கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 11, 2013
பார்வையிட்டோர்: 10,010 
 

திருமணம் முடிந்து 9 ஆண்டுகளுக்குப் பின், இன்று என் மனைவி தன் மாமியாரோடு அதாவது என் உம்மாவோடு ஏதேனும் ஒரு நல்ல ஹோட்டலில் இரவு உணவிற்குச் செல்லுமாறு பரிந்துரைத்தாள். அதிகம் பேசாத மௌன சுபாவத்தை தற்போது ஒரு சில நாட்களாக கடைபிடிக்கும் என் அன்பிற்குரிய மனைவி ஜஸீலாவின் இச்செயல் எனக்கு வியப்பை அளித்தது. அவள் மேலும் தொடர்ந்தாள், “நான் உங்களை நேசிக்கின்றேன், ஐ லவ் யூ வெரி மச்! ஆனால் அவங்களும் உங்களை நேசிப்பதை நான் நன்கறிவேன். அவங்களை நீங்கள் தனியாக சந்தித்து இப்படி சில மணித்துளிகளைக் கழிப்பது அவங்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு காரியமாக இருக்கும்”.

எனது வாப்பாவின் மரணத்திற்கு பின்னர், வாப்பாவுடன் நாங்கள் ஒன்றாக வாழ்ந்த அந்த பழைய வீட்டை விற்று விட்டு எங்களோடு வந்து வசதியான நல்ல வீட்டில் இருக்க மனம் சம்மதிக்காததால், அதே வீட்டில் எனது கடைசி தம்பி, அவன் மனைவி இரண்டு குழந்தைகளோடு, உடலில் பலவீனமும் வயோதிக நோய்கள் இருந்தும் தந்தையின் மரணத்திற்கு 6 வருடங்களுக்கு பிறகும் கிடைக்கும் ஒரே வருமானமான ஓய்வூதியப் பணத்துடன் தொடர்ந்து பலவித மருந்துகளும் துவாக்களும் என்று மன நிம்மதியாகக் காலத்தைக் கழித்து வருகிறார்கள் எனது அன்பிற்குரிய உம்மா.

வாப்பா(தந்தை) அரசாங்க அலுவலிலிருந்து ஓய்வு பெற்றது முதல் ஆயுள் கால பென்ஷன், மருத்துவ வசதி என்று தேவைக்கு ஓரளவு அல்லாஹ் கொடுத்திருந்ததால், அவ்வப்போது நான் அனுப்பும் பணம் அவர்களின் அன்றாட தேவைகளோடு இதர மருத்துவ செலவுகளையும் நல்ல முறையில் சமாளிக்கப் போதுமானதாக இருந்தது. எனது மனைவி, மூன்று குழந்தைகள், அவர்கள் படிப்பு மற்றும் இதர தேவைகளுக்கு அலுவலக நேரம் போக மீதி நேரம் பற்றாத சூழ்நிலையில் தாயாரை அடிக்கடி நேரில் சென்று சந்திப்பது மட்டும் அதற்காக நேரம் ஒதுக்குவது, பயண தூரம் போன்ற காரணங்களால் விசேஷ நாட்கள், பெருநாட்கள் எனும் அளவிற்கு சுருங்கியிருந்தது.

சில நாட்களாக அவ்வப்போது இணையத்தில் அரட்டைக்கு (chat) வரச்செய்து பார்த்து பேசிக்கொள்வதும் கூடக் குறைந்துபோய் நேரடி மார்க்க சொற்பொழிவுகள், கேபிளில் மார்க்க நிகழ்ச்சிகள் பார்த்தல் என்று நேரம் செல்வதே தெரியாமல் நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.

நான் உம்மாவோடு இந்த வெள்ளியன்று வெளியே செல்வதைப் பற்றி பேச போன் செய்தேன்.

“அஸ்ஸலாமு அலைக்கும், உம்மா நான் அப்துல்லாஹ் பேசறேன், நல்லா இருக்கிறீங்களா உம்மா?”.

“வ அலைக்கும் ஸலாம் வாப்பா, அல்ஹம்துலில்லாஹ்! நல்லா இருக்கிறேன்பா, நீங்க எல்லாம் நல்லா இருக்கிறீங்கதானே வாப்பா?”.

வழக்கமான ஒரு பதற்றம் உம்மாவின் குரலில் இருந்தது. போன் வந்தாலே ஏதும் பிரச்சனையோ, கெட்ட செய்தியோ என்று பயப்படும் நிலை. அதே பழைய குணம் இன்னும் உம்மாவிடம் மாறவில்லை. நான் விபரத்தை கூறினேன்.

உம்மா மௌனமாக சிறிது நேரம் இருந்துவிட்டு, வழக்கம் போல “எதுக்குப்பா” என்றார்கள்.

“உம்மா, நீங்களும் நானும் மட்டும்தான்………. இல்லைன்னு சொல்லாதீங்க..”

சிறிது நேர மௌனத்திற்குப் பின், “சரி வாப்பா! எனக்கும் நினைக்கவே சந்தோசமா இருக்கு, வாப்பா மௌத்தான பின்ன பென்ஷன் ஆபீசுக்கு நீ என்னை அழைச்சிட்டு போயிருந்தப்ப, ஒரு ஹோட்டல்ல மதியம் சாப்பாடு வாங்கி கொடுத்தியே. அது இன்னும் ஞாபகத்திலேயே இருக்குப்பா… ஆனா அன்னிக்கு நீ வியாழக்கிழமை நோன்பு வச்சி இருந்த, என்ன மட்டும் சாப்பிடுங்கம்மா, இல்லன்னா மயக்கம் வரும்னு சொல்லி வாங்கி கொடுத்த…..”.

ஐந்தரை வருடங்களுக்கும் மேலான இந்த சம்பவம் கண் முன் வந்தது.

கண்களின் ஓரத்தில் ஈரம்…கைகுட்டையைக் கை நாடியது.

இந்த வெள்ளியன்று மாலைச் சந்திப்பை உறுதிபடுத்திவிட்டு போனை வைத்தேன்.

வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகைக்குப் பின்னர் மதிய உணவை எனது அன்பு மனைவி மற்றும் குழந்தைகளுடன் அருகிலிருந்த வழமையாகச் செல்லும் உணவகத்தில் முடித்துக்கொண்டு எனது பயணத்தைத் துவங்கினேன்.

“பத்திரமா போய்ட்டு வாங்க, அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற வார்த்தைகளுடன் மனைவி வழியனுப்பி வைக்க குழந்தைகள், “பாய் டாடி, ஸலாமலைக்கும் டாடி” என்று கோரசுடன் முழங்க,

“வ அலைக்கும் ஸலாம்” என்று கூறி கையசைத்தவாறு காரை நகர்த்தினேன்.

சுமார் 4 மணி நேர பயண தூரத்தை கடக்க கார் முன்னோக்கி ஓடியது….! எனது எண்ணங்களோ பின்னோக்கிப் பயணப்பட்டது……!

திருமணம் நடந்த புதிதில் நான் எனது தாயாருடன் அன்பாகவும் நெருக்கமாகவும் பேசுவதையும், பழகுவதையும் கண்டு மனதில் ஏதோ ஒரு குறையுணர்வுடன், தனது கணவரின் அன்பு தன்னை விடவும் தனது மாமியாருக்கு அதிகமாகக் கிடைக்கிறதோ என்ற சிந்தனையால் உந்தப்பட்டு, ஒரு சில குடும்பப் பிரச்சனைகளால் சஞ்சலமடைந்து பகிர்ந்து கொள்ள நெருக்கமாக யாரும் இல்லாத நிலையில், மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டு இறுதியில் சில அனுதாப ஆறுதல் வார்த்தைகள் மட்டும் எதிர்பார்த்து உம்மா தனிமையில் என்னுடன் கூறிய சிறிய சிறிய விஷயங்களுக்கும் கூட, “என்ன பேசினீங்க உங்க உம்மாகிட்ட” என்று கேட்டு அதற்கு, “ஒன்றுமில்லை அவங்க வழக்கம் போல அவங்க தேவைகள சொன்னாங்க” என்று கூறும் போது, “அத நான் கூட தெரியக்கூடாத அளவில அப்படி என்ன தான் சொன்னாங்க?”, என்று கோபப்பட்டு சில சமயங்களில் ஒரிரு நாட்கள் வரை பேசாமலிருந்த என் மனைவி ஜஸீலா, இன்று அல்ஹம்துலில்லாஹ்! இந்த அளவு மாற்றத்தை அடைந்தது அல்லாஹ்வின் கிருபை தான்.

“இயற்கையாக தாய் மீது உள்ள பாசத்தின் காரணமாக வயது முதிர்ந்த தாயுடன் கணவன் அன்பாக பேசுவது தன் மீது பாசத்தையும் அன்பையும் குறைத்துவிடும் என்ற தவறான எண்ணத்தால் கணவன் தாயாருக்கு செய்ய வேண்டிய சிறிய பெரிய கடமைகளைச் செய்ய முனையும் போது மனைவிக்கு கோபமோ சஞ்சலமோ ஏற்படுவது சாதாரணம் தான். ஆனால் அது கணவன் மனைவி மத்தியில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி விடும் என்பதை மனைவி எனும் இடத்திலிள்ள பெண்கள் பொதுவாக உணர மறுக்கின்றார்கள். இதனால் கணவனாக இருக்கும் ஆண்மக்கள் சிலர் குடும்பவாழ்வு பிரச்சனையில்லாமல் செல்ல மனைவியின் மனம் நோகாமல் நடக்க வேண்டும் என்பதற்காக தாயை உதாசீனப் படுத்தும் சூழ்நிலைக்குத் தள்ள படுவதும் உண்டு.

இதில் ஆண், பெண் என்ற இரு சாராரும் கணவன் மனைவி எனுமிடத்தில் இருந்து சம குற்றவாளிகளாக இருக்கின்றனர். அல்லாஹ் இதனைக் கணவன் மனைவியருக்கு உணர்த்தி இல்வாழ்க்கையை இன்பகரமானதாகவும் , இறை உவப்பிற்கு உகந்தவழியிலும் ஆக்க வேண்டும். அதில் தான் ஒவ்வொருவரின் இம்மை மறுமை வெற்றியும் அடங்கியிருக்கிறது.” என்ற சென்ற வெள்ளியன்று நடந்த வாராந்திர பயானில், “பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமை” எனும் தலைப்பில் ஆற்றப்பட்ட சொற்பொழிவு காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது…..!

கார் வேகத்தை சற்று அதிகப்படுத்தி பயணத்தைத் தொடர்ந்தேன்.

“மேலும் இதே போல் இயல்பாகவே பெண்கள், மாமியார் எனும் இடத்தில் இருக்கும் போது சில எதிர்பார்ப்புகள், சில மனோரீதியான தாக்கங்கள் அவர்கள் தங்களது வாழ்வில் மருமகளாக இருக்கும் போது ஏற்பட்ட சில மோசமான நிகழ்வுகளின் விளைவுகள் போன்ற காரணங்களால், மகன் நம்மோடு முன்போல் பேசுவதில்லை, பழகுவதில்லை; நேற்று வந்தவள் தலையணை மந்திரம் ஓதித் தன் மகனைக் கையில் போட்டுக்கொண்டாள் என்று மனதில் வேண்டாத எண்ணத்தோடு செயல்படும் போது சராசரி குடும்பங்களில் மாமியார் மருமகள் இடையே வேண்டாத மனக்கசப்புகள் பிரச்சனைகள் நிகழ்வதை பார்க்கிறோம்.

ஆனால் இறையச்சம் கொண்ட ஒரு உண்மை முஸ்லீம் குடும்பத்தில் இது போன்று பிரச்சனைகள் எழுவது சரியாக இருக்கமுடியாது. இதை மாமியாராக இருக்கும் பெண்ணும் மருமகளாக இருக்கும் பெண்ணும் உணர்ந்து ஷைத்தான் தூண்டலால் ஏற்படும் மன ஊசலாட்டங்களை வென்று தனது மகளைப் போல் மருமகளுக்கும், தனது தாய் தனது கணவன் மீது பொழிவது போன்ற அன்பை தமது மாமியாருக்கும் மாமியார் மருமகள்கள் காட்டமுன்வர வேண்டும். அதுவே குடும்பங்களில் ஷைத்தான் ஏற்படுத்தும் சஞ்சலங்களிலிருந்து தப்பி வெல்லும் வழி”, வெள்ளி பயானில் ஆற்றப் பட்ட உரையோடு ஜஸீலாவின் இப்புதிய மாற்றம் மீண்டும் மீண்டும் மனத்திரை முன் வந்தது. மனங்களை மாற்றும் ஆற்றல் கொண்ட இறைவனைப் புகழ்ந்து அல்ஹம்துலில்லாஹ் என்று சொன்ன வேளையில், திடீரென அடித்த செல்போன் ஓசை சிந்தனைகளைக் கலைத்தது.

வழக்கம் போல் போனில் என் இளைய மகன் ஆஸிஃப், “அஸ்ஸலாமு அலைக்கும் யார் பேசிறீங்க” என்று கேட்டுக்கொண்டே, “ஓ டாடியா, ஓகே டாடி…ஒன் மினிட், மம்மி, மம்மி,……டாடி போன்ல இருக்காங்க” என்று ஜஸீலாவிடம் போனைக் கொடுத்து விட்டு ஓடிவிட்டான்.

சிரித்துக் கொண்டே, “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றேன்.

மறுபுறத்திலிருந்து வ அலைக்கும் ஸலாமுக்கு பின்னர் சிறுமௌனம்.

“என்னங்க என்ன விஷயம் எதுவரைக்கும் போய் சேர்ந்தீங்க?”.

“பாதி தூரம் கடந்து விட்டேன்….”

“சொல்லுங்க என்ன விஷயம்?”

போனை ஆஸிஃப் எடுத்து விளையாடியிருக்கிறான் என்பது புரிந்தது. “ஒண்ணுமில்லை….” என்றேன்.

“ஒண்ணுமில்லைன்னு சொல்றதுக்கா போன் செய்வாங்க..?”

ஐ லவ் யூ என்று கூற நாவின் நுனி வரை வார்த்தைகள் வந்தன. அதற்குள், “கார் ஓட்டும் போது போன் பேசாதீங்க, போய் சேர்ந்ததும் போன் செய்யுங்க” என்று கூறி னாள்.

“ஓகே –அஸ்ஸலாமு அலைக்கும்”.

“வ அலைக்கும் ஸலாம்” என்று கூறி போனை துண்டித்தாள்.

…… ………

உம்மாவின் வீடு வந்திருந்தது.

காரை நிறுத்தி விட்டு இனம் புரியாத ஒரு உணர்வுடன் கதவை தட்டினேன் .

“அஸ்ஸலாமு அலைக்கும்”

“வ அலைக்கும் ஸலாம், வாப்பா அப்துல்லாஹ்” என்றவாறு வேக வேகமாக முகத்தில் புன்முறுவலும் கண்களில் ஆனந்த கண்ணீருடனுன் உம்மா கதவை அகல திறந்தார்கள்.

வழக்கம் போல் அவர்களையும் மீறி கண்கள் கலங்க என் கன்னத்தில் இரு கரங்களும் வைத்து என்னை அணைத்து உற்று நோக்கியவாறு, “ஏன் வாப்பா ரொம்ப இளைச்சிட்ட? சரியா சாப்பிடறயா, இல்லையா? வா உள்ளே வா, உட்காரு” என்று அன்பான வார்த்தைகளுடன் கையை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார்கள். நாற்காலியில் அமர்த்திவிட்டு அருகில் கட்டிலில் அமர்ந்தார்கள்.

“ரொம்ப நாளுக்கப்புறம் சந்திக்கிறோம் இல்ல, அதான் உங்க கண்ணுக்கு அப்டி தெரியுதுமா நான் நல்லாதான் இருக்கேன். நீங்கதான் உண்மைலேயே ரொம்ப இளச்ச மாதிரி தோணுது”. அம்மா உடல் மிகவும் இளைத்த மாதிரி தோன்றியது.

நான் பெருநாளுக்கு எடுத்து கொடுத்த பட்டுப்புடவையை உடுத்தி, அதன் மேல் வாப்பா ரிட்டையர் ஆகும் போது வாங்கிக் கொடுத்த வெள்ளைத் துப்பட்டியை அணிந்து நேரம் ஆகிவிடும் என்பதற்காக தயாராக இருந்தார்கள். முகத்தில் என்னைக் கண்ட சந்தோஷம் மற்றும் வெளியே என்னோடு செல்லப்போகிறோம் என்ற எண்ணம், அதன் களை முகத்தில் தெளிவாக மிளிர்ந்தது.

“இது உங்களுக்கு ஜஸீலா கொடுத்த அன்பளிப்பு” ஜஸீலாவும் நானும் பல கடைகள் அலைந்து தேடி வாங்கிய அந்த துப்பட்டியை அம்மாவிடம் கொடுத்தேன்.

“அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் உங்களுக்கு எல்லாவித ரஹ்மத்தும் வழங்கட்டும்” என்ற உம்மாவின் கண்கள் மீண்டும் பனிக்கத் துவங்கின.

“உம்மா சரி புறப்படலாம், இல்லைன்னா ரொம்ப நேரம் ஆகிடும். போகும் வழியிலேயே பேசிக்கலாம்” என்றேன்.

“சரிப்பா புறப்படலாம், அப்பத்தான் நீ திரும்பி போய் சேர்றத்துக்கு லேட் ஆகாது.” என்றாவாறு உம்மா கட்டிலை விட்டு எழுந்தார்கள்.

இருபது நிமிட பயணம் உம்மாவின் பல வித பேச்சுக்களில் கரைந்ததே தெரியவில்லை. ஹோட்டல் ரோஜாவின் முன் காரை பார்க் செய்து விட்டு உள்ளே நுழைந்தோம். என் கையைப் பிடித்தவாறு உம்மா உற்சாகமாக நடந்தார்கள். ஹோட்டலில் அதிகம் கூட்டம் இருக்கவில்லையென்பதால் உம்மாவுக்கு மனமாற பேச வசதியாக இருந்தது. ஒவ்வொன்றாக அவர்கள் பேசப் பேச நான் காது கொடுத்து கேட்டு அவ்வப்போது சில பதில்கள் கூறிக்கொண்டே என்று மிகவும் சந்தோஷமாக மெனுவை எடுத்து, “என்ன சாப்பிடுறீங்க? சொல்லுங்கம்மா” என்றேன்.

“நீ சின்ன பிள்ளையா இருக்கும் போது நானும் வாப்பாவும் உனக்கு என்ன வேணும்னு கேட்போம் ஞாபகம் வருதா? இப்ப நீ அந்த நிலைக்கு அல்லாஹ் உதவியால வந்துட்ட. உன்னை பார்த்தது, பேசியது எனக்கு வயிறு நெறஞ்ச மாதிரி இருக்கு. பசியே தீர்ந்து போயிடிச்சிப்பா ” என்றார்கள்.

“எனக்கும் அப்படித்தான் இருக்கும்மா” என்று என்னுடைய நிலையையும் கூறினேன்.

உண்மையிலேயே உம்மாவை இப்படி தனியாக சந்தித்து மனம் திறந்து பேசுவது எவ்வளவு இன்பமான நிம்மதியைக் கொடுக்கிறது என்று வர்ணிக்க முடியவில்லை.

சூப், பிரியாணி, ஸலாட் என்று விதவிதமாக ஆர்டர் கொடுத்தோம். மெதுவாகச் சாப்பிட ஆரம்பித்தோம். சாப்பிட முடியாமல் உம்மாவை பார்த்துக் கொண்டு இருந்த போது, “நான் ஊட்டி விடறேன். நீ சாப்பிடு” என்று கூறி உம்மா ஊட்டினார்கள். சிறிய வயதில் எனக்கு உம்மா ஊட்டியது, எனக்கு ஊட்டு என்று அம்மா கேட்டு நான் ஊட்டியது போன்று பழைய ஞாபகம், பழைய பேச்சுக்கள் என்று நேரம் ஓடியதே தெரியவில்லை.

“ரொம்ப நாளுக்கப்புறம் இன்னைக்கு தான்பா இவ்வளவு அதிகமா சந்தோஷமா சாப்பிட்டு இருக்கேன். அல்லாஹுவுக்கு நன்றிப்பா இப்படி ஒரு ஏற்பாடு செஞ்சதுக்கு.” என்றார்கள்.

“உம்மா இது முக்கியமா யாரோட விருப்பம் தெரியுமா? ஜஸீலாவின் விருப்பம்” என்றேன்.

“அல்லாஹு அக்பர். அல்லாஹ் ஜஸீலாவிற்கு நல்ல கூலி தரட்டும்னு மனமார துவா செய்றேன் வாப்பா, தங்கமான மனைவிய அல்லாஹ் உனக்கு தந்திருக்கான்பா” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்கள்.

“ஆமாம்மா. அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹுவுக்கு நன்றி சொல்லணும்மா. எனக்கு இந்த ஆசை இருந்தாலும் அதைச் சொல்லி ஜஸீலா புரிஞ்சிக்காம வீணா குடும்பத்தில பிரச்சினை எதுக்குன்னு நான் சொல்லவே இல்ல. ஆனா ஜஸீலா மனதிலே தன்னாலேயே இந்த எண்ணம் வந்து என்னை அனுப்பி வச்சது அல்லாஹுவுடைய மிகப் பெரிய அருள் தான்மா. ஜஸீலா என் மனதிலே இன்னும் உயர்ந்துட்டாம்மா” என்று நானும் மகிழ்ச்சி பொங்க கூறினேன்.

“நீ கொடுத்து வச்சவன்ப்பா. அல்லாஹ் உனக்கு உன் நல்ல குணத்தைபோல உன் மனச அறிஞ்சு நடக்கற நல்ல மனைவியையும் கொடுத்து இருக்கான்பா, அல்ஹம்துலில்லாஹ், உங்களுக்கு அல்லாஹ்வோட உதவியால ஒரு குறையும் வராது” என்றார்கள்.

வெய்ட்டர் பில்லுடன் வந்தது பேச்சை நிறுத்தச் செய்தது.

“நான் தரேன்ப்பா நீ இவ்வளவு தூரத்தில இருந்து வந்திருக்க இல்ல எனக்காக…” என்று உம்மா கைப்பையைத் திறக்க முயன்றார்கள்.

நான் தடுத்துக்கொண்டே, “இல்லம்மா பரவா இல்ல… நான் தரேன்மா. நீங்க என் கூட வெளியே வர்ரேன்னு சொன்னதே பெரிய காரியம்மா அல்ஹம்துலில்லாஹ்…” என்று கூறினேன்.

“அப்ப ஒரு கண்டிஷன். அடுத்த முறைக்கு நான்தான் பில் தருவேன்…” என்றார்கள்.

“சரிங்கம்மா…. அடுத்த முறை நீங்களே கொடுங்க..” என்றேன்.

வெய்ட்டர் பில்லுடன் நான் கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு திரும்பினார்.

**************

சில மாதங்கள் ஓடின. திடீரென்று ஒரு நாள், உம்மா இந்த உலகை விட்டுப் பிரிந்திடுவார்கள் என்று எதிர்பார்க்கும் முன்னரே எங்களை விட்டுப் பிரிந்தார்கள். மனது ரொம்ப வேதனைப்பட்டது, கதறியது. கண்களில் நீர் தாரை தாரையாக வழிந்தோடியது.

“ஐ லவ் யூம்மா” என்று குலுங்கி குலுங்கி அழுதபோது ஆறுதல் சொல்ல உம்மாவின் தோள் கிடைக்கவில்லை. பரிவோடு இருந்தது ஜஸீலா மட்டுமே!

ஏன் இவ்வளவு சீக்கிரம் உம்மாவும் எங்களை விட்டுட்டு போய்ட்டாங்க? என்ற கேள்விக்கு பதிலில்லை. இப்பத்தான் இன்பமான ஒரு சந்திப்பு நடந்திருந்தது. அடுத்த சந்திப்புக்கு உம்மா ரொம்ப ஆசைப்பட்டாங்க. ஆனா அதுக்குள்ள… இப்படி! இந்த வேதனையில் நாட்கள் நகர்ந்தது. சரி அல்லாஹ்வின் ஏற்பாடு அப்படி என்ற ஆறுதலுடன் பொழுதுகள் நகர்ந்து கொண்டிருந்தன.

ஒருநாள் அஞ்சலில் ஒரு கவர் வந்தது. ஆச்சரியத்துடன் திறந்தேன். கவர் வந்தது உம்மாவிடமிருந்துதான்.

உள்ளே உம்மாவின் அழகான எழுத்துக்கள்….!

அஸ்ஸலாமு அலைக்கும் அப்துல்லாஹ். உன்னுடைய டின்னர் என்னால் என்றும் மறக்க முடியாது.

அப்துல்லாஹ்… அந்த இரவு எனக்கு எவ்வளவு விலையுயர்ந்தது என்பதை என்னால் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கணும் என்று நான் ரொம்ப ஆசைபடுகிறேன். அது நிறைவேறுமான்னு தெரியாது. ஆனால் நான் சொன்னபடி அதே நாள் நீ வாஷ் பேஸினில் கை கழுவ போனப்ப அடுத்த ஆண்டு அதே நாள் இரண்டு பேருக்கு டின்னர் புக் செய்து பில் பணம் கொடுத்துட்டேன்.

இன்ஷா அல்லாஹ், ஹயாத்தா இருந்தா மீண்டும் ரெண்டு பேரும் சந்திப்போம். இல்லைன்னா நீயும் ஜஸீலாவும் தனியா போய் அதே போல் சந்தோஷமா சாப்பிடுங்க.

ஐ லவ் யூ அப்துல்லாஹ் & ஜஸீலா

வஸ்ஸலாம்…

அன்புடன்,

உம்மா

என் கண்களில் வழிந்தோடிய கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் கடிதத்தை ஜஸீலாவிடம் கொடுத்தேன். படித்த அவள் கண்களிலும் கண்ணீர் துளிர்த்ததைக் காண நேரிட்டது.

“அப்துல்லாஹ் அந்த இரவு எனக்கு எவ்வளவு விலையுயர்ந்தது என்பதை என்னால் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.” என்ற உம்மாவின் வரிகள் மனதில் திரும்பத்திரும்ப ஓடின.

அப்போது தான் நான் உரிய நேரத்தில் ஐ லவ் யூ என்று கூறுவதன் முக்கியத்தையும் நமது அன்பிற்குரியவர்களுக்குரிய நேரத்தை வழங்குவதன் அவசியத்தையும் முறையாக உணர்ந்தேன்.

இந்த உலகத்தில் அல்லாஹ்வின் கட்டளைகளை பேணுவதையும், நமது குடும்பத்தினர்களை அரவணைத்து செல்வதையும் விட வேறு எதுவும் முக்கியம் வாய்ந்தது இல்லை. ஆகையால் இன்றே அவர்களின் உரிமையை வழங்கி விடுங்கள். ஏனென்றால் அதை இன்னொரு நேரத்திற்கென்று தள்ளி போட முடியாது.

இந்த மகத்தான உண்மையை உணர்ந்து செயல்படக்கூடியவர்களாக மேலும் இதன் முக்கியத்துவத்தை பிறருக்கும் உணர்த்திட அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.

தகவல்: அபூ அய்னு, தமிழில்: இப்னு ஹனீஃப்
வெளியிடப்பட்டது: 02 பிப்ரவரி 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *