உறவு மட்டுமா..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 17, 2018
பார்வையிட்டோர்: 8,256 
 

மார்கழி மாதமாகையினால் மாலை ஆறு மணிக்கெல்லாமே இருட்டிக் கொண்டு வந்தது. திராபையான மஞ்சள் ஒளியை சிந்திக் கொண்டே அந்த இருட்டை விரட்டி அடிக்க கிராமப் பஞ்சாயத்தின் விளக்குகள் பகீரதப் ப்ரயத்தனம் செய்துக் கொண்டிருந்தன. காற்றின் வீச்சத்துக்குத் தகுந்த மாத்¢ரி காவிரியும் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தாள். இலேசாக அங்கங்கே ஒரு சளசளப்பு. ஒரு சுழிப்பு. அவ்வளவுதான். அமைதியான ஓட்டம். படித்துறைக்கு மேலிருந்துப் பார்த்தால் கீழே காவிரி ஓடிக் கொண்டிருப்பதே தெரியாது. அப்படி ஒரு பாந்தமான வேகம்.! சமீபத்து மழையின் உபயத்தால் செழுமையாகவே ஓடிக் கொண்டிருந்தாள் காவேரி அன்னை.

காவிரியின் கரையில் அமைந்தக் கிராமம் என்றாலே அதற்கென்று சில சுகங்கள் உண்டு. படித்துறையின் கடைசிப் படியில் காலை வைத்துக் கொண்டு ஓடும் நீரில் கால்களை அளைந்தபடியே சாயங்கால நேரங்களில் புறம் பேசுவது அதில் ஒன்று! வெயிலின் வெக்கையேத் தெரியாது! நன்றாக இருட்டும் வரையில் இப்படிப் பொழுதைப் போக்குபவர்கள் அந்தக் கிராமத்திலும் இருந்தார்கள். ஆனால் அன்றைக்கு அந்தக் கூட்டமும் குறைந்து விட்டிருந்தது.. படித்துறையின் சலசலப்பு மெல்ல ஓய்ந்துக் கொண்டிருந்தது. வெகு காலத்துக்குப் பிறகு கிடைத்த சொகுசாகையால் காவிரியும் களுக்..முளுக்கென்று சிரித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தாள்.!

இருட்டியும் இருட்டாமலும் கலங்கிக் கொண்டிருக்கும் அந்த சாயங்கால வேளையில் படித்துறையில் பாடசாலை மாணவர்கள் அமர்ந்துக் கொண்டு ருத்ரமும் சமகமும் சொல்லும் அழகே அழகு! கேட்க ஆயிரம் காதுகள் வேண்டும் ! நிமிர்ந்துப் பார்த்தால் ‘சிவ சிவ’ என்னும் கோபுரம் ! உச்சிக்குப் பின்னால் உயர்ந்து எழும் முழு நிலவு ! அவ்வவ்போது ‘டாங்..டாங்’ என்னும் ஆலய மணிய்¢ன் சப்தம் ! கோவிலுக்குள்ளே அர்ச்சகர்களின் மந்திர ஓசை! அந்த கிராமம் முழுவதும் காற்றில் பறக்கும் காகிதம் போல அவ்வப்போது எழுந்தும் அடங்கியும் பரந்துப் பரவும் ஓதுவாரின் தேவாரம்! இந்த சுகத்துக்காகவே வேறு எங்கும் போகாமல் இந்த கிராமத்திலேயேப் பழியாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார் பாலு வாத்தியார். இதையெல்லாம் விட சொர்க்கம் எங்கிருக்கிறது என்பது அவர் அடிக்கடித் தன் குடும்பத்தினரைப் பார்த்துக் கேட்கும் கேள்வி. ஆனால் தனக்கு சொர்க்கமாகப் படுவது எல்லோருக்கும் அப்படியேப் படுமா என்பதைதான் அவர் தெரிந்திருக்க வில்லை. தான் பிடிவாதமாகப் பிடித்து வைத்திருக்கும் சந்தியாவந்தனமும், காயத்ரியும், புருஷ சுக்தமும் மற்றவர்களுக்கு வேப்பங்காய் என்று அவருக்குச் சட்டென்றுப் புரியவில்லை. புரிந்த பொழுது சற்று ஆடித்தான் போனார்.

உலகமே மாறிப் போனது போல இருந்தது. ‘அடடா! இதைப் புரிந்துக் கொள்ளாமல் போனோமே’ என்று அதிர்ந்தார். ஆனாலும் மனசு சரி சரியென்று வேண்டாதவற்றோடு ஒட்டிக் கொள்ளவும் தயங்குகிறதே!

“ நமோ ஹிரண்ய பாஹவே ஸேனான்யே திசாஞ்சபதயே நமோ நமோ
வ்ருஷேப்யோ ஹரிகேசேப்யப் பசூனாம் பதயே நமோ நமோ”

ருத்ரம் கணீரென்று ஒலித்தது. ஆனால் அன்று அது அவரைத் தொட வில்லை. முழு நிலவும் மெல்ல ஆயாசத்தோடு எழுந்துக் கொண்டுதான் இருந்தது. அதுவும் அவரைக் கரைக்கவில்லை. அமைதியாகக் கால்களைக் காவிரியின் சுழிப்பில் கொடுத்துக் கொண்டுதான் உட்கார்ந்திருதார் பாலு வாத்தியார். ஆனால் அந்த சுகத்தை எல்லாம் அனுபவிக்க விடாமல் அவர் மனதைக் குடைந்துக் கொண்டிருந்தது ஒரு பிரச்ச்¢னை. அந்தப் பிரச்சினையை மனப்பூர்வமாகக் காவிரித் தாயுடன் பகிர்ந்துக் கொள்ளலாம் என்ற ஆவலில்தான் அப்படி உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார். எவ்வளவு நேரமோ அவருக்கேத் தெரியவில்லை. காவிரியில் நீர் மொள்ளும் பெண்களின் சலசலப்பும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்துக் கொண்டிருந்தது. தைரியசாலியானப் பையன்கள் மேட்டிலிருந்துத் தண்ணீரில் தொபுக்கடீர் என்று குதித்து விட்டு மறுபடியும் கூச்சலோடு ஓடுவதும் மெல்ல மெல்ல நின்றுக் கொண்டிருந்தது. இரவு ஜுர வேகத்தில் சுரு சுருவென்று ஏறிக் கொண்டிருந்தது. மார்கழியின் ஊதற்காற்று சிலு சிலுவென்று காதுகளில் அறையத் தொடங்கியிருந்தது. ஆனால் பாலு அய்யர் எழுந்திருக்க வில்லை. சுழித்துக் கொண்டும் குதித்துக் கொண்டும் ஓடும் ஆற்று நீரையேப் பார்த்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது, “ அம்மா ! தாயே!” என்றும் சற்று வேதனையோடு சப்தம் எழுப்பிக் கொண்டிருந்தார்.

நல்லது கெட்டது எல்லாமே அவருக்குக் காவிரித்தாய் தான். இதோ இந்தப் படித்துறையில்தான் பத்து வயதில் அவருக்குப் பூணல் போடப் பட்டது. அடுத்த நாளிலிருந்து இதேப் படித்துறையில்தான் அவருடைய அப்பா சந்தியா வந்தனம் பழக்கி விட ஆரம்பித்தார். எத்தனை சந்தோஷமான நாட்கள் அவை !? விடிகாலை நாலு மணிக்கெல்லாம் முழித்துக் கொண்டே ஆக வேண்டும். ஜிலு ஜிலுவென்றுக் காவிரியில் குளியல்! நாலரையிலிருந்து ருத்ரமும் புருஷ சுக்தமும் ஆரம்பித்து விடும். அந்த விடிகாலை நேரத்தில் அப்பா சொல்ல சொல்ல ஒவ்வொரு வரியையும் இரண்டிரண்டு முறை திருப்பி சொல்வது சிறுவன் பாலுவிற்கு மிகவும் பிடித்த விஷயம். அந்த ஏற்ற இறக்கங்கள் மிகவும் முக்கியம் என்று அப்பா பிடிவாதம் பிடிப்பார். அப்பா சொல்வதைப் போலவேத் தனக்கும் சொல்ல வருகிறதே என்று பாலுவுக்கு மிகவும் சந்தோஷமாகவும் வியப்பாகவும் இருக்கும். ஆறு மணிக்கு சந்தியாவந்தனத்தையும் முடித்துக் கொண்டுதான் வீட்டிற்குத் திரும்ப முடியும். அப்புறம்தான் காபி. அப்புறம் படிப்பு !

கல்யாணம் முடிந்த கையோடு அவளையும் அழைத்துக் கொண்டு ஓடோடி வந்ததும் இதேப் படித்துறைக்குத்தான். பூரிப்போடு காவிரியை அவளுக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். வெகு வருஷங்களுக்குப் பிறகு அப்பா முடிந்துப் போன சமயத்தில் கண்களில் பொங்கிப் பொங்கி எழும் கண்ணீரோடு எல்லாக் காரியங்களையும் செய்ததும் இதேப் படித்துறையில்தான்.! அவருக்கு வேறு எங்கேப் போகத்தெரியும்..! அழுகையோ ஆனந்தமோ எல்லாமேக் காவிரித்தாய்தான்!

“ டேய் பாலு ! அங்க உட்காந்து கிட்டு என்னடாப் பண்ணிட்டிருக்கே !?”

ஆற்று நீரில் அடித்து வீசப் பட்டக் கல் போல அந்தக் குரல் அவரைக் கலைத்தது. சடாரென்றுத் திரும்பினார் பாலு. அவருடைய பால்ய சிநேகிதன் துரை ! “அடாடா..அவ்வளவு நேரமா ஆயிற்று !” என்று திடுக்கிட்டுப் போனார் பாலு வாத்யார். இரவு எட்டு மணிக்குப் பிறகு ஒரு ஒரு மணி நேரம் காலாற நடப்பது அவர்கள் இருவருக்கும் வாடிக்கை. அவருடைய தெருவிலேயேக் குடியிருக்கும் அவருடையப் பள்ளித் தோழன் துரை. இருவரும் ஒரேப் பிடிவாதமாக அந்த கிராமத்திலேயேத் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். துரையின் குரலைக் கேட்டவுடன் சுதாரித்துக் கொண்டு எழுந்தார் பாலு. “சிவ சிவ “ என்று அவர் வாய் முணுமுணுக்க கைகள் தாமாக தலைக்கு மேல் உயர்ந்தன. கண்களில் இலேசான கசகசப்பு
“ டேய் ! வாடா மேல சீக்கிரமா !” என்று துரிதப் படுத்தினார் துரை.

மேல் துண்டால் முகத்தைத் துடைத்தபடியே வேகமாக வந்தார் பாலு. மேலே வர வர சிவ பெருமானின் கோவில் வாசல் கதவுகள் நன்றாகத் தெரிந்தன. மறுபடியும், “சிவ சிவ !” என்றும் “ஓம் நமசிவாய !” என்றும் முணுமுணுத்தப் படியே வந்தார் பாலு.

“டேய் டேய் போதும்டா..உன் பக்தி ! வா சீக்கிரமா..நடக்கற டைம் ஆச்சுது!” என்று கேலி செய்தார் துரை. அவருடைய கேலி ஒன்றும் புதுசு இல்லையாகையால் மெல்ல ஒரு சிரிப்பை உதிர்த்தபடியே நடக்கத் தொடங்கினார் பாலு. காவிரியின் கரையை ஒட்டி நீளமாகப் போயிற்று அந்த மண் தெரு. ஒரு மருங்கில் மெல்லிய மஞ்சள் ஒளியைக் கக்கிக் கொண்டுத் தெரு விளக்குகள்! மெல்ல ஊடுருவத் தொடங்கியிருக்கும் நிலவொளி ! சாதாரண மனிதருக்கேக் கவிதைப் பாடத் தோன்றும் சுழல்! ஆனால் பாலுவின் உள்ளத்திலோ சூறாவளி …கவிதைக்கு எங்கேப் போவது !? உள்ளக் குழப்பத்திற்கு ஒரு வழித் தேடியே காவிரிக்கு வந்திருந்தார் ..! அதற்குள் துரைக்கு அவசரம்!

சற்று நேரம் பேசாமலேயே நடந்தார்கள் நண்பர்கள். துரைக்கு பொறுக்க வில்லை. “என்னடா மூஞ்சியை உம்முனு வச்சிக்கிட்டே வர..!” என்று கொக்கிப் போட்டார். பாலுவிடமிருந்து இதற்கு பதில் ஒரு புன் சிரிப்பு மட்டுமே.! சற்று விட்டுப் பிடிப்போம் என்று துரைக்குத் தோன்றியது போலிருக்கிறது. மீண்டும் மெளனமாக நடந்தனர் நண்பர்கள். கிராமமாகையால் அந்த நேரத்திலேயே பரபரப்புக்கள் அடங்கியிருந்தன. சில வீடுகளில் டிவியின் ஓசைக் கேட்டது. தெருவின் இடது கை புறத்தில் குறுக்காக ஓடிய சந்துகளில் வரிசை வரிசையாக வீடுகள். முதல் வரிசையில் அக்ரஹாரம். தெருவைத் தொடும் மூலை வீடு பாட்டு மாமியினுடையது. மூன்று நான்குக் குழந்தைகள் பாட்டு சொல்லிக் கொண்டிருந்தன.

லம்போதர லகு மிகர
அம்பா ஸ¤த அமர வினுத.

என்று ஒரே குரலில் ஒலித்த கீதத்தை நின்று ஒரு வினாடி கேட்டார் பாலு வாத்தியார். அதற்கும் துரையிடமிருந்து கேலிதான். சற்று நேரத்திற்குப் பிறகு சிவன் கோவில் மணி ‘டாங்..டாங்’ என்று ஒலிக்கவே உடனே கோபுரத்தின் பக்கமாகத் திரும்பி ‘சிவ சிவா !”என்றுக் கன்னத்தில் போட்டுக் கொண்டார் பாலு. “ அடப் பாவி ! இதையெல்லாம் எப்போடா நீ விடப் போறே !?” என்று கேட்டார் துரை. நண்பனின் மனதைத் தெரிந்து வைத்திருந்த பாலு சிரித்த படியே அவன் தோளில் கை போட்டுக் கொண்டு நடந்தார். அதுதான்…அந்த செய்கைதான் அந்தக் கேள்விக்குப் பதில் ! கொஞ்சம் வெறுத்துதான் போனார் துரை. இதற்கு மேல் பேசாமல் இருப்பது சரியில்லை என்று எண்ணிக் கொண்டு அந்த விஷயத்தை ஆரம்பித்தார்.

“வரப்ப உங்க வூட்டுக்குப் போயிட்டு தான் வாரேன்..!”

சட்டென்றுப் புரிந்தது பாலுவிற்கு. எல்லாவற்றையும் தெரிந்துக் கொண்டுதான் இன்று வந்திருக்கிறான். சரி பார்ப்போமே என்று மெளனத்தை ஒரு விரதமாகக் காத்தார் பாலு வாத்தியார். நண்பனிடமிருந்து பதில் வராமல் இருக்கவே சற்றே ஆத்திரத்துடனேயேப் பேச ஆரம்பித்தார் துரை.

“தங்கச்சி எல்லாத்தையும் சொல்லிச்சி ! நீ செய்யறது உனக்கே நல்லாயிருக்காடா..!?” என்று நிறுத்தித் தன் நண்பனின் முகத்தை உற்று நோக்கினார் துரை. அங்கே வேதனைதான் தெரிந்தது.

“ கொஞ்சம் கூட விவரம் இல்லாமத் தாண்டா நீ இருக்க இத்தன வயசாயியும்…!” என்று மீண்டும் தன் தாக்குதலைத் தொடர்ந்தார். இன்றைக்கு இவனை இலேசில் விடுவதில்லை என்பது அவரின் முடிவு போலும் !

“ பட்டிக் காட்டான்ங்கறது சரியாத்தாண்டா இருக்கு..உன் பையன் விஷயத்துல கொஞ்சம் கூட மூளையில்லாம நடந்துக்கறியே..!”

வார்த்தைகளை விஷம் தோய்த்த அம்புகளாக விடுவது ஒரு கலை. பாலு வாத்தியாரின் முகத்தில் வேதனையின் சாயல் அதிகமாகத் தான் ஆயிற்று.
மீண்டும் சிவன் கோவில் மணியோசை காற்றில் மிதந்து வரவும், நின்ற இடத்திலிருந்த படியே ‘ சிவ சிவா !” என்றுக் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி வணங்கினார் பாலு.

“ ஆமா…இதுல எல்லாம் குறைச்சல் இல்ல..! நீ கும்பிடறயே சாமி… நீ செய்யறது தப்புன்னு அது சொல்லலையா…!? “ என்றவருக்கு பாலுவின் தொடர்ந்த மெளனம் மேலும் மேலும் எரிச்சலைக் கிளறி விட முன்னிலும் அதிக உஷ்ணத்தோடு வார்த்தைகளை வீசினார். “ டேய் நீ படிச்ச முட்டாள்டா..உன் பையனுக்கு எப்பேர்பட்ட இடத்துல இருந்து சம்பந்தம் வருது..முட்டாள் மாதிரி என்னென்னமோக் காரணம் சொல்லி அதை ஒதுக்கறியே..! உன் ஜாதகக் குப்பையைத் தூக்கிக் குப்பையில விசிறுடா…நீயும் உன் ஜாதகமும்..!”

தனக்கு நல்லது நடக்க வேண்டுமே என்ற உண்மையான ஆதங்கத்தில் தான் தன் நண்பன் இப்பிடிக் கோபமாகப் பேசுகிறான் என்று பாலுவிற்குப் புரியாமல் இல்லை. இருந்தாலும் துரையின் வார்த்தைகளில் இருந்த காரம் அவர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. துரைக்கோ பாலுவின் மெளனம் ஆத்திரத்தைத்தான் கிளறி விட்டது. செய்வதையும் செய்து விட்டுப் புடிச்சு வைத்தப் பிள்ளையார் மாதிரி அசையாமல் இருக்கிறானே என்று எரிச்சல் பட்டார். “பைத்தியக்காரா..கொஞ்சம் நினச்சிப் பார்டா…வசுமதிக்கு என்னடாக் கொறச்சல்? அழகில்லையா? படிப்பில்லையா. பணம் இல்லியா…எதுடா இல்லை? அவங்களும் உங்க ஜாதிதான்! அவங்க வீட்டுலயும் உன் கூட சம்பந்தம் வெச்சுக்கத் தயாரா இருக்காங்க…உன் பையனும் அவ மேல ஆசை வெச்சிருக்கான்..வேற என்னடா வேணுங்கற..!”

நண்பனின் பேச்சில் இருந்த நியாயம் பாலுவுக்குப் புரிந்தது. துரை சொல்வதில் எந்த விதத் தவறும் இல்லையே..ஊரும் உலகமும் அதைத் தானே சொல்லும்..!?

“நீங்கப் பரம்பரை பரம்பரையா சோத்துக்கு டிங்கி அடிக்கிறீங்க…உன் பையனும் அப்பிடியேதான் இருக்கணுமா..? அவனாவது சொத்து சொகத்தோட இருக்கக் கூடாதா..!?” துரையின் பேச்சு பாலுவைத் தொட்டது. இதை விடவும் நியாயமாகப் பேச யாரால் முடியும்? ஆனால்…ஆனால் இதெல்லாம் பாலுவிற்குத் தெரியாமல் இல்லையே..!இதையெல்லாம் அவர் மட்டும் எண்ணிப் பார்க்கவில்லையா…!? ஆனாலும் என்ன செய்வது? தான் காலம் காலமாகக் கட்டிக் காத்த நம்பிக்கைகளைச் சட்டென்று விட்டு விட முடியவில்லையே !

“ என்னடாப் பெர்¢ய ஜாதகம்.. நீ எல்லாம் தெரிஞ்சவனா…நீ சொல்றது கரெக்டுதானா..! வர மருமவளுக்கு மூல நச்சத்தரம்னாக்கா மாமியாக் காரி விதவையாயி மூலயில உக்காந்துடுவாளா..!? என்னடா பயித்தியக் காரத் தனம் இது ?” என்று கிண்டலாகவும் கோபமாகவும் தொடர்ந்தார் துரை.

“இவருப் பெரிய இவரு..நாளைக்கு நடக்கப் போறதையெல்லாம் இப்பமே சொல்லிடுவாரு..போடா..ங்..போக்கத்தவனே..!” சிறு வயதிலிருந்து தோளோடுத் தோள் சேர்ந்து வளர்ந்த உரிமையில் சற்று அதிகமாகவேத்தான் பேசினார் துரை. அதில் கோபம் என்பதை விட ஆதங்கமும் அக்கறையும்தான் அதிகமாக இருந்தது. பாலுவிடமிருந்து எந்த வித பதிலும் வராமல் போகவே சட்டென்று நின்றார் துரை. பாலுவையும் தோளைப் பிடித்து நிறுத்தினார். திருப்பினார்.

“ டேய் பாலு..தெரியாமத்தான் கேக்கறேன்..அப்பிடியே உன் பையனுக்கு ஒரு நல்லது நடக்கணும்கறத்துக்காக நீ எதையுமே வுட்டுக் கொடுக்க மாட்டியா.! இந்த வயசுக்கப் பறம் நீ முக்கியமா..இல்லை உன் பையன் முக்கியமா…!?”

“சிவ சிவா!” என்று உடனேக் கன்னத்தில் போட்டுக் கொண்டார் பாலு. அவர் கண்களில் கர கரவென்று நீர் பெருகியது. உடனே கோபுரத்தைப் பார்த்துக் கைகளை உயர்த்தினார். மெல்லிய குரலில் துரைக்கு பதில் சொன்னார். “பாலு நீ சொல்றது வாஸ்தவம்தாண்டா..என் பையனுக்காக எதையுமே விட்டுக் கொடுக்க நா தயாராத்தான் இருக்கேன்…ஆனா இதுக்காக வேண்டி என் ஆம்படையாளை பணயம் வெக்க நான் யாருடா..!?” சொல்லும் போதே வார்த்தைகள் ச்¢க்கிக் கொள்ள வாய் கோணிக் கொண்டு அழுகையும் கேவலுமாக வெடித்தது அவரின் பேச்சு. துரை சற்றே மெளனமானார். நண்பனின் கலக்கம் அவரைச் சற்று ஆசுவாசப் படுத்தியது. சிறிது நேரம் பேசாமல் இருந்தார். இரண்டு நிமிடங்களிளெல்லாம் அடங்கியிருந்த கோபமும் ஆத்திரமும் மீண்டும் கொப்பளித்துக் கொண்டு வெளி வர ஆரம்பித்தன. நன்றாக யோச்¢த்து ஒரு கேள்வி கேட்டார்.

“ சரி பாலு நான் கேக்கறேன்..உன் சாஸ்திரப்படி கல்யாணம்ங்கறது என்னடா? மூணு நாள் சடங்கும் மந்திரமும் மட்டும்தானா?…இல்ல..அதுக்கப்பறம் ஏற்படற உறவா..?!சடங்கில்லாத உறவோ இல்ல உறவு இல்லாத வெறும் சடங்கு மட்டுமோ கல்யாணமா இல்லியா..!?”

புருவத்தை உயர்த்தினார் பாலு வாத்தியார். சபாஷ் என்று சொல்லத் தோன்றியது அவருக்கு. மீண்டும் தொடர்ந்தார் துரை. “ நான் எதுக்குக் கேக்கறேன்னா…இப்ப..உன் பையன்… உனக்குத் தெரியாமலேயே…கல்யாணம் ஆகாமலயே அவனும் அந்தப் பொண்ணுமாத் தப்புப் பண்ணிடறாங்கன்னு ஒரு பேச்சுக்கு வெச்சுக்குவம்…! அப்பவும் அந்த மூல நச்சத்திரம் தன் வேலயைக் கா…!”

வார்த்தையைக் கூட முடிக்க வில்லை துரை. அந்தக் கருத்தால் உடனேயேத் தாக்கப் பட்ட பாலு சடாரென்று அடி வயிற்றைப் பிடித்துக் கொண்டுத் தெருவிலேயே உட்கார்ந்து விட்டார். விடாமல் ‘சிவ சிவா ! சிவ சிவா!” என்று சொல்லியபடிக் காதுகளைப் பொத்திக் கொண்டார். அப்படி ஒரு கற்பனையைக் கூடத் தாங்க முடியவிலை அவரால். இப்படியும் கூடவா நடந்து விடும் என்று அதிசயத்தார். அப்படி வாழ்ந்த வாழ்க்கை அவருடையது. உடல் நடுங்க நண்பனின் தோளை ஆதரவாக அழுத்தமாகப் பிடித்துக் கொண்டார். பாலுவின் வேதனைப் புரிந்தது அவரின் நண்பனுக்கு. என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்று நினனத்தோமோ அதையெல்லாம் சொல்லி விட்டோம் என்ற திருப்த்¢யில் அவரின் கோபம் சற்று அடங்கியது. அதற்கு மேல் பேச எதுவும் இல்லை அவர்¢டம். காற்றும் நிலவும் அமைதியாக இருந்தன. ஊர் உறங்கிக் கொண்டிருந்தது. மேலே எதுவும் அதைப் பற்றிப் பேசாமல் தன் நண்பனை அவன் வீட்டில் விட்டு விட்டுத் தன் வீட்டிற்கு மன உளைச்சலோடுத் திரும்பினார் துரை.

இரவு நன்றாக ஏறியிருந்தது. நிலவின் ஒளியும் அந்தக் கிராமத்தைக் குளிப் பாட்டிக் கொண்டிருந்தது. அநேகமாக எல்லோருமே உறங்கியிருக்கக் கூடிய முன்னிரவு நேரம். சரியான குடி போதையில் நடக்க முடியாமல் நடந்து வந்துக் கொண்டிருந்தான் அந்த இளைஞன். நேராக நடப்பதாக நினைத்துக் கொண்டுப் பல முறை பக்க வாட்டில் முன்னேறிக் கொண்டிருந்தான். எல்லா வீடுகளுமே இருளில் மூழ்கியிருக்க வசுமதியின் வீட்டில் மட்டும் வெளிச்சம் ஜன்னல் கம்ப்¢கள் வழியேத் தெருவில் விழுந்திருந்தது. மேகங்கள் சற்று அதிகமாக இருந்ததினால் சந்திரன் அவ்வப்போது மறைந்தும் மறையாமலும் வெளிச்சத்தைக் கொட்டிக் கொண்டிருந்தான்.

தட் தட்டென்று கால்கள் ஒலியெழுப்ப இப்படியும் அப்படியுமாக தள்ளாடிய படியே ஒரு பாட்டை சப்தமாகப் பாடிக் கொண்டு வந்தான் அவன். அந்த நேரத்தில் அப்படி ஒரு சப்தம் கேட்கவே என்னவோ ஏதோ என்றுத் தெரிந்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில், “ யாரது..? யார் வேணும் உங்களூக்கு..!?” என்ற படியே வீட்டிற்குள்ளிருந்து வாசலுக்கு வந்தாள் வசுமதி. ஓரளவ்¢ற்குத் தன்னை சமாளித்துக் கொண்டு நடந்தவன், குரலைக் கேட்டவுடன் திடுக்கிட்டான். கதவைத் திறந்துக் கொண்டு யாரோ வருவது தெரிந்ததும், ஓடி விட வேண்டும் என்ற நினைப்பில் கால்களை அப்படியும் இப்படியுமாக நகர்த்த, நிலை தடுமாறி வசுமதியின் மேலேயே இடித்துக் கொண்டு திண்ணையில் விழுந்தான் அந்த வாலிபன். எதிர்பாராமல் திடீரென்று ஒருவன் தன் மேலே விழவும் நிலை தடுமாறி திண்ணையின் கூர் முனை நெற்றியில் இடிக்குமாறு விழுந்து விட்டாள் வசுமதி. உடனே பயத்திலும் பதற்றத்திலும் அவளுக்கு நினைவு தப்பி விட்டது. காயம் பட்ட இடத்தில் இரத்தம் நுரைத்துக் கொண்டு வர ஆரம்பித்திருந்தது.

தலைக்கு ஏறியிருந்த போதை ! மயக்கமாக ஒளியை சிந்திக் கொண்டிருக்கும் நிலவு..யாருமில்லாத தனிமை…அருகிலே மயக்க நிலையிலே ஒரு இளம் பெண்.! நல்ல நிலைமையில் இருப்பவர்களே தடுமாறும் நேரமிது.! அவனோ குடிகாரன்….கேட்கவா வேண்டும் !? கள்ளின் போதையோடு காமமும் சேர்ந்துக் கொள்ள தான் என்ன செய்கிறோம் என்ற நினைப்பே அற்றவனாக அவளை அடைந்தான் அந்த வாலிபன். நடக்கும் நிகழ்ச்சியின் விபரீதத்தைப் புரிந்துக் கொண்ட நிலவு கூட சட்டென்று ஒரு மேகத் திரைக்குள் தன்னை மறைத்துக் கொள்ள யாருமில்லாதத் தெருவில் அனாதையாகத் தன்னை இழந்துக்கொண்டிருந்தாள் வசுமதி.

விடிகாலை மூன்று அல்லது மூணரை இருக்கலாம். தெருவில் கூச்சலும் குழப்பமுமாக இருக்கவே திடிரென்று விழித்துக் கொண்டார் பாலு வாத்தியார்.
பாதி வெளிச்சம் பாதி இருட்டாக இருந்ததில் அவருக்கு சரியாக எதுவுமேத் தெரியவில்லை. தெருவில் பல வீடுகளில் விளக்குகள் எரிந்துக் கொண்டிருந்தன. ஜனங்கள் போவதும் வருவதுவுமாக இருந்தார்கள். ஒரே கூச்சலாக இருந்தது. த்¢டீரென்று போலீஸ் ஜீப் வரும் சைரன் சப்தமும் கேட்டது. “ என்னடா இது..சிவ சிவா. யாருக்கு என்ன ஆயிற்று.!” என்று ஆச்சரியப்பட்ட படியே வாசற் கதவைத் திறந்தவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவருடைய உயிர் நண்பன் துரையின் வீட்டில்தான் அத்தனைக் கூட்டமும் நின்றிருந்தது. போலீஸ் ஜீப் கூட அங்கேதான் நின்றது. ஆச்சரியப் பட்டுப் போனவராக துண்டால் முகத்தைத் துடைத்தவாறே வேகமாகத் தன் நண்பனின் வீட்டிற்குப் போனார் பாலு.

கூட்டத்தை விலக்கிக் கொண்டிருந்ததுப் போலீஸ். வெளியிலிருந்த ஜன்னல் வழியேப் பார்த்தவருக்குச் சட்டென்று இதயம் நின்று விட்டதைப் போலிருந்தது. அவருடைய அருமை நண்பர் துரை தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார் பிணமாக.! நெஞ்சைப் பிடித்தவாறு அப்படியேத் தெருவிலேயே விழுந்து விட்டார் பாலு. “ ஐயோ ! துரை..ஐயோ.!” என்றுக் கதறியவரின் கண்களில் வெள்ளமாக நீர் வடிந்தது. அவர்களிருவருடைய நட்பை அனைவரும் உணர்ந்தவர்களாகையால் கூட்டமும் அவருக்காகப் பரிதாபப் பட்டது. நடப்பதை வேடிக்கைப் பார்ப்பதை விடவும் பாலு வாத்தியாரை சமாதானப் படுத்துவது மிகப் பெரிய வேலையாக இருந்தது அந்தக் கூட்டத்திற்கு! காண்பவரின் உள்ளம் எல்லாம் கரையும் படி புரண்டுப் புரண்டு அழுதார் பாலு. எப்போதுமேத் தன் உணர்ச்சிகளை வெளிக் காட்டாத பாலு இப்படிப் புரண்டுப் புரண்டு அழுவது எல்லோர் உள்ளத்தையும் வெகுவாகப் பாதித்தது. அவருடைய சோகம் எல்லோருக்குமேப் புரிந்தது.

“ ஐயோ..ராத்திரி ஒன்பது மணி வரைக்கும் என்னோடவே இருந்தானே…!
என்னயா ஆய் போச்சு. இப்போ!” என்று கூக்குரல் இட்டார் பாலு.

போலீஸ்காரர் ஒருவர் துரையின் உயிரற்ற உடலை கீழே இறக்கினார். கூட்டத்தின் கூக்குரல் உச்சத்திற்குப் போயிற்று. கதறி அழுத படியே மயங்கி விழுந்தாள் துரைய்¢ன் மனைவி. மழையில் நனைந்த கோழிக் குஞ்சு போல வெட வெடவென்று நடுங்கியபடியே நின்றுக் கொண்டிருந்தான் துரையின் மகன். ராத்திரி ஏற்றிக் கொண்ட போதை இன்னும் அவன் கண்களில் மிச்சமிருந்தது. நடப்பதை பாதி புரிந்தும் புரியாமலும் பார்த்துக் கொண்டிருந்தவனின் கைகளில் விலங்கை மாட்டினார் காவலர். “ என்ன இது கண்றாவி..!?” என்று மலங்க மலங்க முழித்தார் பாலு வாத்தியார். சுற்றி இருப்பவர்கள் அவருக்கு எல்லாவற்றையும் விளக்க வேண்டியிருந்தது. நேற்று
இரவு குடிபோதையில் இருந்த துரையின் மகன் வசுமதியைக் கெடுத்து விட்டான். எனவே போலீஸ் அவனைக் கைது செய்துக் கொண்டு போகிறது.

நடந்து விட்ட விபரீதத்தை ராத்திர்¢யேத் தெரிந்துக் கொண்ட துரை அவமானம் தாங்காமல் தூக்கு மாட்டிக் கொண்டார்.

பளாரென்று யாரோ கன்னத்தில் அடித்ததைப் போல நின்று போனார் பாலு வாத்தியார். அவருக்குச் சட்டென்று எதுவோப் புரிந்ததைப் போலவும், புரியாததைப் போலவும் இருந்தது. நேற்று இரவு துரை கேட்ட கேள்வி அவர் நினைவுக்கு வந்தது.

“வெறும் சடங்கு மட்டுமே திருமணமா? உறவில் முடியாத திருமணமோ, திருமணமே இல்லாத உறவோ இருந்தால் கூட மூல நட்சத்திரம் தன் வேலையைக் காட்டுமா”

என்ன நடந்தது..!? நேற்று இரவு துரையின் மகனுக்கும் வசுமதிக்கும் என்ன நடந்தது..!? உறவா…அப்படியென்றால்….. அது திருமணமா….அல்லது இல்லையா..? பைத்தியம் பிடித்ததைப் போலக் கலங்கினார் பாலு வாத்தியார். அவர் மனதில் மின்னல் வெட்டுவதைப் போல என்னென்னமோ எண்ணங்கள் தோன்றி மறைந்தன. கண்களில் நிற்காமல் கண்ணீர் வந்துக் கொண்டேயிருந்தது. சடாரென்று மின்சாரத்தால் தாக்கப் பட்டவரைப் போலத் திரும்பினார் பாலு வாத்தியார். கண்களை இடுக்கிக் கொண்டு துரைய்¢ன் வீட்டை நெருங்கினார். “அண்ணா.. பாத்தீங்களா இந்தக் கொடுமய…!?” என்றுக் கதறி அழுதாள் “மூலையில்” அமர்ந்துக் கொண்டிருந்த துரையின் மனைவி. “ஐயோ!” என்று தலையைப் பிய்த்துக் கொண்டு அந்தக் கிராமமே கிடுகிடுக்கும்படி ஓலமிட்டார் பாலு வாத்தியார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *