கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 10,877 
 

நேரம் மாலை 5.45. இவ்வளவு நேரமும் இங்கே என்ன நடந்தது என்று உணர்வதற்கு முன்னாலேயே எல்லாம் முடிந்துவிட்டது. இன்றைய பொழுது எப்படிப்போனது என்றே தெரியவில்லை. எனது கைத்தொலைபேசி சார்ஜ் இல்லாததினால் மூச்சுப்பேச்சின்றி கிடந்தது. இன்று காலை 6.30 அளவில் மனைவியின் தொலைபேசி அலறலில் விழுந்தடித்து வைத்தியசாலைக்கு சென்றபோது, குடும்பத்தின் தலைமைச்செயலராக இருந்த மாமியும் எனது கைத்தொலைபேசிபோல் அமைதியடைந்திருந்தார்.

முந்தைய நாள் காலை வைத்தியசாலையில், மாமியின் மூக்குவழியாக குழாய் ஒன்றை தாதியர்கள் செலுத்த அதை அனுமதிக்காமல் அங்கும் இங்கும் புரண்டுகொண்டிருந்தவரை கட்டுப்படுத்தமுடியாமல், என்னை அழைக்க நான் என் இருகைகளாலும் அவரை இறுக்கமாக பிடிக்க, தாதியர்கள் மிகுந்த பிரயத்தனத்துடன் குழாயை உட்செலுத்தினர். மாமியின் உடலில் என்னவொரு பலம்? நிச்சயம் அந்த நேரத்தில் என்மீது கடுப்பாகியிருப்பார் என்பது மட்டும் உறுதி.

என்னப்பா உங்கட அம்மாவின் பலம்? என மனைவியிடம் நான்கூற, அவ அந்த கால கூடைப்பந்து வீராங்கனை, அதிலும் காரைநகர் சாப்பாட்டில் வளர்ந்தவ என்று பெருமையாக சொன்னாள் மனைவி.

இன்று, மூச்சுப்பேச்சின்றி அவரிருக்க பிள்ளைகள் வாய்பேச முடியாது அழுதுகொண்டிருந்தனர். அழுத கண்களுடன் சகலன் இனி அடுத்தவேலைகளைப் பார்ப்போம், நான் மாமாவை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போய் அங்கு வேலைகளைப் பார்க்கின்றேன், நீங்க இங்க பிரச்சினைகளை முடித்து மாமியை வீட்டை கொண்டுவாங்கோ என்று என்னிடம் கூறி முடிப்பதற்குள்,……

“நாங்கள் எல்லாம் செய்துதாறம்… மோர்ச்சறிக்கு கொண்டுபோகமுதலே பொடியை வெளியில எடுத்திரலாம், வாங்க பெட்டியை பார்த்து செலக்ற் பண்ணுங்க” என்றார் ஒருவர்.

நான் அவரை சந்தேகத்துடன் பார்க்க, நான் இங்கே வைத்தியசாலையில்தான் வேலை செய்தனான், இப்ப பென்சன் அதனால் இந்த சேவையை செய்து வருகின்றோம் என்று தனது அந்தியகால சேவையை அறிமுகப்படுத்தினார்.

நான் எனது மச்சானைப்பார்க்க, அவர் அம்மா இறந்தசோகத்தில் ஏதோ விசயம் நடந்தால் காணும் என்னும் நிலையில் காணப்பட்டார். இதுதான் அந்த நபரின் பலமும். ஒட்டுண்ணி மாதிரி ஒட்டிக்கொண்டே நச்சரித்துக் கொண்டிருந்தார். இறப்பின் இழப்பில் இருக்கும் உறவினர்களை அரியண்டப்படுத்தி தங்களது வியாபாரத்தை பார்ப்பது. தவித்தமுயல் அடிப்பதுபோலிருந்தது. வைத்தியசாலைக்குள் இந்த வியாபாரத்துக்கு யார் இவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள்???

சரி வேலையைப் பார்ப்போம் என்று அவருடன் வெளியில் வர, வெளியில் சிலர் உள்ளுக்குள்ளேயே பிடிச்சிட்டியே என குரல் கொடுக்க, அவரோ எங்கள் குடும்பத்தில் ஒருவராக ஒருவித படபடப்புடனான வேகத்துடன் சவப்பெட்டிக்கடைக்குள் எம்மை அழைத்துச் சென்றார்.

பெட்டிக்கு இவ்வளவு, காருக்கு இவ்வளவு, என்பார்ம் பண்ணுவதற்கு இவ்வளவு? என அவர் கூறிச்செல்ல, என்னுள் ஒரு கேள்வி ஏன் என்பார்ம் பண்ணவேடும்? எல்லாப்பிள்ளைகளும் பக்கத்திலேயே உள்ளனர். நாளை சனி, சனிப்பிணம் தனிப்போகாது, அடுத்தநாள் மாதப்பிறப்பு. அப்போ? இன்றே செய்வோம். நேரம் பார்த்தேன் காலை 8 மணி.

மச்சானிடம் எதற்கும் பக்கத்து கடையிலும் பார்ப்போம் என்று நான்கூற, எம்மை அழைத்து வந்தவர் கொஞ்சம் கடுப்பானாலும், எல்லா வசதியும் செய்து தரலாம் என்றவாறு, வேறு வேறு விலைகளில் பெட்டிகள் உள்ளது என பல பெட்டிகளைக்காட்டத் தொடங்கிவிட்டார்.

எப்படியும் மாமியின் புடவையை மாற்ற வேண்டும். அதற்கு வீடுசென்று வரவேண்டும் என்று எண்ணியவாறு, பெட்டிக்கடைக்காரரிடம் முடிவைச்சொல்லிவிட்டு “என்பார்ம்” பண்ணவேண்டாம், தேவையென்றால் போன் பண்ணுகின்றேன் என்று கூறி இளைய சகலனுடன் வீடு நோக்கிப் புறப்பட்டோம்.

வீட்டை அடைந்தபோது வீடு மரணவீடு ஒன்றுக்காக ஆயத்தமாகிக்கொண்டிருந்தது. அழுதுகொண்டிருந்த மாமாவிடம் விடயத்தை கூறி இன்றே “பொடியை” எடுப்போம் (நானே மாமியை “பொடி” என்று விழிக்க மனம் சட்டென கனத்தது). அருகில் இருந்த ஊரவர் ஆமோதிக்க, தொலைபேசிகள் கதைக்க அனைத்து வேலைகளும் ஒருவித வேகத்தில் நிகழ, ஐயா 2 மணிக்கு வந்து, கிரியைகள் முடிய சுடலைபோக முடிவானது.

தகவல்கள் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு முகநூல், வைபர் எனப்பரவ, அவருக்கு சொன்னதா? இவருக்குச் சொன்னதா என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அந்த அவருக்கும் இந்த இவருக்கும் தொலைபேசியில் தகவல் தெரிவித்தபடி இயந்திர வேகத்தில் வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

மீண்டும் வைத்தியசாலைக்கு சென்று மாமியை எடுத்துச்செல்ல வேண்டிய நடைமுறைகளை முடித்து வெளியில் வாகனத்தில் ஏற்ற மாமியை ஸ்ரெச்சரில் கூட்டிவந்த வெள்ளைஉடை உடுத்தவர்கள் கையேந்தி நின்றனர். டிரைவரிடம் வாகனத்தை எடுக்கச் சொல்ல, நீ அவர்களுக்கு ஏதேனும் கொடுத்தாத்தான் எடுப்பேன் என்பதுபோல் என்னைப்பார்க்க, பின்னிருந்த சிலர் தேவையற்ற விதமாக பரபரப்பை ஏற்படுத்தி வெளியே போகச்சொல்ல, அரைமனதுடன் 200 ரூபாவினை அவர்களிடம் நீட்ட அவர்களும் அந்த 100 ரூபா நோட்டுக்களை அரைமனத்துடன் பெற, மாமியை பெட்டியில் வைத்து எடுத்துச்செல்வதற்காக நானும் மாமியும் அந்தியகால சேவை நிலையத்தை அடைந்தோம்.

இரண்டுநாள் வைத்தியசாலையில் இருந்த மாமியை இரண்டு நாட்களுக்கு முன் பார்த்த கோலத்தில் பட்டுடுத்தி, சவப்பெட்டியினுள் வைத்து பார்த்தபோது என்னையும் அறியாமல் கண்கள் கலங்க, அந்த இரு ஊழியர்களுக்கு என்னையும் அறியாமல் மனநிறைவுடன் எனது கை தட்சினை கொடுத்தது.

தொலைபேசி அழைக்க தம்பி பறைமேளத்துக்கு சொல்லவேணும். என்ற குரல் எனக்கு கேட்டதோ இல்லையோ? பக்கத்தில் இருந்து அந்தியகால சேவையை சேர்ந்தவருக்கு கெட்டுவிட்டது. தம்பி எங்கட ஆட்கள் இருக்கினம் எத்தனை பேர் தேவை? என்றார். நாலுபேர் மட்டும் பறை மட்டும். உடனே ஒழுங்குபடுத்தப்பட்டது. சம்பளம் பேசப்பட்டது.

தம்பி நான் சொன்ன காசை கொடுங்கோ. வேறை ஒன்றும் தேவையில்லை. வெள்ளை உடுப்போட டீசன்டா வருவினம் என்றவரை இடைமறித்த நான் வந்தபிறகு தண்ணிக்கு அதுக்கு இதுக்கு என்று கேட்கப்படாது என்றேன். ஒன்றும் கொடுக்கவேண்டாம். உங்களுக்கு சந்தோசத்துக்கு விரும்பினால் செய்யுங்கோ என்றார். நானோ செத்தவீட்டில் என்னடா சந்தோசம்? என்று நினைத்தவாறு மாமியுடன் வீடு சென்றேன்.

பல தடவை எனது வாகனத்தில் கூட்டிச்சென்றுள்ளேன். ஆனால் இன்று அவருடன் செல்வது?. கடைசி தடவையாகத். திரும்பி பெட்டியைப் பார்க்கின்றேன்.

வீட்டுக்கு கிட்ட வந்தபோது டிரைவரிடம் சொன்னேன் வாசலுக்கு கிட்டவாக வாகனத்தை நிறுத்தச்சொல்லி. ஏனென்றால் நான் மாமியை எனது காரில் ஏற்றும்போது அவர் நடக்க கஸ்டப்படுவதால் கேற்றுக்குகிட்டவாக, அல்லது வீட்டுவாசலுக்கு கிட்டவாக நிறுத்துவதுண்டு. ஆனால் வாகனம் நின்றவுடன் மாமியைத் தூக்க ஆட்கள் வரும்போதுதான் என் மனம் சொல்லிக்கொண்டது, சில நேரங்களில் மனிதமனங்கள் நிகழ்காலநிஜத்திலும், முந்தையநினைவுகளிலும் தத்தளித்துக்கொள்ளும் என்று.

வீட்டுக்கு வந்தபின்னர் நடந்தவை எல்லாம் ஆளொருவராக அவர்கள் அவர்கள் முறையில் நடாத்திக்கொண்டிருந்தனர்.

பறை முழங்கியது சிறிது நேரம், அதில் முதன்மையானவர் என்னிடம் வந்தார், அண்ணை காலையில் சாப்பிடவில்லை சாப்பாட்டுக்கு காசு என்றார். நேரத்தைப்பார்த்தேன் காலை 10.30. இவ்வளவு நேரமும் சாப்பிடாமல் இருந்திருப்பார்களா? செத்தவீட்டில் சாப்பிட காசு கேட்கிறார்களே? சரி சாப்பிடத்தானே என்று பணத்தினைக் கொடுத்தேன். சென்றவர் தரும்பி வந்தார், அண்ணை கடைக்குப்போகிறோம், என்று மண்டையைச் சொறிந்தார். தண்ணிக்கு காசு என்றார்? அதுக்கெல்லாம் தரமுடியாது என்றேன். பக்கத்தில் நின்ற ஊரவர்கள் அது வழமையாக கொடுப்பதுதான் கொடுங்கோ என்றார்கள். அப்பதான் நல்லா அடிப்பாங்கள்.

நான் நினைத்துக்கொண்டேன் அப்போ பேசிய பணத்துக்கு என்ன செய்வாங்கள்? மரண ஊர்வலம் தொடங்கியது. சந்தியொன்றில் நின்று பறை அடித்தார்கள். காணும் போகச்சொல்லுங்கோ என்றேன். பக்கத்தில் நின்றவர் சொன்னார் அந்ந வெள்ளைச்சட்டை அண்ணை அவங்கட கையில காசு வைச்சுட்டார் அதனால் கொஞ்ச நேரம் அடிப்பாங்கள் பொறுங்கோ என்று. எனக்கு தலை சுற்றியது. முதலில் வெள்ளைச்சட்டை அண்ணையை அகற்றவேண்டும். அவருக்கு ஒரு வேலையை அவருக்கு வில்லங்கத்துக்கு கொடுத்தேன். சுடுகாடும் வந்தது.

ஒவ்வொருமுறை சுடலைக்கு போகும்போதும் நினைப்பதுண்டு, புனிதமாக பேணவேண்டிய இடம் சுடலைப்பொடி பூசிய சிவனே இருக்கும் இடம் ஏன் இவ்வளவு அழுக்காகவும் கேவலமாகவும் இருக்கின்றது. கிரியைகள் செய்பவர் தேன் கேட்கிறார், தேனை ஊற்றுகிறார் படையலில் பின்னர் வீசுகிறார் போத்தல் உடைந்த சத்தம் கேட்கிறது. தொடர்ந்து நெய் போத்தல் உடைகிறது. பிளாஸ்ரிக் போத்தலில் பால், அது ஒருபுறம் வீசப்படுகிறது. பொலித்தீன் பைகள் வீசப்படுகின்றது.

இவற்றைப்பராமரிப்பவர்கள் அவற்றுக்கான ஒழுங்குமுறைகளை ஏன் செய்வதில்லை. சுடலைக்குள் பாதணி இன்றி செல்லவேண்டியவர்கள் இன்று பாதணியின்றி செல்லமுடியாதளவுக்கு. பிரேதத்தை தூக்கி மூன்றுதரம் அடுக்கிய விறகைச்சுற்றி வரும்பொழுது “கவனம் பிசுங்கான் வெட்டும்” என்ற வசனம் தொடர்கதையாகவே உள்ளது. சுடலைக்கிணற்றினை எட்டிப்பார்த்தேன் பச்சை நிறத்தில் தண்ணீர். பிளாஸ்ரிக் போத்தல்களும் குப்பைகளும், சொப்பிங் பைகளுமாக…. சாதாரணமாக கால் நனைக்கவே பயப்படுமளவுக்கு. ஆனால் நாளை இந்த தண்ணீரைக் கொண்டுதான் காடாத்தும் கிரியைகள். இவற்றையெல்லாம் செய்யவேண்டும். சுகாதாரம் தொடர்பானவர்கள் பார்க்கமாட்டார்களா?

ஒருவர் இறந்த பின்னர் செய்யப்படும் ஈமக்கிரியைகள் எவ்வளவு முக்கியமானது. சமய கலாச்சாரங்களுடன் தொடர்பானது. ஒரு கோயிலைப்போன்று பேணவேண்டிய சுடுகாட்டை நாம் எப்படிப் பேணுகின்றோம்? மீண்டும் பறை அடித்தவர்கள் வந்தார்கள், பேசிய பணத்தைக் கொடுத்தேன். மண்டையை சொறிந்தார்கள் போகும்போது தேத்தண்ணி குடிக்க பணம் என்றார்கள். நான் அவர்கள் வண்டியை உற்றுப்பார்த்தேன். என் கண்களுக்கு அவர்கள் ஈரல் கருகியிருப்பது தெரிந்தது. விறகடுக்கின்மேல் மாமி எரிவதைப் பார்த்தேன்,

ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உருப்பெற்ற

பேருஞ் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளுஞ்

சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே

யாருஞ் சதமல்ல நின்தாள் சதம்கச்சி ஏகம்பனே.

என்று பட்டினத்தார் பாடியதே மெய்யென்று எரிந்து கொண்டிருந்தார். இதனை நாம் உணரும் வரையில் மாமியின் நினைவுகள்…..?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *