிச்சயம் சாருவுக்கும் தனியொரு பங்கிருக்கும்….

பதின்வயது பிள்ளைகள் அப்பாவை எதிரி போல பார்ப்பதற்கு, அடியாழத்தில்
நிச்சயம் எல்லா அம்மாக்களும் காரணமாகத்தான் இருக்கிறார்கள்…

அவனை கண்டித்து ஒரு வார்த்தைகூட நான் பேசியதில்லை… ஆனால் அவன் சிறு
தவறுகள் செய்தபோதல்லாம், “அப்பாவுக்கு தெரிஞ்சா கொன்னேபுடுவாங்க…”
என்று சாரு சொல்லியே என்னை ஒரு “கோட்டா சீனிவாச ராவ்” போலவும்,
“பிரகாஷ்ராஜ்” போலவும் பிம்பத்தை உருவாக்கிவிட்டாள்….

கவினும் சாருவும் சிரித்தபடி இயல்பாக பேசிக்கொண்டிருக்கும் பேச்சு, நான்
வீட்டிற்குள் நுழைந்ததும் மண்ணில் விழுந்த மழைத்துளி போல சட்டென
மறைந்துவிடும்… சில வருடங்களாகவே கவினின் சிரிப்பை கதவுக்கு வெளியில்
இருந்து மட்டுமே ரசித்திருக்கிறேன்…

உலகின் கடைசி மனிதன் நான்தானா? என்று குழம்பும் அளவிற்கு, மகனுடனான
உறவின் விரிசல் என்னை தனிமையின் விளிம்பிற்கு தள்ளியது…. கவினை பற்றிய
கனவுகள் என்னை ஆக்கிரமித்த காலம் போய், இப்போதல்லாம் கவினை பற்றிய
கவலைகள் என்னை கபளீகரம் செய்துவிட்டது…

அவனுடைய உலகமே மிகவும் சுருங்கியிருந்தது… “செல்போன், லேப்டாப், ஒருசில
நண்பர்கள், எப்போதாவது அம்மா” என்ற அளவில் மட்டுமே கவினின் மொத்த
உலகமும்… இழுத்து மூடிய அறைக்குள் அலைபேசியில் மணிக்கணக்கில் பேசும்
சத்தம் எப்போதாவது கேட்பதுண்டு, சிலநேரங்களில் சார்ஜ் தீர்ந்தபோதும் கூட
சார்ஜ் ஏற்றியபடியே பேசுவதை கண்டு, “சார்ஜ் போட்டுகிட்டே பேசாதப்பா….”
என்பேன்… சில வினாடிகள் பேச்சை மட்டும் துண்டித்துவிட்டு, என் கால்கள்
மறைந்ததும் மீண்டும் பேசத்தொடங்கிடுவான்… மணிக்கணக்காக பேசத்தெரிந்த
அவனால், அப்பாவின் கேள்விகளுக்கு கூட பதில் சொல்லமுடியாதது விந்தையாக
தெரிகிறது…

“தலைமுறை இடைவெளி” என்று அவன் நினைத்து மறைக்கும் பல விஷயங்களை நான்
கண்டும் காணாதது போல செல்வதாலேயே என்னவோ, “அப்பாவுக்கு இதல்லாம்
புரியாது” என்று அவன் நினைத்துக்கொண்டிருக்கிறான்…

கணினியின் திரையில் அவன் “மினிமைஸ்” செய்து வைத்திருக்கும் தளங்கள், அவன்
அறையின் கட்டிலுக்கு அடியில் கிடந்ததாக கண்டெடுக்கப்பட்ட “E 23” என்று
எழுதப்பட்டிருந்த குறுந்தகடு, அலைபேசிக்குள் லாக் செய்யப்பட்ட மெமரி
கார்டுக்குள் புதைந்திருக்கும் கணக்கற்ற கோப்புகள் எல்லாமும் எனக்கு
தெரிந்தும், அதை தெரியாததை போல ஒதுங்கியே பயணிக்கிறேன்….

இதில் என் விரக்தியின் உச்சம் என்ன தெரியுமா?… ஒவ்வொரு முறை அவன்
குளியலறைக்குள் இருந்து வெளிவரும்போதும், அந்த அறையை
ஆக்கிரமித்திருக்கும் விந்தின் வாடையை மறைக்கும் பொருட்டு நான் ரூம்
ஸ்ப்ரே அடிப்பதுதான்…. ஒரு தந்தையாக நான் மனம் வெதும்பி செய்யும் இந்த
செயல், அவனுக்கென தனி குளியலறை கட்டப்பட்ட பிறகுதான் நின்றது….

ஆனாலும், சமீப காலத்து கவினின் நடவடிக்கைகள் என்னை இன்னும் அதிக
படபடப்பிற்கு ஆளாக்குகிறது… கடந்த வாரத்தில் எடுக்கப்பட்ட ஈ.ஸி.ஜி கூட
என் இதய இயக்கத்தில் நிலவும் ஒருவித குழப்பத்தை வெளிக்காட்டியது… அந்த
அளவிற்கு கவினின் எந்த செயல்பாடு என்னை குழப்பியது என்று
கேட்கிறீர்களா?…

எங்கள் குடியிருப்பு மொட்டை மாடியில் இருந்து என் வீட்டு பால்கனியில்
நான் கண்ட காட்சிதான் அந்த குழப்பத்திற்கு காரணம்…

அந்த மாலை நேரத்தில் கவினுடன் அவன் நண்பன் சதீஷ் எங்கள் வீட்டு
பால்கனியில் நிற்பது ஒன்றும் புதிதில்லை… மனைவிக்கும் மகனுக்கும்
தெரியாமல் புகைப்பிடிக்க நான் மொட்டை மாடிக்கு சென்றிருந்த அந்த
நேரத்திலும், வழக்கம்போல போல இருவரும் சிரித்து பேசிக்கொண்டுதான்
இருந்தனர்… அவர்கள் பேசும் குரல் கேட்கும் தூரத்தில் நான் இல்லாததால்,
கவினின் சிரிப்பை தூரத்தில் இருந்து ரசித்தபடி புகைவிட்டுக்கொண்டு
இருந்தேன்…. அப்போதுதான் அந்த காட்சி என் கண்களை கலவரமூட்டியது…

சுற்றி முற்றி பார்த்த கவின், சட்டென சதீஷை கட்டி அணைத்து ஏதேதோ
செய்தான்… என் கையில் பிடித்திருந்த சிகரெட் தவறி என் காலில் விழுந்து
சுட்டபோதும் கூட, என் கண்கள் அந்த காட்சிகளை விட்டு விலகவில்லை…
மீண்டும் சிரித்தபடியே கவினோடு சதீஷ் பால்கனியில் இருந்து அவன் அறைக்குள்
சென்றுவிட்டான்…

உடல் முழுக்க வியர்க்க, நிலை தடுமாறி மெல்ல தரையில் அமர்ந்தேன்…
இன்னும் என் இதயம் பரபரப்பாக படபடத்தது… இன்னொரு சிகரெட்டை எடுத்து,
அதில் நெருப்பை ஏற்றக்கூட என் கைகள் இயலாமல் செயலிழந்து போய்விட்டதாக
உணர்ந்தேன்…

கவினை இன்னும் சிறுபிள்ளையாகவே நினைத்துக்கொண்டிருக்கிறேன்…

வாக்களிக்கும் வயது மட்டுமல்லாமல், அவன் வாழ்க்கையை தீர்மானிக்கும் வயதை
கூட அவன் அடைந்துவிட்டான் என்பதை என்னால் உணரமுடிகிறது… ஆனால், அவன்
இன்னொரு ஆணுடன் ஈர்ப்புள்ளவனா?… ஏன் இப்படி ஆனான்?… ஒன்றுமே
விளங்கவில்லை…

அந்தி சாய்ந்து, இருள் படரத்தொடங்கிய பிறகுதான் கீழே சென்றேன்…

ஹாலில் வழக்கம்போல தக்காளி நறுக்கிக்கொண்டே சீரியல்
பார்த்துக்கொண்டிருந்தாள் சாரு…

விளம்பர இடைவெளியில் தான் என்னை கவனித்தாள்…

“இன்னிக்கு ரொம்ப நேரமா ட்ரெயின் புகை விட்டுச்சு போல?… எத்தன தடவ
சொன்னாலும் திருந்த மாட்டிங்களா?” வழக்கமான கேள்விதான், நான் அதை
பொருட்படுத்தவில்லை…

“கவின் எங்க?” என்றேன்…

“ரூம்ல தான் இருக்கான்… சதீஷ் கூட படிக்கிறான்…” வெள்ளந்தியாக பதில்
சொன்னாள்… நேற்றுவரை நானும்கூட கவின் அறைக்குள் படித்துக்கொண்டு
இருக்கிறான் என்று நினைத்துக்கொண்டிருந்த முட்டாள்த்தனத்தை எண்ணி
வெட்கினேன்…

என் மனம் ஒரு இடத்தில் நிலைபெற மறுத்தது… அவன் அறையின் வாசலை
வட்டமிட்டுக்கொண்டே தடுமாறியது என் கண்கள்…

சட்டென எழுந்து அவன் அறைக்கதவை தட்டினேன்…

உள்ளே மெல்லிய குரல்களில் ஒருசில வார்த்தைகள் மட்டும் என் காதில்
விழுந்தது… “ஐயோ… யாரு?… அம்மாவா?… எங்க என் ஷர்ட்?… அதை
எடுத்து கட்டிலுக்கு கீழ போடு… டும்… டக்… டன்…” பரபரப்பின்
வெளிப்பாடாக வார்த்தைகள் அப்பட்டமாக தெரிந்தது…

கதவு திறக்கப்பட்டது… கவின்தான் திறந்தான்… அவன் பின்னால் தலைமுடியை
சரிசெய்தபடி நின்றுகொண்டிருந்தான் சதீஷ்….

“என்னப்பா?” வார்த்தைகளில் பயம் தெரிந்தது… பத்து நொடிகளுக்குள் மூன்று
முறை எச்சிலை விழுங்கிக்கொண்டான்… நெற்றியில் வழிந்த வியர்வையை
விரல்களால் விலக்கியபடி, என் பதிலை எதிர்நோக்கி காத்திருந்தான்….

“ஒண்ணுமில்ல கவின்… ரொம்ப நேரமா படிக்கிறிங்கன்னு அம்மா சொன்னா,
எங்கயாச்சும் வெளில போயிட்டு ரிலாக்ஸ் ஆகிட்டு வாங்கன்னு சொல்லத்தான்…”
முட்டாள்த்தனமான காரணம்… என் வார்த்தைகளின் பொய்யை அவன் கூட
கண்டுபிடித்திருக்கக்கூடும், அவன் என் பிள்ளை அல்லவா…. ஆனாலும், அதை
அலசும் நிலையில் அவன் இல்லாததால், சட்டென சதீஷ் சகிதம் அவன் வீட்டை
விட்டு வெளியேறினான்…

என் கால்கள் நிலையாக நிற்க முடியாமல் தடுமாறவே, மிகவும் சிரத்தையோடு
அடிகளை எடுத்து வைத்தபடி என் அறைக்குள் சென்று கட்டிலில் அமர்ந்தேன்…
சுவரில் என் தோளை இறுக்கி அணைத்தபடி கவின் சிரிக்கும் புகைப்படம்…
புகைப்படங்களாக மட்டுமே வாழ்க்கை நிலைபெற்றிருந்தால் சிறப்பாகத்தான்
இருந்திருக்கும்… கவினின் இப்போதைய புதிய அவதாரம் என்னை மென்மேலும்
கலவரமூட்டியது…

ஏன் இப்படி ஆனான்?… என் வளர்ப்பு சரியில்லையா?… சேர்க்கை
தவறானதோ?…. இது என்ன முட்டாள்த்தனமான கேள்விகள்… பாலீர்ப்புக்கும்
வளர்ப்புக்கும் என்ன தொடர்பு?… ஆனாலும், மனம் எதையும் ஏற்க மறுத்தது…

இடது கையில் பாரம் அதிகமானதாக உணர்ந்தேன்… மின்விசிறியை பொருட்டாக
மதிக்காமல் வியர்வை காதோரம் வழிந்து தலையணையை நனைத்தது… கண்கள்
இருட்டியது, சத்தமிட்டு சாருவை அழைக்க நினைத்தும் வாய் குழறி மயக்கத்துள்
ஆழ்ந்துவிட்டேன்….

கண் விழித்தேன்….

பல ஒயர்கள் சொருகப்பட்டு, பல “பீப்” சத்தங்கள் அலறிக்கொண்டு நான் இன்னும்
உயிரோடுதான் இருக்கிறேன் என்பதை இந்த உலகம் விளக்கியது…

“ஒண்ணுமில்ல… திடீர்னு ப்ரெஷர் ஷூட்டப் ஆகிடுச்சு… படபடப்பு அதிகமாகி
மயங்கிட்டார்…. மற்றபடி ஒண்ணுமில்ல….” கேஸ் ஷீட்டை பார்த்தபடி
சொல்லிக்கொண்டிருந்தார் மருத்துவர்…. இந்த “மற்றபடி
ஒண்ணுமில்ல”க்குத்தான் அநேகமாக ஐம்பதாயிரம் பில்லை
தீட்டியிருப்பார்கள்…

“நான் எவ்ளோ சொன்னாலும் கேட்குறதே இல்ல டாக்டர்… பாக்கெட் பாக்கெட்டா
சிகரட் குடிக்கிறார்… ப்ரெஷர் மாத்திரையை அடிக்கடி மறந்திடுறார்… ஆ
ஊன்னா ஆலமரத்துக்கு ஓடிடுறார்….” சாரு எப்பவும் இப்படித்தான்…

பதட்டத்தில் யாரிடம் என்ன பேசுவதென்றே தெரியாமல் பேசுவாள்… ஆலமரம்
பற்றி மருத்துவரிடம் சொல்ல வேண்டுமா? என்பதை கூட அவள் யோசிக்கவில்லை…
சிரித்தபடி பதில் சொல்லாமல் அந்த அறையைவிட்டு வெளியேறினார் மருத்துவர்…
நான் பழையபடி கவினை பற்றிய கவலைக்குள் கவனத்தை செலுத்தினேன்….
அறையின் ஓரத்தில் போடப்பட்டிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தபடி கைபேசியை
நோன்டிக்கொண்டிருந்தான்…

பதினைந்து வயதுக்கு பிறகான வயதுகளில் எப்போதும் அவன் முகத்தில் மெலிதாக
படர்ந்திருக்கும் குழப்பத்திற்கான காரணத்தை இன்றுதான் உணர்கிறேன்…

எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான்?… தான் ஒரு சமபால் ஈர்ப்புடையவன் என்பதை
அறிந்த நாள் முதலாக, அதை பெற்றோரிடமும், நண்பர்களிடமும் வெளிப்படுத்த
முடியாமல் தயங்கி தடுமாறி இத்தனை ஆண்டு காலம் பயணித்த கவினை பற்றிய
கவலைகள்தான் என்னை ஆக்கிரமித்தது…..

ஒவ்வொரு நாளும் குழப்பத்தோடும், ஒவ்வொரு நிமிடமும் பதற்றத்தோடும் கழித்து
இன்றுவரை எங்களிடம் சிரிப்பை மட்டுமே வெளிப்படுத்தி வாழும் கவின்
நிச்சயமாக என்னைவிட அதிக மன சுமைகளை சுமந்து வந்திருப்பான்…

அதன்பிறகு ஒவ்வொரு நாளும் அவனுடன் அதுபற்றி பேசிட முனைவேன், வாய்ப்புகள்
ஒவ்வொருமுறையும் தவறிக்கொண்டே இருக்கிறது…

எனக்குள் ஒரு ஆசை எழுந்தது…

ஒரு தனிமையான இடத்தில் என் அருகில் வந்து அமரும் கவின், “அப்பா உங்ககிட்ட
நான் முக்கியமான விஷயம் பேசனும்!”னு சொல்லணும்…

அவன் தோள்களில் கைவைத்து, என் அருகே அமரவைத்து, “சொல்லுப்பா… என்ன
விஷயம்?”னு நான் கேட்கணும்…

கண்கள் கலங்க, அவன் கடந்து வந்த முட்கள் நிறைந்த பாதையை பற்றி விளக்கவேண்டும்….

இந்த ஆசை நினைவாகும் நாளில் நிச்சயம் ஒரு தந்தையாக நான் முழுமை
பெறுவேன்… அதன்பிறகு நான் என்ன செய்வேன்? என்ற கேள்விகளுக்கு என்னிடம்
விடையில்லை… சொந்தங்கள், சமூகம் எல்லாவற்றையும் எதிர்த்து நின்று,
கவின் பக்கம் நான் நிற்பேனா? என்பதும் புரியவில்லை… ஆனாலும், என் ஒரே
கனவு, என்னிடம் கவின் எல்லாவற்றையும் பேசவேண்டும் என்பதுதான்…
அதன்பிறகு ஒருநாள் அந்த வாய்ப்பும் எனக்கு வாய்த்தது…

சாரு கோவிலுக்கு சென்ற வழக்கமான வெள்ளிக்கிழமை… வழக்கத்திற்கு மாறாக
கவின் ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தான்… அதற்கு
காரணம் அப்பா இல்லை, ஐபிஎல்’தான்…

மேட்ச் பிக்சிங் செய்ததற்கு தோதாக வீரர்கள் விளையாட்டை விட, அதிகமாக
நடித்தார்கள்… இன்றைக்கு எப்படியும் பேசவேண்டும் என்று
காத்திருந்தேன்….

நல்லவேளையாக அப்போது மின்சாரம் தடைபட்டது…

நத்தம் விஸ்வநாதனுக்கு நன்றியை சொல்லிவிட்டு, கவினை நோக்கி
திரும்பினேன்… நான் பேச்சிற்கு தயாரான கணப்பொழுதில், அலைபேசியை காதில்
வைத்தபடி அவன் அறைக்குள் சென்றுவிட்டான் கவின்…

முன்பைவிட அதிகமாக என்னை தவிர்க்க தொடங்கினான்… காரணம் புரியவில்லை,
ஆனாலும் என் கனவு சிதைவதாக உணர்கிறேன்….

என் கவலைகளுக்கு நான் தேடும் இரண்டே நிவாரணிகள் சிகரெட்டும், ஆலமரமும்
தான்… மாடிப்படிகளில் ஏறினேன், ஏனோ இப்போதல்லாம் வழக்கத்தைவிட அதிகமாக
மூச்சு வாங்குகிறது… இதயம் பலவீனப்பட்டிருப்பதை ஈ.ஸி.ஜியை விட
மாடிப்படிகள் எளிதாக காட்டிவிடுகிறது…

மூச்சிரைத்தபடி சிகரெட்டை பற்றவைத்தேன்… எதேச்சையாக பால்கனியை
எட்டிப்பார்த்தேன்… இன்றைக்கும் கவினோடு சதீஷ் நின்றுகொண்டு மிகவும்
நெருக்கமாக பேசிக்கொண்டிருக்கிறான்… நான் மாடிப்படிகளில் ஏறிய
சிலமணித்துளிகளுக்குள் சதீஷ் வந்ததும், இருவரும் பால்கனிக்கு
படையெடுத்ததும் ஆச்சரியமாகவே தெரிகிறது… கண் இமைக்கும் நேரத்தில்
இப்போதல்லாம் நம் கண்களையே கடத்திவிடுகிறார்கள் இந்த இளைஞர்கள்…

இப்போதும் சதீஷ் இடது வலது பக்கமாக பார்த்துவிட்டு, ஆச்சரியமாக மாடியை
நோக்கினான்…. என்னை கண்ட மறுநொடியே காற்றுப்புகாத இடைவெளியில் நின்ற
இருவரின் நெருக்கமும், தண்டவாளம் அளவுக்கு இடைவெளியை அடைந்தது…

ஆனாலும், நான் அதை கண்டும் காணாததை போல சிகரெட்டை கீழே போட்டுவிட்டு,
ஹாலை நோக்கி நகர்ந்தேன்…

நான் ஹாலை அடைவதற்குள் சதீஷ் வேகவேகமாக அவன் பைக்கை எடுத்துக்கொண்டு
சீறிப்பாய்ந்தான்… கவின் வழக்கம்போலவே அவன் அறைக்குள்
சிறைப்பட்டுக்கொண்டு கிடந்தான்… வழக்கமான தனிமை என்னை ஆட்கொண்டது…
அந்த தனிமையை கழிக்க, சோகத்தை பகிரத்தான் இப்போது ஆலமரம் நாடிவந்து
உங்களிடம் புலம்பிக்கொண்டிருக்கிறேன்….

மனம் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தது… மணியை பார்த்தேன், ஆறென
காட்டியது…. வீட்டிற்கு செல்லும் நேரம் வந்துவிட்டது… மகிழுந்தை
நோக்கி நான் நகர்ந்த நொடிப்பொழுதில், செம்மண் புழுதியை வாரியிறைத்தபடி
ஈருருளி ஒன்று ஆலமரம் நோக்கி பறந்து வந்தது…

புழுதி அடங்கியபிறகுதான் கவனித்தேன், அது கவின் தான்…

இந்த நேரத்தில், இங்கு எதற்காக? என்ற குழப்பத்தோடு அவனை நோக்கினேன்…
என்னை நோக்கி தடுமாற்றத்தோடு வந்த கவின், “இங்கதான் இருப்பிங்கன்னு
எனக்கு தெரியும்…” என்றான் இயல்பாக…

“என்ன கவின்? என்ன விஷயம்?” என்றேன்….

“உங்ககிட்ட நான் முக்கியமான ஒருவிஷயம் சொல்லனும்பா…” என்று அவன்
சொன்னபோது குழந்தை கவினாக அவனும், பழைய அப்பாவாக நானும் மாறிவிட்டதாக
தோன்றியது எனக்கு… தத்தி தடுமாறி நடக்க தொடங்கிய வயதில், பிஞ்சு
பாதங்கள் அழகாக எடுத்துவைத்து என்னைநோக்கி வந்து என் மடியில் அமர்ந்த
அந்த நிகழ்வு சட்டென என் மனதிற்குள் மின்னலாக பாய்ந்தது….

அவன் தோளை பிடித்து, என் அருகில் அமரவைத்து “என்ன விஷயம்?…
சொல்லுப்பா…” என்றேன், அவன் என்ன சொல்லப்போகிறான் என்பதை
யூகித்தவனாக…

எங்கள் இருவரையும் விழுதுகள் புடைசூழ எப்போதும்போல இப்போதும் ஆரத்தழுவி
அடைக்கலம் புகுத்தியது, என் வாழ்க்கையின் ஆணிவேரான “ஆலமரம்”…

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஒரு ஆலமரத்தின் கதை….

  1. கதையின் போக்கு மிக இயல்பாக இருந்தது. பாதிக்குமேலாக அந்த தந்தையின் மன அழுத்தம் உண்மையில் மிக அதிர்ச்சி நிஜ வாழ்வில் எல்லா தந்தைக்கும் வரக்கூடியதும்கூட. சூனால் கதையில் முடிவில் தந்தை மகனுக்கு ஒரு சரியான அறிவுரை கூறியதாகவும் மகன் மீண்டும் யதார்த்தமாக தன் இயல்பு வாழ்க்கையை கடக்க தயாரானதாகவும் கொண்டு முடிக்காமல் போனது ஏமாற்றம் தருகிறது.

  2. உருக்கமான கதை. மகனது மாறுபட்ட நடத்தையையும் ஏற்கும் மனப்பக்குவம் படைத்த தந்தையின் குணாதிசயம் செம்மையாக வெளிப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *