இலுப்பம் பூக்கள்!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: September 6, 2012
பார்வையிட்டோர்: 9,742 
 

அந்த பாடசாலைக்கு நாங்கள் போய்ச் சேர்ந்தபோது நேரம் காலை பத்து மணியைத் தாண்டியிருந்தது. அந்த இடத்திலே இப்படியொரு பாடசாலை இருக்கின்றதா என்று வியந்தவாறு முன்புற ஆசனத்திலிருந்து இறங்குவதற்குத் தயாரானேன்.

‘சேர், இந்தாங்க பைல்’ என்று இஞ்சினை நிறுத்தாமல், ஒருகையால் ஸ்டீயரிங்கைப் பிடித்தவாறு எடுத்துத் தந்தான் பஷீர்.

‘பஷீர், வாகனத்தை உள்ள போடவேணாம். ரிவர்ஸ் எடுக்கக் கஷ்டம்இ உன்ட வீடு இஞ்ச எங்கேயோதானே பக்கத்துலதானே இருக்கு…? நாங்க வர லேட்டாகும். போய் ஏதும் சாப்பிட்டுக் குடிச்சிட்டு வாறதெண்டா போயிட்டு வா!’ என்று சொல்லிவிட்டு நாங்கள் இறங்கியதும் மகிழ்ச்சியோடு விர்ரென புறப்பட்டுப்போனான்.

அவன் சென்றதும், இடது புறமாக இருந்த பிரதான வாயில் வழியாக நானும் என்கூட துணைக்கு அனுப்பப்பட்டிருந்த எங்கள் DDE பெரியநாயகம் ஸேரும் உள்ளே நுழைந்தோம். அப்போது திடீரென அவர், ‘ரனீஸ், நீங்க உள்ள போங்க! நான் பக்கத்தில போய் ஒரு கிட்கார்ட் ஒண்டு எடுத்திட்டு வாறன்’ என்று போனைக் பார்த்துக்கொண்டே சற்றுத் தள்ளியிருந்த சில்லறைக் கடையை நோக்கி நடக்கலானார்.

அது ஒரு 1C தரத்திலுள்ள பாடசாலை. பிரதான வாயிலுக்கு இடதுபுறமாக ஒரு இருதள மாடிக்கட்டிடமும் சுற்றிலும் இரண்டொரு பழைய கட்டிடங்களும் மத்தியிலே ஒரு திறந்த முற்றமும் இருந்தன. அந்த முற்றத்தின் ஓரங்களில் விரித்துவைத்த பச்சைக்குடைகளாய் இலுப்பை மரங்கள் சில வரிசை கட்டி நின்றிருந்தன. நான் உள்ளே சென்றபோது பாலர் வகுப்புச் சின்னஞ்சிறு மாணவர்கள் முற்றத்திலே இரைச்சலுடன் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
புதிதாய்த்தோற்றமளித்த மாடிக்கட்டிடத்தில்தான் அதிபர் காரியாலயம் இருக்கும் என்ற யூகத்தோடு அதை நோக்கி நடந்தேன்.

அப்போது ஒருவரையொருவர் துரத்தி வந்த இரு சின்னஞ்சிறு பாலகர்கள் என்கால்களின் மீது வந்து மோதிக்கொண்டு தடுமாறி நின்றார்கள். பழக்கமில்லாததால் என்முகத்தை அண்ணாந்து பார்த்து செய்வதறியாது விழித்தார்கள். அவர்களிடம் குனிந்து, ‘ஹலோ! குட்மோனிங்! உங்கட அதிபர் எங்க?’ என்று கேட்டேன். அவர்கள் இருவரும் காட்டிய திசையானது எனது யூகத்துக்கு நேரெதிராக இருந்தது. ஆச்சரியத்துடன் அவ்விரு சிறுவர்களுக்கும் நன்றி சொல்லிவிட்டு பழைய கட்டிடத்தை நோக்கித்திரும்பி நடந்தேன். தரைமீது இறைந்து கிடந்த இலுப்பம் பூக்களின் வாசனை வழியெங்கும் கூடவே வந்தது.

நான் முகம்மது ரனீஸ்கான். எல்லோரும் சுருக்கமாக ‘ரனீஸ்’ என்றுதான் அழைப்பார்கள். இயற்கைத் துறைமுகநகரத்தின் வலயக்கல்வி அலுவலகத்திலே நிர்வாக அலுவலராக இருக்கின்றேன். இந்தப் பதவிக்கு நான் நியமிக்கப்பட்டு வெறும் ஒன்றரை வருடங்கள்தான் பூர்த்தியாகியுள்ளது. இப்போது நான் வந்திறங்கியுள்ள இந்தப்பாடசாலையிலே கற்பிக்கும் ஒர் ஆசிரியர் தொடர்பாக சிறுவிசாரணை ஒன்றை மேற்கொள்வதற்காக எனது மேலதிகாரியினால் அனுப்பப்பட்டிருந்தேன்.

‘அஸ்ஸலாமு அலைக்கும் ஸேர்!’
குரல்வந்த திசையிலே முகம் தவிர உடல் முழுவதையும் கறுப்பு அங்கியினால் போர்த்திருந்த ஒர் ஆசிரியை நின்றிருந்தார். அவரை இதற்கு முன்பு எங்கோ பார்த்திருந்தது போலத் தோன்றியது. குரலும் பரிச்சயமானது போலிருக்கவே, ‘நீங்க…?’ என்று வினவினேன்.

‘நான்தான் ஸேர், மரீனா டீச்சர்! வைஸ் ப்ரின்ஸிப்பல்… இப்ப கொஞ்சம் முதல் நீங்க…டெலிபோன்கோள் பண்ணினது எனக்குத்தான்! வாங்க ஸேர்!’

‘ஓ! நீங்கதானா அது! இதென்ன ஒவ்பிஸை லொக் பண்ணி வச்சிருக்கிறீங்க!? ப்ரின்ஸிப்பல் இல்லையா?’ என்றவாறு சுற்றிலும் நோட்டமிட்டேன். தூரத்து வகுப்புகளிலே கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியைகள் சிலர் என்னைச் சிறிது கலவரத்தோடு எட்டிப்பார்ப்பது தெரிந்தது.

‘அவரா..? அவர் இப்ப கொஞ்ச முதல்தான் ஸேர்.. ஒரு மையத்து வீட்டுக்குப் போனார்..கோல் பண்ணிக் கூப்பிடவா ஸேர்?’

அறையைத் திறந்து அதிபரின் மேஜைக்கு முன்னாலிருந்த ஆசனத்தில் என்னை அமரச்செய்தபின்பு மின்விசிறியைச் சுழலவிட்டார், மரினா ஆசிரியை. நான் இருந்த இடத்திலிருந்து பார்த்தபோது புதிய மாடிக்கட்டிடத்தின் படிக்கட்டுக்கள் நேரே தெரிந்தன.

‘முதல்ல என்னை ஸேர் என்டு கூப்பிடுறதை நிப்பாட்டுங்க மிஸஸ் மரீனா. ஐ’ம் ரனீஸ். ஜஸ்ட் கோல் மீ மிஸ்டர் ரனீஸ் ஓகே! வேணாம்..டீச்சர்!, அதிபர் ஷோர்ட் லீவ்லதானே போயிருக்கிறார். அவர் வாற மாதிரி வரட்டும். நீங்க கொஞ்சம் இங்க நிண்டால் போதும். ஓகே! அவரைக் கூப்பிடுங்க!’

‘யாரை ஸேர்…? ஸொறி! யாரைக் கூப்பிட?’

‘அட உங்களுக்குத் தெரியாதா என்ன…? நான் இங்க வரமுதல்ல கோள்பண்ணி, லீவு முடிஞ்சு இண்டைக்கு அவர் வந்திருக்கிறாரா என்டு உங்களிடம்தானே விசாரித்தேன். மறந்திட்டீங்களா என்ன? சொல்லுங்க பாப்பம்!’ என்றேன் லேசான கோபத்துடன். எனது கண்களை நேரே பார்க்க முடியாமல் வேறு எங்கோ பார்வையைத் திருப்பிக் கொண்டார் அந்தப் பெண்மணி.

‘ஓ! ஷாபிக் ஸேரையா..? இருங்க கூட்டிட்டு வாரேன்!’ என்று அந்த ஆசிரியை வெளியேறிச் சென்றவர் சற்று நேரத்திலே திரும்பிவந்து, ‘அவரு 10ம் வகுப்பில படிப்பிச்சிட்டிருக்கார். நான் விசயத்தைச் சொல்ல, அவசரமா…என்று திருப்பிக் கேட்கிறாரு…? அவர் எப்பவுமே…இப்படித்தான்…’ என்று ஆரம்பித்த மரீனா டீச்சரை எனது சைகையால் நிறுத்தினேன்.

‘சரி, பரவாயில்லை.. அவர் பாடத்தை முடிச்சிட்டே வரட்டும். படிப்புத்தானே முக்கியம்…? மரினா டீச்சர் நீங்களும் க்ளாசுக்குப் போங்க!’ என்று திருப்பியனுப்பி விட்டு எழுந்து நின்று யன்னலினூடாகப் வீதியைப் பார்த்தேன். அங்கு தூரத்திலே இருந்த சில்லறைக் கடையிலே என்னுடன் வந்தவரான பெரியநாயகம் யாருடனோ பேசிக்கொண்டு நிற்பதைக் கண்டேன்.

இந்த விசாரணைக்கு நான் வந்ததே ஒரு பெரிய கதை. ஓய்வுபெற்ற பழைய கல்விப்பணிப்பாளர் ஒருவரைத் தொடர்ந்து கடந்த வாரம்தான் புதிதாக பதவியேற்றிருந்தார் எனது மேலதிகாரியான ரவீந்திரன் ஸேர். இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னை அவர் தனது பிரத்தியேக அறைக்கு அழைத்திருந்தார்.

இப்போது நான் வந்திருக்கும் இந்தப் பாடசாலையின் பெயரைக்கூறிவிட்டு, ‘ரனீஸ், உங்களுக்கு நான் வித்தியாசமான வேலை ஒன்றைத்தரப்போறன். நீங்களும் எப்ப பார்த்தாலும் பைல்களோடையும் கம்ப்யூட்டரோடையும் மாரடிச்சிட்டிருக்கீங்கதானே…? இன்டைக்கு டிப்ரெண்டா ஒரு வேலை செய்யுங்க. ஒருக்கா நான் சொல்லுகிற ஸ்கூலுக்குப் போய் அங்க யாரோ ஷாபிக்கோ… ஷாபிக் என்டு சொல்லி ஒரு மாஸ்டர்… ஒருத்தன்..இருக்கிறானாமே…? ம்ம்.. எல்லாம் உங்கட ஆக்கள்தான்!. எதுக்கெடுத்தாலும் கூடக்கூட றூல்ஸ் கதைச்சி ஸ்கூலக் குழப்பிட்டு இருக்கிறானாம் என்று நம்மட தனபால் சொல்லிட்டிருந்தார்.. கொஞ்சம் என்ன ஏது என்டு பாத்திட்டு வாங்களேன்…ரனீஸ்’ என்றார்.

‘ஓக்கே…ஸேர், ஆனா நான் எப்படி இந்த வேலையை…?’

‘ஆக்சுவலா, இது நாந்தான் போக வேண்டிய வேலை…! யூ நோ! நான் வந்து பொறுப்பெடுத்ததுக்கு இன்னும் மத்த வேலைகளே முடியல்ல..! அதோட நான் கொஞ்சம் பெற்றிக்கலோ போய் வரவேண்டியிருக்கு…! ம்ம்.. நீங்க அங்கே பெரிசா ஒண்ணும் செய்ய வேண்டியதில்லை.’

‘சரி ஸேர்’

‘நீங்க அவனுக்கு அங்க என்ன பிரச்சினையென்று முதல்ல பாருங்க! அவன் டைமுக்கு க்ளாசுக்குப் போய் பிள்ளைகளுக்கு நல்லாப்படிப்பிக்கிற ஆளாம் என்டு நம்மட இங்லீஷ் AD யும் சொன்னவ. பொதுவா ஒருவன் நேரந்தவறாம வகுப்புக்குப்போய் நல்லாப் படிப்பிச்சானென்டா நிச்சயமா அவனுக்கு இந்த ‘நோட்ஸ் ஒப் லெஸ்ஸன்’, லெஸ்ஸன் ப்ளானெல்லாம் எழுதிவைக்க நேரமிருக்காது தெரியுந்தானே…? அதைவச்சே ஏதாவது பிழையப் புடிச்சு… அதை இதைக் கேட்டு.. சும்மா தெரியாதா… ரனீஸ், கொஞ்சம் ஆளப் பயங்காட்டிட்டு வாங்க…! அது போதும்..?’

‘நான் மட்டும் தனியாகவா..?’

‘இல்லை…நம்ம DDE பெரியநாயகம் சும்மாதானே இருக்கிறாரு…கூட்டிட்டுப் போங்க..மற்றது, அந்த ஸ்கூல் விசயங்களை நம்மட தனபால் ஸேருகிட்ட கேளுங்க.. நிறையக் கதை கதையாச் சொல்லுவாரு..’ என்று நமுட்டுச்சிரிப்புடன் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ஆனால் அந்தச் சிரிப்புக்குரிய அர்த்தம் அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

நான் தற்போது நிர்வாக உத்தியோகத்தராக இருக்கும் அலுவலகத்திலே அனுபவம் நிறைந்த பெரியநாயகம் உட்பட பலதரப்பட்டவர்களும் பணிபுரிகின்றார்கள். அவர்களிலே இன்னும் பாடசாலையிலே கற்பிக்க வேண்டிய பல ஆசிரியர்கள் மட்டுமல்ல எங்கள் மேலதிகாரி ரவீந்திரன் ஸேரின் நண்பரான தனபால் போன்ற சில முன்னாள் பாடசாலை அதிபர்களும் அடக்கம்.

நாடுமுழுவதும் இருக்கும் பாடசாலைகளிலெல்லாம் ஆசிரியர்கள் தட்டுப்பாடுள்ள நிலைமையிலே இவர்களையெல்லாம் ஏன் இங்கே வலயக்கல்வி அலுவலகத்திலே வீணாக வைத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்று வந்த புதிதிலே நானும் வியந்திருக்கின்றேன். ஆனால் கற்பித்தல் திறமையை இழந்துவிட்டவர்களும் பாடசாலைப் பணத்திலே ஊழல்கள் குற்றச்சாட்டுகளுக்குள்ளாகி பெற்றோர்களாலும் ஊர்மக்களாலும் விரட்டியடிக்கப்பட்ட அதிபர்களும்தான் அலுவலகத்திலே ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தப் பிரகிருதிகள் என்ற இரகசியம் பின்புதான் எனக்குத் தெரியவந்தது.

முன்னாள் அதிபர் தனபால், இப்போது நான் விசாரணைக்காக வந்திருக்கும் இந்தப் பாடசாலையிலே நீண்ட காலமாக அதிபராக இருந்தவராம். அவரது பதவிக்காலத்திலே இந்த பாடசாலைக்கு வருகின்ற எந்தவொரு கல்வியதிகாரியையும் அயர்ந்து போய்விடச் செய்துவிடுவாராம். அந்தளவுக்கு ஆவணங்களையெல்லாம் மிகநேர்த்தியாகவும் இற்றைப்படுத்தியும் வைத்திருப்பாராம். இதற்காகவே ஹிட்லரைப் போன்று தன்கீழ் வேலை பார்த்த ஆசிரியைகளையெல்லாம் சாறாகப்பிழிந்து காட்டியவராம். தன்னை ஒரு சிறந்த நிர்வாகி என்று கல்வி அலுவலகம் கொண்டாட வேண்டுமென்பதே அவருடைய முதன்மையான நோக்கமாக இருந்த காரணத்தால் ஆவணங்களை தயார் செய்து வைத்திருந்த அளவுக்கு இந்தப்பாடசாலையின் கல்வி அபிவிருத்தியையோ மாணவர்களின் ஆளுமை விருத்தியையோ அவர் வளர்த்தெடுக்கத் தவறிவிட்டார்.

கல்வியதிகாரிகளிடம நல்லபேர் வாங்கிய இறுமாப்பிலே திளைத்த முசுட்டுப் பேர்வழியான தனபாலுக்கு ஒருகட்டத்தில் கர்வம் உச்சிக்கேறியதாம். பெற்றோர்கள் நலன்விரும்பிகள் பொதுமக்கள் யாரையுமே மதிக்காமல் நடக்கத் தொடங்கினாராம். இதனால் இந்த ஊர்மக்களின் அதிருப்தியும் எதிர்ப்புணர்வும் பெருகியதிலே கடைசியிலே ஒருநாள் அது ஓர் பெரும் ஆர்ப்பாட்டமாக வெடித்தது. அந்த வெடிப்பின் முனைப்பிலே, ‘இந்தச் சண்டாளன் எமக்கு வேண்டவே வேண்டாம்!’ என்று ஏறத்தாழ ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அடித்துத் துரத்திவிட்டதனால்தான் வேறுவழியின்றி எங்கள் அலுவலகத்தில் அஞ்ஞாதவாசம் செய்து கொண்டிருக்கின்றார் இந்த தனபால்.

இப்போதெல்லாம் எங்கள் அலுவலகத்திலே எங்காவது மூலையிலே குந்தியிருந்து கொண்டு தன்னை அவமதித்தவர்களையெல்லாம் எப்படிப் பழிதீர்க்கலாம் என்று கறுவிக் கொண்டிருப்பதுதான் அவரது பிரதான வேலை. அதேவேளை தற்போது எங்கள் பணிப்பாளர் ரவீந்திரன் ஸேர் உட்பட தனது சமவயது நண்பர்களிலே பலர் கல்வியதிகாரிகளாக இருப்பதால் அவர்களை நச்சரித்து சில காரியங்களைச் சாதித்துக் கொண்டிருப்பதையும் நானறிவேன். அந்தக் காரியங்களிலே பிரதானமானது எது தெரியுமா? இந்தப் பாடசாலையிலே இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும் தனக்கு வால்பிடித்துப் பணியாற்றிய சில பழைய ஆசிரியைகளை பயன்படுத்தி இப்போதுள்ள புதிய அதிபரையும் மீறி தனது விருப்பு வெறுப்புக்கேற்ப இந்தப் பாடசாலையிலுள்ள தனது எதிரிகளையெல்லாம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பதுதானாம்.

‘என்ன ரனீஸ்.. பெரிய யோசனைபோல.. என்னவாம் ஆள் வந்திருக்கானா?’ என்றபடி உள்ளே வந்து அருகிலே இருந்த நாற்காலியிலே அமர்ந்து ஆசவாசப்படுத்திக் கொண்டார், பெரியநாயகம். சற்றுத் தூரத்தில் எங்கோ ரயில்வண்டியொன்றின் இரைச்சல் ஓசை கேட்டது.

‘ஓம் ஸேர்! ஆள் க்ளாஸ்ல இருக்கிறாராம். பாடத்தை முடிச்சிட்டே வரச்சொல்லியனுப்பியிருக்கிறேன். அதுசரி, நம்ம ரவீந்திரன் ஸேர் சொன்ன மாதிரி, உண்மையில நோட்ஸ் ஒப் லெஸ்ஸன் எல்லாம் ஆள் வச்சிருக்க மாட்டாரா ஸேர்?’

கையிலிருந்த கிட் கார்டைச்சுரண்டி தொலைபேசியின் இலக்கங்களை ஒவ்வொன்றாக அழுத்திக் கொண்டிருந்த பெரியநாயகத்திடம் கேட்டேன்.

‘ அட! ஏன் வச்சிருந்தா பயமா? இப்பிடியான ஆளையெல்லாம் பிழை புடிக்கிறதுக்கு எவ்வளவோ விசயம் இருக்கு.. ஏதாவது இருக்காமலா போகும்..? நாங்களெல்லாம் எத்தனை வருஷமா…இதைப்போல எத்தனை பேரை…கவுத்திருக்கோம் தெரியுமா?’

‘அத விடுங்க ஸேர், இதுக்கு முதல்ல ஷாபிக் ஸேரைத் தெரியுமா உங்களுக்கு?’

‘ஏன் தெரியாம…? அவன் ஆள் இஞ்ச சந்திமடத்தில நித்தியானந்தாவுல படிப்பிச்சவந்தானே… .பிறகு எட்டுவருசம் முடிஞ்சதால தாஹிரா கொலீஜுக்கு ட்ரான்ஸ்பர் கேட்டுப் போனான். அங்க போய் ரெண்டு வருசம் போறதுக்குள்ள இஞ்ச மாறி வந்திட்டான்…’

‘அப்பிடியா, தாஹிரா கொலீஜ்ஜில இவருக்கு என்ன ப்ரச்சினை.. ஸேர்?’

‘ச்ச்! அது தம்பி எங்க போனாலும் இவன் சும்மா இருக்க மாட்டானே..! மத்தவனெல்லாம் வாயைப் பொத்திகிட்டு இருக்கிறத ஏத்துக்கிட்டு சாட்டுக்கெண்டாலும் வேலைசெய்யிற மாதிரி நடிச்சிட்டிருப்பானுகள். இவன் சின்ஸியரா வேலை செய்வான்.. ஆனா ஆள் வாயை வச்சிட்டு இருக்க மாட்டான்.!’

‘அப்பிடி என்னதான் ஸேர் பேசுவாரு..?’

‘இப்ப வருவான் பார்க்கத்தானே போறீங்க..! அவனுக்குத் தான் பெரிய அறிவாளி என்ற நெனைப்பு! அவனை விட்டா நேர்மையான ஆள் இந்த உலகத்தில கிடையாது என்று நினைச்சிட்டிருக்கான்! இஞ்ச சந்தியில நித்தியானந்தா கல்லூரியில இருக்கிற நேரம் அவன் படுத்தின பாட்டுலதான் அந்த மனுஷன் அதிபர் கே. தேவநாயகம் இப்ப வேலையும் இல்லாம இன்டடிக்ஷன்ல கிடந்து இப்ப கொஞ்சநாள் என்ட ஒபிசுலயும் பிறகு சின்னச்சின்ன ஸ்கூல்லயும் மாறிமாறிக் கிடந்து தட்டழியுது.. சே! பாவம்டாப்பா அந்த ஆள்!’

‘யாரு…? கொஞ்ச காலம் உங்களோட ஒபிசுல இருந்தாரே.. அந்த வேர்ல்ட்புட் ஸ்கூல் பிள்ளைகள்ற மதிய உணவுக் காசுல விளையாடி.. புடிபட்ட அதிபர் தேவநாயகம்தானே..? அவர் எப்படியும் அறுபது லட்சத்துக்கு மேல பிள்ளைகளுக்குச் சேர வேண்டிய காசைச் சுருட்டினதா…’ நான் வாக்கியத்தை முடிக்கவில்லை.

‘நீங்க பாத்தீங்களா? அதை நீங்க உங்கட கண்ணால பாத்தீங்களா ரனீஸ்? சரி, இதெல்லாம் ஒலகத்துல நடக்காததா? எல்லாருஞ் செய்யிறதுதானே..? இவனுக்கு என்ன வந்தது..? இவன் இவன்ட படிப்பிக்கிற வாத்தி வேலையை மட்டும் ஒழுங்காப் பாத்திட்டுப் போகாம அவரோட பிரச்சினைப் பட்டு அங்க இங்கே ஜனாதிபதிக்கெல்லாம் இங்லீஷ்ல கடிதம் எழுதி…’

அவர் ஏதேதோ சொல்லிக்கொண்டே செல்ல எனக்கு ‘ஜிவ்’ வென்றிருந்தது.
ஓகோ இவர்தானா அது? கடந்த வருடம் நான் வந்த புதிதிலே நடந்த விடயம் அது. நித்தியானந்தா கல்லூரியிலே ஏழைப்பிள்ளைகளுக்காக அரசாங்கமும் வேர்ல்ட்புட் நிறுவனமும் அனுப்பிய மதிய உணவுப்பொருட்களில் அதிபரும் அவரது சகபாடிகளும் இணைந்து மோசடி செய்து ஏப்பம் விட்ட ஊழல் விடயத்தை அம்பலப்படுத்தியவர் இவர்தானா…?

அந்த மோசடி அதிபரைக் கண்டிக்க வேண்டிய எங்களுடைய அலுவலகமே அவரைக் காப்பாற்றுவதற்காக அந்த ஊழலையும் மோசடியையும் மழுப்பிக்கொண்டிருந்த வேளையிலே துணிந்து நின்று எதிர்த்துப் போராடி நியாயத்தை நிலைநாட்டிய ஆசிரியர் என்று அப்போது கேள்விப்பட்டு நான் வியந்தது இவரைத்தானா? இப்போது நான் விசாரிக்க வந்திருப்பதும் இவரைத்தானா?

‘என்ன ரனீஸ்.. திடீரென்று ஒரு மாதிரி ஆயிட்டீங்க?’ என்னை மீண்டும் நனவுலகத்துக்கு வரவழைத்தார் பெரியநாயகம்.

‘ ஒண்ணுமில்ல… இப்பத்தான் ஸேர் எனக்கு விஷயமே விளங்குது. இவரை எனக்கு ஏற்கனவே தெரியும் ஸேர்! ரெண்டு மாசம் முன்னால ஒருநாள் என்னைத் தேடி ஒபிஸுக்கு வந்திருந்தாரு. அவருக்கு ஏதோ அஞ்சு வருஷத்துக்குரிய சம்பள உயர்ச்சிப்படிவம் நிரப்பப்படாமல் இருந்ததற்காக சப்ஜெக்ட் க்ளார்க் வதனி என்னிடம் அனுப்பியிருந்தா…’

‘அப்படியா? வந்து என்ன கேட்டான்…?’

‘ அவர் எதுவும் கேட்கயில்ல.. நான்தான் ஸேர் கேட்டேன், ஏன் ரெண்டு மூன்று வருசத்துக்குரிய தரங்கணிப்பீடு, இன்க்ரிமென்ட் போம்ஸ் எல்லாம் நிரப்பித்தரவில்லை என்று கேட்டு காரணத்தை எழுத்தில தரும்படி கேட்டேன். அதுக்கு அவர் என்ன சொன்னாரு தெரியுமா?’

‘என்ன? ஏதாவது ஏடாகூடாமா சொல்லியிருப்பானே…?

‘ ம்ம்! ‘நான் காரணத்தை சொல்றேன் மிஸ்டர் ரனீஸ். அது எழுத்தில தரக்கூடியதுதானாண்டு கேட்டுட்டுச் சொல்லுங்க.. உங்களுக்கு ஓகேயெண்டா பிறகு எழுதித்தாறேன்’ என்று சொன்னாரு!’

‘ பாத்தீங்களா, பாத்தீங்களா? அவன்ட திமிரைப் பாத்தீங்களா..? நெனைச்சேன்.! அவன் இப்பிடித்தான் கதைப்பான்! உங்களுக்கு ‘மிஸ்டர் ரனீஸ்’ போட்டா கதைச்சவன்? திமிர் புடிச்சவன்! அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?’

‘காரணத்தைச் சொல்லச் சொன்னேன்.. சொன்னாரு. ஆனா அவர் சொன்ன காரணத்தை எழுதினா…. அவ்வளவுதான் ஸேர். அதனால வேற ஒரு காரணத்தை எழுதி வாங்கிட வேண்டியதாப் போயிட்டு ஸேர்?

‘அப்படி என்னதான் புதினமான காரணம் சொன்னான்?’

‘நீங்க சொன்ன விசயம்தான்! நித்தியானந்தா கொலீஜ் அதிபரின் ‘வேர்ல்ட்புட்’ மதிய உணவுக் காசு சுருட்டலுக்கு எதிர்ப்புத்தெரிவிச்சுத் தான் தட்டிக்கேட்டதாலதான் தனக்கு அவர் இன்க்ரிமென்ட் போம்ல சிபாரிசு செய்து சைன் பண்ணித் தரவேயில்ல என்று சொன்னார் ஸேர்..!’

இப்போது பெரியநாயகம் எதுவும் பேசவில்லை.

அப்போது வாசலிலே நிழலாடியது.
எங்கள் ட்ரைவர் பஷீர்தான் வந்திருந்தான்.

‘சேர், பிக்அப்பை தூரத்துல ஒருமரநிழல்ல பார்க் பண்ணிருக்கன். போவக்குள்ள கூப்பிடுங்க!’ என்று சொல்லிவிட்டு வெளியேறியவனை, ‘ ஏய்! பஷீர் இஞ்ச வா!’ என்று உள்ளே கூப்பிட்டு எடுத்த பெரியநாயகம், ‘பஷீர்! நீ இந்த ஏரியா ஆள்தானே? உனக்கிட்ட கேட்டாலே எல்லாம் தெரியுமே… ‘ என்றார் உற்சாகமாக.

‘ஓம் ஸேர். இஞ்ச பக்கத்துலதான் கோச்சி ரோட்டோரம் பள்ளிவாசலுக்குக் கிட்டதான் ஸேர் வூடு.. ஏன்ட சின்ன புள்ளையும் இஞ்ச இந்த ஸ்கூல்லதான் ரெண்டாமாண்டுல படிக்குது. ஸேர்..!’ என்றான் தலையைச் சொறிந்தபடி.

‘அட்றா சக்கை.! ரனீஸ், பாத்தீங்களா? நம்ம கையிலேயே ஒரு பேரண்ட் இருக்கிறான்.. இது தெரியாம.. என்னமோ சொல்லுவாங்களே கையில வெண்ணெய்யை வச்சிக்கிட்டு…சரி, சரி, இங்க இருக்கிற ஷாபிக் ஸேர் எப்பிடிடா பஷீர்? இந்த ஊர்லதானே அவரும் இருக்கிறாரு? ஏதும் கரைச்சலான ஆளாடா?’

அவன் உடனடியாக பதிலேதும் கூறாமல் எனது முகத்தைப் பார்த்தான். அவனது தயக்கத்தை புரிந்து கொண்டவனாக, ‘பரவாயில்லை, உள்ளதைச் சொல்லுங்க பஷீர். நாங்க அவருக்கிட்ட இதைப்பத்திச் சொல்லப் போறதில்ல!’

‘ எனக்குத் தெரிஞ்சதை நாஞ்சொல்றேஞ் சேர்…! அவரு நல்லாளா இல்ல கூடாதாளா என்டெல்லாம் எனக்குத் தெரியா ஸேர். ஆனா எப்ப பாத்தாலும்; ஸ்கூல்ல படிப்பிக்கிற ஆள்தான் ஸேர்! புள்ளைகளுக்கு ஏமாத்தாம பாடம் நடக்கணுமெண்டுதான் நிப்பாரு. இந்தக் களவு பொய்க்கெல்லாம் ஒத்துக்க மாட்டாரு ஸேர்! தனக்குச் சரியென்டு படுறதை பயப்படாம யாருகிட்டயும் தைரியமாப் பேசுறவருதாஞ் சேர் அவரு…’

அவன் தயங்கித் தயங்கிச் சொல்லிமுடித்ததும் பெரியநாயகத்தின் முகத்திலே ஈயாடவில்லை.

‘சரி, பஷீர், நேத்துக் காலையில ஒபிஸ்ஸில இருந்து நாம கச்சேரிக்கு வாகனத்துல போனோம்தானே? அப்ப தனபால் சேர் என்னை மறிச்சு இந்த ஷாபிக் சேரைப் பத்தி என்னவோ பிழையா கண்டபடியெல்லாம் சொல்லிட்டு இருந்தார்தானே.. அந்தநேரம் ட்ரைவர் ஸீட்டுல இருந்து நீங்களும் கேட்டுட்டுத்தானே இருநதீங்க… அப்ப ஏன் இதைப்பத்தி எதுவுமே பேசாம சும்மா இருந்தீங்க…?’ என்று நான் அவனைக் கேட்டேன்.

‘ யா..அல்லாஹ்! அதை எப்படி ஸேர் சொல்றது? நம்மட தனபால் சேர்ட கொணஞ் சரியில்ல சேர். அவர வேணாமெண்டு சனம் தொரத்தினதுலயும் ஞாயமிருக்கு சேர். நாங்களும் அதில இருக்கிறம் என்டு அவருக்கும் நல்லாத் தெரியும். அவருக்கு விரோதமான டீச்சர்மாரையும் சேர்மாரையும் நம்மட புதுசா வந்திருக்கிற ரவீந்திரன் சேருக்கிட்ட அநியாயமா போட்டுக் குடுத்துக்கிட்டிருக்கிறாரு.. அப்பிடி என்னையும் ஏதாவது வம்புல மாட்டிவுட்டுருவான்ற பயத்துலதான் ஸேர் நான் அன்டைக்கு எதுவுஞ் சொல்லயில்ல. ஆனா அல்லாண்ட ஒருவன் எல்லாத்தையும் பாத்திட்டு இருக்கான் ஸேர்..!’

அவனால் மேலே சொல்ல முடியாமல் தொண்டை அடைத்தது.

‘ஆனா, இப்ப சொல்றேன் ஸேர். அவரு ஷாபிக் சேரைப்பத்திச் சொன்னதெல்லாம் அல்லாவுக்கே அடுக்காது. அந்த கேவலமான மனிசன் தனபால் சேர்ட கதையை நம்பி இவருக்கு ஏதும் கெடுதல் பண்ணிராதீங்க ஸேர்..! அந்தப் பாவம் உங்களையும் உங்க புள்ளைகளையும் கூட வுடாது ஸேர்!’ என்று கண்ணைத் துடைத்துக் கொண்டு வெளியே போய்விட்டான் பஷீர்.

அவன் வெளியிலே சென்ற சிறிது நேரத்திற்கு நானும் பெரியநாயகமும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. அந்த அறைமுழுவதும் ஒருவித சங்கடமான மௌனம் நிலவியது.

அப்பொழுது பார்த்து பாடம் ஒன்று நிறைவு பெறுவதற்கான மணியும் ஒலித்து ஓய்ந்தது.

‘இப்ப என்ன ஸேர் செய்றது..?’

வெகுநேரத்தின் பின்பு நான்தான் மௌனத்தை உடைத்தேன்.

‘ம்ம்..! நம்ம நம்மட கடமைiயைச் செய்வோம் ரனீஸ்! வேறு என்னத்தைத்தான் செய்றது?’ என்றார் பெரியநாயகம் பலகீனமாக.

‘ இல்ல ஸேர். இவ்வளவு விளக்கமுள்ள ஒரு ஆசிரியர் இந்த விசாரணையைப் பத்தியும் நிச்சயமாகக் கேட்கத்தான் செய்வார். யார் தன்மேல புகார் தந்தது என்று கேட்டால் என்னத்தைச் சொல்லுவது…? அதனாலதான் யோசிக்கிறேன்..’

‘அவர்மேல என்னென்ன பிரச்சினைகள்…? ஏதும் எழுத்தில தந்திருக்கிறாங்களா?’

‘அப்படியெல்லாம் எதுவுமேயில்லை. நான்தான் ஒரு வசதிக்காக சில விடயங்களைக் குறிச்சிட்டு வந்தேன்.. சொல்லப்போனால் ஆக்சுவலா இது ஒரு அனொபிஸியலான விசாரணைதான்..ஸேர். அதுவும் தனபால் ஸேர்ட தனிப்பட்ட ப்ரெண்ட்ஷிப்புக்காக ரவீந்திரன் ஸேர் இவரைக் கொஞ்சம் வெருட்டிட்டு வரச்சொன்னதுதான்…விசாரிக்கப்போய் அதுவே பெரிய பிரச்சினை ஆகிவிடாதா ஸேர்!?’ என்று நான் கேட்க,

‘சரி.. சரி, நம்ம அவனுக்கிட்ட ‘நோட்ஸ் ஒப் லெஸ்ஸனையே கேட்டுப் பார்ப்போம். ம்ம்.. அதையும் அவன் எழுதிக்கிழுதி வச்சிருக்காமல் இருக்க வேணுண்டா சாமி!.’ என்றார் பெரியநாயகம் கவலையுடன்.

அப்போது மாடிக்கட்டிடத்திலிருந்து ஷாபிக் ஆசிரியர் எங்களை நோக்கி இறங்கி வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

அவர் நடந்து வரும் வழியியிலே தரையெங்கும் இலுப்பம் பூக்கள் இறைந்து கிடந்தன.

– Published in SL magazine ‘Jeevanathy’ – July 2012

Print Friendly, PDF & Email

1 thought on “இலுப்பம் பூக்கள்!

  1. Hi Friends,

    Another typical ‘Mutur Mohd.Rafi story from Sirukathaigal.com net!

    இன்றைய கல்விநிறுவனங்களின் செயற்பாடுகளிலே தனிப்பட்ட நபர்கள், தங்கள் விருப்பு வெறுப்புக்கேற்ப எவ்வாறெல்லாம் செல்வாக்குச் செலுத்த முடிகின்றது என்பதை அறியக்கூடிய வகையிலே எழுதப்பட்டுள்ளது இச்சிறுகதை!

    உயரதிகாரிகள் என நாம் நினைத்துக் கொண்டிருப்பவர்களிலே கணிசமானவர்கள், தோரணைகளிலே ஒருவிதமாகவும் உள்ளார்ந்த செயற்பாடுகளிலே வேறொரு விதமாகவும் நடந்துகொள்ளுவதை எழுத்திலே ஓரளவு வெளிக் கொண்டு வந்திருக்கின்றார்..கதையாசி​ரியர். குறிப்பாக, அந்த பாடக்குறிப்புகள் எழுதும் விடயம்….பாடசாலைகளிலே எல்லாவற்றையும் எழுத்திலே டிப்டொப்பாய் வைத்திருப்பவர்கள் கற்பித்தலிலும் ஆளுமை விருத்தியிலும் வினைத்திறன் இன்றிச்செயற்படுவதை சுட்டிக்காட்டியுள்ள விடயம்… ரசிக்கத் தக்கதாயிருக்கின்றது.

    ஆனால் ஒருசந்தேகம்; ஒரு சாதாரண அலுவலகச் சாரதியின் அபிப்பிராயத்தை மட்டும் கேட்டுவிட்டு அதிகாரிகள் இருவரும் தளர்ச்சியடைவது பொருத்தமானதாக இருக்குமா?

    இன்னும் யாராவது வேறு ஆசிரியர்களையோ அல்லது ஊர்ப்பிரமுகர்களையோ அபிப்பிராயம் கேட்டபின்பு அதைச் செய்திருக்கலாம். Am I right?

    குறிப்பிட்ட ஆசிரியரை விசாரிப்பதுதான் கதையென்று நாம் காத்திருக்கும் இடத்திலே கதையின் முடிவு காத்திருப்பது வித்தியாசமான உத்தி. பாராட்டுக்கள்!

    பாடசாலை வளவினுள் இலுப்பம் பூக்கள் இறைந்து கிடப்பது ஒன்றைத் தவிர, சிறுகதையின் தலைப்புக்கும் கதைக்கும் வேறு என்ன சம்பந்தம் உள்ளது.. விளக்குவாரா ராபி?

    சில நெருடல்கள் இருந்தாலும், மொத்ததில் ஒரு நல்ல கதைதான்!

    வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *