‘என் வீடும் தாய்மண்ணும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 10,023 
 

இலட்சுமியம்மா படலையடியில் நின்று கொண்டு தன் வீட்டைத் திரும்பிப்பார்த்தாள்.

அவளின் பெருமூச்சு காற்றுடன் கலந்தபோது அவளின் கண்கள் வெள்ளமாய் நிரம்பின.

‘இது என்வீடு,நான் பிறந்த வீடு,இனிய நினைவுகளுடனும்,உணர்வுகளுடனும் நான் வளர்ந்த வீடு, இந்த வீட்டை விட்டு எப்படிப்போவேன்?’

இப்படி எத்தனையோதரம் தன்னைத்தானே கேட்டுவிட்டாள் இலட்சுமியம்மா.

அவளுக்கு இப்போது எழுபது வயதாகிறது.

‘எந்தையும் தாயும் இணைந்து மகிழ்ந்து வாழ்ந்ததும் இந்த மண்ணிற்தானே?’

அவள் சோகத்துடன் தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறாள்.

மூலையில் நிற்கும் மாமரமும்,வேலியோடு நிமிர்ந்து நிற்கும் வேப்ப மரமும் அவளோடு சேர்ந்து வளர்ந்தவை.ஏக்கத்துடன் இவளைப்பார்க்கும் வெள்ளை நாயும்,குழம்பிப்போய் சுருண்டு கிடக்கும் சோம்பேறிக் கறுத்தப்பூனையும் இவளால் வளர்க்கப்பட்டவை.

இன்று,அவள் வளர்த்த மரமும்,செடிகளும், வீட்டோடிருக்க,அவள் வளர்த்த நாயும் பூனையும்,அவளைப் பரிதாபமாப்பார்க்க,தன்குஞ்சுகளுக்குச்அவள் காலையில்போட்ட தீனியை இன்னும் சத்தம்போட்டு தின்று கொண்டிருக்கும் பெரிய கோழி இவளின் துயர்தெரியாமல் தன்வேலையில் கவனமாகவிருக்க இவள் தன் வீட்டைப் பிரியப்போகிறாள்.

‘அம்மா கெதியாய் வாங்கோ’
தன்வீட்டைப்பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கும் தாயை அவளின் மகள் ராதிகா அவசரப்படுத்துகிறாள். படலையிற் தயங்கி நிற்கும் கிழவியைத் தாண்டி எத்தனையோபேர் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

பக்கத்து வீட்டார்கள்,பக்கத்துத் தெருவிலுள்ளோர்கள்,சொந்தக்காரரர்கள்,சொந்தமற்றவர்கள்,சாதித் திமிர் படித்தவர்கள்,அவர்களால் சாதிரீதியாகத் தாழ்த்தப்பட்டு நடத்தப்பட்டவர்கள்,பண மமதை பிடித்தவர்கள்,பட்டினியால் வாடியவர்கள்,காரை விட்டிறங்காதவர்கள், காலில் ஒரு காலணிக்கு வழியில்லாமல் வாழ்ந்தவர்கள்,கல்வீட்டில் வாழ்ந்தவர்கள், குடிசையில் குடும்பம் நடத்தியவர்கள்,கடல்கடந்து படித்தவர்கள்,கல்வியறிவற்றவர்கள்,இப்படி எத்தனையோவிதமான தமிழர்கள்,புதிதாக வந்த தமிழ்ப் போராளிகளின் கட்டளைக்குப் பணிந்து விரைகிறார்கள்.

கிழவியின் கால்கள் நகர மறுக்கின்றன.
இந்த வீட்டை விட்டுவெளியேற அவள் வாழ்க்கையில் எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்தன. அவள் நகரவில்லை.இந்த யாழ்ப்பாணமண்ணை விட்டு நகரமாட்டேன் என்று அவள் இத்தனை வருடமாகப் பிடிவாதமாவிருந்திருக்கிறாள்.

புதினெட்டு வயதில் திருமணமானபோது, கொழும்பில் வேலைசெய்துகொண்டிருந்த இவள்கணவன் செல்வகுமார் தன்னுடன் கொழும்புக்கு வரச்சொல்லி,இவளைக்; கெஞ்சியபோது அவள் மௌனம்கார்த்தாள்,அவனுடன் போகவில்லை.

கொழும்பு மெயில் ட்ரெயினில் பயணம்செய்து அதிகாலையில் இவளிடம் ஓடிவந்து, தன்தாபத்தைக்கொட்டியழுதுகொண்டு கலவி செய்தபோது கணவன் கேட்டகேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியவில்லை,’என்னை இந்த மண்ணுடன் பிணைத்து வைத்திருப்பது,நான் கால் புதைத்து விளையாடிய மண்ணா அல்லது என் கண்ணோடும் கருத்தோடும் கலந்தவிட்ட இந்த மண்ணின்; பிரியமுடியாத பிடிப்பா?’ அவள் தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.

ஆனால் அவன் ஞாயிற்றுக்கிழம இரவு மெயில் ட்ரெயினில் கொழும்பு திரும்பியபோது,அவனின் பிரிவு அவளை வாட்டி வதைத்தது.

இளம் மனைவியுடன் ஒன்று சேர்ந்து வாழாமல் அரைகுறைப் பிரம்மச்சாரியாக வாழ அவளின் கணவன் செல்வகுமார் விரும்பவில்லை.

இலட்சுமியின் தயக்கத்துக்குக் காரணம் அவளுக்குச் சிஙகளமோ ஆங்கிலமோ தெரியாது என்ற தாழ்வுணர்வுதான் என அவன் நினைத்தான்.

கொழும்புக்கு வந்தால் கொஞ்ச நாளில் பாஷை பிடிச்சிடலாம் இலட்சுமி;;’ அவன் கெஞ்சல் எடுபடவில்லை.
‘அம்மாவைத் தனியாக யாழ்ப்பாணத்தில விட்டிட்டு நான் என்னட்டு கொழும்பில் வாழமுடியும்?’ அவள் சோகத்துடன் அவனை வினவினாள்.

அவன் வேண்டாவெறுப்பாகக் கொழும்பு திரும்புவான்.மாதத்தில் ஒருதரம் யாழ்பாணம் ஓடிவருவான். அவனுடன்,அவளைக்காணவேண்டும் என்ற காதல் வசந்தமும் சேர்ந்து வரும்.

‘கொழும்புக்கு வந்து வாழமாட்டன்’; என்ற மனைவியின் பிடிவாதத்தை அவனால் தளர்த்த முடியவில்லை.

அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.கொழும்பில் நெருக்கமான ‘அனெக்ஸில்’ வாழ்வதை விட இலடசுpமியும் குழந்தைகளும் யாழ்ப்பாணத்தில் வாழ்வது நல்லது என்று அவனே உணர்ந்தான்.

அப்போது,அவள் அவனிடம் மனம் விட்டுச்சொன்னாள, ;’எனக்கென்னவோ இந்த வீட்ட விட்டிட்டு எங்கேயும்போய் இருக்கப் பிடிக்கல்ல,நான் தவழ்ந்த வீட்டில,பொன்னும் வைரமும் கொட்டிக்கிடல்ல,ஆனால்,இந்த மண்ணும் எங்களச் சுற்றிக் கிடக்கிற பனைவடலியும் எங்களோட வாழ்க்கையோட,சேர்ந்து கிடக்குது,எனக்கு இதைவிட்டு எங்கேயும் போக முடியாது’

அவன் மாமர நிழலில் அமர்ந்திருக்க அவள் புழுக்கொடியல் உடைத்துக்கொடுத்தபடி பேசிக்கொண்டிருப்பாள்.குழந்தைகள் வீட்டுமூலையிலிருக்கும் மாமரத்தில் போட்டுக்கொடுத்த சின்ன ஊஞ்சலில் ஆடிமகிழ்வார்கள்.

வீட்டைச்சுற்றியிருந்த சின்னத்தோட்டத்தில் அவள் தக்காளி,வெண்டைக்காய், மிளகாய் என்று எத்தனையோ மரக்கறிவகைகளை நட்டிருப்பாள். அவள்கைகள் மற்றவர்களக்கு அள்ளிக் கொடுக்கத் தயங்காதவை.

அடுத்தவீட்டார் பட்டினியாயிருந்தால் அவளால் தாங்கமுடியாது,தன்னால் முடிந்ததைக்கொடுத்து உதவுவாள்.
கணவனின் சம்பளத்தில் மிச்சம் பிடித்து குடம்பத் தேவைகளைப் பார்ப்பாள். குழந்தைகளின் படிப்பில் அக்கறை காடடுவாள்.பிறந்த வீட்டாருக்கும்,அயல்,அண்டை வீட்டாருக்கும் இவள் ஒரு சாதாரண இலட்சுமியில்லை,அடுத்தாருக்கு உதவும் தர்மலட்சுமி,. மற்றவர்களுக்கு இரங்கும் நல்ல மனம் கொண்ட தங்க லட்சுமி.நான்கு தமயன்களுக்கத் தங்கையாகப் பிறந்த அதிர்ஷ்டலட்சுமி இவள் பிறந்த மண்வீடு கல் வீடானது இவளின் அதிர்ஷ்டம் என்று தாயார் வாழத்தினாள்.

வாழ்க்கையில் எத்தனையோ மேடுபள்ளங்களை,ஏறியிறங்கியவள்,இன்று எழுபது வயதில்,தான்பிறந்த தாய்மண்ணைத் துறந்து வெளியேறத் தயங்குகிறாள்.

இப்போது இலட்சுமிக்கு அவளின் முதுமையின் காரணமாகக் காது சரியாகக்கேட்காது.கண்களின் பார்ihயும் அவ்வளவாக நல்லதில்லை. வாதநோய் காரணமாகக் கால்களில் பெரிய வேதனையும் பெலவீனமும்.

ஆனாலும்,சிங்கள இராணுவத்தின் ஷெல் அடிகளுக்கு ஆடாத உடம்பும் ஆடியது,ஓடமுடியான கால்களும் ஓடியது.’கலிகாலத்தின் அழிவுச்சின்னத்தின் அடையாளங்கள்தான் இவை’என்று சிங்கள இராணுவத்தைத் திட்டினாள்;.

இன்று அந்த எதிரிகளின் படை இவள் வீட்டை நெருங்கிவருகிறாம்.இவள் எழுபது வயது வரை வாழ்ந்த மண்ணை எதிரியின் இரத்த வெறிக்குப் பணயம்வைத்துவிட்டு ஓடவேண்டியிருக்கிறது.

இவளின் கணவர் செல்வகுமார் இன்று உயிருடனிருந்தால், இந்த பயங்கரமான சூழ்நிலையிலும் இந்த வீட்டைவிட்ட நகரமாட்டேன் என்ற இவளுடைய பிடிவாதத்திற்கு விட்டுக்கொடுத்திருப்பாரா?

கொஞ்ச காலத்துக்கு முதல் இந்திய இராணுவத்தின் பயங்கர ஊழித்தாணடவமாடி, தமிழர் குருதியை யாழ்வீதிகளில் நதியாக ஓடப்பண்ணிக்கொண்டிருந்தார்கள். இந்திய அமைதிப்படையினாரால் துவம்சம் செய்யப்பட்டு இறந்த தமிழர் உடல்களை,தெரு நாய்;கள் விருந்துண்டன.எழுபது வயது முதுகிழவி தொடக்கம் ஏழுவயதுப் பாலகி வரையும் பாரதப் படையின் காமக்கொடுமையால் கசக்கி எறியப்பட்டார்கள். அப்படிப்பல கொடுமைகளுக்கும் பயந்து பலர் ஓடியபோது,’இறப்பு ஒருதரம்தானேவரும்,ஏன்கோழைகள்மாதிரி ஓடவேணும்?’ என்று கேட்டாள்.இலட்சுமி வீட்டை விட்டு நகரவேயில்லை.

இவளின் திமிர் இந்திய இராணுவத்தினரைப் பொங்கியெழப்பண்ணியது,அவள் நகரவில்லை தலைப்பாகையணிந்த சீக்கிய இராணுவச்சிப்பாய்,இவளையிழுத்தெறிந்தான். இவளின் காலுடைந்துவிட்டது.கதறினாள். கணவர் செல்வகுமாருக்குத் தலையிலடி போட்டார்கள். வெளியேறச்சொல்லிக் கெஞ்சினார்கள். வெளிநாட்டிலிருந்த மகன் இந்திய இராணுவத்தின் கொடுமைகளைக் கேள்விப்பட்டு தகப்பனையும் தாயையும் தன்னிடம் வரச்சொல்லிக் கெஞ்சினான். ‘என ;வீட்டையும் என் தாய் மண்ணையும் விட்டு நான் எந்த இடத்திற்கும் ஓடமாட்டன்’ வழக்கம்போல் இலட்சுமி பிடிவாதமாவிருந்தாள். கடைசியாக, இந்தியன் இவள் மண்ணை விட்டோடினான். இவள் தன்வீட்டைவிட்டு நகரவேயில்லை. இன்று அவள் வாழ்ந்த சமூகத்திலிருந்து வந்த தமிழன் இவளை நகரச்சொல்கிறான்.நகர மனமில்லை. ஏல்லாம் குழப்பமாகவிருக்கிறது.

இலட்சுமி தன் கணவனையிழந்து துடித்தபோது, நீண்டகாலத்தின்பின் வெளிநாட்டிலிருந்து வந்த தனது மகனையே அவளால் அடையாளம் காணமுடியவில்லை.பத்தொன்பது வயது இளம் மீசையுடன் லண்டன் சென்ற,ஒல்லியான அவள் மகன், பதினைந்து வருடங்களுக்குப்பின், குறும்தாடியுடன்,இரண்டுசுற்று எடையுடன்,முன்வழுக்கைத்தலையுடன் முன்னிற்றபோது அவளால் அடையாளம் காணமுடியவில்லை.

”நீ என் மகனில்லை’என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள். மகன் லண்டனுக்குப்போனபோது,அவன் பிரிவைத்தாங்காமல் பல நாட்களாகச் சாப்பாடு தண்ணீர் இல்லாமலும் நித்திரையற்றும் தவித்திருக்கிறாள்.
”அவன் படிக்கத்தானே போயிருக்கிறான்,படிப்பு முடிந்ததும் வந்து விடுவான்தானே;;’ என்ற உற்றாரின்; ஆறுதல்வார்த்தைகளும் இவள் காதில் விழவில்லை.

அதன் சில வருடங்களின்பின், லண்டனிலுள்ள சொந்தக்காரர்கள் அவள் மகனுக்குத் திருமணம்பேசிக் கல்யாணம் செய்து வைத்தபோது,தன்மகனின் திருமணத்திற்கோ போக முடியாத சோகம் அவளை வாட்டியது. அந்தக்கால கட்டத்தில், இலங்கை இராணுவம், தமிழ்ப் பயங்கரவாதிகளைத் தேடும் சாட்டில், தமிழர் பகுதிகளில் மனிதவேடடையாடிக்கொண்டிருந்தது.

மகனின் திருமணம், அவனின் தாய்தகப்பனில்லாமல் லண்டனில் நடந்தது. தன்மகன் எங்கேயாவது உயிருடனிருந்தால்போதும் என்று மகனை வாழ்த்தினாள்.

புதினைந்து வருடங்களின்பின், தகப்பனின் மரணச்சடங்குக்கு அவன் வந்திருந்தபோது அவளால் அவனை அடையாளம் காணவே கஷ்டமாகவிருந்தது. ஓரு அந்நியனைப் பார்ப்பதுபோல் மகனைப்பார்த்தாள்.பாசம் மறக்கவில்லை. புழக்கம் மாறிவிட்டது.

‘நீ என் மகன் என்று எப்படி நம்புவேன்’ அவள் விம்மினாள். எதிரிகள் ஏவியடித்த ஷெல்களின் தாக்குதல்களால் அவள் புத்தி சரியாக வேலை செய்யவில்லை. உணர்வுகள் குழம்பிப்போயிருந்தன.

அவள் கண்முன்னால் எத்தனையோ சொந்தக்கார இளைஞர்கள்,வாழவேண்டியவயதில் காலனின் கையிலகப்பட்டார்கள். அவர்கள் பிறந்த நாடும் தவழ்ந்த மண்ணும் அந்நியமானது. தாய்நாட்டிலிருந்து உயிர் பிழைத்தோடி அந்நிய நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் புகுந்தார்கள்.

உறவுகள் பிரிந்தன.உற்றார்கள் சிதறினார்கள்.

அவள் அந்த வீட்டைச் சுற்றி வருவாள். கொழும்பிலிருந்த மகள் ராதிகா,தாய் இலட்சுமியைத் தன்னுடன் வந்திருக்கச் சொல்லிக் கெஞ்சினாள். அவள் அசைய வில்லை.

இன்று எப்படியும் தனது தாயை எப்படியாவது ‘காப்பாற்ற’ மகள் ராதிகா வந்திருக்கிறாள்.

இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தை வெற்றிகொள்ள வீறுகொண்டு வந்து கொண்டிருக்கிறது.
உடமைகள் சிலவற்றுடன், தங்கள் உயிரைப் பிடித்துக்கொண்டு தமிழினம் தாங்கள் ஆண்டபூமியை அன்னியனிடம் கொடுத்து விட்டு அகதிகளாய் வெளியேறிக்கொண்டிருக்கிறது;.

‘என்னச் சும்மா விடுங்கோ,என்ர மண்ணில் என்னச் சாகவிடுங்கோ” கிழவி கெஞ்சினாள்.
மகள் என்ன செய்வது என்று தெரியாமற் தவிக்கிறாள்.

இருக்கும் இடங்களைக் காலி செய்துவிட்டு, உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு வந்திருக்கிறது.

..இந்திய ஆர்மி வந்தபோது நான் அசையல்ல,நான் எப்பவும் சிங்கள ஆமிக்குப்; பயப்பிடல்ல்?’கிழவி முணுமுணுத்தாள்.

தமிழ் மக்கள் வெளியேறவேண்டும் என்று உத்தரவு போட்ட தமிழ்ப் போராளிகள்;; இவளின் முணுமுணுப்பைச் சட்டை செய்யவில்லை.

‘எல்லோரும் உடனடியாக வெளியேறவேண்டும்’ என்ற அவர்களின் உத்தரவு அமுல்படுத்தப்பட்டது.

‘அம்மா கெதியாக வாங்கோ’ மகள் அவசரப்படுத்தினாள்.மகளுக்கு ஐம்பது வயதாகிறது.அவளின் கைகளில் இரண்டு பேரப்பிள்ளைகளும், எடுத்துக்கொண்டு போகக்கூடிய சில சாமான்களும் கனத்திருக்கின்றன.

”என்னை இஞ்ச விட்டிட்டுப்போங்கோ” கிழவி கெஞ்சினாள்.கொஞ்ச தூரம் நடந்ததும் கிழவிக்கு மூச்சு வாங்கியது.

‘அம்மா,நாங்க எப்படியும் எங்கட ஊரவிட்டுப்போகத்தான் வேணும்’ மகளின் குரல் சோகத்தால் தழு தழுத்தது.

‘வெளியில போயும் சாகத்தானே போறன்,என்ர மண்ணில என்னைச் சாக விடன், கொழும்பில அப்படி என்ன பெரிய சீவியம்? ஓரு சின்ன வீட்டில சிறைச் சீவியம்தானே,நான் வரமாட்டன்” இலட்சுமி அவள் கணவனிடம் ஐம்பத்து இரண்டு வருடங்களுக்கு முன் சொன்ன விடயத்தை இன்று மகளுக்குச் சொல்லிக் கெஞ்சினாள்,மன்றாடினாள்.

‘அம்மா ஊரோட ஒத்துப்போகவேணும்’மகள் உறுத்திச் சொன்னாள்.

‘நான் ஊரவிட்டு ஓடிப்போய் என்னத்தக் காணப்போறன்?என் மண்ணில என்னச் சாகவிடு’ கிழவி திரும்பத் திரும்ப அவள் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தாள்.

மக்கள் கூட்டம் அவசரமாக விரைந்து கொண்டிருந்தது. காரில் போவோர் ஒரு சிலர். சைக்கிள்களில் போவேர் பலர். கால் நடையாகப்Nபுhவோர் பல்லாயிரக்கணுக்கானோர்.

மக்களின் கால் நடைத்தடயத்தில் எழுந்த புழதி யாழ் நகர மேகத்தைத் தடவியது.

தென்றல் தவழும் யாழ்நகர் திகைத்து மவுனமானது.

மனிதர்களிக் ஏக்க மூச்சு வடலிகளைத் தடவியது.

வானத்தை முட்டிய பனை மரங்கள், தன்னைக்கடந்து செல்லும் மனிதப் படையைப் பேய்கள்போலப் பார்த்துக்கொண்டு நின்றன.

கோயில்மணியோசை கேட்கும் யாழ்நகரத் தெருக்கள் தமிழரின் விசும்பலால் நிறைந்தன.

வீணையொலி கேட்கும் தமிழர் மனைகளில் விம்மல் ஒலிகள் கேட்டன.

தர்மம் தளைத்த ப+மி,தமிழில் நனைந்த நிலம், தமிழ் அகதிகளால் நிரம்பி வழிந்தது.

இந்த அகதிக் கூட்டத்திற்கு இதுவரை அவர்கள் கட்டிப் பாதுகாத்த அடையாளம் ஏதுமில்லை.
சாதித்திமிர்,பரம்பகை; கவுரம், பணத்திமிர் எதுவுமில்லை.

அன்று கொடி கட்டி வாழ்ந்த இனம் இன்று இராணுவத்தின் வெடிக்குப் பயந்து வெளியேறிக்கொண்டிருக்கிறது.

இலட்சுமிக்கிழவியின் அடையாளங்கள் பல. ஓரு காலத்தில் வைத்தியலிங்கம் மாஸ்டரின் அருமை மகள், பின்னர்,செல்வகுமாரின் அழகிய மனைவி, அதன்பின் இரு குழந்தைகளின் அருமைத்தாய்.

இன்று?

பல்லாயிரக்காணக்கானோரில் அவளும் ஓரு தமிழ் அகதி.

பிறந்த வீடடையும் வாழ்ந்த மண்ணையும் விட்டு வெளியேற்றப்பட்ட, எதிர்காலம் எப்படியிருக்கும் என்று தெரியாத ஒரு தமிழ் ‘அகதி’.

கிழவியின் அருகில் ஒரு இளம் பெண். ஐம்பது வருடங்களுக்கு முன், இலட்சுமி இருந்ததுபோல் ‘கட்டான’ உடம்புடன் அழகாகத் தெரிகிறாள். அவள் அவளது தலையில் அளவுக்கு மீறித்தூக்கிககொண்டு போகும் சுமையின் கனத்தால் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தாள்.

கிழவி தன்னைச் சுற்றிப்பார்த்தாள். அவளுக்குப் பார்வை சரியாகவில்லை. கடந்த நான்கு மணித்தியாலங்களாக நடக்கிறார்கள்.

‘இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு இடத்தில் அமர்ந்து சாப்படுவம்’ சொந்தக்காரன் பையன் கிழவிக்குச்சொன்னான்.
கையில் எடுத்துக்கொண்டுவந்த சாப்பாடு எத்தனை நாளுக்குப்போகும்?

மக்கள்கூட்டம் தொடர்ந்து நடந்ததா அல்லது ஊர்ந்ததா? அவர்கள் போய்க்கொண்டிருந்தார்கள்.
மனித வெள்ளம் அணைகடந்து போய்க்கொண்டிருந்தது.

மவுன ஊர்வலம். மனம் விட்டுச் சொல்ல முடியாத துயர்களைச்சுமந்த மனித உருவங்கள் வெற்றுடம்பாய் நிலத்தைக்கடந்து கொண்டிருந்தது.

‘எங்கே போகிறம்?’ கிழவி கேட்ட கேள்விக்கப் பதில் சொல்வார் யாருமில்லை.

‘யாழ்ப்பாண எல்லைக்குக் கிட்ட வந்து விட்டோமா’ கிழவி கேட்டுக்கொண்டேயிருந்தாள்.

வானம் கறுத்தது.முகில்கள் திரண்டன. எந்த நேரமும் வானம் மடை திறக்கலாம் என்று பட்டது.

தமிழ் மக்களுடன்; வானமும் சேர்ந்து அழுவதுபோலிருந்தது.

தூறல் தொடங்கிவிட்டது,தமிழரின் துயருக்குத் தானும்சேர்ந்து விம்மியது.

செல்வகுமார் தன்னுடன் கொழும்புக்கு வரச்சொல்லிக் கேட்டதற்குத் தான் மறுதலிப்புச் செய்ததற்குக் கடவுள் தண்டனை கொடுக்கிறாரோ என்று கூட கிழவி இப்போது நினைத்தாள்.

கிழவியின் கண்களில் நீர்பெருகியது.

இருண்டு விட்டது. எங்கேயோ தங்கினார்கள்.

இப்போது, வீட்டில் நாயும் பூனையும் என்ன செய்யும்?

யார் அந்த வாயில்லாப் பிராணிகளுக்குச் சாப்பாடு போடுவார்கள்?

அவளுக்கு முன்னால் அவளின் இரு குழந்தைகளும் களைப்பால் துவண்டு படுத்திருந்தார்கள்.

‘அம்மா,சாப்பிடுங்கோ,விடியம் வரை மழை பெய்யும்போல இருக்கு” மகள் அவர்கள் ஒதுங்கி நின்ற வீட்டில், தங்கள் சாப்பாட்டுப் பார்சலைத் திறந்தாள்.

குழந்தைகள் பசியில் சாப்பாட்டை ஆவலுடன் பார்த்தன.

‘இந்தச் சாப்பாடு முடிந்தால் இவர்களுக்கு என்ன கதி? நான் இல்லாவிட்டால் அந்தச் சாப்பாடு மிஞசும்’ கிழவி தனக்குள் நினைத்துக்கொண்டாள்.

வீட்டில்,வளவு நிறையத் தக்காளியும்,வெண்டியும், கத்தரிக்காயும் காய்த்துக்கொட்டிக்கிடக்கின்றன.
கோழிமுட்டைகள் எத்தனையோ கிடக்கின்றன.

ஒரு துண்டுப் பாணை ஆசையோடு பார்க்கும் தனது பேரப் பிள்ளைகளை கிழவி ஆதங்கத்துடன் பார்த்தாள்.
அவள் மனம் குமுறியது.’இந்த அவலத்தைப் பார்க்கவா இவ்வளவு நாளும் உயிர்வாழ்ந்தேன்;’?

‘அம்மா சாப்பிடுங்கோ” மகள் கெஞ்சினாள்.கிழவி பிடிவாதத்துடன் மறுத்து விட்டாள்.

குளிர்காற்று உடலை நடுங்கப்பண்ணியது. அன்றிரவு,பேரப்பிளளை ஒன்றுக்கு நல்ல காய்ச்சல்.
இரவு நீண்டுகொண்டிருந்தது.

இரவின் அமைதியை உடைத்துக்கொண்டு,விம்மல்கள்,விசும்பல்கள்,பெருமூச்சுக்கள்,பிதற்றல்கள் கிழவியைச் சுற்றிக் கேட்டன.

இசை,இயல்,நாடகம் படைத்த தமிழ் இனமா இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது? இதனையனுபவிக்க இலங்கைத் தமிழினம் என்ன பாவம் செய்தது?

கிழவி எழும்பி உட்கார்ந்தாள்.வீடு ஞாபகம் வந்தது. சாப்பாட்டுக்குக் குறையில்லாமல் வாழந்த வீடு. இவர்கள் அத்தனைபேரும் நாளைக்கு என்ன செய்வார்கள்? என்ன சாப்பாடுவார்கள்?

எழுபது வயது சரித்திரம் வாழ்க்கையில் முதற்தடவையாக பசியை உணர்ந்தது. அவளின் தன்மானத் தமிழ் இரத்தம் அவமானத்தால் கொதித்தது.

இந்த வாழ்க்கையுடன் ஒட்டிக்கொண்டு ஓடத்தான் வேண்டுமா?இந்தியனுக்குப் பயபடாதவள்,சிங்கள் ஷெல்லுக்குப் பயப்படாதவள். இன்று…?

திரும்பி அவளின் வீட்டுக்குப்போக வேண்டும் என்று அவள் மனம் துடித்தது.

தன்மானத்தடன் தன் வீட்டில் தன் உயிர் போகவேண்டும் என்று ஆத்மா அலறியது.

இரவு நீண்டு கொண்டு போனது.

காலையில் மழை விட்டிருந்தது. மக்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். மகள் தாயை எழுப்பினாள். கிழவியின் உயிர் எப்போதோ பிரிந்து விட்டது. யாழ்ப்பாண மண்ணைத் தாண்ட விரும்பாத சரித்திம் பிணமாகிவிட்டது.

பிணம் தனிமைப்படுத்தப்பட்டது. ‘சரி எல்லாரும் போங்கோ,நாங்க சவத்தைப் பார்த்துக்கொள்வம்’

அனாதராவான தமிழ்அதிகளுக்குத் துப்பாக்கி தூக்கிய தமிழ்ப் போராளிப் பையன் உத்தரவு போட்டான். தமிழினம் மவுனமாக நகர்ந்து கொண்டிருந்தது.

(1995ல் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழர்கள் வெளியேறியதை அடிப்படையாகக் கொண்டது இந்தக்கதை)

– 27.03.96

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *