தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 10,871 
 

காலை எட்டு மணிக்கெல்லாம் கருத்தராவுத்தரின் அழைப்புக் குரல்.

“”சுப்ரமணி…சுப்ரமணி” என்று கூப்பிட்டுக் கொஞ்சியது.

நான் வீட்டு வாசலுக்கு வருவதற்குள் , ராவுத்தர் தன் கடை வாசலுக்குப் போய்விட்டிருந்தார்.

கடைவீதியில்தான் என் வீடு. வீட்டுக்கு முன்புறம்தான் ராவுத்தரின் வாடகைச் சைக்கிள் கடை.

“”பெரிய பள்ளிக்கூடம் வரைக்கும் போய்ட்டு வரலாமா?” என்று கேட்டார் ராவுத்தர்.

“”இந்தக் கிழ வயசில் நமக்கென்ன பள்ளிக்கூடத்தில் வேலை?” என்றேன்.

“”நீ வேணும்னா கிழமா இரு. நான் இருக்கமாட்டேன்” என்றவராய், ராவுத்தர் கடையைத் திறந்தார்.

எதிர்வினை

நான், நூலகராய் இருந்து போன மாதம் ஓய்வு பெற்றவன். ராவுத்தர் என்னைக் காட்டிலும் அகவை ஐந்து மூத்தவர்.

“”இதோ பார்… இது சலீமுக்குப் பத்தாம் கிளாஸப்ப வாங்கின வாட்ச். இந்த வாட்ச் அவனை மெடிக்கல் காலேஜ்ல சேர்த்த கையோடு வாங்கினது. அவன் கட்டவே கெடயாது. சும்மா கிடந்து வீணாப் போவானேன்? இன்னிக்கு பிளஸ் டூ பரீட்சை. பள்ளிக் கூடத்துக்குப் போய் யாரானும் ரெண்டு புள்ளைங்களுக்கு கொடுத்துரலாமா?” என்று இரண்டு கைக்கடிகாரங்களைக் காட்டினார். சலீம், மருத்துவக் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்ட அவரது ஒரே மகன்.

“”இப்பவே” – புறப்பட்டோம்.

பள்ளிக்கூட வாசல் “ஜேஜே’ என்றிருந்தது. மாணவ, மாணவியர் திட்டுத் திட்டாக நின்று கொண்டு மதிப்பெண் பெரும் கடைசி முயற்சியில் இருந்தனர்.

“”யாருக்குக் கொடுக்கலாம்?” என்ற ராவுத்தர் முகம் முகமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். வகைவகையான முகங்கள்…

“”பையனுக்கு ஒண்ணு; பெண்ணுக்கு ஒண்ணு” என்று சொல்லவும்,

“”கரெக்ட்” என்றவர், யூனிபார்ம் வெளுத்துப் போன ஒரு மாணவியை அழைத்து,””இந்தா இந்த கடிகாரத்தைக் கட்டிக்கிட்டுப் போய் ஜோரா எழுது பரீட்சையை” என்று கடிகாரத்தை அணிவித்தார். தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார்.

என் பங்குக்கு நானும் ஒரு பையனைத் தேர்ந்தெடுத்துக் கடிகாரத்தை மாட்டிவிட்டபோது , ஓர் இளம் குரல் வழி மறித்தது-

“”இந்த ஸ்கூல்ல இவன்தான் நல்ல படிக்கிறவன்” என்று.

சொன்ன மாணவனும், சுட்டிக் காட்டப்பட்ட மாணவனும் அநியாயத்துக்கு நோஞ்சானாக இருந்தனர். தேர்வு முடிந்த மறுநாளே கிழிந்து விடுவேன் என்பது போல் நைந்து சிதைந்து போயிருந்தது அவர்களது சீருடை. “அவசரப்பட்டுவிட்டோமே’ என்று தவித்தேன்.

“சட்’ டென தன் வாட்சைக் கழற்றி அந்த நல்லா படிக்கிற சிறுவனுக்கு அணிவித்துவிட்டார், ராவுத்தர்.

“”பாய்” பதறினேன். விலை அதிகமுள்ள கடிகாரம் அது.

“”வா… வா… இதுக்கு மேல நின்னா பசங்களுக்கு இடைஞ்சல்” என்று அழைத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார்.

ஸ்டேட் வங்கிக்கு நேரே வந்ததும் ராவுத்தர் சற்றே தடுமாறினார்.

“”என்ன பாய்” என்றேன்.

“”இல்ல… பையனுக்குப் பத்தாயிரம் பணமும் பாஸ் புக்கும் கொண்டு வந்தேன்”

“”ஆமா பாய்… கையில ஒரு மஞ்சள் பை வச்சிருந்தீங்க… ஆங்… பாய்… அந்த நல்லா படிக்கிற பையனுக்கு வாட்சை மாட்டும்போது பள்ளிக் கூட கொடி மேடையில் பையை வச்சீங்க” என்று ஞாபகம் வந்து, ஓட ஆரம்பித்தேன். ராவுத்தர் பின் தொடர்ந்தார்.

நாங்கள் பள்ளிக்கூடம் போய்ச் சேர்ந்தபோது, பிள்ளைகளெல்லாம் தேர்வுக் கூடத்துக்குள் ஐக்கியமாகிவிட்டிருந்தனர். ஹாலுக்கு இருவர் வீதம் ஆணும் பெண்ணுமாய் நான்கு போலீசார் மட்டுமே நின்றிருந்தார்கள், காவலுக்கு.

கொடி மேடை மீது மஞ்சள் பையைக் காணோம்.

“”ஒரு வார்த்தை போலீசில் சொல்லிடுவோம் பாய்”

“”ஊஹூம் பரீட்சை நேரம் கலாட்டா கூடாது. வா பார்க்கலாம்” என்றவர் சலனம் சிறிதுமின்றி புறப்பட்டுவிட்டார். அவருக்கு எல்லாமே சாதாரணம். வாழ்க்கையே சாதாரணம்தான்!

* * *

அரை நூற்றாண்டுக்கும் மேலாக அடையாளம் மாறாது அப்படியே இருக்கிற நடுத்தர நகரங்களில் எங்கள் தவத்திருப்பூண்டியும் ஒன்று. கடந்த பத்து வருடத்தில் மக்கட்தொகையே கூட பத்தாயிரத்துக்கும் குறைவாகத்தான் கூடிப் போயிருக்கிறது. மற்றபடி மாற்றம் என்பது இருசக்கர வாகனங்களின் கட்டுப்படாத நடமாட்டம்தான்.

ராவுத்தருக்கும் எனக்கும் நகரிலிருந்து நாலாவது கல்லில் உள்ள சீதம்மாபுரம் கிராமம்தான் பூர்வீகம். நான் பதினோராம் வகுப்பு முடிந்து நூலகத்தில் வேலைக்குப் போனேன். ராவுத்தர் எட்டாம் வகுப்பு கோடை விடுமுறையில் சைக்கிள் கடைக்குள் அடி எடுத்து வைத்தார்.

ஐம்பது வருடமாய் சைக்கிள் அவரை விடவில்லை. அவரும் சைக்கிளை விடுவதாக இல்லை. முப்பத்தெட்டு வயதில் கல்யாணமாகி, நாற்பது வயதில் பையன் பிறந்த பிறகு, ராவுத்தருக்கு உழைப்பென்றால் உழைப்பு. அப்படி ஓர் உழைப்பு!

வாடகைக்கு விட ஐம்பது சைக்கிள். சைக்கிள் பழுது பார்க்க இரண்டு ஆள். பையனை மருத்துவம் படிக்க வைக்கிற அளவுக்கு ராவுத்தருக்கு நல்ல சம்பாத்தியம். ஆனால் இப்போது சைக்கிளின் ஓட்டம் குறைந்துவிட்டது. ராவுத்தரும், சைக்கிளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்துவிட்டார்.

இதற்காக அவர் வருத்தப்பட்டவரல்ல. ராவுத்தர் எதற்காகவும் வருத்தப்படுபவரல்ல. காரணம் இன்றி எந்தக் காரியமும் நடக்காது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை.

“”ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பது வெறும் இயற்பியல் தத்துவமல்ல. வாழ்க்கைத் தத்துவமே அதுதான்” என்பார் ராவுத்தர் அடிக்கடி.

நம்பிக்கைதான் அவரது சொத்து. அதை மெய்ப்பித்த சம்பவங்கள் ஏராளம். அதில் ஒன்றிரண்டையாவது சொல்ல வேண்டும்.

இந்தக் கடையும் வீடும் விற்பனைக்கு வந்தபோது ராவுத்தர் கடையை வாங்கிக் கொண்டார். என்னிடம், “”வீட்டை வாங்கு” என்றார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு. பணம்?

பணப்புழக்கம் இல்லாத காலம். கடன் வசதி என்பதே காதில் விழாத காலகட்டம். வீட்டை எப்படி வாங்குவது?

ராவுத்தர் சொன்னார்: “”செம்பை விற்றுக் கலயம் வாங்கக் கூடாது. ஆனால் கலயத்தை விற்று செம்பை வாங்கலாம்” என்று.

எனக்குப் புரிந்துவிட்டது. கிராமத்து வீட்டையும், நிலத்தையும் விற்று லட்ச ரூபாய்க்கும் குறைவாக வீட்டை வாங்கினேன். இன்றைக்கு கோடிக்கும் மேல் மதிப்பு, வீட்டுக்கு!

மூன்று வருடத்துக்கு முன்பு ஒருநாள்.

“”நாலு மணி நேரம் சார்ஜ் பண்ணினால் ரெண்டு மணி நேரம் எரியுமாம். முந்நூறு ரூபாய்க்கு வாங்கினேன்” என்று ஒரு சிறிய சார்ஜ் லைட்டைக் காண்பித்தார், ராவுத்தர்.

“”ஏமாந்துட்டீங்களே பாய்” என்று சிரித்தேன்.

“”ஏன்?” அப்பாவியாய்த் தவித்தார் ராவுத்தர்.

சொன்னேன்: “”இதுபோல லைட் நானும் ஒண்ணு வாங்கினேன். வாங்கும்போதே சந்தேகம்தான். நான் சந்தேகப்பட்டது சரியாய்ப் போச்சு. பத்து நாளிலேயே லைட் செத்துப் போச்சு” என்று சிரிப்பைத் தொடர்ந்தேன்.

ஆனால் ராவுத்தர்? “”நான் வாங்கும்போது சந்தேகப்படலே” என்றார். மூன்று வருடம் உயிரோடுதான் இருக்கிறது அவர் முந்நூறு ரூபாய்க்கு வாங்கின விளக்கு.

ராவுத்தர் தன் பையனை மருத்துவக் கல்லூரியில் சேர்த்த புதிதில் அவனுக்கு மஞ்சள் காமாலை வந்துவிட்டது.

“”மஞ்சள் காமாலை எதனால் வருகிறது?” என்று ராவுத்தர் கேட்க-

எப்போதோ கேள்விப்பட்டதை வைத்து, “”பழக்கமில்லாத ஆள் மதுவகையைப் பயன்படுத்தினால் கூட மஞ்சள் காமாலை வரலாம் பாய்” என்று சொல்லிவிட்டேன்.

சற்றும் சலனப்படாமல் என்னை நேருக்கு நேர் பார்த்து ராவுத்தர் சொன்னார்:

“”பெற்றோர் எல்லாருக்குமே இப்போதைக்கு இருக்கிற பெரிய சவால் மதுதான். ஆனால் எனக்கு அந்தப் பயம் கிடையாது. மது சாப்பிடுபவரை நீ என்னன்னு சொல்வே”

“”குடிகாரர்னு”

“”நான் அந்த வார்த்தையை உச்சரித்ததே கிடையாது. அது மட்டுமில்லே… பிள்ளை வேணும்னு வேண்டுறது எதுக்கு? நம்ம மரணத்துக்குப் பிறகு நம்ம பிள்ளை “இறைவா என் பெற்றோருக்குச் சொர்க்க வாழ்வைக் கொடு’ன்னு பிரார்த்தனை பண்ணத்தான். ஆனால், நான்?”

“”சொல்லுங்க பாய்”

“”எங்க வாப்பாவுக்கு சொர்க்கத்தைக் கொடு அல்லான்னு பண்ணுகிற பிரார்த்தனையைவிட, என் மகனை மதுபோன்ற நரகத்தில் தள்ளிவிடாதே இறைவான்னு பண்ணுகிற பிரார்த்தனைதான் அதிகம். என்னுடைய பிரார்த்தனையில் எனக்கு நம்பிக்கை உண்டு” என்றார். வாயடைத்துப் போனேன்.

இதற்கெல்லாம் உச்சமான நிகழ்வு ஒன்று உண்டு. அது-

ராவுத்தர் மனைவியின் மரணம் பற்றியது!

“ஒரு சொட்டுத் தண்ணீர் கூட விரயமாகக் கூடாது’ என்பது ராவுத்தரின் பிடிவாதமான கொள்கை. ஆனால் அவரது மனைவி இதற்கு நேர் எதிர்!

குடம் குடமாய் தண்ணீர் இறைத்து வீடு கழுவாத நாள் கிடையாது. குளிக்கவும், துவைப்பதற்குமாக விரயமாகும் நீருக்கு அளவே கிடையாது. ஒரு சின்ன எறும்பு கிடந்தால் கூட ஒரு குடம் தண்ணீரையும் குப்புறக் கவிழ்த்துவிடுவார்.

ராவுத்தருக்கு மாறாத மன வருத்தம் இதில்!

பத்து வருடங்களுக்கு முன்பு ராவுத்தரின் மனைவி இறந்து போனபோது மழைக்காலம்… நான்கு நாட்களாய் விடாத மழை…

பிரேதத்தைப் புதைக்கக் குழிதோண்டினால் தண்ணீர் பீறிட்டு அடிக்கிறது. தோண்டிய குழாயில் மண் சட்டிகளை அடுக்கிப் பிரேதத்தை அடக்கம் செய்தார்கள்.

ராவுத்தரின் கண்கள் கசியக் கண்டது அந்த ஒருமுறைதான். அதுவும் மனைவியின் மரணத்துக்காக இருக்காது.

* * *

“”சுப்ரமணி” பதினொரு மணிக்கெல்லாம் மீண்டும் ராவுத்தரின் அழைப்பு. அதே கொஞ்சல் குரல்.

பரக்க வாசலுக்கு வந்து, “”பணம் கிடைச்சிட்டுதா பாய்” என்றேன்.

“”வந்துக்கிட்டே இருக்கு” என்று புன்முறுவல் பூத்தவர், “”சித்தே கடையைப் பார்த்துக்க… நான் போய் பேங்குல பணத்தைக் கட்டிட்டு வந்துடறேன். இப்ப அனுப்பினால்தான் அவன் மதிய உணவுக்கு வரும்போது ஏடிஎம்ல பணம் எடுக்கச் சரியாக இருக்கும்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

ராவுத்தர் திரும்பி வந்தபோது உச்சி வேளை தாண்டியிருந்தது.

“”சாப்பிடப் போறியா… லேட்டாகுமா மணி?” என்று கேட்டார்.

“”எதுவும் வேலை இருக்கா பாய்?” – கேட்டேன்.

“”வேதாரண்யம் ரோட்ல உங்க பங்காளி கடை ஒண்ணு பூட்டிக் கிடக்குதா?”

“”ஆமா”

“”அதை நமக்குப் பேசிப் பாரேன்”

“”எதுக்கு பாய் அதான் இந்தக் கடை இருக்கே”

“”பையனுக்கு டாக்டர் படிப்பு முடிஞ்சு போச்சு. வரப் போறான். வந்து இங்கே கிளினிக் ஆரம்பிக்கணும்னு சொல்றான்னு சொன்னதை மறந்துட்டியா?”

“”பையன் சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு உங்களுக்கு எதுக்கு இந்த வயசுக்கு மேல் சைக்கிள் கடைன்னுதான் கேட்கிறேன்”

“”அவன் சம்பாதிச்சா அவனுக்கு. என் சாப்பாட்டுக்கு நான் சம்பாதிக்க வேணாமா”

“”என்ன பாய் நீங்க பேசறது. கையில் இருந்த கடைசிப் பணம் வரை செலவழிச்சுப் பையனைப் படிக்க வச்சிருக்கீங்க. அப்படிப்பட்டவன் உங்களுக்குச் சாப்பாடு போட மாட்டானா?”

“”போடமாட்டான்” என்றார் “நச்’சென்று.

“”பாய்?” கதறி பதறிவிட்டேன்.

“”நான் எங்க வாப்பாவுக்குச் சோறு போட்டாத்தானே என் மகன் எனக்குச் சோறு போடுவான்?”

“”என்ன பாய் சொல்றீங்க?”

“”நீ ரொம்ப காலத்துக்கு முந்தியே டவுனுக்கு வந்துட்டதனால கிராமத்துல எங்க வீட்டு நடப்பு சிலது உனக்குத் தெரியாது”

“”சொல்லுங்க பாய்”

“”என் சம்சாரத்தோட ஏற்பட்ட மனக்கசப்பில்தான் என் தகப்பனார் கோவிச்சுக்கிட்டு தம்பி வீட்டுக்குப் போனார்”

“”தெரியும்”

“”தம்பி வசதி இல்லாதவன். என் வீட்ல சாப்பிடறதாச் சொல்லிட்டு ஒரு வாரம் பட்டினி கிடந்தே அவர் செத்திருக்கார்”

“”………”

“”இப்ப சொல்லு, என் பையன் எனக்குச் சோறு போடுவான்னு எதிர்பார்க்கிறது நியாயமா? ”

எனக்குப் பேசத் தோன்றவில்லை. அதற்குள் அவரது செல்போன் ஒலித்தது. எடுத்துப் பேசினார்.

“”என்ன தகவல் பாய்?” என்று கேட்டேன்.

பணமும் பாஸ்புக்கும் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்குதாம். பையனோட பாஸ்புக்ல அவனோட போன் நம்பர் இருந்ததாலே அவனுக்குத் தகவல் சொல்லியிருக்காங்க. நான் போய் பணத்தை வாங்கிட்டு வர்றேன்.”

வெகு இயல்பாக புறப்பட்டார் ராவுத்தர்.

“”பாய் இன்னிக்கு சாயங்காலமே பங்காளியைப் பார்த்து கடையைப் பேசி முடிச்சிடறேன்” என்றேன்.

– ப.முகைதீன் சேக் தாவூது (ஆகஸ்ட் 2013)

தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *