கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 15,779 
 

‘சங்கரு ! கொஞ்சம் தேடிக்குடேன். இங்கதான் எங்கேயாச்சும் விழுந்திருக்கும்” மகனிடம் கெஞ்சினாள் உலகம்மை.

‘உனக்கு இதே சோலிதான். இதுக்குதான் இன்னொன்னு கைவசம் வச்சுக்கோன்னு சொல்றேன். கேக்கிறியாமா! நீ” சலிப்போடு சொல்லிவிட்டு சட்டையை மாட்டியபடி, வெளியே கிளம்பி விட்டான சங்கர்.

‘காலங்காத்தால எங்கக் கிளம்பிட்ட?”

‘டியூசன் சாரு வீட்டுல இன்னைக்கு வெள்ளையடிப்பு. கூடமாட நிக்கதுக்கு வர சொல்லியிருக்காரு. மதியானம் சாப்பாடு சாரு வீட்டுலதான். கோமுவும் கூட வர்றான்”. சொல்லிவிட்டு சைக்கிளில் சிட்டாகப் பறந்தான் சங்கர்.

‘ பள்ளிக்கூடம் லீவுவிட்டாச்சுன்னா, வீட்டுல கொஞ்சநேரம் இருக்கானா? அப்பனமாதிரியே ஊருக்குத் தொண்டூழியம், பன்றதுன்னா முந்திக்கிட்டுப் போறத பாரு’ மனதுக்குள் நொந்தபடி மீண்டும் ‘அதை’ தேடத் தொடங்கினாள்.

‘உலகு! ”பக்கத்து வீட்டு தெரசா அக்காவின் குரல் கேட்டது.

‘வேலையா இருக்கியா?”

‘என்ன சொல்லுங்க?”

‘ஒரு நிமிஷம் வீட்டுக்கு வந்துட்டுப் போயேன் கொஞ்சம் அவசரம்”

‘இந்தா வாறேன்”

‘இந்த நேரம் பார்த்து கூப்பிடுறாங்களே. என்ன செய்ய? ‘அது இல்லாம எப்படி போறது’ பரபரப்பாகத் தேடத் தொடங்கினாள். ‘அவன் சொன்னமாதிரி இன்னொன்னு வச்சிக்கிடனும் போல!’ இதை நினைக்கும் போது, கூடவே, ‘ச்சே! என்ன பொழப்பு இது’ என்ற கழிவிரக்கமும் சுட்டது. எதற்கும் இருக்கட்டும் என்று, மூலையிலிருந்த, அழுக்குத் துணி வாளியை எட்டிப் பார்த்தாள். நினைத்தது போலவே, மேலாக, இருந்த சேலையின் மேல் ‘அது’ தெரிந்தது. எடுத்து கழுத்தில், மாட்டிக் கொண்டாள்.

புருஷன் அய்யப்பனோடு, சண்டை போடும் போதெல்லாம், உச்சகட்ட நிகழ்வாக அது நிகழும் போதையில் கெட்ட வார்த்தையில், ஏசிக் கொண்டே இருக்கும் அவனின் வாயை அடைக்க, ‘ஓ’ வென்று பெருங்குரலில் வெடித்து அழுவாள். அடுத்த கட்டமாக, கழுத்தில் கிடக்கும் தாலிகயிறைக் கழற்றி, அவன் நின்றிருக்கும் திசை நோக்கி, வீசி எறிவாள். அதற்குப்பின் தான் அவன் அடங்குவான். இதுவரையில், அழுக்கேறிய மஞ்சள் கயிற்றில், தங்கமா, பித்தளையா என்று தெரியாத ஒரு நிறத்தில், சொக்கரும் மீனாட்சியும் சோடியாயிருக்கும், அந்தத் தாலி எனும் வஸ்து, ஒரு இருபது, முப்பது தடவையாவது கீழே வீசி எறியப்பட்டு விழுந்திருக்கும்.

புருஷனின் உயிர் தாலியில் தான் உறைந்திருப்பதாக நம்பும் அய்யப்பனின் புத்தி பெண்டாட்டியின் இந்த செய்கைக்கு, அவமானப்பட்டு, அதிர்ச்சியுறும். இந்த அதிர்ச்சியால், அவளிடம் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்று தெரிந்திருந்தும் அய்யப்பன் தன் முகத்தில், வலுக்கட்டாயமாக அதிர்ச்சியை வரவழைப்பான். ‘ஒவ்வொரு முறையும் நீயெல்லாம் ஒரு பொம்பளையா?’ என்ற அர்த்தத்தில் ஒற்றைப் பார்வையை வீசிவிட்டு அகன்று விடுவான். அடித்த சரக்குக்கு அர்த்தமில்லாமல், போதை பாதியாகக் குறையும். வெறுப்பில், வீட்டிலிருந்து வெளிநடப்பு செய்வான். மகன் சங்கருக்கு இதெல்லாம் பழகிப் போன விஷயம். அவன் இதுமாதிரியான சந்தர்ப்பங்களில் ஒரு புத்தகத்தை தூக்கிக் கொண்டு, நண்பன் கோமுவின் வீட்டிற்குப் போய் விடுவான். பக்கத்து வீட்டு தெரசா அக்கா, மீண்டும் கூப்பிட்டாள்.

‘உலகு’ சோலியாயிருக்கியோ ?”

‘அதெல்லாமில்ல. இப்ப வந்துட்டேன்.”

உலகம்மைக்கு தெரசா அக்காதான், சகலமும். அந்த ஊர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியாக வேலைப் பார்ப்பவள். கண் நிறைந்த புருஷன். இரண்டு பெண் குழந்தைகள். புருஷனுக்கு ஊர், ஊராய் சுற்ற வேண்டிய அரசு வேலை நெடுஞ்சாலைத்துறையில். இன்று மூத்தப் பெண், மதியைப் பெண் பார்க்க வருகிறார்கள்.

‘என்னக்கா ரொம்ப அவசரமா கூப்பிட்டீங்க?”

‘ஆமா உலகு. இன்னைக்கு மதியை பொண்ணு பார்க்க வரப்போறதா போன் வந்துச்சு”

‘யாரு? அந்த சுத்தமல்லி வாத்தியார் வீடுன்னு சொன்னீங்கள்லா அவுகளா?”

‘அதான் சாதகம் பொருந்தலியே! இது வேற எடம். ராஜபாளையத்திலயிருந்து. அதுக்குதான் கொஞ்சம் கடைக்குப் போயிட்டு வரணும்.”

‘கொஞ்ச நேரத்துல சங்கரு வந்துடுவான். அனுப்பட்டா?”

‘இல்ல உலகு. பதினோரு மணிக்கெல்லாம் இங்க வந்துடுறாங்களாம். நீயே போயிட்டு வந்துடேன். சாமானெல்லாம் கொஞ்சம் பார்த்து வாங்கணும்.

‘சேரி! சொல்லுங்க” தெரசா அக்கா அடுக்கியதை, கவனமாக கேட்டுக் கொண்டாள். பையையும், பணத்தையும் வாங்கிக் கொண்டு பஜாருக்கு கிளம்பினாள்.

தெரசா அக்கா, உலகம்மைக்குக் கூடப் பிறக்காத சகோதரி. இவள் கஷ்டப்படும் போதெல்லாம் ஆறுதல் சொல்லித் தேற்றுவாள். அவ்வப்போது, ஐம்பது, நூறு என்று கைமாத்துக் கொடுப்பாள். வீட்டில் பண்டம், பலகாரம் எது செய்தாலும் கொடுத்தனுப்புவாள். உலகு உடம்புக்கு முடியாமல் படுத்து விட்டால், கஞ்சியும், சங்கருக்கு சாப்பாடும் கொண்டுத் தருவாள். முக்கியமாக புருஷனுக்கும், பெண்டாட்டிக்கும், சண்டை மூளும் போது வந்து பிரித்து விடுவாள். ‘ஏய் என்னப்பா நீ! என்று உரிமையோடு அய்யப்பனை அதட்டி, அவனைக் கட்டுப் படுத்துவாள். அவனும், தெரசா அக்கா, அவள் புருஷன் அருணாசலம் அண்ணாச்சி ரெண்டு பேரின் வார்த்தைக்கு கொஞ்சம் மரியாதை கொடுப்பான்.

ஊரில், அய்யப்பனின் அப்பாவுக்கு நல்ல பெயரிருந்தது. ஆற்றுக்கு அந்தப் பக்கம் வயலும், தோட்டமும் உண்டு. அந்த வருமானத்தில், செழிப்பாகவே வளர்ந்தார்கள், அய்யப்பனும், அவன் அக்காவும், அண்ணனும.; இவன் கடைசிப் பிள்ளை என்பதால் ரொம்பச் செல்லம். இவனுக்கு பதினோரு வயசு இருக்கும் போது, அப்பா இறந்து விட்டார். படிப்பு ஏறவில்லை. ஒன்பதாம் வகுப்புத் தேறவில்லை. படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு ஊர் சுற்ற ஆரம்பித்தான். கெட்ட சகவாசத்தில் அத்தனைப் பழக்கமும் தொற்றிக் கொண்டது.

உள்@ரிலிருந்த, சித்தப்பாக் குடும்பமும், சென்னைக்குச் சென்றுவிட அவனைப் கேட்பதற்கு ஆளில்லாமல் போனது. அவன் தாத்தா, சாதியில் ஒரு பெரிய மனிதர் என்;பதால், ஊர்ப் பெரியவர்கள் சிலர், அவனுக்குப் புத்தி சொல்லித் திருத்தப் பார்த்தார்கள். நடக்கவில்லை. அண்ணன் ஒழுங்காக படித்தான். அவனுடைய கல்லூரி மேற்படிப்புக்கு, வயலும் அக்காவின் கல்யாணத்திற்கு தோட்டமும் கைமாறிவிட, எஞ்சியது அவர்கள் குடியிருந்த வீடு மட்டும் தான்.

வருமானத்திற்குத் தட்டுப்பாடு. படிப்பு முடிந்த கையோடு, அண்ணனுக்கு திருச்சியில் ஒரு நல்ல வேலை கிடைக்க, அங்கு சென்று தங்கிக் கொண்டான். அதன் பிறகு பரவாயில்லை. மாதாமாதம் அம்மாவின் பெயருக்கு எட்டாயிரம் சுளையாக அனுப்பி வைத்தான். அய்யப்பனின் பாடு கொண்;டாட்டமானது. அம்மாவை, மிரட்டி, ஏமாற்றி, பணத்தைப் பிடுங்கிக் கொள்வான். அவன் ஆட்டமெல்லாம் ஒரு வருடம் தான். மனைவி வந்ததும் எட்டாயிரத்தை நாலாயிரமாக்கிக் கொண்டான், அண்ணன். அடுத்த ஒரு வருஷத்தில் ஒரு பெண் பிள்ளையும் பிறந்து விட, நாலாயிரம் இரண்டாயிரமானது. அந்தப்பணம், அய்யப்பனுக்கும், அவன் அம்மாவுக்கும், சாப்பாட்டுக்கே தொட்டுக்கோ, தொடைச்சுக்கோ என்றானது.

பணத்திற்காக, வேலைக்குப் போவது என்பதையெல்லாம் அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. குளத்துப் பிள்ளையார் கோவில் திண்டில் உட்கார்ந்து, தீவிரமாக யோசிக்கத் தொடங்கினான். ஒரு வார யோசனையில் ஒரு வழி பிறந்தது. அம்மா தன் தாய் வீட்டுச் சீதனமாக, ஐந்து பவுனில், ஒரு சங்கிலியை ரொம்பப் பத்திரமாக பாதுகாத்து வருவது, அவனுக்கு ஞாபகம் வந்தது. இவனின் தற்கொலை மிரட்டலுக்குப் பயந்த அந்தச் சங்கிலி, அடகுக் கடைக்குள் பதுங்கியது. அடுத்து வந்த ஆறுமாதம், எந்தக் கவலையுமில்லாமல் வாழ்க்கையை அனுபவித்தான்.

அம்மாதான் கவலையில் இத்துப் போயிருந்தாள். கூட்டுக் குடும்பத்தில், வாழ்க்கைப்பட்டுப் போன அக்காவுக்கு எதையும் கண்டு கொள்ள நேரமில்லை. வருடத்திற்கொருமுறை வந்து பார்ப்பதை மட்டுமே, தன் தாய்க்கு செய்யும் கடமையாக நினைத்திருந்தான் அண்ணன்.

அய்யப்பனை, சரியாக்க, அம்மாவுக்கு, சமுதாயத்தின் வழக்கமான பொது யோசனை ஒன்று கைக்கொடுத்தது ‘கால்கட்டு ஒன்னு போட்டா எல்லாம் சரியாயிடும்’ என்று முடிவுக்கு வந்தாள். பெரிய பிள்ளையிடம் சொன்னாள். உள்@ரில் அய்யப்பன் விலை போவது கஷ்டம் என அப்பட்டமாகத் தெரிந்ததால், வெளியூரில் ஒரு ஏமாளிக் குடும்பத்திற்கு சொந்தக்காரர்கள் மூலமாக வலை விரித்தார்கள். அதில், கோவில்பட்டியிலிருந்த உலகம்மையின் குடும்பம் சிக்கியது.

உலகு நான்கு பெண்களில் மூத்தவள். பழக்கடை வைத்திருக்கும் அவள் அப்பாவுக்கு, மூத்தவளை எப்படியாவது கரையேற்றி விடவேண்டும் என்கிற கவலை இருந்ததே தவிர, வேறு எதையும் விசாரிக்கவில்லை. உலகம்மையின் தலையெழுத்து அவளை திருமதி. அய்யப்பன் ஆக்கியது. மூன்று பவுன் நகை போட்டு, மருமகளாக, அய்யப்பன் வீட்டில் அடி எடுத்து வைத்தாள்.

மொத்தம் தொன்னூறு நாள், அய்யப்பன் நல்லப் பிள்ளையாக நடந்து கொண்டான். பிரம்ம பிரயத்தனத்தில் குடிப்பதைத் தள்ளிப் போட்டிருந்தான். ஏனென்றால் குடிப்பதற்கு அவன் ஐந்து கி.மீ சைக்கிளில் பயணம் செய்து, பக்கத்து ஊருக்குப் போக வேண்டும். புதுப் பெண்டாட்டியிடம் காரணம் சொல்லி சமாளிப்பது கஷ்டம். ஆனால் அவன் அதிர்ஷ்டம். இரண்டொரு மாதங்களில் உள்@ரிலேயே புதிதாக ஒரு மதுப்பானக் கடை திறந்து விட்டார்கள். எல்லாம் பெண்டாட்டி வந்த ராசி தான் என்று மனது குதூகலமானது.

மகன் சங்கரநாராயணன் பிறந்ததிலிருந்து, பொறுப்புகளும் பிரச்சனைகளும் கூட அவர்களுக்குள் நித்திய சண்டை ஆரம்பமானது. உலகுவின் அப்பா, போட்டனுப்பிய தங்கம் ஆல்கஹாலில் முழுகி, கரைந்து போனது. நாளாக ஆக, இவனின் போதையும், அவளின் வெறுப்பும் அதிகரிக்க, வாய்ச்சண்டை, அடிதடியாக மாறியது. இந்தக் கவலையிலேயே, இத்துப் போயிருந்த, அய்யப்பனின் அம்மா சீக்கிரம் செத்துப் போனாள்.

ஏச்சும், அடியும் பொறுக்க முடியாத சந்தர்ப்பங்களில் உலகுக்கு கழுத்துக்கயிறு கணக்கத் தொடங்கியது. அவனையே, கொத்தாகப் பிடித்து சுழற்றி எறிவதாக நினைத்துக் கொண்டு, கழுத்திலிருந்கும் தாலிக்கயிற்றை கழற்றி, வீசுவாள். ஒரு சில நேரம் அது அவன் முகத்தைப் பதம் பார்த்து விடும.; மற்றபடி கதவிடுக்கிலோ, உத்தரத்திலோ, மேசைக்கு அடியிலோ சென்று விழும்.

கோபம் தணிந்து சுயநினைவுக்கு வரும் போது, அழுகையோடு அழுகையாக, அதைத் தேடிப் பிடித்து, கண்;களில் ஒற்றிக் கொண்டு, கழுத்தில் மாட்டிக் கொள்வாள்.

வெயில் மண்டையைப் பிளந்தது. வாங்கிய சாமான்களை, தெரசா அக்காவிடம் கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்தாள். ஒரு சொம்புத் தண்ணீர், கடகடவெனக் குடித்தாள். ஆனாலும், நாக்கு வறட்டியது. ‘ தெரசாக்கா வீட்டிலிருந்து ஐஸ் கட்டியும், எலுமிச்சப்பழமும் கேட்டு வாங்கிட்டு வரலாம்’ என்று நினைத்தபடி வெளியே வந்தாள். அய்யப்பன் வந்து விட்டான். சாராய நெடி!.

எனக்கெல்லாம் சூஸ் ஒரு கேடா! சலிப்போடு வீட்டுக்குள் போய்விட்டாள். பின்னாடியே, தள்ளாடி வந்தவன், ஆரம்பித்து விட்டான்.

‘ஏய்! நேத்தே அண்ணன் அனுப்பிச்ச மணியார்டரு வந்துடுச்சாம்ல. தபால்கார அண்ணாச்சிய வழியில் கண்டு, கேட்டுக்கிட்டுத்தான் வாறேன்.’

‘ஆமா! என்ன இப்ப? இங்க வீட்டுல செலவா இல்ல? போய் ரேஷன்ல மண்ணெண்னை ஊத்துதானான்னு பார்த்துட்டு வாரும்! இந்த மாசம் ஊருப்பட்ட செலவிருக்கு. சங்கருக்கு நோட்டு, புஸ்தகம் வாங்கணும், எனக்குக் கண் ஆஸ்பத்திரிக்கு போகணும். அத்தைக்கு திதி வருது. சாமி கும்பிடணும் தெரியுமில்ல?”

‘குடுக்கப் போறியா இல்லையா? அது எங்க அண்ணன் அனுப்பிச்சப் பணம்.”

‘ஓஹோ! உங்கண்ணன் அனுப்புற பணத்துல தான் நாம, சாப்பிட்டு சம்சாரம் பண்ணுதோமாக்கும்? நான் காலு வலிக்க, சட்டைத் தைச்சு, பொழப்ப ஓட்டுறேன். தெரியுமா உமக்கு?”

‘என்ன வாயி ரொம்ப நீளுது”

அதற்கு மேல் வாய்ப்பேச்சில் நம்பிக்கை இழந்தவனாக, தன் கைத்திறமையைக் காட்ட ஆரம்பித்தான். வலி பொறுக்க முடியாமல், டிரங்கு பெட்டியில், சேலைகளுக்கடியில், மறைத்து வைத்திருந்த சுருக்குப்பையை எடுத்து, அவனிடம் வீசி எறிந்தாள். இந்தமுறை, தாலிக்குப் பதிலாக சுருக்குப்பை, அய்யப்பன் முகத்தில் விழுந்தது.

சாயங்காலம் வீட்டிற்கு வந்த சங்கர், முகமெல்லாம் வீங்கிப் போயிருந்த அம்மாவைப் பார்த்ததும், நடந்ததை யூகித்துக் கொண்டான்.

‘அந்த ஆள பஸ் ஸ்டாண்டில பார்த்தேன். எங்கப் போறாரு?”

‘எங்கயும் போய்த் தொலையட்டும்”

நன்றாக இருட்டியிருந்தது. உலகம்மா அடுக்களைப் பக்கமே போகவில்லை. வாசல் திண்ணையில் வானத்தைப் வெறித்தபடி உட்கார்ந்திருந்தாள். தன் வீட்டு, மொட்டை மாடியிலிருந்து இவளைக் கவனித்த தெரசா அக்கா, அங்கே வந்தாள்.

“ஏய்! என்ன நீ? ராத்திரி நேரத்துல இப்படி தெருவாசல் திண்ணையில உட்கார்ந்து அழுதுக்கிட்டிருக்க. வா! உள்ளப் போலாம்” அவள் கையைப் பிடித்து, வீட்டுக்குள் அழைத்துப் போனாள். என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிப்பது தெரசா அக்காவுக்கு கஷ்டமானதாக இல்லை.

‘அய்யப்பன் எங்க?”

‘தெரியலக்கா”

‘அண்ணாச்சி வரட்டும். அவுகக்கிட்டச் சொல்லி, கொஞ்சம் கண்டிச்சு வைக்கச் சொல்றேன். சங்கிலிமாடன்கிட்ட குறிகேட்டுட்டு வந்தோம்ல. வர்ற ஆவணிக்கப்புறம், உம் பிரச்சனையெல்லாந் தீருமுன்னு சொன்னாருல்ல?. நம்பிக்கையா இரு உலகு”

‘இந்த மனுஷன் எங்கயாவது போய்த் தொலைஞ்சாதான் எம் பிரச்சனையெல்லாந் தீரும்“

‘‘அப்படியெல்லாம் சொல்லத! அவன் திருந்திடுவான்’”

‘எனக்கு அந்த நம்பிக்கையே இல்ல. இன்னிக்கு காலைல, பொழுது விடிஞ்சதும் ஆரம்பிச்சாரு. ஓயவேயில்ல. இந்தா, இப்ப அந்த பாவி கடைக்குப் போயாச்சு. வரும் போது பேயாடிட்டுத்தான் வருவாரு”

‘சாப்பிட்டீங்களா இல்லையா?” தெரசா அக்கா பேச்சை மாற்றினாள். பசியில் செவி அடைத்திருந்த சங்கர், முந்திக் கொண்டு பதில் சொன்னான்.

‘இல்ல அத்த!”

‘வீட்டுல மாவு இருக்குது. நான் போயி இட்லி ஊத்திக் கொடுத்தனுப்புறேன். சாப்பிட்டுட்டு ரெண்டு பேரும் நிம்மதியாப் படுத்துத் தூங்குங்க. அவன் வந்தாப் பாத்;;;துக்கலாம்.

அடுத்த அரை மணி நேரத்தில், ஆவிப் பறக்கும் இட்லியும், மிளகாய்ப் பொடியும் வந்தது.

‘உனக்கு எத்தனை இட்லி வைக்கட்டும்?” சங்கர் கேட்டதற்கு, வேண்டாம் என்பதாகத் தலையாட்டினாள், உலகு அவனுக்கு அதற்;குமேல் பொறுமையில்லை. அரக்கப்பரக்கச் சாப்பிட்டான். அசதியில் சீக்கிரமே தூங்கி விட்டான். இதுவரை பட்ட கஷ்டங்களெல்லாம், மனசுக்குள் படமாக ஓட, பிள்ளை தூங்குவதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மின் விளக்கைக்கூட நிறுத்தாமல் இருந்த இடத்திலேயே தூங்கிப் போனது, எதிர் வீட்டு சேவல் கத்திய போது தான் அவளுக்கு உரைத்தது. பொழுது நன்றாக விடிந்து விட்டிருந்தது. ‘அப்ப ராத்திரி முழுக்க இந்த மனுஷன் வீட்டுக்கு வரவேயில்லையா? தண்ணி அதிகமர் போயி கடையிலயே படுத்துருப்பாரோ? சங்கர் எழுந்திருச்சதும் பார்த்துட்டு வரச் சொல்லனும்’. வாசல் பெருக்கித் தெளித்துக் கோலம் போட்டாள். ‘ஸ்டவ்வுல மண்ணெண்ணைய் கொஞ்சந்தான் இருக்கும். காப்பிக்காவது ஒப்பேறுமா தெரியலியே’ சலிப்போடு பற்ற வைத்தாள்.

‘உலகு அக்கா!”

வாசலில் தெரசா அக்காவின் இளைய மகள் சாந்தியின் குரல் கேட்டது.

‘என்ன சாந்தி”

‘அம்மா உங்கள உடனே வரச் சொன்னாங்க” அவள் ‘உடனே’ என்பதை அழுத்திச் சொன்னதிலிருந்தே, ஏதோ அவசரம் என்பது அவளுக்குப் புரிந்தது. பற்ற வைத்த அடுப்பை அணைத்து விட்டு தெரசா அக்கா வீட்டுக்குப் போனாள். வீட்டு முற்றத்திலேயே நின்றிருந்த தெரசா ‘உலகு’ என்று இழுத்தபடி இவளைக் கூப்பிட்டாள். கண்கள் கலங்கியிருந்தன. ‘அண்ணாச்சிக்கு எதுவுமா?’ மனது பதறியது உலகுக்கு.

‘என்னாச்சுக்கா”

‘இப்ப, ஊருலயிருந்து உங்க மதினி போன் பண்ணிச்சு. அய்யப்பன் அங்கேதான் இருக்கானாம்”.

‘அப்ப, நேத்து ராத்திரி அங்கதான் போய் தங்கியிருக்காரா”

‘ம். ஆனா அவனுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரியில சேர்த்துருக்காங்களாம்”

‘என்ன சொல்லுதீக? ஆஸ்பத்திரியில சேர்க்கிற அளவுக்கு என்ன வந்துச்சு?” சொல்லி முடிக்கும் போதே, அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

‘‘அக்கா! மதினிக்கு ஒரு போன்போட்டுக் குடுங்களேன்’’ கைபேசியை வாங்கிக் கொண்டாள்.

‘மதினி! நான் உலகு பேசறேன். என்னாச்சு?”

‘‘உலகு நீ இப்ப எதுவும் கேட்காத. உடனே கௌம்பி ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு வந்துடு” ‘மறுமுனையில் மதினி பதட்டமாகப் பேசினாள். செல்லம்மா தன் கணவனுக்குத் தகவல் சொல்லிவிட்டு சங்கரையும், உலகுவையும் கூட்டிக் கொண்டு பஸ் ஏறினாள்.

மருத்துவமனை வாசலில் மதினியின் கணவர் நின்று கொண்டிருந்தார்.

‘அண்ணே! என்னாச்சு அண்ணே?”

‘ஒண்ணுமில்லம்மா வா!” அவர்களை அய்யப்பன் இருந்த அறைக்குக் கூட்டிக் கொண்டுப் போனார்

அய்யப்பன் நேற்று மாலையில் அளவுக்கு அதிகமாக குடித்த நிலையில் தன் வீட்டுக்கு வந்ததையும், அவனை நன்றாக ஏசி, வீட்டு மொட்டை மாடியில் படுக்க வைத்ததையும், காலையில் எழுப்பி விட போகும் போது அவன், வாய் கோணியபடி மயக்க நிலையில் கிடந்ததையும், உள்@ர் டாக்டரிடம் காண்பிக்க அவர் ஏதோ ஒரு ஊசி மட்டும் போட்டுவிட்டு உடனே ஹைகிரவுண்டுக்கு கொண்டு போகச் சொன்னதையும், அவசர ஊர்தி பிடித்து இங்கு வந்து சேர்ந்ததையும், அழுகையும் பேச்சுமாக சொல்லி முடித்தாள் மதினி.

‘அதுக்குப் பெறவு கண்ணே தொறக்கல, உலகு!. மூளையில ரத்தக் கசிவு ஆயிடுச்சாம்”.

‘சரி பண்ணிறலாம்ல மதினி?” உலகு பரிதாபமாகக் கேட்டாள்.

‘ஐ.சி.யு ல உள்ள யாரையும் விட மாட்டாங்க. இந்த கண்ணாடி வழியாப் பாரு”

உலகு பார்த்தாள். இதயம் கண்களுக்கு ஏறி துடித்தது. ஏதேதோ கருவிகள் மூக்கிலும் வாயிலும் சொருகப்பட்டு இருக்க, அய்யப்பன் கண் மூடிக் கிடந்தான். ‘அய்யோ! நா என்னச் செய்வேன். திடீருன்னு இப்படி குண்ட தூக்கிப் போட்டுட்டீகளே” அரற்றியபடியே கீழே ‘தொப்’பென்று உட்கார்ந்தாள். சங்கரும் உள்ளே எட்டிப் பார்த்தான். அந்தப் பக்கமாக வந்த செவிலி ஒருவரிடம் தெரசா அக்கா விவரங்களைத் கேட்டு தெரிந்து கொண்டாள்.

‘அவங்க அண்ணனுக்கு தகவல் சொல்லியாச்சாம்மா?

‘சொல்லிடோம்ங்க. இன்னிக்கு ராத்திரி வரைக்கும் வருவாரு. ரெண்டு பேரும் வேலைக்கு போற ஆளுங்க இல்லியா?”

‘ஆப்ரேஷன் பண்ணினா பொழைக்கறதுக்கு வாய்ப்பு இருக்குதாம், ரிப்போர்ட் எல்லாம் வந்ததும் உடனே முடிவு பண்ணிடலாம்னு டாக்டர் சொன்னாராம்”;. அங்கு வந்து விசாரித்த ஆறுமுகம் அண்ணாச்சியிடம், தெரசா அக்கா கூறினாள். உலகுக்கு எதுவுமே விளங்கவில்லை. ‘நேத்து வரைக்கும் அவ்வளவு ஆட்டம் போட்ட மனுஷன், இப்படி நெனைவில்லாமக் கெடக்காரே. போய்த் தொலைஞ்சா தான் நிம்மதின்னு சொன்னனே. அதுதான் இந்த கதியோ?’ மனதுக்குள் மருகினாள்.

‘உங்க தம்பி நல்ல படியா வந்துடணும் மதினி! இந்தப் பயலுக்கு அப்பா வேணும். பாழாப்போன குடி மட்டும் இல்லைன்னா இவகள மாதிரி நல்லவுக கிடையாது. ஊருக்கெல்லாம் ஓடி ஓடி உதவி செய்வர்களே!”, உலகு புலம்பிக் கொண்டே இருந்தாள். தெரசா அக்காவுக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘எப்போதும் கரித்துக் கொட்டிக் கொண்டேயிருக்கும் இவளா இவ்வளவு வேதனைப்படுகிறாள்?’ என்று.

உலகம்மையின் வேதனையை வேடிக்கைப் பார்த்த படியே சாயங்காலச் சூரியன்; மறைந்து போனான். இரவு எட்டு மணியளவில் மருத்துவர் வந்து பரிசோதித்து விட்டுப் போனார். எதுவும் சொல்லவில்லை. பதினோரு மணியிருக்கும், அண்ணன் குடும்பம் வந்து சேர்ந்தது. பேச்சும், புலும்பலுமாக எல்லோரும் அந்த வரண்டாவிலேயே தூங்கிப் போனார்கள். உலகு மட்டும் தூங்கவே இல்லை. அய்யப்பனின் அறை கதவையே வெறித்துக் கொண்டிருந்தாள். விடிந்து விட்டது. ஆறுமுகம் அண்ணாச்சி எல்லோருக்கும் டீ வாங்கி வந்தார். உலகுவையும் கட்டாயப் படுத்தி குடிக்க வைத்தார்கள். காலை ஒன்பது மணிக்கு மருத்துவர் வந்து மீண்டும் பரிசோதித்தார்;. அறையிலிருந்து வெளியே வந்த செவிலி அந்தச் செய்தியை சொல்லிவிட்டுப் போனாள்.

‘அவர் பிழைக்கறது கஷ்டம்ங்க. அவர் மூளையோட இயக்கம் நின்னுடுச்சு. இதயம் மட்டுந்தான் துடிச்சுகிட்டுருக்குதாம். டாக்டர் ரிப்போர்ட் எழுதிட்டாரு. நீங்க வீட்டுக்குக் கொண்டு போறதாயிரந்தா போகலாம்”.

அவ்வளவுதான்! அந்த மருத்துவமனையே அதிரும்படி கத்தினாள் உலகு. ‘அய்யோயோ யோ . . . . .”.

எல்லோருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அய்யப்பனின் அண்ணன், அறையில் இருந்து வெளியே வந்த அந்த மருத்துவரிடம் ஏதோ கேட்டான்.

‘டாக்டரு என்ன சொல்லுதாப்ல?” ஆறுமுகம் அண்ணாச்சி அவனிடம் விசாரித்தார்.

‘எங்க தூக்கிட்டுப் போனாலும், ஒன்னும் முடியாதாம். இதயத் துடிப்பும் குறைஞ்சுகிட்டே வருதாம். உசிரு அடங்குற வரைக்கும் இங்க வச்சுப் பாத்திட்டு எடுத்துட்டுப் போகச் சொல்றாப்ல.”

அடுத்த அரை மணி நேரம் குழப்பமும், மௌனமுமாக கரைந்தது. ஏறக்குறைய அரை மயக்கத்தில் தரையில் சுருண்டு கிடந்த உலகம்மையின் காதில் எல்லாம் விழத்தான் செய்தது. அப்போது அந்த இடத்திற்கு வெள்ளையும், சொள்ளையுமாக ஒரு மனிதர் வந்தார். நிலைமை தெரியாமல் ரொம்ப நிதானமாக ஆறுமுக அண்ணாச்சியிடம் அய்யப்பனைப் பற்றி விசாரித்தார்.

‘அய்யப்பன் எப்படியிருக்காப்ல?. இங்க திருநெல்pவேலிக்கு ஒரு சோலியா வந்தேன். அய்யப்பனுக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டேன். சரி அப்படியே பாத்துட்டுப் போலாமேன்னு வந்தேன்”.

‘இவாள் யாரு?”

மதினியின் கணவர் அந்த மனிதரை அறிந்து கொள்ள முயன்றவராக ஆறுமுகம் அண்ணாச்சியிடம் கேட்டார்.

‘இவரு நம்ம ஊருல இருக்கிற ஒயின்ஷாப் ஓனரு. அண்ணாச்சிக்கு, அய்யப்பன் ரொம்பப் பழக்கமுல்லா! அதான் பார்க்க வந்திருக்காப்ல”. ஆறுமுகம் சற்று சத்தமாகவே குத்தல் தொனியில் சொன்னார். கண்மூடிக் கிடந்த உலகுவின் காதில் இது விழுந்ததுதான் தாமதம், வாரிச் சுருட்டி எழுந்தாள். ஆவேசமாக அந்த மனிதரை நோக்கி ஓடினாள். கொத்தாக அவர் சட்டையைப் பிடித்துக் கொண்டாள்.

‘நீயும் உங் குடும்பமும், நல்லா உடுத்தி, திங்கறதுக்கு என் குடும்பத்த சீரழிச்சிட்டியேடா!.” என்று கத்தினாள். அந்த மனிதர் சுற்றும் முற்றும் பார்த்தார். அவமானத்தில் அவர் முகத்தில ஈ ஆடவில்லை.

‘இதெல்லாம் ஒரு பொழப்புன்னு பொழைக்கிறியா? ச்சீ!. ஆயிரம் தொழில் இருக்கே. ஏண்டா இப்படி சாராயம் வித்து எல்லாரையும் சாகடிக்கிற?” விம்மலும்,கேவலுமாக வார்த்தைகள் வந்து விழுந்தன. அய்யப்பனின் அறைக்கதவு திறந்தது. வெளியே வந்த ஒரு மருத்துவ உதவியாளர், ‘சார்! முடிஞ்சிடுச்சு. பார்மாலிட்டி எல்லாம் முடிச்சிட்டு, காச கட்டிட்டு பாடிய எடுத்துட்டு போகலாம். பிணஊர்தி வண்டி வேணும்னா கீழ நாலாம் நம்பர் ஆபிஸ்ல விசாரிச்சுகோங்க”, என்று சொன்னார். இதைக் கேட்டதும் அந்த இடத்தை அழுகை ஆக்கிரமித்தது.

அந்த கள்ளுக்கடை உரிமையாளர் சூழ்நிலையின் வெப்பம் உணர்ந்தவராக மெதுவாக அந்த இடத்தை விட்டு நகர முயன்றார்.

‘நில்லுடா!”, அதட்டலும், ஆத்திரமுமாக உலகு!.

‘இந்தா! நீ பண்ணுத சேவைக்கு கூலியா இத வச்சுக்க!“ கழுத்தில் கிடந்த கயிற்றை கழற்றி, சுழற்றி வீசினாள். அது, அந்த ‘சுமங்கலி ஓயின்ஸ்’ உரிமையாளரின் வலது கண்ணைப் பதம் பார்த்து விட்டு சற்று தள்ளியிருந்த சக்கர நாற்காலியின் கம்பிகளில் சுற்றிக் கொண்டது.

இனி உலகம்மைக்கோ, சங்கருக்கோ, அதைத் தேடும் வேலை இருக்கப் போவதில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *