கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 11,613 
 

‘சென்போன் ரிங்’ (கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது……)

“ஹலோ”

“வரதராஜன் சாரா”

“ஆமா, நீங்க யாரு”

“சார், நான் தான் உங்கள் வீட்டுல இருந்து 20 லட்சம் ரூபாயை திருடுனவன், நீங்க எவ்வளவு கவலையில இருப்பீங்கன்னு எனக்‍குத் தெரியும். நான் ஏன் திருடுனேன்னு ஒரு லெட்டர் எழுதி வச்சிருக்‍கேன். உங்க வீட்டு எல்.சி.டி. டி.வி.க்‍கு பின்னாடி அந்த லெட்டரை வச்சிருக்‍கேன். எடுத்து வாசிச்சுப் பாருங்க”

‘டொக்‍’

“டேய்,……டேய்,………….. டேய்…………யாருடா நீ…… டேய்………”

வரதராஜன் கைகள் நடுங்க டி.வி.யின் அருகில் சென்றார். அவரது கைக்‍கு அருகில் ஒரு மேளத்தை கொண்டு சென்றால் நடுங்கிக்‍ கொண்டிருக்‍கும் கை என்ன ராகத்தில் நடுங்கிக்‍ கொண்டிருக்‍கிறது என்பதை கண்டுபிடித்து விடலாம். பயத்தின் ராகம் இதுதான் என்று உலகத்துக்‍கு சொல்லிவிடலாம். ஆனால் இந்த நேரத்தில் யார் அத்தகைய முயற்சியை செய்வது.

கடிதத்தை எடுத்துப் பிரித்தார்.

திருநிறை வரதராஜன் அவர்களுக்‍கு…..

நேற்றுதான் பத்திரிகை ஒன்றில் உங்களைப் பற்றிய தகவல் ஒன்றைப் படித்தேன். உங்களின் சொத்து மதிப்பு 5 ஆயிரம் கோடியை தாண்டும் என்று அதில் எழுதியிருந்தார்கள். டீ குடிப்பதற்கு 2 ரூபாய் குறைவாக இருந்ததால் டீ குடிக்‍காமலேயே வீட்டிற்கு சென்ற என்னால் இந்த செய்தியை ஜீரணக்‍கவே முடியவில்லை. இரவெல்லாம் தூக்‍கம் இல்லை. 5 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதற்கு எவ்வளவு போராட வேண்டியதிருக்‍கிறது. நீங்கள் எல்லாம் தூங்கும்பொழுது கூட லட்சக்‍கணக்‍கில் சம்பாதித்துக்‍ கொண்டிருக்‍கிறீர்கள். எல்லோரும் சமமாகத்தான் பிறக்‍கிறோம், ஆனால் இந்த பணம் என்கிற விஷயம் எவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வை நம்மிடையே ஏற்படுத்தி வைத்துவிட்டது. அன்று ஒருநாள் உங்களை சரவணபவன் ஹோட்டலில் பார்த்தேன். கையால் உணவை அள்ளி வாய் வழியாகத்தான் சாப்பிட்டுக்‍ கொண்டிருந்தீர்கள். அப்படி ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை மற்ற மனிதர்களுக்‍கும் உங்களுக்‍கும். இதையெல்லாம் சரி செய்ய வேண்டும். மனிதர்களுக்‍கிடையில் இவ்வளவு பெரிய வேற்றுமைகள் எல்லாம் இருக்‍கவே கூடாது. அதனால் தான் இந்த முடிவுக்‍கு வந்து விட்டேன்.

உங்கள் வீட்டிலிருந்து 20 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்ததற்காக என்னை திருடன் என்று முடிவு கட்டி விடாதீர்கள். அதற்கு உங்களுக்‍கு எந்தத் தகுதியும் இல்லை. எப்படி என்று கேட்கிறீர்களா?

என்னுடைய மாதச் சம்பளம் ஐயாயிரத்து ஐநூறு ரூபாய். நான் தினமும் வேலைக்‍குச் செல்லும் வழியில் ஒரு பைத்தியக்‍கார பிச்சைக்‍காரனுக்‍கு 2 ரூபாய் கொடுத்து விட்டுச் செல்வேன். ஒருநாள் பணம் கொடுக்‍காமல் கடந்து செல்லும் போது என்னை அந்த பிச்சைக்‍காரன் முறைத்துப் பார்த்தான். மறுநாள் பணம் கொடுக்‍காமல் கடந்து செல்லும் போது அவனது கோபம் அதிகமானது. அதற்கு அடுத்தநாள் பணம் கொடுக்‍காமல் அவனைத் தாண்டிச் சென்ற போது, என்னை தாவிப்பிடித்து சட்டைப்பைக்‍குள் கையை விட்டு மொத்தமாக சில்லறையை அள்ளி அதில் 2 ரூபாயை மட்டும் எடுத்துக்‍ கொண்டு மீத பணத்தை என் பாக்‍கெட்டக்‍குள் போட்டுவிட்டுச் சென்றுவிட்டான். அவன் அவனுக்‍குத் தேவையான பணத்தை எடுத்துக்‍ கொண்டான். அதற்கு மேல் அவனது தேவை இல்லை என்பதால், அவனது தேவையை நிறைவேற்றிக்‍ கொள்ள பணத்தை எடுத்துக்‍ கொண்டான்.

அவன் ஏன் திருட வேண்டும், வேலை செய்து பிழைத்துக்‍ கொள்ள வேண்டியதுதானே என்றெல்லாம் சொல்லத் தோன்றும். அவன் மேல் சட்டை இல்லாமல், ட்ரவுசரும் இல்லாமல், (கோமணம் மட்டுமே கட்டியிருப்பான்) ஒரு இடத்திற்குச் சென்று வேலை கேட்டால் அவனை அடித்துத் துரத்துவார்கள். நல்ல சட்டை எங்கேனும் கடன் வாங்கி போட்டுக்‍கொண்டு சென்று வேலை கேட்டால் எந்த ஊர், யார் அப்பா, அம்மா, யாரையாவது ஜாமீன் கொடுக்‍கச் சொல் என்று கூறுவார்கள். மேலும் பலநாள் பிச்சையெடுக்‍கக்‍ கூடிய சூழ்நிலையில் இருக்‍கும் ஒருவனின் மனநிலை எவ்வளவு கெட்டுப் போயிருக்‍கும் என்று உங்களால் கற்பனை கூட செய்ய முடியாது. அவனைப் போன்ற பிச்சைக்‍காரர்களுக்‍கு உதவி தேவை. அதை இந்த சமுதாயத்தால் புரிந்து கொள்ளவே முடியாது. சமுதாயத்தைப் பொறுத்தவரை பிச்சைக்‍காரர்கள் என்பது சாபக்‍கேடு. அந்தப் பிச்சைக்‍காரனுக்‍கும் அவனது வாழ்க்‍கை ஒரு சாபக்‍கேடுதான்.

உங்களுக்‍கு சொல்லவந்த விஷயம் இதுதான். நான் பிச்சைக்‍காரனாக இருக்‍க விரும்பவில்லை. 100 கோடி மக்‍கள் வாழும் இந்தியாவில் ஒருவருக்‍கு 5 ஆயிரம் கோடி சொத்து இருப்பது நியாயமே இல்லை. நீங்கள் ஒருநாளைக்‍கு 3 வேளை தானே சாப்பிடுகிறீர்கள். உங்களுக்‍கு சுகர் என்று கேள்விப்பட்டேன். அந்த 3 வேளை உணவையும் உங்களால் நிம்மதியாக சாப்பிட முடியாது. பிறகு எதற்கு உங்களுக்‍கு இவ்வளவு பணம். நீங்கள் வசதியாக வாழ்வதற்கு ஒருவீடு, அலங்காரமான உடைகள், போக்‍குவரத்துக்‍கு சொகுசான வாகனங்கள் இவற்றையெல்லாம் நிறைவேற்றிக்‍ கொள்ள உங்களிடம் இருக்‍கும் பணத்தில் 5 ஆயிரத்தில் ஒரு பங்கு பணம் போதுமே!!!!! அப்படி இருக்‍கையில் எதற்காக இவ்வளவு பணம் உங்களுக்‍கு, இவ்வளவையும் சேர்த்து வைத்து என்ன செய்யப் போகிறீர்கள். அதனால் உங்களிடமிருந்து 20 லட்சம் ரூபாய் எடுத்துக்‍ கொண்டதை அந்தப் பிச்சைக்‍காரன் எடுத்துக்‍ கொண்டதைப் போல் நினைத்துக்‍ கொண்டு அமைதியாக இருப்பது தான் உங்களுக்‍கு நல்லது மற்றும் நியாயமானதும் கூட.

உங்களைப் போன்றவர்கள் இப்படி கண்மண் தெரியாமல் பணத்தை ஒரே இடத்தில் குவித்தால் பின் 5 ஆயிரம் ரூபாய் சம்பாரிப்பவன் ஒரு பிச்சைக்‍காரனாக திரியாமல் வேறு என்ன செய்ய முடியும். உங்களுக்‍கு பெட்ரோல் விலை உயரும் போது மனம் வலிப்பதைப் பற்றித் தெரியுமா? பால் விலை உயர்ந்த பின்னர் எத்தனை பேர் டீ குடிப்பதை நிறுத்திவிட்டார்கள் என்பது உங்களுக்‍குத் தெரியுமா? நான் அலுவலகத்திற்கு சட்டையை தேய்த்துப் போடாமல் செல்கிறேனாம் உயரதிகாரி திட்டுகிறார். அது ஏன் என்று உங்களுக்‍குத் தெரியுமா. ஒரு சட்டையை தேய்ப்பதற்கு 5 ரூபாய் கேட்கிறார்கள். கடந்த 5 முறை நான் வாங்கிய கியாஸ் விலை ஒன்று போல் இல்லை. முதல் மாதம் 320 ரூபாய், அடுத்த மாதம் 390 ரூபாய், அதற்கு அடுத்த மாதம் 420 ரூபாய், அதற்கு அடுத்த மாதம் 510 ரூபாய். இன்னும் வேறு கியாஸ் விலை உயருமாம். நான் என்ன செய்வது, இல்லை என்னைப் போன்றவர்கள் தான் என்ன செய்ய முடியும்.

5 ஆயிரம் கோடி ரூபாய் என்பது மிக அதிகம் ஐயா………….சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்களால் அதை வைத்துக்‍ கொண்டு என்ன செய்ய முடியும். உடலுக்‍கு முடியாமல் காய்ச்சல் வந்து விட்டால், கண்டிப்பாக மருத்துவரை சென்று பார்க்‍க வேண்டுமா? ஏன் அதுவாக சரியாகிவிடாதா, என்று எத்தனை முறை யோசித்திருக்‍கிறேன் தெரியுமா? நான் பேருந்தில் பயணம் செய்து பல மாதங்கள் ஆகிவிட்டது. அது ஏன் என்று காரில் மட்டுமே சென்று கொண்டிருக்‍கும் உங்களுக்‍கு எடுத்துச் சொன்னால் புரியுமா, புரியாதா என்று தெரியவில்லை.

கப்பல் விபத்துக்‍குப் பின் கடலில் தத்தளிப்பவர்களின் பதைபதைப்பு பற்றி உங்களுக்‍குப் புரியுமா? உயிர் பிழைப்போமா, பிழைக்‍கமாட்டோமா என்று தெரியமால், பற்றிக்‍கொள்ள எந்த விதமான பிடிப்பும் இல்லாமல் இருப்பவர்களின் நிலைமை பற்றி ஏதாவது தெரியுமா?

நியாயமாக ஒரு விவாதத்துக்‍கு வருவோம். யார் உண்மையான திருடன். எது உண்மையான திருட்டு என்று.

* 5000 பேர் வாழ வேண்டிய பணத்தில் நீங்கள் ஒருவர் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்‍கிறீர்களே, 5 ஆயிரம் கோடியை நீங்கள் ஒருவர் மட்டும் பதுக்‍கிக்‍ கொண்டிருக்‍கிறீர்களே. அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் வரும் திருடர்களுக்‍கும், உங்களுக்‍கும் என்ன வித்தியாசம் இருக்‍கிறது.

* நான் ஏன் அண்டாகு ஹசம், அபூகா ஹிஹூம் என்று சொல்லி உங்கள் பணத்தில் இருந்து சற்று எம்.ஜி.ஆ.ரைப் போல் எடுத்துக்‍ கொள்ளக்‍ கூடாது.

* ஒரு கல்யாண விருந்தில் யாரையும் விட மாட்டேன் என நீங்கள் மட்டும் சாப்பிட்டுக்‍ கொண்டிருந்தால் அது எப்படி. உங்களால் அப்படி எவ்வளவுதான் சாப்பிட முடியும். 5 ஆயிரம் பேர் சாப்பிடுவதற்குரிய உணவு இருந்தும் நீங்கள் மட்டும் அனைத்தையும் கவர்ந்து கொண்டு சாப்பிட்டுக்‍ கொண்டிருந்தால் அது ஒருவித திருட்டு இல்லையா?

* நான் உங்கள் வீட்டிற்குள் புகுந்த இன்று 20 லட்சம் ரூபாயை எடுத்துக்‍ கொண்டேன். ஆனால் அதைவிட வசதியாக நீங்கள் உங்கள் வீட்டுக்‍குள்ளேயே உட்கார்ந்து கொண்டு அனைவருடைய பணத்தையும் அவர்களுக்‍கே தெரியாமல் எடுத்துக்‍ கொள்கிறீர்கள். உண்மையை கூறுவதென்றால் என்னை விட ​ஹைடெக்‍ திருடன் நீங்கள்தான்.

எனக்‍கு நிறைய பிசினஸ் ஐடியாக்‍கள் உள்ளன. அந்த ஐடியாக்‍களை எத்தனை நாட்கள்தான மனதிற்குள்ளேயே புதைத்துக்‍ கொண்டு வெறுமனே சம்பளத்திற்கு வேலை செய்து கொண்டிருப்பது. உங்கள் பணத்தைக்‍ கொண்டு நான் தொழில் தொடங்கப் போகிறேன். வேண்டுமென்றால் இதில் வரும் லாபத்தில் வேறு ஒரு இளைஞனுக்‍கு தொழில் தொடங்குவதற்கு உதவி செய்து, 20 லட்ச ரூபாய் கடனை அடைத்து விடுகிறேன். ஆனால் உங்களுக்‍கு மட்டும் 20 லட்சம் ரூபாயை கொடுக்‍கவே மாட்டேன். உங்களிடம் உள்ள 5 ஆயிரம் கோடியில்தான் எத்தனை 20 லட்சங்கள் உள்ளன. பின் உங்களுக்‍கு எதற்கு இந்தப் பணம். அளவோடு பணம் சேர்த்து மகிழ்வோடு வாழ உங்களை வாழ்த்துகிறேன்.

இப்படிக்‍கு தங்கள் உண்மையுள்ள

எக்‍ஸ் மேன்

Print Friendly, PDF & Email

1 thought on “எக்‍ஸ் மேன்

  1. அருமை, நீங்கள் பல பல உயரங்களை தொட வாழ்த்துகள், ஒரு சிந்தனைவாதி எவ்வாறு மக்களுக்கு உண்மையை அரசிடம் அடி வாங்காமல் சொல்ல முடியும் என்பதற்கு உங்கள் கதைகள் ஓர் நல்ல வழிகாட்டி… வாழ்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *